World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஐரோப்பா : பிரான்ஸ்French presidential elections: Four in ten voters undecided பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தல்கள்: பத்து வாக்காளர்களில் நான்கு பேர் இன்னும் முடிவு எடுக்கவில்லை By Peter Schwarz பிரான்சில் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரம் இப்பொழுது உத்தியோகபூர்வ கட்டத்தை எட்டியுள்ளது. நாட்டின் 65,000 வாக்குச் சாவடிகள் முன்பும் 12 வேட்பாளர்கள் பற்றிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன; மேலும் ஒவ்வொரு இல்லத்திற்கும் அவர்களுடைய தேர்தல் அறிக்கைகள் வந்து சேரும்: ஏப்ரல் 22 தேர்தல் முதல் சுற்று வரை ஒவ்வொரு வேட்பாளருக்கும் பொது வானொலி, தொலைக்காட்சியில் தன்னுடைய தேர்தல் திட்டத்தை விளக்கும் வகையில் மொத்தத்தில் 45 நிமிஷங்களாக பல சிறு பகுதி நேரங்கள் அளிக்கப்படும். தேர்தல் பிரச்சாரம் உண்மையில் சில வாரங்களுக்கு முன்பு, ஏன் வேட்பாளர்கள் தேர்வு வழிவகையை கணக்கில் எடுத்துக் கொண்டால், பல மாதங்களுக்கு முன்பே ஆரம்பித்துவிட்டது. நாடு முழுவதும் வேட்பாளர்கள் பயணித்து, தேர்தல் கூட்டங்கள் நடத்தி, தொலைக்காட்சியிலும் பல சுற்றுக்கள் விவாதங்களில் பங்கு பெற்றுள்ளனர். நீண்ட காலமாக தேர்தல்தான் செய்தி ஊடகத்தில் முக்கியமாக வந்த வண்ணம் உள்ளது; வேட்பாளர்களுடைய நிலைப்பாடுகள் நன்கு அறியப்பட்டுள்ளன. ஆயினும்கூட எவருக்கு வாக்களிப்பது என்பது பற்றி 18 மில்லியன் வாக்காளர்கள் இன்னமும் முடிவு செய்யவில்லை. ஞாயிறன்று வெளிவந்த இரு கருத்துக் கணிப்புக்களின்படி, வாக்காளர்களில் 42 சதவிகிதத்தினர் உறுதியான விருப்பத்தை இன்னமும் கொள்ளவில்லை எனத் தெரியவருகிறது; 2002 ஜனாதிபதித் தேர்தல்களுக்கு இரு வாரங்கள் முன்பு இதே போன்ற கருத்துக் கணிப்பு நடத்தியதில் இருந்ததை விட இது 10 சதவிகிதம் அதிகமாகும். இளைஞர்கள், மகளிர் மற்றும் தொழிலாளர்கள், அதாவது நாட்டின் சமூக நெருக்கடியினால் மிகக் கடுமையான முறையில் பாதிக்கப்பட்டவர்களிடையே எவருக்கு வாக்களிப்பது என்று முடிவெடுக்காதவர்கள் மிகச்சிறப்பாக உயர்ந்த அளவாகும். இப்படி இன்னும் முடிவெடுக்காதவர்களின் அதிக எண்ணிக்கைக்கான காரணத்தை அறிந்து கொள்ளுவது கடினம் அல்ல. சமூகத்தின் பரந்த அடுக்குகளின் நம்பிக்கையை எந்த வேட்பாளரும் பெற்றிருக்கவில்லை; மேலும் பிரெஞ்சு மக்களை எதிர்கொண்டுள்ள அவசர சமூகப் பிரச்சினைகளுக்கு அவர்களிடம் இருந்து எந்த விடையும் இல்லை. இதுவரை தேர்தல் பிரச்சாரத்தின் முழக்கம் அதிகமாக கோலிச அரசாங்கக் கட்சியான (மக்கள் இயக்கத்திற்கான ஐக்கியம்) UMP யின் வேட்பாளரான நிக்கோலா சார்க்கோசியினால் கொடுக்கப் பட்டுள்ளது. பொதுவாக தீவிர வலதுசாரியின் மரபார்ந்த கொள்கைகளில் நிறைந்து நிற்கும் ஏராளமான கருத்துக்களை, புலம்பெயர்தல், பாதுகாப்பு, பொது ஒழுங்கு இவற்றையும் மற்றும் தேசியப் பாதுகாப்பு, பிரான்சின் மேன்மை ஆகியவை பற்றி திரும்பத்திரும்பவும் சார்க்கோசி கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளார். இவர் அதிகம் சத்தம்போட்டிருந்தாலும்கூட, உள்ளத்தில் நீடிக்குமளவு பதியத்தக்கதாக இல்லை. ஒரு வராத்திற்கு மேல் எந்தத் தலைப்பும் செய்தி ஊடகத்தில் நீடித்ததில்லை. எப்படித் தூண்டிவிடுவது, கவனத்தை ஈர்ப்பது, முக்கியமான பிரச்சினைகளில் இருந்து திசை திருப்புவது ஆகியவை பற்றி சார்க்கோசி நன்கு அறிவார்; ஆனால் முக்கிய விஷயங்களில் மேம்போக்காகத்தான் உள்ளார். குழந்தைகளை பாலியல்ரீதியாக துன்புறுத்தல் மற்றும் பிரான்சில் 1,300 இளைஞர்கள் ஒவ்வொரு ஆண்டும் தற்கொலை செய்தல் சமூக, குடும்ப சூழ்நிலையின் காரணத்தை ஒட்டி என்பதற்கு மாறாக இயல்பான, மரபணு முறையில் நடப்பது என்று கூறியவகையில் அவர் பூசல் ஒன்றைத் தோற்றுவித்தார். இவ்விதத்தில் தன்னுடைய வலதுசாரி ஆதரவாளர்களைக் கூட ஒருமுறையேனும் எதிர்ப்புள்ளாக்கினார்; அதில் கத்தோலிக்க திருச்சபை மனிதகுல மேம்பாட்டு ஆய்வில் தனிநபர் பொறுப்பின் பங்கை அவர் மறுத்துள்ளதாக அவர்மீது குற்றம் சாட்டியுள்ளது. National Front என்னும் தீவிர வலது அமைப்பின் தலைவரான Jean Marie Le Pen உடைய நூல்களின் கருத்தைத் தொடர்ந்து சார்க்கோசி கூறிவருகிறார்; லூபென்னோ சார்க்கோசியின் கருத்தைத் திருப்தியுடன் அங்கீகரித்துப் பேசியுள்ளார். ஒருவர் தொடர்ச்சியாக மற்றவர் கருத்துக்களையே காப்பியடித்துக் கூறினால், அது மூலக் கருத்தின் மதிப்பைத்தான் உயர்த்தும் என்று லூ பென் வாதிட்டுள்ளார். கருத்துக் கணிப்புக்களும் இக்கூற்றை ஆதரிப்பது போல் தோன்றுகின்றன; ஏனெனில் லூ பென் இப்பொழுது நான்காம் இடத்தில் 15 சதவிகித வாக்காளர் ஆதரவுடன் உள்ளார். 2002ல் அவர் 17 சதவிகித வாக்கைப் பெற்று, இரண்டாம் சுற்றில் அப்பொழுது ஜனாதிபதியாக இருந்த ஜாக் சிராக்கிற்குச் சவால் விடுத்திருந்தார்.சோசலிஸ்ட் கட்சி வேட்பாளாரான செகோலென் ரோயால் சார்க்கோசி தள்ளும் பாதையில் செல்லும் வகையில் தன்னை வைத்துக் கொள்ளுகிறார் அல்லது மிகவும் கீழ்ப்படியும் தன்மையுடன் அவரைத்தான் பின்பற்றுகிறார். இரண்டு வாரங்களுக்கு முன் இவர்கள் ஒரு விந்தையான போட்டியில் ஈடுபட்டனர்; நாட்டை எவர் மிகவும் நேசிக்கின்றனர் என்பதை நிரூபிக்கும் நோக்கத்தை அது கொண்டிருந்தது. சார்க்கோசியைப் போன்று, ரோயல் தன்னுடைய கூட்டங்களிலும் தேசிய கீதத்தை இசைப்பதுடன் அனைத்து பிரெஞ்சு மக்களும் தேசிய விடுமுறை நாட்களில் தங்கள் இல்லங்களில் தேசிய மூவர்ணக் கொடியைப் பறக்கவிட வேண்டும் என்றும் பரிந்துரைத்தார். கட்டுப்பாடற்ற இளைஞர்கள் இராணுவத்தினரால் பயிற்றுவிக்கப்பட வேண்டும் என்னும் இவ்வம்மையாரின் திட்டமும் சார்க்கோசியின் கருத்துத் தொகுப்புக்களில் இருந்துதான் வெளிப்பட்டதாகும். தொழிலாள வர்க்கத்துள்ளும் மற்றும் இளைஞர்களின் பரந்த அடுக்குகளினாலும் சார்க்கோசி ஆழ்ந்து வெறுக்கப்பட்டு இருக்கிறார். வலதுசாரி ஜனரஞ்சக சொற்களில் வெளிப்பட்டாலும், அவருடைய தொழிலாள வர்க்க-எதிர்ப்பு ஐயத்திற்கு இடமில்லாதது ஆகும். சமீபத்தில் தான் பதவிக்கு வந்தால் முதல் நூறு நாட்களில் எதைச் செய்வேன் என்று கோடிட்டுக் காட்டிய திட்டம் அவருடைய கொள்கைகளின் திசைவழியை சந்தேகத்திற்கு இடமின்றிக் காட்டுகின்றன. இந்தக் கோடையில் அவர் வேலைநிறுத்த எதிர்ப்புச் சட்டம் ஒன்றை எப்படியும் கொண்டுவர விரும்புகிறார்; இதன்படி வேலைநிறுத்தங்களுக்கு முன்பு இரகசிய வாக்கெடுப்புக்கள் வேண்டும் என்றும் பொதுப் பணிகளில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் குறைந்த அளவுப் பணிகள் செய்யவேண்டும் என்றும் கட்டாயப்படுத்தப்படும். இரயில்கள், பொதுப் போக்குவரத்து, அஞ்சலகங்கள் மற்றும் நீர், எரிவாயு, விசை நிலையங்கள் ஆகியவற்றில் உள்ள பொதுப்பணித் துறை தொழிலாளர்களுக்கு எதிராக இந்நடவடிக்கை குறிப்பாக இயக்கப்படும்; அதாவது கடந்த தசாப்தத்தில் நடந்த பெரிய வேலைநிறுத்த இயக்கங்களின் முதுகெலும்பாகத் திகழ்ந்த தொழிலாளர்கள் அடுக்குகள் மீது இது செலுத்தப்படும்; அவைதான் நாட்டை ஸ்தம்பிக்கச் செய்தன. வேலைநிறுத்த-எதிர்ப்புச் சட்டம் இலையுதிர்காலத்திற்கான ஒய்வூதியத்திட்டத்தில் மிகப் பரந்த வெட்டுக்களை கொண்டுவர உள்ளது. கடந்த காலத்தில் இத்தகைய ஓய்வூதியத்திட்டம் பலமுறையும் தொழிலாளர்களின் பரந்த எதிர்ப்பினால் கைவிடப்பட்டது. உடனடியாக செயல்படுத்த இருக்கும் சார்க்கோசியின் இரண்டாம் திட்டம் இரண்டாம் முறை குற்றம் இழைப்பவர்களுக்கு எதிரான சட்டத்தைக் கடுமையாக்குவது ஆகும். மூன்று முறை குற்றங்கள் இழைக்கப்பட்டுவிட்டால் ஒரு நபர் மிக அதிக தண்டனையைப் பெற வேண்டும்; அவை சிறிய குற்றங்களாயினும், வயது குறைவானவர்களால் செய்யப்பட்டாலும் சரி. இச்சட்டம் இயற்றப்பட்டுவிட்டால், பிரெஞ்சு சிறைகளில் இருப்பவர்கள் எண்ணிக்கை வியத்தகு முறையில் அதிகரிக்கும் என்று வல்லுனர்கள் எதிர்பார்க்கின்றனர். அமெரிக்க மாதிரியிலான தண்டனை சட்டங்களை தளமாகக் கொண்டு தன்னுடைய புதிய திட்டத்தின்படி, சார்க்கோசி பிரெஞ்சு சட்ட மரபு மற்றும் மனித உரிமைகள் பற்றிய ஐரோப்பிய மரபு இரண்டையும் மீறப்பார்க்கிறார்; இரண்டுமே தண்டனையின் தரத்தை நிர்ணயிக்கும்போது தனிப்பட்ட சூழ்நிலைதான் ஆய்வில் இருக்க வேண்டும் என்று கூறுகின்றன. இறுதியாக, சார்க்கோசி சமூகப் பாதுகாப்பு அளிப்புக்களை அகற்றுவதற்கும், கூடுதல் நேரத்திற்கான ஊதியத்திற்கு வரிவிதிப்பும் வேண்டும் என விரும்புகிறார். அத்தகைய நடவடிக்கை மிகத்திறமையுடன் லியோனல் ஜோஸ்பன் தலைமையிலான அரசாங்கம் அறிமுகப்படுத்திய 35 மணி நேர வார முறையை அகற்றிவிடும். அதே நேரத்தில் அது நிறுவனங்கள் கூடுதல் நேரப் பணியைப் பெறுவதை அதிகரிக்கவும் புதிய வேலைகளை தோற்றுவிப்பதை தடுக்கவும் ஊக்கம் பெறும். இத்தகைய வலதுசாரித் திட்டத்தை ரோயால் வெளிப்படையாக சவாலுக்கு உட்படுத்த முடியாது; ஏனெனில் இவர் அடிப்படையில் சார்க்கோசியுடன் இணங்கிப் போகிறார். இவரும் உலகப் பொருளாதாரத்தில் போட்டித்தன்மையில் பிரெஞ்சு முதலாளித்துவம் நிலைத்திருப்பதற்காக, "நவீனப்படுத்துதல்" என்பதற்கு ஆதரவாக உள்ளார். சார்க்கோசியின் கருத்து போலவே, இந்த "நவீனப்படுத்துதல்" என்பதன் அர்த்தம் தங்களின் தொழிலாளர் தொகுப்பினைப் பலியிட்டு பெருநிறுவனங்கள் இலாபங்களையும் உரிமைகளையும் அதிகிரித்துக் கொள்வதாகும்.. ரோயலின் நூறு நாள் திட்டத்தின் இதயத்தானத்தில் எந்த இளைஞரும் ஆறு மாதங்களுக்கு மேல் வேலையின்மையில் வாடக்கூடாது என்ற உறுதிமொழி உள்ளது. இளைஞர்களுக்கு 500,000 வேலைகள் தோற்றுவிக்கும் தன்னுடைய விருப்பத்தை ரோயல் அறிவித்துள்ளார். ஆனால் இந்த முதல் வாய்ப்பு ஒப்பந்தத்தை கவனமாகப் பார்த்தால் அது முதல் வேலை ஒப்பந்தம் (CPE) உடன் தெளிவான ஒப்புமைகள் கொண்டிருப்பது தெரியவரும்; அந்தத் திட்டமோ 2006 வசந்த காலத்தில் பிரெஞ்சு இளைஞர்களின் மகத்தான எதிர்ப்புக்களுக்கு வழிவகுத்திருந்தது. குறைவூதிய தொழிலாளர் தொகுப்பு வளர்ச்சித் திட்டம்தான் அது. ஜோஸ்பன் அரசாங்கம் அறிமுகப்படுத்திய இதே போன்ற நடவடிக்கைகளில் இருந்ததுபோல், ரோயலின் திட்டமும் நிறுவனங்கள், சிறு வணிகங்கள் ஆகியவற்றிற்கு உதவித்தொகை கொடுக்கும் கொள்கையை அடிப்படையாகக் கொண்டது ஆகும். பயிற்சியற்ற இளைஞர்களுக்கு வேலை கொடுத்தால் அவற்றிற்கு ஓர் ஆண்டு காலம் உதவித்தொகை கொடுக்கப்படும். அத்தகைய திட்டங்கள் தவிர்க்கமுடியாமல் வேலையில் இருக்கும் தொழிலாளர்களின் வேலை இழப்பில்தான் புதிய, குறைவூதிய, உதவித்தொகை பெறும் தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்கும்; அவர்களும் உதவித் தொகைகள் நிறுத்தப்பட்டபின் மீண்டும் தெருக்களுக்கு வந்துவிடுவர். சார்க்கோசி மக்களின் பரந்த அடுக்குகளால் நிராகரிக்கப்பட்டாலும், பல புலம் பெயர்ந்தவர்கள் மற்றும் வறிய ஊதியம் பெரும் தொழிலாளர்கள் வாழும் புறநகரங்களில் பெரும் வெறுப்பிற்கு உட்பட்டாலும், ரோயல் கோழைத்தனமாக அவருடைய கருத்துக்கள் அனைத்தையும் ஏற்றவகையில், கருத்துக் கணிப்புக்களில் சார்க்கோசிதான் முன்னணியில் இருக்கிறார். இந்த முன்னிற்றல் நாளுக்கு நாள் வேறுபட்டாலும் சார்க்கோசி முறையாக 1 சதவிகிதம் அல்லது அதற்குக் கூடுதலாகத்தான் ரோயலைவிட அதிகமாகப் பெற்றுவருகிறார். சமீபத்திய கருத்துக் கணிப்புக்களில் ஒன்று ரோயலுடைய 24 சதவிகிதத்துடன் ஒப்பிடும்போது அவருக்கு 28 சதவிகிதத்தைக் கொடுத்தது. இரு வேட்பாளர்கள் மட்டுமே இருக்கும் இரண்டாம் சுற்றில் அவருக்கு 2 முதல் 4 வரையிலான சதவிகிதம் ரோயலை விட சாதகமாகக் கிடைக்கக்கூடும். ரோயலுடைய சந்தர்ப்பவாதம் மற்றொரு வலதுசாரி வேட்பாளரான தாராளவாத UDF ஐச் சேர்ந்த Francois Bayrou வின் நலன்களையும் பெருக்கியுள்ளது. மரபார்ந்த வகையில் சோசலிஸ்ட் கட்சிக்கு வாக்களிப்பவர்கள் இப்பொழுது முதல் சுற்றில் பேய்ரூவிற்கு வாக்களிக்கலாமா என யோசிக்கின்றனர்; இதற்குக் காரணம் அவர்கள் இவருக்கு இரண்டாம் சுற்றில் சார்க்கோசியை விட வெற்றிவாய்ப்புக்கள் அதிகம் என்று நினைப்பதுதான். சமரசத்திற்கு ஆதரவு கொடுக்கும் நபராக தம்மை பேய்ரூ காட்டிக் கொள்ளுகிறார் மற்றும் தான் வெற்றிபெற்றால் சோசலிஸ்ட்டுக்கள் மற்றும் கோலிசவாதிகள் இருவரையும் இணைத்து அரசாங்கத்தை அமைப்பதாக அவர் அறிவித்துள்ளார். ஒரு விவசாயியுடைய மகனான இவர் நாட்டுப்புறங்களில் உள்ள நடுத்தர வர்க்க அடுக்குகளுக்கு முறையிடுகிறார்; அதைத்தவிர சார்க்கோசி ஜனாதிபதியாக வந்தால் கட்டுப்பாடு இல்லாமல் சமூகப் பூசல்கள் ஏற்படக்கூடும் என்று அஞ்சுபவர்களும் இவருக்கு ஆதரவாக உள்ளனர். தன்னுடைய வேலைத்திட்ட அறிவிப்புக்கள் பற்றி அவர் அதிக தெளிவைக் காட்டவில்லை. பிரெஞ்சு வணிக நிறுவனங்களுக்கு உதவித் தொகை கிடைக்கின்றபோதிலும் குறைவூதிய துறையை உருவாக்குவதை அவர் ஆதரிக்கிறார். இதைத்தவிர, சமூகப் பாதுகாப்பு நலன்கள் பரந்த அளவில் மறுசீரமைக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறார்; அதன்படி 3.5 மில்லியன் குடிமக்கள் நம்பியிருக்கும் இப்பொழுதுள்ள ஒன்பது வகை சமூக ஆதரவு (சமூக நல உதவி, குறைந்தபட்ச ஓய்வூதியங்கள் மற்றும் விதவைகளுக்கு ஓய்வூதியம் போன்றவை) ஒற்றை சமூகப் பாதுகாப்பு நலனாக இணைக்கப்படும். அத்தகைய நடவடிக்கை பெரும் வெட்டுக்களுக்குதான் வகை செய்யும். சில நேரம் வாக்குக் கணிப்புக்களில் பேய்ரூ ரோயாலுக்கு இணையாக வருகிறார். தற்பொழுது கிட்டத்தட்ட 18 சதவிகிதம் என்ற நிலையில் அவர் உள்ளார்; ஆனால் கருத்துக் கணிப்பு நிறுவனங்கள் இவருடைய முடிவைப் பற்றி கூறுவது கடினம் என்றும் 12ல் இருந்து 29 சதவிகிதம் வரை இவருக்கு வாய்ப்புக்கள் உண்டு எனவும் கூறியுள்ளன. "இடது" வேட்பாளர்களின் பங்கு கருத்துக் கணிப்புக்களின்படி 85 சதவிகித வாக்குகள் பெறக்கூடிய நான்கு முக்கிய வேட்பாளர்களில் இரு வலதுசாரி முதலாளித்துவ வேட்பாளர்கள் (சார்க்கோசி, பேய்ரூ), ஒரு தீவிர வலது (லூ பென்) மற்றும் பிரிட்டிஷ் பிரதம மந்திரி டோனி பிளேயரின் பாணியில் ஒரு வலது சாரி சோசலிஸ்ட்டாக ரோயல் ஆகியோர் உள்ளனர். அநேகமாக, மே 6ல் நடக்க இருக்கும் இரண்டாம் சுற்றில் இவர்களில் இருவர்தான் போட்டியிடக்கூடும். ஆனால் அத்தகைய தேர்வு மக்களின் மிகப் பரந்த பிரிவுகளின் உணர்வோடு ஒத்து இருக்கவில்லை; அவர்கள் பலமுறையும் உத்தியோகபூர்வ கொள்கைக்கு எதிர்ப்பை தெரிவித்துள்ளனர் - சமீபத்தில் 2005ம் ஆண்டில் ஐரோப்பிய அரசியல் அமைப்பை நிராகரித்தனர்; மீண்டும் 2006ல் முதல் வேலை ஒப்பந்தத்தை நிராகரித்தனர்; பெரும் எதிர்ப்புக்களுக்கு இடையே அரசாங்கம் சட்டத்தைக் கைவிட வேண்டியதாயிற்று. ஆயினும்கூட வலதுசாரி நபர்களும் கட்சிகளும்தான் தேர்தலில் பெரும் ஆதிக்கம் கொண்டுள்ளன. இது ஒன்றும் வலதுசாரியின் பிடிக்கு ஏற்ப நடந்து கொள்ளும் ரோயாலின் கொள்கையினால் அல்ல; இடது என அழைத்துக் கொள்ளும் கட்சிகளின் பங்கும் இதில் உள்ளது. மொத்தம் அங்கீகரிக்கப்பட்ட 12 வேட்பாளர்களில் 6 பேர் தங்களை சோசலிஸ்ட் கட்சிக்கும் இடதில் இருப்பதாகக் கூறிக் கொள்ளுகின்றனர். ஆயினும், இந்த வேட்பாளர்களில் எவரும், தொழிலாள வர்க்கம் அதன் பழைய அமைப்புக்களில் இருந்து கட்டாயம் முறித்துக் கொண்டு, சமூகத்தின் முதலாளித்துவ அமைப்பை எதிர்க்கும் ஒரு சுயாதீனமான அரசியல் இயக்கத்தை கட்டாயம் அபிவிருத்தி செய்ய வேண்டும் என்பதை வெளிப்படையாக கூறவில்லை. மாறாக அவை மக்களுடைய அதிருப்தி மற்றும் எதிர்ப்பை தடுத்து நிறுத்துவதற்காக முன்னுக்குச் செல்கின்றன மற்றும் அதனை சோசலிஸ்ட் கட்சிக்கு ஆதரவு என்று திசைதிருப்பத்தான் முயல்கின்றனர். இது ஒலிவியே பெசன்ஸநோவின் நிலைப்பாட்டில் குறிப்பாகத் தெளிவாகிறது; இவர் Revolutionary Communist League (LCR) ன் வேட்பாளர் ஆவார். அனைத்து வேட்பாளர்களிலும் இவர் ஒருவர்தான் தற்பொழுது 4ல் இருந்து 5 சதவிகிதத்தில் உள்ளார். மற்ற இடது வேட்பாளர்கள் 2 சதவிகிதத்திற்கும் குறைவான நிலையில்தான் உள்ளனர். கட்சியின் மரபார்ந்த தளங்கள் கல்வி வட்டங்களில் இருந்தும், அதிக அளவில் வாக்குரிமைப் பதிவு செய்துள்ள இளைஞர்கள் ஆகியோரிடம் பெசன்ஸநோ ஆதரவைப் பெற முடிந்துள்ளது. முதலாளித்துவ முறை பற்றி தேவையற்ற சொற்களை பயன்படுத்தி கண்டனங்கள் செய்து ஓரளவு ஆதரவை இவரால் பெறமுடிந்துள்ளது. ஓராண்டிற்கு முன்தான் போலீசுடன் வன்முறைப் பூசல்கள் நிகழ்ந்த பிரெஞ்சுப் புறநகர்களில் பரந்த தளத்தை உடைய மக்கள் பாடகர்கள், மக்கள் திரளாக வந்து வாக்களிக்க வேண்டும் என்று கோரியுள்ளனர். Diam's, Akhenaton, Axiom போன்ற குழுக்கள் எப்படி வாக்காளராக பதிவு செய்துகொள்ள வேண்டும் என்ற விதிகளையும் தங்களுடைய குறுந்தகட்டு மேல்உறையில் சேர்த்துள்ளனர். இவர்கள் சார்க்கோசி மற்றும் லூ பென்னை சந்தேகமில்லாமல் எதிர்க்கின்றனர்; ஆனால் எந்த குறிப்பிட்ட வேட்பாளருக்கும் வாக்களிக்குமாறு பரிந்துரைக்கவில்லை. மாறாக தேர்தலில் பங்கு பெறுவதின் முக்கியத்துவத்தை அவர்கள் வலியுறுத்தி பல தேர்தல் திட்டங்கள் பற்றியும் கவனமான ஆய்வு வேண்டும் என்றும் கூறியுள்ளனர். இத்தகைய அழைப்புக்களுக்கும் நல்ல விளைவுகள் உள்ளன. Seine Saint Denis என்று பாரிஸ் புறநகர் குடியிருப்புக்கள் பலவும் அடங்கியுள்ள பகுதியில் புதிய வாக்களார் பதிவு 2002 உடன் ஒப்பிடும்போது 8.5 சதவிகிதம் அதிகமாகியுள்ளது. பாரிஸ் புறநகரமான Saint Denis, NTM என்னும் hip-hop group தீவிரப்போக்கு குழுவின் இருப்பிடத்தில் இந்த எண்ணிக்கை வியக்கத்தக்க வகையில் 40 சதவிகிதமாக உயர்ந்தது. ஒடுக்கப்பட்ட இளைஞர்களின் அடுக்குகள் இடையே இத்தகைய அரசியல் விழிப்புணர்வு ஆழ்ந்த முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது; மேலும் அரசியல் வாழ்விற்கு தொழிலாளர் வர்க்கத்தின் புதிய அடுக்குகளின் பிரிவுகள் வருவதும் குறிக்கப்படுகிறது. ஆனால் இந்த வளர்ச்சியைத் முளையிலேயே கிள்ளி எறியும் வகையில் பெசன்ஸநோ நடந்து கொள்ளுகிறார். இளைஞர்களுடைய உணர்வுகளையும் தேவைகளையும் அவர் கூறினாலும், அதற்கு அரசியல் நோக்குநிலை கொடுக்கும் வகையில் எதையும் அளிக்க முன்வரவில்லை. LCR இன் தேர்தல் அறிக்கைகள், சோசலிஸ்ட் கட்சி வலதிற்கு மாறியுள்ளது, தொழிற்சங்கங்களின் காட்டிக்கொடுக்கும் பங்கு, ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சியின் சரிவு போன்ற முக்கிய பிரச்சினைகளுக்கு விளக்கம் ஏதும் கொடுக்கவில்லை. கற்பித்தல் மற்றும் தெளிவூட்டல் என்பதைக் காட்டிலும் பிரச்சினைகளை இன்னும் குழப்பமாக காட்டுவதுதான் பெசன்ஸநோவின் நோக்கமாக இருக்கிறது. தீவிரச் சொற்றொடர்களை அகற்றினால் அவருடைய தேர்தல் திட்டம் வெற்றுத்தனமான சீர்திருத்த உறுதிமொழிகளைத்தான் கொண்டுள்ளன; இவற்றை அடைதல் பூகோளம் தழுவிய முதலாளித்துவ அமைப்புக் கட்டமைப்புக்குள் முடியாதது ஆகும்.இரண்டாம் சுற்றில் LCR ரோயலுக்கு அல்லது பேய்ரூவிற்கோ கூட ஆதரவு கொடுக்குமாறு அழைப்புவிடலாம்; பிந்தையவர் சார்க்கோசி அல்லது லூ பென்னைவிடக் கூடுதல் வாக்குகள் பெற்றால். இதைப் பற்றி எந்த வித சந்தேகத்திற்கும் இடமில்லை; ஏனெனில் 2002ல் ஜாக் சிராக்கிற்கு இவர்களுடைய ஆதரவு அவ்விதத்தில்தான் அமைந்திருந்து. அவ்விதத்தில் வர்க்கப் பதட்டங்கள் அதிகரிப்பதை அடுத்து, சோசலிஸ்ட் கட்சி அரசாங்கத்தின் கூட்டணிப் பங்காளராக தொழிற்படக்கூடிய ஒரு ஒழுங்கற்ற "இடது" இயக்கத்தை வளர்ப்பதில் LCR ஆர்வம் காட்டுகிறது. இதனை அடைவதற்கு ஒன்றுபடுமாறு ஏனைய "இடது" வேட்பாளர்களுக்கு தொடர்ந்து பெசன்ஸநோ வேண்டுகோள் விடுக்கிறார். LCR உடைய தோழமைக் கட்சிகள் பிரேசிலிலும் இத்தாலியிலும் ஏற்கனவே இந்த பாதையைத்தான் கடைபிடித்துள்ளன. பிரேசிலில் இவர்களுடைய அமைப்பு லூலா அரசாங்கத்தில் ஒரு மந்திரியைக் கொண்டுள்ளது. இத்தாலியில் அவர்கள் ரோமனொ பிரோடி தலைமையிலான கூட்டணி ஒன்றில் சேர்ந்துள்ளனர். சர்வதேச நிதிய மூலதனத்திற்குப் பிரியமானவர், மற்றும் அமெரிக்காவின் நெருக்கமான கூட்டாளி என்ற முறையில் லூலா எழுச்சி பெற்றுள்ளார். இத்தாலியல் பிரோடி அரசாங்கத்தின் காட்டிக்கொடுப்புக்கள் இரண்டாம் முறை சில்வியோ பெர்லுஸ்கோனி பதவிக்கு வருவதற்கு வழிவகுத்துள்ளன.இதேபோன்ற நிலைமைதான் பிரான்சிலும் வருமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. சார்க்கோசிக்கும் லூ பென்னிற்கும் வலுவான கருத்துக் கணிப்பு விகிதங்கள் அவர்களுடைய செல்வாக்கைப் பொறுத்து இல்லை; எல்லாவற்றிற்கும் மேலாக, அதன் தீவிர வலதுசாரிப் பிரிவு உட்பட, அவை உத்தியோகபூர்வ இடதின் திவால்தன்மையின் விளைவு ஆகும். |