World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கைSri Lankan SEP to hold May Day meeting in Colomboஇலங்கை சோ.ச.க. கொழும்பில் மேதின கூட்டத்தை நடத்தவுள்ளது26 April 2007சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) அனைத்துலக தொழிலாளர் தினத்தைக் குறிக்க மே 1ல் கொழும்பில் பகிரங்க கூட்டம் ஒன்றை நடத்தவுள்ளது. நெருங்கிவரும் ஏகாதிபத்திய யுத்த ஆபத்து மற்றும் ஜனநாயக உரிமைகள் மற்றும் வாழ்க்கைத் தரம் மீதான ஆழமடைந்துவரும் தாக்குதல்களுக்கு எதிராக போராடுவதற்காக உலகம் பூராவும் உள்ள தொழிலாளர் வர்க்கத்தின் ஐக்கியமானது, இன்று அவசரமான அரசியல் தேவையாகியுள்ளது. அமெரிக்க ஏகாதிபத்தியம் அதனது வரலாற்று வீழ்ச்சிக்கு எதிர்ச் செயலாற்றுவதன் பேரில், வளங்கள் நிறைந்த மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியா மீது தனது மேலாதிக்கத்தை உறுதிப்படுத்த இராணுவ வல்லமையை நாடியுள்ளது. புஷ் நிர்வாகம் ஆப்கானிஸ்தானிலும் ஈராக்கிலும் பின்னடைவை சந்தித்துள்ள போதிலும் ஈரானுக்கு எதிராக இன்னுமொரு குற்றவியல் துணிகரச் செயலுக்கு இரக்கமின்றி தயாராகிக் கொண்டிருக்கின்றது. இந்த யுத்தங்கள், வாஷிங்டனின் ஐரோப்பிய மற்றும் ஆசிய எதிரிகளுடன் பரந்த மற்றும் மேலும் அழிவுகரமான மோதல்களுக்கு களம் அமைத்துக் கொண்டிருக்கின்றது. அதே சமயம், ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தொழிலாளர்கள், தொழில், வாழ்க்கைத் தரம் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான முடிவே இல்லாத தாக்குதல்களை எதிர்கொள்கின்றனர். இந்தியாவில் மேற்கு வங்காள மாநிலத்தில் ஸ்டாலினிச இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தலைமையிலான அரசாங்கம், பல்தேசியக் கூட்டுத்தாபனங்களால் தமது நிலங்கள் அபகரிக்கப்படுவதை எதிர்த்த விவசாயிகளுக்கு எதிராக பொலிசை கட்டவிழ்த்து விட்டதில் 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பாகிஸ்தானில், இராணுவத் தளபதியான பேர்வஸ் முஷராப், வாழ்க்கைத் தரம் வீழ்ச்சியடைந்து கொண்டிருப்பதற்கும் மற்றும் அமெரிக்காவின் மோசடியான "பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தை" அவர் ஆதரிப்பதற்கும் எழுந்துள்ள எதிர்ப்பை நசுக்க ஜனநாயக விரோத வழிமுறைகளைப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார். இலங்கையில், ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ தீவின் அழிவுகரமான யுத்தத்தை மீண்டும் பற்றி எரியச் செய்துள்ளார். கடந்த ஆண்டு பூராவும் 4,000 ற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளதோடு 300,000 பேர் வீடுகளை இழந்துள்ளனர். பெருமளவில் மக்களால் வெறுக்கப்பட்ட யுத்தம் மற்றும் அதன் பொருளாதாரச் சுமைகளால் வளர்ச்சி காணும் எதிர்ப்பை நசுக்குவதற்காக, அரசாங்கமும் இராணுவமும் பொலிஸ் அரசு வழிமுறைகளுக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றன. ஊடகங்களுக்கு அச்சுறுத்தல் விடுத்தல், விசாரணையின்றி எதேச்சதிகாரமான முறையில் விசாரணையின்றி தடுத்து வைத்தல், நூற்றுக்கணக்கான மக்களை கொல்ல அல்லது "காணாமல்" ஆக்க கொலைப் படைகளைப் பயன்படுத்துதல் ஆகியவை இதில் அடங்குகின்றன. மனிதநேயம் உறுதியான மாற்றீடுகளை எதிர்பார்க்கின்றது: சோசலிசமா அல்லது காட்டுமிராண்டித்தனமா? யுத்தம் மற்றும் சமூக சமத்துவமின்மைக்கும் எதிராக உலகம் பூராவும் உள்ள தொழிலாளர்களின் சுயாதீனமான இயக்கம் ஒன்றைக் கட்டியெழுப்புவதற்கு அவரசத் தேவையாகியுள்ள சோசலிச முன்நோக்கைப் பற்றி கலந்துரையாட எமது கூட்டத்திற்கு வருகை தருமாறு தொழிலாளர்கள், புத்திஜீவிகள் மற்றும் குறிப்பாக இளைஞர்களுக்கும் நாம் அழைப்பு விடுக்கின்றோம். திகதியும் நேரமும்: மே 1, மாலை 3 மணி இடம்: புதிய நகர மண்டபம், கொழும்பு. |