:
ஆசியா
:
இலங்கை
Attack on major Sri Lankan airforce base as civil war
continues to escalate
இலங்கையின் பிரதான விமானப் படைத் தளம் மீதான தாக்குதல் உள்நாட்டு யுத்தம்
தொடர்ந்தும் உக்கிரமடைவதற்கான எடுத்துக்காட்டு
By Sarath Kumara
27 March 2007
Use this version
to print | Send this link by email
| Email
the author
கொழும்புக்கு வடக்கே கட்டுநாயக்காவில் உள்ள பிரதான விமானப்படைத் தளத்தின்
மீது கடந்த திங்கள் விடியற் காலையில் தமிழீழ விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் மூன்று இலங்கை
விமானப்படையினர் கொல்லப்பட்டதோடு 16 பேர் காயமடைந்துள்ளனர். நாட்டின் ஒரே ஒரு சர்வதேச விமான
நிலையத்திற்கு அருகில் உள்ள விமானப் படைத் தளத்தின் மீது பல குண்டுகளை வீசுவதற்காக புலிகள் இலகுரக விமானத்தைப்
பயன்படுத்தியுள்ளனர். இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக தொடரும் உள்நாட்டு யுத்தத்தில் புலிகள் விமானத்
தாக்குதல் தொடுத்திருப்பது இதுவே முதற் தடவையாகும்.
புலிகள் இராணுவத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள அதே வேளை, இந்தத் தாக்குதல்
விமானப்படையின் ஜெட் விமானங்களை அல்லது ஹெலிகொப்டர்களை செயலிழக்கச் செய்ய அல்லது அழிக்கத் தவறியுள்ளது.
சேதங்கள் சிறியதாகவே இருந்ததாகவும் குண்டுகள் பொறியியல் வசதிகளையே தாக்கியதாகவும் விமானப்படை
பேச்சாளர் அஜந்த சில்வா தெரிவித்தார். நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு இராணுவ ஹெலிகொப்டர்கள் சேதமாகியிருக்கலாம்
என ஏனைய பாதுகாப்பு மூலாதாரங்கள் சுட்டிக்காட்டின.
இதே விமானத் தளத்தின் மீது 2001 ஜூலையில் நடந்த தாக்குதல் மிக அழிவுகரமானதாக
இருந்தது. சர்வதேச விமான நிலையத்தையும் விமானப்படைத் தளத்தையும் சூழவுள்ள கடுமையான பாதுகாப்பு அரணுக்குள்
ஊடுருவிய புலிகள், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானப்படை விமானங்களையும் பயணிகள் விமானங்களையும் அழித்தனர்.
இது சுற்றுலாத்துறையிலும் மற்றும் நாட்டின் தேசிய விமான சேவையிலும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது. விமானசேவை
அதன் அரைப்பகுதி விமானங்களை இழந்தது.
திங்கள் நடந்த தாக்குதலை அடுத்து, நாட்டுப்பற்று ஆரவார அறிக்கை ஒன்றை
விடுத்த அரசாங்கம், புலிகளுக்கு எதிரான தமது புதுப்பிக்கப்பட்ட யுத்தத்திற்கான அனைத்து எதிர்ப்பிற்கும்
முடிவுகட்டக் கோரியது. அந்த அறிக்கை, "குறுகிய அரசியல் வேறுபாடுகளைக் கடக்குமாறும்" மற்றும்
பாதுகாப்புப் படைகளை அவமதித்து "புலி பயங்கரவாதிகளை பலப்படுத்துவதை" கைவிடுமாறும் அனைத்துக்
கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்தது. "தேசமே மேலானது, அரசியல் குறிக்கோள்களால் இலங்கையின் இறைமையையும்
பிராந்திய ஒருமைப்பாட்டையும் பதிலீடு செய்ய முடியாது" என அந்த அறிக்கை பிரகடனம் செய்தது.
பாதுகாப்பு செயலாளர் கோதபாய இராஜபக்ஷவும், "கெடுநோக்குகொண்ட"
புதிய போக்கு என தான் குறிப்பிட்டதை ஒழிக்க சர்வதேச ஆதரவிற்கு அழைப்பு விடுத்தார். புலிகளின்
வளர்ச்சியுறாத விமானத் தாக்குதலை "பூகோளத்திற்கே அச்சுறுத்தல்", இது ஏனைய "சர்வதேச பயங்கரவாத
அமைப்புக்களை" பின்பற்ற ஊக்குவிக்கக் கூடும்" என அவர் நகைப்புக்கிடமான முறையில் தெரிவித்தார்.
விமானப்படை மன்னார் மாவட்டத்தில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்கள் மீது பதில் தாக்குதல்களை
நடத்தியது.
பாதுகாப்புப் படைகள் இந்த விமானத் தாக்குதலை சாக்குப்போக்காகப்
பயன்படுத்திக்கொண்டு கொழும்புத் தலைநகரின் பல பகுதிகளிலும் எதேச்சதிகாரமான முறையில் சுற்றிவளைப்புத்
தேடுதல்களை நடத்தி 40 ''சந்தேக நபர்களை" கைது செய்தது. கைது செய்யப்பட்டவர்களுக்கும் விமானத்
தாக்குதலுக்கும் எந்தவொரு தொடர்பும் கிடையாது. அவர்கள் தமது அடையாளத்தை உறுதிப்படுத்த முடியாமல்
போன பெருந்தோட்டத் தமிழர்கள் ஆவர். இந்த நடவடிக்கைக்கான காரணம் நாட்டின் தமிழ் சிறுபான்மையினரை
பயமுறுத்தி அச்சுறுத்துவதேயாகும்.
புலிகளைப் பொறுத்தளவில், இந்த விமானத் தாக்குதல் அதன் போராளிகளின்
குன்றிவரும் மன வலிமையை தூக்கி நிறுத்த திட்டமிடப்பட்ட அவநம்பிக்கையான நடவடிக்கையாகும். ஜனாதிபதி மஹிந்த
இராஜபக்ஷ கடந்த ஜூலையில் தாக்குதல் தொடுக்க கட்டளையிட்டது முதல், பல தோல்விகளைச் சந்தித்த
புலிகள், கிழக்கில் மாவிலாறு, சம்பூர், மற்றும் வாகரை போன்ற பல பிரதேசங்களை இழந்துள்ளனர். புலிகள்
அதிகம் நம்பிக்கை வைத்திருந்த அமெரிக்காவும் ஏனைய பெரும் வல்லரசுகளும், 2002 யுத்த நிறுத்த
உடன்படிக்கையை வெளிப்படையாக மீறிய அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு மெளனமாக ஆதரவளித்துள்ளன.
புலிகள் வெற்றி ஆரவாரத்துடன் தமது தமிழீழ விமானப் படையின் நிழற்படங்களை
வெளியிட்டனர். இந்த விமானம் இலங்கைக்கு உதிரிப்பாகங்களாக கடத்தப்பட்டு உருவாக்கப்பட்ட ஒற்றை
இயந்திரத்தை உடைய இலகுரக விமானம் என நம்பப்படுகிறது. விமானத்தின் கீழ் சிறிய, மேம்படுத்தப்பட்டிராத
குண்டுகள் பொருத்தப்பட்டிருப்பதை அந்தப் படங்கள் காட்டின. "இலங்கை விமானப் படையின் இயலுமையை
மட்டுப்படுத்தவே இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக" அறிவித்த புலிகளின் இராணுவப் பேச்சாளர்
இராசையா இளந்திரையன், மேலும் தாக்குதல்கள் நடக்கலாம் எனவும் எச்சரித்தார்.
புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் சு.ப. தமிழ்செல்வன், இந்தியாவில்
வெளியிடப்பட்ட கவலைகளை தணிக்க முயற்சித்தார். புலிகளின் விமான வசதி, "எந்தவிதத்திலும் வேறு எந்த
நாட்டுக்கும், குறிப்பாக இந்தியாவிற்கு அச்சுறுத்தலாக இருக்காது", ஆனால் அது "எமது மக்களை
பாதுகாக்கவே" என அவர் தெரிவித்தார்.
தமிழீழ விமானப் படை, இஸ்ரேலில் தயாரிக்கப்பட்ட கிபிர் ஜெட் விமானங்கள்
மற்றும் உக்கரெயினில் தயாரிக்கப்பட்ட மிக் 27 ஜெட் விமானங்களால் உபகரணமயப்படுத்தப்பட்டுள்ள இலங்கை
விமானப்படையை சவால் செய்யும் நிலையில் இல்லை. கடந்த ஆண்டு பூராவும், புலிகளின் கட்டுப்பாட்டுப்
பிரதேசத்தின் மீது குண்டுவீசி சேதப்படுத்த இத்தகைய யுத்த விமானங்களை இராணுவம் அடிக்கடி பயன்படுத்தி
வந்துள்ளதோடு இதனால் பொதுமக்களும் புலிகளும் உயிரிழந்துள்ளனர். இந்த விமானத் தாக்குதல்கள் புலிகளுக்கு
கடுமையான இராணுவப் பின்னடைவுகளை ஏற்படுத்தியதோடு புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் இருந்து
பெருந்தொகையான அகதிகள் அலை அலையாய் வெளியேறுமளவிற்கு பீதியை உருவாக்கிவிட்டுள்ளது.
கிழக்குத் தாக்குதல்
இராணுவம் தனது தாக்குதல் நடவடிக்கைகளை தொடர்ந்தும் உக்கிரப்படுத்திக்
கொண்டிருக்கின்றது.
மார்ச் 6ம் திகதியில் இருந்து தீவின் கிழக்கில் எஞ்சியுள்ள புலிகளின் பிரதான
கோட்டையை கைப்பற்றுவதற்கான பிரதான இராணுவ அழுத்தம் ஒன்று இருந்துகொண்டுள்ளது. மட்டக்களப்பு நகருக்கு
தென்மேற்காக 40 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள தொப்பிகல, திருகோணமலை மற்றும் அம்பாறை
மாவட்டங்களுக்கு இடையில் பிரதானமாக காடுகளால் சூழப்பட்ட ஒரு பரந்த பிரதேசமாகும். ஜனவரியில் கிழக்கில்
வாகரை நகரை இழந்த பின்னர் பல புலிகள் அங்கு சென்றுள்ளதாக இராணுவம் நம்புகின்றது.
மனிதக் கேடய நடவடிக்கை 2 எனப் பெயரிடப்பட்ட இந்தத் தாக்குதல், 2002
யுத்த நிறுத்தத்தை இன்னுமொரு முறை மீறுவதாகும். இராணுவம் "தமிழர்களை விடுதலை செய்வதோடு" புலிகள்
"மனிதக் கேடயங்களை" பயன்படுத்துவதை தடுப்பதாகவும் ஜனாதிபதி இராஜபக்ஷவும் அவரது அரசாங்கமும்
கூறிக்கொள்கின்றனர். உண்மையில், உள்ளூர் மக்களை சிதறி ஓடச் செய்யவும் மற்றும் புலிகளை தனிமைப்படுத்தவும்
இராணுவம் வேண்டுமென்று கண்மூடித்தனமான விமானத் தாக்குதல்களையும் செல் ஆட்டிலறித் தாக்குதலையும்
நடத்துகிறது.
அண்மைய இராணுவ நடவடிக்கைகள், வடக்கில் உள்ள புலிகளின் கோட்டைகள் மீது
குவிமையப்படுத்துவதற்கு முன்னதாக, கிழக்கில் இருந்து அவர்களை வெளியேற்றும் பரந்த மூலோபாயத்தின்
பாகமாகும். ஏப்பிரல் நடுப்பகுதியில் தமிழ் சிங்களப் புத்தாண்டளவில் கிழக்கின் முழுக் கட்டுப்பாட்டையும்
வெற்றிகொள்ள இராணுவம் திட்டமிடுவதாக சிங்களத் தீவிரவாத ஜாதிக ஹெல உறுமயவின் பிரதிநிதிகளிடம் ஜனாதிபதி
இராஜபக்ஷ தெரிவித்தார்.
இந்தத் தாக்குதல்கள் தொடங்கியதில் இருந்து பத்தாயிரக்கணக்கான அகதிகள்
மட்டக்களப்புக்கு படையெடுத்துள்ளனர். முன்னைய இராணுவ நடவடிக்கைகளின் போது 60,000 பொதுமக்கள்
மட்டக்களப்புக்கு இடம்பெயர்ந்துள்ளதாக உலக உணவுத் திட்டம் மார்ச் 19 அன்று அறிவித்துள்ளது. இப்போது
ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்களுமாக இன்னும் 95,000 பேர் இந்தப் பிரதேசத்தை வந்தடைந்துள்ளனர்.
உலக உணவுத் திட்ட அலுவலர் டோனி பன்பரி எச்சரித்ததாவது: "நாங்கள் விரைவில் புதிய நிதிகளைப்
பெற்றுக்கொள்ளாவிடில், ஏப்பிரல் இறுதியில் உணவு விநியோகத்தை இடைநிறுத்த நேரிடும்."
ரிலீஃப்வெப் (Reliefweb)
அறிவித்துள்ளபடி, பாடசாலைகள் இடைத்தங்கள்
முகாம்களாக மாற்றப்பட்டுள்ளன. பல அகதிகள் திறந்தவெளியில் அல்லது மரங்களுக்கு அடியில்
வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். அங்கு உணவு, தண்ணீர், சுகாதாரம் மற்றும் ஏனைய அடிப்படை வசதிகளுக்கும்
பற்றாக்குறை நிலவுகிறது. யுனெசெப்பின்படி, தங்குமிடங்களை எதிர்பார்த்துள்ள அகதிகள், முகாம்களுக்கு முகாம்
இடம்மாற தள்ளப்பட்டு வருகின்றனர். புதிய ஊடுருவல்களை முன்னெடுப்பதன் பேரில் இடம்பெயர்ந்தவர்களை மீண்டும்
வாகரைக்கு செல்லுமாறு நெருக்குவதாக மனித உரிமைகள் கண்காணிப்பும் சர்வதேச மன்னிப்புச் சபையும்
அரசாங்கத்தைக் குற்றஞ்சாட்டியுள்ளன.
இராணுவ நடவடிக்கைகளின் பிரதான இலக்கு கிழக்காக இருந்த போதிலும், கடந்த
இரு வாரங்களாக வடக்கில் பல பிரதேசங்களிலும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன. மார்ச் 16 புலிகளின்
கட்டுப்பாட்டிலான வன்னிப் பிரதேசத்தின் எல்லையான ஓமந்தையில் நடந்த மோதல்களில் ஐந்து படையினர்
கொல்லப்பட்டதுடன் 23 பேர் காயமடைந்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை, இதே பிரதேசத்தில் நடந்த
மோதலில் ஒன்பது படையினர் உயிரிழந்தனர். இராணுவம் "முன்கூட்டிய தாக்குதல்" என அது விபரிப்பதை மீண்டும்
ஒருமுறை நடத்தியது.
வடமேல் மாவட்டமான மன்னாரிலும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன. புலிகளின்படி,
கடந்த வியாழக் கிழமை சுமார் 300 படையினர் புலிகளின் பிராந்தியத்திற்குள் நுழைந்ததோடு கடுமையான
ஆட்டிலறி மற்றும் மோட்டார் தாக்குதல்களின் போது உள்ளூர் பொதுமக்களை "மனிதக் கேடயங்களாகப்"
பயன்படுத்த அவர்கள் முயற்சித்தனர். இந்தக் குற்றச்சாட்டுக்களை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத்
சமரசிங்க மறுத்தபோதிலும், "அந்தப் பிரதேசத்தில் பயங்கரவாதிகளின் ஆட்டிலறி மற்றும் மோட்டார் நிலைகளை
கட்டுப்படுத்துவதற்கு" இராணுவம் முயற்சித்ததாக ஏற்றுக்கொண்டார்.
இராணுவம் புதிய பிரதேசங்கள் மீது தாக்குதல் தொடுத்த போதிலும் கூட, 2002
யுத்த நிறுத்த உடன்படிக்கைக்கு அரசாங்கம் கட்டுப்படுகின்றது என்ற மோசடியை ஜனாதிபதி இராஜபக்ஷ
தொடர்ந்தும் முன்னெடுக்கின்றார். இந்த மாத முற்பகுதியில், இலங்கை பாதுகாப்புத் துறையின் உயர்மட்டத்தைச்
சேர்ந்த ஒருவர் ஏ.எப்.பி. செய்திச் சேவைக்கு கருத்துத் தெரிவிக்கையில், இன்னும் "இரண்டு அல்லது மூன்று
ஆண்டுகளுக்கு" யுத்தம் தொடரும் எனத் தெரிவித்துள்ளார். சண்டே லீடர் பத்திரிகையின்படி, இதைக்
குறிப்பிட்டவர் ஜனாதிபதியின் சகோதரரும் பாதுகாப்பு செயலாளருமான கோதபாய இராஜபக்ஷ ஆவார்.
சர்வதேச சமாதான முன்னெடுப்புகள் என சொல்லப்படுவதற்கு பெயரளவில் ஆதரித்த
போதிலும், புதிய யுத்தத்திற்கு மெளனமாக ஆதரவளிக்கின்ற புஷ் நிர்வாகத்தின் ஆதரவிலேயே இராஜபக்ஷ அரசாங்கம்
தங்கியிருக்கின்றது. இந்த இரு நாடுகளுக்கும் இடையிலான நெருக்கமான உறவு, ஆதாயம் மற்றும் சேவை ஒத்துழைப்பு
என்ற உடன்படிக்கை ஒன்று கடந்த மார்ச் முற்பகுதியில் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்த உடன்படிக்கை அமெரிக்க
இராணுவத்திற்கு இலங்கை விரிவான மூலோபாய ஆதரவை வழங்குகிறது. மத்திய கிழக்கிற்கும் அதே போல் தெற்காசியாவிற்கும்
ஒரு மூலோபாய நுழைவாயிலாக உள்ள இலங்கைக்கு, அத்தகைய ஒரு கொடுக்கல் வாங்கலுக்காக வாஷிங்டன் சில
காலங்களாகவே அழுத்தம் கொடுத்து வந்தது.
இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டு இரண்டு நாட்களின் பின்னர், அமெரிக்க
துணை உதவிச் செயலாளர் ஸ்டீவ் மான் இலங்கைக்கு விஜயம் செய்ததோடு இராஜபக்ஷவையும் ஏனைய இலங்கை
அதிகாரிகளையும் சந்தித்தார். அவர் வாஷிங்டனின் களஞ்சியத்தில் கிடக்கும் வார்த்தை ஜாலமான "மனித உரிமைகளைப்
பாதுகாத்தல்" மற்றும் "அரசியல் தீர்வின்" தேவையை மீண்டும் கூறிச் சென்றார். ஆயினும் கொழும்பில் நடந்த
ஊடகவியலாளர்கள் மாநாட்டில், இராஜபக்ஷவின் "பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்திற்கு" தனது ஆதரவை வெளிப்படுத்திய
ஸ்டீவ் மான், புலிகளின் மத்தியில் தோற்கடிக்கப்பட வேண்டிய "பலமான இராணுவ சக்தி" உண்டு எனப் பிரகடனப்படுத்தினார்.
2005 நவம்பரில் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் குறுகிய வெற்றியைப் பெற்ற
பின்னர் புலிகளை கீழறுக்கவும் ஆத்திரமூட்டவும் ஒரு நேரடியான மூடிமறைக்கப்பட்ட யுத்தத்தை முன்னெடுக்க இராணுவத்திற்கு
அனுமதியளித்த இராஜபக்ஷ, கடந்த ஜூலையில் இராணுவத் தாக்குதல்களுக்கு கட்டளையிட்டார். 2005 கடைப்பகுதியில்
இருந்து இராணுவ சிப்பாய்கள், புலிப் போராளிகள் மற்றும் பொதுமக்கள் என நான்காயிரத்திற்கும் மேற்பட்டவர்கள்
உயிரிழந்துள்ளதோடு, 200,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். நூற்றுக்கணக்கானவர்கள், பெரும்பாலும் இளம்
தமிழர்கள், இராணுவத்தின் ஆதரவிலான கொலைப் படைகளால் கடத்தப்பட்டுள்ளனர் அல்லது கொல்லப்பட்டுள்ளனர்.
அரசாங்கம் தனது இனவாத யுத்தத்தை உக்கிரப்படுத்துகின்ற நிலையில், இந்த எண்ணிக்கைகள் தொடர்ச்சியாக
அதிகரிக்கும்.
|