World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan SEP renews demand for action against killers of Sivapragasam Mariyadas

சிவப்பிரகாசம் மரியதாஸ் கொலையாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை சோ.ச.க மீண்டும் கோருகிறது

Statement of the Socialist Equality Party (Sri Lanka)
13 November 2006

Back to screen version

இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க) ஆதரவாளரான சிவப்பிரகாசம் மரியதாஸ் கிழக்கு மாவட்டமான திருகோணமலையில் வைத்து கொலை செய்யப்பட்டு மூன்று மாதங்கள் கடந்துள்ளன.

சோ.ச.க மற்றும் உலக சோசலிச வலைத் தளமும் கொலையாளிகளை கைதுசெய்து வழக்குத் தொடுக்குமாறு கோரி முன்னெடுத்த சர்வதேச பிரச்சாரம், விசாரணை ஒன்றை ஆரம்பிப்பதற்காக இலங்கை பொலிசுக்கு நெருக்குவாரம் கொடுத்துள்ளது. ஆயினும், இதுவரை, எந்தவொரு சந்தேக நபரும் கைதுசெய்யப்படாததோடு அடிப்படை வழிமுறைகளும் பின்பற்றப்பட்டிருக்க வில்லை.

இதற்கான காரணம் தெளிவானது. அனைத்து ஆதாரங்களும் பாதுகாப்புப் படையினரின் தலையீட்டையே சுட்டிக் காட்டுகிறது. சோ.ச.க. அதன் பிரச்சாரத்தில் எச்சரித்தது போல், இலங்கை பொலிஸானது இராணுவம் மற்றும் அதோடு சேர்ந்து செயற்படும் கொலைப் படைகள் சம்பந்தப்பட்ட கொலைகள் மற்றும் கடத்தல்கள் சம்பந்தமான மூடி மறைப்புக்கு பெயர் போனதாகும்.

மரியதாஸ் கொலையாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்ற தமது கோரிக்கையை இரட்டிப்பாக்குமாறு இலங்கையில் உள்ள உழைக்கும் மக்களையும் மற்றும் உலகம் பூராவும் உள்ள உலக சோசலிச வலைத் தள வாசகர்களையும் சோ.ச.க. கேட்டுக்கொள்கிறது. எமது பிரச்சாரம், தண்டனையிலிருந்து தப்பி அப்பாவி பொதுமக்களை கொல்லும் பாதுகாப்புப் படையினரின் இயலுமைக்கு எதிரான ஒரு முக்கியமான பலத்த தாக்குதலைத் தொடுத்துள்ளது. மனித உரிமை அமைப்புக்கள் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து கொலைகள் மற்றும் "காணாமல் போன" சம்பவங்கள் தொடர்பான நூற்றுக்கணக்கான முறைப்பாடுகளைப் பெற்றுக்கொண்டுள்ளன.

இந்தப் படுகொலைகள், தீவின் தமிழ் சிறுபான்மையினரை அச்சுறுத்தவும் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான அதன் யுத்தத்தை புதுப்பிப்பதற்கும் அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளின் முழுமையான ஆக்கக் கூறுகளாகும். யுத்தம் மற்றும் இலங்கை அரசின் சிங்கள மேலாதிக்கவாதம் மற்றும் புலிகளின் தமிழ் பிரிவினைவாதம் போன்ற அனைத்து இனவாத அரசியலையும் மரியதாஸ் எதிர்த்ததாலேயே அவர் தனிப்பட்ட வகையில் இலக்கு வைக்கப்பட்டார்.

ஜூலை 26, மாவிலாறு தண்ணீர் அனைக்கட்டைக் கைப்பற்றுவதற்காக அரசாங்கம் ஒரு பெரும் தாக்குதலை முன்னெடுத்து சில நாட்களுக்குள் ஆகஸ்ட் 7 அன்று மரியதாஸ் கொலைசெய்யப்பட்டார். புலிகள் எதிர்த்துத் தாக்கி மூதூரின் சில பகுதிகளை கைப்பற்றியதில், நகரின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற கடும் சமர் நடந்தது. மரியதாஸ் வாழ்ந்த முல்லிப்பொத்தானை என்ற கிராமப் புறநகர் உட்பட முழுப் பிரதேசமும் பாதுகாப்புப் படைகளால் நிரம்பியிருந்தது.

மரியதாஸ் சற்று முன்னேரே முல்லிப்பொத்தானைக்கு இடம் மாறியிருந்தார். அங்கு அவர் சில காலமாக புகைப்பட நிலையத்தையும் தொலைத் தொடர்பு நிலையத்தையும் நடத்தி வந்தார். அவர் தனது வீட்டில் அவரது மனைவி ஸ்டெல்லா கிருஷாந்தி மற்றும் மூன்று வயது மகனுடனும் இருந்தார். அன்று இரவு 9.30 மணியளவில், யாரோ அவரை பெயர் சொல்லி அழைப்பது கேட்டு அவர் கதவுக்கு அருகில் சென்றார். ஒரு துப்பாக்கிதாரி அவரை பல தடவை சுட்டுவிட்டு வீதியில் காத்திருந்த மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றான்.

செப்டெம்பர் 5 சோ.ச.க வெளியிட்ட அறிக்கையில், பெரும்பாலும் பாதுகாப்புப் படைகள் மற்றும் அவர்களின் தமிழ் துணைப்படை பங்காளிகளே குற்றவாளிகள் எனத் தெரியவதாக அது விளக்கியிருந்தது. கைதேர்ந்த முறையில் கொலை செய்தமை, பாதிக்கப்பட்டவரின் பெயரை கொலையாளிகள் தெரிந்து வைத்திருந்தமை மற்றும் ரோந்து நடவடிக்கைகளுக்கு அகப்படாமலும் சோதனைச் சாவடிகளையும் கடந்து செல்ல அவர்களால் முடிந்தமை ஆகியன இராணுவத்தின் தலையீட்டை சுட்டிக்காட்டுகின்றன. இந்த முடிவை மேலும் பல ஆதாரங்கள் வலுப்படுத்துகின்றன.

கொலை அச்சுறுத்தல்

மரியதாஸ் கொலை செய்யப்படுவதற்கு நான்கு மாதங்களுக்கு முன்னதாக, இராணுவத்துடனும் பொலிசுடனும் நெருக்கமாக இயங்கும் ஒரு துணைப்படையான ஊர்காவற்படை உறுப்பினர் ஒருவர் மரியதாசுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்துள்ளார். ஏப்பிரல் 11 அன்று, கடமையில் இருந்த ஒரு ஊர்காவற்படை உறுப்பினர் மரியதாஸை முல்லிப்பொத்தானையில் உள்ள அவரது தொலைத்தொடர்பு நிலையத்தில் சந்தித்தார். பிரதேசத்தைப் பற்றி புலிகளுக்கு தகவல் வழங்குவதாக மரியதாஸ் மீது குற்றஞ்சாட்டிய அவர், மரியதாஸ் கொல்லப்படுவார் என வெளிப்படையாக எச்சரித்துள்ளார்.

இந்தக் கொலை அச்சுறுத்தல், புலிகளின் தாக்குதலில் ஒரு பஸ் வெடித்து 11 கடற்படையினர் கொல்லப்பட்ட செய்தி பரவிக்கொண்டிருந்த நிலையில் அதே தினம் விடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவமானது முல்லிப்பொத்தானையில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர்கள் தூரத்தில், திருகோணமலை-ஹபரனை வீதியில் தம்பலகாமத்திற்கு அருகில் நடந்துள்ளது. ஏனைய தாக்குதல் சம்பவங்களைப் போலவே, பாதுகாப்புப் படைகள் பிரதேசத்தில் உள்ள தமிழர்களை பீதிகொள்ளச் செய்வதன் மூலமும் "புலி சந்தேகநபர்கள்" என அச்சுறுத்துவதன் மூலமும் பிரதிபலித்தனர்.

ஒரு சில நாட்களுக்கு முன்னர், ஏப்பிரல் 7 அன்று புலிகளுக்கு சார்பான அரசியல்வாதியான வி. விக்னேஸ்வரன் திருகோணமலையில் சுட்டுக் கொல்லப்பட்டார். இராணுவத்தின் உயர் பாதுகாப்பு வலயத்திற்கு அருகில், இராணுவ சோதனைச் சாவடிகளுக்கு நெருக்கமாகவே இந்தக் கொலை நடந்துள்ள போதிலும் இன்னமும் கொலையாளி கைதுசெய்யப்படவில்லை. கடந்த ஆண்டு டிசம்பரில் அடையாளந்தெரியாத துப்பாக்கிதாரியால் படுகொலை செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்திற்குப் பதிலாக விக்னேஸ்வரன் நியமிக்கப்பட இருந்த நிலையில் இந்தப் படுகொலை குறிப்பாக ஒரு ஆத்திரமூட்டல் நடவடிக்கையாகும்.

மரியதாஸ் பொலிசில் உத்தியோகபூர்வமாக முறைப்பாடு செய்யாவிட்டாலும், தனது தொலைத்தொடர்பு நிலையம் இயங்கிவந்த கட்டிடத்தின் உரிமையாளரான ஜெயவீரவிடம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் தனது மனைவிக்கும் மற்றும் சகோதரர்களான சிவப்பிரகாசம் பெனடிக்ட் மற்றும் ஜேசுதாஸுக்கும் தெரிவித்துள்ளார். ஓய்வுபெற்ற கிராம சேவகரான ஜெயவீர, "தொம்பா" என்றழைக்கப்படும் ஊர்காவற்படை உறுப்பினர் மரியதாசின் தொலைத்தொடர்பு நிலையத்தையும் "தரைமட்டமாக்குவதாகவும்" அச்சுறுத்தியதாக சோ.ச.க. யிடம் தெரிவித்தார்.

ஏனைய கொலைகள்

ஆகஸ்ட் முற்பகுதியில் சூழ்நிலை மிகவும் பதட்டமானதாகவே இருந்தது. மூதூர் மற்றும் மாவிலாறில் மோதல்கள் தீவிரமடைந்து கொண்டிருந்தன. இராணுவம் ஆட்டிலறி மற்றும் பல்குழல் ஏவுகணை ஏவுதளத்தைப் பயன்படுத்தி மூதூர் மீது குண்டுமாரி பொழிந்ததில் பத்தாயிரக்கணக்கானவர்கள், பிரதானமாக முஸ்லிம்கள் இடம்பெயரத் தள்ளப்பட்டனர். அயல் பிரதேசங்களில், புலிகளுக்கு ஆதரவானவர்கள் என சந்தேகிக்கும் எவரையும் வேட்டையாடும் நடவடிக்கையை பாதுகாப்புப் படை முடுக்கிவிட்டிருந்தது.

ஆகஸ்ட் 4, முல்லிப்பொத்தானையைச் சேர்ந்த வாசுதேவன் என்ற தமிழ் முச்சக்கரவண்டி சாரதி அடையாளந் தெரியாத துப்பாக்கி தாரிகளால் கொல்லப்பட்டார். அவர் கந்தளாய்க்கு செல்ல வாடகைக்கு அமர்த்தப்பட்டிருந்தார். ஊடக செய்திகளின்படி, அவரது வாகனத்தை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த இருவர் அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். இந்தக் கொலை சம்பந்தமான தனது நிலைப்பாட்டை நகருக்குள் இரகசியமாக வைத்திருக்காத மரியதாஸ், இது நியாயப்படுத்த முடியாத குற்றம் என கண்டனம் செய்தார்.

ஆகஸ்ட் 5, இராணுவம் இறுதியாக மீண்டும் மூதூர் நகரைக் கைப்பற்றியது. அதே தினம், அக்ஷன் பாம் என்ற தொண்டு நிறுவனத்தின் 17 தொண்டு ஊழியர்கள் அந்த நகரில் அந்த அமைப்பு இயங்கிவந்த கட்டிடத்தில் சடலமாகக் காணப்பட்டனர். பதினைந்து சடலங்கள் மரண தண்டனை பாணியில் தலையில் சுடப்பட்ட வரிசையில் கிடந்தன. ஏனைய இருவர் பின்புறம் சுடப்பட்டிருந்தனர். யுத்த நிறுத்தத்தை மேற்பார்வை செய்யும் இலங்கை கண்காணிப்புக் குழு, ஆகஸ்ட் 30 அன்று இந்தக் கொலைகளுக்கு இராணுவமே பொறுப்பு என உத்தியோகபூர்வமாக முடிவு செய்தது.

ஆகஸ்ட் 7, மரியதாஸ் படுகொலை செய்யப்பட்டார்.

தீவிரமான பாதுகாப்பு

இலங்கையின் கிழக்கு மற்றும் வடக்கு இரு தசாப்தங்களுக்கும் மேலாக யுத்தப் பிராந்தியங்களாக இருந்து வருகின்றன. இராணுவம் ஆக்கிரமிப்புப் படையாகவே இயங்குகிறது. இந்தப் பிரதேசங்கள் பூராவும் இராணுவ முகாங்களும் உயர் பாதுகாப்பு வலயங்களும் உள்ளன. 2002 யுத்த நிறுத்த உடன்படிக்கைக்குப் பின்னர் பாதுகாப்பு தளர்த்தப்பட்டதை அடுத்து, அரசாங்கம் தீவை மீண்டும் யுத்தத்திற்குள் தள்ளியுள்ள நிலையில் இந்த ஆண்டு மீண்டும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வீதித் தடைகள், சோதனைச் சாவடிகள் மற்றும் ரோந்து நடவடிக்கைகள் என்பன வழமையாக இடம்பெறுகின்றன. இராணுவ புலனாய்வுத் துறையினர் இங்கு தீவிரமாக இயங்குகின்றனர்.

ஆகஸ்ட் முற்பகுதியில், முல்லிப்பொத்தானையில் இருந்த பாதுகாப்புப் படையினர் மிகவும் விழிப்புடன் இருந்தனர். மரியதாஸின் வீடு, மூதூரில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் அகதிகளாக தங்கியிருந்த அல் ஹிஜிரா முஸ்லிம் பாடசாலைக்கு பின்புறமாக அமைந்துள்ளது. இந்த இடம் பொலிஸ் மற்றும் ஊர்காவற் படையினரால் மாறி மாறி பாதுகாப்பு கண்கானிப்புக்குள் வந்துள்ளது.

பொலிஸ், ஊர்காவற் படையினர் மற்றும் இராணுவம் நிலைகொண்டுள்ள ஒரு சிறிய முல்லிப்பொத்தானை நகரின் மத்திய பகுதியில் இருந்து 500 மீட்டர் தூரத்திலேயே மரியதாஸின் வீடு உள்ளது. அங்கிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இராணுவ முகாமுக்கு ஒரு பாதையும் செல்கிறது.

நகருக்கான இரு நுழை வாயில்களிலும் பொலிஸ் மற்றும் இராணுவ சோதனைச் சாவடிகள் உள்ளன: ஒன்று திருகோணமலைக்கு (முல்லிப்பொத்தானையில் இருந்து ஏழு கிலோமீட்டர்கள்) செல்லும் திசையில் தம்பலகாமத்திலும் மற்றையது கந்தளாய்க்கு (முல்லிப்பொத்தானையில் இருந்து ஐந்து கிலோமீட்டர்கள்) செல்லும் திசையில் "91ம் கட்டை" யிலும் உள்ளன. திருகோணமலை - கந்தளாய் பிரதான வீதியில் மேலும் இரு சோதனைச் சாவடிகள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.

அத்தகைய தீவிரமான பாதுகாப்பு நிலைமையின் மத்தியில், மரியதாஸை சுட்ட கொலைகாரர் இருவராலும் மோட்டார் சைக்கிளில் தடங்களின்றி தப்பிச் செல்ல முடிந்துள்ளது.

காலங்கடந்த பொலிஸ் விசாரணை

இந்தப் படுகொலை நடந்து இரு மாதங்களுக்கு மேல் கடந்த பின்னர், கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் விசேட குற்றத்தடுப்பு பிரிவின் பொலிஸ் அதிகாரி சீ.ஏ. ரொட்ரிகோ, மரியதாசின் மனைவி மற்றும் அவரது இளம் சகோதரரை தொடர்பு கொண்டுள்ளார். ஒழுங்காக விசாரணை நடத்தப்படாமை குறித்து பல முறைப்பாடுகளை பொலிஸ் பெற்றுக்கொண்ட பின்னர் இது தொடர்பாக விசாரணை செய்ய தனக்கு பணிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். அவர் இறுதியாக அக்டோபர் 17 அன்று மரியதாஸின் மனைவி கிருஷாந்தியிடம் ஒரு உத்தியோகபூர்வ வாக்குமூலத்தைப் பெற்றுக்கொண்டார்.

இந்த விசாரணை கந்தளாயில் உள்ள இன்னொரு பொலிஸ் அதிகாரியான கோட்டசியாராச்சி என்பவருக்கு கைமாற்றப்பட்டுள்ளது. கடந்த வாரம் சோ.ச.க. அவரைத் தொடர்புகொண்ட போது, இந்த வழக்கு தொடர்பாக எந்தவொரு தகவலையும் வழங்க மறுத்த அவர் சோ.ச.க. கண்டு பிடித்திருப்பது என்ன என்பதையிட்டு மிகவும் அக்கறை காட்டினார். "நாங்கள் சந்தேக நபர்களைத் தேடுகிறோம். உங்களுக்கு ஏதாவது தெரியுமா? உங்களிடம் ஏதாவது தடயம் இருக்கிறதா? இப்போது சொல்லுங்கள்," என அவர் தற்காப்பு நிலையில் பிரகடனம் செய்தார்.

அவரது உதவியாளரான, சார்ஜன்ட் பண்டார, சிறிய முன்னேற்றம் இருப்பதாக சோ.ச.க. யிடம் தெரிவித்தார். மரியதாஸின் தொலைத் தொடர்பு நிலையத்தில் வேலை செய்த இரு ஊழியர்களிடம் பொலிஸ் வாக்குமூலம் பெற்ற போதிலும், அவற்றில் குறிப்பிடத்தக்க தடயங்கள் கிடையாது என அவர் தெரிவித்தார். தம்பலகாமம் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி டீ.பி.பி. ராமநாயக்க அதே விடயத்தையே கூறினார். தம்பலகாமம் பொலிஸ் இரு வாக்குமூலங்களை பெற்றுள்ளது --ஒன்று மரியதாஸின் அயல்வீட்டுக்காரரிடம் பெற்றது மற்றையது அவர் வாடகைக்கு இருந்த வீட்டு உரிமையாளரிடம் பெற்றது. ஆனால் கொலையாளிகளைப் பிடிக்கும் "தடயங்கள்" அவற்றில் இல்லை, என அவர் தெரிவித்தார்.

ஆனால் "விசாரணைகள்" ஆரம்பத்தில் இருந்தே முரண்பட்டவையாக உள்ளன. சோ.ச.க. பொதுச் செயலாளர் விஜே டயஸ் இலங்கை சட்டமா அதிபர் எஸ்.சீ. கமலசபேசனுக்கு எழுதிய கடிதத்தில் சுட்டிக்காட்டியது போல், தம்பலகாமம் பொலிஸ் தக்க அதிகாரம் இன்றி சம்பவ இடத்தில் இருந்து மரியதாஸின் உடலை அகற்றியதன் மூலம் அடிப்படை சட்ட வழிமுறைகளை மீறியுள்ளது.

பொலிஸ் வேண்டுமென்றே தனது கால்களை பின்னிழுக்கின்றது. அவர்கள் நான்கு வெற்றுத் தோட்டாக்கள், துப்பாக்கி ரவைகள் மற்றும் இரத்த மாதிரிகளை நீதிமன்றத்திற்கு வழங்கிய போதிலும், இந்த ஆதாரங்களை பரிசீலிக்க அரசாங்க ஆய்வாளருக்கு அனுப்ப இன்னமும் அனுமதியை எதிர்பார்த்துள்ளது. வெற்றுத் தோட்டாக்களையும் துப்பாக்கி ரவைகளையும் பரிசீலிப்பது மரியதாஸை கொல்லப் பயன்படுத்தப்பட்ட ஆயுதத்தின் வகையை தீர்மானிக்க தெளிவாக இன்றியமையாததாகும்.

சாட்சிகளை கண்டுபிடித்து வாக்குமூலங்களைப் பதிய பொலிசார் கடும் முயற்சிகளை மேற்கொண்டிருக்கவில்லை. மரியதாஸ் கொலை செய்யப்பட்டுள்ளது பற்றிய தகவலை பொலிசுக்குத் தெரிவித்த ஊர்காவற்படை உறுப்பினரான லலித் சாட்சி வழங்க அழைக்கப்படவில்லை. மரியதாசுக்கு எதிரான மரண அச்சுறுத்தலை பின்தொடர எந்த முயற்சியும் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை. மரியதாஸின் தொலைத்தொடர்பு நிலையம் இருந்த கட்டிடத்தின் உரிமையாளரான ஜெயவீரவிடம் வாக்குமூலம் பெறப்படவில்லை. குறிப்பிடத்தக்க வகையில், ஆகஸ்ட் 7 இரவு, முல்லிப்பொத்தானையில் கடமையில் இருந்த பொலிஸ் ஊர்காவற்படையினர், இராணுவ சிப்பாய்கள் மற்றும் பிரதேசத்தில் பல காவல் அரன்கள், சோதனைச் சாவடிகளில் கடமையில் இருந்தவர்களும் விசாரணைக்குட்படுத்தப்படவில்லை.

"சந்தேக நபர்கள்" எவரும் இல்லையெனில், அதற்கான காரணம் தடயங்கள் பொலிசார் பின்தொடர விரும்பாத திசையைக் காட்டுவதேயாகும். மரியதாஸ் தொடர்பான இராணுவத்தின் நிலைப்பாட்டுக்கு அவர் கொல்லப்பட்ட அடுத்தநாள் ஆதாரமாயுள்ளது. முல்லிப்பொத்தானையில் கடமையில் இருந்த பாதுகாப்புப் படையினர், ஒரு "புலி" கொலை செய்யப்பட்டுள்ளதுபற்றி யாரும் கவலைப்பட வேண்டியதில்லை என உள்ளூர்வாசிகளிடம் தெரிவித்துள்ளனர். திருகோணமலையில் அவரது ஊரான செல்வநாயகபுரத்தில் நடந்த அவரது இறுதிக்கிரியைக்கு சமூகமளிக்க முயற்சித்தவர்கள் படையினராலும் பொலிசாராலும் அச்சுறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

பாதுகாப்புப் படையினரின் முயற்சிகளுக்கு மத்தியிலும் நூற்றுக்கணக்கான சிங்களவர்கள், தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் அவரது இறுதிக்கிரியையில் பங்குபற்றினர். மரியதாஸ் அவரது சொந்த ஊரில் போலவே முல்லிப்பொத்தானையிலும் பிரசித்தி பெற்றவராகவும் எல்லோராலும் விரும்பப்பட்டவராகவும் இருந்தார். அவர் 2001ல் இருந்து சோசலிச சமத்துவக் கட்சியின் ஆதரவாளர் என்ற வகையில், அவர் புலிகளையும் அதே போல் கொழும்பு அரசாங்கத்தையும் மற்றும் யுத்தத்தையும் எதிர்ப்பவராக இருந்தார். அவர் சுதந்திரத்தில் இருந்து இலங்கை மக்களின் வாழ்க்கையை நச்சுப்படுத்தி மற்றும் நீண்டகால உள்நாட்டு யுத்தத்திற்கு வழிவகுத்த இனவாதத்தையும் வகுப்புவாதத்தையும் ஆழமாக எதிர்த்தார்.

மரியதாஸ் கொலையாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என இலங்கை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்து கண்டனக் கடிதங்கள் அனுப்புமாறு ஆதரவாளர்கள் மற்றும் உலக சோசலிச வலைத் தளத்தின் வாசகர்களுக்கும் சோ.ச.க. வேண்டுகோள் விடுக்கின்றது. எமது பிரச்சாரமானது இலங்கையிலும் மற்றும் அனைத்துலகிலும் ஜனநாயக உரிமைகள் மீதான மூர்க்கத்தனமான தாக்குதல்களுக்கு எதிராக உழைக்கும் மக்களை ஐக்கியப்படுத்தும் பரந்த போராட்டத்தின் ஒரு அங்கமாகும்.

கடிதங்கள் மற்றும் அறிக்கைகள் அனுப்பிவைக்கப்பட வேண்டிய முகவரி:

Inspector General of Police, Victor Perera,
Police Headquarters, Colombo 1, Sri Lanka.
Fax: 0094 11 2446174
Email: igp@police.lk

Attorney General K.C. Kamalasabeyson,
Attorney General's Department, Colombo 12, Sri Lanka.
Fax: 0094 11 2436 421

கடிதங்களின் பிரதிகளை சோசலிச சமத்துவக் கட்சிக்கும் (இலங்கை) உலக சோசலிச வலைத் தளத்திற்கும் அனுப்பி வையுங்கள்.

Socialist Equality Party,
P.O. Box 1270, Colombo, Sri Lanka.
Email: wswscmb@sltnet.lk

உலக சோசலிச வலைத் தள ஆசிரியர் பீடத்திற்கு கடிதங்கள் அனுப்ப தயவுசெய்து இந்த ஒன்லைன் online form. படிவத்தை பயன்படுத்தவும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved