World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

France: Socialist Party chooses a Blairite presidential candidate

பிரான்ஸ்: சோசலிஸ்ட் கட்சி ஒரு பிளேயர்வாதியை ஜனாதிபதி வேட்பாளராக தேர்ந்தெடுக்கிறது

By Antoine Lerougtel
18 November 2006

Back to screen version

2007ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல்களில் சோசலிஸ்ட் கட்சியின் வேட்பாளராக செகோலென் ரோயால் (Ségolène Royal) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கட்சியின் கட்டண உறுப்பினர்கள் 218,771 பேர் வெளிப்படையான வாக்குப்பெட்டிகளில் நவம்பர் 16ம் தேதி தங்களுடைய வாக்குகளை அளித்தனர். இப்படி, தகுதி பெற்ற வாக்காளர்களில் 68,049 பேர் புதிய உறுப்பினர்கள் ஆவர்; இவர்கள் வாக்குப்பதிவில் பங்கு பெறுவதற்காக குறைக்கப்பட்ட கட்டணமான 20 யூரோக்களை இணையதளம் மூலம் செலுத்தி சோசலிஸ்ட் கட்சியில் (Parti Socialiste -PS) சேர்ந்தவர்களாவர்.

ரோயாலுக்கு மொத்த வாக்குகளில் 60.6 சதவிகிதம் கிடைத்தது. மற்ற இரு போட்டியாளர்கள் 20.8 சதவிகித வாக்குகள் பெற்ற, லியோனல் ஜோஸ்பன் உடைய பன்முக இடது அரசாங்கத்தில் (1997-2002) நிதி மந்திரியாக இருந்த டொமினிக் ஸ்ட்ரவுஸ்-கா மற்றும் 18.5 சதவீதம் வாக்குகள் பெற்ற ஜனாதிபதி பிரான்சுவா மித்திரோன் (1984-86) அரசாங்கத்தில் பிரதம மந்திரியாக இருந்த லோரோன்ட் பாபியுசும் ஆவர்.

மூன்று வேட்பாளர்களுமே 1981ல் இருந்து 1995 வரை ஜனாதிபதியாக இருந்த மித்திரோனுக்கு மிகவும் நெருக்கமானவர்கள்தாம். பிரெஞ்சு தொழிலாள வர்க்கத்தின் சோசலிச விழைவுகளை தகர்த்து பிரெஞ்சு முதலாளித்துவ வர்க்கத்தின் கடும் சிக்கன நடவடிக்கைகளை சுமத்தியதில் மூவருக்குமே பங்கு இருந்தது. இவர்கள் மூன்று பேருமே இந்த ஆண்டு ஜூன் மாதம் விரிவுபடுத்தப்பட்ட வலதுசாரி சோசலிஸ்ட் கட்சியின் வேலைத்திட்டத்திற்கு உறுதிகொடுத்ததோடு உறுதியான விசுவாசத்தை நிலைநாட்டினர்.

ஆறு விவாதங்கள் கொண்டிருந்த ஒரு ஆறுவார தேர்ந்தெடுக்கும் முறையின் உச்சக்கட்டமாக இந்த வாக்கெடுப்பு இருந்தது: அவற்றில் மூன்று தேசிய தொலைக்காட்சியிலும் மூன்று கட்சி உறுப்பினர்கள் முன்னிலையிலும் நடைபெற்றன.

பிரெஞ்சு மற்றும் ஐரோப்பிய பெருவணிகத்திற்கு அவற்றின் நலன்களை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் காப்பவர்களாக தங்களின் பயனுடைமையை காட்டிக்கொள்வதற்கு இவ்விவாதங்கள் சோசலிஸ்ட் கட்சி மற்றும் அதன் ஜனாதிபதி வேட்பாளராகலாம் என்று நம்பிக்கை கொண்டவர்களால் பயன்படுத்தப்பட்டன. வாழ்க்கைத் தரம், சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதில் தொழிலாள வர்க்கம் மற்றும் இளைஞர்களின் எதிர்த்துப் போராடும் ஆற்றலை அடக்குவதற்கான தங்களின் திறனை நிரூபிப்பதற்கு வேட்பாளர்கள் ஒருவரோடு ஒருவர் போட்டியிட்டு நின்றனர்.

செப்டம்பர் 2005ல் இருந்தே, செய்தி ஊடகத்தால் சோசலிஸ்ட் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக வரக்கூடியவர் என்று ரோயால் உயர்த்திக் காட்டப்பட்டார். நெருக்கடியின் கீழ் ரோயால் உறுதியாக நிற்கக்கூடியவரா, 2002 ஜனாதிபதி தேர்தல்களில் சோசலிஸ்ட் கட்சி வேட்பாளர் லியோனல் ஜோஸ்பன் நவ பாசிச ஜோன் மரி லூப்பனால் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்ட பொழுதான நிலை திரும்பவும்வராது தடுப்பதில், நம்பிக்கைக்கு உகந்த வகையில் பார்த்துக் கொள்ளுவாரா என்பது பற்றியும் ரோயாலின் திறனுக்கான ஒரு சோதனையாக, இவ்விவாதங்களின் சுற்று பிரெஞ்சு அரசியல் அமைப்புமுறையினால் பார்க்கப்பட்டது. முதலாளித்துவ ஐந்தாம் குடியரசின் நிறுவன அமைப்புக்களை அச்சுறுத்தலுக்கு ஆளாக்கிய பரந்த மக்களின் தன்னியல்பான எழுச்சிகளை இது தூண்டிவிட்டது. இவ்வம்மையார் இத்தடையை தாண்டி அரசியல் மற்றும் செய்தி ஊடக உயரடுக்கினரின் ஆதரவை தக்க வைத்துக் கொண்டுள்ளார்.

விவாதங்களுக்கு முன்னதாக, பிரெஞ்சு ஆளும் உயரடுக்கினருக்கு சோசலிஸ்ட் கட்சியின் இராணுவவாதத்திற்கு எதிர்ப்பு, குற்றம் என்பது ஒரு சமூகப் பிரச்சினை என்று கையாளப்படுதல், தொழிலாளர்களுடைய உரிமைகள் பாதுகாப்பு மற்றும் சமத்துவ அபிலாஷைகள் ஆகியவை சம்பந்தப்பட்ட, மரபார்ந்த வாய்ச்சவடால் தடைகளை உடைக்கும் திறன் தனக்கு உண்டு என்பதை ரோயால் தெளிவாக்கினார். முதலாளித்துவ சார்பு கொள்கைகளை தொடர்ந்திருந்தபோதும், டோனி பிளேயரின் தீவிர சந்தை சார்புடைய அரசியலில் இருந்து ஒதுங்க முற்பட்டிருந்த ஜோஸ்பனுடைய நிலைப்பாட்டிற்கு மாறாக, பிரிட்டிஷ் பிரதம மந்திரியின் பால் தனக்கு உள்ள ஆழ்ந்த மதிப்பை ரோயால் வெளிப்படுத்தினார்.

கடமைதவறும் இளைஞர்கள் இராணுவத்தால் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்றும், மத்திய மற்றும் உயர்தர வர்க்கத்தினர் பள்ளிக்கல்வியை தேர்வுசெய்வதில் தனிச்சிறப்பிடம் கொடுப்பதிலிருந்து தடுக்கும் ஒழுங்குமுறைகளை பலவீனப்படுத்துவதற்காகவும் (அதாவது வலதுசாரியினர் கோரும் "தேர்வு செய்யும் சுதந்திரம்"), ஆசிரியர்கள் கல்லூரிகளில் (11வயது முதல் 15 வயதினருக்கு நடத்தப்படுவதில்) ஆசிரியர்களின் வேலைநேரம் இரட்டிப்பாக்கப்பட வேண்டும் என்றும் இவ்வம்மையார் அழைப்பு விடுத்துள்ளார். தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளின் செயல்பாட்டை மதிப்பீடு செய்வதற்கு குடிமக்கள் நடுவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று மக்களை கவரும் ஜனரஞ்சக முன்மொழிவையும் அவர் செய்துள்ளார்.

ரோயால் ஒரு மக்கள் ஆதரவு வேலைத்திட்டத்தை முன்வைத்ததால், வேட்பு மனுத் தகுதியை வென்றுவிடவில்லை; மாறாக ஆளும் UMP இன் வேட்பாளரை வெல்லும் வாய்ப்பை பெற்றுள்ளார் என்று செய்தி ஊடகத்தால் பிரச்சாரம் செய்யப்பட்ட தன்மையில் இவ்வெற்றி கிடைத்துள்ளது. Liberation ஏடு குறிப்பிட்டுள்ளது போல், "ஜனாதிபதி தேர்தல்களின் மிகவும் பொருத்தமாக கட்சியை பிரதிபலிக்க கூடிய வேட்பாளர்" என்றில்லாமல், "வலதை வீழ்த்தும் அதிக திறன் உடைய வேட்பாளர்" என்ற முறையில் பிரச்சினை இருந்தது. இது அதிகாரத்தை கைப்பறுவதற்கு எது அதிக அளவில் "வாக்காளர்களை ஈர்க்கும்" என்ற பிரச்சினைதான். முதலாளித்துவ செய்தி ஊடகம் மற்றும் அரசியல் நடைமுறையின் ஆதரவை ஈர்ப்பதில் பெரும் ஆற்றலுடைய வேட்பாளரை தேர்ந்தெடுப்பதற்கு சுருக்கமான அடையாள மொழிதான் இச்சொல் ஆகும்.

வாக்குகளை குறைவாக பெற்ற இரு வேட்பாளர்களும், வெற்றி பெற்றவருக்கு உறுதுணையாக இருப்பதாக உடனடியாக உறுதியளித்தனர். ஐரோப்பிய அரசியலமைப்பிற்கு கட்சியின் ஆதரவு பற்றியதில் கட்சியின் முன்னணி எதிர்பாளராக பாபியுஸ் முக்கியமாக இருந்திருந்த போதிலும், தன்னுடைய எதிர்ப்பாளர்களின் வெளிப்படையான வணிக சார்பிற்கு எதிராக குறைந்த அளவு சீர்திருத்தம் என்ற நிலைப்பாட்டை கொண்டிருந்தாலும்கூட, அவருடைய செய்தித் தொடர்பாளர் Claude Bartelone: "இப்பொழுது முக்கியமானது, சோசலிஸ்ட்டுக்கள் இருக்கும் சிறப்பான சூழ்நிலையில் ஒன்று சேர்ந்து சுவரொட்டிகள் தயாரித்தல், ஒட்டுதல் இவற்றில் ஈடுபட வேண்டும்" என்பதுதான் என அறிவித்தார்

பாபியுஸ் இன் ஆதரவாளரான சோசலிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர் Jean-Luc Melenchon இத்தகைய வெளிப்படையான வலது சாரி வேட்பாளரை நிறுத்துவதின் மூலம் சோசலிஸ்ட் கட்சி முற்றிலும் தொழிலாள வர்க்கத்திடம் இருந்து ஒதுக்கப்பட்டுவிடும் என்ற அச்சத்தை வெளியிட்டுள்ளார். தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களை திசை திருப்பக் கூடிய வகையில் நம்பகத்தன்மை உடைய ஓர் "இடது" மாற்றீடு தேவை என்று அவர் கூறினார். "நான் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளேன்; நான் குழப்பமும் அடைந்துள்ளேன். சோசலிஸ்ட் கட்சி இத்தகைய வழிவகையை தேர்ந்தெடுக்கும் என்று நான் நினைக்கவில்லை... என்ன செய்வது என்று திகைத்துள்ளேன். தாராண்மை எதிர்ப்பு (அதாவது சுதந்திர சந்தை-எதிர்ப்பு) திரட்டுக்களின் பொறுப்பு இதுகாறும் இல்லாததை விட இப்பொழுது கூடுதலாக உள்ளது" என்று அவர் குறிப்பிட்டார்.

"தாராண்மை எதிர்ப்பு திரட்டுக்கள்" என்பதின் மூலம் அவர் குறிப்பிடுவது ஐரோப்பிய அரசியல் அமைப்பிற்கு எதிரான இயக்கத்தின் பொழுது நிறுவப்பட்ட குழுக்கள் ஆகும். "அக்குழுவினர் ஒரு பொது வேட்பாளரை தேர்ந்தெடுப்பதில் கட்டாயம் கையாளுவர், அது உண்மையான இடது இயக்கமாகும்" என்றார் அவர். மூன்று வேட்பாளர்களும் மிகத் தீவிர வலதுசாரி நிலைப்பாட்டை கொண்டிருக்கையில் இந்த அறிக்கை மிகவும் வெகுளித்தனமாக உள்ளது.

இதேபோன்று கம்யூனிஸ்ட் கட்சியும் (PCF) ஜனாதிபதித் தேர்தல்களை அடுத்து உடனடியாக வரும் சட்டமன்ற தேர்தல்களில் சோசலிஸ்ட் கட்சியுடன் கொள்ளும் தவிர்க்கமுடியாத உடன்பாடுகளை மேற்கொள்ளும்போது அதன் வலதுசாரிக் கொள்கைகள் இன்னும் வெளிப்படையான முறையில் அம்பலமாகும் என்ற அச்சத்தை கொண்டுள்ளது. PCF இன் செய்தி ஏடான l'Humanite புகார்கூறியிருப்பதாவது: "இந்த மூவரும் கிட்டத்தட்ட ஒரேமாதிரியான வலதிற்கு இடம் பெயர்தல் என்ற வகையிலான அரசியல், சிந்தனைப்போக்கைத்தான் கொண்டுள்ளனர். ' என்று கூறப்பட்ட கடினமான நிலைப்பாட்டைத்தான் இவர்களுடைய நிலைப்பாடு ஏற்றுள்ளது; எடுத்துக்காட்டாக, பின்வாங்கிய நிலையில் தளத்தை வலதுசாரி எதிரிக்கே விட்டுக் கொடுக்கவில்லை என்றால், 'சட்டம், ஒழுங்குகிற்கு" கொடுக்கும் சலுகை என்பது என்ன?"

வெளியுறவுக் கொள்கை பற்றிய விவாதம்

செகொலென் ரோயால் மூன்று வேட்பாளர்களில் மிகக் கூடுதலான வலதுசாரி என்பதில் சந்தேகம் இல்லை என்றாலும், மூன்று பேருடைய வேறுபாடுகளும் மிகக் குறைந்த தன்மை உடையவையே அன்றி கொள்கை அளவில் மாறுபட்டவை அல்ல.

பிரெஞ்சு மற்றும் உலக ஏகாதிபத்தியத்தின் பாதுகாலர்கள் என்ற முறையில் வர்க்கத்தன்மை கொண்டிருக்கும் இவர்களுடைய தன்மை பொது தொலைக்காட்சியில் நவம்பர் 7ம் தேதி நடைபெற்ற வெளியுறவுக் கொள்கை விவாதத்தின்போது நன்கு தெளிவாயிற்று. "உலகம் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது; முன்பு இருந்ததைவிட தெளிவாய் உணரக்கூடியதாக இப்பொழுது ஆபத்து அதிகமாக உள்ளது; இலாபத்திற்கான முறையான போட்டியில் ......மூலவளங்களுக்கான போட்டி எப்பொழுதும் போருக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக உள்ளது" மற்றும் "இலாபங்கள் பூகோளமயமாக்கலானது மோதல்களை பூகோளமயமாக்கியுள்ளது." என்றும் ஸ்ட்ரவுஸ்-கான் வெளியிட்ட மதிப்பீட்டிற்கு ரோயால் மற்றும் பாபியுஸ் இருவரும் உடன்பாட்டை தெரிவித்தனர்.

இந்த நிலைக்கு அவர்கள் விடையிறுப்பு தேசியவாத, சொல்லப்போனால், பேரினவாத முறையில்கூட இருந்தது. "ஜனாதிபதி பிரெஞ்சு மக்களை காத்து இந்த அச்சுறுத்தல்களுக்கு எதிராக இராணுவத்தை வலுப்படுத்த வேண்டும்" என்று ஸ்ட்ரவுஸ்-கான் கூறினார். பிரான்சை பொறுத்தவரை "அது எங்கெல்லாம் உள்ளதோ அங்கு, சர்வதேச அமைப்புக்களில், IMF, ஐக்கிய நாடுகள் போன்றவற்றில் தனது வலிமையை பிரான்ஸ் காட்ட வேண்டும்," இராணுவ ஆற்றல் தீர்க்கமானது என்று அவர் வலியுறுத்தினார். "அதற்கு ஐரோப்பாவை பிரான்ஸ் நாடி நிற்க வேண்டியுள்ளது. எனவேதான் தூதரக மற்றும் பாதுகாப்பு நெறிகளை கொண்ட ஐரோப்பாவை கட்டியமைத்தல் அவசரமானதாகும், அது இன்று திரிசங்கு நிலையில் இருக்கிறது, என்றும் அவர் கூறினார்.

இதற்கு பாபியுஸ் ஒப்புதல் தெரிவித்து "அமெரிக்க வல்லரசையும் எதிர்கொள்ள வேண்டும் ...அமெரிக்க ஒருதலைப்பட்சத்தால் ஏற்பட்டுள்ள மகத்தான சமசீரற்ற நிலையையும் எதிர்கொள்ள வேண்டும்" என்ற தேவையை வலியுறுத்தினார்.

உலகில் இருக்கும் வறுமை மற்றும் சமத்துவமின்மை பற்றிய பிரச்சினைகளை வேட்பாளர்கள் எழுப்பியபோது, ஏகாதிபத்திய சுரண்டல் கொள்கை இவற்றிற்கு எதிரான தடுப்பை எச்சரிக்கும் வகையில் அவர்கள் பேசினர்; அதுபோன்றவை ஆபிரிக்காவிலும், குறிப்பாக ஈராக், ஆப்கானிஸ்தான், பாலஸ்தீனம் மற்றும் லெபனானில் நிகழ்கின்றன என்றும் இதனால் உலக ஒழுங்கு சீர்குலையலாம் என்றும் அவர்கள் கூறினர். செகோலென் ரோயால் கூறியதாவது: "உலகின் பாதுகாப்பு என்ற பிரச்சினையை தீர்க்காவிட்டால், எமது நாடுகளிலும் பயங்கரவாதம் வந்துவிடும்... ஆதரவற்றோர் புலம்பெயர்வர். வேறுவிதமாகக் கூறினால் மற்றொரு விதமான உலக ஒழுங்கைக் காப்பது என்றால் பிரெஞ்சு நலன்களை, நன்கு அறியப்பட்டவற்றைக் காப்பது என்றும் ஆகும்."

பிரான்சின் இராணுவப் படைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்பதில் அவர்கள் பிடிவாதமாக இருந்தனர். "ஓர் ஆபத்து நிறைந்த உலகில் பாதுகாப்புத் தேவைக்கு முன்னுரிமை கொடுப்பதில் எந்தவிதமான நிதியத் தடைகளும் இருக்கக் கூடாது" என்று பாபியுஸ் வலியுறுத்தினார். முதலாம் உலகப் போரில் தளபதியாக இருந்தவரின் பேத்தியான ரோயால் இக்கருத்தை விரிவாகக் கூறினார்: "நாம் வாழும் இந்த உறுதியற்ற உலகில், பிரான்சின் பாதுகாப்பு முயற்சிகளை குறைத்தல் என்பது முடியவே முடியாது. எமது மக்களுடைய பாதுகாப்பு மற்றும் மூலோபாய நலன்களின் பாதுகாப்பு இரண்டிற்கும் மற்றும் ஐக்கிய நாடுகளின் மேற்பார்வையின் கீழ் நடத்தப்படும் தலையீடுகளுக்கும் இது பொருந்தும்."

ஒரு ஐரோப்பிய இராணுவத்தை கட்டியமைப்பதில் பிரான்சின் பங்கை விவாதிக்கையில், பிரான்சின் அணுவாயுதங்கள் பற்றி மற்றவர்கள் கண்காணிப்பது என்ற பிரச்சினைகூட மிகவும் உறுதியாக நிராகரிக்கப்பட்டது. "முற்றிலும் முடியாது. இல்லாவிடில் மற்றவர்களுக்கு அணுவாயுத எச்சரிக்கையாய் இருப்பதை அது அகற்றிவிடும்" என்று ரோயால் கூறினார். ஐந்தாம் குடியரசில் போனபார்ட்டிச வகையிலான கருத்திற்கு தன்னையறியாமல் ஆதரவை வெளிப்படுத்திய பாபியுஸ், "அணுவாயுதம் என்னும் திறவுகோல் குடியரசு ஜனாதிபதியின் பொறுப்பு ஆகும். இதன் நம்பகத்தன்மை ஜனாதிபதியின் மனவலிமை, முடிவு இவற்றைத்தான் நம்பியிருக்கும்." என்றார். இதற்கு முற்றிலும் உடன்பாடு தெரிவிக்கும் வகையில், ஸ்ட்ரவுஸ்-கான் கூறினார்: "அணுவாயுதத் தொடர்பு என வரும்போது பிரான்ஸ் தன்னுடைய திறனைத் தானே தக்கவைத்துக் கொள்ள வேண்டும்."

தன்னுடைய தேசிய நலன்களுக்காக உலகில் எங்கு வேண்டுமானாலும் பிரெஞ்சு இராணுவம் பயன்படுத்தப்படலாம் என்பதற்கு மூவருமே ஆதரவு கொடுத்தனர்.

ஈராக்கை பொறுத்தவரையில், தற்போதைய அமெரிக்க கைப்பாவை அரசாங்கம், ஆக்கிரமிப்பு படையினால் மக்கள்மீது சுமத்தப்பட்டது ஒரு "ஜனநாயக அரசாங்கம்" என்ற குறிப்பிடத்தக்க கருத்தை ரோயால் கூறினார். அமெரிக்கப் படைகளை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்பதை அவர் எதிர்த்து, திரும்பப் பெறுவதற்கு முன்பு "ஒத்துழைப்பிற்கான முயற்சிகளை நாம் மேற்கொள்ள வேண்டும்; மற்றும் வளர்ச்சி நிதியத்திற்கும் துணையாக இருக்க வேண்டும்." இதே போல் ஸ்ட்ரவுஸ் கானும் அமெரிக்க படைகள் விரைவாக திரும்பப் பெறப்பட வேண்டும் என்றாலும் "உள்நாட்டுப் போர் என்ற ஆபத்து இருந்தால் அது செய்யப்படக் கூடாது" என்று வலியுறுத்தினார்.

உள்நாட்டு போருக்கு வழிவகுப்பவர்கள் நவ காலனித்துவ ஆக்கிரமிப்பாளர்கள், பேரழிவு தரக்கூடிய பிரித்தாளும் சூழ்ச்சித் தந்திரத்தை தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதற்கு பயன்படுத்துகிறார்கள் என்பது வேண்டுமென்றே சிடுமூஞ்சித்தனத்துடன் அலட்சியம் செய்யப்பட்டது. சோசலிஸ்ட் கட்சியின் ஜனாதிபதியாகலாம் என்று நினைத்துள்ளவர்கள் போரின் உண்மை உந்துதல் பற்றி மெளனமாக இருந்தனர்: அதாவது புவியின் மூலோபாய வளங்கள் மீது கட்டுப்பாட்டை கொண்டுவருதல், அதிலும் குறிப்பாக ஈராக்கில் உள்ள எண்ணெய் மீது கட்டுப்பாடு என்பது பற்றி தொடர்ந்து மெளனமாக இருந்தனர். புஷ் பற்றிக் குறைகூறினாலும், அமெரிக்கா ஒரு நட்பு நாடு என்று அவர்கள் கருத்துத் தெரிவித்தனர்.

இஸ்ரேல் ஆக்கிரமிப்பிற்கு எதிராக ஹெஸ்போல்லாவை ஆயுதம் களையுமாறு செய்வதற்கு லெபனானில் ஐ.நா.வின் FINUL படைகள் இவற்றில் ஜேர்மன் மற்றும் இத்தாலியப் படைகளுடன் பிரெஞ்சுப் படைகளினால் ஆற்றப்படும் "மகத்தான" பங்கை மூவரும் பாராட்டினர். அமெரிக்காவின் மிக நட்பு நாடான இஸ்ரேல் மிக இரக்கமற்ற முறையில் பாலஸ்தீனியர்கள் மற்றும் லெபனிய மக்கள் மீது நடத்தும் கொலைகார தாக்குதல்கள் பற்றி அவர்கள் குறையேதும் கூறவில்லை. மாறாக லெபனான் மீது நடத்தப்பட்ட போரில் அமெரிக்கா நேரில் தலையிடாதது பற்றிய ஏமாற்றத்தைத்தான் வெளிப்படுத்தினர்.

இஸ்ரேலின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை வேண்டும் என்றும், அதே நேரத்தில் பாலஸ்தீனியர்கள் தங்களுடைய சொந்த அரசைக் கொள்ளும் உரிமை பற்றிய வெற்றுரையையும் அவர்கள் பகட்டாய்ப்பேசினர். பிரான்சின் ஜனாதிபதி என்னும் முறையில் ஈரானின் ஜனாதிபதியான அகமதிநெஜட்டையோ, லெபனானில் இருந்து ஹமாஸ் தலைவர்களையோ, அவர்கள் இஸ்ரேலை அழிக்க வேண்டும் என்று நோக்கம் கொண்டிருப்பதால், தான் வரவேற்க மாட்டேன் என்று பாபியுஸ் வலியுறுத்தினார்.

ஈரான் பிரச்சினையை பொறுத்தவரை, அந்நாடு ஆயுதம் தயாரிக்கக் கூடிய தரமுடைய யூரேனியத்தை பெறக் கூடாது என்றும் ஆயுதங்களை தயாரிக்கக் கூடாது என்றும் அவர்கள் உறுதியாகக் கூறினர். ஐ.நா.வின் தடுப்புக்களுக்கு உடன்படவில்லை என்றால் ஈரானியர்கள் மீது பொருளாதார தடைகள் விதிப்பதற்கு ஒப்புதல் கொடுத்தனர். ஒருபடி மேலே சென்று ரோயால் ஆற்றல் உற்பத்திக்காக என்ற சமாதானமுறை அணு பயன்பாட்டிற்குக் கூட சுதந்திரமான முறையில் ஈரானுக்கு உரிமை கொடுக்கக்கூடாது என்று கூறினார்; ஏனெனில் இராணுவ நோக்கங்களுக்கு பயன்படுத்துவதற்கு அது முதல் கட்டமாகும் என்றார் அவர்.

ஐரோப்பிய ஒன்றியம் பற்றி

ஐரோப்பிய ஒன்றியப் பிரச்சினை பற்றிப் பேசுகையில் வேட்பாளர்களுக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நன்கு புலனாயிற்று. ஐரோப்பிய அரசியலமைப்பின் மீது நடந்த 2005ம் ஆண்டு வாக்கெடுப்பின்போது, பாபியுஸ் "வேண்டாம்" வாக்கிற்காக வாதாடினார்; ரோயலும், ஸ்ட்ராஸ்கானும் கட்சிப் பெரும்பான்மையின் வழிப்படி அரசியலமைப்பிற்கு ஆதரவைக் கொடுத்துப் பேசியிருந்தனர். ஆனால் இவை அனைத்துமே ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரெஞ்சு நலன்கள் எப்படிச் சிறந்த முறையில் பாதுகாக்கப்படும் என்பது பற்றிய தந்திரோபாய வேறுபாடுகள்தாம்.

ஒரு வலுவான முதலாளித்துவ ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வாதிட்டு, அத்தகைய அமைப்பு சீர்திருத்தத்திற்கு உட்பட்டு தரமான முறையில் சமூகப் பணிகள் வழங்கப்படுவதற்கும், வாழ்க்கைத் தரங்கள் உயர்த்தப்படுவதற்கும், பரந்த வேலையின்மையைத் தடுப்பதற்கும், மக்கள் குடிபெயர்தல் தடுக்கப்படுவதற்கும் அது சீர்திருத்தம் செய்யப்பட முடியும் என்று மூவருமே பிரமைகளை பரப்ப விழைந்தனர். பிரெஞ்சு - ஜேர்மன் அச்சு உடன்பாடு புதுப்பிக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பை ஸ்ட்ரவுஸ்-கான் வெளிப்படுத்தினார்.

தன்னுடைய வட்டங்கள் கோட்பாட்டை பாபியுஸ் மறுமுறை வலியுறுத்தினார்; அதாவது ஐரோப்பிய பகுதியின் உட்குழு நாடுகள் முதலில் இருக்கும்; இரண்டாவதாக யூரோவில் இல்லாத இங்கிலாந்து போன்றவை இரண்டாம் வட்டத்திலும், மூன்றாவது வெளி வளையமாக ஐரோப்பிய நாடுகளுடன் சிறப்பு வணிக உறவுகளைக் கொண்டிருக்கும் உக்ரைன், துருக்கி போன்ற நாடுகள் மற்றும் முன்னாள் பிரெஞ்சுக் குடியேற்ற நாடுகளான அல்ஜீரியா, மொரோக்கோ, துனிசியா போன்ற மக்கிரெப் (Magreb) நாடுகள் இருக்கும். மூவருமே ஐரோப்பிய விரிவாக்கத்தில் சற்று நிறுத்தம் வேண்டும் என்றும் 50 நாடுள் அடங்கிய ஐரோப்பா கூடாது என்பதில் உறுதியாகவும் இருந்தனர்.

ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் ஒரு பொறுப்பான அரசியல் மூதறிஞர் போல் பேசிய ஸ்ட்ரவுஸ் கான், ஐரோப்பிய ஒன்றியத்தில் நுழைவு பற்றி துருக்கியுடன் பேச்சு வார்த்தைகள் தொடரவேண்டும் என்றார்; ஆனால் 2040-50க்கு முன்னால் இதற்கு சாத்தியக் கூறுகள் இல்லை என்று தாம் நினைப்பதாகவும் கூறினார். "ஆனால் ஐரோப்பாவுடன் இணக்கப்படாவிட்டால், துருக்கி மறுபுறத்திற்குச் செல்லும்; எமது வாசலில் ஈராக், ஈரான் போன்றவற்றுடன் வலுவான தொடர்புடைய நாடு இருக்கும்" என்றார் அவர்.

வேட்பாளர்களில் எவருமே மிகவும் பிற்போக்குத் தன்மை படைத்த, எதேச்சாதிகார பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் கடமைதவறல் தடுப்புச் சட்டங்கள் அகற்றப்பட வேண்டும் என்று கூறவில்லை. அதேபோல் ஜனாதிபதி ஜாக் சிராக் மற்றும் உள்துறை மந்திரி நிக்கோலா சார்க்கோசியின் அவசரகால சட்ட பயன்பாடு பற்றி கண்டித்தும் ஏதும் கூறவில்லை. அந்த சட்டம் 1954-62ல் அல்ஜீரியாவில் நிகழ்ந்த காலனித்துவ போருக்காக தயாரிக்கப்பட்டிருந்தது; ஆனால் உள்நாட்டிலும் 2005 இலையுதிர் காலத்தில் பிரெஞ்சு புறநகர்களில் இளைஞர்கள் கலகங்களின்போது அது பயன்படுத்தப்பட்டது.

சமூகப் பிரச்சினைகளில், சோசலிஸ்ட் கட்சி தேர்தல் வேலைத்திட்டத்தில் சில ஒப்பனை வகை கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. அவற்றை பற்றிய அதிக அக்கறையின்மை அவற்றிற்கான செலவினங்கள் கூட வரையறுக்கப்பட்டு கூறப்படவில்லை என்பதில் இருந்து தெளிவாக உள்ளது. Le Figaro இன் சுதந்திரமான வல்லுனர்களின் கருத்தின்படி, அவை 46 பில்லியன் யூரோக்களாக இருக்கலாம்; அதாவது அத்தொகையை திரட்டுவதற்கு சோசலிஸ்ட் கட்சியில் ஏற்பாடுகள் செய்யப்படாதிருந்தன.

Le Figaro இன் நவம்பர் 13ம் தேதி பதிப்பு ரோயாலை வலதுசாரி, சட்டம் ஒழுங்கு நிலைநிறுத்தும் ஆளும் கோலிச UMP தலைவர் நிக்கோலா சார்க்கோசியுடன் ஒப்பிட்டது; அவர்தான் அநேகமாக ஜனாதிபதி தேர்தலில் இவருடைய போட்டியாளராக இருக்கக்கூடும்; பத்திரிகை கூறியதாவது: "ஓரே செய்திதான்: வெளியில் இருந்து (பூகோளமயமாக்கல், வெளிநாட்டிற்கு தொழில்களை அனுப்புவது என்ற அச்சுறுத்தலில் இருந்து) பாதுகாப்பது, உள்நாட்டிள்குள் இருந்து (குற்றம், கல்விமுறையில் இருக்கும் நெருக்கடி, ஒருங்கிணைப்பில் தோல்வி) என்பதுதான் வந்துள்ளது."

பழமைவாத ஏடான Le Figaro வரவிருக்கும் வர்க்கப் போராட்டத்தில் பிரெஞ்சு முதலாளித்துவ வர்க்கத்தின் நலன்களுக்கு இருவரில் எவர் சிறப்பாகப் பணி புரியக்கூடும் என்ற ஊகத்தில் ஈடுபட்டது. "சூறாவளிப் புயல் தாக்கும்போது, 'ஒரு படுமையான காற்றில் இருந்து பாதுகாக்க அழைத்துச் செல்லுகிறோம் என்று நாகரிகமாக உரைக்கும் விமானியை செவிமடுப்பார்களா அல்லது பூமத்தியரேகைக்கு வடக்கே நாற்பது பாகையில் சீறிஎழுவதைச் சமாளிக்க தயாராக இருக்கும் ஒரு தளபதி தேவை என்று தீர்மானிப்பார்களா?"

பிரான்சிலும் ஐரோப்பாவிலும் இத்தகைய சக்திகளில் இருந்து முற்றிலும் சுயாதீனமாக செயல்படும், ஒரு சர்வதேச சோசலிசத்தை அடிப்படையாக கொண்ட கட்சி ஒன்றை கட்டியமைப்பதின் அவசர தேவையைத்தான் சோசலிஸ்ட் கட்சி தேர்வு முறை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved