ஐரோப்பா
:
பிரான்ஸ்
French police arrest dozens of Sri Lankan Tamils
Raids target LTTE
பிரெஞ்சு போலீஸ் டசின் கணக்கான இலங்கைத் தமிழர்களை கைது செய்தது
விடுதலைப் புலிகளை குறிவைத்து திடீர்ச்சோதனைகள்
By Francis Dubois and Antoine Lerougetel
13 April 2007
Back to screen version
ஏப்ரல் 1ம் தேதி பாரிஸ் பகுதியில் தொடங்கிய தொடரான திடீர் சோதனையில்
பிரெஞ்சுப் போலீசார் விடுதலைப்புலிகளின் (LTTE)
ஆதரவாளர்கள் என சந்தேகிக்கப்படும் பல டசின் ஆதவாளர்களை கைது செய்துள்ளதுடன் ஒவ்வொருவரதும் கணினிகள், கடிதப்பரிமாற்ற
கோப்புக்கள், ஆவணங்கள், நிறைய பணம் ஆகியவையும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் இரண்டு தசாப்தத்திற்கும் மேலாக தனித் தமிழ் அரசுக்காக
ஒரு ஆயுதமேந்திய நடவடிக்கையை நடத்தி வருகின்ற LTTE
ஆல் கட்டுப்படுத்தப்படும் நிறுவனங்களை போலீஸ் இலக்கு வைத்தது. இவற்றுள் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு
(TCC) போன்ற அமைப்புக்கள், மற்றும் பல கடைகள், வாகனங்கள்,
மற்றும் LTTE
செயற்பாட்டாளர்கள் என சந்தேகிக்கப்படுபவர்களுடைய இல்லங்கள் ஆகியன அடங்கும்.
TCC தான் பிரான்சில்
LTTE யின் வெளிப்படையான
முன்னிலை அமைப்பு என்பது ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மையாகும்.
கைது செய்யப்பட்டவர்களில் கணிசமானவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு சில மணி நேரங்களில்
காவலுக்கு பின்னர் விடுவிக்கப்பட்டனர்; சிலர் இன்னமும் காவலில் உள்ளனர். ஏப்ரல் 5ம் தேதி நீதிமன்றத்தில் 19 பேர்
ஆஜராயினர் அவர்களில் 14 பேர் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என பத்திரிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன. இவர்களுள்
LTTE யின்
முக்கிய உறுப்பினர்களும் உள்ளனர்; LTTE
யின் பிரெஞ்சு கிளையின் தலைவரான பரிதி எனப்படும் நடராஜா மதீந்திரன், ஐரோப்பிய அரசியல்பிரிவுத் தலைவரான
துரைசாமி அரவிந்தன் என்னும் மேத்தா, LTTE
இன் நிதிச் செயலாளர் துரைசாமி ஜெயமூர்த்தி என்னும் சின்ன ஜெயன் ஆகியோரும் உள்ளனர்.
ஏப்ரல் 1 அதிகாலையில் தொடங்கிய இந்த அதிரடி நடவடிக்கையில் 39 பேர்
கைதுசெய்யப்பட்டனர். பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இவை வடிவமைக்கப்பட்டிருந்த இந்த சோதனைகள்
தொடர்ந்து ஏப்ரல் 2, 3 மற்றும் 4ம் தேதிகளில் பட்டப்பகலில் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
Gare du Nord, La Chapelle
பகுதிகள் என பாரிசில் குறிப்பிட்ட இடங்கள் சுற்றிவளைக்கப்பட்டன; இவ்விடங்களில் தமிழ் வர்த்தக ஸ்தாபனங்கள்
சோதனைக்கு உட்படுத்தப்பட்டன; அங்கு தமிழ் முதலாளிகள், தொழிலாளிகள் மற்றும் வாடிக்கையாளர்களும் விசாரணைக்கு
உட்படுத்தப்பட்டனர். LTTE
உடன் தொடர்புடைய ஏடுகள், இதழ்கள், குறுந்தகடுகள், வீடியோக்கள் மற்றும் புத்தகங்கள் ஆகியவை
கைப்பற்றப்பட்டன. இந்த நடவடிக்கைகளின்போது, பிரான்சில் உள்ள
LTTE இணையத்தின் நிதி
திரட்டும் உறுப்பினர்களும் விசாரிக்கப்பட்டு, நிழற்படம் எடுக்கப்பட்டு, வீடியோ படமும் எடுக்கப்பட்டது.
பயங்கரவாத எதிர்ப்பு நீதிபதியான புருகியேர் (Bruguière)
கேட்டுக்கொண்டதின் அடிப்படையில்,
"பயங்கரவாத எதிர்ப்பு பிரிவினால்"
(Anti Terorist Directorate -SDAT)
இந்தச் சோதனைகள் நடத்தப்பட்டன. இவர் பிரான்சில் முக்கிய பயங்கரவாத எதிர்ப்பு நீதிபதியாவர்.
"பயங்கரவாதம்" தொடர்புடைய வழக்குகளை நடத்துவதற்கான விசாரணைகளை மேற்கொள்ளுவதற்கு முன்னொருபோதும்
இல்லாத வகையில் அதிகாரமும் சுதந்திரமும் இவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இவர் அடுத்தடுத்து வரும் அரசாங்கங்களுடன்
நெருக்கமாக ஒத்துழைத்து செயல்படுகிறார். அவரும் அவருடைய குழுவும் சர்வதேச அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த
வழக்குகளை விசாரணைக்கு எடுத்து வருகின்றனர்.
சில ஆண்டுகளாக நீதிபதி புருகியேர் இன் மேற்பார்வையில்
LTTE நெருக்கமாக
கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளது. பெப்ருவரி 2006ல் பிரெஞ்சு அரசாங்கம் ஒரு பூர்வாங்க விசாரணையை
மேற்கொண்டது. ஐரோப்பிய ஒன்றியத்தால் கடந்த ஆண்டு உத்தியோகபூர்வ முறையில் தடைசெய்யப்பட்ட பின்னர், இந்த
அமைப்பு சட்டவிரோதமாக்கப்பட்டு மே 26ல் இருந்து விசாரணை மேற்கொள்ளப்படுகின்றது.
2003 ல் இலங்கையிலுள்ள மூத்த
நீதித்துறை அதிகாரிகளுடன் புருகியேர் பேச்சு வார்த்தைகள் நடத்தினார். கொழும்பில், சர்வதேச உறவுகளுக்கான
இலங்கை நிறுவனம் ஒழுங்கு செய்திருந்த கூட்டத்தில், இராணுவ அதிகாரிகள், உள்ளூர் அரசியல் நிபுணர்கள் மத்தியில்
இவர் LTTE
பற்றி உரை ஒன்றை ஆற்றினார்.
பிரெஞ்சு செய்தி ஊடகத்தில் மிகக் குறைந்த அளவே தகவல் கொடுக்கப்பட்டுள்ள
அறிக்கைகளில் இருந்து இச்சோதனைகளுக்கான உத்தியோகபூர்வ நியாயப்படுத்தல்,
LTTE குண்டர்முறை,
அச்சுறுத்திப் பணம் பறித்தல் ஆகியவற்றைப் பயன்படுத்தி பிரான்சில் உள்ள தமிழ் சமூகத்திடமிருந்து நிதி திரட்டி வருகிறது
என்பதாகும்; அதாவது பிரான்சில் வசிப்பவர்களிடம் இருந்து உத்தியோகபூர்வமாக, கட்டாயப் பண வசூல், சரீர
ரீதியான வன்முறை, சட்ட விரோதமாக காவலில் வைத்தல் ஆகியவற்றில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.
ஏப்ரல் 5ம் தேதி பிரான்சின் பயங்கரவாத எதிர்ப்பு நீதிபதிகள் கைது செய்யப்பட்டவர்கள்
சிலருக்கு எதிராக அச்சுறுத்திப் பணம் பெறுதல், பயங்கரவாதத்திற்கு நிதி கொடுத்தல், ''பயங்கரவாத அமைப்புடன்
குற்றம் சார்ந்த தொடர்பு உடையவர்கள்'' என்ற தொடக்க குற்றச்சாட்டுக்களை பதிவு செய்தனர்; இத்தகைய குற்றச்
சாட்டை ஒட்டி ஒரு நீதிபதி பயங்கரவாதச் செயல் செய்யப்படாமலேயே சந்தேகத்திற்கு உரியவர்களை பயங்கரவாத
குற்றச்சாட்டுக்களுக்கு உட்படுத்தி கைதுசெய்து, தண்டனை விதிக்க முடியும். இவற்றை ஒட்டி அதிகபட்சமாக 10 ஆண்டுகள்
சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
பாராளுமன்றத்தில் 2005ல் இயற்றப்பட்ட சமீபத்திய பிரெஞ்சு பயங்கரவாத
எதிர்ப்புச்சட்டம், "பயங்கரவாதத்துடன்" சிறிய அளவில் தொடர்பு உடையவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் எவரையும்,
தன்னிச்சையாக கைதுசெய்து மற்றும் தடுப்புக்காவலில் (முதலில் 120 நாட்களுக்கு, பின்னர் காலவரையின்றி தேவைக்கு
ஏற்ப அதிகப்படுத்தப்படலாம்) வைக்க அனுமதிக்கிறது.
பிரான்சில் "பயங்கரவாதச் செயல்கள்" எதையும் தயாரிப்பு செய்ததாகவோ, அதற்கான
தயாரிப்புக்களில் ஈடுபட்டதாகவோ LTTE
மீது இதுவரை குற்றம் சாட்டப்பட்டிருக்கவில்லை. அதேபோல் ஒரு பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதாக போலீசாரால்
எவ்விதக் குறிப்பும் கூறப்படவில்லை.
செய்தி ஊடகத் தகவல்களின்படி,
SDAT, ஏனைய பயங்கரவாத எதிர்ப்பு அமைப்புக்களுடன் இணைந்து
செயல்பட்டுவருகிறது; அமெரிக்கா, பிரிட்டன், நெதர்லாந்து, ஜேர்மனி, இத்தாலி, கனடா, ஆஸ்திரேலியா ஆகியவற்றின்
அமைப்புக்கள் அவற்றில் அடங்கும். செய்தி ஊடகத் தகவல்கள்
FBI மற்றும் ஸ்கொட்லான்ட் யார்ட் ஆகியவை
SDAT க்கு சிறப்புப்
பயிற்சி அளிப்பதாகவும் கூறுகின்றன. இருந்தபோதிலும்கூட, இத்தகைய வெளிப்படையான முறையில்
LTTE க்கு எதிராக
பிரெஞ்சு அதிகாரிகள் நடந்துகொள்ளுவது இதுவே முதல் தடவையாகும். பிரிட்டிஷ் அரசாங்கத்தால் பெப்ரவரி 2001ல்
LTTE தடை
செய்யப்பட்ட பின்னர் அதன் நடவடிக்கைகள் ஓரளவிற்கு பிரான்சிற்கு மாற்றப்பட்டன; இதுதான் ஐரோப்பாவில்
அவர்களுடைய நடவடிக்கைகளுக்கு மையமாக இருந்து வருகிறது.
இச்சமீபத்திய அதிரடி நடவடிக்கை சர்வதேச அளவில்
LTTE செயற்பாடுகள்
செயலற்று போகவைப்பதை, சிறப்பாக ஐரோப்பாவில், நோக்கமாக கொண்ட ஒரு சர்வதேச நடவடிக்கையின் ஒரு
பகுதி போலத் தோன்றுகிறது. மார்ச் 25ம் தேதி LTTE
கொழும்பில் விமானத் தாக்குதலை நடத்திய பின்னர், இலங்கை அரசாங்கம்
LTTE இன் நிதியங்களை
முடக்கி ஆயுதங்களை அது வாங்காமல் தடைசெய்யும் வகையில் தன்னுடைய முயற்சிகளை தீவிரப்படுத்தி வருகிறது.
நவம்பர் 2005ல் ஜனாதிபதி மகிந்தா ராஜபக்ச ஆட்சி அதிகாரத்தை எடுத்த பின்னர்,
இலங்கை அரசாங்கம் 2002 போர்நிறுத்த ஒப்பந்தம் பொறிவதற்கு காரணமாக இருந்து வருகிறது. இதையொட்டி
தமிழர்கள் மிருகத்தனமாக ஒடுக்கப்படுவது அதிமாகியுள்ளது.
LTTE ஐ ஒரு பயங்கரவாத அமைப்பு என ஒதுக்கிவைக்கும் சர்வதேச
பிரச்சாரத்தையும் ராஜபக்ச தொடக்கியுள்ளார். ஏப்ரல் 2006ல் கனேடிய அரசாங்கம்
LTTE க்குத் தடை
விதித்து, ஒரு மாதத்தின் பின்னர் ஐரோப்பிய ஒன்றியம் LTTE
ஐ ஒரு பயங்கரவாத அமைப்பு என்று தடைவிதித்தது. இலங்கை அரசாங்கத்தின் சர்வதேசப் பிரச்சாரத்திற்கு பாரிசில்
நடந்துவரும் கடும் நடவடிக்கைகள் உதவியுள்ளன.
சிங்கள சோவினிச கட்சிகளின் கூட்டரசாங்கமாக இலங்கை அரசாங்கம் இருக்கிறது; இதில்
ஜனதா விமுக்த பெரமுன (JVP)
மற்றும் ஜாதிக ஹெல உறுமய (JHU)
ஆகியவையும் அடங்கியுள்ளன. இலங்கையின் வடகிழக்கு பகுதிகள் முழுவதையும் இராணுவ கட்டுப்பாட்டிற்குள்
கொண்டுவருவதற்காக 2006ல் இருந்து இராணுவம் ஒரு மிருகத்தனமான ஆக்கிரமிப்பு தாக்குதலை ஆரம்பித்துள்ளது. நாடு
முழுவதும் இருக்கும் தமிழர்களையும் அது இலக்கு வைத்திருப்பதுடன், தமிழ் மூலத்தை கொண்ட மக்களை கண்மூடித்தனமாக
கொல்லுதல், கைது செய்தல், சித்திரவதைக்கு உட்படுத்துதல் போன்றவற்றை செய்வதுடன், எந்த சான்றுகளும் இல்லாமல்
அவர்கள் புலிகளின் உறுப்பினர்கள் என்றும் குற்றம் சாட்டி வருகிறது.
இந்த சுற்றிவளைப்பு, கைதுகளுக்கு பதிலளிக்கும் வகையில்
LTTE, அதற்கு
தாமாகவே முன்வந்து நிதிவழங்கியவர்களின் கையெழுத்துக்களை கொண்ட மனு ஒன்றை சுற்றுக்கு விட்டுள்ளது. ஏப்ரல் 9
அன்று பிற்பகல் 2 மணிக்கு பாரிசில் உள்ள Trocadéro
வில் இச்சுற்றிவளைப்புகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றையும் நடத்தப்போவதாக அறிவித்திருந்தது. ஐரோப்பாவில்
இருக்கும் LTTE
ஆதரவாளர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அழைப்புவிடுக்கப்பட்டிருந்தனர். பாரிஸ் ஆட்சித்துறைத் தலைவரால்
ஆரம்பத்தில் அனுமதி வழங்கப்பட்டிருந்த இந்த ஆர்ப்பாட்டம் அரசியல் நோக்கத்திற்காக பின்னர் தடை
செய்யப்பட்டுவிட்டது. அணிவகுப்பிற்கு மக்கள் வருவதைத் தடைசெய்யும் வகையில் மெட்ரோ நிலயைத்தையும் போலீசார்
மூடிவிட்டனர்.
தடை இருந்த போதிலும்கூட,
Trocadéro விற்கு எதிரில் உள்ள
Eiffel Tower
பூங்காவிற்கு அருகே 400 முதல் 500 வரை மக்கள் கூடினர். போலீசார் கலைந்து செல்லுமாறு கூறியதை அவர்கள்
புறக்கணித்தனர். போலீசார் கேட்டுக் கொண்டதின்பேரில், La
Courneuve என்னும் பாரிஸ் புறநகர்ப்பகுதி பசுமைக் கட்சியின் மன்ற
உறுப்பினர் Anthony Russel,
இந்த ஆர்ப்பாட்டத்தில் தலையிட்டு குழுமியிருந்தோரை அமைதியாக கலைந்து செல்லுமாறு வேண்டியதுடன், பின்னொரு
தேதியில் ஊர்வலத்தை ஒழுங்கு செய்யலாம் என கேட்டுக்கொண்டதாக அறியப்படுகிறது.
தமிழீழ விடுதலைப் புலிகள், இனவாத, வகுப்புவாதத்தினை அடிப்படையாக கொண்ட ஒரு
பிரிவினைவாத முன்னோக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு அரசியல் அமைப்பு. இந்த வேலைத்திட்டத்தை
WSWS எதிர்ப்பதுடன்
இலங்கையில் சிங்கள, தமிழ் மக்களின் ஐக்கியத்திற்கு போராடுகிறது.
WSWS தேசிய,
பிரிவினைவாத முன்னோக்குடன் உடன்படாவிட்டாலும், தங்கள்மீது நிகழும் தாக்குதல்களுக்கு எதிராக அரசியல்
ஆர்ப்பாட்டம் நடத்தும் அடிப்படை ஜனநாயக உரிமையை பாதுகாப்பதை கொள்கை சார்ந்த விடையமாக கருதுகின்றது.
LTTE இன் வழிமுறைகள் ஐயத்திற்கு இடமின்றி
குண்டர்த்தனமாக உள்ளது; ஆனால் பிரெஞ்சு அதிகாரிகள் அத்தகைய குற்றத்தை சாட்டுவது என்பது அரசியல் ரீதியாக
ஒருபக்க சார்புடையதென்பது தெளிவானதாகும். குறிப்பாக இலங்கை அரசாங்கம் மற்றும் இராணுவம் தங்களுடைய அரசியல்
எதிரிகள் மற்றும் அப்பாவி மக்களைப் படுகொலை செய்தல் என்று திட்டமிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கின்றது. இந்த
அரசாங்கமே தமிழ் பிரிவினைவாதிகளுக்கு எதிராக குருதிகொட்டும் போரில் கிட்டத்தட்ட மூன்று தசாப்தமாக ஈடுபட்டுவருகிறது;
LTTE ஐ விட
மிகப் பெரிய அளவில் அது அரச பயங்கரவாதத்தை நடத்திவருகிறது.
இராணுவமும் அதற்கு ஆதரவான துணை இராணுவ குழுக்களும், இலங்கையின் முழு மக்கள்
பிரிவுகள் மீதும் பயங்கரவாத அச்சுறுத்தல் செய்வதற்கு தற்போது முயன்றுவருகின்றன. மக்கள் என்ன அரசியல்
கருத்துக்களை கொண்டிருக்கிறார்கள் என்பதை கருத்தில் கொள்ளாமல், பொறுப்பற்ற முறையில் தமிழர்களை, இலங்கை
முழுவதும் கடத்திக் கொல்லுவதில் அவை ஈடுபட்டு வருகின்றன.
நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவின் இலங்கைப் பகுதியான சோசலிச சமத்துவக்
கட்சியின் சமீபத்திய அனுபவம், தமிழர்களுக்கு எதிராக இலங்கையில் இராணுவப் போரை எதிர்ப்பவர் எவராயிலும்
அடக்குமுறை மற்றும் கொலைசெய்யப்படுதலுக்கு இலக்காகின்றனர் என்பதாகும். கடந்த ஆண்டு, போருக்கும்
LTTE க்கும் எதிர்ப்பு
தெரிவிப்பவர் என நன்கு அறியப்பட்டவரும் SEP
ஆதரவாளரான மரியதாஸ் அவருடைய வீட்டில் படுகொலை செய்யப்பட்டார். சமீபத்தில் யாழ்ப்பாணத்தில்
SEP உறுப்பினர்களில்
ஒருவரான விமலேஸ்வரன், இராணுவச் சோதனைச் சாவடியை கடந்து சென்ற பின்னர் காணாமற் போயுள்ளளார்.
எமக்கு தெரிந்தவரை பிரான்சிலோ, இலங்கையிலோ,
LTTE இதுவரை
அவர்களுடைய உறுப்பினர்கள் கைது பற்றியோ பிரான்சில் இருக்கும் தமிழர்கள் பற்றியோ உத்தியோகபூர்வ அறிக்கை
எதனையும் வெளியிடவில்லை; அப்படியிருந்தபோதிலும் இச்சோதனைகள் பற்றிய தகவல் இலங்கையிலும் பிரான்சிலும்
மட்டுமில்லாது உலகம் முழுவதும் இருக்கும் தமிழ் சமூகத்தின் மத்தியில் பிரபல்யமாகியுள்ளது.
பாரிஸ் சோதனையின் வழிமுறைகள் மற்றும் நடத்தப்பட்ட சந்தர்ப்பம், இது பல
காரணங்களுக்கு பயன்படும் என்பதைக் குறிக்கிறது. இது கொழும்பு அரசாங்கத்தின் நலன்களை பாதுகாக்கும் வகையில்,
மேற்கொள்ளப்பட்டுவரும் LTTE
மீதான சர்வதேச தாக்குதலின் ஒரு பாகமாகும். இது, கொழும்பில் உள்ள சிங்கள சோவினிச அரசாங்கத்தால் தமிழ்
மக்களுக்கு எதிராக நடத்தப்படும் மிருகத்தனமான போருக்கு ஆதரவைக் கொடுக்கிறது. இப்போருக்கு புஷ் நிர்வாகத்தின்
ஆதரவும் உள்ளது.
இச்சோதனைகளின் நோக்கம், நீதிபதி புருகியேர் மற்றும் முன்னாள் உள்துறை மந்திரி
நிக்கோலா சார்க்கோசி ஆகியோரின் பயங்கரவாத எதிர்ப்பு தகமைகளை உயர்த்தும் வகையில் இருக்கக்கூடும் என்பது
மற்றொரு கருத்தாகும். சார்க்கோசி ஆளும் கோலிச UMP
யின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக தேர்தலில் உள்ளார். இன்னும் சில மாதங்களில் ஓய்வு எடுக்க உள்ள புருகியேர்
இரண்டு வாரங்களுக்கு முன்பு தான் பாராளுமன்ற தேர்தல்களில்,
UMP கட்சியின் சார்பில்
Lot et Garonne
தொகுதியில் நிற்க இருப்பதாக அறிவித்துள்ளார். |