World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

France: Socialist mayor threatens to evict homeless immigrants by force

பிரான்ஸ்: வீடுகளற்ற புலம்பெயர்ந்தோரை கட்டாயப்படுத்தி வெளியேற்றி விடுவதாக சோசலிஸ்ட் மேயர் அச்சுறுத்துகிறார்

By Kumaran Rahul and Antoine Lerougetel
6 September 2006

Use this version to print | Send this link by email | Email the author

தெற்கு பாரிஸ் புறநகரத்தில் உள்ள கஷோனின் சோசலிஸ்ட் கட்சியை சேர்ந்த துணை மேயரான Jean-Yves Le Bouillonnec, செப்டம்பர் 1 அன்று செய்தி ஊடகத்திடம் முதலில் ஆக்கிரமிப்பில் இருந்து வெளியேற்றப்பட்டு ஒரு விளையாட்டு பயிற்சியகத்தில் புகலிடம் நாடியுள்ள 200 பேரை அகற்றுவதற்கு தக்க சட்டபூர்வ நடவடிக்கைகளை எடுக்க தான் "தயங்க மாட்டேன்" என்று கூறியுள்ளார்.

"பேச்சு வார்த்தைகள் மூலம் ஒரு தீர்வை காண நான் முயன்று வருகிறேன். ஆனால் நீதிமன்ற ஆணையை பெற வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால், நிலைமை தீர்வு காணப்படாதிருப்பதை காண நேர்ந்தால், உடற்பயிற்சிக் கூடம் மீண்டும் செயல்படுவதற்கு நான் தடுக்கப்பட்டால், சுகாதாரச் சூழல் அதை கோரினால், அதை பயன்படுத்த நான் தயங்க மாட்டேன்." என்று அவர் கூறினார். திங்கட்கிழமைதான் பள்ளிகள் ஆண்டு விடுமுறைக்கு பின்னர் திறக்கும் நாளாகும்; இந்த கூடம் பொதுவாக பள்ளி மாணவர்களால் பயன்படுத்தப்படுகிறது.

அதில் அமர்ந்திருப்பவர்கள் புலம்பெயர்ந்தோர் ஆவர் ஒரு முன்னாள் மாணவர்கள் கைவிட்டிருந்த, கட்டிடமான F பில்டிங் என்ற ஐந்து மாடிக் கட்டிடத்தில் இருந்து அவர்கள் வெளியேற்றப்பட்ட பின்னர் Le Bouillonnec யின் அழைப்பின் பேரில் அவர்கள் இந்த உடற்பயிற்சி கூடத்தில் புகலிடம் நாடியவர்களாவர். இது கஷோனில் உள்ள Ecole Normale Superieure பல்கலைக்கழக வளாகத்தில் உள்ளது. அங்கு அமர்ந்துள்ளவர்களுக்கு எதிராக பயன்படுத்துவதற்காக, 500 பேர் அடங்கிய குடியரசு பாதுகாப்புப் படையின் ஒரு மிகப் பெரிய பிரிவு ஒன்று ஆகஸ்ட் 17 உள்துறை மந்திரி நிக்கோலா சார்க்கோசியின் உத்தரவின் படி நிறுத்தப்பட்டது. இவர்களில் பலர் மகளிரையும் குழந்தைகளையும் விட்டுவிட்டு வேலைக்கு சென்ற பின்னர், இரும்புத் தடி ஒன்றை பயன்படுத்தி கதவுகளை உடைத்த போலீசார் 141 குழந்தைகள் உட்பட 508 பேரை வெளியேற்றினர்.

"இரண்டு நாட்கள் மழையில் தெருக்களில் அவர்கள் இருந்ததால்" தற்காலிகமாக குடும்பங்களையும் குழந்தைகளையும் அங்கு தங்க தான் அனுமதித்திருந்ததாக துணை மேயர் விளக்கினார்.

பாழடைந்த கட்டிடங்களில் இருந்து பலாத்காரமாக வெளியேற்றல் தொடர்பான சார்க்கோசியின் கொள்கைகளுக்கு எதிரான ஒரு பிரச்சாரத்தில், பில்டிங் Fல் வந்து குடியேறியிருந்தவர்களை மிருகத்தனமாக வெளியேற்றுவதை Le Bouillonnec உம் சோசலிஸ்ட் கட்சியும் மையக் குவிப்பாக காட்டவில்லை. கடந்த ஆண்டு 50 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் குழந்தைகளின் இறப்பை ஏற்படுத்திய வின்சென்ட் ஓறியோல், பாரிஸ் ஓபெரா ஓட்டல் இன்னும் பிறவற்றில் பாரிசில் தீப்பற்றிய பின்னர் இக்கொள்கை ஆரம்பமானது. இந்த ஆண்டு இயற்றப்பட்டுள்ள மிகக் கடுமையான குடியேற்றச் சட்டத்தை எதிர்ப்பதற்கு ஒரு வாய்ப்பாகவும் பயன்படுத்தவில்லை. மாறாக, ஆளும் கோலிச மக்கள் இயக்கத்திற்கான ஐக்கியத்தின் (UMP) தலைவரும், 2007 ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளருமான சார்க்கோசியின் விருப்பத்திற்கு ஏற்பத்தான் அவர்களும் நடந்து கொள்ளுகின்றனர்.

வீடு இல்லாதவர்களின் முக்கிய கோரிக்கையாக காலி இடங்கள் பெறுதல் என்ற உடனடித் தீர்வு முயற்சியை மேற்கொண்டு அதற்கு மக்களுடைய ஆதரவை பெறுவதற்கு சோசலிஸ்ட் கட்சி முயன்று இருக்கலாம். 1948ம் ஆண்டு சட்டம் ஒன்றின்படி கஷோனில் அமர்ந்திருப்பவர்களுடைய நிலை போன்ற நெருக்கடி காலங்களுக்கு அது அளிக்கப்படுகிறது. ஆனால் வின்சென்ட் ஓறியோல் தீ விபத்தில் கடந்த ஆண்டு வெளிப்படுத்தப்பட்டவாறு, சோசலிஸ்ட் மற்றும் கம்யூனிஸ்ட், பசுமைக் கூட்டாளிகள் அனைவருமே இருக்கும் நிலைமையை பயன்படுத்தி வீடுகளின் விலைகளை மிக மிக அதிகமாக உயர்த்துவதில் முனைப்பாயுள்ள நில ஊகக் காரர்களை சவால் விடுவதற்கு திராணியற்று உள்ளனர்.

வீடு இல்லாதவர்களுக்கு ஆதரவு கொடுக்கும் அமைப்பான DAL (Right to Housing) நில ஊகச் செயல்களால் 409,491 வீடுகள் பாரிசை சுற்றியுள்ள Ile de France பகுதியில் காலியாக இருப்பதாக தகவல் கொடுத்துள்ளது. பாரிசில் மட்டும் இத்தகைய எண்ணிக்கை 1962ல் 20,000த்தில் இருந்து தற்பொழுது 136,554 என்ற பெரும் எண்ணிக்கையை எட்டியுள்ளது. இது மொத்த வீடுகள் தொகுப்பிலேயே 10.1 சதவிகிதம் ஆகும். அப்பொழுதில் இருந்து நிலைமை இன்னும் மோசமாகிவிட்டது.

நவம்பர் 30, 2001 வரை மக்கட்தொகையில் 7.5 சதவிகித 152,532 பாரிஸ் மக்கள் மிக கூட்டநெரிசல் சூழலில் வசித்து வந்தனர். அப்பொழுது பாரிஸ் நகர வீட்டு வசதி நிறுவனத்திடம் 100,329 விண்ணப்பங்கள் தேங்கியிருந்தன; அவற்றில் 89,831 விண்ணப்பங்கள் முன்னுரிமை தொகுப்பில் இருந்தன. ஆனால் ஆண்டு ஒன்றுக்கு 8,000த்தில் இருந்து 10,000 வீடுகள் மட்டுமே ஒதுக்கப்பட்டு வந்தன. புலம்பெயர்ந்தோர் குடும்பங்களுக்கு எதிராக தெளிவான பிரிவினைப் பாகுபாடு இருப்பதாக DAL அறிக்கை தெரிவிக்கிறது.

கஷோன் அமர்வு என்னும் நிலைமையில் இந்தப் பின்னணி உள்ளது; அதுவும் ஜனாதிபதி பதவி, அரசாங்க பொறுப்புக்கள் ஆகியவற்றில் 25 ஆண்டுகளுக்கு மேலாக சோசலிஸ்ட் கட்சியும் அதன் கம்யூனிஸ்ட், பசுமைக் கட்சி கூட்டாளிகளும் இருந்த பின்னர் உள்ள நிலைமை இதுவாகும்.

பாரிசும், கஷோன் உட்பட அதன் பல புறநகர்ப்பகுதிகளும் இக்கட்சிகளின் கூட்டுக்களால்தான் நிர்வகிக்கப்படுகின்றன. 2001ல் இருந்து வீடு இல்லாத புலம்பெயர்ந்தோர்கள் பில்டிங் Fல் வசித்து வந்தனர். பிரான்சிலேயே மிகப் பெரிய அமர்வு இல்லம் என்று அறியப்பட்டுள்ள இங்கு இருப்பவர்கள் தங்களை "கஷோன் ஆயிரத்தவர்" எனக் கூறிக் கொள்ளுகின்றனர். இவர்களில் பலரும் ஐவரி கோஸ்ட், மாலி மற்றும் செனெகலில் இருந்து வந்தவர்கள்; இதில் 200 குழந்தைகளும் அடங்குவர். இவர்கள் தற்காலிக மின் இணைப்புக்கள் மற்றும் மோசமான சுகாதார நிலை உள்ள 300 சிறிய மாணவர் அறைகளுள் (9 சதுர மீட்டர்கள்) திணித்து வைக்கப்பட்டிருந்தனர்.

2004ம் ஆண்டு உள்ளூர் மாணவர்கள் இல்ல அமைப்பு ஒன்று நீதிமன்ற உத்தரவை பெற்று இங்கு வசிப்பவர்களை அகற்றி கட்டிடத்தை தகர்த்து ஒரு கார்கள் நிறுத்துமிடம் கட்டுவதற்கான வழக்கில் வெற்றி பெற்றனர். ஆனால் அதிகாரிகளோ கட்டாய வெளியேற்றம் நடத்தினால் பெரும் மக்கள் எதிர்ப்பு ஏற்படும் என்று அஞ்சினர்.

உள்ளூர் மகளிர் உதவிக் குழு ஒன்றில் ஊழியராக இருக்கும் Mariama Diallo கார்டியனுக்கு கொடுத்த தகவலில் மனிதர் வாழ்வதற்கு இலாயக்கற்ற கட்டிடத்தில் வீடுகளை அமைத்துக் கொண்டு வாழும் ஆற்றொணா நிலைமை ஏற்பட்டுள்ளது பற்றி நன்கு தெரிவித்துள்ளார். "மனிதனின் பொறுமையை பெரிதும் சோதிக்கும் வரம்புகளை கொண்ட நிலையில் குடியிருப்புக்கள் உள்ளன... நான் வெளியே வந்தபோது, என்னை தட்டிவிட்டுக் கொண்டபோதும் தெள்ளுப்பூச்சிகள் போன்றவை உடலில் ஒட்டியிருந்தன. எவ்வித சுகாதார செயலுக்கும் இவ்விடம் உட்படுத்தப்படவில்லை. கசிவு ஏற்பட்டுள்ள இடங்கள், இடிந்து கொண்டிருக்கும் கட்டிடங்களுக்கு மத்தியில் நிம்மதியாக சுவாசிக்கக்கூட முடியாது. மனத்திற்கு பெரும் வேதனை தரும். குழந்தைகள் உடல் முழுவதும் சொறிகள் உள்ளன; ஆஸ்த்மா அல்லது பிற ஒவ்வாமை நோயினால் குழந்தைகள் வாடுகின்றன. ஆனால் பெற்றோர்கள் என்ன செய்யமுடியும்?"

பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் செய்தி ஊடகத்திடம் கூறினார்; "இந்தக் கட்டிடத்தில் பெரும் களிப்புடன் ஒன்றும் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கவில்லை... வேறு இடம் கிடைக்காத நிலையில்தான் இங்கு வசிக்கும் கட்டாயத்தில் உள்ளோம்."

கஷோனில் வெளியேற்றப்படுவதை எதிர்த்து பாரிசில் ஆகஸ்ட் 30 அன்று நிகழ்ந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில், உலக சோசலிச வலைத் தள நிருபர்களில் ஒருவரிடம் ஒரு எதிர்ப்பாளர் தான், அவருடைய மனைவி மற்றும் மூன்று வயது பெண்குழந்தை ஆகியோர் அமர்வில் இருந்து அகற்றப்பட்டதாகவும், அப்பொழுதில் இருந்து உடற்பயிற்சி கூடத்தில் வசித்து வருவதாகவும் கூறினார். "நான் ஐவரி கோஸ்ட்டில் இருந்து வந்துள்ளவன்; பிரான்சில் 2002ல் இருந்து வசித்து வருகிறேன். தக்க சான்றுகள் இல்லை என்ற காரணத்தால் என்னுடைய மனு நிராகரிக்கப்பட்டுள்ளது; எனவே என்னிடம் ஆவணங்கள் இல்லை. ஐவரி கோஸ்ட்டில் போர் ஏற்பட்டதால் நான் பிரான்சிற்கு வந்தேன். அதிகாரிகள் மனிதத்தன்மை அற்றும், போலீஸ் அடக்குமுறை கொடுமையாகவும் உள்ளது. சட்டவிரோதமாக இருப்பதால், என்னுடைய குடும்பத்திற்கு கொடுக்க வேண்டியவற்றை என்னால் அளிக்க முடியவில்லை; எனவே சில நண்பர்களுடைய உதவியுடன் வாழ்கிறேன். நிலையான விலாசம் இல்லாததால் என்னுடைய மகளை ஒரு மழலையர் பள்ளியில் கூடச் சேர்க்க முடியவில்லை." என்று அவர் கூறினார்.

கார்டியன் கொடுத்துள்ள ஒரு தகவலின்படி, அமர்ந்திருப்பவர்களில் பாதிப்பேர்தான் தஞ்சம் கோருபவர்கள் அல்லது சட்டவிரோதமாக குடியேறியவர்கள் ஆவர். மற்றவர்களுக்கு பிரான்சில் வசிக்கும் சட்டபூர்வ தகுதி உள்ளது; ஆனால் இனவெறி, பாகுபாடு ஆகியவற்றால் அவர்களுக்கு இல்லங்கள் கிடைக்கவில்லை. சிலருக்கு வேலைகள் உண்டு: ஒரு 25 வயது மின்சார ஊழியர் 13 வயதில் இருந்து பிரான்சில் சட்டபூர்வமாக வசித்து வருகிறார். அவர் கூறியதாவது: "எனக்கு கெளரவமாக ஒரு வேலை உள்ளது; ஒரு அடுக்கு மாளிகை குடியிருப்பில் வாடகைக்கு இருக்கும் வசதி உள்ளது. இப்படி அமர்விடத்தில் இல்லாமல் தலையின்மீது கூரையுள்ள இடத்தில் நான் வாழலாமே என்று நீங்கள் நினைப்பீர்கள். ஆனால் அது பிரான்சில் நடவாது. ஒவ்வொரு நாளும், வாழ்வின் ஒவ்வொரு கூறுபாட்டிலும் பாகுபாட்டு உணர்வை நான் அனுபவித்து வருகிறேன்.

கட்டிடம் Fல் இருந்து வெளியேற்றப்படுதல் "சுமுகமாக நடந்துவிட்டது" என்று உள்ளூர் அதிகாரிகள் வலியுறுத்திக் கூறுகின்றனர். ஆனால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வாழும் விடுதியின் மக்கள் கூட்டமைப்பு (A joint organisation of people in immigrant workers hostels) விடுத்துள்ள துண்டுப் பிரசுரம் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளது:

"கட்டிடத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் ஒன்றாக வசிக்க வேண்டும் என்று முடிவெடுத்துள்ளவர்கள் கட்டிடத்தின் முன் ஆகஸ்ட் 18, வெள்ளியன்று கூடினர். அவர்கள் போலீசாரால் தாக்கப்பட்டனர்; முன்னதாக அவர்கள் முற்றிலும் போலீசாரால் சூழப்பட்டிருந்தனர். பலரும் அடிக்கப்பட்டனர்; சிலர் மருத்துவமனைக்கு செல்ல நேரிட்டது. ஒரு குழந்தை உட்பட நான்கு பேருக்கு காயம் ஏற்பட்டது; ஒரு தாயாருக்கு முழங்காலில் முறிவு ஏற்பட்டது; ஒரு தகப்பனாரின் விலா எலும்பு முறிந்துள்ளது."

கிட்டத்தட்ட 60 ஆவணமற்ற புலம்பெயர்ந்தவர்கள் (Sans papiers) கைது செய்யப்பட்டனர்; இவற்றுள் கர்ப்பிணிப் பெண்களும் உள்ளனர்; இவர்கள் நாடுகடத்தப்படும் அச்சுறுத்தலில் உள்ளனர் என்று தகவல்கள் கூறுகின்றன. கஷோனில் இருந்து வெளியேற்றப்பட்ட மூன்று ஆவணங்கள் இல்லாதவர்கள் ஏற்கனவே சொந்த நாட்டிற்கு திரும்ப அனுப்பப்பட்டு விட்டனர்.

கிட்டத்தட்ட வெளியேற்றப்பட்டுள்ள 200 குடும்பத்தினர் ஓட்டல்களில் தற்காலிகமாக இருக்காலம் என்ற அழைப்புக்களை நிராகரித்துள்ளனர். இது அவர்களை பிரிக்கும் முயற்சி என அவர்கள் உணர்கின்றனர்; தங்களுடைய வீட்டுத் தேவைகளுக்கு இது நிரந்தர தீர்வைக் கொடுக்காது என்றும் கருதுகின்றனர்.

உடற்பயிற்சி கூடத்தில் புகலிடம் நாடியுள்ள 352 பேரில், "190 பேர் தங்களிடம் ஆவணங்கள் இல்லை என்று குறித்துள்ளனர்; 142 பேர் சட்டபூர்வ தகுதி உடையவர்கள். அதே நேரத்தில் ஓட்டலில் தங்குவதை ஏற்ற 254 பேரில், 129 பேரும் 61 குழந்தைகளும் ஆவணமற்றவர்கள்; 121 பேர்களும் 70 குழந்தைகளும் சட்டபூர்வ தகுதி பெற்றவர்கள்" என்று Le Bouillonnec அறிவித்துள்ளார்.

அமர்ந்திருப்போர் உடற்பயிற்சிக் கூடத்தில் இருக்கலாம் என்று Le Bouillonex அறிவித்ததில் இருந்து அவருக்கும் சார்க்கோசிக்கும் இடையே அவர்களுக்கு இடவசதி கொடுக்கும் பொறுப்பு எவருடையது என்ற பூசல் எழுந்துள்ளது.

கடந்த வாரம் சார்க்கோசி, "நான் கஷோனில் அமர்ந்திருப்போரை வெளியேற்றிய பின்னர், 2004ல் இருந்தே குடும்பங்களை அங்கு விட்டுவைப்பது ஆபத்தானது என்று கூறிய நீதிமன்றத் தீர்ப்பு உள்ளது என்றாலும், நம்பமுடியாத வகையில், சில பாராளுமன்ற உறுப்பினர்கள் அதை எதிர்த்து ஒன்றுகூடினர்.... குடியேறியவர்கள் நடைபாதையிலும் அமர்ந்தபோது, அதையும் நான் அகற்றினேன்; கஷோனின் சோசலிஸ்ட் மேயர் உடற்பயிற்சிக்கூடத்தில் அவர்களை இருத்த முடிவெடுத்தார்... நன்று, இப்பொழுது அது அவருடைய பிரச்சினை." என்று கூறினார்.

உள்துறை மந்திரிக்கு விடையிறுக்கும் ஆட்சி அங்கத் தலைவரால் (Préfecture) கேட்டுக்கொண்டதற்கு பதில் கொடுக்கும் வகையில் Le Bouillonnec கூறியதாவது; "தற்காலிக ஓட்டலில் தங்க வைப்பு, சட்டபூர்வ முறையில் கொடுக்கப்பட்டால், மறு இல்ல வசதிகள் வரும் வரையிலான நெறிகள் பாதுகாக்கப்பட வேண்டியதற்கு ஆவன செய்யவும்." அமர்ந்திருப்பவர்களை சட்டபூர்வமானவர்கள், ஆவணங்கள் அற்றவர் என்று கஷோன் சோசலிஸ்ட் கட்சி நிர்வாகம் ஏற்றுள்ளது Le Bouillonnec -ஆல் தெரிவிக்கப்பட்ட ஆட்சி அங்கத் தலைவரிடம் இருந்து வந்துள்ள அறிக்கை ஒன்றினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது: "ஒரு சட்ட விரோத சூழ்நிலையில் மக்களுக்கு இடவசதி அளிக்க வேண்டும் என்பது முயற்சிக்கப்படவும் இல்லை வழங்கப்படவும் இல்லை."

கஷோன் ஆக்கிரமிப்பு அமர்வு தொடங்கியபோது, ஜோஸ்பன்னுடைய பன்முக இடது அரசாங்கத்தில் (1997-2002) பங்கேற்ற சோசலிஸ்ட், கம்யூனிஸ்ட் மற்றும் பசுமைக் கட்சியினர் சார்க்கோசியின் குடியேற்ற சட்டத்திற்கு எதிரான வெகுஜன இயக்கத்துடனும் புலம்பெயர்ந்த பள்ளிச் சிறுவர்கள், மாணவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் தங்கும் உரிமைக்காகவும், ஐக்கியத்தை வெளிப்படையாக காட்டிக் கொள்ளுகின்றனர். ஆயினும், "அனைத்து ஆவணம் அற்றோரையும் முறைப்படுத்தும் வகையில் சோசலிஸ்ட் கட்சி செயல்படுகிறது என்னும் சார்க்கோசியின் கிளர்ச்சியூட்டும் குற்றச்சாட்டை" சீற்றத்துடன் மறுக்கிறது. ஆகஸ்ட் 29 அன்று சோசலிஸ்ட் கட்சி வெளியிட்ட அறிவிப்பு கூறுவதாவது: " லியோனல் ஜோஸ்பன் காலத்தில் இருந்தது போல், தெளிவான ஏற்புடைமுறைகள் மற்றும் இலக்குகள் கூடிய வகையில் நெறிப்படுத்தப்பட வேண்டும் (அனைத்து ஆவணம் அற்றோரையும்) என்று நாங்கள் விரும்புகிறோம்."

இது சோசலிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கையை ஒட்டித்தான் உள்ளது; ஜூலை மாதத்தில் ஏற்கப்பட்ட இது கட்டுப்பாட்டுடன் கூடிய குடியேற்ற வகை அனுப்பும் நாடுகளுடைய ஒத்துழைப்புடன் இருக்க வேண்டும் என்ற அழைப்பைக் கொடுத்திருந்தது. இன்று ஆவணங்கள் அற்றவர்களில் பலரும் ஜோஸ்பன் அரசாங்க காலத்தில் சட்டநெறியற்று வந்தவர்கள் ஆவர்.

பிரதம மந்திரி அலன் யூப்பேயின் கோலிச அரசாங்கத்தின் செயற்பாட்டில் செயின்ட் பேர்னார்ட் திருச்சபையில் இருந்து 300 ஆவணமற்ற குடும்பங்கள் வெளியேற்றப்பட்டதின் பத்தாவது ஆண்டு நிறைவு நாள் ஆகஸ்ட் 23 ஆகும். CRS போலீசார் திருச்சபைக் கதவுகளை உடைந்து நொறுக்கி உள்ளே நுழைந்தது, அவ்வாலய புனிதத்தை மீறியது ஆகிய தோற்றங்கள் மில்லியன் கணக்கான பிரெஞ்சு மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது; அதன் நினைவு இன்னும் ஆழமாகத்தான் உள்ளது. அந்த நேரத்தில் கோலிச மந்திரிசபையில் உள்துறை மந்திரியாக இருந்த Jean-Louis Debray, மக்களுடைய எதிர்ப்புக்கு இடையில் பல ஆயிரக்கணக்கான மக்கள் குடியிருப்பு உரிமை கோரியபோது 20 சதவிகிதத்தினருக்குத்தான் ஆவணங்கள் வழங்கப்படும் என்று முடிவெடுத்தார். ஜோஸ்பன்னுடைய ஆட்சிக் காலத்தில், உள்துறை மந்திரியாக இருந்த Jean-Peirre Chevenment கொண்டுவந்த குடியேறுவோர் சட்டம் இதை 50 சதவிகிதத்திற்கு உயர்த்தியது; அதையொட்டி ஆயிரக்கணக்கான மக்கள் குற்றம் சாட்டலுக்கும், நாடு கடத்தப்படுதலுக்கும் ஆளாயினர்.