World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

After an election marred by bitter conflict
Pratibha Patil becomes India's 13th president

தேர்தல் கசப்பான பூசலினால் ஊறுபடுத்தப்பட்டபின்

பிரதிபா பாடில் இந்தியாவின் 13வது ஜனாதிபதியாகிறார்

By Arun Kumar and Kranti Kumara
2 August 2007

Back to screen version

இந்தியாவில் சமீபத்தில் முடிவுற்ற மற்றும் கசப்பான முறையில் போட்டி நடந்த ஜனாதிபதித் தேர்தல் தற்கால இந்திய அரசியலின் பல முக்கியமான கூறுபாடுகளை விளக்கமாய்க் காட்ட உதவியது. இவற்றுள் முக்கியமானவை இரண்டு மிகப் பெரிய கட்சிகளான காங்கிரஸ் கட்சி மற்றும் இந்து மேலாதிக்கவாத பாரதிய ஜனதா கட்சி ஆகியவை நெருக்கடியினால் சேதம் அடைந்தது, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்ஸிஸ்ட்டுக்கள்) மற்றும் அதன் இடது முன்னணி கூட்டுக் கட்சிகள் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) அரசாங்கத்தைத் பதவியில் தக்க வைப்பதற்காக மேற்கொண்டிருக்கும் முக்கிய பங்கு ஆகியனவாகும்.

ஜனாதிபதிப் பதவி, மிகத்தீவிர நெருக்கடி காலத்தில்தான் உண்மையான அதிகாரத்தைக் கொண்டு, பெருமளவில் ஒரு அலங்காரப் பதவியாக இருப்பதன் காரணமாக, அதன் பொருட்டு ஜனாதிபதி "அரசியலுக்கு அப்பாற்பட்டவர்" என்ற கூற்றிற்கு அது வலிமை சேர்ப்பதாக உள்ளது. இந்தியாவின் அரசியல் நடைமுறை இதுவரை நாட்டின் ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதில் ஒருவித பண்பைத் தக்க வைத்துக் கொண்டிருந்தது. கடந்தகால ஜனாதிபதித் தேர்தல்களில் எதிர்க்கட்சிகள் அநேகமாக வேட்பாளர்களை நிறுத்துவதில்லை, அப்படிச் செய்தாலும் ஒரு பெயரளவுப் பிரச்சாரம்தான் மேற்கோள்ளப்பட்டிருந்தது.

இதற்கு மாறாக ஜூலை 19 ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பு UPA மற்றும் அதன் போட்டிக்கட்சியான BJP, மற்றும் ஐக்கிய ஜனநாயகக் கூட்டணி (NDA) ஆகியவை விரும்பத்தகாத, ஊழல், குற்றம் சார்ந்த நடவடிக்கைகள் உள்பட எதையும் சட்டை செய்யாத பிரச்சாரங்களை நடத்தின.

இறுதியில் UPA யின் வேட்பாளரான பிரதிபா பாடில் மாநில, எல்லைப்பகுதி, தேசிய சட்டமன்றங்களின் உறுப்பினர்கள் அடங்கிய "தேர்தல் தொகுதியின்" மூன்றில் இரு பங்கு வாக்குளைப் பெற்று வெற்றி பெற்றார். UPA உடைய வெற்றிக்கு முக்கியமாக இருந்தது இடது முன்னணி, சற்று குறைந்த அளவில் இந்தியாவின் அதிக மக்கட்தொகை கொண்ட மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் அரசாங்கம் அமைத்திருக்கும் பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவை இதன் வேட்பாளருக்குக் கொடுத்த ஆதரவு ஆகும்.

ஒரு ஓய்வு பெற்ற காங்கிரஸ் அரசியல்வாதியும், ஜனாதிபதிப் போட்டியின்போது ராஜஸ்தான் மாநிலத்தின் கவர்னராகவும் இருந்த பாடில் இந்தியாவின் 13வது ஜனாதிபதியாக ஜூலை 25 அன்று பதவிப் பிரமாணம் செய்துவிக்கப்பட்டார்.

ஆனால் அதிகம் களித்துக் கொண்டாடுவதற்கு காங்கிரஸிடம் ஒன்றும் இல்லை. ஒரு அதிகம் ஆர்வத்தை ஈர்க்காத வேட்பாளாராக பாடில் இருந்ததுடன் UPA உடைய ஐந்தாம் அல்லது ஆறாம் விருப்பமாகத்தான் விளங்கினார்; காங்கிரஸ், அதன் UPA தோழமைக் கட்சிகள் மற்றும் இடது முன்னணி ஆகியவை பல வாரங்கள் கடும் பேரப் பேச்சுக்களை நடத்திய பின் வெளிவந்த "சமரச" வேட்பாளாராவார்.

பணிக்கு, பாடிலின் முக்கிய நற்சாட்சிப்பத்திரங்கள் அவர் ஒரு பெண்மணி என்பதும், காங்கிரஸ் கட்சிக் கருவியை ஆதிக்கத்திற்குள் வைத்திருக்கும் நேரு-காந்தி குடும்பத்தின் விசுவாசத்திற்குரிய அண்டிப் பிழைப்பவர் என்பதும்தான்.

இந்த மோசமான நிலை போதாது என்று, விரைவில் BJP பாடில் அல்லது அவருடைய குடும்ப உறுப்பினர்களை மறைமுகமாகக் குறிப்பிடும் வரிசையான ஊழல்களை தோண்டி எடுத்து வைத்தது. இவருடைய சகோதரர் போட்டி காங்கிரஸ் கட்சி செயல்வீரர் ஒருவர் கொலையில் தொடர்பு கொண்டிருந்ததாக கருதப்படல், சமூகத்தில் சலுகை குறைந்தவர்களுக்கு கடன் வசதி கொடுப்பதற்காக என்ற பெயரளவிலான குறிக்கோளுடன் நிறுவப்பட்ட, மற்றும் அதனை நிறுவுதற்கு பாடில் உதவியாய் இருந்த வங்கியில், இவருடைய விரிவான குடும்ப உறுப்பினர்களுக்கு கடன்கள் கொடுத்தபின் திவால் ஆனது பற்றிய குற்றச் சாட்டுக்கள் இவற்றுள் அடங்குவன.

BJP இன் பாடில்-எதிர்ப்புப் பிரச்சாரத்தின் பொதுப்போக்கிற்கு ஒப்புதல் கொடுக்காவிட்டாலும், பெருநிறுவனச் செய்தி ஊடகத்தில் பலவும் இப்பெண்மணி "சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவர் அல்லர்" என்ற கவலையை வெளிப்படுத்தியது. India Today இதழ், அவர் ஒரு "சங்டமான தேர்வு" என்று அழைத்தது பொதுவான எதிர்விளைவுகளுக்கு உதாரணமாக உள்ளது.

ஆரம்பத்தில் ஸ்ராலினிச இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்டுகள்) தலைவர்கள் பெரும் ஆர்வத்துடன் பாட்டிலின் வேட்புத் தன்மையை துதிபாடினர்; இதற்குக் காரணம் ஒரு பெண்மணி-ஜனாதிபதி என்பது, பால் வகைப்பட்ட ஒடுக்குமுறைக்கு ஒரு பெரிய அடியாக இருக்கும் என்று கருதப்பட்டது. ஆனால் பாடிலை சூழ்ந்திருந்த துர்நாற்றம் வெளிப்படத் தொடங்கியவுடன், தங்களுடைய சங்கடங்களை செயற்கை புன்னகைகள் மூலம் மறைக்க அவர்கள் முற்பட்டனர்.

ஜனாதிபதித் தேர்தல், காங்கிரஸ் கட்சி மற்றும் UPA யின் நம்பகத்தன்மைக்கு சேதம் விளைவித்தது என்றால், இது எதிர்க்கட்சிகளுக்கும் ஒரு பேரழிவு விளைவு என்பதும் குறிப்பிடத்தக்கது ஆகும்.

ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி (UNPA) என்னும் ஒரு புதிதாக அமைக்கப்பட்டுள்ள வட்டாரக் கட்சிகளின் கூட்டான, "மூன்றாம் அணியின்" தன்னுடைய வேட்பாளரை நிறுத்தும் முயற்சி தோல்வியுற்றது. இறுதியில் வாக்களிக்காமல் இருப்பது என்ற முடிவிற்கு அது வந்தது; ஆனால் AIADMK கட்சியின் சட்ட மன்ற உறுப்பினர்கள் கட்சியின் உத்தரவை மீறி BJP ஆதரவு பெற்றிருந்த வேட்பாளருக்கு வாக்களித்தனர்.

2004ல் பதவியில் இருந்து விலக்கப்பட்ட பின், இந்தியாவின் பெருநிறுவன உயர்தட்டின் வாட்டத்திற்குக் காரணமாக இருக்கும் வகையில், "விசுவாசமான" எதிர்க்கட்சி என்ற பங்கைக் கொள்ளுவதற்கு பிஜேபி மறுத்துவிட்டது. மாறாக UPA அரசாங்கத்தைச் சீர்குலைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்துகிறது; தடைகள் கொடுப்பது, ஆத்திரமூட்டல்களை கொடுப்பது என்று அதன் நடவடிக்கைகள் உள்ளன. இந்த அணுகுமுறையை ஒட்டி, BJP மிகக் கடுமையான சவாலை ஜனாதிபதித் தேர்தலுக்குக் கொடுப்பது என்ற முடிவிற்கு வந்திருந்தது.

தன்னுடையை வேட்பாளராக BJP இப்பொழுது துணை ஜனாதிபதியாக இருக்கும் பைரோன் சிங் ஷேகாவத்தைத் தேர்ந்தெடுத்தது. ஷேகாவத் முன்பு உயர்மட்ட BJP யாக இருந்திருந்தும், பாசிச RSS ன் வாழ்நாள் உறுப்பினர் என்று கூறப்பட்டிருந்த போதிலும், BJP அவரை ஒரு "சுதந்திர வேட்பாளர்" என்று கூறியதே அன்றி கட்சி வேட்பாளர் என்று கூறவில்லை.

இது பின்னடைவைத்தான் கொடுத்தது. UNPA இன் ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் BJP இருந்தது; ஆனால் ராஜஸ்தானின் முதல் மந்திரியாக 1990களின் தொடக்கத்தில் இருந்து வகுப்புவாதப் போராட்டங்களுக்கு முழு ஆதரவு கொடுத்து, அதன் விளைவாக அயோத்தியில் பாப்ரி மசூதி இடித்துத் தள்ளப்பட்டது, நாட்டுப் பிரிவினைக்கு பின்னர் மோசமான வகுப்புவாத குருதிசிந்துதல் ஆகியவற்றிற்கு ஆதரவைக் கொடுத்திருந்த வேட்பாளரக்கு UNPA ஒப்புதல் தரத்தயாராக இல்லை. இதற்கிடையில் BJP யில் இருக்கும் சில NDA நண்பர்களும் தாங்கள் BJP யில் இருந்து விலகுவதை நியாயப்படுத்த ஷேகாவத் ஒரு சுதந்திர வேட்பாளர் என்று கூறப்பட்டதை பயன்படுத்திக் கொண்டனர்.

இறுதியில், BJP யின் மிக முக்கியமான NDA நட்புக்கட்சிகள், தீவிர வலது சாரித்தன, மகாராஷ்டிரத்தை தளமாக கொண்ட சிவசேனை மற்றும் மேற்கு வங்கத்தில் இருக்கும் திருணமூல் காங்கிரஸ் ஆகியவை ஷேகாவத்திற்கு ஆதரவை தர மறுத்துவிட்டன. சிவ சேனையின் சட்டமன்ற உறுப்பினர்கள் UPA வேட்பாளரான பாடிலுக்கு அவரும் ஒரு மகாராஷ்டிர மாநிலத்தவர் என்று கூறி வாக்களித்தனர்.

இப்பொழுது NDA உடைய வருங்காலம் பற்றி தீவிர கேள்விக்குறி வந்துள்ளது; ஒரு மாற்றீட்டு அரசாங்கத்தை அமைப்பதற்கு போதுமான வட்டார ஆதரவு அதற்குக் கிடைக்குமா என்பதே அது.

பல உள்கட்சி பூசல்களைத் தொடர்கையில் சில BJP சட்டமன்ற உறுப்பினர்கள் BJP ஆளும் குஜராத், மத்திய பிரதேசம் ஆகியவற்றில் கூட எதிர்ப்பு தெரிவித்த வகையில் UPA இன் பாடிலுக்கு வாக்களித்தனர் அல்லது ஷேகாவத்திற்குப் போட்ட வாக்குச்சீட்டுக்களில் இந்து சமய கோஷங்களை எழுதி அவற்றை செல்லாதவையாக ஆக்கிவிட்டனர்.

கூட்டணி அரசியலும் மக்களின் மனமுறிவும்

பிரிட்டிஷ் முறையை தழுவிய இந்தியாவின் பாராளுமன்ற முறையின்படி, ஜனாதிபதி பெயரளவிற்கு நாட்டின் தலைவராகவும், இராணுவப் படைகளின் தளபதியாகவும் உள்ளார்; ஆனால் அநேகமாக அனைத்து விஷயங்களிலும், கிட்டத்தட்ட எப்பொழுதும் அவர் பதவியில் இருக்கும் பிரதம மந்திரி, பாராளுமன்றம் ஆகியவற்றின் விருப்பங்களுக்கு ஏற்ப நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறார். ஆனால் எந்தக் கட்சியும் பாராளுமன்றத்தில் தேர்தல்களில் மூலம் பெரும்பான்மை பெறவில்லை என்றால், அல்லது அரசாங்கம் வீழ்ச்சியுற்றால், ஜனாதிபதி எந்தக் கட்சி அல்லது கட்சிகளின் கூட்சிக்கு புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு வாய்ப்பு கொடுப்பது அல்லது புதிய தேர்தல்கள் நடத்தப்பட வேண்டுமா என்பது பற்றி முடிவெடுப்பது ஆகியவற்றில் முக்கிய பங்கைக் கொண்டுள்ளார்.

அரசாங்கம் அமைப்பதில் ஜனாதிபதி வகிக்கும் பங்கே இப்பொழுது கடுமையான அரசியல் பூசலின் காட்சிப்பொருளாக ஜனாதிபதி பதவி மாறியுள்ளதற்கு முக்கிய காரணம் என்பதில் சந்தேகத்திற்கிட மில்லை.

1947ல் இருந்து 1989 வரை காங்கிரஸ் இரண்டு ஆண்டுகளை தவிர மற்றவற்றில் இந்திய அரசாங்கத்தை அமைத்திருந்தது; எப்பொழுதும் பெரிய பாராளுமன்றப் பெரும்பான்மையில் இதை அது சாதித்திருந்தது. அப்போதிருந்து இந்தியா தொடர்ந்து சிறுபான்மை அல்லது கூட்டணி அரசாங்கங்களால் ஆளப்பட்டுவருகிறது.

BJP தலைமையிலான NDA 1998ல் இருந்து 2004 வரை பதவியில் இருந்தது, இருபது கட்சிகளுக்கும் மேலானவற்றை உடன் இணைந்திருந்தது; ஆனால் BJP மிகப் பெரிய அளவில் முக்கிய, பெரும் பங்கைக் கொண்டிருந்தது. UPA என்பது டஜன் கட்சிகள் கொண்ட ஒரு கூட்டணியாகும்; ஆனால் அது பதவியை தக்க வைத்துக் கொள்ளுவதற்கு 60க்கும் மேற்பட்ட இடது முன்னணியின் ஆதரவு இன்னும் தேவைப்படுகிறது.

மேலும் காங்கிரசோ அல்லது BJP யோ அடுத்து வரவிருக்கும் 2009 தேர்தல்களை எந்த நம்பிக்கையுடனும் எதிர்கொள்ள இயலாது. பல மாநிலங்களில் கடந்த ஆண்டு காங்கிரஸ் பதவியை இழந்துள்ளது; இரு கட்சிகளுமே மே மாதம் உத்தரப் பிரதேசத்தில் நடந்த மாநில தேர்தல்களில் பெரும் நெருக்கடியால் பாதிக்கப்பட்டன.

ஒரு பல கட்சி கூட்டணித் தலைவராக, ஏராளமான சிறிய வட்டார, சாதி அமைப்பில் இருக்கும் கட்சிகளையும் சேர்த்துக் கொண்டுதான் காங்கிரசோ அல்லது BJP யோ அடுத்த தேர்தலில் பதவியைக் கைப்பற்ற முடியும் என்ற உண்மை நம்பிக்கையைக் கொள்ள முடியும். எனவேதான் ஒரு "நட்புரிமை மிகுந்த" ஜனாதிபதியை இருத்துவதில் கூடுதலான அக்கறை காட்டப்பட்டுள்ளது.

இந்தியாவின் இரு முக்கிய முதலாளித்துவ அரசியல் கட்சிகளுக்கும் ஆதரவுத் தளம் தொடர்ந்து அரிக்கப்பட்டு வருவது அவை செயல்படுத்திவரும் புதிய தாராளக் கொள்கைகளுக்கான வெகுஜன எதிர்ப்பில் வேரூன்றியிருக்கிறது. தனியார்மயமாக்கல், கட்டுப்பாடுகளை அகற்றல், சமூக நலச் செலவினங்களை குறைத்தல், விவசாயப் பொருட்களுக்கு விலை ஆதரவை குறைத்தல், ஆகியவை பொருளாதார பாதுகாப்பையும் சமூக சமத்துவமின்மையையும் அதிகப்படுத்தியுள்ளன.

இன்னும் இந்த எதிர்ப்பிற்கு ஒரு திரிக்கப்பட்ட, குழப்பமான வெளிப்பாடுதான் வந்துள்ளது. இங்கு CPM மற்றும் அதன் ஸ்ராலினிசத் தோழமை கட்சியான CPI ஆகியவற்றின் பங்கு முக்கியமானதாக இருக்கிறது.

ஸ்ராலினிஸ்டுகள் கடந்த 15 ஆண்டுகளாக அரசு தலைமையிலான முதலாளித்துவ வளர்ச்சி என்றும் மூலோபாயத்தில் இருந்து ஏற்றுமதிக்கு வழிவகுக்கும் வளர்ச்சி மற்றும் சர்வதேச மூலதனத்துடன் புதிய நெருக்கமான கூட்டு வரையிலான மூலோபாயத் திருப்பம் செயற்திறமுள்ளதாக்கும் வகையில் இந்திய முதலாளித்துவத்திற்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர்..

ஸ்ராலினிச கட்சிகள் 1991ல் புதிய தாராள சீர்திருத்தத்தை ஆரம்பித்த நரசிம்மராவின் காங்கிரஸ் அரசாங்கத்திற்கு முட்டுக் கொடுத்து நிலைநிறுத்த உதவின, மற்றும் 1996-98ன் மூன்றாவது அணி அரசாங்கம் இந்தியாவை ஒரு குறைவூதிய கூலி உழைப்புக்கான சொர்க்கமாக செய்ய உதவும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்கும் சிற்பிகளாக இருந்தனர். 2004 தேர்தல்களில் இடது முன்னணி காங்கிரசிற்கு ஆதரவைத் திரட்டி பின்னர் குறைந்தபட்ச பொது வேலைத்திட்டத்தை எழுதுவதற்கு உதவியது; இந்த ஆவணம்தான் UPA இன் பெருவணிகச் செயற்பட்டியலுக்கு திரையாக பயன்படுகிறது. இடது முன்னணி அதிகாரத்தைக் கொண்டுள்ள மாநிலங்களில் இது இரக்கமற்ற முறையில் முதலீட்டாளர் ஆதரவுக் கொள்கைகளைச் செயல்படுத்தி வருகிறது; இதில் மேற்கு வங்கத்தில் குறிப்பிட்ட பொருளாதாரப் பகுதி அமைக்கப்படுவதற்காக நிலங்கள் அபகரிக்கப்பட்டதை எதிர்த்த விவசாயிகள் நந்திகிராமத்தில் சுட்டுவீழ்த்தப்பட்ட நிகழ்வும் அடங்கும்.

அதே நேரத்தில், ஸ்ராலினிசக் கட்சிகள், பல எதிர்ப்பு இயக்கங்களையும் ஒரு நாள் பொது வேலைநிறுத்தங்களையும் அமைத்து வெகுஜன எதிர்ப்பை இருக்கும் அரசியல் கட்டுமானங்களுக்கு எதிராகத் திசை திரும்பாத வகையில் செயல்பட்டும் வருகிறது.

தனக்கும் UPA அரசாங்கத்திற்கும் இடையே வனப்புரையிலாவது சற்று தொலைவைக் காட்டும் வகையில், சமீபத்தில் CPI இடது முன்னணி UPA அரசாங்கத்துடனான உறவுகள் பற்றி "மறு பரிசீலனை" செய்ய வேண்டும் என்று அழைப்பு விடுத்தது. ஆனால் CPM உடைய தலைமை விரைவில் இந்தத் திட்டத்தைக் கைவிட்டது. அத்தகைய பரிசீலனை பொருளற்றது என்றும் UPA க்கு கொடுக்கப்படும் ஆதரவை விலக்கும் கேள்விக்கு இடமில்லை என்றும் அது கூறிவிட்டது. இரு ஸ்ராலினிச கட்சிகளும் தற்போதைய காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுப்பதை, இது ஒன்றுதான் BJP மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றுவதைத் தடுக்கும் வகையாகும் என்று கூறி நியாயப்படுத்தியுள்ளன.

ஆரம்பத்தில் CPM இம்மாத பிற்பகுதியில் நடைபெறவுள்ள துணை ஜனாதிபதி தேர்தலில் காங்கிரசால் நியமிக்கப்படும் வேட்பாளரை தவிற வேறு ஒருவருக்கு ஆதரவு கொடுக்கக்கூடும் என்று தெரிவித்தது. ஆனால் ஜனாதிபதித் தேர்தலில் ஏற்பட்ட சங்கடத்தை அடுத்து CPM தலைமை அத்தகைய தந்திர உத்தி UPA வைக் கூடுதலாக உறுதி குலைத்துவிடும் என்ற முடிவிற்கு வந்தது. மாறாக அது UPA ஒரு ஒருமித்த உணர்வு உடைய துணை ஜனாதிபதி வேட்பாளரை நிறுத்துவதற்குத் தொடக்க முயற்சிகளை மேற்கொண்டது.

இரகசிய ஆலோசனைகளில் CPM தேசிய சிறுபான்மைக் குழுவின் தலைவரான மகம்மது ஹமீதை அதன் வேட்பாளராக நிறுத்துமாறு காங்கிரசிடம் வலியுறுத்தியது. காங்கிரஸ் அதற்கு உடன்பட்டவுடன், CPM கட்சியின் பொதுச் செயலாளரான பிரகாஷ் காரட் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் வேண்டுகோளான ஹமித் வேட்பாளர்தன்மைக்கு காங்கிரசின் தலைமியில் உள்ள UPA உடைய மற்ற கட்சிகளின் ஆதரவைத் திரட்ட வேண்டும் என்பதை ஏற்றார்.

இவ்விதத்தில் CPM காங்கிரஸ் தலைமையிலான UPA விற்கு முட்டுக் கொடுத்து ஆதரவு தருவதுடன் நிற்கவில்லை. UPA உடைய உட்செயல்பாடு, இயக்கத்திறன் ஆகியவற்றிலேயே இது மிக முக்கிய பங்கைக் கொண்டுள்ளது. அரசியல் நடைமுறைக்கும் CPM ஒருங்கிணைந்து நிற்கும் தன்மையினால் சிறிது காலத்திற்கு முன்பு பெருவணிகச் செய்தி ஊடகம் தற்பொழுதைய பாராளுமன்றத்தின் தலைவரான சோம்நாத் சாட்டர்ஜி என்னும் CPM தலைவர் UPA உடைய துணை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்றுகூட கூறிவந்தது.

ஜனாதிபதித் தேர்தல் பற்றி பெருநிறுவன செய்தி உடகத்தில் பெருமளவு கையைப் பிசைதல் இருந்துள்ளது. இந்தியாவின் உயரடுக்கு ஜனாதிபதிப் பதவி அரசியல் அளவில் வலுவிழந்துள்ளது பற்றிக் கவலை கொண்டுள்ளது; இதன் விளைவு ஒரு வருங்கால நெருக்கடியில் திறமையுடன் தலையிடுவதற்கான மக்கள்வழி நெறித் தன்மையை பாடில் பெறாமற் போகக்கூடும். காங்கிரசை வலுவற்ற, கறைபடிந்த பாடிலை நாட்டின்மீது சுமத்துவதற்காக சாடிய தலையங்க எழுத்தாளர்களே இப்பொழுது எதிர்க்கட்சிகள் புதிய ஜனாதிபதிக்கு ஆதரவு தரவேண்டும் என்று கோருகின்றனர்.

Deccan Chrnocicle அறிவித்ததாவது: "திருமதி பாடில் மிக உயர்ந்த பதவியை ஏற்றுள்ளது ஜனாதிபதி போட்டியை கறைபடுத்தியிருந்த சூழ்ந்திருந்த பகைமை, கசப்புணர்வு, அப்பட்டமான ஒருதலைப்பட்சம் ஆகியவற்றை அழித்துவிடும் என்று நாடு நம்புகிறது, பிரார்த்திக்கிறது; மேலும் இது ஒரு புதியஜனநாயக முறையில் வளமான அரசியல் ஏற்புடைமை, புரிந்துகொள்ளுதல் என்ற சூழலைக் கொண்டுவரும் என்றும் அதையொட்டி அப்பணிமணி தன்னுடைய அரசியலமைப்புக் கடைமகளை செவ்வனே செலுத்துவார் என்றும் நம்புகிறது, பிரார்த்திக்கிறது ... கடந்த கால அரசியல் தொடர்புகள், விசுவாசங்கள் ஆகியவற்றின் கட்டாயங்களால் தடைகொள்ளாமல், செல்வாக்கிற்குப் படியாமல், திருமதி பாடில் அரசியல் அமைப்பு ஒன்றுதான் தன்னுடைய ஒரே வழிகாட்டி, தேசிய நலன்கள்தான் தன்னுடைய ஒரே உந்துதல், பாரபட்சமின்மை மற்றும் நியாயம்தான் தன்னுடைய நிலையான கோட்பாடுகள் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்."


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved