Sri Lanka: Journalist's abduction highlights
intimidation of media
இலங்கை: ஊடகவியலாளர் கடத்தப்பட்டமை ஊடகங்கள் மீதான அச்சுறுத்தலை வெளிச்சம்
போட்டுக் காட்டுகிறது
By our correspondents
4 September 2006
Back to screen
version
இலங்கையில் ஒரு சிரேஷ்ட தமிழ் வானொலியின் ஊடகவியலாளரான நடராஜா குருபரன் அடையாளம்
தெரியாத துப்பாக்கிதாரிகளால் வியாழனன்று கடத்திச் செல்லப்பட்டதோடு கிட்டத்தட்ட 24 மணித்தியாலங்கள் கைதியாக
வைக்கப்பட்டிருந்தார். இந்தக் கடத்தலை முன்னெடுத்தது யார் என்பதை நிச்சயமாகக் குறிப்பிட முடியாத போதிலும்,
ஒவ்வொரு காரணமும் இராணுவம் அல்லது அதனுடன் இணைந்து செயற்படும் தமிழ் துணைப்படைக் குழுக்களே இதற்குப் பொறுப்பு
என நம்பவைக்கின்றன. கொழும்பு அரசாங்கமும் இராணுவமும், நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கில் ஆழமடைந்துவரும் உள்நாட்டு
யுத்தத்தின் பாதையில் உத்தியோகபூர்வமாக அடியெடுத்து வைக்குமாறு ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்த முயற்சித்து
வந்துள்ளன.
குருபரன், ஆசிய ஒலிபரப்புக் கூட்டத்தாபனத்தால் கொழும்பில் இருந்து ஒலிபரப்பப்படும்
தமிழ் மொழி வானொலிச் சேவையான "சூரியன் எப்.எம்," உடைய செய்தி முகாமையாளராகும். இந்த சேவை, தமிழர்கள்
எவ்வாறு யுத்தத்தால் பாதிப்படைகின்றனர் என்பதைப் பற்றி செய்தி வெளியிட்டதோடு அண்மையில் அது நடத்திய ஒரு நிகழ்ச்சி,
பாதுகாப்புப் படையினர் சம்பந்தப்பட்டுள்ள மனித உரிமை மீறல்கள் மற்றும் கொழும்பில் நடைபெறும் கடத்தல்கள்
பற்றியதாக இருந்தது. காணாமல் போன பல தமிழ் இளைஞர்களின் பெற்றோர்கள், அதே போல் பாராளுமன்ற
உறுப்பினர்கள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்களையும் குருபரன் பேட்டி கண்டிருந்தார். சுதந்திர ஊடக இயக்கத்தின்படி,
இந்த ஒலிபரப்பாளர் குறிப்பாக இரண்டு வாரங்களில் பல துணைப்படைக் குழுக்களின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளார்.
குருபரன் ஆகஸ்ட் 29 வேலைக்குச் சென்றுகொண்டிருந்த போது சுமார் 4.30 மணியளவில்
கடத்திச் செல்லப்பட்டார். இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் அவரது வாகனம் கொழும்பு தெற்கின் புறநகர்ப் பகுதியான
கல்கிசையில் உள்ள அவரது வீட்டில் இருந்து 300 மீட்டர் தூரத்தில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
குருபரனின் சக ஊழியர்களும் ஏனைய ஊடகவியலாளர்களும் அவரை விடுதலை செய்யுமாறு
உடனடியாகக் கோரினர். சுதந்திர ஊடகவியலாளர் இயக்கம், இலங்கை தமிழ் ஊடக கூட்டமைப்பு, ஊடக ஊழியர்களின்
தொழிற்சங்க சம்மேளனம், இலங்கை முஸ்லிம் ஊடகப் பேரவை மற்றும் இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர்கள்
கூட்டமைப்பினரும் சேர்ந்து வியாழனன்று ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 200 ஊடக ஊழியர்கள்
பங்கேற்றனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தின் முன் நின்று "ஊடகவியலாளர்களை
கொலை செய்வதை நிறுத்து," "நடராஜா குருபரன் எங்கே", "நடராஜா குருபரனை உடனடியாக விடுதலை செய்"
போன்ற சுலோகங்கள் உட்பட பல கோஷங்களை எழுப்பினர்.
கடத்தப்பட்ட ஊடகவியலாளர் அடுத்த நாள் காலை பாதிப்புகள் ஏதும் இன்றி விடுதலை
செய்யப்பட்டார். உலக சோசலிச வலைத் தளத்திடம் தனது வேதனை நிறைந்த அனுபவத்தை வெளிப்படுத்திய
குருபரன், "நான் காலி வீதிக்குள் நுழையும் போது, என்னுடைய வாகனத்தை இன்னொரு வெள்ளை வான் மறித்தது.
அவர்கள் என்னை நிறுத்தி விட்டு கீழே இறங்கச் சொன்னார்கள். அவர்களில் ஒருவர் கைத்துப்பாக்கியைக் காட்டினார்.
அவர்களில் சுமார் நான்கு அல்லது ஐந்து பேர் இருந்தனர். அவர்கள் தெளிவான சிங்களத்தில் பேசிக்கொண்டனர்.
அவர்களிடம் என்னைப் பற்றிய சில தகவல்கள் இருப்பதாகவும் சிலவற்றை தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும் எனவும்
அவர்கள் என்னிடம் கூறினர். அவர்கள் என்னை தம்முடன் அழைத்தார்கள்," எனத் தெரிவித்தார்.
குருபரன் வெள்ளை வானில் ஒரு மணித்தியாலம் பயணித்த பின் ஒரு வீட்டில்
தடுத்துவைக்கப்பட்டார். அவரைக் கடத்தியவர்கள் யார் அல்லது அவரைக் கடத்தியதற்கான காரணம் என்ன என்பதை
அவரால் அறிய முடியாமல் போய்விட்டது. நிருபரைக் கடத்தியவர்கள் அவரை விசாரிக்கவில்லை. அவர்கள் அவரை புதன்
கிழமை காலை கொழும்பின் தெற்குப் புறநகர்ப் பகுதியில் கண்களைக் கட்டியவாறு போட்டுவிட்டுச் சென்றனர்.
அனைத்து சூழ்நிலைகளும் பாதுகாப்புப் படையினரின் தலையீட்டை சுட்டிக் காட்டுகின்றன.
ஜூலை கடைப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான பிரகடனப்படுத்தப்படாத யுத்தத்தை ஜனாதிபதி மஹிந்த
இராஜபக்ஷ முன்னெடுத்ததில் இருந்தே, குறிப்பாக தமிழ் பத்திரிகைகள் அதிகரித்துவரும் அடக்குமுறைகள் மற்றும்
அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகியுள்ளன.
ஆகஸ்ட் 16 அன்று, குறிப்பிட்ட பாதையில் ஊடகங்கள் பயணிப்பதை ஊர்ஜிதம்
செய்துகொள்வதற்காக, ஊடக பிரதிநிதிகளின் கூட்டம் ஒன்றை இராஜபக்ஷ கூட்டினார். டெயிலி மிரர்
பத்திரிகையில் வெளியான செய்தியின் படி, அதற்கு முந்தைய வாரத்தில் பாதுகாப்புப் படைகளின் உயர் மட்டத்
தலைவர்களின் அழுத்தத்திற்கு ஜனாதிபதி உள்ளானார். "புலிகளுக்கு ஒரு முன்னேற்றத்தை வழங்கக் கூடிய, புலிகள் பற்றிய
தேவையற்ற ஊடக மிகைப்படுத்தலை" இராணுவம் கண்டனம் செய்தது.
"சூரியன் எப்.எம்" சார்ந்த ஆசிய ஒலிபரப்பு கூட்டத்தாபனத்தின் உயர்மட்ட செய்தி
முகாமையாளருக்கும் அழைப்புவிடுத்த இராஜபக்ஷ, கிழக்கில் இலங்கை இராணுவத்தின் புதிய எதிர்த் தாக்குதல்களை
கருத்தில் கொண்டு புலிகளால் வெளியிடப்படும் அறிக்கைகளைப் பற்றி செய்திகள் வெளியிட வேண்டாம் என எச்சரிக்கை
செய்தார்.
கடந்த வாரம் கொழும்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய சுதந்திர ஊடக
இயக்கத்தின் பேச்சாளர் சுனந்த தேசப்பிரிய, குருபரன் கடத்தப்பட்டதை கண்டனம் செய்ததோடு இது இலங்கையில்
பத்திரிகையாளர்களுக்கு எதிரான தொடர்ச்சியான தாக்குதல்களின் ஒரு பாகமாகும் எனவும் விவரித்தார். "குருபரனைக்
கடத்தியவர்கள் யார் என்பது எங்களுக்கு நிச்சயமாகத் தெரியாது. நாம் அவரை உடனடியாக விடுதலை செய்யுமாறு
கோருகின்றோம். ஊடகவியலாளர்கள் நாட்டுக்கும் உலகுக்கும் பக்கச் சார்பற்ற செய்திகளை வழங்கும் உரிமை
படைத்தவர்கள்," என அவர் பிரகடனம் செய்தார்
இலங்கை தமிழ் ஊடக அமைப்பின் தலைவர் எஸ். ராஜ்குமார் தெரிவித்ததாவது: "பத்திரிகையாளர்களை
நசுக்குதல் மற்றும் படுகொலை செய்வதன் நோக்கம், வடக்கு கிழக்கில் யுத்தம் பற்றிய உண்மையான தகவல்கள் இலங்கையின்
தெற்கிலும் மற்றும் உலகிலும் உள்ள மக்களுக்கு செல்வதைத் தடுப்பதாகும். ஆனால், அடக்குமுறைகளும் படுகொலைகளும்
பத்திரிகையாளர்களின் வேலையை நிறுத்துவதில் வெற்றிகாணப் போவதில்லை."
ஊடகங்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் குறிப்பாக தமிழ் ஊடகங்களை இலக்காகக் கொண்ட
ஒரு தொகை தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. சில சம்பவங்களை இங்கு மேற்கோள் காட்டலாம்;
* மே 2, இரவு, புலிகளுக்கு சார்பான உதயன் நாளிதழின் யாழ்ப்பான
அலுவலகத்திற்குள் நுழைந்த அடையாளந் தெரியாத துப்பாக்கிதாரிகள், துப்பாக்கிப் பிரயோகம் செய்து இரு
ஊழியர்களைக் கொன்றதுடன் மேலும் இருவரை கடுமையாக காயமடையச் செய்தனர்.
* ஆகஸ்ட் 15, உதயன் விநியோகஸ்தரான சதாசிவம் பாஸ்கரன்,
யாழ்ப்பாணத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள கடுமையான ஊடரங்கு சட்டம் ஒரு மணித்தியாலம் தளர்த்தப்பட்ட வேளையில்
பத்திரிகையை விநியோகித்துக் கொண்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார். ஏறத்தாழ நகரம் மார்ஷல் சட்டத்தின்
கீழ் இருக்கின்ற நிலையில், இந்தப் படுகொலை நிச்சயமாக பாதுகாப்புப் படையினரால் அல்லது அதன்
கூட்டாளிகளாலேயே மேற்கொள்ளப்பட்டிருக்கக் கூடும். அதே தினம், உதயனின் துணைப் பத்திரிகையான
சுடர் ஒளி பத்திரிகையின் கொழும்பு அலுவலகத்தை இராணுவ சிப்பாய்கள் சோதனையிட்டனர்.
* ஆகஸ்ட் 18, இலங்கை இராணுவத்தால் திணிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்ட நேரத்தில்,
யாழ்ப்பாணத்தில் உதயன் பத்திரிகையின் களஞ்சியம் அடையாளந்தெரியாத ஆயுததாரிகளால் தீயிட்டுக்
கொழுத்தப்பட்டது. ஆகஸ்ட் 20, தமிழ் மொழியில் வெளிவரும் நமது ஈழநாடு பத்திரிகையின் நிர்வாக
இயக்குனர் சின்னத்தம்பி சிவமகாராஜா தெல்லிப்பளையில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். சிவமகாராஜா புலிகளுக்கு
சார்பான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்நாள் பாராளுமன்ற உறுப்பினராவார்.
குருபரன் கடத்தப்பட்டதற்கு எதிரான ஆர்ப்பாட்டமும் மற்றும் அடிப்படை ஜனநாயக
உரிமைகளை நசுக்குவதற்கு எதிராக வளர்ச்சி கண்டுவரும் வெகுஜன எதிர்ப்பும் அவரது விடுதலையில் செல்வாக்குச்
செலுத்தியிருக்கலாம். ஹிந்துஸ்தான் டைம்ஸின் படி, அலவி மெளலானா மற்றும் ஏ.எச்.எம் அஸ்வர் ஆகிய இரு
பிரதான அரசாங்க புள்ளிகளும் இராஜபக்ஷவை சந்தித்ததோடு, இந்த பத்திரிகையாளரின் விடுதலைக்காக அவருக்கு
அழுத்தம் கொடுத்தனர்.
குருபரனின் கடத்திலுக்கு பின்னணியில் உள்ள சூழ்நிலைகளைப் பற்றி விசாரிப்பதாக
பொலிஸாரும் அரசாங்க அலுவலர்களும் வாக்குறுதியளித்துள்ளனர். எவ்வாறெனினும், இந்தப் பிரகடனங்களின் அழுத்தம்
குறைவு. குறிப்பாக பாதுகாப்புப் படையினரை சம்பந்தப்படுத்தும் ஏனைய வழக்குகளைப் போலவே, இன்னுமொரு
பொலிஸ் மூடி மறைப்பே இதிலும் பெறுபேறாக இருக்கும். |