World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு : ஈராக்Iraqi team wins Asian Cup, captain condemns US occupation ஆசிய கோப்பையை ஈராக் குழு வெல்கையில், குழுத் தலைவர் அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு கண்டனம் By Patrick Martin ஞாயிறன்று ஆசிய கோப்பையில் ஈராக்கிய கால்பந்துக் குழுவால் பெறப்பட்ட 1-0 என்ற கணக்கிலான வெற்றி, குழுவின் 24 வயது தலைவரான யூனிஸ் மஹ்மூத் தலையினால் மிகச் சிறந்த வகையில் ஒரு கோல் போட்டதை சிறப்பம்சமாக கொண்டிருந்தது. இதைத் தொடர்ந்து இந்த நிகழ்வில் இருந்து பெரும் பிரச்சாரப் புகழ் கிடைக்கும் என்று நம்பியிருந்த புஷ் நிர்வாகம் மற்றும் அதன் ஈராக்கிய கைப்பாவை அரசாங்கத்திற்கும் "சொந்த கோலும்" போடப்பட்டது. மாறாக, உலகெங்கிலுமிருந்த பார்வையாளர்களுக்கு மஹ்மூத் தன்னுடைய தாய்நாட்டிற்கு திரும்புவது மிகக் கடினம் என்றும் அங்கு அமெரிக்க ஆக்கிரமிப்பினால் தோற்றுவிக்கப்பட்டுள்ள சூழ்நிலைதான் இதற்குக் காரணம் என்றும் கூறினார். "அமெரிக்கா வெளியேற வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இன்றோ, நாளையோ அதற்கு மறுநாளோ, போயே தீரவேண்டும். ஈராக்கின்மீது அமெரிக்க மக்கள் படையெடுக்காமல் இருந்திருக்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம்; இது விரைவில் முடிந்து விடும் என்று நம்புகிறேன்" என்று அவர் கூறினார். பாரசீக வளைகுடா ஷேக் நாடான கட்டாருக்கு தான் திரும்ப இருப்பதாக மஹ்மூத் கூறினார்; அங்கு ஒரு குழுவிற்கு அவர் விளையாடி வருகிறார். "ஈராக்கிய மக்கள் என்மீது கோபம் கொள்ளக்கூடாது என்று நான் நினைக்கிறேன். குழுவுடன் நான் திரும்பிச் சென்றால், என்னைக் கொல்லவோ, காயப்படுத்தவோ சிலர் முயலக்கூடும்" என்றார் அவர். மேலும், "என்னுடைய மிக நெருக்கமான நண்பர்களுள் ஒருவரை கைது செய்ய வந்தனர்; பின்னர் ஒரு வருடமாக நானோ அவருடைய குடும்பத்தினரோ அவர் எங்கு உள்ளார் என்று தெரியாமல் உள்ளோம்" என்றும் அவர் கூறினார். நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் போட்டியில் ஈராக் குழு எதிர்பாராமல் முன்னேறியது நாடு முழுவதும் பெரும் உற்சாகத்துடன் வரவேற்கப்பட்டது; பலரும் அனைத்து இன, மத பின்னணியில் இருந்து வீரர்களை தேர்த்தெடுக்கப்பட்டிருந்த தேசியக் குழு முயற்சியை, உள்நாட்டில் குறுங்குழு வாதிகளின் தீமை நிறைந்த மோதல் பெருகிவருவதற்கு நல்ல மூக்குடைப்பாக இருக்கும் என்று வரவேற்றனர். ஒரு கோர்னர் கிக்கை குர்து ஆன ஹவார் முகம்மத் அடிக்க கிர்குக்கில் இருந்து வந்த சுன்னி துர்க்கோமானான மஹ்மூத் தலையினால் கோலுக்குள் தள்ளிய விதத்தில் வெற்றி பெற்ற கோல் போடப்பட்டது (விந்தையான முறையில் குர்திஷ் தேசிய கட்சிகள் கிர்குக் மற்றும் அதன் அருகில் இருக்கும் எண்ணெய் வயல்கள் குர்திய வட்டார அரசாங்கத்திற்கு மாற்றப்பட வேண்டும் என்று பிரச்சாரம் செய்து வருகின்றன; இந்தக் கோரிக்கை துர்க்கோமன் மற்றும் அரேபிய சுன்னிகள், ஷியைட்டுக்கள் என்று இரு பிரிவினராலும் எதிர்க்கப்படுகிறது.) கோல்கீப்பரான ஷியைட் நூர் சப்ரி அப்பாஸ் ஈராக்கிய குழுவின் வெற்றி முன்னேற்றத்தில் முக்கிய பங்கை கொண்டிருந்தார்; குழுவோ நான்கு முறை தொடர்ச்சியாக முன்னேறியது; இதில் தென் கொரியாவிற்கு எதிரான அரை இறுதிப் போட்டியும் இருந்தது; அதில் கோல்கீப்பர் இரண்டு வேகப்பந்துகளை 0-0 வெற்றி தோல்வி இல்லை என்ற நிலைக்குப் பின் அடிக்கப்படும் பந்துகளை தடுத்தார்; இதையொட்டி ஈராக்கிய குழுவிற்கு 4-3 என்ற முறையில் வெற்றி கிடைத்தது. விளையாட்டு தொடரின்போது சபரியின் மைத்துனர் ஒரு குண்டுவீச்சில் இறந்து போனார்; மற்றும் இரு குழு உறுப்பினர்கள் இதே காலத்தில் தங்கள் உறவினர்களை பறி கொடுத்தனர். ஒரு மாத காலம் நடைபெற்ற இப்போட்டியின்போது மற்ற நிகழ்வுகளும் போரினால் சிதைவுற்று, ஆக்கிரமிப்பிற்கு உள்ளாகியிருக்கும் நாட்டின் கொடூரமான நிலைமைகளை பிரதிபலித்தன. அணித்தலைவரும், இறுதி வெற்றியில் நட்சத்திரமாகவும் திகழ்ந்த மஹ்மூத் பாங்கொக்கில் இருந்த விமான நிலையத்தில் கிட்டத்தட்ட 12 மணி நேரம் நிறுத்திவைக்கப்பட்டு கிட்டத்தட்ட ஆரம்ப விளையாட்டு ஆடமுடியாது என்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தார். முழு குழுவும் செளதி அரேபியாவிற்கு எதிரான இறுதி ஆட்டத்தின்போது கறுப்புப் பட்டை அணிந்திருந்தனர்; இது அரையிறுதி வெற்றி விழா நேரத்தில் இரு கார் குண்டுத் தாக்குதல்களால் இறந்திருந்த டஜன் கணக்கான மக்களை நினைவு கூர்ந்து கெளரவிக்கும் வகையில் இருந்தது. அமெரிக்க ஆதரவைப் பெற்றுள்ள பாக்தாத் கைப்பாவை அரசாங்கத்தின் அரசியல் தலைவர்கள் தேசியக் குழுவுடன் தங்களைப் பிணைத்துக் கொள்ள முயன்றனர். இறுதிப் போட்டிக்கு முன்னால், பிரதம மந்திரி நூரி அல்-மாலிகி குழு உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் $10,000 போனஸ் தொகை தருவதாக உறுதி மொழி கொடுத்தார். அரசாங்க தொலைக்காட்சிகள் குழு உறுப்பினர்களுக்கு வெற்றி வாழ்த்து செய்திகளை அனுப்பியதை விவரித்தன; அதே நேரத்தில் விளையாட்டு வீரர்கள் களத்தில் மகிழ்ந்து கொண்டாடினர். ஜனாதிபதி ஜலால் தலாபானி ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும் கூடுதலான $10,000 கொடுப்பதாகவும் மஹ்மூதுக்கு $20,000 கொடுப்பதாகவும் உறுதியளித்தார். ஆனால் ஈராக் தலைநகரத்தில் குழுவிற்கு வரவேற்பு கொடுப்பது பாதுகாப்புக் காரணங்களை ஒட்டி கடினமாக இருக்கும் என்றும் அவர் ஒப்புக் கொண்டார். "பாக்தாத் விமான நிலையத்தில் நாம் அவர்களை வரவேற்போம். இயலாவிட்டால், இர்பில்லில் அல்லது சுலய்மனியாவில் வரவேற்போம்" என்று குர்திய பகுதியில் இருக்கும் இரு நகரங்களின் பெயர்களை குறிப்பிட்டார். அமெரிக்க செய்தி ஊடகம் பெரும் பிரச்சாரத்திற்கு தயாராக இருந்தது; கால்பந்து வெற்றியை அமெரிக்க மற்றும் கைப்பாவை சக்திகள் ஆக்கிரமிப்பு எதிர்ப்பு எழுச்சி எதிர்ப்பாளர்களுக்கு எதிரான வெற்றி என்று ஒப்புமை காட்டத் தயாராக இருந்தன. ஆக்கிரமிப்பிற்கு மஹ்மூத்தின் வெளிப்படையான எதிர்ப்பு --ஈராக்கிய மக்களில் பெரும்பாலானவர்களால் கொள்ளப்பட்டுள்ள இந்த உணர்வு-- அத்தகைய ஒப்புமை விளக்கத்திற்கு ஒத்து வரவில்லை; எனவே வாஷிங்டன் போஸ்ட் மற்றும் நியூ யோர்க் டைம்சில் செய்தித் தகவல்களில் கிட்டத்தட்ட அடிக்குறிப்பு போல் சிறு அளவில்தான் வெளியிடப்பட்டது; NBC, ABC, CBS, Fox ஆகியவற்றால் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுவிட்டது. ஒரு AP தகவலை அடிப்படையாகக் கொண்டு Fox தான் மஹ்மூதின் கருத்துக்களை அதன் வலைத் தளத்தில் வெளியிட்டது. |