:
ஆசியா
:
இலங்கை
Sri Lanka: JVP student leader physically
threatens ISSE campus team
இலங்கை: ஜே.வி.பி. மாணவர் தலைவர் சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர்கள்
அமைப்பின் பல்கலைக்கழக குழுவுக்கு சரீர அச்சுறுத்தல் விடுக்கின்றார்
By our correspondents
9 August 2007
Back to screen version
இலங்கையில் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர்கள்
(International Students for Social
Equality -ISSE) கடந்த செவ்வாய் கிழமை நடத்திய பிரச்சாரத்தை,
மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) உறுப்பினர்கள் சரீர வன்முறையில் ஈடுபட்டு அச்சுறுத்தி இடைநிறுத்தினர். இது
ஒரு அரசியல் குண்டர் நடவடிக்கையாகும். இலங்கை அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக மீண்டும் முன்னெடுக்கும்
இனவாத யுத்தம் மற்றும் வாழ்க்கைத் தரம் மீதான அரசாங்கத்தின் கொடூரமான தாக்குதல்கள் தொடர்பாக மாணவர்
மத்தியில் கலந்துரையாடல்களும் எதிர்ப்பும் வளர்ச்சியடைவதை நசுக்கும் அவநம்பிக்கையான முயற்சியே ஜே.வி.பி. யின்
நடவடிக்கையாகும்.
கலைப் பீடத்தில் புத்தக விற்பனை ஒன்றை ஏற்பாடு செய்திருந்த ஐ.எஸ்.எஸ்.இ. மற்றும்
சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) உறுப்பினர்கள், அமெரிக்கத் தலைமையிலான ஈராக் ஆக்கிரமிப்பையும் புதுப்பிக்கப்பட்ட
இலங்கை உள்நாட்டு யுத்தத்தையும் எதிர்த்து பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தனர். தமிழிலும் சிங்களத்திலும் துண்டுப் பிரசுரங்களை
விநியோகித்துக்கொண்டிருந்த அவர்கள், லியோன் ட்ரொட்ஸ்கியின் படைப்புக்களின் மொழிபெயர்ப்புக்கள் மற்றும் உலக
சோசலிச வலைத் தள சஞ்சிகை உட்பட ஒரு தொகை மார்க்சிய இலக்கியங்களை காட்சிக்கு வைத்திருந்தனர்.
மத்திய இலங்கையில் கண்டிக்கு அருகில் அமைந்துள்ள பேராதனைப் பல்கலைக்கழகமானது
கிட்டத்தட்ட 16,000 மாணவர்களைக் கொண்ட மிகவும் புகழ்பெற்ற முக்கியத்துவம் வாய்ந்த பல்கலைக்கழகமாகும்.
1960களின் கடைப்பகுதியிலும் மற்றும் 1970களின் முற்பகுதியிலும், குறிப்பாக வியட்நாம் யுத்த எதிர்ப்பு காலத்தின்
போது, அரசியல் பிரச்சாரத்தின் சூடான களமாக இருந்த இந்த பல்கலைக் கழகத்தில் சோ.ச.க. வுக்கும் அதன்
முன்நோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்திற்கும் (பு.க.க.) ஒரு வரலாறு உண்டு. ஐ.எஸ்.எஸ்.இ. இந்த வாரம்
இந்தப் பிரச்சாரத்தை நடத்த எழுத்து மூலமான அனுமதிக்கு விண்ணப்பித்து அதை பெற்றுக்கொண்டிருந்தது.
இந்தப் புத்தக விற்பனை தமிழ் மற்றும் சிங்கள மாணவர்கள் மத்தியில் ஐ.எஸ்.எஸ்.இ. யின்
கொள்கைகள் பற்றிய உயிர்த்துடிப்பான கலந்துரையாடலை ஏற்படுத்திவிட்டது. ஈராக் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்புக்கும்
இலங்கையில் உள்நாட்டு யுத்தத்திற்கும் சோசலிச மற்றும் அனைத்துலகவாத பதிலீட்டை அபிவிருத்தி செய்யும் வேறு
அமைப்புக்கள் கிடையாது. பெரும்பாலான மாணவர்கள் இந்த இரு யுத்தங்களை மட்டுமன்றி அரசாங்கம் பொதுக் கல்வியை
கீழறுப்பதையும் எதிர்க்கின்றனர். 3,800 ரூபாவுக்கு (அல்லது 38 அமெரிக்க டொலர்) புத்தகங்களும் சிறிய
பிரசுரங்களும் விற்பனையாகி இருப்பது மாணவர்கள் மத்தியிலான ஆர்வத்தை வெளிப்படுத்துகின்றது --இந்தத் தொகை பல
குறை ஊதியம் பெறும் தொழிலாளர்களின் மாத சம்பளத்திற்கு சமமாகும்.
ஜே.வி.பி., அதன் அனைத்து பல்கலைக்கழக மாணவர் பேரவையின் மூலம் கடந்த
தசாப்தம் பூராவும் சிங்களப் பேரினவாதக் கொள்கைகள், அச்சுறுத்தல்கள் மற்றும் வன்முறைகளின் கலவையின் ஊடாக பல
பல்கலைக்கழகங்களில் மேலாதிக்கம் செய்து வருகின்றது. ஐ.எஸ்.எஸ்.இ. உடன் அரசியல் கலந்துரையாடலில்
ஈடுபட்டிருந்த மாணவர்களின் எண்ணிக்கை உறுதியாக அதிகரித்தமை ஜே.வி.பி. யினரை தெளிவாகவே பொறுமையிழக்கச்
செய்தது. ஜே.வி.பி. ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் முதலாளித்துவ அரசாங்கத்தை ஆதரிப்பதோடு புலிகளுக்கு
எதிரான யுத்தத்தை உக்கிரமாக்குமாறும் கோருகின்றது. "சோசலிஸ்டுகள்" அல்லது "மார்க்சியவாதிகள்" என
ஜே.வி.பி. யினரின் கடந்தகால வாய்வீச்சுக்கள் தூக்கி வீசப்பட்டுள்ளன.
ஜே.வி.பி. உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் ஐ.எஸ்.எஸ்.இ. வைத்திருந்த புத்தக
மேசைகளை சுற்றி நடமாடிக் கொண்டிருந்ததோடு நடப்பதை அவதானித்துக்கொண்டும் இருந்தனர். பின்னர் சுமார்
10.30 மணியளவில் அதன் உறுப்பினர்கள் செயற்பட முடிவெடுத்தனர். அந்தக் குழுவில் ஒருவர் ஐ.எஸ்.எஸ்.இ.
மேசைகளுக்கு வந்து சில புத்தகங்களை புரட்டி பார்த்துவிட்டு சில புத்தகங்களை வாங்கினார். ஐ.எஸ்.எஸ்.இ.
உறுப்பினர்கள் அவருடன் கலந்துரையாட முற்பட்ட போது, பல்கலைக் கழகங்களில் ஜே.வி.பி. யின் நிலையான
கொள்கையை அவர் வலியுறுத்தினார். தனக்கு கட்சி கொள்கைகளில் ஆர்வம் இல்லை என்றும் "மாணவர்களுக்கு
நன்மையளிக்கும் அரசியலில்" மட்டுமே ஆர்வம் காட்டுவதாகவும் அவர் தெரிவித்தார். இந்த சூத்திரம் ஜே.வி.பி. யின்
அரசியல் மேலாதிக்கத்தை உறுதிப்படுத்திக்கொள்ளவும் மற்றும் எந்தவொரு அரசியல் விமர்சனத்தையும் நசுக்கவும்
பயன்படுத்தப்படுகின்றது.
மாணவர்களின் கடந்த கால எதிர்ப்புக்கள் போராட்டங்களின் ஊடாகவே இலவசக் கல்வி
வெற்றிகொள்ளப்பட்டதாக அந்த ஜே.வி.பி. உறுப்பினர் பிரகடனம் செய்தார். இந்த கூற்று யதார்த்தத்தை திரிப்பதாக
சோ.ச.க. உறுப்பினர் ஒருவர் சுட்டிக் காட்டினார். இலங்கையில் ஏனைய பல சமூக வெற்றிகளைப் போல் இலவசக்
கல்வியும் 1940களிலும் 1950களிலும் ட்ரொட்ஸ்கிய இயக்கத்தின் தலைமைத்துவத்தின் கீழ் தொழிலாளர் வர்க்கத்தால்
வெற்றிகொள்ளப்பட்டது என அவர் தெரிவித்தார் --இலங்கையில் ட்ரொட்ஸ்கிய இயக்கமானது இந்திய போல்ஷிவிக்
லெனினிஸ்ட் கட்சியாகவும் (பி.எல்.பி.ஐ.) பின்னர் லங்கா சமசமாஜக் கட்சியாகவும் (ல.ச.ச.க.) இருந்தது.
மாணவர்களும் இளைஞர்களும் இந்த பரந்த இயக்கத்தின் பாகமாகவே செயற்பட்டு வந்தனர்.
ஐ.எஸ்.எஸ்.இ. யுடன் அரசியல் ரீதியில் சவால் செய்ய முடியாத ஜே.வி.பி.யினர் ஏனைய
வழிமுறைகளை நாடினர். யாருடைய அனுமதியுடன் இந்த புத்தக விற்பனை ஏற்பாடு செய்யப்பட்டது என அவர்களில் ஒருவர்
கேட்டார். பல்கலைக்கழக பதிவாளரின் அனுமதி உள்ளது எனக் கூறிய போது, ஐ.எஸ்.எஸ்.இ.க்கு புத்தகக் கண்காட்சி
நடத்த மட்டுமே அனுமதியுள்ளது, மாணவர்கள் மத்தியில் "பிரச்சாரம்" செய்ய அல்ல என அந்த ஜே.வி.பி. உறுப்பினர்
பிரகடனம் செய்தார். மாணவர் சங்கத்தின் அனுமதியின்றி பல்கலைக்கழகத்தில் எந்தவொரு நிகழ்ச்சியும் நடத்த
அனுமதிக்கப்படுவதில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
உண்மையில், அத்தகைய ஒரு அனுமதி அவசியமில்லாததோடு இந்த புத்தக விற்பனை
தொடர்பாக ஐ.எஸ்.எஸ்.இ. பல நாட்களாக வெளிப்படையாக விளம்பரப்படுத்தியிருந்தது. இந்த அச்சுறுத்தல்
தொடர்பாக பதிவாளருக்கு தெரியப்படுத்திய பின்னர் ஐ.எஸ்.எஸ்.இ. அதன் பிரச்சாரத்தை தொடர்ந்தது.
தொடர்ச்சியான கூச்சல்கள் அச்சுறுத்தல்களின் மத்தியிலும் மாணவர்கள் தொடர்ச்சியாக
புத்தக மேசைகளை அணுகியமை குறிப்பிடத்தக்கதாகும். அதன் மாணவ உறுப்பினர்கள் உட்பட ஜே.வி.பி.யின்
பிற்போக்குத்தனம், அச்சுறுத்தல்கள் மற்றும் வன்முறைகள் என்பன பேர் போனதாகும். 1980களின் பிற்பகுதியில்,
ஜே.வி.பி. யின் கொலைப் படைகள் தமிழ் மக்களுக்கும் இந்திய-இலங்கை உடன்படிக்கைக்கும் எதிரான தமது
பிரச்சாரத்தில் இணைய மறுத்த மூன்று புரட்சிக் கம்யூனிஸ்ட் கழக உறுப்பினர்கள் உட்பட நூற்றுக்கணக்கான அரசியல்
எதிரிகள், தொழிற்சங்கத் தலைவர்கள் மற்றும் தொழிலாளர்களையும் படுகொலை செய்தது. உலக சோசலிச
வலைத் தளத்திற்கு (உ.சோ.வ.த.) மாணவர்கள் விளக்கியதன் படி, பேராதனைப் பல்கலைக்கழகத்தில்
தற்போது உள்ள ஜே.வி.பி. மாணவ தலைவர்கள் வல் ஊரா அல்லது காட்டுப் பன்றி
மற்றும் மோரா அல்லது சுறா மீன் என்ற புனைப் பெயர்களாலேயே அழைக்கப்படுகின்றார்கள்.
அண்மையில் நடந்த மிகவும் மோசமான சம்பவமொன்றில், 2002 நவம்பர் மாதம்
ஜயவர்தனபுர பல்கலைக் கழகத்தில் நடந்த கூட்டமொன்றுக்குள் கற்கள் பொல்லுகளுடன் குதித்த சுமார் 200 ஜே.வி.பி.
குண்டர்கள் அடங்கிய கும்பல், கூட்டத்தில் பங்குபற்றியவர்களை திட்டமிட்டுத் தாக்கியது. மூன்றாம் ஆண்டு முகாமைத்துவ
மாணவரான சமந்த வித்தானகே கடுமையாகத் தாக்கப்பட்டு நிலத்தில் விழுந்த போது கம்பியூட்டர் மொனிடர் ஒன்று
அவரது தலைமீது போடப்பட்டது. அவர் பின்னர் ஆஸ்பத்திரியில் உயிரிழந்தார். ஏனைய பதின்மூன்று மாணவர்கள்
கடுமையாகக் காயமடைந்தனர். தரம் தாழ்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு முதலாம் ஆண்டு மாணவர்களை
பலாத்காரம் செய்யும் ஜே.வி.பி. யின் பின்தங்கிய "பகிடிவதை" பழக்கத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்ததே
வித்தானகே செய்த ''குற்றமாகும்''.
ஐ.எஸ்.எஸ்.இ. யின் பிரச்சாரத்தை குழப்ப வேண்டும் என்ற முடிவுடன் புத்தக மேசைகளை
அணுகிய "சுறா மீன்" என்ற பெயரில் நன்கு அறியப்பட்ட மாணவர் தலைவர் சிந்தக, ஐ.எஸ்.எஸ்.இ. மற்றும்
சோ.ச.க. உறுப்பினர்களும் "உடனடியாக இங்கிருந்து வெளியேற வேண்டும்" என அதிகாரமாக கூச்சலிட்டார்.
இல்லையெனில் "நிலைமையும் விளைவுகளும் மோசமானதாக இருக்கும்" என அவர் அறிவித்தார். அவர் அச்சுறுத்தல்
விடுக்கின்றாரா என கேட்டபோது அவர் வீம்பாக கூறியதாவது: "ஆம் அப்படித்தான். எங்களால் அச்சுறுத்தல் விடுக்க
முடியாதா! நீங்கள் போகாவிட்டால் நாங்கள் பலாத்காராமாக உங்களை வெளியே அனுப்புவோம்." பல்கலைக்
கழகத்தை சேர்ந்த ஐ.எஸ்.எஸ்.இ. உறுப்பினர் ஒருவரின் பெயரை பயமுறுத்தும் வகையில் குறிப்பிட்ட அவர், "அவன்
மீண்டும் இந்த பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்தால் நாங்கள் அவனை அடிப்போம்," என எச்சரித்தார்.
சோ.ச.க. மற்றும் ஐ.எஸ்.எஸ்.இ. உறுப்பினர்கள் ஜே.வி.பி. யின் ஜனநாயக விரோத
நடவடிக்கைகளை கண்டனம் செய்வதன் மூலம் பதிலளித்தனர். எவ்வாறெனினும், ஏனைய மாணவர்கள் நடந்த சம்பவத்துடன்
உடன்படாத அதே வேளை, ஜே.வி.பி. யின் எச்சரிக்கைகளின் விளைவுகளையிட்டு விழிப்படைந்ததோடு அந்த இடத்தை
விட்டு வெளியேறினர். வன்முறை அச்சுறுத்தல்கள் மற்றும் பிரச்சாரம் முற்றாக குழம்பிப் போன நிலையில் ஐ.எஸ்.எஸ்.இ.
மற்றும் சோ.ச.க. யும் அங்கிருந்து வெளியேற தீர்மானித்தன.
நடந்ததை அவதானித்துக் கொண்டிருந்த ஒரு விரிவுரையாளர் பின்னர் உ.சோ.வ.த.
க்கு கருத்துத் தெரிவிக்கையில், "சோ.ச.க/ஐ.எஸ்.எஸ்.இ. யின் இலக்கிய விற்பனையில் ஒரு குழு தலையிடும்
போது நான் அங்கிருந்தேன். அவர்களில் ஒருவரே மாணவர் சங்கத்தின் தலைவர் என்பதை நான் தெளிவாக அடையாளம்
கண்டு கொண்டேன். எனக்கு அவரின் பெயர் தெரியாது. நடந்த சம்பவத்தை நான் கண்டிக்கின்றேன், ஏனெனில் அது புத்திஜீவி
அபிவிருத்திக்கு மிக அவசியமான சுதந்திரமாக கருத்துப் பரிமாறிக்கொள்ளும் அடிப்படை உரிமையை மீறுவதாகும்.
"அறிவுப்பூர்வமான கலந்துரையாடல்கள் மற்றும் விவாதங்களின் சொர்க்கமான பல்கலைக்கழகத்தின்
தரத்தை இது இழிவுபடுத்தும் என நான் நினைக்கின்றேன். 'பல வேறுபட்ட அறிவுப்பூர்வமான படைப்புக்கள் அடங்கிய முழு
இலக்கிய நூலகம் ஒன்று உங்களுக்கு உள்ளது. உங்களுக்கு இணையத் தளம் உள்ளது. இந்த சூழ்நிலைகளின் கீழ் சிந்தனையை
கட்டுப்படுத்தும் முயற்சி முட்டாள்தனமானதாகும். கருத்து வெளியிடும் உரிமையை நீங்கள் பாதுகாக்க வேண்டும். ஏன் இவர்கள்
கருத்துக்களுக்கு பயப்படுகின்றார்கள்?' என நான் அங்கு கூடியிருந்த மாணவர்களிடம் கூறினேன்" என அந்த விரிவுரையாளர்
தெரிவித்தார்.
மாணவர்கள் மற்றும் உழைக்கும் மக்கள் மத்தியில் ஜே.வி.பி. யின் கொள்கைகள் மேலும்
மேலும் மதிப்பிழந்து வருகின்ற நிலையில், அவர்கள் முற்றிலும் எந்தவொரு அரசியல் சவாலையும் கண்டு பீதியடைகின்றனர்.
யுத்தத்துக்கும் புலிகளை இராணுவ ரீதியில் அழிப்பதற்கும் அது ஆதரவளிக்கின்ற நிலையில், ஊடகங்களின் வாயை
அடைப்பதற்கும் மற்றும் விசாரணையின்றி தடுத்து வைக்கும் இராஜபக்ஷவின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கும்
ஜே.வி.பி. ஆதரவளிக்கின்றது. ஜே.வி.பி., "தாய்நாடே முதலாவது, ஏனையவை இரண்டாவது பட்சம்" என்ற
பதாதையின் கீழ், யுத்த முயற்சிகளுக்கு இடையூறாக இருக்கக் கூடிய வாழ்க்கைத் தரம் மற்றும் ஜனநாயக உரிமைகளைப்
பாதுகாப்பதற்கான எந்தவொரு போராட்டத்தையும் எதிர்க்கின்றது.
பல்கலைக் கழகங்களில் தமது முன்னைய ஏகாதிபத்திய விரோத வாய்வீச்சுக்களை
கைவிட்டுள்ள ஜே.வி.பி. தலைவர்கள், ஈராக் மீதான குற்றவியல் அமெரிக்க ஆக்கிரமிப்பை பற்றி மெளனம்
காக்கின்றனர். அமெரிக்க தூதரக அதிகாரிகளுடன் தனிப்பட்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் பாராளுமன்றத்தில் உள்ள
அவர்களது தலைவர்களைப் போல், வாஷிங்டன் இலங்கை அரசாங்கத்தின் போலி "பயங்கரவாதத்தின் மீதான
யுத்தத்திற்கு" ஆதரவளிக்கும் வரை ஈராக்கில் அமெரிக்க யுத்தத்திற்கு ஜே.வி.பி. யின் மாணவர் தலைவர்கள்
ஆதரவளிப்பர். இராஜபக்ஷ அரசாங்கத்தின் பிரமாண்டமான இராணுவச் செலவு அதிகரிப்பை முழுமையாக ஆதரிக்கின்ற
அதே வேளை, நம்பகத் தன்மையை பெற்றுக்கொள்வதற்காக இலவசக் கல்வியை வெட்டிக் குறைப்பதை
"எதிர்ப்பதற்காக" ஜே.வி.பி. ஒரு போலி பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளது.
சிந்தகவும் மற்றும் அவரது குண்டர் கும்பலும் இராஜபக்ஷ அரசாங்கத்திற்காக பல்கலைக்
கழகங்களில் அரசியல் பொலிஸ்காரர்களாக நேரடியாக இயங்குகின்றனர். குறிப்பிடத்தக்க விதத்தில் கேடு விளைவிக்கும்
அறிகுறியாக, ஐ.எஸ்.எஸ்.இ. இலக்கியங்களை வாங்கிய தமிழ் மாணவர்களை மிரட்டி அச்சுறுத்துவதற்கு அல்லது அதை விட
மோசமான நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக ஜே.வி.பி. யின் மாணவர் சங்கத் தலைவர்கள் அவர்களைத் தேடிக்
கண்டுபிடிக்க முயற்சிப்பதாக உ.சோ.வ.த. க்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஐ.எஸ்.எஸ்.இ. மற்றும்
சோ.ச.க. யும் இத்தகைய அச்சுறுத்தல்களுக்கு பதிலளிக்காமல் விடப் போவதில்லை. ஜே.வி.பி. யின்
நடவடிக்கைகளுக்கு எதிராகவும் மற்றும் பல்கலைக் கழகங்களில் முழுமையான மற்றும் சுதந்திரமான கருத்துப் பரிமாறும்
உரிமையைப் பாதுகாக்கவும் அரசியல் பிரச்சாரம் ஒன்று முன்னெடுக்கப்படும்.
|