World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Brother of murdered SEP supporter in Sri Lanka speaks to WSWS

இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட சோ.ச.க. ஆதரவாளரின் சகோதரர் உலக சோசலிச வலைத் தளத்துடன் உரையாடுகிறார்

By our correspondents
7 September 2006

Use this version to print | Send this link by email | Email the author

இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க.) ஆதரவாளரான சிவப்பிரகாசம் மரியதாஸ், ஆகஸ்ட் 7 முல்லிப்பொத்தானையில் உள்ள அவரது வீட்டில் துப்பாக்கிதாரியால் படுகொலை செய்யப்பட்டார். முல்லிப்பொத்தானை கிழக்குத் துறைமுகமான திருகோணமலையில் இருந்து 20 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஒரு கிராமப்புற நகரமாகும். இக்கொலைபற்றி, சோ.ச.க. ஒரு முழு விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் மற்றும் கொலைகாரர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட வேண்டுமெனவும் கோரி ஒரு அனைத்துலகப் பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளது.

இதுவரையும் முறையான பொலிஸ் விசாரணைகள் எதுவும் நடைபெறவில்லை. இதுவரை சோ.ச.க. சேகரித்துக்கொண்டுள்ள விபரங்களில், கொலையாளிகள் இராணுவம், பொலிஸ் அல்லது அவற்றோடு இணைந்து செயலாற்றும் துணைப்படைக் குழுக்களின் உறுப்பினர்களையே சுட்டிக்காட்டுகின்றன. அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவத் தாக்குதல்களை முன்னெடுத்து நாட்டை மீண்டும் உள்நாட்டு யுத்தத்திற்குள் மூழ்கடித்துள்ள நிலையில், வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள உள்ளூர் வெகுஜனங்களை கிலிகொள்ளச் செய்யும் திட்டமிட்ட நடவடிக்கைகளை இந்தப் படுகொலை கோடிட்டுக்காட்டுகிறது.

மரியதாஸின் மூத்த சகோதரரான சிவப்பிரகாசம் பெனடிக்ட், வயது 34, உலக சோசலிச வலைத் தளத்துடன் இந்த அவலத்தைப் பற்றி பேசினார். அவரது சகோதரரின் கொலை பற்றி அன்றிரவு கேள்விப்பட்ட பெனடிக்ட் இன்னமும் அதிர்ச்சியில் உள்ளார். தனது சகோதரரின் கொலையாளிகளை நீதிக்கு முன் கொண்டுவர சோ.ச.க. முன்னெடுத்துள்ள பிரச்சாரத்திற்கு தனது ஆதரவை அவர் தெரிவித்தார்.

"எனது சகோதரரின் முஸ்லிம் அயலவர் ஒருவரே எனக்கு தொலைபேசி மூலம் அறிவித்தார். பிரதேசத்தில் உள்ள பாதுகாப்பு நிலைமைகளால் இரவில் பயணிக்கும் சாத்தியம் இல்லாததன் காரணமாக எங்களால் முல்லிப்பொத்தானைக்கு அடுத்தநாள் காலையே செல்ல முடிந்தது."

பெனடிக்ட் திருகோணமலைக்கு அருகில் உள்ள செல்வநாயகபுரத்தில் வசிக்கின்றார். திருகோணமலைக்கு தெற்காக உள்ள மூதூர் நகரைக் கைப்பற்ற இராணுவத்திற்கும் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற கடும் மோதல்களால் மாவட்டம் பூராவும் இராணுவம் நின்றதோடு வீதித் தடைகளும் போடப்பட்டிருந்தன.

"எனது சகோதரரின் வீடு ஒரு முஸ்லிம் பாடசாலைக்குப் பின்னால் இருக்கின்றது. அங்கு மூதூரில் இருந்து இடம்பெயர்ந்த நூற்றுக்கணக்கான அகதிகள் தஞ்சம் புகுந்துள்ளனர். சுமார் அரைக் கிலோமீட்டர் தூரத்தில் ஒரு பெரிய இராணுவ முகாம் உள்ளது. நன்கு பயிற்றப்பட்ட அனுபவசாலியால் மட்டுமே இந்தக் கொலையை செய்ய முடியும். இந்தக் குற்றத்தை செய்துவிட்டு யாரும் பிடிபடாமல் தப்புவது இலகுவான விடயம் அல்ல," என பெனடிக்ட் தெரிவித்தார்.

ஆகஸ்ட் 9, செல்வநாயகபுரத்தில் நடந்த மரியதாஸின் இறுதிக் கிரியைக்கு 500 பேருக்கும் மேல் வருகை தந்திருந்தனர். மரண வீட்டுக்கு வந்தவர்களை நெருங்கிய படையினர் புலிகள் இயக்க உறுப்பினரின் இறுதிச் சடங்கிற்கு போகக் கூடாது எனக் கூறியதை அங்கு வந்த சிங்கள மற்றும் முஸ்லிம் அனுதாபிகளிடமிருந்து பெனடிக்ட்டின் குடும்பத்தார் தெரிந்துகொண்டதாக அவர் கூறினார். தனது சகோதரர் புலிகளுடன் உறவு வைத்திருந்தார் என்பதை பெனடிக்ட் மறுத்தார்.

"சகோதரர் இறந்து இரு நாட்களின் பின்னர் செல்வநாயகபுரத்தில் இருந்து எனது வீட்டுக்கு மாலை 6 மணிக்கு வந்த இரு சிப்பாய்கள், இரவு 7 மணிக்கு அவர்களது முகாமுக்கு வரும்படி அழைத்தனர். நான் உள்ளூர் பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்வதற்காக சென்றேன். பொலிஸார் அங்கு என்னைப் போகவேண்டாம் என ஆலோசனை கூறினர். அடுத்த நாள் காலையில், நான் எனக்குத் தெரிந்த ஒரு பொலிஸ் அதிகாரியுடன் சேர்ந்து படை முகாமிற்கு சென்றேன். நான் பொலிசுக்கு சொன்னதையிட்டு ஆத்திரமடைந்த படையினர் எங்களைத் திருப்பி அனுப்பிவிட்டனர். நான் உயிருக்குப் பயந்தேன்."

மரியதாஸ் பற்றியும் முல்லிப்பொத்தானையில் உள்ள படையினர் அவதூறுகளைப் பரப்பினர். மரியதாஸின் வியாபரம் பற்றி ஏற்பாடுகளை செய்ய குடும்ப அங்கத்தவர்கள் அங்கு சென்ற போது, தமது அனுதாபங்களைத் தெரிவித்த உள்ளூர் முஸ்லிம்களும் சிங்களவர்களும் அவர் ஒரு நல்ல மனிதர் என்றனர். ஆயினும், அதே சமயம், அவரது இறுதிச் சடங்கின்போது மரியதாசுக்கு புலிகள் பதக்கம் அணிவித்தனரா என்றும் சிலர் கேட்டனர். இராணுவம் இந்தக் கதையை நகருக்குள் பரப்பி வருகின்றது.

"இது ஒரு பிரச்சாரம். எப்பொழுதும் ஒரு தமிழர் கொல்லப்பட்டாலும் அவர் புலி உறுப்பினர் என முத்திரை குத்தப்படுகிறார். நாங்கள் திருகோணமலையில் பயத்துடனேயே வாழ்கின்றோம். அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று மக்களுக்குத் தெரியாது. திருகோணமலையில் எந்த சந்தர்ப்பத்திலும் எதுவும் நடக்கலாம்," என பெனடிக்ட் தெரிவித்தார்.

"மரியதாஸ் முல்லிப்பொத்தானைக்கு செல்லத் தீர்மானித்த போது நாங்கள் அந்தத் திட்டத்திற்கு எதிராக ஆலோசனை கூறினோம். சிங்கள, முஸ்லிம் மற்றும் தமிழர்களுக்கு இடையிலான உறவு அந்தளவு சுமூகமாக இல்லை என்பதையிட்டு நாம் கவலைப்பட்டோம். ஆனால் மரியதாஸ் தன்னை யாரும் எதுவும் செய்யமாட்டார்கள் என்று கருதினார்.

"என் தம்பி நன்றாக சிங்களம் பேசுவார். அவர் எப்போதும் துன்பத்தையும் இன்பத்தையும் அடுத்தவர்களோடு பகிர்ந்துகொண்டார். எப்பொழுதும் சிங்கள மக்களுடைய வேலைகளை (படம் எடுத்தல்) செய்ய தயக்கம் இருந்தாலும், அவர் அங்கு போய் எந்தப் பிரச்சினையும் இன்றி செய்துவிட்டு திரும்பி வருவார்.

"அவர் எப்பொழுதும் வெளிப்படையானவராகவும் சுறுசுறுப்பாகவும் இருந்தார். இராணுவத்தினருடன் ஏதாவது பிரச்சினை இருந்தால், அவர்களின் முகத்தின் முன்னாலேயே அவர்களை விமர்சிப்பார். புலிகள் பற்றியும் அவர் அவ்வாறே விமர்சித்து வந்துள்ளார்."

பெனடிக்ட், மரியதாஸ் ஆகிய இருவரும் திருகோணமலை புனித ஜோசப் வித்தியாலயத்தில் கல்வி கற்றுள்ளனர். மரியதாஸ் ஒரு சிறந்த மாணவனாக விளங்கியதோடு உயர் தரத்தில் கணிதம் கற்ற போதிலும் அவரால் பல்கலைக்கழகம் செல்ல முடியாமல் போய்விட்டது. தமது பாடசாலை கல்வி முடிந்ததும் இரு சகோதரர்களும் நிழற்பட ஸ்டூடியோக்களை நடத்தினர். பெனடிக்ட் திருகோணமலையிலும் அவரது சகோதரர் முல்லிப்பொத்தானையிலும் ஸ்டூடியோக்களை நடத்தி வந்தனர்.

இந்த மாவட்டத்தில் மீண்டும் யுத்தம் வெடித்தமையானது மிகப் பெரும் சிரமங்களை ஏற்படுத்தியுள்ளதாக பெனடிக்ட் விளக்கினார்.

"யுத்தத்தின் காரணமாக எங்களுக்கு சுதந்திரம் கிடையாது. எங்களால் எங்களது வியாபாரத்தை செய்து எங்களது அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள எங்கும் போக முடியாது. இது ஒரு பெரும் பிரச்சினை. நான் அந்தப் பிரதேசத்தில் இருந்து வெளியேறியதே இந்தக் காரணத்தினால்தான். எல்லா சாதாரண தமிழர்களும் இந்தப் பிரச்சினைகளையே எதிர்கொள்கின்றனர்.

"நாங்கள் வாழும் செல்வநாயகபுரம் திருகோணமலையில் இருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. சுமார் 1,000 குடும்பங்கள் அங்கு வசிக்கின்றன. பெரும்பாலானவர்கள் நாள் கூலி வேலை செய்வதோடு கடலுக்கு நெருக்கமாக உள்ளவர்கள் மீன் பிடிக்கச் செல்வார்கள். மீனவர்களுக்கும் பெரும் பிரச்சினைகள் உள்ளன. ஒரு முறை யுத்தம் தொடங்கிவிட்டால், மீன்பிடித் தடை மற்றும் கடல் மோதல்கள் காரணமாக அவர்களால் கடலுக்கு போக முடியாது. ஆகவே அவர்களால் சீவிக்க முடியாத நிலையில் வேறு வேலையைத் தேட வேண்டும்.

"மக்கள் தமது நடமாட்டங்களை மட்டுப்படுத்திக் கொண்டுள்ளனர். வெளியில் செல்பவர்கள் மாலை 4 அல்லது 5 மணிக்குள் திரும்பிவிடுவர். கடைகளும் நேரத்தோடு மூடப்பட்டுவிடும். வீதிகளில் உங்களால் இளைஞர்களைக் காண முடியாது. பாடசாலைகள் திறந்திருந்தாலும் அரைவாசி மாணவர்கள் பாடசாலை செல்வதில்லை. வாழ்க்கை மிகவும் கடினமானது.

"எதிர்காலம் என்ன என்று என்னால் நிச்சயிக்க முடியாவிட்டாலும், நாங்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வு வேண்டும். யுத்தத்திற்கு முடிவையும் அனைவருக்கும் சமாதானத்தையுமே நாம் விரும்புகிறோம்" என்று மரியதாஸின் சகோதரர் குறிப்பிட்டார்.

எமது வாசகர்களையும் ஆதரவாளர்களையும் மரியதாஸ் படுகொலையை கண்டனம் செய்யுமாறும் முழு விசாரணையை நடத்தி குற்றவாளிகளைக் கைது செய்து பொறுப்பானவர்கள் மீது குற்றஞ்சாட்டுமாறும் இலங்கை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்து கடிதம் எழுதுமாறு சோ.ச.க. மற்றும் உலக சோசலிச வலைத் தளமும் வேண்டுகோள் விடுக்கின்றன.

கண்டனக் கடிதங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:

Inspector General of Police Chandra Fernando,
Police Headquarters, Colombo 1, Sri Lanka.
Fax: 0094 11 2446174
Email: igp@police.lk

Attorney General K.C. Kamalasabeyson,
Attorney General's Department,
Colombo 12, Sri Lanka.
Fax: 0094 11 2436 421

பிரதிகளை சோசலிச சமத்துவக் கட்சிக்கும் (இலங்கை) மற்றும் உலக சோசலிச வலைத் தளத்திற்கும் அனுப்பி வையுங்கள்.

Socialist Equality Party,
P.O. Box 1270,
Colombo, Sri Lanka.

உலக சோசலிச வலைத் தளத்தின் ஆசிரியர் குழுவுக்கு கடிதம் அனுப்ப தயவு செய்து இந்த online form. ஒன்லைன் படிவத்தைப் பயன்படுத்தவும்.