:
ஆசியா
:
இலங்கை
Thousands protest in Colombo against
killing of Tamil MP
தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் கொலைக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் கொழும்பில்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
By our correspondents
17 November 2006
Use this version
to print | Send this link by email
| Email
the author
தமிழ் பாராளுமன்ற உறுப்பினரான நடராஜா ரவிராஜ் கடந்த வாரம் படுகொலை
செய்யப்பட்டதற்கு எதிராக கொழும்பில் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றினர். இந்த ஆர்ப்பாட்டமானது
இலங்கையில் உள்நாட்டு யுத்தம் மீண்டும் வெடித்திருப்பது சம்பந்தமாகவும் மற்றும் கடந்த ஆண்டு பூராவும் நூற்றக்கணக்கானவர்கள்
கடத்தப்பட்டு அல்லது படுகொலை செய்யப்பட்டமை சம்பந்தமாகவும் ஆழமாக கவலையடைந்திருந்த சிங்கள, தமிழ்
மற்றும் முஸ்லிம் ஆகிய சகல சமூகங்களினதும் மக்களை ஈர்த்திருந்தது.
ரவிராஜ் நவம்பர் 10 காலை கொழும்பில் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது வாகனத்தின்
மீது சரமாரியாக துப்பாக்கிப் பிரயோகம் செய்த கொலையாளி, ரவிராஜையும் அவரது மெய்ப்பாதுகாவலரையும்
கொன்றுவிட்டு காத்திருந்த மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுவிட்டான். இதற்குப் பெரும்பாலும் குற்றவாளிகளாக
இருக்கக் கூடியவர்கள், இராணுவமும் மற்றும் அவர்களோடு சேர்ந்து இயங்கும், பல அட்டூழியங்களோடு
தொடர்புபட்ட தமிழ் துணைப்படைக் குழுக்களுமே ஆகும்.
ரவிராஜ், தமிழீழ விடுதலைப் புலிகளின் பரிந்துரையாளர்களாக செயற்படும் ஒரு கூட்டணியான
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினராவார். புலிகளுக்கு சார்பான குறிக்கோள்களை பிரதிபலிப்பது சட்டவிரோதமற்றது
எனினும், அது பாதுகாப்புப் படைகள் உட்பட அரச இயந்திரத்தின் மீது செல்வாக்குச் செலுத்தும் சிங்களத் தீவிரவாதிகளால்
தேசத்துரோகத்திற்கு சமமானதாக கருதப்படுகிறது.
திங்கட் கிழமை நடந்த ஊர்வலம், பொரல்லையில் ரவிராஜின் பூதவுடல் வைக்கப்பட்டிருந்த
மலர் சாலையில் இருந்து தொடங்கி, கொழும்பு நகர மண்டபத்திற்கு அருகில் உள்ள விக்டோரியா பூங்காவை
நோக்கி சென்றது. ஆர்ப்பாட்டக்காரர்கள், "மனிதத்திற்கு எதிரான குற்றங்களை நிறுத்து", "வெட்கம்" போன்ற
பிரகடனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்திச் சென்றதோடு "தமிழர்களை கொல்லாதே", "இனவாத கொலைகாரர்களை
கைதுசெய்" போன்ற கோஷங்களையும் எழுப்பினர். ஏனையோர் யுத்தத்திற்கு முடிவுகட்டுமாறு வேண்டுகோள் விடுத்தனர்.
சுமார் 5,000 பேர் இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்த தேசிய யுத்த எதிர்ப்பு முன்னணியின்
(NAWF),
பேச்சாளர்களின் உரைக்கு செவிமடுத்தனர்.
கொழும்பின் சில பகுதிகளில், ரவிராஜின் கொலைக்கு எதிரான கண்டனத்தை குறிக்கும்
முகமாக தமிழ் மற்றும் முஸ்லிம் கடை உரிமையாளர்கள் கடைகளை மூடினர். இலங்கையின் மத்திய பெருந்தோட்ட
மாவட்டங்களான ஹட்டன், தலவாக்கலை மற்றும் பொகவந்தலாவை போன்ற நகரங்களிலும் செவ்வாய்கிழமை கடைகள்
பூட்டப்பட்டிருந்தன. இரத்தினபுரி மற்றும் புசல்லாவை பிரதேசங்களில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்திருந்தனர்.
திங்கள் ஊர்வலத்தின் போது பெருந்தொகையான பொலிசார் தயார் நிலையில்
இருந்தனர். சுமார் 1,000 பொலிசார் நிலைகொண்டிருந்ததோடு மேலதிகமாக 2,000 பேர் கொழும்புக்கு
கொண்டு
வரப்பட்டிருந்தனர். ஒரு இடத்தில் "கொலையாளிகளுக்கு அரச ஆதரவு
கொடுப்பதை நிறுத்து" என எழுதப்பட்டிருந்த ஒரு பதாகையை சுருட்டிக்கொள்ளுமாறு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி
ஒருவர் ஆர்ப்பாட்டக்காரர்களை நெருக்கினார். தேசிய யுத்த எதிர்ப்பு முன்னணியின் தலைவர்கள், ஏற்கனவே
திட்டமிட்டபடி நகரசபை மைதானத்தில் கூட்டம் நடத்தப்படுவதை தடுப்பதற்கு கொழும்பு மாநகரசபை எடுத்த
முடிவுக்குப் பின்னால் அரசாங்கம் இருப்பதாகக் குற்றஞ்சாட்டினர்.
ஒரு அவசர அறிவித்தலின் பேரில் ரவிராஜின் படுகொலைக்கு எதிரான கண்டனத்திற்கு
ஆயிரக்கணக்கான மக்கள் பங்குபற்றியமை, ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ மீண்டும் உள்நாட்டு யுத்தத்திற்குத்
திரும்புவதற்கு எதிரான பரந்த வெகுஜன எதிர்ப்பின் அறிகுறியாகும். இரு தசாப்தகால மோதல்களின் பின்னர், மக்களில்
மிகப்பெரும்பான்மையானவர்களைப் பொறுத்தளவில் அவர்களுக்கு மேலுமொரு இரத்தக் களரியும் துன்பங்களும் தேவையில்லை.
எவ்வாறெனினும், கூட்டத்தில் இடம்பெற்ற உரைகள் சாட்சி பகர்வது போல், இந்த
எதிர்ப்பானது இந்த மோதலுக்கு முடிவுகட்டுவதற்கான ஒரு அரசியல் போராட்டத்தை முன்னெடுக்க ஒரு வாகனத்தை
கண்டுபிடிக்க வேண்டியுள்ளது. தேசிய யுத்த எதிர்ப்பு முன்னணியானது இனவாதத்தையும் யுத்தத்தையும் எதிர்ப்பதற்கான
ஒரு வழிமுறையல்ல. மாறாக, அது இராஜபக்ஷ அரசாங்கத்திற்கும் மற்றும் அதன் புதுப்பிக்கப்பட்ட யுத்தத்திற்கும்
எதிரான ஒரு சுயாதீனமான அரசியல் இயக்கத்தை திசை திருப்புவதாகும்.
தேசிய யுத்த எதிர்ப்பு முன்னணி, தற்போதைய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி
(ஸ்ரீ.ல.சு.க.) தலைமையிலான அரசாங்கத்தின் அங்கமாக உள்ள அரசியல்வாதிகள் உட்பட, அரச சார்பற்ற
நிறுவனங்கள் மற்றும் கட்சிகளின் ஒரு பரந்த "யுத்த எதிர்ப்பு" கூட்டமைப்பாகும். இதில் நவசமாஜக் கட்சி
(ந.ச.ச.க.) மற்றும் ஐக்கிய சோசலிசக் கட்சி (ஐ.சோ.க.) போன்ற பலவித மத்தியதர வர்க்க
தீவிரவாதக் கருவிகளும் உள்ளடங்குகின்றன. இந்தக் கருவிகள், அவப்பெயர்பெற்ற முதலாளித்துவ அரசியல்வாதிகளுக்கு
இடதுசாரி முகச்சாயலை வழங்குவதில் இன்றியமையாத பாத்திரம் வகிக்கின்றன.
1983ல் யுத்தத்தை தொடங்கி அதை ஒரு தசாப்தத்திற்கும் மேலாக முன்னெடுத்த
எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் (ஐ.தே.க) பல பாராளுமன்ற உறுப்பினர்கள் உத்தியோகபூர்வ
மேடையில் இருந்தனர். இந்த வலதுசாரிக் கட்சி இராணுவத்தின் புதுப்பிக்கப்பட்ட தாக்குதலை எதிர்க்காததோடு
இராஜபக்ஷ அரசாங்கத்துடன் அண்மையில் உத்தியோகபூர்வ உடன்படிக்கை ஒன்றைக் கைச்சாத்திட்டுக்கொண்டது. ஐ.தே.க
பாராளுமன்ற உறுப்பினரான ராஜித சேனரட்ன கூட்டத்தில் உரையாற்றுகையில், வேண்டுமென்றே இராணுவத்தைக் குற்றஞ்சாட்டுவதை
தவிர்த்துக்கொண்டார். அவர் அதற்குப் பதிலாக ரவிராஜின் படுகொலையின் மூலம் உருவாக்கப்பட்டுள்ள "சவாலை"
ஏற்றுக்கொள்ளுமாறு "இந்த நாட்டின் பாதுகாப்புத் துறை தளபதிகள் மற்றும் பாதுகாப்புப் படைகளையும்"
கேட்டுக்கொண்டார்.
தமது உறுப்பினரை இழந்த தமிழ் கூட்டமைப்பும் கூட, பெரும்பாலும் சந்தேக
நபர்களாக இருக்கக் கூடிய பாதுகாப்புப் படையினரை சுட்டிக்காட்டத் தவறிவிட்டனர். தமிழ் கூட்டமைப்பின்
பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், கொலையாளிகளை தேடுவதற்காக ஸ்கொட்லன்ட் யார்டுக்கு
அழைப்பு விடுத்தமைக்காக இராஜபக்ஷவை துணிவற்று விமர்சிப்பதிலும் தன்னை வரையறுத்துக்கொண்டார். இலங்கை
பொலிஸ் மீது தனது நம்பிக்கையை பிரகடனம் செய்த அவர், அவர்கள் சுதந்திரமாக செயற்பட்டால் அவர்களால்
வழக்கைத் தீர்க்க முடியும் என கூறிக்கொண்டார். ஆனால், இந்த ஆண்டு நூற்றுக்கணக்கானவர்கள் கடத்திச்
செல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட போதும் பொலிஸ் யாருக்கு எதிராகவும் வழக்குத் தொடுக்கவில்லை.
தேசிய யுத்த எதிர்ப்பு முன்னணியின் மத்திய முன்நோக்கானது சர்வதேசத்தால்
அனுசரணையளிக்கப்பட்ட "சமாதான முன்னெடுப்புகளை" புதுப்பிப்பதாகும். அதன் தலைவர் குமார் ரூபசிங்க,
"உடனடியாக சமாதானப் பேச்சுக்களை மீண்டும் தொடங்குமாறு ஒரே குரலில் கோரிக்கை விடுக்க
ஒட்டுமொத்தமாக எல்லா மாவட்டங்களிலும் மக்களை அணிதிரட்ட" ஊர்வலங்கள் மற்றும் கூட்டங்களை நடத்த
அழைப்புவிடுத்தார். எவ்வாறெனினும், இந்த "சமாதான முன்னெடுப்புகள்" வெகுஜனங்களின் தேவைகளுக்காக அன்றி,
பெரும் வல்லரசுகள் மற்றும் கொழும்பில் உள்ள பெரும் வர்த்தகக் கும்பல்களின் நலன்களை இட்டு
நிரப்புவதற்காகவே வரையப்பட்டுள்ளது. சமாதான முன்னெடுப்பின் தோல்வியானது இனவாத அரசியலின்
உற்பத்தியாகும். தேசிய யுத்த எதிர்ப்பு முன்னணியில் உள்ளவர்கள் உட்பட அனைத்து அரசியல் கட்சிகளும் தசாப்த
காலங்களாக இந்த இனவாதத்தின் பின்னால் அணிதிரண்டுள்ளன.
இராஜபக்ஷ அரசாங்கத்திடம் உழைக்கும் மக்களைத் தாக்கும் சமூகப் பொருளாதார
நெருக்கடிகளுக்குத் தீர்வு இல்லாமையினாலேயே அது நாட்டை மீண்டும் யுத்தத்திற்குள் தள்ளியுள்ளது. இந்த
நெருக்கடிகளுக்கு அது யுத்தத்தின் சுமைகளையும் மற்றும் சீரழிந்த வாழ்க்கை நிலைமைகளையும் சுமக்கத்
தள்ளப்பட்டுள்ள தொழிலாளர் வர்க்கத்தை பிளவுபடுத்துவதற்காக இனவாத பகைமைகளை கிளறிவிடுவதன் மூலம்
பதிலளிக்கின்றது. ஜனாதிபதி இராஜபக்ஷ, கடந்த நவம்பரில் நடந்த தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணி
(ஜே.வி.பி.) மற்றும் ஜாதிக ஹெல உறுமய போன்ற சிங்களத் தீவிரவாதக் கட்சிகளின் நேரடி ஆதரவுடன் ஒரு
குறுகிய வெற்றியைப் பெற்றார்.
கூட்டத்தின் வழிநடத்தலுக்கு ஒரு தீவிரவாத முகத்தை வழங்கும் முயற்சி ந.ச.ச.க.
தலைவர் விக்கிரமபாகு கருணாரட்னவிடம் விடப்பட்டிருந்தது. ரவிராஜின் படுகொலை "இனவாத மற்றும் இராணுவ
சக்திகளின் சூழ்ச்சியின் முதற்படி" என அவர் பிரகடனம் செய்தார். அவர் ஜனாதிபதியும் மற்றும் அமைச்சரவையும்
பொறுப்பாளிகளாக இருக்கலாம் என சுட்டிக்காட்ட முயற்சித்தார். "இந்த இனவாத, இராணுவவாத நச்சுப்
பாம்பு அமைச்சரவையின் ஊடாக ஜனாதிபதியின் பாதங்களில் தொடங்கி வீதிக்கு வந்தே இந்தக் கொலை
நடத்தியுள்ளது," என அவர் பறைசாற்றினார்.
ஆயினும், கருணாரட்னவின் வாய்வீச்சு மொழி, மேடையில் இருந்த ஏனைய
அரசியல்வாதிகளைப் போலவே, அவரும் செல்வழியை மாற்றுமாறு இராஜபக்ஷவிற்கு ஒர் அற்ப வேண்டுகோளை
விடுக்கின்றார் என்ற உண்மையை மறைப்பதற்காகவே வரையப்பட்டதாகும். கருணாரட்னவின் கூற்றுப்படி, இராஜபக்ஷ
இந்த ஆண்டு ஏற்கனவே நூற்றுக்கணக்கான உயிர்களைப் பலியெடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட யுத்தத்தை கட்டவிழ்த்து
விட்டமைக்குப் பொறுப்பாளி அல்ல, மாறாக இராணுவம், ஜே.வி.பி. மற்றும் ஜாதிக ஹெல உறுமய ஆகியவற்றால்
அவர் பலிக்கடா ஆக்கப்பட்டுள்ளார் என்பதாகும். "இந்த நச்சுப் பாம்புகளை மயக்க முயற்சிக்க வேண்டாம்",
"இந்த நச்சுப் பாம்புகள் உங்களைக் கடிக்க வெகு நாள் எடுக்காது" என்பதே அவர் ஜனாதிபதிக்கு விடுக்கும்
அறிவுறுத்தலாகும்.
உலக சோசலிச வலைத் தள நிருபர்கள் பல ஆர்ப்பாட்டக்காரர்களுடன்
பேசினர்.
களுத்துறையில் இருந்து வந்திருந்த ஒரு சிறு வியாபாரியான நடேசன் சிவபாலன்,
43, கூறியதாவது: "அரசாங்கம் ஆரம்பத்தில் அது சமாதான முன்னெடுப்புகளை தொடருவதாகவும் நிலையான
சமாதானத் தீர்வை கொண்டு வருவதாகவும் தெரிவித்தது. இப்போது சமாதானம் கிடையாது. அரசாங்கம் அதைக்
கைவிட்டுவிட்டது. சமாதானம் வார்த்தைகளில் மட்டுமே, ஆனால் யுத்தம் நடந்து கொண்டிருக்கின்றது.
"பல தமிழர்கள் கடத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். ஒருவர் அடையாள அட்டை
இன்றி கைது செய்யப்பட்டால் அரசாங்கமே அவரை புலி என கருதுகிறது. ரவிராஜ் பாதுகாப்பான இடத்தில்
கொல்லப்பட்டுள்ளார். கொலைகாரர்கள் அரசாங்கத்தில் உள்ளவர்களுடன் தொடர்பு வைத்திருப்பார்கள் என நாம்
நினைக்கிறோம்.
"இரு பிரதான கட்சிகளும் பேசுகின்றனவே தவிர தமிழர்களுக்காக குறிப்பிடத்தக்க
எதையும் செய்யவில்லை. சில வீதிகளைத் திறந்ததற்கும் மேலாக விக்கிரமசிங்க (ஐ.தே.க தலைவர்) தனது
சமாதான முன்னெடுப்பில் வேறெதையும் செய்யவில்லை. ஐ.தே.க. தமிழர்களுக்காக எதையும் செய்வதன் பேரில்
அரசாங்கத்துடன் கூட்டணி அமைக்கின்றது என நாம் நினைக்க முடியாது."
ரஞ்சன் என்பவர் தெரிவித்ததாவது: "தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும்
அக்கிரமங்களைப் பற்றி அனைவரும் மெளனமாக இருக்க வேண்டும் என்பதே இந்தக் கொலையின் மூலம் விடுக்கப்படும்
எச்சரிக்கையாகத் தோன்றுகிறது. இந்த அரசாங்கத்திற்கு சமாதானத்தில் அக்கறை இல்லை என நான்
நம்புகிறேன். தான் சமாதானத்தில் அக்கறை கொண்டிருப்பதாக இராஜபக்ஷ கூறிக்கொண்ட போதிலும், அவர்
தாக்குதல்களை முன்னெடுக்குமாறு இராணுவத்திற்குக் கட்டளையிட்டுக் கொண்டிருக்கின்றார்.
"இப்போது அரசாங்கம் வரவு செலவுத் திட்டத்தைக் கொண்டு வரவுள்ளது. மக்கள்
மீது மேலும் சுமைகள் சுமத்தப்படக் கூடும். நான் என் வாழ்நாள் முழுவதும் கொழும்பில் வாழ்ந்துள்ளேன். ஒன்றைச்
சொல்லிவிட்டு வேறொன்றை செய்யும் பல அரசியல்வாதிகளை நான் பார்த்துள்ளேன். கடந்த காலங்களில் இந்த
நாட்டின் சிறுபான்மையினரின் உரிமைகளை பலமாகப் பாதுகாத்த லங்கா சமசமாஜக் கட்சி (ல.ச.ச.க) பற்றி
நான் புத்தகங்களில் படித்துள்ளேன். ஆனால் இந்தக்கட்சி அதன் பின்புறத்தை எமக்குக் காட்டியவாறு, சிறுபான்மையினரின்
உரிமைகள் மீது பெரும் தாக்குதலைத் தொடுக்கின்றது."
ஒரு புடவைக் கடை தொழிலாளியான சபேசன், 41, கூறியதாவது:
"நான் யாழ்ப்பாண நிலைமைகளை கவனித்துள்ளேன். பல மாதங்களாக அங்கு ஊரடங்குச் சட்டம் தொடர்கிறது.
மக்களால் வேலைக்கு செல்ல முடிவதில்லை. போக்குவரத்து மூடப்பட்டுள்ளதால் அத்தியாவசிய உணவுப் பொருள்களுக்கு
பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது. உணவுப் பொருட்களின் விலை கொழும்பை விட 10 முதல் 20 மடங்கு வரை கூடுதலாக
உள்ளது. மக்களால் எப்படி உயிர்பிழைக்க முடியும்?
"இங்கு கொழும்பிலும் மற்றும் நாட்டின் ஏனைய பிரதேசங்களிலும் மக்கள் ஒரு
தொகைப் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். பொருள் விலை அன்றாடம் அதிகரிப்பதால் பெரும்பாலான மக்கள்
தமது நுகர்வுகளை குறைத்துக்கொள்ளத் தள்ளப்படுகிறார்கள். நான் தோட்டப் புறத்தில் உள்ளேன், எனது
பெற்றோர்களும் தோட்டத் தொழிலாளர்கள். அவர்கள் பெறுகின்ற அற்ப சம்பளத்தில் தோட்டத் தொழிலாளர்கள்
எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பது எனக்குத் தெரியும்" என்று அவர் குறிப்பிட்டார். |