:
ஆசியா
:
இலங்கை
High-profile Tamil parliamentarian
murdered in Sri Lanka
இலங்கையில் முன்னணி தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் கொல்லப்பட்டார்
By Nanda Wickremasinghe
15 November 2006
Use this version
to print | Send this link by email
| Email
the author
தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கடந்த வெள்ளியன்று படுகொலை
செய்யப்பட்டமை, அரசாங்கம் நாட்டை மீண்டும் உள்நாட்டு யுத்தத்திற்குள் தள்ளியுள்ள நிலையில், இந்த ஆண்டு நடந்த
படுகொலைகள், "காணாமல்போன" சம்பவங்கள் மற்றும் கடத்தல்களின் நீண்ட பட்டியலின் புதியதாகும். குற்றவாளிகளில்
எவரும் கைதுசெய்யப்பட்டு வழக்குத் தொடரப்பட்டிருக்காத போதிலும், இராணுவம், அதன் பங்காளியான துணைப்படைகள்
மற்றும் அவர்களின் கொலைப்படைகள் ஆகியவற்றின் மீதே ஆதாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
ரவிராஜ் யுத்தம் மற்றும் கடத்தல்களுக்கு எதிராக பகிரங்க பிரச்சாரங்களில் பங்கெடுத்த
நிலையில் கொல்லப்பட்டதானது, குறிப்பாக ஒரு ஆத்திரமூட்டல் நடவடிக்கையாகும். அவர் படுகொலை செய்யப்பட்டதை
எதிர்த்து கண்டனம் தெரிவிப்பதற்காக திங்களன்று மத்திய கொழும்பில் நடந்த ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள்
கலந்துகொண்டனர். "மனிதத்திற்கு எதிரான குற்றங்களை நிறுத்து" மற்றும் "வெட்கம்" போன்ற வாசகங்கள் எழுதிய
பதாகைகளை அவர்கள் சுமந்து சென்றதோடு "தமிழர்களை கொல்லாதே" எனவும் கோஷமெழுப்பினர். நகர
வீதிகள் ஊடாகச் சென்ற ஊர்வலத்தில் இறந்த பாராளுமன்ற உறுப்பினரின் பூதவுடலின் பின்னால் மக்கள் கூட்டமாக
அணிதிரண்டு சென்றனர்.
ரவிராஜ் கொழும்பில் நாரஹேன்பிட்டியில் உள்ள அவரது வீட்டில் இருந்து வெளியே
வந்த பின்னர் பட்டப்பகலில் சுட்டுக்கொல்லப்பட்டார். சுமார் காலை 8.30 மணியளவில், அவரது வாகனம் பிரதான
நெடுஞ்சாலைக்கு திரும்பும் போது துப்பாக்கிதாரி அவரது வாகனத்தின் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிப் பிரயோகம்
செய்தான். கொலையாளி காத்திருந்த மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றான். பின்னர் பொலிசார் ஒரு
பைக்குள் வெற்றுத் தோட்டாக்களுடன் ஒரு ரி 56 ரக தானியங்கி துப்பாக்கியையும் ஒரு தலைக்கவசத்தையும் கண்டெடுத்தனர்.
வீதித் தடைகள் மற்றும் சோதனைச் சாவடிகளில் அகப்படாமல் துப்பாக்கிதாரிகளால்
சம்பவ இடத்திற்கு வந்து அங்கிருந்து திரும்பிச் செல்ல முடிந்தமை, பாதுகாப்புப் படையினரின் தலையீட்டை
சுட்டிக்காட்டுகிறது. இந்தப் படுகொலை, இராணுவ பொலிஸ் தலைமையகத்திற்கு நெருக்கமாக காலை
போக்குவரத்து நெரிசலுக்கு மத்தியில் மற்றும் பிரதான இராணுவ முகாம் மற்றும் நாரஹேன்பிட்டி மற்றும்
பொரளையில் உள்ள பொலிஸ் நிலையங்களில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்திற்குள் நடந்துள்ளது.
ஒரு சட்டத்தரணியான ரவிராஜ், தமிழீழ விடுதலைப் புலிகளின் பரிந்துரையாளர்களாக
செயற்படும் தமிழ்க் கட்சிகளின் குழுவான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒரு முன்னணி பாராளுமன்ற
உறுப்பினராவார். அவரது இறுதிச் சடங்குகள் இன்று அவரது பிறந்த இடமான யாழ்ப்பாணக் குடாநாட்டின்
சாவகச்சேரி நகரில் இடம்பெறவுள்ளன. தமிழ் கூட்டமைப்பினர் உள்நாட்டு யுத்தத்தை உக்கிரப்படுத்தி வருவதற்காக
ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ மீது குற்றஞ்சாட்டியதோடு மோதல்களை முடிவுகட்டுவதற்காக பேச்சுவார்த்தை
மூலமான அதிகாரப் பரவலாக்கல் ஒழுங்கு ஒன்றுக்காகவும் பிரச்சாரம் செய்தனர்.
ரவிராஜ் "அடையாளந்தெரியாத" துப்பாக்கிதாரிகளால் கொல்லப்பட்ட இரண்டாவது
தமிழ் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினராவார். கடந்த டிசம்பரில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற
உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் குருதிஉறையும் விதத்தில் படுகொலைசெய்யப்பட்ட சம்பவமானது, 2002ல்
கைச்சாத்திடப்பட்ட யுத்தநிறுத்தத்தை கீழறுப்பதிலும் பாதுகாப்பு படைகளுக்கும் புலிகளுக்கும் இடையிலான ஒரு
இருண்ட மூடிமறைக்கப்பட்ட யுத்தத்தை தூண்டுவதிலும் ஒரு முக்கியமான பாத்திரத்தை வகித்துள்ளது. ஜோசப்
பரராஜசிங்கத்திற்குப் பதிலாக நியமிக்கப்படவிருந்த வி. விக்னேஸ்வரன் ஏப்பிரல் 7 ம் திகதி படுகொலை
செய்யப்பட்டமை, கடந்த பெப்பிரவரியில் ஜெனீவாவில் நடந்த முதல் சுற்றுப் பேச்சுக்களின் பின்னர் மேலும்
சமாதான பேச்சுக்களுக்கான வாய்ப்புகளை விளைபயனுள்ள வகையில் நாசமாக்கியது.
ரவிராஜ் கொல்லப்படுவதற்கு முதல் நாள், தமிழ் கூட்டமைப்பு பாராளுமன்ற
உறுப்பினர்கள் கொழும்பில் ஐ.நா. அலுவலகத்திற்கு முன்னால் ஒரு மறியல் போராட்டத்தில்
பங்கெடுத்துக்கொண்டனர். இந்தப் போராட்டம், இராணுவத்தால் தமிழ் பொதுமக்கள் கொல்லப்படுவதற்கும்
தொடந்தும் அதிகரித்துவரும் கடத்தல்களுக்கும் மற்றும் சட்டத்திற்குப் புறம்பான கொலைகளுக்கும் எதிராக
நடந்தது. இந்தப் போராட்டம் தீவின் கிழக்கில் கதிரவெளியில் உள்ள ஒரு அகதிகள் முகாம் மீது கடந்த வாரம்
இராணுவம் ரொக்கட் மற்றும் ஆட்டிலறித் தாக்குதல்களை முன்னெடுத்ததில் 40க்கும் மேற்பட்ட பொதுமக்கள்
கொல்லப்பட்டதை சுட்டிக்காட்டியது.
இந்தக் கொலைக்காக தமிழ் கூட்டமைப்பும் புலிகளும் பாதுகாப்பு படை மீது
குற்றஞ்சாட்டியிருந்தன. தமிழ் கூட்டமைப்பு தலைவர் ஆர். சம்பந்தன் ஊடகங்களுக்குத் தெரிவித்ததாவது:
"ரவிராஜின் கொலையானது தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் குரலை நசுக்குவதற்காக இலங்கை இராணுவத்துடன்
சேர்ந்து இயங்கும் துணைப்படைகள் மேற்கொண்ட தெளிவான முயற்சியாகும்."
இராணுவப் புலணாய்வுத் துறையானது புலிகளையும் மற்றும் அவர்களின்
ஆதரவாளர்களையும் தாக்குவதில் பலவித புலி விரோத ஆயுதக்குழுக்களுடன் ஒத்துழைப்பதில் நீண்ட வரலாற்றைக்
கொண்டதாகும். இராணுவத்துடன் கூட்டுச் சேர்ந்துள்ள துணைப்படைகளில் புலிகளில் இருந்து பிரிந்து சென்ற கருணா
குழுவும் மற்றும் இராஜபக்ஷ அரசாங்கத்தின் கூட்டணிப் பங்காளியான ஈழ மக்கள் ஜனநாயக கட்சியும்
(EPDP)
அடங்கும்.
இந்தக் கொலையை "நாட்டையும் அரசாங்கத்தையும் அவமானத்திற்குள்ளாக்க
வேண்டுமென்றே நன்கு திட்டமிட்டு செய்யப்பட்ட கொடூரச் செயலாகும்..." என விவரிப்பதன் மூலம் ஜனாதிபதி
இராஜபக்ஷ இந்தக் குற்றச்சாட்டை திசை திருப்ப முயற்சித்தார். அரசாங்கத்தின் நற்பெயரைக்
களங்கப்படுத்துவதற்காக புலிகள் தம்மில் ஒருவரை கொலை செய்துள்ளனர் என்ற உட்பொருளுக்கு ஒரு துண்டு
ஆதாரத்தைக் கூட வழங்கவில்லை. இது, பாதுகாப்புப் படைகள் சம்பந்தப்பட்ட அட்டூழியங்கள் வெளிவரும்போது
இராணுவம், அரசாங்கம் மற்றும் கொழும்பு ஊடகங்களால் அளிக்கப்படும் நிலையான மன்னிப்பாகும்.
இந்தக் கொலை தொடர்பான விசாரணைக்கு பிரித்தானியாவின் ஸ்கொட்லன்ட்
யார்ட்டின் உதவியை பெறுமாறு வெளியுறவு அமைச்சுக்கும் இராஜபக்ஷ ஆலோசனை தெரிவித்திருந்தார். இந்த நகர்வு
வளர்ச்சி கண்டுவரும் உள்ளூர் மற்றும் சர்வதேச விமர்சனங்களை திசைதிருப்புவதை இலக்காகக் கொண்ட ஒரு வெற்று
சைகையாகும். புலிகளுக்கு எதிரான தாக்குதல்களை முன்னெடுக்குமாறு இராணுவத்திற்கு கட்டளையிடும் அதே வேளை,
இராஜபக்ஷ பெரும் வல்லரசுகளின் ஆதரவை தக்கவைத்துக் கொள்ளவும் மற்றும் உள்நாட்டில் யுத்த விரோத உணர்வுகளை
எதிர்க்கவும் இன்னமும் தன்னை ஒரு "சமாதான விரும்பியாக" காட்டிக்கொள்ள முயற்சிக்கின்றார்.
பொலிஸ் இந்தக் கொலையுடன் தொடர்புபட்ட எட்டுப் பேரை தடுத்துவைத்து விசாரணை
செய்து வருகின்றது. ஆயினும், கொலையாளி அல்லது கொலையாளியுடன் நேரடியாக சம்பந்தப்பட்டவர்கள் அவர்கள்
மத்தியில் இருப்பார்கள் என்பது நிச்சயமற்றதாகும். ஒவ்வொரு புதிய அக்கிரமங்களின் பின்னரும் அரசாங்கம் வழமைபோல்
ஒரு விசாரணையை அறிவிக்கும். ஆயினும், பாதுகாப்பு படைகள் சம்பந்தப்பட்ட விடயங்களில், பொலிஸ் கடந்த
ஆண்டு எவருக்கும் எதிராக வழக்குத் தொடுக்கவில்லை.
யுத்தத்திற்கு எதிரான வெகுஜன எதிர்ப்பு வளர்ச்சிகண்டு வருவதையிட்டு விழிப்படைந்துள்ள
மக்கள் விடுதலை முன்னணியும் (ஜே.வி.பி) ஜாதிக ஹெல உறுமயவும் இந்தக் கொலையை கண்டனம் செய்துள்ளன.
இந்த இரு சிங்களத் தீவிரவாதக் கட்சிகளும் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை உக்கிரப்படுத்துமாறு ஆர்பாட்டம் செய்து
வருவதோடு இராணுவத்தின் அனைத்து குற்றங்களையும் ஆதரிக்கின்றன. இரு கட்சிகளும் பலவித துணைப்படைகளுடன், குறிப்பாக
கருணா குழுவுடன் நெருக்கமாக ஒத்துழைப்பதுடன், கடந்த காலங்களில் தாங்களாகவே வன்முறை ஆத்திரமூட்டல்களையும்
மேற்கொண்டுள்ளன.
இராணுவம் புலிகளுக்கு எதிரான தனது நடவடிக்கைகளை மேலும் உக்கிரப்படுத்தத்
தயாராகிக் கொண்டிருக்கின்றது என்பதற்கன அறிகுறியே ரவிராஜின் படுகொலையாகும். இந்த வழிமுறைகள்
யுத்தத்தை எதிர்க்கும் எவருக்கும் எதிராக பயன்படுத்தப்படும் என்ற தெளிவான எச்சரிக்கை ஆகும். |