:
இலங்கை
Muslims protest against police massacre
in eastern Sri Lanka
கிழக்கு இலங்கையில் பொலிஸ் படுகொலைகளுக்கு எதிராக முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்
By K. Ratnayake
21 September 2006
Back to screen version
கிழக்கு இலங்கையில் 10 முஸ்லிம் தொழிலாளர்கள் கொல்லப்பட்டமைக்கு எதிராக
பொத்துவில் பிரதேசத்தில் மூன்றாவது நாளாக நேற்றும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்தன. அரசாங்கம் தமிழீழ விடுதலைப்
புலிகள் மீது குற்றம்சாட்ட முயற்சிக்கும் அதே வேளை, உள்ளூர்வாசிகள் விசேட அதிரடிப் படையின் பொலிஸ்
கொமான்டோ பிரிவின் உறுப்பினர்கள் மீது குற்றஞ்சாட்டுகின்றனர்.
பொத்துவிலின் இரத்தல் குளம் தண்ணீர் மதகை திருத்துவதற்காக ஞாயிற்றுக்கிழமை சென்ற
பதினொரு தொழிலாளர்களும் திரும்பி வரவில்லை. இவர்களின் 10 பேர்களது சடலங்கள் அடுத்த நாள் மதகின் அருகில்
கண்டுபிடிக்கப்பட்டன. அவர்கள் வெட்டிக் கொல்லப்பட்டிருந்தார்கள். மீரா மொஹிதீன், 55, உயிர் தப்பிய போதிலும்
கடுமையாக காயமடைந்துள்ளதோடு இப்போது அம்பாறை ஆஸ்பத்திரியின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார்.
அடக்கம் செய்யப்படுவதற்கு முன்னதாக பூத உடல்கள் வைக்கப்பட்டிருந்த ஜும்மா பள்ளிக்கு
அருகில் கூடியிருந்த 2,000 மக்களில் ஒருவரான எம்.எஸ். மொஹிதீன் ராய்ட்டருக்கு தெரிவித்ததாவது: "விசேட அதிரடிப்படையினரே
இவர்களைப் படுகொலை செய்துள்ளனர். நாங்கள் வேறு யாரையும் குற்றஞ்சாட்ட மாட்டோம். புலிகளால் இந்தப் பிரதேசத்திற்கு
வர முடியாது. இது முழுமையாக அதிரடிப்படையின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டது. அதிரடிப்படைக்கு தெரியாமல் எவராலும்
இந்தப் பிரதேசத்திற்குள் வர முடியாது."
திங்கட் கிழமை முதல் கடைகள் மற்றும் வியாபார நிலையங்கள் உட்பட ஒரு பொது கடையடைப்பு
நடந்தது. ஆர்ப்பாட்டக்காரர்கள் அருகில் சாஸ்திரவெளியில் உள்ள பொலிஸ் முகாமை அகற்ற வேண்டும் அல்லது
கொமான்டோ பிரிவை இடம்மாற்ற வேண்டும், அதே போல் இந்தக் குற்றம் பற்றி முழு விசாரணையை நடத்த வேண்டும்
எனக் கோரினர். சாஸ்திரவெளி முகாமானது இந்த சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் இருந்து சுமார் 350 மீட்டர்
தூரத்திலேயே உள்ளது.
நிலைமையை ஆராய்வதற்காக அங்கு பறந்து சென்ற பொலிஸ் மா அதிபர் சந்திரா
பெர்னான்டோவின் வாகனத்தை உள்ளூர் மக்கள் மொய்த்துக்கொண்டனர். அரசாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பவுஸி
மற்றும் ஹுஸைன் பைலாவும், மேல்மாகாண ஆளுனர் அலவி மெளலானாவுடன் சேர்ந்து அமைதிகாக்குமாறு கோருவதற்காக
அங்கு சென்றிருந்த போதிலும் பயனிருக்கவில்லை.
செவ்வாய்க் கிழமை, ஜும்மா பள்ளிவாசலுக்கு வெளியில் 15,000 பேர் திரண்டதோடு
அம்பாறை மாவட்டத்தின் ஏனைய பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்கள் வெடித்திருந்தன. தமிழர்களும் இந்தப் பிரச்சாரத்தில்
பங்குபற்றியிருந்தனர். ஆர்ப்பாட்டங்களை முடிவுக்குக் கொண்டுவர ஒரு அவநம்பிக்கையான முயற்சியாக, மீண்டும் அந்தப்
பிரதேசத்திற்கு சென்ற பெளஸி பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூபா. 100,000 வழங்கினார்.
புதன் கிழமை, பெரிய உலையில் வசிக்கும் முஸ்லிம்கள், பொத்துவிலில்
ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க சென்றுகொண்டிருந்த அதிரடிப்படை வாகனத்தை வழிமறித்தனர். அதைத் தொடர்ந்து
நடந்த மோதலின் போது பொலிஸ் கமான்டோக்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் 14 பேர்
காயமடைந்ததுடன் அவர்களில் நான்கு பேர் கடுங் காயமடைந்திருந்தனர். மேலும் ஆர்ப்பாட்டங்கள் வெடிக்காமல்
நசுக்கும் முயற்சியாக வியாழக் கிழமை வரை பொலிஸ் ஊரடங்கு சட்டத்தை திணித்தது.
அரசாங்கமும் பாதுகாப்புப் படைகளும் உடனடியாக புலிகள் மீது குற்றஞ்சாட்டின. புலிகள்
சம்பந்தப்பட்டுள்ளதை ஒப்புவிக்க போதிய ஆதாரங்கள் இருப்பதாக அரசாங்கத்தின் பாதுகாப்புப் பேச்சாளர்
கேஹெலியே ரம்புக்வெல்ல பிரகடனம் செய்தார். அதிரடிப்படையினரே இதற்குப் பொறுப்பாளிகள் என்ற
குற்றச்சாட்டுக்களை நிராகரித்த அவர் பொலிஸ் கமான்டோக்களை பாராட்டினார். சம்பவத்திற்கும் தமக்கும்
தொடர்பில்லை என ஒரு மறுப்பறிக்கையை புலிகளும் வெளியிட்டிருந்தனர்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் (ஸ்ரீ.ல.மு.கா) தலைவர் ரவுப் ஹக்கீம் சர்வதேச
விசாரணைக்கு அழைப்பு விடுத்ததை நிராகரித்த ரம்புக்வெல்ல: "முழு விசாரணையையும் நடத்துவதற்கு இலங்கையில்
அனுபவசாலிகள் உள்ளனர்" என பிரகடனப்படுத்தினார். திங்கழன்று பொத்துவில் மக்களை சந்தித்த ஹக்கீம்,
அதிரடிப்படையினரே இதற்குப் பெறுப்பு என்ற அவர்களின் குற்றச்சாட்டை ஊடகங்களுக்கு மீண்டும் வலியுறுத்தினார். ஒரு
சர்வதேச விசாரணையை நடத்த அழுத்தம் கொடுப்பதற்காக ஐ.நா. அலுவலர்களை சந்திக்கப் போவதாக அவர்
அறிவித்தார்.
ஹக்கீமின் பிரேரணையானது பொலிஸ் ஒரு பக்கச்சார்பற்ற விசாரணையை நடத்தும் என்பதில்
மக்களின் நம்பிக்கையீனத்தை வெளிப்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு பூராவும், தீவின் வடக்கு மற்றும் கிழக்கில்
படுகொலைகள் மற்றும் "காணாமல் போனவர்களின்" பட்டியல் வளர்ந்துகொண்டே இருந்தது. இவற்றில் பாதுகாப்புப்
படைகள் சம்பந்தப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டது. அரசாங்கம் விசாரணை நடத்துவதாக வாக்குறுதியளித்த
போதிலும் பாதுகாப்புப் படை உறுப்பினர்களில் எவருக்கும் எதிராக குற்றஞ்சாட்டப்பட்டு வழக்குத் தொடுக்கப்படவில்லை.
பொலிசுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் அரசியல் ரீதியில் குறிப்பிடத்தக்கதாகும். தீவின்
கிழக்கில் உள்ள முஸ்லிம்களுக்கு எதிரான கடந்தகால வன்செயல்களுக்கு புலிகளே பொறுப்பாளிகளாக இருந்தனர். இதையே
கொழும்பில் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் பகைமையை
கிளருவதற்காக பயன்படுத்திக்கொள்கின்றன. இந்தப் படுகொலைகளில் பொலிஸ் சம்பந்தப்பட்டிருப்பது சுட்டிக்காட்டப்படும்
நிலையில், இராணுவத்தின் கொடூரமான வழிமுறைகள் சம்பந்தமாக பரந்த ஆத்திரத்திற்கு மத்தியில் இனவாத தடைகள்
உடைத்து நொறுக்குவதையே இந்த ஆர்ப்பாட்டங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
குறிப்பாக கிழக்கில் புலிகளுக்கு எதிரான இராணுவத்தின் தொடர்ச்சியான
எதிர்த்தாக்குதல்களை அடுத்தே இந்த முஸ்லிம் தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். திருகோணமலையில்
புலிகளின் பிராந்தியத்திற்குள் இருக்கும் மாவிலாறு தண்ணீர் அணைக்கட்டின் மதகைக் கைப்பற்றுவதற்காக, 2002 யுத்த
நிறுத்தத்தை வெளிப்படையாக மீறி ஒரு பெரும் எதிர்த் தாக்குதல்களை நடத்துமாறு ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ
இராணுவத்திற்கு கட்டளையிட்டார். அப்போதிருந்து, திருகோணமலை துறைமுகத்தை சூழ உள்ள சம்பூர் பிரதேசத்தில்
புலிகளின் தளங்களை பாதுகாப்புப் படைகள் கைப்பற்றி வருகின்றன.
ஆகஸ்ட் முற்பகுதியில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் மூதூர் நகரைக் கைப்பற்றுவதற்காக
கசப்பான மோதல்கள் இடம்பெற்றன. புலி போராளிகள் மாவிலாறுக்கான இராணுவத்தின் விநியோக வழிகளை துண்டிக்கும்
முயற்சியில் இந்த நகரின் பல பகுதிகளை கைப்பற்றினர். இராணுவம் ஆட்டிலறி மற்றும் ரொக்கட் தாக்குதல்களின் மூலம்
குண்டுமாரிப் பொழிந்ததால் அந்த நகரில் இருந்து பத்தாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். மூதூரை இராணுவம்
கைப்பற்றிய பின்னர், ஆகஸ்ட் 5 அன்று 17 உள்ளூர் தொண்டு நிறுவன ஊழியர்கள் கொல்லப்பட்டிருந்தனர். இவர்களில்
பெரும்பாலானவர்கள் தமிழர்களாகும். அவர்கள் மரணதண்டனை பாணியில் கொல்லப்பட்டிருந்தனர். இராணுவம் புலிகள் மீது
குற்றஞ்சாட்டிய அதே வேளை, யுத்த நிறுத்தத்தை மேற்பார்வை செய்யும் இலங்கை கண்காணிப்புக் குழு இராணுவமே பொறுப்பு
என தீர்ப்பு கூறியிருந்தது.
இரு நாட்களின் பின்னர், சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க) ஆதரவாளரான
சிவப்பிரகாசம் மரியதாஸ் அருகில் உள்ள முல்லிப்பொத்தானை என்ற கிராமப்புற நகரில் அவரது வீட்டிலேயே வைத்து
மரணதண்டனை பாணியில் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். எல்லா ஆதாரங்களும் அவரது கொலையில் இராணுவம் சம்பந்தப்பட்டிருப்பதை
சுட்டிக்காட்டின. சோ.ச.க. மற்றும் உலக சோசலிச வலைத் தளமும் மரியதாஸ் கொலை பற்றி முழு விசாரணை
நடத்த வேண்டும் என்றும் கொலையாளிகளுக்கு எதிராக வழக்குத் தொடுக்கப்பட வேண்டுமெனவும் கோரி ஒரு சர்வதேச
பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளது. (பார்க்க: "இலங்கை சோ.ச.க. சிவப்பிரகாசம் மறியதாஸ் கொலை பற்றிய
முழு விசாரணையைக் கோருகிறது")
இந்தத் தொடர்ச்சியான கொலைச் சம்பவங்கள் தற்செயலானதல்ல. அரசாங்கமும் இராணுவமும்
கிழக்கு மாகாணத்தில் கணிசமான பிரதேசங்களை புலிகளிடமிருந்து மீண்டும் கைப்பற்றும் எதிர்பார்ப்பை கொண்டுள்ளன.
2004 புலிகளுக்குள் நடந்த பெரும் பிளவினால் புலிகளின் போரிடும் சக்தி தீர்க்கமான முறையில் பலவீனமடைந்துள்ளதாக
அவை கணிப்பிடுகின்றன. புலிகளின் முன்நாள் கொமான்டரான கருணா என்றழைக்கப்பட்ட வி. முரளீதரன், புலிகளில் இருந்து
பிரிந்ததில் இருந்தே புலிகளை தாக்குவதில் இராணுவத்துடன் நெருக்கமாக ஒத்துழைத்து வருகின்றார். கடந்த இரு
நாட்களாக, கிழக்கு மாவட்டமான மட்டக்களப்புக்கு அருகில் புலிகளின் முகாம்கள் மீதான தமது தாக்குதலை விமானப்படை
உக்கிரப்படுத்தியுள்ளது.
மோதல் உக்கிரமடைவதானது, வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள முழு பொதுஜனங்களையும்
பீதிக்குள்ளாக்குவதை இலக்காக கொண்ட அடக்குமுறைப் பிரச்சாரத்துடன் இணைந்ததாகும். பொத்துவில்வாசிகள் குறிப்பிடுவதன்படி,
அதிரடிப்படை, மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) மற்றும் ஜாதிக ஹெல உறுமய போன்ற சிங்களப் பேரினவாதக்
கட்சிகளுட்ன சேர்ந்து உள்ளூர் வெகுஜனங்களைப் பிளவுபடுத்துவதற்காக இனவாத பதட்டங்களை கிளறுவதற்கு வேண்டுமென்றே
முயற்சித்துவருகின்றது. இந்தப் பத்துத் தொழிலாளர்களின் படுகொலையும் இதே இலக்கை அடைவதற்காக சிறப்பாக திட்டமிடப்பட்டிருக்கலாம்.
ஒரு உள்ளூர்வாசி உலக சோசலிச வலைத் தளத்திடம் தெரிவித்ததாவது:
"இந்தப் பிரதேசம் சிங்களம், தமிழ் மற்றும் முஸ்லிகள் நட்புடன் வாழும் பிரதேசமாகும். மற்றும் அவர்கள் அவ்வறு
வாழ்வதையே விரும்புகிறார்கள். அதிரடிப்படை, குறிப்பாக இந்தப் பிரதேசத்தில் உள்ள அதன் தளபதி, இதை
(குற்றத்தை) தொடக்கிவைத்துள்ளார். அதனாலேயே மக்கள் அதை அகற்றக் கோருகின்றனர்.
"ஜே.வி.பி. மற்றும் ஜாதிக ஹெல உறுமயவும் அதிரடிப் படைக்கு ஆதரவளிக்கின்றன. இந்த
இரு அமைப்புகளும் முழுமையாக முஸ்லிம்களுக்கு எதிரானவை. மக்கள் மத்தியிலான எந்தவொரு ஐக்கியத்தையும் தகர்ப்பதே
அவர்களின் தேவை. 2005 முற்பகுதியில், இவர்களின் ஆதரவுடன் உலையில் ஒரு புத்தர் சிலை நிர்மாணிக்கப்பட்டது. இது
இனவாத பதட்டங்களை உக்கிரப்படுத்தியது. இந்த யுத்தம் எங்களது ஐக்கியத்தை உடைக்கவே திட்டமிடப்பட்டதாகும்.
அனைவரும் ஒன்றாக வாழ்வதையே நாம் விரும்புகிறோம்." |