World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்Wide popular interest, deep political tensions dominate French presidential election மிகப் பரந்த மக்கள் ஆர்வம், ஆழ்ந்த அரசியல் பதட்டங்கள் பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தல்களில் மேலாதிக்கம் செலுத்துகின்றன By Peter Schwarz in Paris பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தல்களில் ஆழ்ந்த முரண்பாடு ஆதிக்கம் செலுத்துகிறது. மக்களின் பரந்த பிரிவுகள் சமூகத்திலுள்ள தற்போதையை நிலைமையை நிராகரித்து, ஒரு முற்போக்கான மாற்றீட்டை எதிர்பார்க்கின்றனர். தொடர்ச்சியான வேலைநிறுத்தங்கள், வெகுஜன ஆர்ப்பாட்டங்கள், சில சமயம் பல வாரங்கள் நீடித்த, நூறாயிரக்கணக்கான, ஏன் மில்லியன் கணக்கான மக்கள் பங்கு கொண்டவை கடந்த பத்து ஆண்டுகளில் வெளிப்பட்டுள்ளன. ஆயினும் கூட உத்தியோகபூர்வ அரசியலில் இந்த மக்களுடைய எதிர்ப்பு உணர்வு பிரதிபலிப்பது இல்லை. எந்த விதிவிலக்கும் இல்லாமல், பிரான்சின் அரசியல் கட்சிகள் ஒரே நோக்கத்துடன் வலதுபுறம் நகர்ந்து கொண்டிருக்கின்றன. இந்த முரண்பாடு தேர்தல் பிரச்சாரத்திற்கு ஓர் உயர் பதட்டம், அரசியல்மயமாக்கப்பட்ட தன்மை மற்றும் கணிக்க முடியாத நிலை ஆகியவற்றைக் கொடுத்துள்ளது. பல வாரங்களாக ஜனாதிபதி தேர்தல் செய்தி ஊடகத்தில் மேலாதிக்கம் செய்திருந்த போதிலும், ஏப்ரல் 22 முதல் சுற்று, மே 6 இரண்டாம் சுற்று, ஜூன் நடுவில் பாராளுமன்ற தேர்தல்களை வரை தொடர்ந்து இருக்கும் என்றாலும், அரசியல் ஆர்வம் அதிகமாகத்தான் இருக்கும். வேட்பாளர்கள் அரங்கு நிறைந்த கூட்டங்களில் பேசுகின்றனர்; தொலைக்காட்சியில் கணக்கிலடங்கா விவாதங்களை கூடுதலான மக்கள் பார்ப்பதாகத்தான் தெரியவந்துள்ளது. இப்படி வெடிக்கும் தன்மையுடைய அரசியல் நிலைமை கருத்துக் கணிப்புக்களில் பிரதிபலிக்கிறது; அவை மாறுபாட்ட முனைகளில் மாறி மாறிச் செல்லுகின்றன. பல வாக்காளர்கள் இன்னும் வேட்பாளர் பற்றி முடிவு எடுக்கவில்லை. குறுகிய காலத்திலேயே தங்கள் கருத்துக்களை மாற்றும் போக்கை கொண்டுள்ளனர்; இதற்குக் காரணம் எந்த வேட்பாளரும் தங்களுடைய நலன்களை உண்மையில் பிரதிபலிக்கவில்லை என்ற உணர்வை அவர்கள் கொண்டுள்ளனர் போலும். இத்தகைய மிக உயர்ந்த அரசியல் ஆர்வம் புது வாக்காளர் பதிவில் அதிக மட்டம் என்றுள்ள வகையில் வெளிப்பாட்டை கண்டுள்ளது. கடந்த ஆண்டில் 1.8 மில்லியன் மக்கள் வாக்காளராக பதிவு செய்துள்ளனர் --இது இருபத்தி ஐந்து ஆண்டுகளில் மிக அதிக எண்ணிக்கை ஆகும். குறிப்பாக இளவயதினர் அதிக அளவில் நகரங்களில் பதிவு செய்துள்ளனர்; அதே போல் 18 மாதங்களுக்கு முன்பு இளைஞர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கடுமையான கைகலப்பு ஏற்பட்ட தொழிலாள வர்க்கம் மற்றும் புலம்பெயர்ந்தோர் நிறைந்த புறநகர்களிலும் அதிக அளவில் வாக்காளர்கள் எண்ணிக்கை பதிவு ஆகியுள்ளது. Le Monde பாரிஸ் புறநகரத்தில் வாழும் 15 இளைஞர்கள் கருத்துக்கள் பற்றி ஒரு கருத்துக் கணிப்பு நடத்தியுள்ளது. குழுவின் ஆரம்ப எச்சரிக்கைத் தன்மையான போக்கு இப்பொழுது கோலிச UMP வேட்பாளர் நிக்கோலா சார்க்கோசிக்கு வெற்றி கிடைத்தால் என்ன ஆகுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக இப்பொழுது பத்திரிகை தெரிவிக்கிறது."சார்க்கோசிக்கு தேர்தலில் வெற்றி என்றால் நாங்கள் எந்த நம்பிக்கையும் இல்லாத ஐந்து ஆண்டுகளைத்தான் எதிர்கொள்ள முடியும்" என்று ஒரு 20 வயது மாணவர் கூறியதை செய்தித்தாள் மேற்கோளிட்டுள்ளது. ஒரு 22 வயதான சிறு வணிகர் கூறினார்: "உள்துறை மந்திரியாக சார்க்கோசி போலீசுக்கு கட்டுபாடற்ற அதிகாரத்தைக் கொடுத்தார். அவர் ஜனாதிபதியானால், அவரைத் தடுத்து நிறுத்த முடியாது." இந்த இளஞைர்களையும், சமூகத்தில் நலிவுற்ற அடுக்குளையும் இந்தத்தேர்தலில் பங்கு பெறுவதற்கான உந்துதல், அவர்களின் நிலையில் முனேற்றுவதற்கான உறுதியற்ற நம்பிக்கைகள், தோல்வியில்தான் முடிவடையும். பிரான்சின் மிக உயர்ந்த பொது அதிகாரத்திற்காக உள்ள வேட்பாளர்கள் எவராலும் இவர்களுடைய நம்பிக்கைகளும் ஆவல்களும் நிறைவேற்றப்பட முடியாது. கடந்த சில வாரங்களாக, சோசலிஸ்ட் கட்சியின் வேட்பாளரான செகோலென் ரோயால் தன்னுடைய எல்லையற்ற சந்தர்ப்பவாதத்தைத்தான் நிரூபித்துள்ளார். கருத்துக் கணிப்புக்களிடையே அவர் ஒவ்வொரு வாரமும் தன்னுடைய பிரச்சார அறிக்கைகளை மாற்றிக் கொண்டு வருகிறார். சட்டம் ஒழுங்கு பிரச்சினையில், ஒரு வேட்டை நாயின் ஆக்கிரோஷத் தன்மையை, பிடிவாதம் ஆகியவற்றை மேலாதிக்கம் செய்ய சார்க்கோசி முயற்சி செய்து வருகையில், இவ்வம்மையாரும் அவருக்குப் பின்தான் பணிந்து செல்லுகிறார். டோனி பிளேயரின் ஒருவித "நவீனப்படுத்தல்" வேலைத்திட்ட பதாகையின் கீழ் இவ்வம்மையார் தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்தார். இது எந்த அளவிற்கு செல்வாக்கில்லாமல் உள்ளது என்பதை கண்ணுற்றவுடன், ஒரு சில சமூகக் கோரிக்கைகளை சேர்த்த வகையில் -- குறைந்த ஊதியம் உயர்த்தப்படுதல், அனைத்து இளைஞர்களுக்கும் வேலை பாதுகாப்பு, எப்படி இத்திட்டங்களுக்கான பணம் ஒதுக்கப்படும் என்பதை விளக்காமல் -- பிரச்சாரத்தை கையாண்டார். தன்னுடைய பிரச்சாரக் குழுவில் நன்கு அறியப்பட்டிருந்த மூத்த சோசலிஸ்ட் கட்சித் தலைவர்கள், "யானைகள்" என்று அழைக்கப்படுபவர்களையும் கொண்டு வந்து தன்னை ஒரு சமூக சீர்திருத்தவாதி என்ற தோற்றத்தை காட்டிக் கொள்ள முற்பட்டார். அதற்கு ஒரு வாரத்திற்கு பின் அவர்களை அகற்றிவிட்டு, தானே தன்னுடைய பிரச்சாரத்தை நடத்த இருப்பதாக அறிவித்தார். கடந்த வாரம் அவர் சார்க்கோசியுடன் ஒரு விபரீதமான போட்டியில் ஈடுபட்டார்; இவர்களில் எவர் மிகுந்த தேசிய ஆர்வமுடையவர் என்பதை நிரூபிக்க அது முடியும் என்று கருதினார். UMP வேட்பாளர் "தேசிய அடையாளம் மற்றும் குடிவரவு- அகல்வுக்கான அமைச்சரகம்" ஒன்றை தோற்றுவிப்பதற்கு அழைப்பு விடுத்தவுடன், தன்னுடைய நாட்டுப் பற்றை வலியுறுத்தும் வகையில் ஒவ்வொரு பிரெஞ்சுக்காரரும் நாட்டின் மூவர்ண கொடியை இல்லத்தில் கொள்ள வேண்டும் என்று பரிந்துரைத்தார். தன்னுடைய தேர்தல் பிரச்சாரங்கள் அனைத்திலும் தேசிய கீதத்தை முழங்கச்செய்தார். இத்தகைய தீவிர நாட்டுப் பற்று ஒரு வாரம் முழுவதும் தலைப்புக்களில் இடம் பெற்றது. இப்பொழுது ரோயால் சிறிய, நடுத்தர நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கு முதலாளித்துவ சந்தைப் பொருளாதாரத்தில் உறுதியான இடத்தை கொடுக்கும் வகையில் பேசியுள்ளார். வியாழனன்று Challenges ஏட்டிற்கு கொடுத்த பேட்டி ஒன்றில் அவர் "இலாபத்திற்கு தண்டனை கொடுக்க வேண்டும் எனக் கருதும் சிந்தனைப் போக்கிற்கு" தன்னுடைய எதிர்ப்பை தெரிவித்து, "தொழிலதிபர்கள் தங்கள் வெற்றியில் களிப்படைய வேண்டும்" என்ற விருப்பத்தை தெரிவித்தார். அவர் தொடர்ந்தார்: "தொழில்முயல்வோர் உணர்விற்கு பிரான்ஸ் தன்னை இணக்குவித்துக் கொள்ளவேண்டும் என்று நான் விரும்புகிறேன், அப்பொழுதுதான் அது மீண்டும் துணிந்து செயலாற்றும் முயற்சிகளை மேற்கொள்ள தயாரிப்புச்செய்ய உதவும். பணத்தை சம்பாதிப்பது ஒன்றும் அகெளரவமான செயல் அல்ல. ஆம், வணிகர்களிடம் நான் கூறத் தயாராக உள்ளேன்; இலாபம் சம்பாதிப்பது, உங்களுடைய வருமானத்தை பெருக்கிக் கொள்ளுவது அகெளரவம் அல்ல." வரவிருக்கும் நாட்களிலும் ரோயாலிடம் இருந்து இத்தகைய திரித்தல்கள், திருப்பங்களை நாம் எதிர்பார்க்கலாம். எந்தக் கொள்கையும் அற்ற வேட்பாளர் என்று தன்னை ஏற்கனவே இவர் நிறுவிக் கொண்டுள்ளார்; செய்தி ஊடகமும், ஆளும் வட்டங்களும் அவருடைய செவிகளில் எதைக் கூறுகின்றனவோ, அவற்றை கிளிப்பிள்ளை போல் பழையபடி அவர் கூறுகிறார். வலதுசாரி தாராளவாத Union for French Democracy (UDF) வேட்பாளரான பிரான்சுவா பேய்ரூ தற்காலிகமாக ரோயாலின் கூடுதலான வலதுசாரிப் போக்கினால் இலாபம் அடையமுடிந்தது. கருத்துக் கணிப்புக்களில் ஒரு நேரம் அவர் சோசலிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு இணையாக இருந்தார்; ஆனால் பின் அதுமுதற்கொண்டு அவருக்குப் பின்னடைவு ஏற்பட்டுவிட்டது. "கட்சி பன்றித் தொழுவத்தை" நிராகரிக்கும் "ஐக்கியம்", "மையவாதம்", ஆகியவற்றின் வேட்பாளராக தன்னை காட்டிக் கொள்ளும் பேய்ரூ, ஒரு பொது அரசாங்கத்தில் பெரிய கட்சிகளையும் இணைக்க முயலுகிறார். இவர் தேர்தலில் இரண்டாம் சுற்றிற்கு வரக்கூடுமேயானால், ஜனாதிபதி பதவியைக்கூட வெற்றிபெற்று அடையும் வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. 79வயதான வலதுசாரி தேசிய முன்னணியின் தலைவர் ஜோன் மரி லூ பென், ரோயால் மற்றும் சார்க்கோசியின் வலதுசாரி போக்கை தன்னுடைய நலன்களுக்காக பயன்படுத்திக் கொள்ள முடிந்துள்ளது. பாரிசின் Gare du Nord இரயில் நிலையத்தில் கடந்த செவ்வாயன்று மிருகத்தனமான போலீஸ் தாக்குதலை அடுத்து --இதற்கு சார்க்கோசியின் முழு ஆதரவு இருந்தது-- லூ பென்னுக்கான ஆதரவு முதல் தடவையாக 15 சதவிகிதமாக உயர்ந்தது. இவர் இப்பொழுது பேய்ரூவிற்கு அடுத்து நான்காம் இடத்தில் உள்ளார். 2002ல் 17 சதவிகித வாக்குகளை கொண்டு லூ பென் அப்பொழுது கோலிச ஜனாதிபதியாக இருந்த ஜாக் சிராக்கிற்கு இரண்டாம் சுற்றில் சவால் விடுத்திருந்தார். "இடதின்" பங்கு "இடது" என அழைக்கப்படும் கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் முக்கிய பங்கைக் கொண்டுள்ளன. ஜனாதிபதித் தேர்தலில் நிற்பதற்கு சான்று அறிவிக்கப்பட்டுள்ள 12 வேட்பாளர்களில் 6 பேர் தங்களை சோசலிஸ்ட் கட்சிக்கு இடதில் இருப்பதாகக் கருதிக் கொள்ளுகின்றனர். மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், பிரெஞ்சுத் தேர்தல் முறை சிறு கட்சிகளுக்கு வேட்பு மனு கேட்கப்படுவதில் ஒப்புமையில் பரந்த அளவில் வாய்ப்பை கொடுத்துள்ளது. வேட்பாளர் விதிகளை அவர்கள் திருப்தி செய்ய முடிந்தால், 500 மேயர்கள் அல்லது ஏனைய தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதகள் ஒப்புதல் தெரிவித்தால், அவர்கள் ஏட்டளவிலேனும் பெரிய கட்சி வேட்பாளர்களுக்கு கிடைக்கும் தொலைக்காட்சி நேரத்தைப் பெற முடியும். முக்கிய ஒளிபரப்பு நிறுவனங்கள் இவர்களுடைய பிரச்சாரங்கள் பற்றித் தகவல் கொடுக்கும் கட்டாயத்தில் உள்ளன. இதைத்தவிர, தேர்தல் பிரச்சார செலவுகள், 800,000 யூரோக்கள் வரை ஒவ்வொரு கட்சிக்கும் அரசாங்கக் கருவூலத்தில் இருந்து கொடுக்கப்படுகிறது. 5 சதவிகிதத்திற்கும் மேலான வாக்குகளை அவை பெற்றால் இந்த தொகை மில்லியன்களாக உயர்த்தப்படும். தேர்தலில் இந்த அளவிற்கு பெயரளவு இடது கட்சிகள் பங்கு பெறுவது என்பது மக்களுடைய உணர்வை சிதைந்த தன்மையில் பேரளவில் பிரதிபலிப்பது ஆகும். தீவிர வலதில் இரண்டு கட்சிகள்தாம் நிலையான கட்சிகளுக்கு எதிராக போட்டியிடுகின்றன; தேசிய முன்னணயில் லூ பென் மற்றும் MPF ன் Philippe de Villers. Hunters Party (CNPT) இன் வேட்பாளரான Frederic Nohous உடைய சரியான அரசியல் சார்பை நிர்ணயிப்பது கடினமாக உள்ளது. ஆனால் "இடதுகள்" ஸ்தாபன அமைப்புக் கட்சிகளுக்கு மாற்றீடு எனக் கூறுவதற்கே இல்லை. மக்களுடைய அதிருப்தியை ஏதேனும் ஒரு முதலாளித்துவ கட்சிகளுக்கு பின் திசைதிருப்பி இருத்துவதில்தான் அவை கவனமாக உள்ளன. பிரான்சில் முழு ஆளும் உயரடுக்கும் இத்தகைய போக்குகளை பயன்படுத்திக் கொள்ள பெரும் திறமையும் அனுபவமும் உடையவை ஆகும்; மிகப் பரந்த அமைப்புக்கள் அவற்றிற்கு உதவுவதற்கு உள்ளன; தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு முதலாளித்துவ வர்க்கத்தின் அரசியல் ஆதிக்கத்திற்கு சவால் விடுவது இதையொட்டி மிகக் கடினமாகப் போகிறது. இரண்டு "இடது" வேட்பாளர்கள் Marie George Buffet (கம்யூனிஸ்ட் கட்சி), மற்றும் பசுமைக் கட்சியின் Dominique Voynet உம் பல ஆண்டுகள் அரசாங்கத்தில் இருந்த அனுபவத்தை கொண்டவர்கள். சோசலிஸ்ட் கட்சி தலைமையிலான லியோனல் ஜோஸ்பன் அரசாங்கத்தில் மந்திரி பதவி வகித்தவர்கள், Buffet மற்றும் Voynet இருவருமே ரோயாலின் தலைமையில் உள்ள சோசலிஸ்ட்டுக்களுடன் உடன்பாடு காண முயல்கின்றனர். Buffet இன் தேர்தல் பிரச்சார மையக் கோஷம் "சார்கோசியைத் தவிர, வேறு எவரும்" என்பதாகும்; இதை பேய்ரூவிற்கு ஆதரவு என்றும் விளக்கம் காணலாம்.ஐரோப்பிய பாராளுமன்ற தேர்தலில் பிரெஞ்சு பசுமைவாதிகளை பிரதிநிதித்துவப்படுத்திய, சோசலிஸ்ட்டுக்கள் மற்றும் பேய்ரூவின் UDF ஆகிய மூன்றும் உடன்பாட்டைக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். விவசாயிகளின் தலைவரும் பூகோளமயமாக்கல்-எதிர்ப்பு இயக்கத்தின் வேட்பாளருமான José Bové, பூகோள மயமாக்கலின் விளைவுகளிலிருந்து கிராமப்புற பிரான்சை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தை கொண்ட, பிற்போக்கு பார்வையை, தேசியவாத கறைகொண்ட வேலைத்திட்டத்தை பிரதிநித்துவப்படுத்துகிறார். Parti des travailleurs இன் ஆதரவைக் கொண்டுள்ள மற்றும் "மேயர்களின் வேட்பாளர்" என்று தன்னையே அழைத்துக் கொள்ளுபவருமான Gerard Schivardi, இத்தகைய கருத்தைத்தான் ஆதரிக்கிறார். எஞ்சியுள்ள இரு வேட்பாளர்களும் பொதுவாக "தீவிர இடது" என்று விவரிக்கப்படுகின்றனர். புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் ஒலிவியே பெசன்ஸநோ, மற்றும் லூத் ஊவ்றியேரை சேர்ந்த ஆர்லெட் லாகியே இருவரும்தான் அவர்கள். அவர்கள் Buffet, Voynet அல்லது Schivardi ஐ விட முற்போக்கு தன்மையுடையதாக காட்டிக் கொளுகின்றனர்; ஆனால் உண்மையில் உத்தியோகபூர்வ முதலாளித்துவ வர்க்க அரசியலுக்கு ஒரு மூடிமறைப்பு போல்தான் செயல்படுகின்றனர். இருவருமே தொழிலாள வர்க்கம் எதிர்கொள்ளும் மத்திய பிரச்சினையான முன்னாள் சீர்திருத்தவாதக் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களுடன் முறிவு தேவை என்பதை தவிர்க்க முற்படுகின்றனர். தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன அரசியல் இயக்கம் கட்டியமைக்கப்படாமல் ஒரு சமூக அல்லது அரசியல் வெற்றி கூட காக்கப்பட முடியாது; இவ்வியக்கம் சோசலிஸ்ட் கட்சி மற்றும் தொழிற்சங்கங்களின் குட்டி முதலாளித்துவ கருவிகளுக்கு எதிராக இயக்கப்பட வேண்டும். சர்வதேச மற்றும் சோசலிச நோக்குநிலைக்கான ஒரு போராட்டத்தில் இந்த அடி எடுப்பிற்கான அவசியத்தின் தெளிவுதான் இத்தேர்தலில் மிக முக்கியமான பணி ஆகும். ஆனால் லாகியே, பெசன்ஸநோ இருவரும் இதைப் பற்றி ஏதும் கூறத் தயாராக இல்லை. ஒரு நல்ல பிரெஞ்சு உணவுவிடுதியில் பறிமாறப்படும் உணவிற்கு திட்டம் தயாரிப்பது போல் அவர்கள் தங்கள் தேர்தல் பிரச்சார திட்டத்தை முன்வைத்துள்ளனர். பலவிதமான ஆலோசனைகள், சமூக கோரிக்கைகள் ஆகியவை முன்வைக்கப்பட்டதை ஒருவர் கண்டாலும், அவை எப்படி அடையப்பட முடியும் என்பது பற்றி ஒரு சொல் கூட கூறப்படவில்லை. உணவுவிடுதியில் பொதுவாக இது சமையற்காரருடைய வேலையாகும், ஆனால் பெசன்ஸநோ மற்றும் லாகியே ஆகியோரின் ஆலோசனைகளை நடைமுறைப்படுத்த எந்தச் சமையற்காரர் தயாராக உள்ளார்? இரு வேட்பாளர்களும் தங்கள் நம்பிக்கையை சோசலிஸ்ட் கட்சியில் கொண்டுள்ளார்கள் என்பது வெளிப்படை; அதை அவர்கள் வெளிப்படையாகவோ, உட்குறிப்பாகவோ, இரண்டாம் சுற்றில் ஆதரிப்பர். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, சோசலிஸ்ட் கட்சியின் வேட்பாளர் லியோனல் ஜோஸ்பன் முதல் சுற்றில் தோற்கடிக்கப்பட்ட பின்னர் LCR கோலிச ஜாக் சிராக்கிற்கு வாக்களிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தது. |