World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

ICFI holds Paris memorial meeting for Raveenthiranathan Senthil Ravee

ரவீந்திரநாதன் செந்தில்ரவிக்கு நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு பாரிசில் நடாத்திய நினைவஞ்சலிக் கூட்டம்

By Antoine Lerougetel
18 April 2007

Back to screen version

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு ஏப்ரல் 15ம் தேதி, லண்டனை தளமாக கொண்டிருக்கும் அதன் உறுப்பினர் ரவீந்திரநாதன் செந்தில்ரவி பெப்ருவரி 28 அன்று ஒரு கார்விபத்தில் காலமானதை அடுத்து ஒரு ஞாபகார்த்த கூட்டத்தை நடத்தியது. FIAP Jean Monnet Centre, பாரிசில் நடந்த இக்கூட்டத்தில் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்; பெரும்பாலானவர்கள் பாரிசில் உள்ள தமிழ் சமூகத்தில் இருந்து வந்திருந்தனர்.

உலக சோசலிச வலைத் தளத்தின் தமிழ் பகுதியின் பிரதம ஆசிரியரான அமுதன் மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் முக்கிய உறுப்பினர்கள் கூட்டத்தில் உரையாற்றினர்; அவர்களில் இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய செயலாளர் விஜே டயஸ், பிரிட்டிஷ் சோசலிச சமத்துவக் கட்சியின் கிறிஸ் மார்ஸ்டன் மற்றும் ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சியின் பீட்டர் சுவார்டஸ் ஆகியோரும் அடங்குவர்.

பேச்சாளர்களுக்கு பின்புறம் இரு பெரிய பதாகைகள் செந்தில் புகைப்படத்துடன் கூடியது, மற்றும் இந்நிகழ்வையொட்டி இந்தியத் தோழர் தமிழில் எழுதிய கவிதை ஒன்று ஆகியவை இடம் பெற்றிருந்தன. தமிழில் இருந்த கவிதை கூறுவதாவது: "உலக சோசலிசப் புரட்சிக்காக செந்தில் போராடினார். அது அவரது உயிர் மூச்சாக இருந்தது. அங்கே செந்தில் இன்னும் உயிர்வாழ்கிறார், நாம் அதனை தொடர்வோம்."

கூட்டத்தில் தலைவரான ஸ்ரெபான் உகுஸ், செந்திலின் மனைவி அன்பரசியையும், விபத்தில் ஏற்பட்ட காயங்களில் இருந்து தேறிவரும் செந்திலின் நெருங்கிய நண்பரும் தோழருமான செழியனையும் வரவேற்றார்.

கூட்டத்தின் ஆரம்பத்தில் செந்திலுக்கு மரியாதை செய்யும் வகையில் ஒரு நிமிடம் மெளனம் அனுஷ்டிக்கப்பட்டது.

ஐரோப்பா, ஆசியா, ஆஸ்திரேலியா, வட அமெரிக்கா என நான்கு கண்டங்களில் இருந்தும் மக்கள் கூட்டத்திற்கு வந்துள்ளனர் என்பதை பேச்சாளர்கள் குறிப்பிட்டனர். செந்தில் மற்றும் அவர் சிறந்த உறுப்பினராக இருந்த நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் சர்வதேசியத்தின் அடையாளம் என்று அவர்கள் கூறினர். அவருடைய இறப்பில் தொழிலாள வர்க்கம் ஒரு முக்கியமான தலைவரை இழந்துள்ளது. ஆனால் அவருடைய வாழ்வு இளைய புரட்சியாளர்களுக்கு ஒரு ஊக்கமாக இருக்கும் என்றும் பல பேச்சாளர்கள் குறிப்பிட்டனர்.

செந்திலின் வாழ்வையும் அரசியல் அபிவிருத்தியையும் ஒரு வரலாற்று உள்ளடக்கத்தினுள் வைத்தே விளங்கிக்கொள்ளப்பட வேண்டும் என்று அமுதன் வலியுறுத்தினார். "இலங்கையின் முன்னாள் ட்ரொட்ஸ்கிச கட்சியான LSSP (லங்கா சம சமாஜ கட்சி) 1964ல் முதலாளித்துவ அரசாங்கத்தில் சேர்ந்து, தேசிய முதலாளித்துவத்தின் கூட்டாளியாக மாறிய வகையில் செய்த காட்டிக்கொடுப்பிற்கு மிக அதிக விலை கொடுத்த தலைமுறையின் ஒரு பாகமாக செந்தில் இருந்தார்" என்று அவர் குறிப்பிட்டார்.

அவர் ஒரு தமிழ் இளைஞனாக, தமிழ் மக்கள் மீதான கொடிய இனவாத அடக்குமுறையை அனுபவித்த உண்மை பற்றி ஏனைய பேச்சாளர்கள் கருத்துக்கூறினர். ஆனால் அவர் மற்ற தேசிய இனங்களை சேர்ந்த தொழிலாளர்களை புறக்கணித்து தமிழ் மக்களை மட்டும் காப்பாற்றுவதாக கூறும் ஒரு தேசிய முன்னோக்கை எதிர்த்தார். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடன் கொண்ட தொடர்பின் மூலம் அவர் ஒரு சர்வதேச சோசலிஸ்ட்டாக மாறி, பிரான்ஸ், கிரேட் பிரிட்டன் மற்றும் இந்தியாவின் தொழிலாள வர்க்கத்தின் விடுதலைக்கான முக்கிய கொள்கைப் பிடிப்பாளராக இருந்தார்.

1990களில் பரந்த மக்களிடையே புரட்சிகர நனவு வளர்வதை தடுக்கும் வகையில் அரசியல் குழப்பம் நிலவிய காலத்தில் செந்தில் வரலாற்றுப் பிரச்சினைகளை ஆழ்ந்து கவனிப்பதில் அயரா ஆர்வம் காட்டினார் என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

தமிழ் தொழிலாளர்கள் இந்த நெருக்கடியில் இருந்து வெளியேறுவதற்கான பாதை மற்றும் "நாம் எப்படி போரை நிறுத்த முடியும்" என்பது பற்றி செந்திலுடன் பல விவாதங்கள் நடத்தியதை அமுதன் நினைவுகூர்ந்தார். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடன் செந்தில் விவாதங்களை ஆரம்பித்தபொழுதே, அவருக்கு இலங்கையில் உள்ள தேசியவாத மற்றும் தொழிலாள வர்க்க-எதிர்ப்பு அமைப்புக்களின் பங்கு பற்றி நன்கு அறிய முடிந்தது. தீவுபற்றிய அனைத்துலகக் குழுவின் சர்வதேச முன்னோக்கு, ஸ்ராலினிச அமைப்புகள் மத்தியில் பீதியை தூண்டிவிட்டது. உதாரணமாக ஸ்ராலினிச பிரெஞ்சு தமிழ் இலக்கிய வட்டம் "ஈழத்தில் ட்ரொட்ஸ்கிச அபாயம்" என்ற தலைப்போடு பிரசுரத்தை வெளியிட்டது.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் சர்வதேச முன்னோக்கை நன்கு கிரகித்திருந்த செந்தில் பல நேரமும், "இலங்கை பிரச்சினை இலங்கையில் தொடங்கவுமில்லை; அதற்கான தீர்வையும் இலங்கைக்குள் காணமுடியாது" என அடிக்கடி கூறினார். இலங்கையிலோ அல்லது பிரான்சிலோ ஒரு தேசிய முன்னோக்கில் இருந்து எப்பிரச்சினையையும் அவர் ஆரம்பிக்கவில்லை.

இங்கிலாந்தில் செந்திலின் இறுதிச்சடங்குகளில் நிகழ்த்தப்பெற்ற உரைகளில் இருந்து ஐரோப்பாவில் வசிக்கும் கட்சித் தோழர்கள் எந்த அளவிற்கு செந்திலின் அரசியல் வாழ்வு பற்றி ஆழ்ந்த மதிப்புக் கொண்டிருந்தனர் என்பதை தான் அறிந்ததாக விஜே டயஸ் கூட்டத்தில் தெரிவித்தார்.

"1969ல் யாழ்ப்பாணத்தில் பிறந்த செந்தில், தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் மத்தியிலே ஒரு குழந்தையாக வளர்ந்தார். இத்தொழிலாளர்களின் முன்னோர்கள் இந்தியாவின் தமிழ் நாட்டில் இருந்து இலங்கையில் பிரிட்டிஷாருக்கு சொந்தமான இரப்பர் தோட்டங்களில் வேலை செய்வதற்காக 19ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் கொண்டுவரப்பட்டனர். ஆனால் 1948ல் விடுதலை பெற்ற நேரத்தில் மக்கட்தொகையில் 12 சதவிகிதத்திற்கும் மேலாக இருந்த இத்தொழிலாளர்கள், குடியுரிமை, வாக்குரிமை ஆகியவற்றை புலம்பெயர்ந்தவர்கள் என்ற அடிப்படையில் இழந்தனர்." இதுதான் கடந்த இருபத்தி ஐந்து ஆண்டுகளாக குருதி கொட்டும் உள்நாட்டுப் போர் என்ற வடிவத்தில் நாட்டை சூழ்ந்துள்ள வகுப்புவாத சகதியின் தொடக்கம் ஆகும்.

ட்ரொட்ஸ்கிச இந்திய போல்ஷிவிக் லெனினிச கட்சியின் ஒரு அங்கமாக இலங்கை பகுதி இருந்தது. அக்கட்சி குடியுரிமை சட்டங்களை அடுத்து எதிர்கால வகுப்புவாதப் படுகொலைகள் பற்றி தொழிலாள வர்க்கத்திற்கு எச்சரிக்கை கொடுத்திருந்தது என்று டயஸ் விளக்கினார். ஆனால் 1950களின் நடுப்பகுதி அளவில், இலங்கைப் பகுதி, லங்கா சம சமாஜக் கட்சி என்ற பெயரை மீழவும் கொண்டு பாராளுமன்ற வாதத்தை தழுவி, முதலாளித்துவ கட்சியான சிறீலங்கா சுதந்திர கட்சி (SLFP) க்கு ஆதரவு கொடுத்து, அதன் மூலம் "1956ல் தமிழர்களுக்கு எதிரான வகுப்புவாத வன்முறையை தூண்டிவிட்டிருந்த பண்டாரநாயக்கவின் அரசாங்கத்திற்கும் ஒத்துழைப்பை நீடித்தது."

டயஸ் விளக்கினார்: "LSSP இன் அரசியல் பின்வாங்கல் அப்பொழுது ஏர்னஸ்ட் மண்டேலின் தலைமையில் இருந்த பப்லோவாத சர்வதேச செயலாளர் குழுமத்திடம் இருந்து முழு ஆதரவையும் பெற்றிருந்தது". அது முதலாளித்துவ கட்சிகளுக்கு அழுத்தம் கொடுக்கும் திருத்தல்வாத வழியை முன்னிலைப்படுத்தி, தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனத்திற்கான போராட்டத்தை கைவிட்டது. இச்சந்தர்ப்பவாத அரசியல்தான், LSSP 1964TM, SLFP தலைமையிலான முதலாளித்துவ அரசாங்கத்தில் சேர்ந்தபொழுது, வரலாற்று காட்டிக் கொடுப்பு என்ற உச்சக் கட்டத்தை அடைந்தது.

ஸ்ராலினிஸ்ட்டுக்கள் மற்றும் மாவோயிஸ்டுகளின் இதேபோன்ற காட்டிக்கொடுப்புக்களே, வலதுசாரி, மற்றும் சர்வாதிகார போக்குடைய அரசாங்கங்கள் இந்தியாவிலும் இலங்கையிலும் வருவதற்கு வழிவகுத்தன. UNP தடையற்ற சந்தை பொருளாதாரக் கொள்கைகளை அறிமுகப்படுத்தி 1983ல் இனவாத உள்நாட்டுப் போரையும் கட்டவிழ்த்துவிட்டது.

இந்த அரசியல் சூழ்நிலையில்தான் செந்தில் பிறந்து வளர்ந்தார். ஆரம்பத்தில் அவர் "தமிழர்களுடைய சமூக விடுதலை ஒரு தேசிய பிரிவினைவாத திட்டத்தில் அடையப்படமுடியும் எனக் கூறிய தமிழ் தேசிய குழுக்கள்பால் ஈர்க்கப்பட்டார்" என்று டயஸ் விளக்கினார். "செந்திலுக்கும் தமிழ் மற்றும் சிங்கள இளைஞர்கள் பலருக்கும், 1987 நவம்பரில், "இலங்கையின் நிலைமையும் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் அரசியல் பணிகளும்" என்று நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுல் வெளியிடப்பட்ட அறிக்கை அறிவொளியூட்டுவதாக இருந்தது."

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் தலையீடுதான் "இலங்கையில் ட்ரொட்ஸ்கிசத்திற்கான போராட்ட தொடர்ச்சிக்கு அடித்தளம் அமைத்து, 1968ல் புரட்சிகர கம்யூனிஸ்ட் கழகம் நிறுவப்படுவதற்கும், இன்று சோசலிச சமத்துவக் கட்சி போராட்டத்தை தொடர்ந்து நடத்திவருவதற்கும் காரணமாக உள்ளது."

"இச்சூழ்நிலையில்தான் இலங்கையில் இருக்கும் சோசலிச சமத்துவக் கட்சியும் சர்வதேச அளவில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் உலகளவில் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை ஒரு சோசலிச சர்வதேசியத்திற்கான போராட்டத்தில் ஐக்கியப்படுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன" என்று கூறி டயஸ் உரையை முடித்தார்.

"செந்திலை நேசித்து மதித்த பிரிட்டனில் உள்ள, ஆனால் ஸ்கொட்டிஷ் பாராளுமன்றம் மற்றும் வேல்ஷ் சட்டமன்றத்திற்கு SEP பிராந்திய வேட்பாளர் பட்டியலை தேர்ந்தெடுக்க தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதன் காரணமாக இன்று வரமுடியாத நிலையில் உள்ள SEP உறுப்பினர்கள் அனைவரின் சார்பாகவும் கிறிஸ் மார்ஸ்டன் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

"இப்பொழுது நான்காம் அகிலத்திற்குள் தங்கள் வழியைக் கண்டுகொள்ளும் சோசலிசப் போராளிகளின் புதிய தலைமுறையின் முதல் உறுப்பினராக செந்தில் இருந்ததால்" அவரை முன்னோடி என்று அவர் குறிப்பிட்டார். சோவியத் ஒன்றியம் மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் ஸ்ராலினிச ஆட்சிகள் சரிந்து வந்த நிலையில், சோசலிசம் மடிந்து விட்டது என்று ஒவ்வொருவரும் கூறிய நேரத்தில், செந்தில் இயக்கத்தில் சேர்ந்தார்.

"எமது தமிழ் தோழர்களில் ஒருவரான தயன் வேல்ஷ் சட்டமன்றத்திற்கு ஒரு வேட்பாளராக நிற்கிறார் என்பதில் பிரிட்டிஷ் SEP பெருமிதம் கொள்கிறது" என்று மார்ஸ்டன் கூறினார். "இலங்கை மற்றும் இந்தியத் துணைக் கண்டத்தின் தொழிலாள வர்க்கத்தின் அனுபவங்களை எமது பிரச்சாரத்தில் கொண்டுவருவதற்கு இது உதவுகிறது; மேலும் ஸ்கொட்டிஷ், மற்றும் வேல்ஷ் தேசியவாதத்தால், குறிப்பாக அனைத்து போலி இடது போக்குகளும் பிரிவினையை ஆதரிக்கும் நேரத்தில், அதன் ஆபத்தான உட்குறிப்புக்கள் பற்றி தொழிலாளர்களுக்கு எச்சரிக்கை கொடுக்க இது உதவுகிறது."

கடவுளில் போலியான ஆறுதலையோ அல்லது வாழ்விற்கு பிந்தைய நிலை பற்றிய நம்பிக்கையையோ மார்க்சிஸ்ட்டுக்கள் கோரவில்லை எனக் கூறி மார்ஸ்டன் உரையை முடித்தார். "மனித முன்னேற்றத்தின் மேம்பாட்டுக்காக தன்னுடைய வாழ்வை செந்தில் வாழ்ந்தார்; அவ்வாறு செய்ததற்காக அவர் நினைவு கூரப்பட்டு பெருமைப்படுத்தப்படவும் செய்வார்."

அபிவிருத்தி அடைந்துள்ள நாடுகளின் இளைஞர்கள் "மூன்றாம் உலகத்திற்கு" ஆதரவு தந்த காலம் பற்றி பேசுகையில், இது "சோசலிச அடிப்படையில் இல்லாமல் மனிதாபிமான அடிப்படையில்" செய்யப்பட்டது என்று பீட்டர் சுவார்ட்ஸ் விளக்கினார். இது முதலாளித்துவ தேசியவாதத்திற்கு முட்டுச்சந்தான ஆதவிற்கு வழிவகுத்தது. வளர்ச்சி அடைந்த நாடுகளில் இருக்கும் தொழிலாளர்களின் சமூக விடுதலைக்கான போராட்டத்தில் ஒடுக்கப்பட்டுள்ள நாடுகளில் இருந்து மிகச்சிறிய தொழிலாளர்களே பங்கெடுத்தனர். செந்தில் அத்தகைய மனிதர் ஆவார். இருப்பினும் அது நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் முன்னோக்குகளின் இதயத்தானத்திற்கு சென்றது. ஒடுக்குமுறை மற்றும் வறுமையானது, எல்லாவற்றிற்கும் மேலாக ஏகாதிபத்திய நாடுகளில் உள்ள அனைத்து தொழிலாள வர்க்கம் உள்பட, சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர போராட்டத்தின் மூலமே முடிவுகட்டப்பட முடியும்.

2003ல் ஈராக்கிய போருக்கு எதிரான உலகந்தழுவிய இயக்கத்திலிருந்து வளர்ந்துவரும் வெகுஜன எதிர்ப்பு இயக்கத்தின் அடையாளங்களை சுவார்ட்ஸ் சுட்டிக் காட்டினார்; அதேபோல் முன்னேற்றம் அடைந்துள்ள நாடுகளுக்குள்ளே, குறிப்பாக பிரான்சில், ஜனநாயக உரிமைகளுக்கு எதிரான தாக்குதல்களை எதிர்த்து மிகப் பெரிய அளவில் இடைவிடாமல் வேலைநிறுத்தங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வருவதையும் கூறினார். ஆயினும்கூட தொழிலாள வர்க்கம் அரசியல் ரீதியாக வாக்குரிமை பறிக்கப்பட்டு உள்ளது.

இப்படி தொழிலாளர்கள் வாக்குரிமை பறிக்கப்பட்டு இருக்கும் நிலையை முறியடிக்கும் பணிக்கு செந்தில் தன்னை அர்ப்பணித்தார் என்று சுவார்டஸ் கூறினார். இதற்கு போலி இடதிற்கு எதிராக சமரசமற்ற போராட்டம் தேவை என்பதை அவர் உணர்ந்தார். பிரான்சில் இருப்பது போல், முதலாளித்துவம் தன் பிடியில் பல போலி இடது கட்சிகளை கொண்டு, மார்க்சிச முன்னோக்கிலிருந்து தொழிலாள வர்க்கத்தை தனிமைப்படுத்தும் நாடு அரிதாகத்தான் இருக்கமுடியும். தன்னுடைய சொந்த அனுபவத்தில் இருந்தே செந்தில் இத்தகைய சந்தர்ப்பவாதத்திற்கு எவ்வளவு அதிக விலை கொடுக்க நேரிடும் என்பதை உணர்ந்திருந்தார். அவருடைய தனிப்பட்ட வாழ்வு மிகப் பெரிய அளவிற்கு LSSP இன் வரலாற்றுக் காட்டிக் கொடுப்பின் விளைபயன்களால் பாதிக்கப்பட்டிருந்தது. செந்தில் பாரிசில் பிரெஞ்சு குட்டி முதலாளித்துவ இடதின் சந்தர்ப்பவாதக் கொள்கைகளை எதிர்ப்பதில் எவ்வாறு ஆயிரக்கணக்கான துண்டுப் பிரசுரங்களை வினியோகித்தார் என்பதை சுவார்ட்ஸ் நினைவு கூர்ந்தார்.

வரலாறு மற்றும் தத்துவார்த்த பிரச்சினைகள் பற்றி செந்திலின் பேரார்வத்தையும் சுவார்ட்ஸ் வலியுறுத்தினார்; தொழிலாள வர்க்கம் வரலாற்றின் படிப்பினைகளில் இருந்து கற்றுக் கொள்ளாவிட்டால் மீண்டும் அதே துன்பியலான விளைவுகளை அனுபவிக்க நேரிடும் என்றார். தொழிலாள வர்க்கத்தின் நினைவகமாக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு உள்ளது. செந்திலுடைய நினைவைப் போற்றும் வகை, அவர் வழிநடத்திய போராட்டத்தை தொடர்வதன் மூலம்தான் எனக் கூறி சுவார்ட்ஸ் உரையை முடித்தார்.

செந்திலின் மனைவி மற்றும் மூன்று இளம் சிறார்களுக்கு உதவும் வகையில் ஞாபகார்த்த நிதிக்கு நன்கொடைகள் அளிக்குமாறு அழைப்புவிடப்பட்டது. இதையொட்டி 3,175 யூரோக்கள் மற்றும் 300 பவுண்டுகள் காசாகவும், 2200 யூரோக்கள் உறுதிமொழியாகவும் வந்துள்ளன. ஏற்கனவே 4,000 யூரோக்கள் திரட்டப்பட்டுள்ளன.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved