ஆபிரிக்கா
An exchange on Stalinism with a South African reader
ஒரு தென்னாப்பிரிக்க வாசகருடன் ஸ்ராலினிசம் பற்றிய ஒரு கருத்துப் பரிமாற்றம்
20 November 2006
Use this
version to print | Send this link by
email |
Email the
author
தென்னாப்பிரிக்காவில் உள்ள உலக சோசலிச வலைத்தளத்தின் வாசகர் ஒருவருக்கும்,
ஸ்ராலினிசத்தின் எதிர்ப்புரட்சிகர அரசியலை நிராகரித்து 1956ம் ஆண்டின் பரபரப்பான நிகழ்வுகளுக்குப் பின்
நான்காம் அகிலத்தில் சேர்ந்திருந்த மூத்த ட்ரொட்ஸ்கிசவாதியான பார்பாரா சுலோட்டருக்கும் (Barbara
Slaughter) இடையே நிகழ்ந்த மின்னஞ்சல் கருத்துப்பரிமாற்றத்தின்
பதிப்புரையை கீழே பிரசுரித்துள்ளோம்.
பார்பாரா அவர்களே,
உலக சோசலிச வலைத்தளத்தில் வரும் பகுப்பாய்வுகள் அனைத்தையும் நான்
அன்றாடம் படித்து வருவதுடன், உலகில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி அவை அரிய தகவல்கள் கொடுப்பதையும்
காண்கிறேன். மத்திய கிழக்கில் தொழிலாளர் வர்க்கத்தின் ஒரு புரட்சிகர அமைப்பு பற்றிய பிரச்சினை இன்னும் கூடுதலான
வகையில் அரேபிய உயரடுக்கைத் தூக்கி வீசும் தீவிர வேலைத்திட்டம் தேவைப்படும் பிரச்சினையாக இன்னும்
இருக்கின்றது. ஆனால், அந்த இலக்கை அடைவதற்கு ஒரு தெளிவான மூலோபாயத்தை என்னால் இன்னமும் உண்மையில்
சிந்திக்க முடியவில்லை.
தென்னாப்பிரிக்க அரசியலைப் பொறுத்தவரையில், என்னைப் பற்றிச் சுருக்கமாகக்
கூறிக் கொள்ள விரும்புகிறேன். நான் 1980 களின் நடுப்பகுதியில் இருந்த இளைஞர் குழு ஒன்றைச்
சார்ந்திருந்தேன். ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF)
மற்றும் மக்கள் ஜனநாயக முன்னணி (Mass
Democratic Movement) காலத்தில் என்னுடைய தொடர்பு
இருந்தது. (நான் 12-13 வயதில் இருக்கும்போது என நினைக்கிறேன்) நான் 1985ம் ஆண்டு போராட்டத்தில்
பங்கு பெறத் தொடங்கினேன். எங்கள் அனைவருடைய மனத்திலும் ஒரு எண்ணம்தான் மேலோங்கி நின்றது. மிருகத்தனமான
வெள்ளை முதலாளித்துவ முறையில் இருந்து தென்னாப்பிரிக்காவை விடுவிக்க வேண்டும் என்பதே அது. அதை அடைவதற்காக
எங்களில் பெரும்பாலானவர்களும் இறப்பதற்குக் கூட அச்சப்படவில்லை.
எங்கள் தோழர்களில் பெரும்பாலானவர்கள் விரோதிகளினால் கொல்லப்பட்டனர்.
அக்காலக்கட்டத்தில் என்னுடைய நண்பர்கள் சிலரையும் நான் இழந்தேன். ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் (ANC)
மற்றும் தென்னாபிரிக்கா கம்யூனிஸ்ட் கட்சி (SACP)
எங்களுக்குத் தேவைப்பட்டதைக் கொடுக்கும் என்ற நம்பிக்கை
இருந்தது. ஆனால் அது மிக கடினமாகப் போயிற்று. விரோதிகளை நசுக்கிவிடலாம் என்ற குறிக்கோளில் எங்களில்
சிலர், நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட குறுகியகால இராணுவப் பயிற்சி மற்றும் மொசாம்பிக்கில் நடத்தப்பெற்ற குறுகிய
இராணுவப் பயிற்சியிலும் சேர்ந்தோம். ஆனால் 1990களில் நிகழ்ந்த பேச்சுவார்த்தைகளில் போராளி இளைஞர்கள்
பலர் ஒரங்கட்டப்பட்ட இளைஞர்கள் என்ற தொகுப்பில் நாம் தள்ளப்பட்டுவிட்டோம்.
இந்த அதிருப்தி 1995ல் இருந்து இன்று வரை தொடர்கிறது. இந்த நிலை
ANC மேற்கொண்ட
கொள்கைகளின் விளவு ஆகும். கம்யூனிஸ்ட் கட்சிக்கு இருந்த ஒரே நம்பிக்கை இந்த புனிதமற்ற கூட்டில் இருந்து
முறித்துக் கொள்ளுதல் என்பதாயிற்று. தோழர் கிறைஸ் ஹனி செயலாளராக இருந்த போது இந்நாட்டு
இளைஞர்களிடையே கம்யூனிஸ்ட் கட்சி சிறிது காலத்திற்கு செல்வாக்குப் பெற்றிருந்தது. அவருடைய மரணத்திற்குப்
பிறகு ஒரு பெரும் அதிர்ச்சியாயிற்று. ஏனெனில் கட்சியில் அவரைப் போல் வேறு ஒருவரும் எங்களுக்குக்
கிடைக்கவில்லை.
இப்பொழுது கம்யூனிஸ்ட் கட்சி தென்னாப்பிரிக்காவில் தொழிலாளர் வர்க்கத்தின்
கட்சியாக இல்லை. என்னுடைய மாநிலத்தில் சமீபத்தில் நிகழ்ந்த
SACP யின் மாநில
மாநாடு ஒன்றில் நான் கலந்து கொண்டேன். இந்நாட்டில் தொழிலாளர் வர்க்கம் முற்றிலும்
காட்டிக்கொடுக்கப்பட்டுவிட்டது என்பதைத்தான் நான் அங்கு கண்டேன்.
ANC உடனான
தன்னுடைய கூட்டு பற்றிய பிரச்சினையில் மாநாட்டினால் தெளிவாகக் கூறமுடியவில்லை. ஏனெனில் பெரும்பாலான
தோழர்கள் அரசாங்கத் துறைகளில் வேலைபார்த்து வருபவர்கள். சிலர் அரசாங்கத்தில் மந்திரியாகக் கூட
இருப்பவர்கள். பிரதிநிதிகளிடம் உண்மையான செல்வாக்கு பெற்றிருந்த கம்யூனிஸ்ட்டுக்களைக் காண்பதற்கில்லை.
கூட்டில் இருந்து விலகிவிடுவது பற்றி விவாதம் வேண்டும் என்று கூறப்பட்டால் அக்கருத்து நசுக்கப்பட்டுவிடுகிறது.
ANC
நிறுத்திவைக்கும் வேட்பாளர்களுக்கு வாக்களித்தால் பிரதிநிதிகளுக்குப் பணம் கொடுக்கப்படும் என்றும் இன்னும் நல்ல
வேலைகளுக்கு வாய்ப்பு தரப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டது.
கட்சிக்குள் இருக்கும் தொழிலாளர் வர்க்கத்தின் முற்போக்குப் பிரிவை நாங்கள்
செல்வாக்கிற்கு உட்படுத்திவிட முடியும் என்று நான் தனிப்பட்ட முறையில் நினைத்திருந்தேன். அதுவோ இயலாது என்று
போயிற்று. தென்னாப்பிரிக்காவில் உள்ள பிரச்சினை ANC
மற்றும் கூட்டணி ஒன்றுதான் முதலாளித்துவ அமைப்பின் பிடியில் இருந்து தங்களை விடுவிக்க முடியும் என்று முழு
தொழிலாளர் வர்க்கத்தினரும் நினைக்கின்றனர். கூட்டணியின் வரலாறு அவ்வகையில் இருக்கிறது.
முதலாளித்துவத்தை அழித்துவிட்டு அதற்குப் பதிலாக சோசலிசத்தைக் கொண்டுவர
வேண்டும் என்ற கருத்தில் இருந்து இக்கூட்டணி தன்னுடைய அக்கறையை மாற்றிக் கொண்டுவிட்டது என்பதை
தொழிலாளர் வர்க்கம் இன்னும் உணரவில்லை. தங்களுக்கு ஒரு சிறிய வீட்டைக் கட்டிக்கொடுப்பது மற்றும்
குழந்தைகளுக்கு சில சமூக நலன்கள் கொடுப்பது ஆகியவற்றின்மூலம்
ANC ஒரு பெரும்
சேவையைச் செய்வதாகப் பலரும் நினைக்கின்றனர். ஆனால் வளங்களோ நாட்டில் உள்ள சிலரிடையே மட்டும்தான்
(நண்பர்கள், உறவினர்கள் போன்றவர்களிடையே) பகிர்ந்து கொள்ளப்படுகிறது.
கட்சியில் என்னுடைய உறுப்பினர் பிரச்சினை பற்றி; ஆம், இதைப்பற்றி பல
தோழர்களுடன் நான் விவாதித்தேன். அவர்களும் இத்தகைய உணர்வுகளைத்தான் வெளிப்படுத்தினர். ஆனால்
உறுப்பினர் நிலையில் இருந்து விலகுவதற்கு அவர்கள் தயாராக இல்லை. இதற்குக் காரணம் தென்னாப்பிரிக்காவில்
இடது எதிர்ப்போ அல்லது புரட்சிகர மாற்றீடோ இல்லை என்ற உண்மை உள்ளது.
நான் கொடுத்துள்ள தகவல்கள் நீங்கள் தொடர்பு கொண்டுள்ள நபர் பற்றி அறிந்துக்
கொள்ளப் போதும் என்று நினைக்கிறேன். தென்னாப்பிரிக்கா பற்றி நான் என்ன நினைக்கிறேன் என்பதையும் இது
கூறுகிறது.
உங்களிடம் இருந்து பதில் கிடைக்கும் என்று நம்புகிறேன்.
சோசலிசத்திற்காக உங்களுடன்,
RS
* * *
அன்புள்ள RS,
உங்களுடைய மின்னஞ்சலில் இருக்கும் தகவல்களுக்காக நன்றி.
விடுதலைப் போராட்டத்தில் மிகக் குறைந்த வயதில் இருந்தே தொடர்பு
கொண்டிருந்ததால், உங்களுக்குப் பல கசப்பான அனுபவங்கள் இருந்திருக்கும். நீங்கள் கூறியுள்ளதுபோல், உங்கள்
தலைமுறையினருக்கு தென்னாப்பிரிக்க விடுதலை என்ற ஒரே எண்ணம்தான் நிறைந்திருந்தது. நீங்களும் மற்றும் பலரும்
உங்கள் வாழ்வைக் கூட அதை அடைவதற்குத் தியாகம் செய்யத் தயாராக இருந்தீர்கள்.
"1990களில் நிகழ்ந்த பேச்சுவார்த்தைகள் பல போராளி இளைஞர்கள் ஓரங்கட்டப்பட்ட
இளைஞர்கள் என்று மாற்றப்பட்டதைத்தான் கண்டது" என்று எழுதியுள்ளீர்கள்.
நீங்கள் விளக்கியிருக்கும் சூழ்நிலைக்கான பொறுப்பை தென்னாப்பிரிக்க கம்யூனிஸ்ட் கட்சிதான்
(SACP)
ஏற்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ஏனெனில் அந்தக் காலகடத்தில் அது மண்டேலா மற்றும்
ANC தலைமைக்கு
அது கொடுத்த நிபந்தனையற்ற ஆதரவின் மூலம், ஒரு புரட்சிகரக் கட்சியாக இருக்கும் எந்தப் பாசாங்குகளையும்
கைவிட்டுவிட்டது என்று காட்டியது. உண்மையில், SACP
உட்பட்ட ANC
கூட்டணிதான் தென்னாப்பிரிக்காவில் முதலாளித்துவத்தைக் காப்பாற்றியதாகும்.
அத்தகைய வரலாற்றுப் பரிணாமம் உடைய காட்டிக்கொடுப்புக் காலத்தில் இருந்த
நீங்களும் அப்பொழுதைய ஆயிரக்கணக்கான இளைஞர்களும் உண்மையில் என்ன நடந்தது என்பதை அறிவதற்கு 20ம்
நூற்றாண்டு முழுவதும் சர்வதேச அளவில் தொழிலாளர் வர்க்கத்தின் போராட்டத்தில் விளைந்த அனுபவச்
செல்வத்தைத் திருப்பிப்பார்க்க வேண்டியுள்ளது.
தொழிலாளர் வர்க்கத்தின் போராட்டத்தைத் தலைமை தாங்கி வழிநடத்தும்
அமைப்பாக தென்னாப்பிரிக்க கம்யூனிஸ்ட் கட்சி இருக்கும் என்று நீங்கள் நினைத்ததில் வியப்பு ஒன்றும் இல்லை. ஒரு
சிறுமியாக 1945ல் அக்காலத்தில் பல இளைஞர்களைப் போன்றே நானும் பாசிசத்திற்கு எதிரான சோவியத்
தொழிலாளர் வர்க்கத்தின் மகத்தான தியாகங்களின் உந்துதலினால் பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தேன்.
நான் பிரிட்டிஷ் லேபர் கட்சியின் திவால் தன்மையை ஓரளவு உணர்ந்திருந்தேன். ஆனால் வேறு மாற்றீடு ஏதும்
இல்லை.
ஆனால் 1956ல் நான் கம்யூனிஸ்ட் கட்சியை விட்டு விலகினேன். சோவியத்
ஒன்றியத்தில் அந்த ஆண்டு 20வது கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் ஜோசப் ஸ்ராலினை மிருகத்தனமான சர்வாதிகாரி
என்று கண்டித்து குருஷ்சேவ் ஆற்றிய உரை, பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சிக்குள்ளும் மகத்தான அறிவார்ந்த,
அறநெறியிலான நெருக்கடியைத் தொண்டர்களுக்குள் சுடர்விட்டு எரியச் செய்தது. அந்த ஆண்டு இலையுதிர்காலத்தில்,
ரஷிய டாங்கிகள் புடாபெஸ்ட்டிற்கு ஹங்கேரியப் புரட்சியை நசுக்குவதற்கு அனுப்பப்பட்டபோது, நானும்,
ஆயிரக்கணக்கான மற்றவர்களைப் போலவே, அதில் எப்பங்கையும் கொள்ள விரும்பவில்லை.
அப்பொழுது என்னை எதிர்கொண்ட வினாக்கள், 20ம் நூற்றாண்டிலேயே மிக ஆழமான
பிரச்சினைகளாக இருந்து இன்றளவும் அதே தன்மையைக் கொண்டவையாக, இவ்வண்ணம் இருந்தவை: "கம்யூனிஸ்ட்
கட்சி ஏன் சீரழிந்தது? ஸ்ராலினிசம் எப்படி வளர்ந்தது? இதற்கு மாற்றீடு இருந்ததா?
1956ம் ஆண்டு என் வாழ்க்கையின் மிக முக்கியமான நேரத்தில்தான் லியோன்
டிராட்ஸ்கியின் படைப்புக்கள் எனக்குப் புதிய நோக்குநிலையை அளித்து ஒரு முன்னேற்றப் பாதையைக் காண
வைத்தன. விரைவிலேயே நான் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிட்டிஷ் பகுதியில் சேர்ந்தேன்.
இப்பொழுது அது சோசலிச சமத்துவக் கட்சி என்று அழைக்கப்படுகிறது.
காட்டிக் கொடுக்கப்பட்ட புரட்சி என்ற தன்னுடைய நூலில் ஸ்ராலினிச அதிகாரத்துவம்
எப்படித் தோன்றியது என்பது பற்றி ட்ரொட்ஸ்கி விளக்கியுள்ளார். ஒரு மின்னஞ்சலில் அதை விளக்கி எழுதுவது
கடினம். நீங்களே அந்தப் புத்தகத்தைப் படிக்க வேண்டும். ஆயினும் கூட சில கருத்துக்களை எடுத்துக் கூறுகிறேன்.
ஒரு பின்தங்கிய நாடான ரஷியாவில் புரட்சி முதலில் நடந்தது மற்றும் புரட்சியினால்
நிறுவப்பட்ட தொழிலாளர் அரசு ஐரோப்பாவின் மற்ற பகுதிகளில் சோசலிச புரட்சியின் தோல்வியினால்
தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இருந்தது என்பது சோவியத் அதிகாரத்துவத்தின் தோற்றத்திற்கு
பிரதான சடரீதியான காரணமாகும். அதே நேரத்தில் இளம் தொழிலாளர் அரசு கொடூரமான உள்நாட்டுப்
போரினால் பேரழிவிற்கு ஆளானது. இதில் எதிர்ப்புரட்சிகர வெண்படை பிரதான முதலாளித்துவ நாடுகளின் நிதி,
இராணுவ வகையிலான உதவிகளையும் பெற்றது.
பதவியில் இருந்து இறக்கப்பட்ட ஜாரிச ஆட்சியிலிருந்து மரபுவழி பெற்ற பொருளாதாரப்
பின்னடைவினாலும், உள்நாட்டுப் போரினாலும் சர்வதேச அளவில் தனிமைபட்டிருந்ததாலும், ஏற்பட்ட விளைவின் காரணமாக,
சோவியத் ஒன்றியம் தொழிலாளர் வர்க்கத்தின் அனைத்துத் தேவைகளையும் அளிக்க முடியவில்லை. இந்த சமத்துவமற்ற
நிலைமையில் அதிகாரத்துவம் ட்ரொட்ஸ்கி அழைத்ததுபோல் "தேவையைக் கண்காணிக்கும் போலீஸ்" ஆக ஆயிற்று.
அரச எந்திரத்தை அதன் கட்டுப்பாட்டில் கொண்ட அடிப்படையில் அதிகாரத்துவம் ஒரு சலுகை பெற்ற சாதியாயிற்று.
நீண்ட காலம் சோவியத் ஒன்றியம் தனிமைப்பட்டிருக்கும் நிலையில் தப்பிப் பிழைக்கும்
என்று லெனினும் போல்ஷிவிக்குகளும் கனவுகூட கண்டதில்லை. முன்னேற்றமடைந்த ஓரிரு நாடுகளில் வெற்றிகரமான
புரட்சிகளை அவர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அப்படி நிகழவில்லை. பல நாடுகளிலும், 1923ல் ஜேர்மனி,
1924ல் எஸ்தோனியா, 1926ல் போலந்து, 1926ல் பிரிட்டிஷ் பொது வேலைநிறுத்தம், சீனாவில் 1927 என்று
புரட்சிகரப் போராட்டங்கள் தோல்வியைத்தான் கண்டன. சோவியத் மக்கள் போர்க் களைப்பைக்
கொண்டிருந்தனர். அவர்கள் உலகப் புரட்சியில் ஏமாற்றம் அடைந்து நம்பிக்கையையும் இழக்கத் தொடங்கினர்.
1905 ரஷியப் புரட்சியில் இருந்தே ட்ரொட்ஸ்கி முதலாளித்துவ அபிவிருத்தியும்
சர்வதேச அளவில் தொழிலாளர் வர்க்கத்தின் வளர்ச்சியும் முதலாளித்துவ வர்க்கத்தினால் ஒரு புரட்சிகரப் பங்கு
கொள்ள முடியாது என்று அர்த்தப்படுத்துவதாகவும், இது முன்னேற்றமடைந்த முதலாளித்துவ நாடுகளுக்கு
மட்டுமல்லாமல் காலம் தாழ்ந்து முதலாளித்துவ வளர்ச்சியைக் கொண்ட நாடுகளுக்கும் பொருந்தும் என்றும்
வலியுறுத்தி வந்தார்.
பின்தங்கிய நாடுகளில் தேசிய முதலாளித்துவம் தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும்
எதிராகத் தன்னுடைய சொந்த எல்லையிலேயே ஏகாதிபத்தியப் பிற்போக்குடன் ஒத்துழைக்கும் என்றும் அவர் கணித்திருந்தார்.
தொழிலாளர் வர்க்கம் முன்னணி அரசியல் பாத்திரத்தை ஏற்க வேண்டும் என்றும் ஒரு தொழிலாளர் அரசை நிறுவுவதற்குப்
போராட வேண்டும் என்றும், ஜனநாயகப் புரட்சி ஒரு சோசலிச புரட்சியுடன் ஒன்றிணைந்ததாக இருக்கும் என்றும்
ட்ரொட்ஸ்கி வலியுறுத்தியிருந்தார்.
உலகை முக்கிய முதலாளித்துவ நாடுகள் பங்கு போட்டுக் கொள்ளுதல் மற்றும் நிதி
மூலதனத்தின் மூலம் உலகப் பொருளாதாரத்தின்மீது ஆதிக்கம் செலுத்துதல் என்ற வகையில் ஏகாதிபத்தியம்
முதலாளித்துவம் வளர்ச்சியடைந்திருக்கும் தேசிய-அரசு அமைப்பை கீழறுத்திருந்தது என்று ட்ரொட்ஸ்கி
வலியுறுத்தினார். உலகின் நிலைமை அனைத்து தேசிய நிலைமைகள்மீதும் முதன்மை நிலை பெற்றிருக்கும் அடிப்படையில்
அவரது கருத்துரு அமைந்திருந்தது. இதன் விளைவாக சுத்தமான ஒரு தேசியப் புரட்சி மட்டுமே ஆப்பிரிக்கா,
இந்தியா அல்லது கிழக்கில் எந்த நாட்டையும் ஏகாதிபத்தியத்தின் ஆதிக்கத்தில் இருந்து காப்பாற்ற முடியாது.
ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சியில் விரிவாக்கம் செய்யப்பட்ட இக்கருத்துக்கள்
ரஷியாவில் அக்டோபர் புரட்சி வெற்றி காண்பதற்கு தத்துவார்த்த அடிப்படையாக இருந்த கருத்தாய்வுகள் ஆகும்.
அவை, "ஒரு நாட்டில் சோசலிசம்" என்று அதிகாரத்துவம் வாதிட்டதில் இருந்த ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின்
தேசிய கருத்துருக்களுக்கு எதிராக 1920 களிலும் 1930 களிலும் ட்ரொட்ஸ்கி போராடிய கருத்துக்களாகும்.
"ஒரு நாட்டில் சோசலிசம்" என்னும் ஸ்ராலினுடைய கொள்கை ரஷியப் புரட்சி
அடிப்படையாகக் கொண்டிருந்த சர்வதேச சோசலிசம் என்ற கருத்தை முற்றிலும் கைவிட்ட ஒரு கொள்கையாகும்.
அதன் உட்குறிப்பான தர்க்கம், முதலாளித்துவ வர்க்கத்திலிருந்து தொழிலாள வர்க்கத்தின் அரசியல்
சுயாதீனத்திற்கான போராட்டம் உட்பட, மார்க்சிசத்தின் மிக அடிப்படையான அரசியல் கருத்தாய்வுகளை
நிராகரித்தது.
1926-27 சீனப் புரட்சி தோல்வியில் இருந்து தொடங்கி, தொழிலாளர்
வர்க்கத்திற்குப் பேரழிவு தரக்கூடிய தோல்விகளை ஏற்படுத்திய இந்த தேசியவாத நிலைப்பாட்டிற்கு எதிராக
ட்ரொட்ஸ்கியும் இடது எதிர்ப்பும் போராடின. 1930 கள் அளவில், ஸ்ராலினிச அதிகாரத்துவம் உலகம் முழுவதிலும்
இருந்த தொழிலாளர் வர்க்கத்தின் புரட்சிகர முயற்சிகளை வேண்டுமேன்றே காட்டிக் கொடுத்தது. புதிதாகப்
பெறப்பட்ட தன்னுடைய சலுகைகளைப் பாதுகாப்பதற்காக மேற்கு நாடுகளின் முதலாளித்துவ அரசாங்கங்களுடன் அது
நட்புறவுகளைப் பெருக்கிக் கொள்ள முற்பட்டது.
சோவியத் ஒன்றியத்தினுள்ளே பெருகிவந்த அரசியல் எதிர்ப்பை நசுக்கும் பொருட்டு,
அதிகாரத்துவம் தன்னுடைய சீற்றத்தை இடது எதிர்ப்பின் மீது குவித்தது. ட்ரொட்ஸ்கியை ஸ்ராலின் நாடுகடத்தி,
1927ல் இடது எதிர்ப்பையும் தடைக்கு உட்படுத்தினார். கம்யூனிச விரோதிகள் என்றும் 1933க்குப் பிறகு ஹிட்லரின்
முகவர்கள் என்றும் டிராட்ஸ்கிஸ்டுகள்மீது குற்றம் சுமத்தப்பட்டது. இதையொட்டி 1936ல் இருந்து 1938 வரை
மாஸ்கோ விசாரணைகள் நடந்தன. அதையொட்டி ஆயிரக்கணக்கான புரட்சியாளர்கள் கொலைசெய்யப்பட்டனர்.
அல்லது கடூழியச்சிறை முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர். ரஷியப் புரட்சியின் முக்கியமான தலைவர்கள் ஒவ்வொருவரும்
ஸ்ராலினால் மரண தண்டனைக்கு ஆளாயினர். ட்ரொட்ஸ்கி ஒருவர்தான் சில ஆண்டுகளுக்கு முன்பு
நாடுகடத்தப்பட்டதால் தப்பியிருந்தார்.
1939ம் ஆண்டு மேலை நாடுகளுடன் உடன்பாடுகளைக் காணவேண்டும் என்ற தனது
மூலோபாயம் தோல்வியுற்றதும் ஸ்ராலின், ஹிட்லருடன் ஸ்டாலின்-ஹிட்லர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இதற்கு
ஓராண்டிற்குப் பிறகு, ஒரு ஸ்ராலினிச கையாள் மெக்சிகோவில் ட்ரொட்ஸ்கியைப் படுகொலை செய்தான்.
அப்பொழுது ட்ரொட்ஸ்கிய இயக்கம் சிறிதாகவும், தனிமைப்படுத்தப்பட்டதாகவும் இருந்தபோதிலும், தானும்
தன்னுடைய அதிகாரத்துவமும் முற்றிலும் எதிர்த்திருந்த சர்வதேச சோசலிசக் கொள்கைகளை மிகத் தெளிவாகப்
பிரதிநிதித்துவம் செய்த நபரை அகற்றிவிட வேண்டும் என்று ஸ்ராலின் உறுதியாக இருந்தார்.
1933 ம் ஆண்டு ஜேர்மனியத்
தொழிலாளர் வர்க்கம் தோல்வியடைந்து, ஹிட்லர் எழுச்சி அடைந்தபின்னர், ஸ்ராலினிச அதிகாரத்துவம் நனவான
எதிர்ப்புரட்சிகர சக்தியாக மாறிவிட்டது என்று ட்ரொட்ஸ்கி அறிவித்தார். அக்காலத்தில் ஸ்ராலினிஸ்டுகள் நனவுடன்
தொழிலாளர் வர்க்கத்தின் தோல்விகளை வளர்ச்சியுறச் செய்தனர். இது முறையே சோவியத் ஒன்றியத்தின்
தனிமைப்படலை அதிகரித்தது.
1936-39ல் நிகழ்ந்த ஸ்பானிய உள்நாட்டுப் போரின் அனுபவங்கள் இதை நன்கு
உணர்த்தின. ஸ்பெயினில் 1936ம் ஆண்டு ஒரு புரட்சிகரச் சூழ்நிலை நிலவியது. ஸ்பெயினின் அரசாங்கத்தைத்தான்
(அதாவது பூர்ஷ்வா குடியரசைத்தான்) தொழிலாளர் வர்க்கம் ஆதரிக்க வேண்டும், தொழிலாளர் வர்க்கத்தின்
அதிகாரம் பற்றிய பிரச்சினை உள்நாட்டுப் போர் முடிந்த பின் கவனிக்கப்படலாம் என்று ஸ்ராலினிசவாதிகள்
வலியுறுத்தினர். இது ஒரு காட்டிக் கொடுப்பாகும். இதுதான் பிராங்கோவின் வெற்றிக்கு வகை செய்தது.
லண்டனில் தேசிய ஆவணக் காப்பகத்தில் இப்பொழுது சில ஆவணங்கள் உள்ளன. இவை
எப்படி பிரிட்டிஷ் பாதுகாப்புப் பிரிவுகள் மாஸ்கோவில் இருந்து ஸ்பெயினின் கம்யூனிஸ்ட் கட்சிக்கு சென்ற தகவல்களை
இடைமறித்து பதிவு செய்தன என்றும், ட்ரொட்ஸ்கிஸ்டுகளை ஸ்பெயினில் கொன்றுவிட வேண்டும் என்றும்,
பார்சிலோனாவிலும் மற்ற இடங்களிலும் தொழிலாளர்களின் புரட்சிகர இயக்கத்தை நசுக்கிவிட வேண்டும் என்றும்
கட்சிக்கு உத்தரவிடப்பட்டது என்று காட்டுகின்றன.
சர்வதேசத் தொழிலாளர் வர்க்கம் பற்றிய ஸ்ராலினிசக் காட்டிக்கொடுப்புக்கள்
பற்றி இன்னும் ஏராளமான சான்றுகள் உள்ளன.
ஏகாதிபத்திய நாடுகளுடனான குளிர்யுத்தத்தின் ஒரு பகுதியாக 1950 களில்
ஸ்ராலினிசக் கட்சிகள், ANC
போன்றவற்றின் தேசிய விடுதலைப் போராட்டத்திற்காக ஆதரவைத் தந்தன. ஆனால் அவை சோசலிசப்
புரட்சிகளை முன்னேற்றுவிக்கும் விருப்பத்தைக் கொண்டிருக்கவில்லை. அப்படிச் செய்திருந்தால் அது சோவியத்
ஒன்றியத்தின் அதிகாரத்துவத்தின் நிலையைச் சீர்குலைத்திருக்கும்.
தென்னாப்பிரிக்காவில் கம்யூனிஸ்ட் கட்சி
ANC உடைய
Freedeom Charter
எனப்பட்ட சுதந்திர சாசனத்திற்கு ஆதரவு கொடுத்தது. உண்மையில், இந்த சாசனம் கட்சி உறுப்பினர் ஒருவரான
Rusty Bernstein
ஆல் இயற்றப்பட்டிருந்தது. சோசலிச சொற்றோடர்களில் இயற்றப்பட்டிருந்தாலும், சுதந்திரசாசனம் ஒரு
சோசலிச வேலைத்திட்டம் அல்ல. மாறாக ஒரு தேசியவாத மற்றும் முதலாளித்துவத் தன்மையைத்தான்
கொண்டிருந்தது.
1956ம் ஆண்டு நெல்சன் மண்டேலா எழுதிய கட்டுரை ஒன்றில் இது நிரூபிக்கப்படுகிறது.
ANC
உடைய விழைவு முதலாளித்துவத்தைத் தூக்கி எறிதல் அல்ல என்றும் தென்னாபிரிக்கப் பொருளாதாரத்தின்மீது ஆதிக்கம்
செலுத்தியிருந்த பெரு வணிக நிறுவனங்களின் பிடியை முறிப்பதுதான் என்றும் அவர் விளக்கியிருந்தார். அவர் எழுதியதாவது:
"இந்த ஏகபோக நிறுவனங்களை முறித்து அவற்றை ஜனநாயகமயப்படுத்துதல் என்பது ஐரோப்பியரல்லாத முதலாளித்துவ
வர்க்கம் ஒன்று செழித்து வளர்வதற்கு புதிய களங்களைத் திறந்து விடும்.
இந்த நாட்டின் வரலாற்றிலேயே முதல் தடவையாக ஐரோப்பியரல்லாத
முதலாளித்துவ வர்க்கத்தினர் தங்களுடைய சொந்தப் பெயரிலும் உரிமையிலும் ஆலைகள், தொழிற்கூடங்கள்,
வணிகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களைக் கொள்ளும் வாய்ப்பைப் பெறுவர். இதுகாறும் இல்லாத அளவிற்கு
செல்வத்தில் திளைத்துக் களிப்புறுவர்." (p. 95 of
Anthony Sampson's biography of Mandela.
தென்னாபிரிக்கா பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ள பெரும்பாலான
வர்ணனைகள் எமது தோழர்களுள் ஒருவரான ஆன் டால்போட்டால்
எழுதப்பட்ட, சாம்சன் நூல் பற்றிய மதிப்புரையிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது, அதனை நீங்கள் பின்ரும் முகவரியில்
வாசிக்கலாம்:
http://www.wsws.org/articles/1999/aug1999/mand-a05.shtml)
மண்டேலா தன்னுடைய சிறைவாசம் முழுவதும்
ANC உடைய
போராட்டம் கறுப்பு மத்தியதர வர்க்கத்திற்கு மூலதனத்தை அடைவதற்கான போராட்டமாக இருக்கும் என்று
வாதிட்டு வந்தார். 1970களின் கடைசிப்பகுதியில், ரோப்பன் தீவில் இருந்து கைதிகளிடையே சுதந்திர சாசனத்தைப்
பற்றி ஒரு கடுமையான வாதம் நடந்தது. சுதந்திரசாசனம் ஒரு சோசலிச ஆவணம் என்று வாதிட்ட மற்ற கைதிகளுக்கு
எதிராக மண்டேலா அதன் நோக்கம் ஒரு முதலாளித்துவ ஜனநாயகத்தை நிறுவுதல் என்றும் முதலாளித்துவமுறையைத்
தக்கவைத்திடல் என்றும் உறுதியாகக் கூறினார். அதைத்தான் அவருடைய அரசாங்கம் துல்லியமாகச் செயல்படுத்தியது.
ANC உடைய வேலைத்திட்டத்தின்
மற்ற கூறுபாடுகள் அனைத்தும் கைவிடப்பட்டாலும், அதன் மையத்தளமான கறுப்பு முதலாளிகளை உருவாக்குவது
என்பது தொடரப்பட்டது என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள்.
1990க்கு முற்பட்ட காலத்தில்,
ANC தன்னிடம்
இருந்து முறிந்து பெருமளவு சுதந்திரமாக இருக்கும் இயக்கத்தின் தலைமையை மேற்கொள்ள அரும்பாடுபட்டது.
இறுதியில் நிறவெறி ஆட்சியை பேச்சுவார்த்தை மேசைக்கு வர நிர்பந்தித்தது
ANC அல்ல,
மாறாக கறுப்பு தொழிலாளர் வர்க்கமும் நகரங்களில் இருந்த இளைஞர்களும்தான். முதலில் மண்டேலாவின் தலைமையிலும்
இப்பொழுது மெபெக்கியினாலும் நடத்தப்படும் ANC
அரசாங்கத்தின்மூலம் இந்த வெகுஜன இயக்கத்தைக் கட்டுப்பாட்டிற்குள் வைக்க முடிந்தது.
மண்டேலாவின் முற்போக்குக் கருத்துக்கள் என்பவை கம்யூனிஸ்ட் கட்சியுடன் அவர்
கொண்டிருந்த தொடர்பால் வந்தவை. எனக்குத் தெரிந்த வரை இன்றளவும்
SACP "ஒரு சோசலிச
நோக்கத்தை" பிரதிநிதித்துவம் செய்யும் தன்மையைத்தான் சுதந்திரசாசனம் கொண்டிருக்கிறது என வாதிட்டு வருகிறது.
அரசாங்கத்தின் மீது அது குறைகூறினாலும்,
SACP
தொழிலாளர் வர்க்கத்தை ANC
இடம் இருந்து முறித்துக் கொள்ள வேண்டும் என்ற அழைப்பை விட்டதும் இல்லை. மண்டேலாவின் முன்னோக்கில் இருந்து
தன்னை முறித்துக் கொள்ளவும் இல்லை. SACP
1920 களில் ஸ்ராலின் கட்டமைத்திருந்த இரண்டு-கட்ட புரட்சித் தத்துவத்தின்
வகையில் உள்ளது. நான் விளக்கியபடி அதற்கும் லெனின், ட்ரொட்ஸ்கி ஆகியோரின் கருத்துப் படிவங்களுக்கும்
எவ்விதத் தொடர்பும் கிடையாது. முதல் நோக்கம் தென்னாப்பிரிக்காவில் பூர்ஷ்வா ஜனநாயகத்தை அடைவது என்று
SACP
தொடர்ந்து கூறிவருகிறது. அதன் பின்னர் தேதியிடப்படாத பிந்தைய காலத்தில் சோசலிசத்திற்காகப் பாடுபடும்
என்றும் கூறியுள்ளது.
கம்யூனிஸ்ட் கட்சியுடனான அதன் தொடர்பு
ANC ஐ உண்மையில்
இருப்பதைவிடக் கூடுதலான இடது என்று காட்டிக் கொள்ள வகை செய்தது. இது தென்னாபிரிக்கத் தொழிலாளர்
வர்க்கம் எண்ணிக்கையிலும் வலிமையிலும் பெருகிய போது கூடுதலான விலைமதிப்பற்ற தன்மையை அதற்கு அளித்தது.
1970 களில் பெரும்பாலான கறுப்பு தென் ஆப்பிரிக்கர்கள் நிலத்தை விட்டு நீங்கி நகரத் தொழிலாளர்களாக
மாறிவிட்டனர்.
1976ல் தோன்றிய
Soweto எழுச்சியில் தீவிரமாக வெளிப்பட்டிருந்த பெருகிய அமைதியின்மையை
அடுத்து, 1984ம் ஆண்டு பொருளாதார பின்னடைவும் எழுச்சி இயக்கம் ஒன்று வளர்வதற்கு வகை செய்தது. அதில்தான்
நீங்கள் ஒரு பங்கைக் கொண்டிருந்தீர்கள். இந்த இயக்கம்
ANC க்கு பெரும்
வியப்பையும் அதிர்ச்சியையும் கொடுத்தது. நகரங்களின் இயக்கத்தின் மீதான தலைமையை உறுதிப்படுத்துவது ஸ்ராலினிஸ்டுகளின்
உதவி இல்லாமல் போய் இருந்தால் ANC
க்கு மிகவும் கடினமாக இருந்திருக்கும். தங்கள் தொழிற்சங்க அதிகாரத்துவ நிலைமையைப் பயன்படுத்தி அரசியல்
எதிர்ப்பின் வரம்பிற்குள் தொழிலாளர்களை அவர்கள் கட்டுப்படுத்தி வைத்தனர். அதேபோல் அந்த எதிர்ப்பு
திருச்சபைகளாலும் புனிதப்படுத்தப்பட்டு, நிறபாகுபாடு எதிர்ப்பு தாராளவாதிகளாலும் ஏற்கப்பட்டிருந்தது.
இன்று, தொழிலாளர் வர்க்கம் இன்னும் கூடுதலான முறையில் மெபெக்கி அரசாங்கத்தின்
பிற்போக்குக் கொள்கைகளை எதிர்க்கும் நிலையில்,
SACP இன்னும் அதே பங்கைத்தான் செலுத்துகிறது. அதாவது
அரசாங்கத்திற்கான எதிர்ப்பை தொழிற்சங்க வரம்பிற்குள் கட்டுப்பாட்டினுள் வைத்தல் என்பதே அது.
தென்னாப்பிரிக்காவில் உள்ள நிலைமை பற்றி என்னைவிட உங்களுக்கு நன்றாகவே தெரியும்.
ஆனால், உலகம் முழுவதிலும் உள்ள நாடுகளில் அழுத்தங்கள் பெருகி வருகின்றன என்பதில் எனக்கு உறுதியான கருத்து
உள்ளது. தென்னாப்பிரிக்காவும் இதற்கு விதிவிலக்கு அல்ல. வருங்காலத்தில் பெரும் அரசியல் போராட்டங்கள் ஏற்படும்.
இருபதாம் நூற்றாண்டின் படிப்பினைகளை, குறிப்பாக ரஷியப் புரட்சி மற்றும் அதன் வீழ்ச்சி ஆகிவற்றின் படிப்பினைகளை
நன்கு உணர்ந்தவர்களின் தலைமைதான் தேவைப்படுகிறது.
இந்த இயக்கம் குறுகிய தேசிய முன்னோக்கின் அடிப்படையில் இல்லாமல் ஒரு
சர்வதேச வேலைத் திட்டத்தை கட்டாயம் அடிப்படையாகக் கொள்ளவேண்டும். சோசலிச சமத்துவக் கட்சி மற்றும்
உலக சோசலிச வலைத்தளத்தின் மூல அடித்தளம் சர்வதேசத் தொழிலாளர் வர்க்கத்தின் புரட்சிகர மரபுகளாகும்.
கடிதத்தை முடிக்கு முன், உங்கள் கடைசி மின்னஞ்சலில் உள்ள மேலும் சிலவற்றைப்
பற்றி சுருக்கமாகக் கூறுகிறேன்.
மத்திய கிழக்கைப் பொறுத்தவரையில், அங்கு நிகழ்வுகளை ஒட்டி நாங்கள் பல
கட்டுரைகளைப் பகுப்பாய்வு செய்து வெளியிடுகிறோம். இஸ்ரேல் அரசின் தோற்றங்கள் பற்றியும் எழுதியுள்ளோம்.
மிகச் சிக்கல் வாய்ந்த, கடினமான பிரச்சினையாக அது உள்ளது. ஆனால் அப்பகுதியில் ஒரே முன்னேற்றப் பாதை
மத்திய கிழக்கின் சோசலிச ஐக்கிய அரசுகளை நிறுவுதல்தான் என்பதில் நாங்கள் உறுதியுடன் இருக்கிறோம். இது
ஒன்றுதான் அரபு மற்றும் யூத தொழிலாளர் வர்க்கத்தை ஐக்கியப்படுத்தும்.
"வெள்ளை முதலாளித்துவ அமைப்பின்" மிருகத்தனத்தில் இருந்து தென்னாப்பிரிக்காவை
மீட்பதற்கு 1985 எழுச்சியில் பங்கு பெற்றிருந்ததைப் பற்றி நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள். முதலாளித்துவமும் அதன்
மிருகத்தன்மையும் வெள்ளையர்களுக்கு மட்டுமே உடைமை என்ற பிரமைகளை பற்றி இப்பொழுது நீங்கள் கொண்டிருக்கமாட்டீர்கள்
என்பதை நான் உறுதியாய் நம்புகிறேன். அக்காலக்கட்டத்தில் இளைஞர்கள் அவ்வாறு அதைக் காணவைத்தது
கம்யூனிஸ்ட் கட்சியால் மேற்கொள்ளப்பட்ட தவறான கல்வியூட்டலாகும்.
ANC கூட்டணியில் இருந்து கம்யூனிஸ்ட்
கட்சி முறித்துக்கொள்ள வேண்டும், ஒரு கொள்கையுடைய அரசியல் நிலைப்பாட்டை ஏற்க வேண்டும் என்ற உங்கள்
கடந்த கால நம்பிக்கையைப் பொறுத்த வரையில், பல ஆண்டுகளாகப் பலரும் கொண்டிருக்கும் நம்பிக்கைதான்
இது.
1956 ம் ஆண்டில், நான் குறிப்பிட்டபடி,
ஹங்கேரியப் புரட்சிக்குப் பிறகு விரைவில் ஒரு முடிவு எடுத்து நான் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து விலகினேன். வேறு
சிலர் வேறுவித பாதைகளில் சென்றனர். கம்யூனிஸ்ட் கட்சிக்குள்ளேயே பல மாதங்கள் ஸ்ராலினிச எதிர்ப்புப் பிரிவில்
இருந்து கட்சியின் கொள்கையை மாற்றப் பாடுபட்டனர். ஆனால், அவற்றில் பலன் ஏதும் இல்லை. ஏனெனில் பிரிட்டிஷ்
கம்யூனிஸ்ட் கட்சி முழு ஆதரவையும் ஸ்ராலினிச அதிகாரத்துவத்திற்குக் கொடுத்தது, எந்த எதிர்ப்பையும் அதனால்
பொறுத்துக்கொள்ள முடியவில்லை. தென்னாப்பிரிக்க கம்யூனிஸ்ட் கட்சியுடனான உங்கள் அனுபவம் 50 ஆண்டுகளுக்குப்
பிறகு கிட்டத்தட்ட அதேமாதிரிதான் இருந்துள்ளது. (ANC
அரசாங்கத்தை ஆதரிப்பதிலிருந்து ஒரு காலகட்டத்தில்
SACP முறித்துக்கொள்ளாது எனக் கூறுவதாக இது ஆகாது. ஆனால்
தொழிலாளர் வர்க்கத்தின் வளர்ந்து வரும் போர்க்குணத்தை திசை திருப்பும் வகையில்தான் அவ்வாறு செய்யக்
கூடும்.)
நம்முடைய வலைத் தளத்தில் விலைமதிப்பற்ற வரலாற்று ஆவணங்கள் பல உள்ளன. உதாரணத்திற்கு
WSWS
உடைய ஆசிரியர் குழுவின் தலைவரான டேவிட் நோர்த் , "ரஷியப் புரட்சியும் இருபதாம் நூற்றாண்டின் தீர்க்கப்படாத
பிரச்சினைகளும்" பற்றி கொடுத்துள்ள தொடர் உரைகள் உள்ளன.
அவை
http://www.wsws.org/articles/2005/aug2005/le11-a29.shtml
என்பதில் காணப்படலாம்.
நம் ஆஸ்திரேலியப் பிரிவின் தலைவரான நிக் பீம்ஸ், பொருளாதாரப் பிரச்சினைகளில்
வல்லுனராவார். அவர் எழுதிய கட்டுரை ஒன்றையும் உங்களுக்குப் பரிந்துரை செய்கிறேன். அதில் அவர் ஆப்பிரிக்க
நாடுகளுக்கும் சர்வதேச நிதி மூலதன அமைப்புக்களுக்கும் இடையே இருக்கும் உறவுகள் பற்றிப் பகுத்தாய்ந்துள்ளார்.
இது,
http://www.wsws.org/articles/2002/feb2002/corr-f18.shtml
என்பதில் காணப்படலாம்.
உங்களுக்கு வினாக்கள் ஏதேனும் இருக்குமாயின், தயவு செய்து கேளுங்கள். என்னால்
இயன்ற அளவிற்கு அவற்றிற்கு விடையிறுப்பேன்.
உங்களிடம் இருந்து பதிலை எதிர்பார்க்கிறேன்.
சகோதரத்துவத்துடன்,
பார்பாரா சுலோட்டர் |