World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil
:
செய்திகள்
ஆய்வுகள்
:
வட அமெரிக்கா The New York Times and the crisis of American imperialism in Iraq நியூயோர்க் டைம்ஸும் ஈராக்கில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நெருக்கடியும் By Barry Grey ஈராக்கிய போர் பற்றிய முக்கிய அறிக்கையை ஞாயிறன்று நியூயோர்க் டைம்ஸ் வெளியிட்டது. செய்தித்தாளின் தலையங்க பக்கம் முழுவதும் இடம் பெற்றிருந்த இந்த அறிக்கை ஈராக்கில் புஷ் நிர்வாகத்தின் மூலோபாயம் பற்றிய தோல்வியை பற்றி உறுதியான கருத்தை கொண்டிருந்ததுடன் ஒரூ மாற்றீடான கொள்கை தேவை என்பதையும் தெளிவாக காட்டிய வகையில் இருந்தது. அமெரிக்க ஆளும் உயரடுக்கை எதிர்கொண்டிருக்கும் நெருக்கடியின் பாரிய தன்மையின் வெளிப்பாடாக தலையங்கம் இருந்தது. இந்த அறிக்கை தனது சொந்த வழியில் அமெரிக்காவின் வலிமையை நிருபணம் செய்வதுதான் தனது நோக்கம் என்பதை ஏற்றுக்கொண்டிருந்தாலும் (ஈராக்கை வெற்றிகொள்ளுதலை) அது அமெரிக்காவின் உலக ஆதிக்க உந்ததுலுக்கு மரண அடியை கொடுத்ததுபோல் ஆகியுள்ளது என்பதை ஒப்புக்கொள்ளுகிறது. நம்பிக்கையற்ற நிலை மற்றும் திகைப்பை வெளிக்காட்டும் வகையில், உள் முரண்பாடுகளை ஏராளமாக கொண்டிருந்து, விடைகள் கொடுத்ததைவிட அதிக கேள்விகளை எழுப்பிய வகையில், தலையங்கம் எல்லாவற்றையும்விட அமெரிக்க அரசியல் கட்டமைப்பு தானே தோற்றுவித்துள்ள பேரழிவை எதிர்கொள்ளுவதில் கொண்டுள்ள பெரும் குழப்பத்தை பிரதிபலிக்கிறது. "வீடு திரும்பும் பாதை" (The Road Home) என்ற தலைப்புடன் தொடங்கும் அறிக்கை, ஜனநாயகக் கட்சி மற்றும் அரசியல் கட்டமைப்பின் தாராளவாதப் பிரிவு என்று டைம்ஸே ஆதரவளிப்பவற்றின் ஏமாற்றுத்தனத்தையும் நன்கு வெளிப்படுத்தியுள்ளது. அறிக்கையை படிக்கும்போது, ஈராக்கில் இருந்து அமெரிக்கப் படைகள் திரும்பப் பெறவேண்டும் என்பதை உண்மையில் செய்தித்தாள் அழைப்புக் கொடுக்கவில்லை என்பதும், ஈராக்கில் நிரந்தர அமெரிக்க இராணுவ பிரசன்னம் வேண்டும், அப்பகுதியில் அமெரிக்க சக்திகளில் விரிவாக்கம் வேண்டும் என்பதையும்தான் தெளிவாக்குகிறது. "போரை நிறுத்துதல்" என்ற பெயரில் உண்மையில் ஜனநாயகக் கட்சி புஷ் நிர்வாகத்திற்கு எதிரான மாற்றீட்டில் மேற்கூறிய பொருளுரையைத்தான் கொண்டுள்ளது. ஒரு நிதானமான உறுதிப்பாட்டுடன் தலையங்கம் "பென்டகன் ஒரு முறையான வெளியேற்றத்தை ஒழுங்கமைப்பதில் அதிக தாமதிமின்றி செயல்பட வேண்டிய நிலையில், அமெரிக்கா ஈராக்கில் இருந்து வெளியேற வேண்டிய நேரம் வந்துவிட்டது" என தொடங்குகிறது. அது தொடர்கிறது: "பல அமெரிக்கர்களை போலவே, போதுமான காரணம் இல்லாமல், உலக எதிர்ப்பிற்கு இடையே, அந்நாட்டை பின்னர் உறுதிப்படுத்துவதற்கான திட்டம் ஏதும் இன்றி ஈராக்கின் மீது படையெடுத்ததால் அமெரிக்காவிற்கு ஏற்பட்டுள்ள பேரழிவில் இருந்து எவ்வாறு மீளுவது என்று ஜனாதிபதி புஷ் தீவிரமாக முயல்கிறார் என்பதற்கான அடையாளத்திற்கு நாமும் காத்திருக்கின்றோம்." தலையங்கம் பின்னர் ஒப்புக்கொள்ளுவது போல், உண்மையில் பெரும்பாலான அமெரிக்க மக்கள் போர் முடிவிற்கு வரவேண்டும் என்ற முடிவை பல மாதங்களுக்கு முன்பே அடைந்தனர். அதுதான் நவம்பர் 2006 சட்ட மன்றத் தேர்தல்களில் குடியரசுக்கட்சி பெற்ற பெருந்தோல்வியின் குழப்பத்திற்கு இடமில்லாத அர்த்தமாகும்; அதின் பின்னர் கருத்துக் கணிப்புக்கள் கூடுதலான முறையில் போர் எதிர்ப்பு பெருக்க அலையைத்தான் காட்டியுள்ளன. அமெரிக்க படையெடுப்பிற்கும் ஈராக் ஆக்கிரமிப்பிற்கும் ஒரு இருப்பு நிலைக்குறிப்பு தயார் செய்யும் முயற்சியில் டைம்ஸ் தலையங்கம் ஈராக்கில் இருக்கும் பேரழிவு பற்றி ஒரு சித்திரம், அதே நேரத்தில் அமெரிக்க அரசாங்கத்தின் மிக உயர்ந்த தட்டுக்கள் காட்டியுள்ள கவனமற்ற தன்மை, பொறுப்பற்ற தன்மை மற்றும் குற்றம் சார்ந்ந தன்மை ஆகியவை எப்படி புஷ் நிர்வாகம் பற்றி மட்டும் இல்லாமல் முழு அரசியல், செய்தி ஊடகத்தின் மாபெரும் குற்றத்தன்மை பற்றியும் குறிப்பிட்டுள்ளது; செய்தி ஊடகத்தின் மாபெரும் குற்றத்தன்மையில் டைம்ஸும் ஒரு பகுதிதான். டைம்ஸ் ஒப்புக்கொள்ளுவது என்ன அறிக்கையினுள் பட்டியலிடப்பட்டுள்ள உண்மையில் கீழே உள்ளவையும் இருக்கின்றன: "ஈராக்கின் அரசாங்கம், இராணுவம், போலீஸ், பொருளாதார கட்டுமானங்கள்" ஆகியவற்றை அமெரிக்கா அழித்துவிட்டது, "வாஷிங்டன் பயிற்சி கொடுத்துள்ள பாதுகாப்பு பிரிவுகள் விடுதலைப் போராளிகள் போலவே கூடுதலாக நடந்து கொள்ளுகின்றன", "ஏழில் ஒரு ஈராக்கியர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுவதற்கு வகை செய்யும் வகையில் .. மெதுவான வேகத்தில் இன, மத சுத்திகரிப்பு நடக்கிறது", "ஏற்கனவே இரண்டு மில்லியன் ஈராக்கிய அகதிகள் பெரும்பாலும் சிரியாவிலும், ஜோர்டானிலும் உள்ளனர். கிட்டத்தட்ட இன்னும் இரண்டு மில்லியன் மக்கள் நாட்டிற்குள்ளேயே இடம் பெயர்ந்துள்ளனர்." தலையங்கத்தின் கடைசிக்கு முந்தைய பத்தி கூறுகிறது: "ஜனாதிபதி புஷ் மற்றும் துணை ஜனாதிபதி சென்னி இருவரும் மக்களை ஈர்க்கும் வகை, அச்சம் ஆகியவற்றைப் பயன்படுத்தி போரை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கர்களின் கோரிக்கைகளை அடக்குகின்றனர். படைகள் திரும்பப்பெற்றால் அது இரத்தம் சிந்துதல் மற்றும் பெரும் குழப்பத்தை ஏற்படுத்துவதுடன் பயங்கரவாதிகளை ஊக்குவிக்கும் என்றும் கூறுகின்றனர். உண்மையில் தேவையற்ற இப்படையெடுப்பினாலும், இப்போரைத் திறமையின்றி நிர்வகித்ததாலும் இவை அனைத்தும் ஏற்கனவே ஏற்பட்டுவிட்டன." ஈராக்கிய சமூக பேரழிவைவிட டைம்ஸிற்கு முக்கியமானது போரினால் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு ஏற்பட்டுள்ள பேராபத்தான விளைவுகளாகும். புஷ் நிர்வாகத்தை ஈராக்கிய தோல்வி கொள்கை பற்றி கடுமையாக தாக்கினாலும், அரசியல் வடிவமைப்பையும், போருக்கான போலிக் காரணத்தையும் மற்றும் பரந்த முறையில் அமெரிக்க இராணுவவாதத்தின் வெடிப்பையும் ("பயங்கரவாதத்தின் மீதான போர்" என்று அழைக்கப்படுவது) விமர்சனமற்ற வகையில் ஒப்புக் கொள்கிறது. இவ்விதத்தில் தலையங்கம் "உறுதியான ஒன்றுபட்ட ஈராக்கை கட்டமைப்பது" என்று கூறப்பட்ட புஷ்ஷின் இலக்கு "இழக்கப்பட்டுவிட்டது" என்று உறுதியாகக் கூறுகிறது; "பாக்தாத் பகுதியில் குவிக்கப்பட்ட ஊடுதலான இராணுவத் துருப்புக்களை எதையும் மாற்றுவதிலும் தோல்வியைத்தான் கண்டுள்ளன" என்பதை ஒப்புக் கொள்ளுகிறது; "நாட்டின் கூட்டுக்கள், அதன் இராணுவ சக்திகள் ஆகியவற்றின் வலிமையை குறைத்துக் கொண்டிருக்கிறது"; அல் கொய்தாவிற்கு "புதிய தள முகாம்கள், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட நபர்கள், புதிய கெளரவம்" ஆகியவை கொடுக்கப்பட்டுவிட்டன என்று எச்சரிப்பதுடன். "பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் முக்கியமான நண்பர்களை விரோதப்படுத்திவிட்டது" என்றும் அறிவித்துள்ளது. எதை டைம்ஸ் முன்வைக்கிறது ஈராக் சதுப்புநிலத்தில் இருந்து வெளியேற வழி என்ன என்பதை டைம்ஸ் கூறுதல், இன்னும் சந்தேகத்திற்கு இடமில்லாமல் அமெரிக்க ஆளும் நடைமுறையை பீடித்துள்ள சிதைவுத்தன்மை, குழப்பம் ஆகியவற்றை காட்டுகிறது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பேரிடர் தோல்வியை தவிர்ப்பதற்கு ஈராக்கில் அமெரிக்கத் துருப்புக்கள் எப்படி மாறுபடச் செயலாற்றவேண்டும் என்பது பற்றி ஒரு நெறியான கொள்கையை செய்தித்தாள் கொண்டிருக்கவில்லை என்பதும் தெளிவாகிறது. தன்னுடைய திட்டங்கள் ஈராக்கில் இரத்ததோயலை இன்னும் அதிகப்படுத்தக் கூடும், நாட்டை குழுவாத வகைகளில் சிதைக்கும் வகையில் இட்டுச் செல்லக்கூடும் என்பதை ஒப்புக் கொண்டு அது கூறுவதாவது: "இந்த வாரம் சட்ட மன்றம் மீண்டும் கூடும்போது, அமெரிக்கத் துருப்புக்களை போரில் இருந்து மீட்பது அதன் செயற்பட்டியலில் உயரிடத்தில் இருக்க வேண்டும்" என்று டைம்ஸ் எழுதுகிறது. "அத்தகைய பேச்சுக்கள் நேர்மையாகவும் மத்தியப்படுத்துவதாகவும் இருக்க வேண்டும். அமெரிக்கர்கள் நகர்ந்துவிட்டால் ஈராக், அதைச் சுற்றியுள்ள பகுதிகள் இன்னும் கூடுதலான இரத்தம் சிந்தலையும், பெரும் குழப்பத்தையும் காணும் என்பது பற்றி அமெரிக்கர்கள் தெளிவாக இருக்க வேண்டும். அமெரிக்க சக்திகளுடன் இணைந்து இயங்கியவர்களுக்கு எதிராக பதிலடிகள் இருக்கும்; இன்னும் கூடுதலான வகையில் இனச்சுத்திகரிப்பு, ஏன் இனப்படுகொலைகள் கூட இருக்கலாம். அகதிகள் ஏராளமாகக் குவியக் கூடிய தன்மை ஜோர்டானையும் சிரியாவையும் பெரிதும் பாதிக்கக்கூடும். இதையொட்டி ஈரானும், துருக்கியும் அதிகாரத்தைக் கைப்பற்ற விழையலாம். எல்லாவற்றையும்விட முக்கியமானது, படையெடுப்பு பயங்கரவாதிகள் தீவிரமாகப் பெருகக் கூடிய வகையில் ஒரு புதிய தளத்தை ஏற்படுத்திவிடக்கூடும் என்பதுதான். "நிர்வாகம், ஜனநாயகக் கட்சியின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் சட்ட மற்றம், ஐக்கிய நாடுகள் மற்றும் அமெரிக்காவின் நட்புநாடுகள் இத்தகைய விளைவுகளைக் குறைக்கும் வகையில் முயல வேண்டும்; அவர்கள் தோற்கக்கூடும். ஆனால் அமெரிக்கர்கள் ஈராக்கில் படைகளை நிறுத்தி வைத்திருப்பது விவகாரத்தை இன்னும் மோசமாக்கும் என்ற உண்மை பற்றி நேர்மையுடன் அறியவேண்டும்." அமெரிக்க துருப்புக்கள் திரும்பப் பெற்றுவிட்டால் பதிலடிகள், இன்னும் கூடுதலான இனச்சுத்திகரிப்பு, இனப்படுகொலைகள்கூட நிகழும் தன்மை உள்ளது என்று டைம்ஸ் அறிவிக்கிறது. தற்போதைய ஆக்கிரமிப்பு படைகள் திரும்பப் பெறுவதற்கான வழிவகைகூட மகத்தான, ஏன் பேரழிவு தரக்கூடிய பிரச்சினைகளைக் கொடுக்கும் என்கின்றது. தலையங்கம் கூறுகிறது: "அமெரிக்கா கிட்டத்தட்ட 160,000 துருப்புக்களும் மில்லியன் கணக்கான இராணுவத் தளவாடங்களையும் ஈராக்கினுள் கொண்டுள்ளது. இவ்வளவு பெரிய படைகளை பாதுகாப்பாக வெளிக் கொண்டுவருவது என்பது பாரிய சவாலாக இருக்கும். தென்புறம் குவைத்திற்கு செல்லும் சாலை மிக மோசமான முறையில் சாலையோரத் தாக்குதலுக்கு இலக்காகிவிடும். வான்வழி, கடல்வழி செயற்பாடுகள் நடைபெறும்போது, படையினர், ஆயுதங்கள், வாகனங்கள் ஆகியவை பாதுகாப்பான தளங்களை அமைப்பதற்கு தேவைப்படும். திரும்பிவரும் வழிகள் கவனத்துடன் பாதுகாக்கப்பட வேண்டும். படையெடுப்பு இருந்ததற்கு முற்றிலும் எதிரான வகையில் வெளியேறுதல் இருக்க வேண்டும்; உண்மைநிலையை அடிப்படையாகக் கொண்டு, போதுமான வளங்களை பின்னணியில் கொண்டிருக்கவேண்டும்." செய்தித்தாள் இங்கு என்ன கூறுகிறது? "பாதுகாப்பான தளங்கள்" நிறுவப்படவேண்டும், "வான்வழி, கடல்வழி செயற்பாடுகள்" தேவை, "திரும்பிவரும் வழிகள் கவனத்துடன் பாதுகாக்கப்பட வேண்டும்," "போதுமான வளங்கள் வேண்டும்" ஆகியவற்றின் உட்குறிப்புக்கள் யாவை? இன்னும் எத்தனை ஈராக்கியர்களினதும் அமெரிக்கர்களினதும் குருதி கொட்டப்பட வேண்டும்? "பின்வாங்கி வருவதற்கு" இன்னும் கூடுதலான அமெரிக்கத் துருப்புக்கள் வேண்டும் என்று டைம்ஸ் சிந்திக்கிறதா? தலையங்கம் தொடர்கிறது: "வட ஈராக்கிலுள்ள குர்திஸ் பகுதியைப் பயன்படுத்துதல் பாதுகாப்பான அரங்கு என இருக்குமா என்று அமெரிக்கா ஆராயவேண்டும். துருக்கியில் இருக்கும் தளங்கள், துறைமுகங்களை பயன்படுத்துதல் விரைவாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும். இப்போரில் முரண்பாடுகளை காட்டிய வகையில் துருக்கி இருந்துள்ளது; ஆனால் மற்ற நாடுகளைப் போலவே போருக்குப் பிந்ததைய சுமையைத் தாக்குவதில் ஒரு பங்கைக் கொள்ளுவது தனக்கு நலனை கொடுக்கும் என்று அது உணரவேண்டும். ஈராக்கின் வடபகுதியில் ஒரு பலமான குர்திஸ் கோட்டை ஒருங்கிணைக்கப்படுவது தனக்கே பேராபத்து எனக் கருதும் துருக்கிய ஆளும் உயரடக்கு எதற்காக அமெரிக்காவில் "நின்று செல்லும் பகுதிகளாக" இப்பகுதியில் இருப்பதற்கு இணங்க வேண்டும்; இன்னும் கூடுதலான வகையில் அத்தகைய போக்கிற்கு உடன்படவேண்டும்; எதற்காக தன்னுடைய துறைமுகங்களையும் தளங்களையும் அமெரிக்காவின் இராணுவத்திற்கு உதவ அனுமதிக்க வேண்டும். இது பற்றி டைம்ஸ் ஏதும் கூறவில்லை. நிரந்தரமான தளங்கள் அமெரிக்கர்கள் "திரும்பிச் சென்றபின்" ஈராக்கியர்களுடைய வருங்கால நிலைமை, டைம்ஸ் உருவகப்படுத்தும் வகையில் எப்படி இருக்கும் என்பது பற்றி செய்தித்தாள், போர் ஒரு புதிய முகப்பைத் தோற்றுவித்துள்ளது; இங்கு அமெரிக்க தொடர்ந்து பயங்கரவாத சக்திகளுக்கு எதிராகப் போரிட்டு, ஈராக் சர்வதேச பயங்கரவாதிகளுடைய ஆதிக்கத்திற்குள் வரக்கூடாது என்று கருதும் உள்ளூர் நண்பர்களின் உதவியைத் திரட்ட வேண்டும். தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்டு சிந்திக்கொண்டிருக்கும் குருதியை நிறுத்துவதற்காக, இன்னும் சில காலத்திற்கு இராணுவத்திற்கு இருப்புக்களும் தளங்களும் தேவைப்படும்." இதன் பொருள் அமெரிக்க இராணுவம் அங்கு நிலைத்திருக்க வேண்டும், "பயங்கரவாதிகள்" என்று கூறப்படுபவர்களுக்கு எதிராக தொடர்ந்து குண்டுவீச்சுக்கள், ஏவுகணைகள் இயக்கப்படும், அவ்வப்பொழுது அமெரிக்க சிறப்புப் பிரிவினர் ஈராக்கிய நகரங்கள், சமூகங்கள் ஆகியவற்றை சோதனையிடும் என்று உள்ளது. காட்டப்படும் தோற்றம் "தளங்கள் பிரச்சினை" என்ற பிரிவில் இன்னும் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. தலையங்கம் அறிவிக்கிறது: "குர்திஸ்களுடன் அமெரிக்க உடன்பாடு கொண்டு, இத்தளங்களை வடகிழக்கு ஈராக்கில் நிறுவலாம். அல்லது பென்டகன் குவைத், கட்டார் போன்ற நாடுகளில் இருக்கும் தன்னுடைய தளங்கள் மற்றும் பாரசீக வளைகுடாவில் இருக்கும் தன்னுடைய மிகப்பெரிய கடற்படை இருப்பை, தாண்டிச் செல்லும் இடங்களாக பயன்படுத்தலாம். "இரு தேர்வுகள் பற்றியும் ஆதரவாகவும், எதிராகவும் வாதங்கள் உள்ளன. ஈராக்கில் படைகளை விட்டுவைப்பது உள்நாட்டுப் போர்ச்சூழலுக்கு இழுத்து விட்டு வாஷிங்டனுடைய உண்மையான இலக்கு ஈராக்கில் நிரந்தரத் தளங்களை அமைப்பது என்ற சந்தேகங்களை உறுதி செய்வது போல் ஆகும்; இது எளிதானது, செய்துவிடலாமோ என்றும் தோன்றும். ஆனால் மற்ற நாடுகளில் இருந்து பெருகிவரும் தாக்குதல்கள் அந்நாடுகளின் அரசாங்கங்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்திவிடக் கூடும். "இவ்விருப்பத்தை சட்டமன்றம் மற்றும் அப்பகுதியில் உள்ள மற்ற நாடுகளுடன் கலந்து ஆலோசித்த பின்னர் வெள்ளைமாளிகை மேற்கொள்ள வேண்டும்; மற்ற நாடுகளின் கருத்துக்கள் இதுவரை புஷ் நிர்வாகத்தால் அடிப்படையில் அசட்டை செய்யப்பட்டுள்ளது. முக்கியமான விஷயம்: "ஈராக்கில் பயங்கரவாதிகளுக்கு எதிராக திறமையான தாக்குதல்கள், விமானப்படைத் தாக்குதல்கள் நடத்துவதற்கு பென்டகனுக்கு போதுமான படைகள் இருக்க வேண்டும்; ஆனால் மிகப் பெரிய போரை மீண்டும் தொடக்கும் அளவிற்கு அது இருக்கக்கூடாது." மீண்டும், இதன் உண்மையான பொருள் என்ன? எத்தனை படைகள் "போதுமானவை?", 50,000 துருப்புக்களா? 100,000? 500,000? இதற்கு கட்டாய இராணுவ சேவை பழையபடி மேற்கொள்ளப்படுமா? ஏற்கனவே இப்பகுதியில் உள்ள பாரிய அமெரிக்க இராணுவ பிரசன்னம் "ஈராக்கில் உள்ள பயங்கரவாத சக்திகளுக்கு எதிரான திறமையான தாக்குதல்கள், விமானப்படைத் தாக்குதல்களை நடத்துதல்" அதிகப்படுத்தப்பட வேண்டும்? இப்பிராந்தியத்தில் விரிவாக்கப்பட்ட நிரந்தர அமெரிக்க பிரசன்னம் அப்பகுதியில் உள்ள நாடுகளில் எவ்வளவு, எந்த அரசுகள் உறுதிகுலைக்கப்படும்? ஜோர்டான்? சவுதி அரேபியா? குவைத்? எகிப்து? பிரிவினை: பொஸ்னியா மாதிரியான தீர்வு இதன் பின்னர் "உள்நாட்டுப் போர்" என்ற தலைப்பில் ஒரு பிரிவு உள்ளது; அது கூறுவதாவது: "ஈராக், குர்திஸ், சுன்னி, ஷியைட் குடியரசுகள் என்று தனித்தனியே பிரிக்கப்படலாம்; அமெரிக்கத் துருப்புக்கள் அப்படி நடப்பதைத் தடுக்கப் போவதில்லை." அது தொடர்கிறது: "ஈராக்கியத் தலைவர்கள் --தாங்கள் தப்பிப்பிழைக்க அமெரிக்கர்களை இனி நம்பமுடியாது என்பதைத் தெரிந்து கொண்டு, சிலவேளை பொஸ்னிய மாதிரியான பிரிவினை சமரசத்திற்கு தயாராகலாம். வெவ்வேறு இடங்களில் பல மில்லியன் ஈராக்கியர்கள் குடிபெயர்வதால் ஏற்படும் நிலைக்குத் தக்கப்படி பொருளாதார வளங்கள் நியாயமாகப் பங்கிட்டுக் கொள்ளலாம்." அமெரிக்க அரசியல், செய்தி ஊடக நடைமுறையில் போர்க்குற்றங்களுக்கும் இனப்படுகொலைகளுக்கும் "பொஸ்னியா" என்பது பொன்மொழியாக இருந்தது மிக அதிககாலத்திற்கு முன் அல்ல. உண்மையில் சேர்பிய ஆயுதக்குழுக்கள் பொஸ்னிய முஸ்லிம்களுக்கு எதிராக நிகழ்த்திய குற்றங்களை வேண்டுமென்றே மிகைப்படுத்தி சேர்பியர்களுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட இனப்படுகொலை என்ற கூற்றச்சாட்டு, 1999ல் பின்னர் சேர்பியாவிற்கு எதிராக நடத்தப்பட்ட விமானத்தாக்குதலுக்காக பொதுமக்கள் கருத்தை தயாரிப்பதில் மையப் பங்கை கொண்டிருந்தது. இப்பொழுது டைம்ஸ் அத்தகைய தீர்வைத்தான் "இடக்கரடக்கலாக "மறு குடிபெயர்தல்" என்ற சொல்லை, மிருகத்தனமான இனச்சுத்திகரிப்பு மற்றும் குறுங்குழுவாத போர் நடப்பதற்கு அமைதியாக ஈராக்கிற்கும் கூறுகிறது. அவை தவிர்க்கமுடியாமல் சுன்னிக்களும் ஷியைட்டுக்களும் அருகருகே பல பகுதிகளில் இருந்துவரும் நாட்டை துண்டுகளாக்கிவிடும். அடுத்து, மத்திய கிழக்கு முழுவதையும் இன்னும் கூடுதலான வகையில் உறுதிசீர்குலையவைக்கும் பாரிய அகதிகள் குடியபெயர்தல் என்னும் தோற்றத்தையும் எழுப்புகிறது; "ஈராக்கியப் போர் அதன் எல்லைகளை பெரிதும் தாண்டிப் பரப்பும்" என்று கூறுகிறது. ஈராக்கில் எல்லையில் உள்ள துருக்கி, ஈரான், குவைத், சவுதி அரேபியா, ஜோர்டான் மற்றும் சிரியா என்னும் ஆறு நாடுகளும் மற்ற நாடுகளுடன் சேர்ந்து அகதிகள் பிரச்சினையை கட்டுப்படுத்த ஒத்துழைக்க வேண்டும். ஐரோப்பிய, ஆசிய நாடுகளுடன், அமெரிக்காவுடன் சேர்ந்து கொண்டு அத்தகைய திட்டத்தின் செலவுகளுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்றும் செய்தித்தாள் வலியுறுத்துகிறது. பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மனியில் உள்ள புது அரசாங்கங்ககள் தங்கள் பங்கை நெருக்கடியைக் குறைப்பதற்கு செய்ய வேண்டும்; ஏனெனில் "பயங்கரவாதம் மற்றும் எண்ணெய் ஆகியவை இதை அசட்டை செய்ய முடியாமல் வைத்துள்ளன." "மிகத் தந்திரமான பணிகளில் ஒன்று அண்டை நாடுகள் -- அமெரிக்காவின் நண்பர்கள் மற்றும் விரோதிகள் -- மிக அதிக அளவில் ஈராக்கிற்கு தொந்தரவு கொடுப்பதைத் தவிர்த்தல் ஆளும். "தெற்கு ஈராக்கில் தங்களுடைய சுதந்திரமான வருங்காலத்தை ஷியைட்டுக்கள் வளர்க்க சர்வதேச அழுத்தத்தின்கீழ் ஈரான் வரும் வகையில், வாஷிங்டன் சிரியா போன்ற சுன்னி நாடுகள் சுன்னி ஈராக்கியர்களுக்காக தலையிடுவதை தவிர்க்கும் வகையில் வாஷிங்டன் உதவ வேண்டும். குர்திஸ் பகுதிகளுக்குள் துருப்புக்களை அனுப்பவதில் இருந்து துருக்கி தடுத்து நிறுத்தப்பட வேண்டும்." அதுவும் சிதைந்த ஈராக் இப்பகுதியில் நீண்ட காலமாக இருக்கும் அழுத்தங்கள் மற்றும் போட்டிகள் கொதிநிலைக்கு கொண்டுவந்துள்ள அளவில் தன்னுடைய விருப்பத்தை அமெரிக்கா எப்படி இந்நாடுகளின்மீது சுமத்தும் என்பது பற்றி டைம்ஸ் தெரிவிக்கவில்லை. இராஜரந்திர மிரட்டும் பாணியிலா? இராணுவ சக்தியை பயன்படுத்தியா? ஒரு கட்டத்தில் தலையங்கம் அறிவிக்கிறது: "படைகளை திரும்பப் பெற்றுக் கொள்ளுவதால் கிடைக்கும் எந்த ஆதாயத்தை பயன்படுத்தியாவது அமெரிக்க தன்னுடைய நட்பு நாடுகளும் ஈராக்கிய அண்டை நாடுகளும் பேச்சுவார்த்தைகளுக்கு உட்பட்ட ஒரு தீர்வைக் காண அழுத்தம் கொடுக்க வேண்டும்." தலையங்கத்தில் நிறைந்திருக்கும் பல அப்பட்டமான முரண்பாடுகளில் ஒன்றை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. தோல்வியை ஒப்புக்கொண்டு பின் தன்னுடைய ஈராக்கிலுள்ள போர்ப்படைகளில் பெரும்பாலானவற்றை வெளியே எடுத்துச் செல்லும் நிலையில் உட்குறிப்பாக இருக்கும் அமெரிக்காவிற்கு எந்த சர்வதேச நெம்புகோல் நலம் இருக்கிறது? மற்ற நாடுகள், நண்பர்களோ, விரோதிகளோ, எதற்காக வாஷிங்டன் கூறுவதற்கு ஏற்ப நடக்க வேண்டும்; அதுவும் ஒரு இராணுவ, அரசியல் அவமானத்தை அது அடைந்த பின்னர்? ஒரு "தேவையற்ற" போருக்கு எப்பொறுப்பும் இல்லை இன்னும் கூடுதான அடிப்படை முரண்பாடு ஒன்றும் உள்ளது. ஆரம்ப பத்திகளில், தலையங்கம் படைகள் திரும்பப் பெறுவதற்கான காலக்கெடு நிர்ணியக்கப்பட வேண்டும் என்ற தன்னுடைய முந்தைய எதிர்ப்பை டைம்ஸ் கைவிட்டுவிட்டதாக கூறுகிறது; ஏனெனில், "தான் ஜனாதிபதியாக இருக்கும் வரை இதே போக்கில் சென்று பெரும் குழப்பத்தை தனக்குப் பின் வரவிருப்பவருக்கு விட்டுவிடவேண்டும் என்னும் திரு.புஷ்ஷின் திட்டம் பயமுறுத்தும் வகையில் தெளிவாக உள்ளது." இவ்விதத்தில் டைம்ஸ் கோடிட்டுக் காட்டும் மாற்றக் கொள்கையின் முன்கருத்து புஷ் மற்றும் சென்னியின் போக்கை மாற்றும் இயலாத்தன்மை மற்றும் முழு அளவு பேரழிவைத் தவிர்க்க முடியாத தன்மை என்பதுதான். ஆயினும்கூட இந்த அறிக்கை பலமுறையும் வெள்ளை மாளிகையை அதைத்தான் துல்லியமாகச் செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. உதாரணமாக அது கூறுகிறது: "சட்டமன்றமும் வெள்ளை மாளிகையும் ஒரு பேச்சுவார்த்தைக்கு உட்பட்ட விளைவுகள் வருவதற்கு சர்வதேச முயற்சிக்கு வழிநடத்த வேண்டும். தொடக்கத்தில் போருக்கு முன்பு முகவுரையாக வாஷிங்டன் அலட்சியப்படுத்தி, எள்ளி நகையாடியிருந்த ஐக்கிய நாடுகள் சபையை நாடவேண்டும்." அமெரிக்க ஆளும் உயரடுக்கின் அதிகாரம் வாய்ந்த கருவியாக கருதப்படும் நியூயோர்க் டைம்ஸ் வரலாற்றுப் பரிமாணம் உடைய நெருக்கடியை கோடிட்டுக் காட்டி பொறுப்பற்ற தன்மை, திறமையின்மை, மற்றும் குற்றம்சார்ந்த தன்மை வெள்ளை மாளிகையில் இருப்பதை, அதுவும் முன்னோடியில்லாத வகையில் இருப்பதை விவரித்துள்ளது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலன்கள் என்ற நிலைப்பாட்டில் இருந்து வரும் தீவிர விடையிறுப்பு, தற்போதைய அரசாங்கம் இராஜிநாமா செய்ய வேண்டும் அல்லது சட்டமன்றம் சென்னி, புஷ்ஷிற்கு எதிராக பெரிய குற்ற விசாரணைகளை நடத்த வேண்டும் என்று இருக்க வேண்டும். அது ஒன்றுதான் செய்தித்தாள் விரும்புவதாக கூறும் "வெளிப்படையான, முக்கியப்படுத்தப்பட்ட" போர் பற்றிய உரையாடலுக்கு முன்னிபந்தனையாகும். ஆனால் டைம்ஸ் அப்படி எதையும் கூறவில்லை. உண்மையில் நாட்டை ஒரு "தேவையில்லாத" போருக்கு இழைத்ததுக்கு பொறுப்பாரவர்கள் பொறுப்புக் கூறும் வகையில் எந்த நடவடிக்கையையும் அது முன்வைக்கவில்லை. இவ்விதத்தில், எல்லாவற்றிற்கும் மேலாக, இதன் பெரும் அறிவிப்பு முழுவதற்கும் உண்மையற்ற தன்மை என்ற வட்டத்தைத்தான் கொடுக்கிறது. இத்தகைய வெளிப்படையாக தெரியும் மெளனத்திற்குப் பல காரணங்கள் உள்ளன. முதலில், முழு அரசியல் நடைமுறையும், தாராளவாத பிரிவு உட்பட, ஈராக் பேரழிவில் தொடர்பு கொண்டதாகும். தந்திர உத்திகள் பற்றி வேறுபாடுகள் இருந்தாலும், டைம்ஸே படையெடுப்பிற்கு ஆதரவு கொடுத்திருந்தது; படையெடுப்பை நியாயப்படுத்துவதற்காக பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாக கூறப்பட்ட பொய்களை பிரச்சாரம் செய்வதில் இதுவும் மையப் பங்கைக் கொண்டிருந்தது. இன்றளவும், ஈராக்கிய மக்கள்பால் அமெரிக்கா இழைத்துள்ள இறப்பு எண்ணிக்கை பேரழிவு பற்றி உண்மையான அளவுகளை அமெரிக்க மக்களிடம் இருந்து மறைத்துள்ளது. அதற்கும் அப்பால், தாராளவாத, ஜனநாயகக் கட்சி நடைமுறையில் இயல்பான கோழைத்தனமும், தற்போதைய நிர்வகத்தை அகற்றும் முயற்சியால் அமெரிக்காவிற்குள் ஏற்படக்கூடிய அரசியல் விளைவுகள் பற்றிய அதன் அச்சமும் உள்ளன. ஆளும் உயரடுக்கின் இப்பிரிவுகள் புஷ் மற்றும் சென்னி மீது வெளிப்படையான தாக்குதல் சமூக சீற்றம், வெகுஜனசக்திகளின் அடக்கிவைக்கப்பட்டுள்ள தன்மையை கட்டவிழ்த்து அது முழு அரசியல் கட்டமைப்பாலும் கட்டுப்படுத்தமுடியாத அளவிற்குப் போய்விடும் என்றும் உணர்ந்துள்ளன. அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு அத்தகைய சர்வதேச பேரழிவு என்பது, அதுவும் டைம்ஸ் விளக்கியிருப்பது போல் என்பது, அமெரிக்காவிற்குள்ளேயே நீண்டகால விளைவுகள் உடைய பொருளாதார அரசியல் மாற்றங்களை ஏற்படுத்தும். விஷயத்தின் இப்பக்கத்தை செய்தித்தாளால் தொடக்கூட முடியவில்லை. ஆனால் ஈராக்கில் அமெரிக்கா கொண்டுள்ள சங்கடம் ஆழ்ந்த விளைவுகளை ஏற்படுத்தும்; இதற்கு அமெரிக்க தொழிலாள வர்க்கம் தயாராக இருக்க வேண்டும். ஈராக்கில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நெருக்கடி ஆகும் உயரடுக்கினரின் விவாதத்திற்கு மட்டும் விட்டுவிடக்கூடாது. ஏற்கனவே நூறாயிரக்கணக்கான ஈராக்கியர்களின் உயிர்களை குடித்து ஆயிரக்கணக்கான அமெரிக்கர்கள் உயிரிழக்கவும் காயமடையவும் காரணமாக இருந்த சட்ட விரோத, தூண்டுதலற்ற போரை தொடக்கியதற்கு பொறுப்புக் கொண்டவர்கள் மீண்டும் ஈராக்கின் மீது கூடுதலான கொடுமைகளை இழைக்கத் தயாரிக்கவும் புதிய ஆக்கிரமிப்புப் போர்களைத் தயாரிக்கவும் அனுமதிக்கப்படக்கூடாது. ஏகாதிபத்தியப் போருக்கு எதிராக தொழிலாள வர்க்கம் சுயாதீனமான அரசியல் தலையீட்டை கொள்ளுவதுதான் முடிவான பிரச்சினை ஆகும்; அதேபோல் எந்த முதலாளித்துவ ஆளும் உயரடுக்கின் நலன்களுக்காக இப்போர் தொடக்கப்பெற்றதோ அவர்களுக்கும் எதிராகப் போராட வேண்டும். |