World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Capture of Sampur sets stage for intensification of civil war in Sri Lanka

சம்பூர் கைப்பற்றப்பட்டமை இலங்கையில் உள்நாட்டு யுத்தம் உக்கிரமாவதற்கு களம் அமைக்கின்றது

By Sarath Kumara
8 September 2006

Back to screen version

இலங்கை அரசாங்கப் படைகள் பல நாட்கள் தொடர்ந்த மோதலை அடுத்து கடந்த ஞாயிற்றுக் கிழமை பிரதான கிழக்கு நகரமான சம்பூரை தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றியுள்ளனர். கொழும்பு அரசாங்கமும் மற்றும் ஊடகங்களும் இந்த நடவடிக்கையை ஒரு உயர்ந்த வெற்றியாக பாராட்டியதோடு, இராணுவம் புலிகளுக்கு எதிரான தனது எதிர்த் தாக்குதலை விரிவுபடுத்த எதிர்பார்ப்பதையும் சுட்டிக்காட்டின.

ஆயிரக்கணக்கான துருப்புக்களை ஈடுபடுத்தி ஆகஸ்ட் 26 முன்னெடுக்கப்பட்ட இந்தத் தாக்குதல் முற்றுப்பெற ஒன்பது நாட்கள் எடுத்தன. சம்பூர் மற்றும் அதைச் சூழ உள்ள பிரதேசங்கள் மீது இராணுவம் ஜெட் விமானங்களைப் பயன்படுத்தி குண்டுத் தாக்குதல் நடத்தியதில் ஆயிரக்கணக்கான பொது மக்கள் இடம்பெயரத் தள்ளப்பட்டனர். விடுதலைப் புலிகள் இறுதியாக நகருக்குள் சிப்பாய்கள் நுழைவதற்கு முன்னதாகவே சம்பூரில் இருந்து வெளியேறி விட்டனர்.

இராணுவப் பேச்சாளரின்படி, இராணுவம் 15 பேரை இழந்துள்ளதுடன் 90 பேர் காயமடைந்துள்ளனர். 90க்கும் மேற்பட்ட புலிகளை கொன்றுள்ளதாக இராணுவம் கூறிக்கொள்கின்றது. உயிரிழந்தவர்கள் பற்றி அல்லது மோதலின் உக்கிரம் பற்றி சுயாதீனமான ஒப்பாய்வுகள் கிடையாது. இந்தப் பிரதேசத்தில் பொதுமக்கள் இருந்தனர் என்பதை இராணுவம் மறுக்கின்ற அதே வேளை, புலிகளின் பேச்சாளர் ஒருவர் 97 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக அறிவித்தார்.

சம்பூரைக் கைப்பற்றியமை 2002 யுத்த நிறுத்தத்தை பகிரங்கமாக மீறுவதாகும். இது அரசாங்கம் யுத்த நிறுத்தத்திற்கு தொடர்ந்தும் பெயரளவில் மட்டும் கட்டுப்படுவதை தெளிவாக்கியுள்ளது. திருகோணமலையில் உள்ள பிரதான துறைமுகம் மற்றும் கடற்படைத் தளத்திற்கு நேரடியாக எதிர்த் திசையில் அமைந்துள்ள இந்தப் பிரதேசம், நீண்ட காலமாக இராணுவத்தின் பிரதான இலக்குகளில் ஒன்றாக இருந்து வந்துள்ளது. கொழும்பில் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா சற்றே உயிர் தப்பிய ஒரு தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்கு எதிரான தாக்குதல் என்ற பெயரில், முதல் முறையாக சம்பூர் பிரதேசத்தில் புலிகளின் நிலைகள் மீது ஏப்பிரலில் விமானத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

ஜூலை மாத பிற்பகுதியில், விவசாயிகளுக்கு தண்ணீர் வழங்குவதற்காக என்ற "மனிதாபிமான" சாக்குப் போக்கில் மாவிலாறு தண்ணீர் அனைக்கட்டின் மதகைக் கைப்பற்றுவதற்காக, முதலாவது பிரதான இராணுவத் தாக்குதலை ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ முன்னெடுத்தார். இந்த நடவடிக்கையானது புலிகளின் பதில் தாக்குதல்களைத் தூண்டியது. புலிகள் சம்பூரின் அயலில் உள்ள மூதூரின் சில பகுதிகளைக் கைப்பற்றியதுடன் திருகோணமலை துறைமுகத்தின் மீதும் ஷெல் தாக்குதல்கள் நடத்தினர். இராணுவம் விமான மற்றும் ஆட்டிலரித் தாக்குதல்களின் மூலம் பதிலடி கொடுத்தது.

இராஜபக்ஷ, இந்த புதிய நடவடிக்கைக்கும் மனிதாபிமான மேலாடை அணிய முயற்சித்தார்: "எமது ஆயுதப் படைகள் சம்பூரில் உள்ள மக்களின் நலன்களுக்காகவே அதைக் கைப்பற்றினர்," என அவர் பிரகடனம் செய்தார். புலிகளின் பிராந்தியத்தைக் கைப்பற்றுவதை நியாயப்படுத்தவும் இதே தர்க்கத்தை நிச்சயமாக பயன்படுத்தப்படக் கூடும். உண்மையில், இந்த நடவடிக்கை "மக்களின் நலனை" அல்லது யுத்த நிறுத்த உடன்படிக்கையின் விதிகளைக் கணக்கில் கொள்ளாமல் இராணுவ இலக்குகளை அடைவதற்காகவே முன்னெடுக்கப்பட்டது.

ஜூலை கடைப்பகுதியில் இருந்து, 200,000 ற்கும் அதிகமான பொது மக்கள் இடம்பெயர்ந்துள்ளதோடு தேவையான உணவு அல்லது மருந்துகளும் இன்றி தற்காலிக முகாங்களில் வாழத் தள்ளப்பட்டுள்ளனர். புலிகளின் படி, புதிய மோதல்கள் மட்டக்களப்புக்கு அருகில் உள்ள வாகரையில் அகதிகளின் எண்ணிக்கையை சுமார் 45,000 ஆக அதிகரிக்கச் செய்துள்ளன. பாதுகாப்புப் படையினர் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் தஞ்சமடைந்துள்ள அகதிகளுக்கு நிவாரணங்கள் செல்ல அனுமதி மறுத்துள்ளனர்.

அரசாங்கத்தின் பாதுகாப்புப் பேச்சாளர் கேஹேலியே ரம்புக்வெல்ல, புதிய தாக்குதல்கள் "பிராந்தியத்தைக் கைப்பற்றுவதைக்" குறிக்கோளாகக் கொண்டதல்ல -- இதனால் அது யுத்த நிறுத்தத்தை உத்தியோகபூர்வமாக மீறுவதாகாது-- என நகைப்புக்கிடமான முறையில் வாதிட்டுள்ளார். எவ்வாறெனினும், பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க, இராணுவம் சம்பூர் பிரதேசத்தில் தமது நிலைகளை "பலப்படுத்திக் கொண்டிருப்பதாகவும்" "இராணுவ முகம்களை" அமைக்கத் திட்டமிடுவதாகவும் பிரகடனம் செய்துள்ளார். நகரில் ஒரு பொலிஸ் காவல் நிலையமும் ஏற்கனவே ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. லங்காதீப பத்திரிகையின்படி, துருப்புக்கள் சம்பூரைச் சூழ உள்ள பிரதேசங்களின் கட்டுப்பாட்டை எடுப்பதற்காக இப்போது இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.

யுத்த நிறுத்தத்தை மேற்பார்வை செய்யும் இலங்கைக் கண்காணிப்புக் குழுவின் பேச்சாளரான தொர்பினர் ஒமர்சன், அரசாங்கத்தின் இராணுவ நடவடிக்கை முடிவுக்கு வந்துள்ளது என்ற எதிர்பார்ப்பை வெளிப்படுத்தியதுடன், இல்லையெனில் இது 2002 யுத்த நிறுத்தம் முழுமையாக முறிந்துபோனதையே அர்த்தப்படுத்தும் எனவும் தெரிவித்தார். "யுத்த நிறுத்தம் முடிவடைந்துவிட்டதா என புலிகள் எங்களிடம் கேட்கின்றனர். அவ்வாறில்லை என நாம் நிச்சயமாக நம்புகிறோம்," என அவர் தெரிவித்தார்.

கொழும்பில் யுத்தக் காய்ச்சல்

எவ்வாறெனினும், சம்பூரிலான இராணுவ "வெற்றியானது" கொழும்பில் உள்ள ஆளும் வட்டாரத்தில் யுத்த ஆர்வத்தை மட்டுமே கிளறிக்கொண்டிருக்கின்றது. இராஜபக்ஷ திங்களன்று நடந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (ஸ்ரீ.ல.சு.க) மாநாட்டில், அரசாங்கம் "பயங்கரவாதிகளால் நன்கு புரிந்துகொள்ளக்கூடிய மொழியிலேயே அவர்களுக்கு" பதிலளிக்கும் என வெற்றி ஆரவாரத்துடன் தெரிவித்தார்.

சிங்களப் பேரினவாத மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி), அரசாங்கம் புலிகளுக்கு எதிராக ஒட்டுமொத்த தாக்குதலை முன்னெடுக்க வேண்டும் எனக் கோரிக்கொண்டிருக்கின்றது. செவ்வாய்க் கிழமை ஜே.வி.பி. வெளியிட்ட அறிக்கையில், இராணுவத்தை மகிழ்ச்சிக் கொண்டாட்டத்துடன் பாராட்டிய அதன் பாராளுமன்ற குழுத் தலைவர் விமல் வீரவன்ச, "புலிகளை கிழக்கு மாகாணத்தில் இருந்து துடைத்துக்கட்ட வேண்டிய தேவையை" வலியுறுத்தினார். அவர் மேலும் கூறுகையில், "புலி பயங்கரவாதிகளை வடக்கு மாகாணத்தில் இருந்தும் வெளியேற்ற வேண்டும்" என்றார்.

ஜே.வி.பி. ஏற்கனவே இராஜபக்ஷ அரசாங்கத்தை பாராளுமன்றத்தில் ஆதரித்த போதிலும், அதை அமைச்சரவைக்குள் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளும் இடம்பெறுகின்றன. ஜே.வி.பி. யின் 20 கோரிக்கைகளில், 2002 யுத்த நிறுத்தத்தில் இருந்து விலகுவதும் மற்றும் சமாதான முன்னெடுப்புகளின் உத்தியோகபூர்வ அனுசரணையாளரான நோர்வேயை விலக்குவதும் உள்ளடக்கப்பட்டுள்ளது. இதுவரை ஜே.வி.பி. யின் யுத்த வேலைத்திட்டத்தை வெளிப்படையாக அணைத்துக்கொள்ள தயங்கி வந்துள்ள இராஜபக்ஷ, அதற்குப் பதிலாக இராணுவத்தின் உக்கிரமான நடவடிக்கைகளை உருமறைத்துக்காட்ட விரும்புகிறார்.

புதன் கிழமை நடந்த ஒரு பத்திரிகையாளர் மாநாட்டில், அரசியல் தாக்குதலை மேற்கொண்ட வீரவன்சவும் ஏனைய ஜே.வி.பி. தலைவர்களும், இராஜபக்ஷவையும் அரசாங்கத்தையும் "உத்வேகம் குறைந்தவர்கள்" மற்றும் "நேரடியாக சிந்திக்கும்" வல்லமையற்றவர்கள் என குற்றஞ்சாட்டினர். வீரவன்ச, நான்கு வருடங்களுக்கும் மேலாக அமுலில் இருந்த யுத்த நிறுத்தத்தை அரசியலமைப்பிற்கு முரணானது, ஆகவே அது கிழித்தெரியப்பட வேண்டும் எனப் பிரகடனம் செய்தார். இந்த உருக்குலைந்த தர்க்கத்தின் மூலம் புலிகளுடனான எந்தவொரு பேச்சுவார்த்தையும் அல்லது யுத்த நிறுத்தமும் "அரசியலமைப்பிற்கு புறம்பானதே". அவற்றின் பண்பின்படி, தேசிய அரசியலமைப்பு உள்நாட்டு யுத்தத்தை கட்டுப்படுத்தப் போவதில்லை.

எவ்வாறெனினும், வெறுமனே ஜே.வி.பி. மட்டுமன்றி, முழு ஆளும் ஸ்தாபனமும் சம்பூர் "வெற்றியை" அடுத்து யுத்த மனநிலையில் இணைந்துகொண்டுள்ளது. 2002ல் யுத்த நிறுத்தத்தை கைச்சாத்திட்டு சமாதான முன்னெடுப்புகள் என சொல்லப்படுவதற்காக பிரச்சாரம் செய்த எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க.), மீண்டும் யுத்தத்திற்குள் விழுவதை எதிர்க்கவில்லை. இந்த வாரம் ஐ.தே.க. இராணுவத்தின் புதிய தாக்குதலைப் பற்றி தனது "மகிழ்ச்சியை" பகிரங்கமாக வெளிப்படுத்தியதோடு சம்பூரைக் கைப்பற்றுவதில் அதன் வெற்றியையும் "வரவேற்றது".

கொழும்பில் உள்ள நச்சுத்தனமான சூழ்நிலையை, "மிதவாத பத்திரிகையையும்" விஞ்சுகிற அளவில் டெயிலி மிரர் பத்திரிகை நேற்று வெளியிட்ட ஒரு ஆசிரியர் தலைப்பில் சிறப்பாக எடுத்துக்காட்டப்பட்டிருந்தது. "புலிகள் மற்றும் அதன் கடும்போக்கு ஆதரவாளர்கள் தவிர்ந்த, இந்த நாட்டின் எந்தவொரு நபரும் அல்லது குழுவும் படையினரின் இந்த சாதனையை பாராட்டத் தவறியவர்கள் இருப்பார்கள் என்பது கற்பனைக்கு எட்டாததாகும்," என அது பிரகடனம் செய்துள்ளது. "அரசியல் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக ஆயுத மோதல்களையும் வன்முறைகளையும் விட்டொழித்தவர்களும் கூட, வன்முறையற்ற வழியின் ஊடாக சமாதானத்தை அடைவதற்கு பங்களிப்பு செய்யும் ஒரு காரணியாக இந்த சம்பவத்தை வரவேற்கத் தயங்கமாட்டார்கள்," என அது மேலும் தெரிவிக்கின்றது.

இந்த ஆசிரியர் தலைப்பு, ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் "சமாதானத்திற்கான யுத்தம்" என்ற அவப்பெயர் பெற்ற கோட்பாட்டை எதிரொலிக்கின்றது. 1994ல் சமாதானத்திற்காக வாக்குறுதியளித்துக்கொண்டு முதற் தடவையாக ஆட்சிக்கு வந்த சந்திரிகா குமாரதுங்க, புலிகளுக்கு எதிரான யுத்தத்தை உக்கிரமாக்குவதை மட்டுமே செய்தார். வலதுசாரி ஐ.தே.க. யின் முன்னைய அரசாங்கத்தைக் காட்டிலும், 2002 வரை ஆட்சியில் இருந்த அவரது ஸ்ரீ.ல.சு.க. தலைமையிலான அரசாங்கத்தின் கீழ், பெரும் உயிரிழப்புக்களையும் பேரழிவுகளையுமே நாடு கண்ணுற்றது. புலிகளுக்கு எதிரான புதிய ஆக்கிரமிப்பானது சமாதானத்திற்கு "பங்களிப்பு செய்யும் காரணியாக" இருப்பதற்குப் பதிலாக ஒரு உக்கிரமடையும் இரத்தக் களரிக்கு மட்டுமே வழிவகுக்கும்.

இந்த எல்லாப் பிரச்சாரத்தினதும் தவறான சுய நம்பிக்கைக்கு ஒரு அடிப்படை உள்ளது. சம்பூர் பற்றிய நன்நிலை உணர்வில், அரசியல் ஸ்தாபனமானது கடந்த கால தோல்விகள் அனைத்தையும் மறந்துவிட்டதோடு இரு தசாப்தங்களுக்கும் மேலாக இராணுவத்தால் அடைய முடியாமல் இருந்த முழு வெற்றி இப்போது சாத்தியமாகும் என நம்பிக்கொண்டிருப்பதாகவே தோன்றுகிறது. உடனடி மோதல்களின் விளைவுகள் என்னவாக இருந்தாலும், தீவின் உள்நாட்டு யுத்தமானது அரசியல் சமூக முரண்பாடுகளிலேயே வேரூன்றியுள்ளது. இதற்கு ஆளும் கும்பல்களிடம் தீர்வு கிடையாது. புலிகளை எந்தவிதத்திலாவது "வெற்றிகொள்வதானது" திட்டமிட்ட இனவாத பாரபட்சங்கள் சம்பந்தமாக தீவின் தமிழ் சிறுபான்மையினர் மத்தியில் ஆழமாக வேரூன்றியிருக்கும் மனக்கசப்பும் ஆத்திரமும் இன்னொரு வடிவில் வெடிப்பதை மட்டுமே அர்த்தப்படுத்தும்.

அரசாங்கம் தற்போதைய இராணுவத் தாக்குதல்களை நிறுத்தப் போவதற்கான அறிகுறிகள் எதுவும் கிடையாது. கிழக்கு மாவட்டமான அம்பாறையில் உள்ள புலிகளின் முகாம்கள் மீது இந்தவாரம் மேலதிகத் தாக்குதல் நடந்துள்ளன. கொழும்பு ஊடகங்களின்படி, புலிகளில் இருந்து பிரிந்து சென்ற கருணா குழு, இராணுவத்துடன் இணைந்து இந்த நடவடிக்கையை முன்னெடுக்கின்றது.

இன்னுமொரு நகர்வில், கடந்த வாரம் இலங்கை மத்திய வங்கி, ஆறு மாதங்களுக்கு தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் அனைத்து நிதிகளையும் முடக்குவதற்கான சட்டப்பூர்வ அங்கீகாரத்தை நீதிமன்றத்திடம் பெற்றுக்கொண்டுள்ளது. புலிகளுக்கு சார்பான தமிழர் புனர்வாழ்வுக் கழகம் நலன்புரி அமைப்பாக பதிவுசெய்யப்பட்டுள்ளதோடு 1985ல் இருந்து இயங்கி வருகின்றது. கழகத்தின் நிதியை துண்டிப்பதானது, 20 வருட யுத்தத்தாலும் மற்றும் 2004 சுனாமியாலும் பேரழிவுக்குள்ளாகியுள்ள வடக்கு கிழக்கில் உள்ள பொதுமக்களுக்கு அழிவுகரமான பாதிப்பை ஏற்படுத்தும்.

சம்பூர் இழப்பைப் பற்றி புலிகள் பிரதிபலிக்கையில், அரசாங்கத்தின் நடவடிக்கைகளை யுத்த நிறுத்த உடன்படிக்கையின் முடிவாக தாம் கருதுவதாக நோர்வே தூதர் ஹன்ஸ் பிரட்ஸ்கருக்கு அறிவித்துள்ளனர். அரசியல்துறைப் பொறுப்பாளர் எஸ்.பி. தமிழ்செல்வன் ஊடகங்களுக்குத் தெரிவித்தது போல், "கட்டுப்பாட்டு எல்லைகளைக் கடக்காமல் இருப்பது யுத்த நிறுத்த உடன்படிக்கையின் அடிப்படை விதிகளில் ஒன்றாகும்." பிரட்ஸ்கர் கிளிநொச்சியில் உள்ள புலிகளின் தலைமையகத்தில் இருந்த போது, விமானப்படை விமானமொன்று ஆத்திரமூட்டும் விதத்தில் தலைக்குமேல் பறந்தது.

மீண்டும் தமிழ்செல்வன் புலிகளின் முன்நோக்கின் அரசியல் வங்குரோத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவர் இந்தத் தாக்குதல் தொடர்பாகவும் மற்றும் தமிழர்களின் அவலநிலை தொடர்பாகவும் "சர்வதேச சமூகம்" "குறைவாகவே நடவடிக்கை எடுப்பதாக" முறைப்பாடு செய்துள்ளார். பெரும் வல்லரசுகளின் ஆதரவைப் பெறுவதற்கான வேண்டுகோள் முற்றிலும் பயனற்றதாகும். "சர்வதேச சமூகமானது" இலங்கை மக்கள் மீதான அக்கறையினால் அன்றி, இந்த மோதல்கள் அமெரிக்க மற்றும் ஏனைய வல்லரசுகளின் பிராந்திய நலன்களை துண்டிப்பதாலேயே அதற்கு முடிவுகட்டுவதன் பேரில் இந்த பெயரளவிலான சமாதான முன்னெடுப்புகளுக்கு ஆதரவளிக்கின்றன. "குறைந்த நடவடிக்கை எடுப்பதானது" கையாளும் விதத்தில் ஒரு மாற்றத்தை சாதாரணமாக சுட்டிக்காட்டுகிறது --குறிப்பாக அமெரிக்கா, இராணுவ ரீதியில் இந்த மோதலுக்கு முடிவுகட்டும் இராஜபக்ஷ அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு மெளனமாக இருந்து ஆதரவளிக்கின்றது.

ஓரளவுக்கு முன்னறிவிக்கும் எச்சரிக்கையாக, "தமிழ் மக்கள் மீதான அரசாங்கத்தின் நடவடிக்கைகளின் விளைவாக, எதிர்காலத்தில் அதே தலைவிதியை சிங்கள மக்களும் முகங்கொடுக்கும் நிலைக்கு, சர்வதேச சமூகம் வேறுபாடான முறையில் செயற்படக் கூடாது" என தமிழ்செல்வன் பிரகடனம் செய்தார். அரசாங்கத்தைப் போலவே, புலிகளும் பிற்போக்கு இனவாத அரசியலில் வேரூன்றியுள்ளனர். ஒரு மூலைக்குள் முடக்கப்பட்டுள்ள புலிகள், கடந்த காலத்தைப் போலவே, தமிழ் பொதுமக்கள் மீதான இராணுவத்தின் கொடூரங்களுக்கு பதிலடியாக "சிங்கள மக்களுக்கு" எதிரான தமது சொந்த அட்டூழியங்களை பயன்படுத்தக் கூடும். அத்தகைய நடவடிக்கை பேரழிவுமிக்க உள்நாட்டு யுத்தத்திற்கு மீண்டும் மேலும் எண்ணெய் வார்க்கும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved