World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

Further lurch to the right in French election campaign

பிரெஞ்சுத் தேர்தல் பிரச்சாரத்தில் இன்னும் கூடுதலான வலதுபுற சாய்வு

By Peter Schwarz in Paris
18 April 2007

Back to screen version

ஏப்ரல் 22 அன்று நடக்கவிருக்கும் முதல் சுற்றிற்கு ஒரு வாரம் முன்பு, பிரெஞ்சு ஜனாதிபதி தேர்தலில் முக்கிய வேட்பாளர்கள் இன்னும் கூடுதலாக வலதுசாரி நிலைப்பாட்டிற்கு நகர்ந்துள்ளனர்.

பிரெஞ்சு ஊடகத்தால் "மத்தியவாதிகள்" என விவரிக்கப்படும் சோசலிஸ்ட் கட்சி (PS), வலதுசாரி, சுதந்திர சந்தை பிரெஞ்சு ஜனநாயக ஒன்றியம் (Union for French Democracy- UDF) ஆகியவற்றின் முகாமில், பயன்பாடு உடைய முறையில் வாக்களியுங்கள் என்ற அழைப்புக்கள் உரத்த குரலில் வெளிவருகின்றன. ஒரு அரசியல் வேலைத்திட்டத்தின் அடிப்படையிலான உடன்பாடு என்பதைவிட இது முற்றிலும் தந்திரோபாய நோக்கங்களுக்காக விடுக்கப்படும் அழைப்பு ஆகும். கோலிச நிக்கோலா சார்க்கோசி அல்லது தீவிர வலதுசாரி ஜீன் மரி லூ பென் வருவதை தடைசெய்யும் வகையில் சோசலிஸ்ட் கட்சியின் வேட்பாளரான செகோலென் ரோயால் அல்லது (UDF) பிரான்சுவா பேய்ரூவிற்கு, வாக்களிக்கும்படி வாக்காளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

இக்கொள்கைகளை தாம் முன்னெடுக்கின்றோம் என்ற உணர்வை தவிர்ப்பதற்கு வேட்பாளர்கள் தங்களால் இயன்றதைச் செய்து வருகின்றனர். ஞாயிறன்று ரோயால் அறிவித்தார்: "ஒரு பாதுகாத்துக் கொள்ளும் (Defensive Vote) வாக்களிப்பு நடக்கக்கூடும் என்பது உண்மையே. ஆனால் ஆதரவின் அடிப்படையில் கூடுதலான வாக்குகள் வழங்கப்பட வேண்டும் என்பதைத்தான் நான் விரும்புகிறேன்." ஆனால் தன்னுடைய வலதுசாரி வேலைத் திட்டத்தின் மூலம் அதிக வாக்குகளை திரட்டுவதற்கு ரோயாலால் முடியவில்லை என்பதும் அதிகரித்த வகையில் தந்திரோபாய வாக்குகளை பெறுவதற்கு முயல்கிறார் என்பதும் வெளிப்படையாகிறது.

பயன்பாடு உடைய வாக்கு பற்றிய விவாதம், கடந்த வாரம் Le Monde ல் முன்னாள் சோசலிஸ்ட் கட்சி அரசாங்கத்தின் பிரதமராக இருந்த மிசேல் ரொக்காவின் கட்டுரை மூலம் தூண்டிவிடப்பட்டது. ரோயாலும் UDF வேட்பாளர் பேய்ரூவும் முதல் சுற்று வாக்களிப்பிற்கு முன்னதாகவே ஓர் உடன்பாட்டை காணவேண்டும் என்று ரொக்கா ஆலோசனை தெரிவித்துள்ளார்.

"தனிமைப்படுத்தப்பட்டுவிட்டால், UDF அல்லது எம்மாலும்கூட நிக்கோலா சார்க்கோசி மற்றும் ஜீன் மரி லூ பென் கூட்டணியை தோற்கடிக்க முடியாது" என்று அவர் வாதிட்டுள்ளார். மேலும் "இன்றையை பிரெஞ்சு சூழ்நிலையில் முக்கிய பிரச்சனைகள் தொடர்பாக சோசலிஸ்ட்டுக்கள் மற்றும் மத்தியவாதிகளை பிரித்துக் காட்டுவதற்கு உள்ளடக்கம் ஏதும் இல்லை. நாம் ஒரே மதிப்புக்களைத்தான் பங்கிட்டுக்கொள்கின்றோம்." என்றும் அவர் கூறினார்.

முதல் பார்வையில், ரொக்கா கூறும் கூட்டணியில் பொருள் ஏதும் இல்லை என்று தோன்றும். பன்னிரெண்டு வேட்பாளர்களில் ஒருவருக்குத்தான் ஒவ்வொரு வாக்காளரும் வாக்களிக்க முடியும்; ரோயாலா அல்லது பேய்ரூவா, என்று இருவரும் உடன்பாடு கொண்டால்கூட அதே நிலைதான்; ரொக்கா இரு வேட்பாளர்களில் ஒருவர் மற்றவருக்கு விட்டுக் கொடுக்க வேண்டும் என்றும் கூறவில்லை.

இரு வேட்பாளர்களுக்கும் இடையே இரண்டாம் சுற்றிற்கு எவர் வந்தாலும் அவருக்கு மற்றவர் ஆதரவு கொடுக்கவேண்டும் என்று ஒரு வகை ஆக்கிரமிப்பற்ற ஒப்பந்தத்தைத்தான் ரொக்கா மனத்தில் கொண்டிருக்க வேண்டும். "முதல் சுற்றுப் பிரச்சாரத்தில் தவிர்க்க முடியாமல் ஆக்கிரோஷமும் தாக்கங்களும் இருக்கும்; அவை இரண்டாம் சுற்றில் உடன்பாடு காண்பதைக் கூட ஆபத்தாக்கிவிடும்" என்று அத்தகைய உடன்பாடு வருவதற்கு நியாயப்படுத்தும் வகையில் பேசியுள்ளார்.

ரொக்கா வெளிப்படையாகக் கூறாவிட்டாலும், அவருடைய முன்மொழிவின் பொருள் ரோயலின் தேர்தல் வெற்றி பற்றி அவருக்கு நம்பிக்கை இல்லை என்பதைத்தான் தெளிவாக்கியுள்ளது. உடன்படிக்கைக்கான திட்டம் என்பது பேய்ரூவிற்கு தேர்தலில் ஆதரவு என்பதாகும்; அவரோ இப்பொழுது கருத்துக் கணிப்புக்களில் ரோயலை விட பின்தங்கியுள்ளார்; ஆனால் இறுதிச் சுற்றில் சார்க்கோசிக்கு எதிராக அவருக்கு வாய்ப்புக்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது; இதற்குக் காரணம் தற்பொழுதைய அரசாங்கத்தின் முகாமின் ஒரு பகுதியாக அவர் இருப்பது ஆகும். 1978ம் ஆண்டு Valery Giscasrd d'Estaing தோற்றுவித்ததில் இருந்தே ஹிஞிதி எப்பொழுதும் வலதுசாரி முதலாளித்துவ முகாமில்தான் உள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளாக அது கோலிச அரசாங்கத்திற்குத்தான் ஆதரவு கொடுத்துள்ளது.

ரொக்காவின் ஆலோசனைக்கு பேய்ரூ "பாராட்டு" தெரிவித்துக் கொண்டு "இக்கருத்தில் ஆர்வம் இருப்பதாகவும்" கூறினார். ஆயினும் கூட இந்த முன்மொழிவை அவர் நிராகரித்தார். சோசலிஸ்ட் கட்சியுடன் ஒருதலைப்பட்சமான கூட்டைக் கொள்ளுவதில் சம்பந்தப்பட்டால் தன்னுடைய பழமைவாத வாக்காளர் தளத்திற்காக அவர் அச்சப்படுகிறார். தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தில் வலதும் இடதும் மையத்தில் சமரசம் செய்து கொள்ள வேண்டும் என்ற பிரச்சினையை முன்வைத்துள்ளார்; தான் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் சோசலிஸ்ட் கட்சி மற்றும் கோலிசவாதிகள் இருவரையும் இணைத்து ஒரு அரசாங்கத்தை அமைப்பதாக அவர் கூறியுள்ளார்.

ரொக்காவின் முன்மொழிவை, மரபார்ந்த தடைகளைக் கடப்பதற்கான தன்னுடைய சொந்த "பார்வையுடனான" அவரின் உடன்பாட்டை உறுதிசெய்வதாக பேய்ரூ மதிப்பிட்டுள்ளார்; மேலும் முக்கிய "சோசலிஸ்ட்டுக்கள்" கட்சிகளில் ஒரு பாரிய கூட்டணி அமைப்பதற்குத் தயாராக இருப்பதையும் இது காட்டுகிறது என்று கருதுகிறார். "சோசலிஸ்ட் கட்சிக்குள்ளும், அமைப்பின் தடைகளை மீறியும், செகோலென் ரோயால், François Hollande (கட்சியின் தலைவர்) இன்னும் பலரும் வெளிப்படையாக வேண்டாம் என்று கூறியும் கூட இத்தகைய கருத்துக்களை கூறும் பொறுப்பானவர்களை ஒருவர் காணமுடியும் ."

ரொக்காவின் திட்டத்தை ரோயால் நிராகரித்து பேய்ரூவுடன் இருவருக்கும் இடையேயான ஒப்பந்தம் பற்றி இரண்டாம் சுற்று வேட்பாளர்கள் உறுதிசெய்ப்பட்ட பின்னர்தான் பேசப்போவதாகவும் கூறிவிட்டார். கட்சித் தொண்டர்களிடையே ரோயாலின் பிரச்சாரத்தில் முதுகில் குத்துவது போல் ரொக்காவின் கருத்து இருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால் விரைவில் ரொக்கா மட்டும் இத்தகைய கருத்தைக் கொண்டிருக்கவில்லை என்பதும் வெளிவந்தது.

ரொக்காவிற்கு பகிரங்க ஆதரவு முதலில் Bernasrd Kouchner இடமிருந்து வந்தது. இவர் உதவி அமைப்பான Médecins sans Frontières என்பதின் நிறுவனர் மற்றும் சோசலிஸ்ட் தலைமையிலான அரசாங்கங்களில் இரு முறை மந்திரி பதவி வகித்தவர் ஆவார். முன்னாள் நிதி மந்திரி டொமினிக் ஸ்ட்ரவுஸ்கானின் கீழ் இருக்கும் பிரிவும் ரொக்காவின் கருத்திற்கு ஆதரவு கொடுப்பதாக கூறப்படுகிறது; ஆனால் இது இன்னும் வெளிப்படையாகக் கூறப்படவில்லை.

Spanish Socialist Party கட்சியின் தலைவரும், பிரதம மந்திரியுமான José Zapatero ரொக்காவின், குஷ்னரை விட அப்பட்டமான முறையில் ரோயாலின் தேர்தல் பிரச்சாரத்தில் குறுக்கிட்டுள்ளார். செகோலென் ரோயாலுக்கு "பெரும் ஆதரவுணர்வை" தான் உணர்ந்ததாகவும் ஏப்ரல் 19 அன்று துலூஸில் நடக்க இருக்கும் அவருடைய தேர்தல் பிரச்சாரத்தில் பேசுவதாகவும் அவர் அறிவித்தார்; அதன்பின் அவருடைய முக்கிய போட்டியாளர் நிக்கோலா சார்க்கோசியின் மீது புகழாரம் சூட்டினர்.

கோலிச வேட்பாளருக்கு தன்னுடைய "மரியாதை" மற்றும் "பெரும் பாராட்டுதல்" ஆகியவற்றை ஸபடேரோ வெளியிட்டார். "நன்கு அறியப்பட்ட அரசியல் திறனுடையவர்; உறுதியான நம்பிக்கைகளும், தன்னம்பிக்கையும், உரமும் உடையவர்" என்றார். மேலும், "உள்துறை மந்திரியாக அவர் இருந்தபோது நான் அவருடன் முக்கியத் தொடர்புகளைக் கொண்டிருந்தேன்; இப்பொழுது வேட்பாளராக இருக்கும்போதும் அப்படித்தான். நிக்கோலா சார்க்கோசி ஸ்பெயினிடம் வெளிப்படையான, நேரிய நோக்கை எப்பழுதும் கொண்டிருந்தார்; இரு நாடுகளுக்கும் இடையே உள்ள உறவை வலுப்படுத்த உதவினார்." அவர்களுடைய ஒத்துழைப்பு குறிப்பிடத்தக்க வகையில் பாஸ்க் பிரிவினை இயக்கம், ETA இவற்றிற்கு எதிரான "பயங்கரவாதத்திற்கு எதிரான போரில்" இருந்தது என்றும் ஸபடேரோ குறிப்பிட்டார்.

ரோயாலின் வலதுசாரிக் கொள்கை மற்றும் பேய்ரூவுடன் உடன்படிக்கை என்று அவர்களுடைய முகாமில் இருந்தே வரும் முன்மொழிவுகள் சார்க்கோசி மற்றும் லூ பென்னின் நிலைமையைத்தான் வலுப்படுத்த உதவும். சோசலிஸ்ட் கட்சி இன்னும் கூடுதலான வகையில் தன்னுடைய மரபார்ந்த ஆதரவு பிரிவுகளில் இருந்து வலதிற்கு சாய்வது என்பது சார்க்கோசிக்கும் மற்றும் லூ பென்னுக்கு சமூகத்தின் மிக பிற்போக்கான தட்டுக்களின் ஆதரவைத் திரட்ட அனுமதிக்கும்.

இதுவரை சார்க்கோசியும் லூ பென்னும் தேர்தலில் விவாதத் தலைப்புக்கள் பற்றி முடிவெடுத்துள்ளனர். அதிவலதுசாரியால் விரும்பப்படும் அதிகாரம், சட்டம் மற்றும் ஒழுங்கு, பாதுகாப்பு, தேசிய அடையாளம், நாட்டுப் பற்று, புலம்பெயர்தல் இன்னும் அனைத்துத் தலைப்புக்களும், , பிரச்சாரங்களில் மேலாதிக்கம் செலுத்தியுள்ளன. மில்லியன் கணக்கான வாக்காளர்களில் வாழ்க்கையைப் பாதிக்கக்கூடிய பிரச்சினைகளான வேலையின்மை, வறுமை, நாட்டின் உள்கட்டுமானத் தகர்ப்பு, சமூகத் தகர்ப்பு, இராணுவவாதம், பிரான்ஸ் மேற்கொண்டுள்ள சர்வதேச இராணுவ நடவடிக்கைகள் ஆகியவை விவாதங்களில் இருந்து ஒதுக்கப்பட்டு விட்டன.

கடந்த சில நாட்களாக சார்க்கோசி, லூபென் இருவருமே இன்னும் கூடுதலான வலதுசாரி தொனியைத்தான் ஏற்றுள்ளனர். தெற்கு பிரான்சில் தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்ற போது, பொதுவாக தேசிய முன்னணிக்கான ஆதரவு வலுவாக உள்ள இடத்தில், சார்க்கோசி தேசிய முன்னணி(NF) உடைய கோஷங்களை எடுத்துக் கொண்டு லூபென்னுடைய வாக்காளர்களுக்கு நேரடியாக அழைப்பு விடுத்தார். "அமைதியான பெரும்பான்மையின்" வடிவங்களை எடுத்துக்காட்டி, அதை (தான் சார்ந்திருக்கும்) அரசியல் உயரடுக்குடனும், "பிரெஞ்சுப் பாசாங்குத்தனத்துடனும்", மற்றும் "பிரான்சின் ஒற்றைச் சிந்தனையுடனும்" வேறுபடுத்திக் காட்டினார்.இச்சிறிய உயரடுக்கு எது நல்லது, எது தீமை என்பதை நிர்ணயிக்கும் உரிமையைத் தனக்கு எடுத்துக் கொள்ளுகிறது என்றும் கூறினார்.

ஒரு செய்தியாளர் மாநாட்டில் சார்க்கோசி, "அமைதியான பெரும்பான்மை" என்பது "பிரான்சின் அடையாளம் பற்றி பேச வேண்டும் என்று நினைப்பவர்கள், கொள்வனவு செய்யும் சக்தி தொடர்பாக பிரச்சினை இருக்கிறது என நம்புபவர்கள், ஒரு புதிய குழு வேண்டும் என்று கருதுபவர்கள், ஐரோப்பிய வாக்கெடுப்பில் வேண்டாம் என்று வாக்களித்தவர்கள், மற்றும் 2002ல் லூபென்னுக்கு எதிராக வாக்களித்தவர்கள் ஆகியோர் உள்ளனர். ஞாயிறன்று தங்கள் கருத்தை அவர்கள் வெளியிடுவார்கள் என நம்புகிறேன்" என்றார்.

தன்னுடைய பங்கிற்கு லூபென் சார்க்கோசியை தாக்கும் வகையில் தன்னுடைய பிரச்சாரக் கூட்டங்களில் சார்க்கோசியின் ஹங்கேரிய பூர்வீக தொடர்புகளைப் பற்றிக் குறிப்பிட்டு அவர் "அரசியலில் இழிவான கூட்டத்தில் ஒரு உறுப்பினர்" என்றும் இழிவுபடுத்தினார்.

இச்சக்திகள் தங்களுடைய தீவிர வலது கைமருந்துகளை சுதந்திரமாக வெளியிட முடிவதின் காரணம் அவர்களுக்கு பெரும் எதிர்ப்பு ஏதும் இல்லை. அவர்கள் சோசலிஸ்ட் கட்சி தொடர்ந்து வலதிற்கு செல்வதால் ஏற்படும் வெற்றிடத்தைப் பயன்படுத்துகின்றனர். இந்த அரசியல் வளைவரைகோடு எவ்வகையிலும் சமூகத்தின் பரந்த அடுக்குகளின் மனோநிலையைத் தொடர்புபடுத்தவில்லை; அவையோ இடதுபுறம்தான் செல்லுகின்றன.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved