World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan authorities provide no answers over disappearance of SEP member

சோ.ச.க. உறுப்பினர் காணாமல் போயுள்ளமை தொடர்பாக இலங்கை அதிகாரிகள் பதிலளிக்க மறுக்கின்றனர்

By our correspondent
10 April 2007

Back to screen version

இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் உறுப்பினர் நடராஜா விமலேஸ்வரனும் அவரது நண்பர் சிவநாதன் மதிவதனனும் இரண்டு வாரங்களுக்கு முன்னர் வடக்கில் ஊர்காவற்துறை தீவில் காணாமல் போயுள்ளனர். அவசர விசாரணை ஒன்றைக் கோரி இலங்கையில் இருந்தும் உலகம் பூராவும் இருந்தும் அலை அலையாய் கடிதங்கள் வந்து குவிந்த போதிலும், பாதுகாப்பு அமைச்சகமும் இராணுவமும் மற்றும் பொலிசும் மூடிமறைப்பு என்று மட்டுமே சொல்லக்கூடிய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.

விமலேஸ்வரனும் மதிவதனனும் புங்குடுதீவில் உள்ள கடற்படை வீதித்தடையில் மார்ச் 22 அன்று சுமார் 6.30 மணியளவில் காணப்பட்டுள்ளனர். அவர்கள் ஊர்காவற்துறை தீவுக்கு செல்வதற்கான கடல்வழிப்பாலத்தினுள் நுழைவதற்கு தயாராகிக்கொண்டிருந்தனர். விமலேஸ்வரன் மதிவதனனின் மோட்டார் சைக்கிளின் பின்புறம் அமர்ந்திருந்தார். அவர் புங்குடுதீவில் தனது நண்பரின் வீட்டில் இருந்து சில ஆடைகளை எடுத்துவர அங்கு சென்றிருந்தார்.

விமலேஸ்வரனும் மதிவதினனும் வீதித்தடையின் ஊடாக செல்லும்போது அங்கு தமது பெயர்களை பதிவுசெய்துகொண்டுள்ளதாக புங்குடுதீவு கடற்படை முகாமின் தளபதி ஹேமந்த பீரிஸ் சோ.ச.க. க்கு தெரிவித்துள்ளார். ஆயினும், ஊர்காவற்துறையில் வேலணையில் உள்ள கடற்படை முகாமின் கட்டளை அதிகாரி சில்வா இந்த இருவர் தொடர்பாகவும் எதுவும் தெரியாது என்று அறிவிக்கின்றார். கடற்படை அவர்களை தடுத்துவைக்கவோ அல்லது கைது செய்யவோ இல்லை என அவர் கூறுகின்றார்.

ஊர்காவற்துறை வீதித் தடையில் குற்றப்புலனாய்வு பிரிவை (சீ.ஐ.டி) சேர்ந்த இரு பொலிஸ் அதிகாரிகள் இருந்ததை சோ.ச.க. முன்னெடுத்த சொந்த விசாரணைகள் உறுதிப்படுத்துகின்றன. ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தை சேர்ந்த, தமிழில் சரளமாகப் பேசக்கூடிய இந்த இரு சீ.ஐ.டி. அதிகாரிகளும் மக்களை விசாரிப்பதில் அடிக்கடி ஈடுபடுவர். இவர்களை உள்ளூர் மக்கள் நன்கு அறிவர். இவர்கள் தங்கள் பெயர்களை வெளிப்படுத்தாத காரணத்தால் உள்ளூர்வாசிகள் இவர்களை "இரகசிய பொலிஸ்" என்றழைக்கின்றனர்.

விமலேஸ்வரனும் மதிவதனனும் சுமார் மாலை 5.30 மணிக்கு புங்குடுதீவு சென்றுகொண்டிருந்த போது ஊர்காவற்துறை வீதித் தடைக்கு அருகில் வைத்து இந்த இரு சீ.ஐ.டி. பொலிஸ் அதிகாரிகளும் அவர்களை விசாரித்துக்கொண்டிருந்ததாக நேரில் கண்டவர்கள் தெரிவிக்கின்றனர். அவர்கள் இருவரும் ஒரு மணித்தியாலத்தின் பின்னர் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது இந்த வீதித்தடையில் என்ன நடந்தது என்ற தெளிவான கேள்விக்கு இன்னமும் பதில் இல்லை. விமலேஸ்வரனிடமும் மதிவதனனிடமும் சீ.ஐ.டி. அதிகாரிகள் எதைப்பற்றி விசாரித்துக்கொண்டிருந்தனர்? அவர்கள் இருவரும் இராணுவத்தால் அல்லது பொலிஸால் கைதுசெய்யப்பட்டுள்ளனரா? அவர்கள் வீதித்தடையை கடக்க அனுமதிக்கப்பட்டிருந்தால் எல்லா மட்டத்திலும் எந்தவொரு தகவல்களையும் வழங்க அதிகாரிகள் அசாதாரணமான முறையில் தயங்குவது ஏன்?

கொழும்பிலும் மற்றும் வடக்கில் யாழ்ப்பாணப் பிரதேசத்திலும் உள்ள அதிகாரிகளுக்கு ஒரு தொகை தொலைபேசி அழைப்புக்களை எடுத்தும், ஊர்காவற்துறை வீதித் தடையில் என்ன நடந்தது என்பது பற்றி சோ.ச.க. க்கு எந்தவொரு தகவலும் வழங்கப்படவில்லை. விசாரணையில் சுயாதீனமான ஆதாரத்தை பெறுவதற்கான வழி அந்த சந்தர்ப்பத்தில் இருந்த கடற்படை சிப்பாய்களையும் சீ.ஐ.டி. அதிகாரிகளையும் விசாரணை செய்வதாகவே இருக்கும்.

* விமலேஸ்வரனையும் மதிவதனனையும் பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் (சீ.ஐ.டி) கைது செய்துள்ளனரா என சீ.ஐ.டி ஆணையாளர் சந்திரா வகிஸ்தவிடம் கேட்டதாக பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் எச்.கே. பாலசூரிய சோ.ச.க. க்குத் தெரிவித்தார். வடக்குப் பிராந்தியத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபரிடமும் அவர் மேற்கொண்ட விசாரணைகள் பற்றி கேட்டதாகவும் அவர் தெரிவித்தார். ஆயினும் பதில்களை வழங்காத பாலசூரிய, தன்னால் பொலிசுக்கு "அழுத்தம்" கொடுக்க முடியாது என பிரகடனம் செய்தார்.

* சோ.ச.க பொதுச் செயலாளர் விஜே டயஸ், கடந்த வியாழக்கிழமை பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் சுனில் எஸ். சிரிசேனவை தொடர்புகொண்டார். விமலேஸ்வரனும் மதிவதனனும் காணாமல் போயுள்ள சம்பவத்தில் கடற்படை சம்பந்தப்பட்டுள்ளது என்ற சோ.ச.க.யின் சந்தேகம் தொடர்பாக கடற்படைத் தளபதியுடன் தொடர்புகொள்வதாக சிரிசேன தெரிவித்தார் அதன் பின் எந்தவொரு தகவலும் கிடைக்கில்லை.

* கடந்த வாரம் வடக்கு பிராந்தியத்திற்கு பொறுப்பான பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரியவை சோ.ச.க. தொடர்புகொண்ட போதும், அறிக்கை ஒன்றை நிறைவுசெய்வதற்கு பொலிஸுக்கு ஒரு வாரம் தேவை எனத் தெரிவித்தார். இந்த விவகாரத்தின் அவசரத்தை பற்றி அழுத்தம் கொடுத்தபோது, "பாதுகாப்புக் காரணங்களால்" வடக்கில் பல பிரதேசங்களுக்கு பொலிசாரால் பயணிக்க முடியாமல் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

* கட்சி செய்தி உத்தியோகபூர்வ முறைப்பாடு தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் பற்றி தெரிந்துகொள்ள சோ.ச.க. ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியுடன் பேசியது. இந்த காணாமல் போன சம்பவம் தொடர்பாக வேறு அதிகாரிகள் விசாரணை செய்துகொண்டிருப்பதாகவும் இரண்டு மணித்தியாலங்களுக்குள் மேலும் தகவல்களை வழங்குவதாகவும் அவர் வாக்குறுதியளித்தார். அதன் பின்னர் அவரைப் பிடிக்க முடியவில்லை.

கடந்த வருடம் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ நாட்டை மீண்டும் யுத்தத்திற்குள் தள்ளியதில் இருந்தே, இராணுவத்துடன் சேர்ந்த கொலைப் படைகளால் நூற்றக்கணக்கானவர்கள் காணாமல் போயுள்ளனர் அல்லது படுகொலை செய்ப்பட்டுள்ளனர். ஊர்காவற்துறை தீவில் மாத்திரம் 37 பேர் காணாமல் போயுள்ளனர். அவர்களில் மூன்று பேரது சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எஞ்சிய 34 பேரின் தலைவிதி பற்றி எதுவும் தெரியாது.

உதாரணமாக, டிசம்பர் 10, கந்தையா கணபதி மஹேந்திரன் என்பவர் திருமணம் ஒன்றிற்கு சென்ற பின்னர் வேலனையில் காணாமல் போயுள்ளார். நாட்டின் தெற்கில் உள்ள தடுப்பு முகாமில் அவரை தடுத்து வைத்துள்ளனரா என்பதை தெரிந்துகொள்ளும் முயற்சியில் அவரது குடும்ப உறுப்பினர்கள் கொழும்பில் இரண்டு மாதங்களை செலவு செய்தனர். ஆனால் எந்தப் பயனும் இல்லை.

விமலேஸ்வரனையும் மதிவதனனையும் கண்டுபிடிப்பதற்காக ஒரு அவசர விசாரணையை மேற்கொள்ளுமாறு இலங்கை அதிகாரிகளை கோருவதற்காக சோ.ச.க. அதன் பிரச்சாரத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கின்றது. 1998ல் சோ.ச.க. யில் உறுப்பினராக இணைந்ததில் இருந்தே விமலேஸ்வரன் அவரது அனைத்துலகவாத சோசலிச கொள்கைகளுக்காகவும், உழைக்கும் மக்களின் உரிமைகளை காப்பதற்காக போராடுவதற்கும் மற்றும் யுத்தத்தை எதிர்ப்பதற்கும் அவர் கொண்டிருந்த உறுதிப்பாட்டிற்காகவும் நன்கு பிரசித்தி பெற்றிருந்தார். எங்களது பிரச்சாரத்தை ஆதரித்து தொடர்ந்தும் கடிதங்களை அனுப்புமாறு சோ.ச.க. உறுப்பினர்கள் மற்றும் உலக சோசலிச வலைத் தள வாசகர்களிடமும் நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம்.

கடிதங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

Gotabhaya Rajapakse,
Secretary of Ministry of Defence,
15/5 Baladaksha Mawatha,
Colombo 3, Sri Lanka
Fax: 009411 2541529
e-mail: secretary@defence.lk

N. G. Punchihewa
Director of Complaints and Inquiries,
Sri Lanka Human Rights Commission,
No. 36, Kinsey Road,
Colombo 8, Sri Lanka
Fax: 009411 2694924

பிரதிகளை இலங்கை சோசலிச சமத்துவக் கட்சிக்கும் மற்றும் உலக சோசலிச வலைத் தளத்திற்கும் அனுப்பிவைக்கவும்.

Socialist Equality Party,
P.O. Box 1270,
Colombo, Sri Lanka.
Email: wswscmb@sltnet.lk

உலக சோசலிச வலைத் தள ஆசிரியர் பீடத்திற்கு கடிதங்களை அனுப்ப இந்த படிவத்தை online form தயவுசெய்து பயன்படுத்தவும்.

இதுவரை அனுப்பப்பட்டுள்ள கடிதங்களின் இன்னுமொரு தொகுப்பை இங்கே பிரசுரித்துள்ளோம்.

* * *

ஏப்பிரல் 2, 2007

அன்பின் ஐயா,

சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர் நடராஜா விமலேஸ்வரன் மற்றும் அவரது நண்பர் சிவநாதன் மதிவதனனும் வடக்கில் ஊர்காவற்துறை தீவில் காணாமல் போயுள்ள செய்தி, இலங்கை பிரஜைகளின் ஜனநாயக உரிமைகள் தொடர்பான கவலையை மீண்டும் எழுப்பியுள்ளது.

இலங்கையிலும் மற்றும் உலகம் பூராவும் மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கான கசப்பான போராட்டத்தில் சோசலிச சமத்துவக் கட்சிக்கு நீண்ட வரலாறு உண்டு. அது எல்லாவிதமான தேசியவாதம் மற்றும் புலிகளின் பிரிவினைவாதத்தையும் எதிர்ப்பதால் பிரசித்திபெற்றுள்ளது. இந்த சூழ்நிலையில், நடராஜா விமலேஸ்வரன் காணாமல் போயுள்ள சம்பவம் அவர் ஆதரித்து மற்றும் நடைமுறையில் ஏற்றுக்கொண்டிருந்த அரசியல் கொள்கையில் வேரூன்றியுள்ளது என நம்ப முடியும்.

இந்த சம்பவம் நடந்துள்ள பிரதேசம் அரசாங்க பாதுகாப்புப் படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசமாகும். ஆகவே மேல் குறிப்பிடப்பட்ட பிரஜைகள் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க இந்த சம்வம் தொடர்பாக விசாரணை செய்யுமாறு உங்களை கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி,

தங்கள் உண்மையுள்ள,

SW, Sri Lanka

* * *

Mr. Gotabhaya Rajapakse,

Secretary of Ministry of Defence,

15/5 Baladaksha Mawatha,

Colombo 3, Sri Lanka,

இங்கு இணைக்கப்பட்டுள்ள சோசலிச சமத்துவக் கட்சியால் எங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தை தயவுசெய்து கவனிக்கவும். சோ.ச.க. யின் பிரசித்திபெற்ற உறுப்பினரும் அவரது நண்பரும் அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் காணாமல் போனது எவ்வாறு என கண்டுபிடிப்பது அரசாங்கத்தின் கடமையாகும். தமது தோழர்களின் உயிர் தொடர்பாக சோ.ச.க. தலைவர்கள் காட்டும் அக்கறையுடன் நான் முழுமையாக உடன்படுகின்றேன்.

காணாமல் போன இருவரையும் கண்டுபிடிக்க அனைத்து நடவடிக்கைகளையும் தயவுசெய்து எடுக்கவும்.

கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன,

தலைவர், இடது முன்னணி (இலங்கை)

* * *

ஏப்பிரல் 5, 2007

குறிப்பு: காணாமல் போயுள்ள இரு பிரஜைகள்

அன்பின் திரு. இராஜபக்ஷ,

சீ.ஐ.டி மற்றும் கடற்படை அதிகாரிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும்போது சந்தேகத்திற்கிடமான முறையில் இருவர் காணாமல் போயுள்ளமை தொடர்பாக எனது கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

திரு. நடராஜா விமலேஸ்வரன் மற்றும் திரு. சிவநாதன் மதிவதனன் எனும் பெயர்களை கொண்ட இவ்விருவரும் மார்ச் 22 வீதித் தடையில் நிறுத்தப்பட்டனர். அதிலிருந்து அவர்கள் இருவரையும் காணவில்லை.

வியாபாரம், கைத்தொழில் மற்றும் முதலீடுகளும் சட்டத்திற்கும் நியாயத்திற்கும் கட்டுப்பட்டவை மற்றும் இந்த இருவரும் கொடூரமாய் காணாமல் போயுள்ளமை உத்தியோகபூர்வ சதித்திட்டத்தை கொண்டுள்ளன. இவை எனது சக பணியாளரை முதலீட்டு களத்திற்குள் இறக்கும் முன்னர் முன்னறிவிப்புகள் எதையும் வழங்கவில்லை.

ஆகவே நான் காணாமல் போயுள்ள இருவர் தொடர்பாக உடனடியான, கடுமையான, பகிரங்கமான தெளிவான விசாரணையை முன்னெடுத்து, அவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்படுவதற்கு கட்டளையிடுமாறு வேண்டிக்கொள்கிறேன்.

அக்கறையுடன்,

CS, Taipei, Taiwan, Formosa.

* * *

செயலாளர் இராஜபக்ஷ,

மார்ச் 22, வடக்கில் யாழ்ப்பாணத்தை அண்டிய தீவுகளில் காணாமல் போன நடராஜா விமலேஸ்வரன் மற்றும் அவரது நண்பர் சிவநாதன் மதிவதனனும் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கவும், அவர்களை விடுதலை செய்யவும் சோசலிச சமத்துவக் கட்சி முன்னெடுத்துள்ள பிரச்சாரத்துடனான எனது உடன்பாட்டை வெளிப்படுத்தவே இதை நான் எழுதுகிறேன்.

இலங்கையில் மத, மொழி வேறுபாடுகள் இன்றி மக்களின் ஜனநாயக உரிமைகளை காக்கத் தொடர்ந்தும் போராடுவதில் சோசலிச சமத்துவக் கட்சிக்கு ஒரு வரலாறு உண்டு. அது புலிகளின் பிரிவினைவாதத்தையும் சிங்கள தேசியவாதத்தையும் எதிர்ப்பதோடு அனைத்துலக சோசலிசத்திற்காக நிற்கின்றது. இதன் காரணமாகவே நடராஜா விமலேஸ்வரன் காணாமல் போயுள்ளமை உலகம் பூராவும் உள்ள உழைக்கும் மக்களுக்கு அச்சுறுத்தும் விளைவுகளைக் கொண்டுள்ளது.

இந்த இருவரையும் கண்டுபிடிப்பதன் பேரில் ஒரு உடனடியான விசாரணையை முன்னெடுக்குமாறு இலங்கை பாதுகாப்பு அமைச்சையும் அரசாங்கத்தையும் நான் கேட்டுக்கொள்கின்றேன்.

FKr,

Systems Engineer,

Cambridge, MA, 02139

USA

* * *

ஏப்பிரல் 5, 2007

திரு. இராஜபக்ஷ மற்றும் திரு. புஞ்சிஹேவா,

இந்திய சோசலிச தொழிலாளர் கழகம் (எஸ்.எல்.எல்.), சோசலிச சமத்துவக் கட்சியின் உறுப்பினர் நடராஜா விமலேஸ்வன் மற்றும் அவரது நண்பர் சிவநாதன் மதிவதனனும் வட இலங்கையில் யாழ்ப்பாணக் குடாநாட்டை அண்டிய தீவுகளில் மார்ச் 22 மாலை காணாமல் போயுள்ளமைக்கு இலங்கை அரசாங்கமும் அதன் பாதுகாப்புப் படைகளுமே பொறுப்பு என்பதை கூறிவைப்பதுடன், அவர்கள் காணாமல் போயுள்ளமை தொடர்பாக இலங்கை அரசாங்கமும் அதன் இராணுவமும் உடனடியான விசாரணையை மேற்கொள்ள வேண்டும் எனக் கோருகின்றது.

விமலேஸ்வரனும் மதிவதனனும் காணாமல் போயுள்ள சூழ்நிலையானது அவர்கள் இருவரும் வசிக்கும் குடாநாட்டை அண்டிய தீவுகளை முழுமையாகவும் இறுக்கமாகவும் கட்டுப்படுத்தும் இலங்கை இராணுவம் மற்றும் கடற்படைக்கும் தெரியாமல் அவர்கள் காணாமல் போயிருக்க முடியாது என்பதை சுட்டிக்காட்டுகிறது.

உண்மையில், புங்குடுதீவையும் ஊர்காவற்துறையையும் இணைக்கும் நீண்ட கடல்வழிப் பாலத்தில் ஊர்காவற்துறை பகுதியில் இருந்து கடற்படையும் மற்றும் சீ.ஐ.டி.யினரும் விமலேஸ்வரனையும் மதிவதனனையும் கைதுசெய்திருக்க முடியும் என்பதையே அனைத்து ஆதாரங்களும் இப்போது சுட்டிக்காட்டுகின்றன.

மார்ச் 22 இரவு 8 மணிக்கு அமுலுக்கு வந்த ஊரடங்குச் சட்டத்திற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்னதாக அவர்கள் காணாமல் போயிருக்கலாம் எனக் கருதக் கூடிய இடமான கடல்வழிப் பாலத்தின் ஊர்காவற்துறை பகுதியில் உள்ள வீதித் தடையில், 15 கடற்படையினர் மட்டுமன்றி, தமிழ் பேசத் தெரிந்த இரண்டு சீ.ஐ.டி. யினரும் இருந்துள்ளனர். இந்த சீ.ஐ.டி. அலுவலர்கள் உள்ளூர் மக்களை அடிக்கடி வீதித் தடைகளில் வைத்து விசாரணை செய்வதில் ஈடுபடுவதோடு "சந்தேகத்தின் பேரில்" மக்களை எதேச்சதிகாரமான முறையில் கைதுசெய்யும் அதிகாரங்களையும் கொண்டுள்ளனர். விமலேஸ்வரனும் மதிவதனனும் சீ.ஐ.டி. அலுவலர்களால் மற்றும் புங்குடுதீவு -ஊர்காவற்துறை கடல்வழிப் பாலத்தின் ஊர்காவற்துறை பகுதியில் இருந்த கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர் மற்றும் குறைந்தபட்சம் அவர்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர் என்பதை இந்த ஆதாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

கடந்த ஆண்டு பூராவும் தீவின் வடக்கிலும் கிழக்கிலும் நூற்றுக்கணக்கான தமிழர்கள் கொல்லப்படுள்ளனர், கடத்தப்பட்டுள்ளனர் அல்லது காணாமல் "போயுள்ளனர்" என்பது உலகறிந்த விடயமாகும். இத்தகைய கடத்தல்கள், கொலைகள் மற்றும் காணாமல் போகும் சம்வங்களின் பின்னால், இலங்கை பாதுகாப்புப் படைகளின் பேர்போன கொலைப் படைகள் அல்லது அவர்களோடு சேர்ந்து இயங்கும் துணைப்படைகளை தவிர வேறு யாரும் இல்லை என்பது நன்கு ஸ்தாபிக்கப்பட்ட உண்மையாகும். விமலேஸ்வரனையும் மதிவதனனையும் கடைசியாக காணக் கிடைத்த பிரதேசத்தில், ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் ஆளும் கூட்டணியின் பங்காளியான ஈழ மக்கள் ஜனநாயக முன்னணி (ஈ.பி.டி.பி.) என்ற துணைப்படையுடன் கடற்படையும் கூட்டாக செயற்படுகின்றது.

சர்வதேச அழுத்தங்கள் குவிந்துகொண்டிருக்கின்ற போதிலும் மற்றும் பாதுகாப்பு அமைச்சு, ஊர்காவற்துறை மற்றும் புங்குடு தீவில் உள்ள கடற்படை முகாம்கள் மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களில் சோ.ச.க. உத்தியோகபூர்வமாக முறைப்பாடு செய்திருந்த போதிலும் விமலேஸ்வரனையும் மற்றும் அவரது நண்பர் மதிவதனனையும் கண்டுபடிப்பதற்கு இலங்கை அரசாங்கமோ, அதன் பொலிசோ அல்லது இராணுவமோ பயனுள்ள நடவடிக்கைகள் எதனையும் எடுக்கவில்லை.

கடந்த ஆண்டு முல்லிப்பொத்தானையில் சோ.ச.க. ஆதரவாளரான சிவபிரகாசம் மரியதாஸ் அவரது வீட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக அவசரமான விசாரணை ஒன்றை முன்னெடுக்குமாறு கோரியும், கொலைகாரர்களை கண்டுபிடித்து வழக்குத் தொடருமாறும் இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க, தென்னிந்திய நகரான சென்னையில் உள்ள பல கல்லூரிகளிலும் உள்ள மானவர்களிடம் இந்திய எஸ்.எல்.எல். நூற்றுக்கணக்கான கையொப்பங்களை சேகரித்தது.

விமலேஸ்வரனதும் மதிவதனனும் பாதுகாப்பான உடனடி விடுதலையை உறுதிப்படுத்துமாறும், அதேபோல், சோ.ச.க. ஆதரவாளர் சிவபிரகாசம் மரியதாஸ் கொலை தொடர்பாக இலங்கை அரசாங்கம் உடனடி விசாரணை ஒன்றை மேற்கொண்டு கொலையாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்றும் கோரி, தொழிலாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள், புத்திஜீவிகள் மற்றும் உழைக்கும் மக்களின் அனைத்துப் பிரிவினர் மத்தியிலும் இந்தியாவில் சோசலிச தொழிலாளர் கழகம் எதிர்வரும் நாட்களிலும் கிழமைகளிலும் ஒரு பிரச்சாரத்தை முன்னெடுக்கவுள்ளது.

அருண் குமார்,

தேசிய செயலாளர்,

சோசலிச தொழிலாளர் கழகம்,

இந்தியா.

* * *

அன்பின் திரு. செயலாளர்,

நடராஜா விமலேஸ்வரன் மற்றும் சிவநாதன் மதிவதனனும் காணாமல் போயுள்ள சம்பவம் தொடர்பாக எனது அக்கறை வெளிப்படுத்தவே இந்தக் கடிதத்தை நான் எழுதுகிறேன். இவர்கள் இருவரும் மார்ச் 22, 2007 வடக்கில் யாழ்ப்பாணத் தீவுகளில் கடைசியாக இருந்துள்ளனர்.

இவர்கள் இருவரும் வசிக்கும் ஊர்காவற்துறை தீவையும் மற்றும் புங்குடு தீவையும் இணைக்கும் நீண்ட கடல்வழிப் பாலத்தில் உள்ள இரு கடற்படை முகாம்களுக்கு இடையிலேயே இந்த காணாமல் போன சம்பவம் நடந்துள்ளது.

இந்த சம்பவம் கடற்படை வீதித் தடைகளுக்கு இடையில் நடந்துள்ள நிலையில், இந்த விவகாரத்தில் இராணுவம் கொஞ்சமேனும் சம்பந்தப்பட்டுள்ளதாகவே தோன்றுகிறது.

இந்த காணாமல்போன சம்பவங்கள் தொடர்பாக உங்களது அமைச்சு விசாரணை செய்வதோடு பொறுப்பாளிகளை சட்டத்தின் முன் கொண்டுவர வேண்டும் என பொறுப்புடன் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

இந்த விவகாரம் காலதாமதமின்றி தீர்க்கப்பட்டு இந்த இருவரும் முறையே தங்களின் குடும்பங்களுக்கு பாதங்கள் எதுவும் இன்றி திரும்பிவருவதற்கு நீங்கள் வழி செய்வீர்கள் என எதிர்பார்க்கின்றோம்.

உங்களது அலுவலகத்தில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு நடவடிக்கையையும் நாங்கள் உயர்வாக மதிப்போம்.

தங்கள் உண்மையுள்ள,

DP,

Regina, Canada

* * *

அன்பின் திரு. செயலாளர்,

நான் சோசலிச சமத்துவக் கட்சியின் ஆதரவாளர் என்ற வகையிலும், மனித குலத்தை மதிப்பவன் என்ற வகையிலும், நடராஜா விமலேஸ்வரனும் அவரது நண்பர் சிவநாதன் மதிவதனனும் காணாமல் போயுள்ள செய்தி கேட்டு என்னால் உதவ முடியாவிட்டாலும் நான் கவலையும் அதிர்ச்சியும் அடைந்தேன். எதற்கெதிராகவும் அல்லது உண்மையில் எதையும் நம்புவதற்கும் இன்னொருவரிடம் இருந்த பெறப்பட்ட சரிபார்க்கப்படாத தகவலின் மூலம் தீர்மானிப்பது என்பது சரி என்று நிரூபிப்பதற்கு சிறந்தவழி அல்ல என்பதால், "குற்றம் சாட்டப்பட்டவர் தன்னை நிரபராதி என நிரூபிப்பதற்கான" கொள்கையில் எனக்கு உறுதியான நம்பிக்கை உள்ளது. எவ்வாறெனினும், இந்த இருவரது நிலையிலும் எனக்கு சந்தேகம் ஏற்படவில்லை என அர்த்தப்படாது. சிவபிரகாசம் மரியதாஸ் ஒரு ஆண்டுக்கு முன்னர் கொலை செய்யப்பட்டது பற்றியும் மற்றும் இந்த வழக்கில் இன்னமும் எந்தவொரு முன்னேற்றமும் இல்லை என்பது பற்றியும், அத்துடன் அவர் சோ.ச.க ஆதரவாளர் என்பதோடு சேர்த்து நான் வாசிக்கும் போது, கடந்த மார்ச்சில் காணாமல் போன இரு தனிநபர்களுக்கு என்ன நடந்திருக்க முடியும் என்பது பற்றி நான் இருட்டுக்குள் தள்ளப்பட்டுள்ளேன்.

அவர்களைக் கண்டுபிடிக்குமாறு நான் அரசாங்கத்தைக் கோருகிறேன். நீங்கள் பிரதிநிதித்துவம் செய்யும் அரசாங்கம் பற்றிய என் மனதில் உள்ள எந்தவொரு இருட்டு சந்தேகத்தையும் தெளிவுபடுத்திக்கொள்ளும் எண்ணத்தில் மட்டுமன்றி, இந்த இருவரும் உயிருடன் காயங்கள் இன்றி இருக்கின்றனரா இல்லையா என்ற உண்மையை அறிந்துகொள்ளும் எதிர்பார்ப்பிலும் உள்ளேன்.

உண்மையுள்ள,

NM

* * *

சோ.ச.க. உறுப்பினர் நடராஜா விமலேஸ்வரன் மற்றும் அவரது நண்பர் சிவநாதன் மதிவதனனும் கடத்தப்பட்டுள்ளமை தொடர்பாக மிகவும் கடுமையான விசாரணை ஒன்றை முன்னெடுக்க வேண்டும் என இலங்கை அரசாங்கத்தைக் கோருவதற்காகவே நான் ஆஸ்திரேலியா சிட்னியில் இருந்து இதை எழுதுகிறேன். காணாமல் போன சம்பவங்கள் மற்றும் கொலைகளுக்கு பேர்போன இராணுவ வீதித் தடையிலேயே இவர்கள் காணாமல் போயுள்ளனர். இந்த இருவரும் வசிக்கும் வடக்கு தீவுப் பிரதேசத்தில் கடற்படை கடுமையாக ரோந்து செல்கின்ற நிலையில் இந்த சம்பவத்தில் கடற்படையின் தலையீடு உள்ளது என நம்புவதற்கு பலமான ஆதாரங்கள் இதுவரை உள்ளன. வீதித் தடைகள், ரோந்துகள் மற்றும் கடுமையான கடற்படை பாதுகாப்பில் நிறைந்து போயுள்ள இந்தப் பிரதேசத்தில் இருந்து இதுவரை போதுமான தக்க தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.

நீங்கள் அறிந்துள்ள வகையில், அனைத்து அரசியல் எதிரிகளினதும் எதிர்ப்பை நசுக்க மிகவும் கொடூரமான வழிமுறைகளை பயன்படுத்த உங்களது அரசாங்கமும் இராணுவமும் தயங்கப் போவதில்லை. எந்தவொரு விசாரணைக்கும் பொருத்தமான விளக்கங்களை காண பங்கெடுக்க மறுப்பதில் இருந்து இது தெளிவாகியுள்ளது. இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்டிருப்பதற்கான பலமான சூழ்நிலை ஆதாரத்தை எடுத்துக் கொண்டாலும் விளக்கங்கள் எதுவும் இல்லை.

எல்லா வகையான கொலைக் கருவிகளுடனும் நன்கு ஆயுதம்தரிக்கப்பட்ட இராணுவத்தை நீங்கள் வைத்திருக்கிறீர்கள், ஆனால் அச்சத்தை பயனபடுத்தி நீங்கள் ஆட்கடத்தி ஆட்சி செய்ய வேண்டியுள்ளது. இந்த நடவடிக்கை பலத்தில் இருந்து வரவில்லை. குற்றச்செயல் மூலமும் அரசியல் எதிராளிகளை படுகொலை செய்வதன் மூலமும் இந்த வகையில் அரசாங்கம் ஆட்சி செய்வதென்பது பெருமளவில் கோழைகளின் கூறுகளைக் கொண்டிருக்கிறது என்ற புள்ளியை உங்களது அரசாங்கமும் இராணுவமும் இங்கே காணத்தவறலாம்.

இவ்விரு தொழிலாளர்களையும் உடனடியாக விடுவிக்குமாறு நான் கோருகிறேன்.

JC,

Sydney, Australia

* * *

அன்பார்ந்த ஐயா,

மார்ச் 22ல் இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் நடராஜா விமலேஸ்வரன் மற்றும் அவரது நண்பர் சிவநாதன் மதிவதனன் காணாமற்போயுள்ளமையும் மற்றும் படுகொலைச் சாத்தியமும் கடந்த ஆகஸ்ட் 7 அன்று சோ.ச.க வின் ஆதரவாளர் சிவப்பிரகாசம் மரியதாஸ் கிழக்கு திருகோணமலை மாவட்டத்திலுள்ள அவரது சொந்த ஊரான முள்ளிப்பொத்தானவில் உள்ள அவரது இல்லத்தில் படுகொலை செய்யப்பட்டமையும், போருக்கு அவர்களின் எதிர்ப்பு மற்றும் அனைத்து வடிவிலான இனவாத அரசியலுக்கு எதிராக ஒரு சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதற்கான அவர்களின் போராட்டம் இவற்றின் காரணமாக இலங்கை சோ.ச.க விற்கு எதிராகவும் இந்த தனிநபர்களுக்கு எதிராகவும் நடத்தப்பட்ட அரசியற் குற்றங்களாகும்.

இருவர் தொடர்பாகவும் தங்களின் ஆட்சியின்கீழுள்ள அனைத்து தகவல்களையும் வெளியிடுமாறும், சோ.ச.க ஆதரவாளர் சிவப்பிரகாசம் மரியதாஸ் படுகொலை பற்றி அக்கறை கொண்ட மற்றும் ஒளிவுமறைவற்ற ஒரு விசாரணையை நடத்துமாறும் இலங்கை அரசாங்கத்தை நான் கேட்டுக்கொள்கிறேன்.

DD

Melbourne

Australia


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved