:
செய்திகள்
ஆய்வுகள்
:
வட அமெரிக்கா
US spy agencies pressed for "intelligence" to justify
war against Iran
ஈரானுக்கு எதிரான போரை நியாயப்படுத்துவதற்கு அமெரிக்க உளவுத்துறை அமைப்புக்கள்
"உளவுத் தகவல்களுக்காக" அழுத்தங்கள் கொடுக்கின்றன
By Bill Van Auken
28 August 2006
Use this version
to print | Send this link by email
| Email the author
ஈரான் தன்னுடைய யூரேனிய அடர்த்தி திட்டத்தை கைவிட வேண்டும் என்பதற்கான ஐக்கிய
நாடுகள் சபை தீர்மானத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஆகஸ்ட் 31 காலகெடு அண்மிக்கையில், அமெரிக்க ஆளும்
வர்க்கத்தின் ஒரு பிரிவு அமெரிக்க உளவுத்துறை பிரிவுகளுக்கு ஈரானின் அணுசக்தி நோக்கங்கள் உடனடி அணுவாயுத
அச்சுறுத்தலை கொண்டுள்ளன என்பதற்கு "சான்றுகள்" தருமாறு அழுத்தத்தை கொடுத்துக் கொண்டிருக்கின்றன.
புஷ் நிர்வாகத்தில் ஈராக்கிய போர் தொடக்கப்படுவதற்கு முன்பு துணை ஜனாதிபதி
டிக் செனியும் மற்றவர்களும் சதாம் ஹுசைனிடம் இல்லாதிருந்த பேரழிவு ஆயுதங்கள் பற்றியும், அதை ஒட்டி
அந்நாட்டை அமெரிக்கா படையெடுத்து ஆக்கிரமிப்பதை நியாயப்படுத்தும் வகையிலும் போலி "உளவுத் தகவலை"
உற்பத்தி செய்ய கூறியதை போன்ற நோக்கங்களைத்தான் இந்த இலக்கும் உள்ளது.
கடந்த புதனன்று, ஐ.நா. இறுதி எச்சரிக்கைக்கு தன்னுடைய பதிலை ஈரான்
கொடுத்த மறுநாள், மிக அவசரமாகவும், நேர்த்தியற்றும் எழுதப்பட்டுள்ள மன்ற உளவுத்துறை குழுவின் அறிக்கையின்
அரசியல் முக்கியத்துவம் இதுதான்; பொருளாதார தடைகளை தவிர்க்கும் வகையில் தீர்மானத்தின் நிபந்தனைகள்
நிறைவேற்றப்படுவதற்கு, ஈரானின் பதிலில் உள்ள தன்மை "மிகக் குறைவாக" உள்ளன என்பது வாஷிங்டனுடைய
கருத்து ஆகும்.
ஐ.நா.பாதுகாப்பு குழுவில் தடுப்பதிகாரம் பெற்றுள்ள உறுப்பு நாடுகளான
ரஷ்யாவும் சீனாவும் இன்னும் கூடுதலான பேச்சு வார்த்தைகள் வேண்டும் என்னும் ஈரானின் அழைப்பிற்கு ஆதரவு உண்டு
என்ற குறிப்பு கொடுத்துள்ள நிலையில், வாஷிங்டன் சற்றும் தளர்ந்து கொடுக்காமல் ஐ.நா.வின் ஆணைக்கு
தெஹ்ரான் நிபந்தனையற்ற முறையில் சரணடைய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
இத்தகைய போக்கை பின்பற்றுவதற்கான எந்த விருப்பத்தையும் ஈரான் காட்டுவதாக
இல்லை. மாறாக, சனிக்கிழமையன்று, ஈரானிய ஜனாதிபதி மகம்மது அஹ்மதிநிஜாத் மத்திய ஈரானில் அராக்
என்னுமிடத்திற்கு அருகே கன நீர் ஆலையொன்றை அடையாள முறையில் தொடக்கிவைக்கும் விழாவை நடாத்தினார்.
இந்த நிலையம் முற்றிலும் சமாதான வழிவகைகளுக்காக இருக்கும் என்றும் மருத்துவ, விஞ்ஞான, விவசாயத்
தேவைகளுக்கு உதவும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். ஆனால் மேலைநாட்டு சக்திகளோ இன்னமும் கட்டுமான
நிலையிலுள்ள ஆய்வு உலையில் இருந்து கனநீர் உற்பத்தி செய்யப்படுவதற்கு பயன்படுத்தப்படும் எரிவாயுவின் மிச்சத்தில்
இருந்து அணுவாயுதங்கள் உற்பத்திக்கு பயன்படும் பொருளான புளோட்டினியம் எடுக்கப்படலாம் என்று
வலியுறுத்துகின்றன.
ஈரானிய அரசாங்கம் முற்றிலும் ஆகஸ்ட் 31 கெடுவிற்கு உட்பட்டு நடக்காவிட்டால்,
பொருளாதார தடைகள் பற்றிய நடவடிக்கைகள் "விரைவுபடுத்தப்படும்" என்று அமெரிக்க நிர்வாகம்
உறுதிபூண்டுள்ளது. அது தெஹ்ரானுடன் வேண்டுமென்றே மோதுவதற்கு முயன்று வருகிறது; இதற்காக
நிராகரிக்கப்பட்டுவிடும் எனத் தெரியும் கோரிக்கைகளை முன்வைத்து ஐ.நா.வில் சில நடவடிக்கைகள் எடுப்பது
போல் காட்டுகிறது. அப்பொழுதுதான் ஐ.நா. இந்நெருக்கடியை தீர்க்க இயலாதது போன்ற அறிவிப்பு வந்ததால்
ஒருதலைப்பட்ச அமெரிக்காவின் நடவடிக்கை தேவை என்ற நிலை உருவாகியுள்ளது என்ற தோற்றம் ஏற்படும்.
வாஷிங்டன் போஸ்ட்டின் கருத்துப்படி, மன்றக் குழு அறிக்கையின் வரைவு முன்னாள்
CIA
முகவராக இருந்து, ஈரான் மீது அவருடைய கடுமையான கண்ணோட்டத்திற்காக நன்கு அறியப்பட்டிருந்த, குடியரசுக்
கட்சியின் குழு உறுப்பினரான பிரெடெரிக் பிளேட்ஸினால் தயாரிக்கப்பட்டது. ஐ.நா.வின் தூதராக
நியமிக்கப்படுவதற்கு முன் அரச வெளிநாட்டுத்துறையின் மூன்றாம் முக்கியத்துவம் வாய்ந்த அதிகாரியாக, ஆயுதப்
பெருக்கத்தடுப்பு பிரிவிற்கு பொறுப்பு கொண்டிருந்த ஜோன் போல்ட்டனுடைய சிறப்பு உதவியாளராக பிளீட்ஸ்
இருந்தார்.
பிளீட்சுடனுடைய உதவியுடன், போல்டன் ஈராக், ஈரான், வட கொரியா ஆகிய
நாடுகளின் அரசாங்கங்களை "தீமையின் அச்சு" என்று அழைத்து அரக்கத்தனமாக சித்தரித்ததில் ஒரு முக்கிய பங்கை
கொண்டிருக்கக்கூடும் என ஊகிக்க இடமுண்டு. மற்றும் கியூபாவிற்கு எதிரான அச்சம் ஏற்படுத்தும் பிரச்சாரத்தை
வளர்ப்பதில் ஹவானா ஒரு இரகசிய உயிரியல் ஆயுதங்கள் திட்டத்தை கொண்டிருக்கிறது என்ற பிரச்சாரத்தை (அது
தவறு என்ற நிரூபணம் ஆகும் என்றாலும்கூட) தொடக்கவும் முற்பட்டிருந்தார்.
"ஈரானை ஒரு மூலோபாய வகையில் அச்சுறுத்தும் நாடு என உணர்தல்" என்ற
தலைப்பில் தயாரிக்கப்பட்டுள்ள மன்ற உளவுத்துறை குழுவின் அறிக்கை போர்ப் பிரச்சார கட்டுரை போல் உள்ளது.
அது ஈரானிய ஜனாதிபதி அஹமதினிஜாட், "சியோனிசம் இல்லாத உலகம்" என்ற பதாகையை கொண்டுள்ள அரங்கம்
ஒன்றில் இருந்து பேசுவது போன்ற கோரமான வண்ணப் புகைப்படத்தை அட்டையில் கொண்டுள்ளது.
ஆவணம் வலியுறுத்தும் முக்கிய நோக்கம், "ஈரானை பற்றி நம்பிக்கையுடன் தங்கள்
கருத்தாய்வுகளை பகுப்பாய்வாளர்கள் மேற்கொள்ளுவதற்கு தேவையான முக்கிய தகவல்கள் அமெரிக்காவிடம்
இல்லை; இதேபோல் தகவல் இடைவெளிகளில் பல முக்கிய நீக்கங்கள் உள்ளன." என்பதுதான்.
அது CIA
மற்றும் பிற அமெரிக்க உளவுத்துறை அமைப்புக்கள், "இந்த முக்கிய தலைப்புக்கள் பற்றி முடிவான கருத்தாய்களை
மேற்கொள்ளும் வகையில் அடிப்படைத் தகவல்களைக் கொடுக்கும் திறன் அற்றவையாக உள்ளன" என்று குற்றம்
சாட்டியுள்ளது. "மேலும் அமெரிக்கத் தேசியப் பாதுகாப்பிற்கு இன்றியமையாத தகவல்கள் பற்றிய திரட்டையும்
அவற்றால் கொடுக்க முடியவில்லை" எனக் கூறப்பட்டுள்ளது.
இதன்பின் ஈரானுக்கு எதிராகத் தானே கற்பனையில் பெரிதாக உருவாக்கிய
குற்றச்சாட்டுக்களைக் கூறுகிறது; அவற்றுள் பலவும் வேண்டுமேன்றே அமெரிக்க மற்றும் ஐ.நா. சர்வதேச அணுசக்தி
நிறுவனம் கொடுத்துள்ள திரிபுபடுத்தப்பட்டுள்ள அறிக்கைகளை அடித்தளமாக கொண்டதாகும் .செய்தித் தாள்களில்
இருந்து கிடைக்கும் அறிக்கைகள், பாதுகாப்பு மந்திரி ரம்ஸ்பெல்ட் மற்றும் பிற நிர்வாக அதிகாரிகள் கொடுத்துள்ள
அறிக்கைகளில் இருந்து திரட்டப்பட்ட கருத்துக்களில் இருந்து பல கூற்றுக்கள் கூறப்பட்டுள்ளன.
ஈரானின் அடர்த்தித்திட்டம் பற்றிய தகவல்களை பிழைப்படுத்துதல்
ஈரானின் அணுசக்தித்திட்டம் பற்றிய ஆதாரமற்ற கூற்றுக்கள் அமெரிக்கா, ஐ.நா.
ஈரானிய அரசாங்கமே கொடுத்துள்ள மதிப்பீடுகளில் இருந்து முற்றிலும் முரண்பாடுடையதாக உள்ளன. "164 ரக
இயந்திர செறிவுபடுத்தும் நீர்ப்பாய்ச்சலை (164-machine
centrifuge cascade) பயன்படுத்தும் ஆயுத தரம் உள்ள
யுரேனியத்தை அடர்த்தி செய்து வருகிறது ஈரான்" என்று அது கூறுகிறது. உண்மையில், ஒரு குண்டு தயாரிப்பதற்குத்
தேவையான 80 சதவிகித அடர்த்திக்குப் பதிலாக, ஈரான் 3.5 சதவிகித அடர்த்தியைத்தான் சாதித்துள்ளது.
இவ்வறிக்கையில் கொடுத்துள்ள ஆயுதத்தைத் தயாரிப்பதற்கு 164 ரக இயந்திர செறிவுபடுத்தும் நீர்ப்பாய்ச்சல்
அல்லாது 16,000 ரக செறிவுபடுத்தல் தேவைப்படும்.
கற்பனையான வகையில் பயங்கரமான "உளவுத் தகவல்களை" தயாரிப்பது என்பது
அணுவாயுதங்களைத் தயாரிக்கும் நிலைக்கு ஈரான் வருவதற்கு இன்னும் பல ஆண்டுகள் பிடிக்கும் என்னும் ஏற்கப்பட்டுள்ள
உளவுத்துறை மதிப்பீடுகளை எதிர்க்கும் வகையில் உள்ளது. இந்த மதிப்பீடுகள் "ஒருதலைப்பட்சமான போரை''
தொடக்குவதற்கு ஈரானின் அணுவாயுதத்திட்டம் ஒரு போலிக்காரணமாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையைக்
கொண்டவை ஆகும்.
உதாரணமாக, புஷ் நிர்வாகத்தின் தேசிய உளவுத் துறையின் இயக்குனரான ஜான்
நெக்ரோபோன்டே, கடந்த ஜூன் மாதம் BBC
க்குக் கொடுத்த பேட்டி ஒன்றில் "அடுத்த தசாப்தத்
துவக்கத்திற்கும் அதற்கு அடுத்த தசாப்த இடைக்காலம் வரை உள்ள காலம் வரை" ஈரான் அணுவாயுதத்தை
உற்பத்தி செய்ய முடியாது என்று கூறியுள்ளார். இதே போல் கடந்த பெப்ருவரி மாதம் செனட்டின் உளவுத்துறைக்
குழுவிடம் நெக்ரோபோன்டே ஈரானிடம் அணுவாயுதமோ, அதைத் தயாரிக்கத் தேவையான உபகரணப்
பொருட்களோ இல்லை என்ற அமெரிக்க உளவுத்துறை நம்புவதாகத்தான் கூறினார்.
சமீபத்திய லெபனானுக்கு எதிரான இஸ்ரேலிய போரை, ஈரான் உத்தரவின் பேரில்
ஹெஸ்பொல்லா நிகழ்த்திய தூண்டுதல் செயல் என்ற ஆதாரமற்ற கூற்றையும் மன்றக் குழு முன்வைத்துள்ளது.
ஹெஸ்பொல்லா ஈரானின் கைப்பாவைதான் என்றும் சித்தரித்துக் காட்டப்படுகிறது; இந்த மதிப்பீடு இபிராந்தியத்தை
பற்றி அறிந்தவர்கள் அனைவராலும் கிட்டத்தட்ட நிராகரிக்கப்பட்டதாகும். இத்தகைய உறவு உள்ளது என்று கூறி
அதை ஈரான் "பயங்கரவாத கையாட்கள்'' மூலம் தன்னுடைய உலகச் செல்வாக்கை வளர்ப்பதற்கு
பயன்படுத்துவதற்கான உதாரணம் என்றும் குழுவின் அறிக்கை சித்தரித்துக் காட்டுகிறது.
ஆவணம் மேலும் கூறுவது: "அல் கொய்தாவுடன் ஈரானுக்குத் தொடர்பு
இருக்குமேயானால், அதன் தன்மை தெளிவாக இல்லை; அமெரிக்க உளவுத் துறை இந்த முக்கியமான இயக்கத்தன்மை
பற்றி தன்னுடைய உட்பார்வையை அதிகரிக்க வேண்டும். ஈரான் அதன் கையாட்களுடன் கொண்டுள்ள உறவுகள் அதற்கு
(மோசமான) உலகத் தரத்தைக் கொடுக்கிறது; பேரழிவு ஆயுதங்களை தெஹ்ரான் அவற்றிற்கு அளிக்குமேயானால்
விளைவு என்னும் பேராபத்தைக் கொடுக்கும்."
2002ல் நிர்வாகம் ஈராக்-அல் கொய்தா தொடர்பை பற்றிக் கற்பனையாக
கூறுவதற்கு பயன்படுத்திய ஆதாரமற்ற அறிக்கைகளில் பயன்படுத்திய அதே சொல்லாட்சிக்கு ஒப்பாகத்தான் இந்த
ஆவணத்தின் சொல்லாட்சியும் உள்ளது. அமெரிக்க மக்களை ஈராக்கில் இருந்து கிடைக்கும் ஆயுதங்களை கொண்ட
பயங்கரவாதிகள், அமெரிக்க நகரங்களை அணுவாயுதங்களால் தாக்க இருப்பவர்கள் எனக் கூறி பயமுறுத்தும்
பிரச்சாரத்திற்கு இத்தகைய கற்பனையுரைதான் அடிப்படையாக இருந்தது.
ஈரானை பற்றியும் அதேபோன்ற "உளவுத் தகவல்கள்" தேவை என்று ஆவணம்
ஆலோசனை கூறியுள்ளது. "பகுப்பாய்வாளர்கள் அனைத்து எதிர்பார்ப்புக்களையும் நன்கு ஆராய்ந்து, மரபார்ந்த
அறிவிற்கும் சவால் விடும் எதிர்பாராத விந்தையான மதிப்பீடுகளையும் ஆராய வேண்டும். ஈரான் பற்றிய
பகுப்பாய்வாளர்கள் இன்னும் கூடுலான வகையில் ஈரான் பற்றிய வெளிப்படை தகவல்களை நன்கு பயன்படுத்த
வேண்டும்; ஈரானில் பெருகிவரும் (அரசாங்க சீற்றத்திற்குட்பட்டாலும்கூட) செய்தி ஊடகத்தில் தகவல்கள்
மலிந்துள்ளன" என்றும் ஆவணம் கூறியுள்ளது.
"எதிர்பாராத விந்தையான மதிப்பீடுகள்" என்பதற்கு புனைந்து கூறப்படுவதை
உளவுத்துறை தனது கைகளில் எடுத்துக் கொண்டு ஈராக், நைகரில் இருந்து யூரேனியம் வாங்கியது பற்றிய கதை
உலவவிடப்பட்டது அல்லது பாக்தாத் அதனிடம் இல்லாத அணுசக்தித்திட்டத்திற்காக அலுமினியக் குழாய்களை இறக்குமதி
செய்தது போன்ற தகவல்களை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்.
"வெளி ஆதார உளவுத் தகவல்", "துன்புறத்தப்படும்" ஈரானிய செய்தி ஊடகம்
ஆகியவற்றை நம்ப வேண்டும் என்ற ஆலோசனையின் பொருள் ஈரானிய புலம் பெயர்ந்த குழுக்களின்பால் கூடுதலான
நம்பிக்கை கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையாகும்; இவையோ ஈராக்கிய புலம் பெயர்ந்தோர் குழுக்கள்
போல் பேரழிவு ஆயதங்கள், பரந்த அளவிலான பயங்கரவாத தொடர்புகள் பற்றி முற்றிலும் ஏற்கமுடியாத,
மட்டமான கதைகளை கொடுப்பதில் இகழ்வடைந்தவர்கள் ஆவர்.
ஆகஸ்ட் 24ம் தேதி நியூயோர்க் டைம்சில் வெளிவந்த அறிக்கை ஒன்று பெயரிட
விரும்பாத அதிகாரபூர்வ ஆதாரங்களைக் காட்டி, அமெரிக்க உளவுத்துறை பிரிவுகளுக்கு எதிராக மன்றக் குழு
அறிக்கை இலக்கு கொண்டு குறைகூறுதல், அழுத்தம் கொடுப்பது ஆகியவற்றை பற்றி எழுதுகையில், "வெள்ளை
மாளிகை மற்றும் பென்டகனில் இருக்கும் சில அதிகாரிகளின் கருத்தை இவை பிரதிபலிக்கின்றன; இவர்கள்தான்
ஈராக்கிற்கு எதிராகப் போரிட வேண்டும் என்று வாதிட்டவர்கள்; இப்பொழுது ஈரான் மீதும் அதன் அணுவாயுத
திட்டம் பயங்கரவாதத்துடனான தொடர்பு என்று நேரடியாக மோத அழுத்தம் கொடுக்கின்றனர்." என்று
தெரிவித்துள்ளது.
"ஒரு மூத்த அமெரிக்க அதிகாரி" அமெரிக்க உளவுத்துறைப் பிரிவுகள் "திடமான
கருத்தாய்வுகளை கொடுப்பதில் தோல்வியுற்றுள்ளனர்" என குறைகூறியுள்ளதாக செய்தித்தாள் கூறியுள்ளது. அந்த
அதிகாரி மேலும் "நாம் ஒன்றும் நீதிமன்றத்தில் இல்லை. "சான்று இல்லை" என்று அவர்கள் கூறும்போது, நாம்
அதற்கு என்ன பொருள் என்று அவர்களை கேட்க வேண்டும், "சான்று" என்றால் என்ன என்று கேட்கவேண்டும்"
எனக்கூறியுள்ளார்.
இச்சொற்றொடர்களின் பொருள் ஈராக்கிய போரின் போது நன்கு தெளிவாகியது;
ஐ.நா.வின் ஆயுத ஆய்வாளர்களும் அமெரிக்க பகுப்பாய்வாளர்களும், வாஷிங்டனின் ஈராக்கிய "பேரழிவு ஆயுதங்கள்"
பற்றி ஆதாரப்படுத்திய குறிப்புக்கள் ஏதும் இல்லை என்று வலியுறுத்தியிருந்தனர். ஆனால் இந்த மதிப்பீடுகளை எதிர்க்கும்
வகையில் வெள்ளை மாளிகை மற்றும் பென்டகன் அதிகாரிகள்
CIA பகுப்பாய்வாளர்களை
மிரட்டி புலம் பெயர்ந்திருந்த குழுக்களின் பரபரப்பான மதிப்பீடுகளை நல்ல நாணயம் போல் ஏற்க வைத்து,
தங்களுடைய "உளவுத் தகவல்களை" இட்டுக் கட்டுவதற்கு வெளி ஆதாரங்களையும் நிறுவினர்.
இத்தகைய முயற்சியின் மிக வெளிப்படையான உதாரணம், ஈரானில் இருந்து வரும்
ஆபத்து எனப்படுவதை மிகைப்படுத்திக் கூறுவது பற்றிய உதாரணம், முன்னாள் மற்ற அவைத்தலைவரான நியூட்
கிங்ரிச்சிடம் இருந்து வந்துள்ளது. நியூயோர்க் டைம்சிற்கு இந்த முக்கியமான குடியரசுக் கட்சித் தலைவர்
கூறியதாவது: "அணுவாயுத தயாரிப்பில் இருந்து ஐந்து அல்லது பத்து ஆண்டுகள் தொலைவில் ஈரான் இருப்பதாக
உளவுத்துறையினர் கூறும்போது, நான் கேட்கிறேன், "நாளை வட கொரியா அவர்களுக்கு அணுவாயுதம் ஒன்றை
அனுப்பி வைத்தால், எத்தனை தொலைவில் அவர்கள் இருப்பர்?"
இராணுவவாதத்தின் சிதைந்த தர்க்கம்
இத்தகைய சிதைந்த தர்க்கம் கியூபா, வெனிசூலா அல்லது எந்த நாடு அமெரிக்க
ஏகாதிபத்தியத்தின் மூலோபாய நலன்களுக்குத் தடை என்று கருதப்பட்டாலும், அவற்றிற்கு எதிரான இராணுவ
நடவடிக்கை எடுக்கப்படுவதை நியாயப்படுத்த பயன்படுத்த முடியும்.
இந்த விவாதத்தில் உள்ள பகுத்தறிவற்ற தன்மையின் கூறுபாடு வியப்பானது; ஈரானுக்கு
எதிரான கடுமையான பொருளாதாரத் தடைகள், ஏன் இராணுவ நடவடிக்கைகூட --அதிலும் ஈராக்கில் அமெரிக்க
ஆக்கிரமிப்பு இப்பொழுதுள்ள நிலையில், உள்நாட்டில் மக்கள் அமெரிக்க ஏகாதிபத்தியம் உலகம் முழுவதும்
பரவுவதற்கு எதிராக கொண்டுள்ள உணர்வில்-- பைத்தியக்காரத்தனத்தில் விளிம்பில் உள்ளதாகத்தான் தோன்றுகிறது.
தெஹ்ரானுக்கு எதிராக கடுமையான பொருளாதார நடவடிக்கைகள் விரைவில்
வேண்டும் என்ற வாஷிங்டன் கோரிக்கை அரேபிய மற்றும் முஸ்லிம் உலகம் முழுவதும், மற்றும் பிற நாடுகளிடையேயும்
மக்களிடையே இகழ்வு, வெறுப்பு உணர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. வாஷிங்டன் தன்னுடைய அதிகாரம் அனைத்தையும்
இஸ்ரேலுக்கு எதிராக பொருளாதாரத் தடைகள் கொண்டுவரப்படுவதை தடுப்பதற்கும், லெபனானை இஸ்ரேல்
வேண்டுமென்றே அழித்து, நிரபராதியான குடிமக்களை படுகொலை செய்வதை அனைத்து நாடுகள் முயற்சிகளை தனது
வீட்டோ (தடுப்பு) அதிகாரம் கொண்டு, தன் வலிமை முழுவதையும் பயன்படுத்தியதை உலகம் ஆறு வார
காலத்திற்கு இழிவுடன் பார்த்தது
ஈரானுக்கு எதிரான போர் ஈராக்கில் உள்ள ஷியைட்டு மக்களால் மிகப் பெரிய
எழுச்சியை எரியூட்டக் கூடும்; இது ஏற்கனவே பெரும் தொல்லைகளுக்கு உட்பட்டுள்ள அமெரிக்க ஆக்கிரமிப்பு
படைகளுக்கும் எதிராகவும், மத்திய கிழக்கும் முழுவதும் பெரும் எழுச்சிக்களுக்கு வழிவகுக்கலாம்; மேலும் உலகிற்கு
தேவையான எண்ணெய் விநியோகங்கள் நிறுத்தப்பட்ட, உலகந்தழுவிய பொருளாதார நெருக்கடிக்கும் வகை
செய்யக்கூடும்.
ஆயினும்கூட போர் அச்சுறுத்தலென்பது ஐயத்திற்கு இடமின்றி வெளிப்படையாக உள்ளது;
இது மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு ஏகாதிபத்திய திட்ட தர்க்கத்தின் உந்துதலால் தொடக்கப்பட்டதாகும். ஈராக்கை
ஒரு அமெரிக்கக் காப்பு நாடாக மாற்ற வேண்டும் என்ற முயற்சி, அதையொட்டி அதன் பரந்த எண்ணெய்
வளங்களை அமெரிக்கா தன்னுடைய ஆதிக்கத்திற்கு உட்படுத்துதல் என்ற முயற்சி ஒரு பெரும் சங்கடத்தை
ஏற்படுத்தியுள்ளது; பல மதிப்பீடுகளின்படி இது ஈரானில் நிலைப்பாட்டை ஈராக்கிற்குள்ளும் அப்பகுதி முழுவதும்
வலிமையடைய செய்துள்ளது. இதற்கான தீர்வு அமெரிக்க ஆட்சி வட்டங்களின் முக்கிய கூறுபாடுகளின் கருத்துப்படி
ஈரானிலும் "ஆட்சி மாற்றத்தை" நோக்கமாகக் கொண்ட புதிய போருக்குத் தயார் செய்வது என்பதாக உள்ளது.
மீண்டும் அரசியல் கட்டமைப்பினுள் இத்தகைய போருக்கு எதிரான குரல் அதிக அளவில்
இல்லை. முக்கியமான ஜனநாயகக் கட்சி தலைவர்கள் புஷ் நிர்வாகத்தை வலதில் இருந்து தெஹ்ரானுக்கு எதிராக
போதுமான கடுமையான நடவடிக்கைகளை எடுக்காததற்கு குறை கூறியுள்ளனர்.
ஆகஸ்ட் 24ம் தேதி தலையங்கத்தில் வாஷிங்டன் போஸ்ட் உடனடியாக
பொருளாதாரத் தடைகள் வேண்டும் என்று அமெரிக்கா கோரியதற்கு பதிலாக இன்னும் பேச்சு வார்த்தைகள்
வேண்டும் என்று கூறிய ஈரானுக்கு ஆதரவு கொடுத்ததற்காக சீனாவையும் ரஷ்யாவையும் கடிந்து கொண்டுள்ளது.
வாஷிங்டன் ஈரானுக்கு எதிராக மேற்கொள்ளும் செயற்பாடுகளுக்கு ஆதரவு கொடுக்காவிட்டால், அமெரிக்க
இராணுவ நடவடிக்கையை விரைவுபடுத்தும் என்ற தெளிவான அச்சுறத்தலுடன் தலையங்கம் முடிவுரையைக் கூறியுள்ளது.
''ஆனால் ரஷ்யாவும், சீனாவும் தாங்கள் கூறிக்கொள்ளும் உலக உறுதிப்பாட்டிற்கான
சக்திகள் என்று ஏற்கப்பட வேண்டுமானால், அவர்கள் ஈரான் நெருக்கடியை சமாளிப்பதற்கு சமாதான முறையில் மேற்கொள்ளும்
மேலைநாட்டு முயற்சிகளை தகர்த்துவிடக் கூடாது. மத்திய கிழக்கில் இன்னும் கூடுதலான அழுத்தம் ஏற்பட்டால் அதன்
மூலம் எந்த பொறுப்பு வாய்ந்த சக்திக்கும் நலன்கள் கிட்டாது; ஈரானின் அணுவாயுத முயற்சிகள் தகர்க்கப்படுவதற்காக
பின்னர் போர் நேர்ந்தாலும் அதற்கும் இதே அணுகுமுறைதான் இருக்க வேண்டும்." என மேலும் எழுதியுள்ளது.
வேறுவிதமாகக்கூறினால், வாஷிங்டனுடைய முயற்சியான ஐ.நா.வை ஈரானுக்கு
எதிரான தன்னுடைய தயாரிப்புக்களுக்கு பயன்படுத்துவதற்கு எந்த நாடாவது ஆதரவு தரவில்லை என்றால் மற்றொரு
ஒருதலைப்பட்ட ஆக்கிரமிப்பு போரை அமெரிக்க துவக்கினால், அந்நாடுதான் அதற்குப் பொறுப்பு என்பதாகும்.
குடியரசுக் கட்சியை ஆதிக்கத்திற்கு உட்படுத்தியுள்ள வலதுசாரி தட்டுக்கள்,
ஈராக்கிற்கு எதிரான அமெரிக்காவின் தூண்டுதலற்ற போரை ஒத்திகை பார்த்து நடத்தியதில் முக்கிய பங்கு
கொண்டவர்கள் இன்னும் வெளிப்படையாக பேசுகின்றனர். ஈரான் பற்றிய புஷ் நிர்வாகத்தின் கொள்கையில் அவர்கள்
பெருகிய முறையில் கசப்புணர்வை காட்டுகின்றனர்; அதிலும் அரச வெளியுறவுத்துறையும் அதன் செயலாளர்
கொண்டலீசா ரைசும் கொண்டுள்ள பங்கினைப் பற்றியும் கடுமையாக விமர்சித்துள்ளனர். அமெரிக்காவும் இஸ்ரேலும்
லெபனானில் இராணுவரீதியாகவும், அரசியல்ரீதியாகவும் அடைந்த பின்னடைவின் பின்னர், இந்தக் குறைகூறல்
வெறித்தனத்தில் உயர்ந்த ஒலிக்குறிப்பை காட்டியுள்ளது. மிக முக்கியமான வலதுசாரி கட்டுரையாளர்கள்
கொள்கையை "அமைதிப்படுத்தும்" தன்மையுடையது என்றும் ஹிட்லருடன் மூனிக்கில் 1938ம் ஆண்டு நெவில் சேம்பர்லின்
கையாண்ட விதத்துடன் இதை ஒப்பிட்டுக் கூறுகின்றனர்.
ஆனால் குடியரசு வலதின் முக்கிய கருத்துக்களில் இருந்து வரும் கருத்தான உறையவைக்கும்
உதாரணங்களில் ஒன்று, கடந்த வாரம் வால்டர் வில்லியம்ஸ் என்னும் கட்டுரையாளர்
Townhall. com
ல் எழுதியுள்ள கட்டுரையாகும்.
"இதை நினைத்துப் பாருங்கள். தற்பொழுது அமெரிக்காவிடம் 18 ஓகையோ (18
Ohio) தர நீர்மூழ்கிக் கப்பல்கள் உண்டு. ஒரு நீர்மூழ்கிக்
கப்பலில் 24 டிரைடென்ட் (Trident)
அணுவாயுத ஏவுகணைகள் உள்ளன. ஒவ்வொரு டிரைடென்ட் ஏவுகணையும் எட்டு அணுவாயுதங்களை தாங்கிச்சென்று,
சுயாதீனமாக இலக்குகளை தாக்கும் திறன் உடையது. இதன் பொருள் அமெரிக்காவால் மட்டும்தான் ஈரான், சிரியா
அல்லது பயங்கரவாதக் குழுக்களை ஆதரிக்கும் அல்லது பயங்கரவாதத்தில் ஈடுபடும் நாட்டை, ஒரு படையினரை கூட
தான் இழக்காமல்
அழித்துவிட முடியும்." என்று வில்லியம்ஸ் எழுதியிருக்கிறார்.
"உலக மக்கள் கருத்தைப்" பற்றி வாஷிங்டன் கொண்டுள்ள அக்கறையை பற்றியும்
வில்லியம்ஸ் இதன் பின்னர் புலம்புகிறார்; "உறுதியற்ற தன்மைதான்" இந்நாடுகளுக்கு எதிராக ஒரு பேரழிவு தரக்கூடிய
அணுவாயுதத் தகர்ப்பை கட்டவிழ்த்துவிடுதலை தடுக்கிறது என்றும் கூறுகிறார். "மத்திய கிழக்கில் உள்ள எமது விரோதிகளை
அழிக்கும் முயற்சி என்பது, கூட்டு சேதம் என அழைக்கப்படும் நிரபராதிகளின் உயிர்களைப்பற்றி கைபிசைந்து நிற்கும்
நிலையைதான் எப்படியும் ஏற்படுத்தும்'' என மேலும் கூறிகின்றார்.
இப்பொழுதுள்ள வாஷிங்டன் நிர்வாகத்திற்கு அரசியல்ரீதியாக நெருக்கமான பிரிவினரால்
தான் இப்படிப்பட்ட சொற்கள் எழுதப்பட்டு, வெளியிடப்படலாம் என்பது அமெரிக்க ஏகாதிபத்தியம் உள்ள ஆழ்ந்த
நெருக்கடி மற்றும் அது கொடுக்கும் ஆபத்து ஆகியவற்றின் அளவை காட்டுகிறது. அதன் சில பிரிவினருக்கு "பயங்கரவாதத்தின்
மீதான உலகளாவிய போர்" என்பது பல மில்லியன் கணக்கான மக்களை அழித்தல் என்ற பொருளை
கொடுத்துள்ளது.
Top of page |