:
ஆசியா
:
இலங்கை
Sri Lankan military launches new offensive
in strategic Sampur area
இலங்கை இராணுவம் மூலோபாயம் மிக்க சம்பூர் பிரதேசத்தில் புதிய தாக்குதலை முன்னெடுக்கின்றது
By Sarath Kumara
30 August 2006
Back to screen
version
இலங்கை இராணுவம் தீவின் கிழக்குப் பகுதியில் உள்ள சம்பூர் பிரதேசத்தை தமிழீழ விடுதலைப்
புலிகளிடமிருந்து கைப்பற்றும் இலக்குடன் ஞாயிறன்று ஒரு பெரும் புதிய எதிர்த் தாக்குதலை முன்னெடுத்துள்ளது. இந்த நடவடிக்கை
2002 யுத்த நிறுத்த உடன்படிக்கையை மீண்டும் வெளிப்படையாக மீறுவதோடு தனது ஆயுதப் படைகள் "தற்காப்பு நடவடிக்கைகளில்"
மட்டுமே ஈடுபட்டு வருகின்றன என்ற கொழும்பு அரசாங்கத்தின் பொய்களையும் மீண்டும் அம்பலப்படுத்தியுள்ளது.
சம்பூர், திருகோணமலை குடாவிற்கு தெற்குப் பக்கமாகவும் பிரதான திருகோணமலை
துறைமுகத்திற்கும் கடற்படைத் தளத்திற்கும் நேரடி எதிர்ப்பக்கமாகவும் அமைந்துள்ளது. கிழக்குக் கடற்கரையில்
கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவதற்கும் மற்றும் யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள தளங்களுக்கு துருப்புக்களை
விநியோகிக்கும் வழியாகவும் உள்ள இந்த பிரதான தளத்திற்கு இலகுவாக குறிவைக்கக் கூடிய பரப்பெல்லையில் புலிகளின்
நிலைகள் இருப்பதன் ஆபத்துப் பற்றி பல ஆண்டுகளாக இராணுவம் எச்சரிக்கை செய்துகொண்டிருந்தது. தற்போதைய
மோதலைத் தூண்டிவிட்டுள்ள இராணுவம், இந்தப் பிரதேசத்தில் உள்ள புலிகளின் தளங்களுக்கு எதிராக நகர்வதற்கு இந்த
சந்தர்ப்பத்தை பற்றிக்கொண்டது.
கடற்படையின் பீரங்கிப் படகுகளுடன் விமானப்படை விமானங்கள் சம்பூர் மற்றும் அருகில் உள்ள
மூதூர் கிழக்கையும் பொடியாக்கின. இராணுவத்தின்படி, கடுமையான மோதலின்போது 15 படையினர் உயிரிழந்ததோடு
92 பேர் காயமடைந்துள்ளனர். "எதிரிகளின் எதிர்த் தாக்குதல்களின் காரணமாக" மெதுவாகவே முன்னேறுவதாக இராணுவம்
ஏற்றுக்கொண்டுள்ளது. 60க்கும் மேற்பட்ட புலிகளைக் கொன்றதாக அது கூறிக்கொள்வதானது நிச்சயமாக ஊதிப்
பெருக்கச் செய்யப்பட்டதாகும்.
திங்களன்று புலிகளின் பேச்சாளர் இராசையா இளந்திரையன், இராணுவம் மஹிந்தபுர,
தோப்பூர் மற்றும் பத்தனூர் நிலைகளில் இருந்து "ஒரு பிரமாண்டமான நடவடிக்கையை" முன்னெடுத்ததாகக் குறிப்பிட்டார்.
பிரதேசத்தைக் காப்பதற்காக "முழுப் பலத்துடன்" புலிகள் எதிர்தாக்குதலை நடத்துவதாக அவர் தெரிவித்தார்.
ஆயுதப் படைகள் இதுவரை 20 பொது மக்களை கொன்றுள்ளதோடு 26 பேர்களை
காயப்படுத்தியுள்ளதாக புலிகள் தெரிவித்துள்ளனர். இராணுவப் பேச்சாளர் பிரசாத் சமரசிங்க இந்தக் கூற்றை
மறுத்ததோடு, "அங்கு பொது மக்கள் வாழ்வார்கள் என நான் நினைக்கவில்லை" என பிரகடனம் செய்தார். வேறு
வார்த்தைகளில் சொன்னால், புலிகளின் பிரதேசத்தில் வாழும் ஆண், பெண் அல்லது சிறுவர்களானாலும் சரி அவர்கள்
எதிரிகளாகக் கருதப்படுவதோடு அதற்குச் சமமாக நடத்தப்படுகிறார்கள் என்பதாகும். இது போலவே, ஆகஸ்ட் 14
முல்லைத் தீவு மாவட்டத்தில் நடத்தப்பட்ட விமானத் தாக்குதலில் 61 பாடசாலை மாணவிகள் கொல்லப்பட்ட போதும்,
"அவர்கள் சிறுவர் படையினர்கள்" எனப் பிரகடனம் செய்ததன்மூலம் விமானப்படை அந்த ஆதாரங்களை மறுதலித்தது.
இராணுவம் அருகில் உள்ள மூதூரில் உள்ள அகதிகளுக்கு உதவுவதற்கு இந்த நடவடிக்கை
தேவைப்பட்டது எனக் கூறியே புதிய தாக்குதல்களுக்குப் பின்னணியில் உள்ள காரணங்களை மறைத்துக்கொள்கின்றது. புலிகளின்
கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் உள்ள மாவிலாறு தண்ணீர் அணைக்கட்டைக் கைப்பற்றுவதன் பேரில் தாக்குதலை முன்னெடுத்த
அரசாங்கத் துருப்புக்களுக்கான விநியோகப் பாதைகளைத் துண்டிக்கும் முயற்சியாக, புலிகள் ஆகஸ்ட் முற்பகுதியில்
பெருமளவில் முஸ்லிம்கள் வாழும் மூதூர் நகரின் சில பகுதிகளைக் கைப்பற்றினர். இராணுவம் ரொக்கட் மற்றும் ஆட்டிலறிகள்
மூலம் குண்டுமாரி பொழிந்ததால் பெருந்தொகையான பொது மக்கள் கொல்லப்பட்டதோடு பத்தாயிரக்கணக்கானவர்கள்
இடம்பெயரத் தள்ளப்பட்டனர்.
இப்போது மூதூர் மீதான தனது சொந்த கண்மூடித்தனமான தாக்குதல்களின் விளைவுகளை
சம்பூருக்கு எதிரான மேலதிகத் தாக்குதல்களை நியாயப்படுத்த இராணுவம் பயன்படுத்திக் கொள்கின்றது. புலிகளின்
பிராந்தியத்திற்கு எதிரான ஆக்கிரமிப்பை நியாயப்படுத்துவதற்கான சாக்குப் போக்காக அதே கந்தல் துணியை இராணுவம்
பயன்படுத்தக் கூடும். கடந்த மாதம் பூராவும் நடந்தமோதல்களில் உள்ளூரில் இடம்பெயர்ந்துள்ள சுமார் 200,000
அகதிகளுக்கு அரசாங்கத்திடமிருந்து கொஞ்சம் உதவியோ அல்லது எந்தவொரு உதவியோ கிடைக்கவில்லை என்ற உண்மை,
அகதிகளுக்கு உதவுதல் என்ற கூற்றைப் பொய்யாக்கியுள்ளது.
எவ்வாறெனினும், இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா திங்களன்று
அசோசியேடட் பிரஸ்சுக்கு கொடுத்த செவ்வியில் உண்மையான காரணத்தை தற்செயலாக வெளியிட்டுவிட்டார்.
"பாதுகாப்புப் படைகள் திருகோணமலை கடற்படைத் தளம் மற்றும் துறைமுகத்தையும் பாதுகாக்க மூதூர்,
கட்டைபறிச்சான், சம்பூர் மற்றும் தோப்பூர் பகுதிகளை மீண்டும் கைப்பற்றவே இந்தத் முடிவை எடுத்தது... (எதிரிகள்)
தொடர்ந்தும் துறைமுகத்தைத் தாக்கினால் அது திருகோணமலையிலிருந்து யாழ்பபாணத்திற்கான விநியோகப் பாதையை
சீர்குலைத்துவிடும்," என அவர் பிரகடனம் செய்தார்.
யுத்தம் விரிவடையுமானால், 43,000 இராணுவ சிப்பாய்களுக்கும் மேல் வட
பிராந்தியமான யாழ்ப்பாணக் குடாநாட்டில் சிக்கிக்கொள்ளக் கூடும் என இராணுவம் பீதிகொண்டுள்ளது. இந்தப்
பிரதேசத்திற்குச் செல்லும் அனைத்துப் பாதைகளும் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தோடு செல்வதோடு அவை
ஏற்கனவே மூடப்பட்டுள்ளன. புலிகள் அரசாங்கத்தின் தற்காப்பு நிலைகளின் மீது நுணுக்கமான தாக்குதல்களை
அதிகரித்ததோடு பலாலி விமானத் தளத்தின் ஓடு பாதை மீதும் மீண்டும் மீண்டும் செல் தாக்குதல்களைத் தொடுத்தனர்.
புலிகள் திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கான பிரதான கடல் வழிக்கு அச்சுறுத்தல் விடுத்தால், அரசாங்கத்தின்
இராணுவப் படைகளில் குறிப்பிடத்தக்க அளவு துண்டிக்கப்படக் கூடும்.
ராய்ட்டர் செய்தியாளர் ஒருவர், பலாலி விமானத் தளத்தில் தரையிறங்கிய ஒரு
விமானப்படையின் போக்குவரத்து விமானம், போர்க் கருவிகளை இறக்கிவிட்டு ஐந்து சிப்பாய்களின் சடலங்களை ஏற்றிச்
சென்றதாக திங்களன்று தெரிவித்திருந்தார். இராணுவம் நிலக்கீழ் கொங்கிரீட் பங்கர்களை கட்டுவதன் மூலம் நீண்ட
யுத்தத்திற்குத் தயார் செய்வதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
கடந்த வாரம் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, எந்தவொரு யுத்த நிறுத்தமும், புலிகள்
திருகோணமலை துறைமுகத்திற்கும் கடற்படைத் தளத்திற்கும் அச்சுறுத்தல் விடுக்க மாட்டார்கள் என்ற உத்தரவாதத்தை
உள்ளடக்கியிருக்க வேண்டும் என கொழும்பில் உள்ள இராஜதந்திரிகளுக்குத் தெரிவித்தார். சம்பூர் பிரதேசத்தில்
ஒட்டுமொத்த எதிர்த் தாக்குதலை முன்னெடுப்பதானது, அரசாங்கம் தீர்க்கமான முறையில் புலிகளை இராணுவ ரீதியில்
வெல்லும் பகட்டான எதிர்ப்பார்ப்பில் யுத்தத்தை துரிதப்படுத்துகின்ற நிலையில், யுத்த நிறுத்தத்திற்கான அழைப்புக்களுக்கு
அது வாயளவில் மட்டுமே சேவை செய்கின்றது என்பது தெளிவு.
புலிகள் கிழக்கில் தமது அணிகள் மீதான அழுத்தத்தை தணிக்க முனையும் பட்சத்தில், சம்பூர்
பிரதேசம் மீதான நடவடிக்கை மொத்தத்தில் ஏனைய பிரதேசங்களிலும் புலிகளின் தாக்குதல்களை நிச்சயமாக கிளப்பும்.
கிழக்குப் பிராந்தியத்தில் 2004 புலிகள் அமைப்புக்குள் ஏற்பட்ட பலவீனப்படுத்தும் பிளவின் மூலம் புலிகள் கடுமையாகப்
பலவீனமடைந்துள்ளனர் என்ற எண்ணத்தில், இராணுவம் கிழக்கில் முதலாவதாக மாவிலாறு மற்றும் இப்போது சம்பூரிலும்
தாக்குதல் தொடுப்பதில் அக்கறை செலுத்துகிறது. பல மாதங்களாக புலிகளில் இருந்து பிரிந்து சென்ற "கருணா குழு"
இராணுவத்துடன் கூட்டுச் சேர்ந்து புலிகளுக்கு எதிராக செயற்பட்டு இயங்கிக் கொண்டிருக்கின்றது.
சம்பூர் பிரதேசத்தில் மோதல்கள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்ற அதே வேளை, வடக்கில்
பூவரசங்குளம், முகமாலை மற்றும் யாழ்ப்பாணத்திற்கு அருகில் கச்சாய் குடாவிலும் மோதல்கள் நடைபெறுவதாக
செய்திகள் வெளிவருகின்றன. புலிகள் கிழக்கில் மட்டக்களப்பு நகருக்கு அருகே வவுனதீவு இராணுவத் தளத்தின் மீதும்
மோட்டார் தாக்குல்களை உக்கிரப்படுத்தியுள்ளனர்.
இராஜபக்ஷ அரசாங்கம் மாவிலாறு மதகைக் கைப்பற்றும் போலி "மனிதாபிமான" நடவடிக்கையுடன்
ஒரு மாதத்திற்கு முன்னரே நாட்டை மீண்டும் யுத்தத்திற்குள் தள்ளிவிட்டுள்ளது. புலிகள் சர்ச்சைக்குரிய வாய்க்காலை திறந்துவிட்ட
போதிலும், இராணுவம் புலிகளின் சம்பூர் தளத்தைப் போன்று நீண்டகாலமாக திட்டமிடப்பட்ட இலக்குகளுக்கு எதிராக தனது
ஆக்கிரமிப்பு நடவடிக்கையை தொடர்கின்றது.
கொழும்பு பத்திரிகைகளின் பக்கங்களில் விமர்சனமின்றி மீள் பிரசுரிக்கப்படுகின்ற இராணுவத்தின்
பிரச்சாரத்தில் ஒருவர் நம்பிக்கை வைப்பாரானால், இராணுவ நடவடிக்கை வெற்றிகரமானதாக இருக்கும். புலிகளின்
தாக்குதல் முறியடிக்கப்பட்டு, நூற்றுக்கணக்கான புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளதோடு எதிரிகளின் பிரதேசத்திற்குள்
முன்னேறுவதில் இராணுவம் வெற்றிகண்டுள்ளது. 2000 ஆண்டில் இராணுவம் கடுமையான தோல்வியை அனுபவித்ததை அடுத்து
கொள்வனவு செய்யப்பட்ட இஸ்ரேல் தயாரிப்பான ஜெட் விமானங்களை, புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்கள் மீது
கண்மூடித்தனமாக தாக்குதல் தொடுக்க விமானப்படை பயன்படுத்துகின்றது.
இந்த சூழ்நிலையில், கடந்த வாரக் கடைசியில் சண்டே டைம்ஸ் பத்திரிகையில்
வெளியான தனது "நிலவர அறிக்கையில்" நீண்ட கால பாதுகாப்புத்துறை ஊடகவியலாளரான இக்பால் அத்தாஸ், இந்த
மிதமிஞ்சிய தன்னிலை உணர்வுக்கு எதிராக எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 1995ல் புலிகளிடம் இருந்து
யாழ்ப்பாணத்தை மீண்டும் கைப்பற்றுவதில் இராணுவம் வெற்றிகண்ட போதும் இது போன்ற சூழ்நிலையே நிலவியபோதிலும்,
அடுத்து 1996 நடுப்பகுதியில், புலிகள் முல்லைத் தீவு இராணுவத் தளத்தை கைப்பற்றி, 1,000த்திற்கும் மேற்பட்ட
படையினரைக் கொன்று பெருந்தொகையான ஆயுதங்களையும் கைப்பற்றிய வேளை இராணுவம் பெரும் தோல்வியைக் கண்டது
என சுட்டிக்காட்டியிருந்தார்.
இராணுவ உயர் மட்டத்தினருடன் நெருக்கமான உறவு வைத்துள்ள அத்தாஸ்: "புலி
கெரில்லாக்கள் மீதான தற்போதைய தாக்குதல்கள் கணிசமான சேதங்களுக்கும் மற்றும் அவர்களது இராணுவ கொள்திறளை
குறைக்கவும் வழிவகுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அரசாங்கத்திற்கு அஞ்சத்தக்க சவால் ஒன்றும் உண்டு.
அவர்களை யுத்தக் களத்தில் மட்டுமன்றி ஏனைய பலவித முன்னரங்குகளிலும் தோற்கடிக்க வேண்டியிருக்கும்... இதன்
காரணமாக தற்போதைய பிரச்சினையை நீண்டகால இராணுவ நடவடிக்கை முடிவுக்குக் கொண்டுவராது. மேலும் யுத்தம்
செய்வது பொருளாதாரத்திற்கு மேலும் சேதத்தை விளைவிப்பதோடு மக்கள் மீது மேலும் சிரமங்களைத் திணிக்கும்," என்று
கருதியுள்ளார்.
இராஜபக்ஷ அரசாங்கம் தனது சொந்த குறுகிய, முன்யோசனையற்ற அரசியல்
முடிவுகளுக்காக, இராணுவ ரீதியில் வெற்றிகொள்ளப்பட முடியாத மற்றும் ஜனத்தொகையில் பரந்த
பெரும்பான்மையானவர்களுக்கு மேலும் துன்பங்களையும் சிரமங்களையும் கொடுக்க தவிர்க்க முடியாமல் வழிவகுக்கும்
அழிவுகரமான யுத்தத்திற்குள் நாட்டை மீண்டும் மூழ்கடித்து செல்வதையே இத்தகையக் கருத்துக்கள் கோடிட்டுக்
காட்டுகின்றன. |