World Socialist Web Site www.wsws.org |
:
செய்திகள்
ஆய்வுகள்
: மத்திய
கிழக்கு :
ஈராக்
Iraqis oppose US plan to divide Baghdad into ghettos பாக்தாத்தை சிறுபான்மையர் செறிந்து வாழும் சேரிகளாகப் பிரிக்கும் அமெரிக்கத் திட்டத்தை ஈராக்கியர்கள் எதிர்க்கின்றனர் By James Cogan பாக்தாத் புறநகரம் ஒன்றை, மூன்று மீட்டர் உயர காங்க்ரீட் சுவருக்கு பின் மறைத்து ஒதுக்கிவிடும் அமெரிக்க இராணுவத் திட்டம், அனைத்து மத, இனப் பின்னணி ஈராக்கியர்களிடையேயும் பரந்த எதிர்ப்பை தோற்றுவித்துள்ளது. சுன்னி மக்கள் நிறைந்த அதமியா பகுதியின் பல்லாயிரக்கணக்கானோர், திங்களன்று சுவர் கட்டுவதற்கு எதிராக "ஷியைட்டுக்கள், சுன்னிக்கள் என்று பிரிவினை இல்லை. இஸ்லாமிய ஒற்றுமை வேண்டும்", "குறுகிய வெறித் தடையை எதிர்ப்போம்" என்ற பதாகைகளின் பின்னே ஆர்பாட்டம் நடத்தினர். அண்டைப் பகுதியில் இருக்கும் ஷியைட்டு தலைவர்களும் இந்த தடையை கண்டித்துள்ளனர். வெறுப்பூட்டும் அமெரிக்க ஆக்கிரமிப்பின் அடையாளமாக இந்தச் சுவர் கருதப்படுகிறது; அன்றாடம் இழிவையும், கஷ்டங்களையும் வன்முறையையும்தான் ஈராக்கியர்களுக்கு இது கொண்டுவந்துள்ளது. எதிர்ப்பு முழக்க அட்டைகளில் ஒன்று அறிவித்தது: "அதமியா குடிமக்களுக்கும் பிரிவினைச் சுவர் பெரிய சிறையாகும்". உள்ளூர் வாசிகள் இந்த அமைப்பு பாதுகாப்பிற்கு அல்ல, அவர்களை கட்டுப்படுத்துவதற்குத்தான் என்று நினைக்கின்றனர். ஞாயிறன்று நடைபெற்ற புறநகரத்தின் நகரமன்றக்கூட்டம் நடத்திய கருத்துக் கணிப்பின்படி, இந்த தடைச் சுவருக்கு 90 சதவிகித மக்கள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தனர். பாக்தாத் பாதுகாப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக, அமெரிக்க கட்டுப்பாட்டு தளபதி டேவிட் பெட்ரீயஸ் பாக்தாத்தில் குறைந்தது மிகவும் கொந்தளிக்கும் பத்து இடங்களாவது முற்றிலும் இத்தகைய சுவர்களால் மூடிவைக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். ஐந்து கூடுதலான அமெரிக்க படைப் பிரிவுகளும் கூடுதலான ஈராக்கிய இராணுவப் பிரிவுகளும் இந்நடவடிக்கையை செயற்படுத்த ஈராக்கிய தலைநகரில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அப்பகுதி சுவரால் வளைக்கப்பட்ட பின், பெட்ரீயஸின் உத்தி அமெரிக்க மற்றும் ஈராக்கிய அரசாங்கப் படைகள் அங்கு தளங்களை அமைத்து ஆக்கிரோஷமான முறையில் ரோந்து சுற்றி எழுச்சியாளர்களை தேடிப் பிடித்து, சிறைபிடித்தல் அல்லது கொன்றுவிடுதல் ஆகும். மேற்கு பாக்தாத் மாவட்டமான காஜாலியா ஏற்கனவே அமெரிக்க அதிகாரிகள் அழைத்துள்ளபடி "கதவுகளுள் இருக்கும் சமூகம்" (Gated Community) என்று மாற்றப்பட்டுவிட்டது. இரண்டாம் உலகப் போரின்போது கிழக்கு ஐரோப்பாவில் யூதர்களுக்காக நாஜிக்கள் நிறுவிய "சேரி" (Ghetto) என்பது இன்னும் துல்லியமான விளக்கமாக இருக்கும். இப்பகுதியில் வசிக்கும் 15,000 குடிமக்கள் பல ஊரடங்கு தடைகளுக்கும் உட்படுத்தப்படுகின்றனர்; ஒரு சோதனைச் சாவடியின் மூலம்தான் அவர்கள் வெளியே சென்று திரும்ப முடியும்; அங்கு அவர்கள் பலமுறையும் அடையாளச் சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர். வாஷிங்டன் போஸ்ட் கருத்தின்படி, அமெரிக்க இராணுவம் சாவடியை கடக்கும் ஒவ்வொரு நபரின் விரல் ரேகை மற்றும் கண்ணின் வடிவமைப்பையும் பதிவு செய்வதற்கு scannar களை பயன்படுத்த இருப்பதாகத் தெரிகிறது. பல நூறாயிரக் கணக்கான மக்களை கொண்டுள்ள அதமியா, சுற்றுச் சுவர் அமைப்பதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அடுத்த இடம் ஆகும். டைகிரிஸ் ஆற்றின் கிழக்குப் பகுதியில் நகரத்தின் மையத்திற்கு அருகே இருக்கும் இப்புறநகரம் குறைந்த வருமானமுள்ள சுன்னி அரேபியர்கள் வசிப்பதற்கு சிறந்த இடமாக உள்ளது. பாக்தாத்தின் கிழக்குப் பகுதியில் சுன்னி மக்கள் பெரும்பான்மையாக வசிப்பது இப்பகுதியில்தான். அமெரிக்க படையெடுப்பில் இருந்து இப்பகுதி ஆக்கிரமிப்பு-எதிர்ப்பு கொரில்லாப் போராளிகளின் வலுவான தளங்களில் ஒன்றாகவும், அமெரிக்க, ஈராக்கிய அரசாங்க சக்திகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு தளமாகவும் உள்ளது. பாக்தாத்தின் போட்டி சுன்னி, ஷியா தீவிரவாதிகளுக்கு இடையே நடைபெற்று வரும் குறுகிய உள்நாட்டுப் போரின் முன்னணி இடமாக அதமியா உள்ளது என்று கூறுவதற்கும் இடமுண்டு. புறநகரைச் சுற்றியுள்ள பகுதிகள் மிகப் பெரிய அளவில் ஷியைட்டுக்களை கொண்டுள்ளது; அரசியல் அளவில் அவர்கள் மத குரு மோக்தாதா அல்சதரின் அடிப்படைவாத இயக்கத்தின் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டுள்ளனர்; அவ்வியக்கம் அதமியாவிற்கு கிழக்கில் உள்ள மிக அதிகமான தொழிலாள வர்க்க பகுதியான சதர் நகரத்தில் தலைமையிடத்தை கொண்டுள்ளது. சுன்னி வெறியர்கள் ஷியைட் மக்களுக்கு எதிராக நடத்திய பொறுப்பற்ற குண்டுவீச்சுக்களுக்கு பழிவாங்கும் வகையில் அதமியாவில் ஈராக்கிய போலீஸ் அதிரடிப் படையினரும் சதரிய மஹ்தி இராணுவ குடிப்படையும் கொலைகளை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. அதமியா உள்ளூர் வாசிகள் தங்களுடைய போராளிக்குழுக்களை அமைத்துக் கொண்டு போலீஸ் மற்றும் மஹ்தி இராணுவத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக தங்களை காத்துக் கொள்ளுகின்றனர். இப்புறநகரம் அவ்வப்பொழுது சதர் நகரத்திற்குள் இருக்கும் தளங்களில் இருந்து வெளிவரும் ராக்கெட்டுக்கள், குண்டுவீச்சுக்கள் ஆகியவற்றாலும் தாக்கப்படுகிறது. ஏப்ரல் 10 அன்று அதமிய மக்கள் பகுதிகளை சுற்றிச் சுவர் எழுப்பி மூடும் நடவடிக்கைகளை அமெரிக்கப் படைகள் தொடங்கின; இது அவர்களை போராளிகள் தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் என்று அவை கூறுகின்றன. மிக நீளமான அளவில் காங்க்ரீட் சுவர்கள் முள்வேலிகள் என்று தடைகள் அங்கு ஏற்கனவே வந்துவிட்டன. காஜாலியாவை போலவே இங்கும் விரும்பப்படுவது ஒரு சில நுழைதல், வெளியேறுதல் இடங்கள்தாம்; இவை அனைத்து போக்குவரத்துக்களையும் கடுமையாக கண்காணிக்க உதவும். எழுச்சியில் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் விசாரணைக்கு உட்படுத்தப்படும் நிலைமையை இளைய சுன்னி ஆடவர்கள் எதிர்கொள்ளுகின்றனர். சமீபத்திய மாதங்களில் அமெரிக்க செயல்கள் பெருகிவிட்டன; இதையொட்டி 5,000 ஈராக்கியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பெட்ரீயஸ், வரவிருக்கும் மாதங்களில் இன்னும் பல்லாயிரக்கணக்கானவர்கள் கைது செய்யப்படுவர் என்று எதிர்பார்க்கிறார். ஈராக்கின் பிரதம மந்திரி நூரி அல் மாலிகி ஞாயிறன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில் இத்திட்டம் நிறுத்திவைக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். "சுவர் அமைத்தலை நான் எதிர்க்கிறேன்; அதன் கட்டுமானம் நிறுத்தப்படும்" என்றார் அவர். மேலைக் கரையில் பாலஸ்தீனிய மக்களை சிறைவைக்கும் வகையில் இஸ்ரேலிய அரசாங்கம் கட்டியுள்ள பாதுகாப்பு வேலியை தெளிவாக நினைவுறுத்தும் வகையில் மாலிகி கூறினார்: "இச்சுவர், நாம் நிராகரிக்கும் ஏனைய சுவர்களைத்தான் ஞாபகப்படுத்துகிறது." சுவர் கட்டுமானம் தொடங்கிய ஒருவாரத்திற்கு பின்னர், அதற்கு மாலிகி தெரிவிக்கும் எதிர்ப்பு ஈராக்கில் இருக்கும் பல அமைப்புக்கள் ஏராளமான கண்டனங்களை எழுப்பியதின் விடையிறுப்பு ஆகும். உள்ளூர் ஆட்சிக் குழுக்களின் தலைவர்கள் அமெரிக்க இராணுவம் அவர்களுடைய அனுமதியின்றி சுவரை எழுப்பத் தொடங்கியதாக வலியுறுத்திக் கூறியுள்ளனர். அதமியாவில் வசிக்கும் அஹ்மத் அல்-துலைமி கார்டியனிடம் கூறினார்: "இப்பகுதி முழுவதையும் இது ஒரு சிறையாக்கிவிடும். இது அதிமியா மக்கள் மீது மொத்தமாக கொடுக்கப்பட்டுள்ள ஒரு தண்டனையாகும். இங்கும் அங்கும் ஒரு சில பயங்கரவாதிகள் இருப்பதால் எங்கள் அனைவரையும் அவர்கள் தண்டிக்க விரும்புகின்றனர்." அங்கு வசிக்கும் மற்றொருவர் கதிஜா குபைசி IRIN செய்தி அமைப்பிடம் கூறினார்: "எங்களுடைய சுற்றுப்புறத்தை காங்க்ரீட் சுவர்களால் மறைப்பது என்பது இப்பகுதியில் இருந்து வெளியேறும்போது ஆபத்திற்குட்படுவோம் என்பதை தெளிவாக்குகிறது. ஒரு பகுதிக்குள் வசிக்குமாறு நாங்கள் கட்டாயப்படுத்தப்படுகிறோம். எங்களுடைய வாழ்வு ஒரு சில சதுர கிலோமீட்டர்களுக்குள் இருக்கும் வீடுகள், கடைகளுக்குள் அடங்கிவிடும். எங்களை ஒதுக்கி வைப்பதற்கு பதிலாக அவர்கள் வன்முறையை தீர்ப்பதற்கு தர்க்கரீதியான முடிவு எடுக்க வேண்டுமே அன்றி, எங்களுக்கும் இன்னும் கஷ்டத்தை கொடுக்கக் கூடாது, எங்களிடம் விரோதப் போக்கையும் காட்டக்கூடாது." பாாரளுமன்றத்தில் இருந்து ஆக்கிரமிப்பாளர்களுடன் ஒத்துழைக்கும் சுன்னி ஈராக்கிய இஸ்லாமிக் கட்சி, சுவர் பற்றி கடுமையாக தாக்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது: "பாக்தாத்தின் பகுதிகள் சிலவற்றை தனிமைப்படுத்தும் வகையில் முள்வேலிகள், காங்க்ரீட் சுவர்களை எழுப்புவது சமூக, பொருளாதார சேதங்களை ஏற்படுத்தும்; இது குறுகிய வெறிகொண்ட பதட்டங்களை பெருக்கும். இந்த நடவடிக்கை வசிக்கும் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதுடன் பிரச்சினைகளை தீர்ப்பதில் எதிர்மறை பாதிப்பைத்தான் ஏற்படுத்தும். மாலிகி மந்திரிசபையில் இருந்து ஒரு வாரம் முன்பு இராஜிநாமா செய்த ஷியைட் சதரிஸ்ட்டுக்களும் இத்திட்டத்தை கண்டித்துள்ளனர். நஜப்பில் ஒரு பிரதிநிதி கூறினார்: "அல் அதமியாவை சுற்றி சுவர் எழுப்புவது ஈராக்கிய மக்கள்மீது முற்றுகை நடத்தி அவர்களை குறுகிய குழுக்களாக தொகுதிகளில் பிரிப்பதற்கு ஒப்பாகும் என்று சதர் இயக்கம் கருதுகிறது. ஜேர்மனியை பிரித்த பேர்லின் சுவர் போல்தான் இதுவும் உள்ளது. இந்த நடவடிக்கை நகரத்தை பல பிரிவுகளாக பிரித்து மக்களை அங்கங்கே இருத்தும் முயற்சியின் முதல் கட்டமாகும். இன்று இது அதமியாவில் நடக்கிறது; நாளை சதர் நகரத்தில் நடக்கலாம்." பெருகிய முறையில் மக்களின் எதிர்ப்பை எதிர்கொண்டுள்ளதால், மாலிகி அரசாங்கம் அதிகம் தொய்வை அடைந்துள்ளது. மாலிகியின் ஷியைட் கூட்டணியில் உறுப்பினராக இருக்கும் காசிம் தாவுத் USA Today இடம் தெரிவித்தார்: "தற்போதைய அரசாங்கம் திறமையுடன் இல்லை. அநேகமாக அது முடக்கப்பட்டு, செயலற்று உள்ளது. இன்னும் அதிக காலம் அதிகாரத்தில் இந்த அரசாங்கம் நீடிக்கும் என்று நான் நினைக்கவில்லை. "சமீபகாலம் வரை அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுத்திருந்த, முக்கியமான குர்திய பாராளுமன்ற உறுப்பினரான Mahmoud Othman, மாலிகியை "ஒரு பலவீனமான நிர்வாகி" என்று குறைகூறியதுடன், "இந்த அரசாங்கம் எதிர்பார்த்ததை கொடுக்கவில்லை; பணி செய்யும் திறனையும் பெற்றிருக்கவில்லை. அவர்கள் இராஜிநாமா செய்ய வேண்டும்." ஆனால் அதமியாவில் சுவர் கட்டுவதை நிறுத்தவேண்டும் என்று ஈராக்கிய பிரதமர் உத்தரவிட்டுள்ளதற்கு அமெரிக்க இராணுவம் கவனம் செலுத்துமா என்பது தெளிவாக இல்லை; இராணுவத்தின் பாக்தாத் பாதுகாப்பு மூலோபாயத்தில், இது மையப் பகுதி என்று அது கருதுகிறது. "அரசாங்கம் மற்றும் பிரதம மந்திரியின் விருப்பங்களை நாங்கள் மதிப்போம் என்பது வெளிப்படை" என்று அமெரிக்கத் தூதர் Ryan Crocker ஒரு செய்தியாளர் கூட்டத்தில் திங்களன்று கூறினார். ஆனால் குறிப்பாக கேட்கப்பட்டபோது அமெரிக்க இராணுவச் செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் கொலனல் கிறிஸ்தோபர் கார்வர், மாலிகியின் உத்தரவுகள் பின்பற்றப்படுமா என்பதற்கு விடையிறுக்க மறுத்துவிட்டார். இப்பகுதியில் அமெரிக்க படைகளுடன் இணைந்து பணியாற்றும் ஈராக்கிய இராணுவத் தளபதி பிரிகேடியர் தளபதி காசிம் அல் மெளசாவி திங்களன்று அப்பட்டமாக கூறினார்: "அதமியா பகுதியில் பாதுகாப்புத் தடைகள் கட்டுவதை நாங்கள் தொடர்வோம்." புறநகரத்தை சுற்றி வந்துள்ள காங்கீரிட் தளங்கள் சுவர்கள் அல்ல, அவை "அகற்றப்படக்கூடிய, நகர்த்தப்படக்கூடிய தடைகள்". இதற்கு எதிர்ப்பு "சில பலவீனமான மக்களின் விடையிறுப்புத்தான்" என்று அவர் கூறினார். IRIN செய்தியமைப்பிடம் அதமியா மக்கள் கட்டுமானம் தொடர்கிறது என்று கூறியுள்ளனர். மாலிகியின் பகிரங்க அறிக்கைக்கு பின்னரும், சுவர் கட்டுதல் தொடர்ந்தால், அது அவருடைய அரசாங்கத்தின் அரசியல் சவப்பெட்டியில் அடிக்கப்படும் மற்றும் ஒரு ஆணியாகும். |