WSWS :Tamil
:
செய்திகள்
ஆய்வுகள் :
கிழக்கு ஐரோப்பா
Hungary: The controversy over the heritage of the
1956 Revolution
ஹங்கேரி : 1956ம் ஆண்டுப் புரட்சியின் மரபியத்தை பற்றிய எதிரிடை வாதங்கள்
By Peter Schwarz
28 October 2006
Use this version
to print | Send this link by email
| Email
the author
உறுதியற்ற எதிர்காலத்தினுள் நுழையும்போது மனிதர்கள் எப்படி கடந்தகால கெளரவங்கள்
என்ற போர்வையினை போர்த்திக்கொள்ளுகின்றனர் என்று லூயி நெப்போலியனின் பதினெட்டாம் புரூமெர் என்ற
தன்னுடைய புகழ்வாய்ந்த கட்டுரையில் கார்ல் மார்க்ஸ் விவரித்துள்ளார். நிகழ்வுகளை புரட்சிகரமாக்கி இன்னும் கூடுதலான
முற்போக்கான சமுதாயத்தை தோற்றுவிக்கும் முயற்சிகளில் ஈடுபடும்போது அவர்கள் கடந்த கால மாவீரர்களின்
ஆவிகளை தட்டி எழுப்புகின்றனர். சமூக வளர்ச்சி பின்னடைந்தாலோ, சமூகமே பின்னடைவு கண்டாலோ, இத்தகைய
கடந்த காலத்தை உயர்த்திக் கூறியது ஒரு கேலிக்கூத்தாக இழிவடைகிறது.
கடந்த வாரம் ஹங்கேரியில் 1956ம் ஆண்டு தொழிலாளர்கள் எழுச்சியின் 50வது
ஆண்டு நிறைவுநாள் நிகழ்ச்சியில் நடைபெற்றது இத்தகைய கேலிக்கூத்தின் வெளிப்பாடு என்றுதான் விவரிக்கப்படமுடியும்.
மோதல்களில் ஈடுபட்டுள்ள புதிய ஆளும் தன்னலச் சிறுகுழுக்கள் 1956 எழுச்சிகளுக்கு தலைமை தாங்கியது யார்
என்று போரிட்டு, அவ்எழுச்சியையே இதன்விளைவாக சின்னாபின்னப் படுத்திவிட்டனர்.
அதிகாரபூர்வ நிகழ்வுகளை சூழ்ந்திருந்த பூசல்கள் --ஒருவர்மீது ஒருவர் அவமதித்தது,
போலீஸ் தலையீடுகள், தெருக் கைகலப்புக்கள் ஆகியவை--- உடனடியாக ஒரு முற்போக்கான தீர்வைக் காண
வேண்டிய நிலையில் இருக்கும் ஹங்கேரிய சமுதாயத்தில் நிலவும் ஆழ்ந்த பிளவுகளின் வெளிப்பாடு ஆகும். வரலாற்று
அறிவு போதுமானதாக இல்லாத நிலை, நினைவுநாள் பற்றிய நிகழ்ச்சிகளில் துல்லியமாக காணப்பட்டதே அத்தகைய
தீர்விற்குப் பெரும் தடையாக உள்ளது.
அதிகாரபூர்வ நிகழ்வுகள் பிரதம மந்திரி பெரென்க் குயுர்ஸ்கனியின் தலைமையில் உள்ள
சோசலிச-லிபரல் கூட்டணி அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. குயுர்ஸ்கனி
MSZP என்னும்
சோசலிச கட்சியின் உறுப்பினராவார்; இந்த அமைப்பு ஸ்ராலினிச ஹங்கேரிய தொழிலாளர் கட்சி
(MDP) யின்
பின்தோன்றல் ஆகும். இது 1956 தொழிலாளர் எழுச்சியின் போது சோவியத் டாங்கிகளுடைய உதவியுடன் குருதி
சிந்திய வகையில் அடக்குமுறையைக் கையாண்டு அதிகாரத்தின் மீது தன்னுடைய பிடியை இறுக்கிக் கொண்ட அமைப்பு
ஆகும்.
நினைவு நாள் களிப்புக்களில், ஹங்கேரிய பாராளுமன்றத்திற்கு எதிரேயுள்ள கோசுத்
சதுக்கத்தில் கலந்து கொள்ளுவதற்கு குயுர்ஸ்கனி இருபது ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களை அழைத்திருந்தார்.
இதற்கு முந்தைய இரவு அரசாங்கத்திற்கு விரோதம் காட்டிய எதிர்ப்பாளர்கள் அங்கு கூடியிருந்ததை போலீசார்
விரட்டியடித்தனர்; அந்த எதிர்ப்பு வலதுசாரி சக்திகளால் ஏற்பாடு செய்யப்பட்டு, தலைமையும்
தாங்கப்பட்டிருந்தது.
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோ உட்பட மற்ற முக்கிய மேற்குலக சக்திகள்
விழாவிற்கு உயர்மட்ட பிரதிநிதிகளை அனுப்பியிருந்தது. அவர்கள் 1956 புரட்சியை சுதந்திரம், ஜனநாயகத்திற்கான
போராட்டம் என்று கொண்டாடி அதன் நோக்கம் இப்பொழுது ஒரு முதலாளித்துவ அரசியலமைப்பு, ஒரு
"தடையற்ற சந்தைப்" பொருளாதாரம் மற்றும் தனியார் உடைமை மீட்பு ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன
என்றும் கருதுகின்றன.
இது எழுச்சியின் உண்மையான இலக்குகளை பற்றிய முழுச் சிதைவு ஆகும். 1956
புரட்சியில் கலந்துகொண்டிருந்த பெரும்பான்மையான ஆலைகளில் இருந்து வந்திருந்த சாதாரண தொழிலாளர்கள்
ஹங்கேரியில் முதலாளித்துவ ஆட்சியை நிறுவ வேண்டும் என்று முயலவில்லை. வரலாற்றின் போக்கில், ஹங்கேரிய
முதலாளித்துவம் ஒரு ஜனநாயக வகையிலான அரசியல் அமைப்புக்களை ஒருபோதும் உருவாக்கியதில்லை.
ஹாப்ஸ்பேர்க் முடியாட்சியின் சரிவிற்கு பின்னர், 1920ல் ஹங்கேரிய முதலாளித்துவம், ஓராண்டுக்கு முன்னர்தான்
நிறுவப்பட்டிருந்த சோவியத் குடியரசை இரத்தக் களரியில் நசுக்கிய பின்னர் அதிகாரத்தை கைப்பற்றியது.
அதன்பின்னர் 25 ஆண்டுகளாக, தொடக்கத்தில் மிக்லோஸ் ஹோர்த்தியினாலும், பின்னர் ஜேர்மனிய நாஜிக்களின்
நெருக்க ஒத்துழைப்பினாலும் சர்வாதிகார வகையிலான ஆட்சிதான் அங்கு இருந்தது.
ஸ்ராலினிச சர்வாதிகாரத்திற்கு எதிரான 1956ம் ஆண்டு எழுச்சி ஒரு
தொழிலாளர்களின் ஜனநாயகத்தை நிறுவ வேண்டும் என்று இருந்தது. தொழிலாளர்கள் குழுக்களின் எழுச்சி மற்றும்
எழுச்சியில் அவை பின்னர் முக்கிய பங்கை கொண்டிருந்தது ஆகியவை பொருளாதாரம் உட்பட சமுதாயத்தின்
அனைத்துப் பிரிவுகளிலும் தொழிலாளர்கள் ஜனநாயகக் கட்டுப்பாட்டை கொண்டிருக்க வேண்டும் என்பதை மிகத்
தெளிவாக்கியதே அன்றி ஆலைகளை முன்னாள் பூர்ஷ்வா உடைமையாளர்களுக்கு மீட்டுத் தர வேண்டும் என்று
இருந்ததில்லை.
முதலாளித்துவ முறையை மறுபடியும் அறிமுகப்படுத்துவதில் முக்கிய பங்கைக்
கொண்டிருந்தது புரட்சி அல்ல; மாறாக அப்புரட்சியை இரத்தம் தோய்ந்த முறையில் நசுக்கியதுதான்; அந்த
வழிவகைதான் நான்கு தசாப்தங்களுக்கு பின்னர் முடிவிற்கு வந்தது. அத்தகைய முதலாளித்துவ வளர்ச்சிக்கான
தொடக்க முயற்சி 1956 எதிர்ப்பில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களிடம் இருந்து வரவில்லை; மாறாக ஆழ்ந்த
அரசியல் நெருக்கடித் தன்மையினால் தன்னுடைய சலுகை பெற்ற நிலையை தக்க வைத்துக் கொள்ள முடியாத
ஸ்ராலினிச அதிகாரத்துவத்திடம் இருந்துதான் வந்தது; அதுதான் புதிய, முதலாளித்துவ உடைமை வடிவமைப்பின் மூலம்
தன்னை இருத்திக் கொள்ள முடியும் என்ற நிலைமைக்கு வந்தது.
45 வயதான பெரெங்க் குயுர்ஸ்கனியின் வாழ்க்கை போக்கே இதற்குத் தக்க
உதாரணமாகும். ஸ்ராலினிச இளைஞர் இயக்கத்தில் உயர்மட்ட உத்தியோகத்தராக தன்னுடைய அரசியல்
வாழ்க்கையை அவர் தொடங்கினார்; 1990களில் நடைபெற்ற தனியார்மய செயற்பாடுகளின்போது மில்லியன்
கணக்கில் சொத்துக்களையும் குவித்தார்; இப்பொழுதும் பிரதம மந்திரி என்னும் முறையில் ஐரோப்பிய ஒன்றியம்,
மற்றும் சர்வதேச வங்கிகள் ஆணையிடும் பொதுநலச் செலவினங்களை தீவிரமாகக் குறைத்தல் என்பதைத்தான் செய்து
கொண்டிருக்கிறார். ஆயினும்கூட தன்னை அவர் ஒரு "சோசலிஸ்ட்" என்றுதான் கூறிக் கொண்டிருக்கிறார்.
எனவே ஐரோப்பிய அரசாங்கங்களின் தலைவர்கள் 1956 மரபியத்திற்கு தான்தான்
வாரிசு என்று குயுர்ஸ்கனி கூறுவதை பாரட்டி வரவேற்பதில் வியப்பு ஒன்றும் இல்லை; எனவேதான் விழாவில்
பெருமளவில் பங்கு பெறத் தயாராக இருந்தனர்.
தேசிய பழைமைவாத கட்சி
Fidesz (Hungarian Civic Union)
தலைமையிலான ஹங்கேரிய எதிர்க்கட்சிகளால் இந்த நிகழ்ச்சிகள் புறக்கணிக்கப்பட்டன.
Fidesz 1956ன்
மரபியத்திற்கு தான்தான் வாரிசு எனக்கூறியது; மேலும் தன்னை ஒரு கம்யூனிச-எதிர்ப்பு மற்றும் தேசிய இயக்கத்தின்
புரவலர் என்றும் சித்தரித்துக் கொள்ள முற்படுகிறது. இவ்வாறு செய்கையில், கட்சி 1956ல் ஸ்ராலினிசவாதிகள்
கூறியதைத்தான் இவர்கள் மீண்டும் கூறுகின்றனர். அந்த நேரத்தில் எழுச்சியை வலதுசாரியினர் மற்றும்
பாசிஸ்ட்டுக்களின் செயல் என்று, மிருகத்தனமாக அடக்குவதை நியாயப்படுத்தும் வகையில் அதை சோவியத்
அதிகாரத்துவமும், கிழக்கு ஐரோப்பாவில் உள்ள அதன் எடுபிடிகளும், உலகெங்கிலும் இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சி
தலைமைகளும் அவ்இயக்கத்தை கண்டித்திருந்தன.
பிடெசின் வேர்கள் 1988ல் ஸ்ராலினிச சகாப்தத்தின் இறுதியில் ஒரு இளைய
புத்திஜீவிகள் குழுவினால் தொடக்கப்பெற்ற இளம் ஜனநாயகவாதிகளின் கூட்டு (Alliance
of Young Democrats) காலத்திற்கு செல்கின்றது.
சுதந்திரமான தேர்தல்கள் வேண்டும் என்ற கோரிக்கையை இக்குழுவினர் எழுப்பினர். இன்று எல்லாவற்றிற்கும்
மேலாக, கிராமப்புற மத்தியதர அடுக்குகளை கூடுதலாக பிரதிநிதித்துவப்படுத்தும் ஹங்கேரியின் மிகப் பெரிய
எதிர்க்கட்சி ஸ்ராலினிசத்தை எதிர்ப்பதற்கு காரணம் என்னவெனில், அது இவர்களுக்கு ஒப்ப மேலை நாடுகளில்
இருப்பவர்கள் அனுபவிக்கும் அதிகாரம், செல்வம் இவற்றைக் கிடைக்கவிடாமல் செய்துவிட்டது என்பதற்காகவாகும்.
இப்பொழுது பல மில்லியன் செல்வத்தை பெற்றுள்ள முந்தைய ஸ்ராலினிச அதிகாரிகளை இவர்கள் பொறாமையுடன்
காண்கின்றனர். குயுர்ஸ்கனி மற்றும் MSZP
ஆகியவற்றின் மீது இவர்கள் கொண்டுள்ள கசப்பான வெறுப்பிற்கு இது முக்கிய காரணமாகும்.
கம்யூனிச-எதிர்ப்பு, தேசியம், தனியார் உடைமையை பெருமைப்படுத்துதல் இவற்றின்
கலவை மற்றும் ஐரோப்பிய ஒன்றியம், சர்வதேச முதலாளித்துவம் இவற்றை அரக்கதனமாக சித்தரிக்கும் சமூக
அரசியல் தன்மை கொண்ட சிந்தனைப் போக்கைத்தான் பிடெஸ் பிரதிபலிக்கிறது. பிடெசின் தலைவரான விக்டர்
ஓர்பன் ஒரு தேர்ந்த வார்த்தஜால அரசியல்வாதி ஆவார்; இத்தகைய முரண்பாடுகள் நிறைந்த தளத்தை
செயல்படுத்துவதிலும் பெரும் திறமை கொண்டவர் ஆவார்.
அதிகாரபூர்வமாக ஐரோப்பிய மக்கள் கட்சி, கிறிஸ்துவ மற்றும் பழைமைவாத
ஐரோப்பிய கூட்டணி ஆகியவற்றுடன் இணைந்திருந்தாலும்கூட, பிடெஸ் மிகத் தீவிர வலது சக்திகளுடன் நெருக்கமாக
செயல்பட்டு வருகிறது. இவை அனைத்தும் பல பிடெஸ் ஆர்ப்பாட்டங்களில் முக்கிய பங்கு கொண்டு பாசிஸ்ட்
அடையாளங்களை காட்டுவதுடன் யூதஎதிர்ப்பு கோஷங்களையும் முழக்குகின்றன.
வேலைத்திட்டத்தின் உள்ளடக்கத்தை பொறுத்தவரையில் பிடெஸ் மற்றும்
MSZP இரண்டிற்கும்
இடையே அதிக வேறுபாடுகள் கிடையாது. 1998 முதல் 2002 வரை அரசாங்கத்தின் தலைவர் என்ற முறையில்
தனக்கு முன்பு இருந்தவர்களுடைய சிக்கன கொள்கைகளை ஓர்பன் தொடர்ந்து, ஐரோப்பிய ஒன்றியத்தினுள் நாடு
சேருவதற்குத் தயாரிப்பை கொடுத்தார். அவருடைய தலைமையின் கீழ் ஹங்கேரி நேட்டோவிலும் சேர்ந்தது.
ஆனால் ஓர்பனுடைய அரசாங்கத்தின் முக்கிய செயற்பாடு அவருடைய
ஆதரவாளர்களுக்கு பெரும் ஊதியம் உடைய பணிகளை வழங்குவதாக இருந்தது. பெருகிய முறையில் சர்வாதிகார
நடவடிக்கைகளை அவருடைய அரசு மேற்கொண்டு பின்னர் ஏராளமான ஊழல் சிக்கல்கள்களின் வலையில் இறுதியில்
சரிந்தது.
செப்டம்பர் மாதத்தில் இருந்தே, 2002 தேர்தல்களின் தான் அடைந்த தோல்விக்கு
பழிவாங்கும் முயற்சியில்தான் ஓர்பன் ஈடுபட்டுள்ளார். வாக்காளர்களை "காலையிலும், நண்பகலிலும், இரவிலும்"
ஏமாற்றியதாக ஒப்புக் கொண்டு தன்னுடைய கட்சிக்காரர்களுக்கு கடும் சிக்கனத்தை மேற்கொள்ள வேண்டும் என்று
உட்கட்சி உரை ஒன்று குயுர்ஸ்கனியினால் எழுதப்பட்டு வெளிவந்ததை அடுத்து எங்கு பார்த்தாலும் வெறுப்பு அலை
புறப்பட்டது; இதைப்பற்றி பிடெஸ் தீவிர வலதின் ஆதரவுடன் மெளனம் சாதிக்க முற்பட்டுள்ளது.
செப்டம்பர் மாத வன்முறை நிகழ்வுகள் நிறைந்த ஆர்ப்பாட்டங்களை அடுத்து, பிடெஸ்
பாராளுமன்றத்தின் முன் 24-மணி நேரமும் ஆர்ப்பாட்டம் என்பதை அமைத்து, அரசாங்கம் இராஜிநாமா
செய்யவேண்டும் என்று கோரியது. ஹங்கேரியப் புரட்சியின் நினைவு நாட்களில் இந்த எதிர்ப்புக்கள் உச்ச கட்டத்தை
அடைய வேண்டும் என்பது பிடெசின் திட்டமாக இருந்தது.
இதற்கு விடையிறுக்கும் வகையில் அரசாங்கம் வலுக்கட்டாயமாக பாராளுமன்ற
கட்டிடத்திற்கு எதிரே உள்ள சதுக்கத்தில் குழுமியிருந்தவர்களை வெளியேற்றியதுடன் நகர மையத்தில் எதிர்ப்பு அணிகள்
நடத்தியவர்களையும் கடுமையாக நடத்தி அடக்கியது. போலீஸ் புள்ளிவிவரங்களின்படி, பத்து போலீசார் உட்பட
130 பேர் காயமுற்றனர். 1956 எழுச்சித் தொழிலாளர்களின் மரபில் தாங்கள் உள்ளோம் என்று
ஆர்ப்பாட்டக்காரர்கள் காட்டிக் கொள்ள முற்பட்டு, ஒரு அருங்காட்சியகத்தில் இருந்து பழைய சோவியத் டாங்கு
ஒன்றைத் திருடி எடுத்து வந்து கூடியிருந்த சர்வதேச செய்தி ஊடகம் பார்க்க வேண்டும் என்பதற்காக அதை
தெருக்களிலும் இழுத்துச் சென்றனர்.
MTI எனப்படும் ஹங்கேரிய செய்தி
நிறுவனத்தின்படி புரட்சியின் 50வது ஆண்டு நாளைக் கொண்டாடுவதற்கு பிடெஸ் விடுத்திருந்த அழைப்பிற்கு 100,000
மக்கள் கூடியதாகத் தெரியவந்துள்ளது.
இதுவரை குயுர்ஸ்கனி, அரசாங்கத்தின் தலைவர் என்னும் பதவியில் இருந்து விலக
வேண்டும் என்ற அனைத்து கோரிக்கைகளையும் எதிர்த்துள்ளார். மேலை அரசாங்கங்கள் மற்றும் வணிக நலன்கள்
ஓர்பன் என்னும் தன்னல, கொள்கையற்ற அரசியல்வாதியைவிட கோடீஸ்வர வணிகரான குயுர்ஸ்கனியிடன் கூடுதாலன
நம்பகத்தன்மையை கொண்டிருக்கின்றன என்று அவர் நன்கு அறிவார். இந்தக் கட்டத்தில் அரசாங்கத் தலைவரை மாற்றுவது
என்பது முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிர்ச்சிக்கு உட்படுத்தும் என்று பாராளுமன்றத்தின் சோசலிஸ்ட் பிரிவின்
தலைவரான Ildiko Lendvai
கூறியுள்ளார். MSZE
கூட்டணியின் "தடையற்ற கொள்கை" தாராளவாதப் பங்காளியும் குயுர்ஸ்கனியிடம் தன்னுடைய முழு நம்பிக்கையைத் தெரிவித்துள்ளது.
ஆனால் தன்னுடைய பிரச்சாரமான அரசை உறுதியற்றதாக ஆக்குதல் என்பதை ஓர்பன்
தொடர்ந்து செய்ய முடிவெடுத்துள்ளார். அரசாங்கத்தின் சீர்திருத்தப் போக்கின் மீது அரசியலமைப்பு நெறியின்படி
கேள்விக்குரிய ஒரு பொதுஜனவாக்கெடுப்பு ஒன்றை நடத்தவேண்டும் என்பதுதான் அவருடைய அடுத்த கட்ட
நடவடிக்கையாகும். குயுர்ஸ்கனியின் சமூகப் பேரழிவு தரக்கூடிய சிக்கன நடவடிக்கைகள் மீது பரந்த அளவில்
இருக்கும் சீற்றத்தை இவ்விதத்தில் அவர் பயன்படுத்திக் கொள்ளப் பார்க்கிறார். அக்டோபர் 1ம் தேதி
நடைபெற்ற வட்டாரத் தேர்தல்களில் பிடெசுக்கு தெளிவான ஆதாயங்கள் கிடைத்தது; 19 ஹங்கேரிய வட்டாரப்
பகுதிகளில் 18 பகுதிகளில் இது வெற்றி பெற்றது.
MSZP க்கு ஓர் உண்மையான
சோசலிச மாற்றீடு இல்லாத காரணத்தால்தான் பிடெசும் அதன் தீவிர வலது ஆதரவாளர்களும் இத்தகைய
செல்வாக்கை செலுத்த முடிகிறது. ஸ்ராலினிச அதிகாரத்துவம் பல தசாப்தங்களாக தொழிலாள வர்க்கத்தை
ஒடுக்கி வைத்தது, MSZP
இன் தன்னையே "இடது" என அறிவித்துக்கொண்டிருக்கும் பிரிவினர் சர்வதேச முதலாளித்துவத்தின் நலன்களுக்கு
பாடுபடும் அவநம்பிக்கை தன்மையும் உண்மையில் அரசியல் வெற்றிடம் ஒன்றை ஏற்படுத்தியுள்ளது; இதில் தன்னல
அரசியல் குழுக்களான பிடெஸ் போன்றவை செழிக்க வாய்ப்பு உள்ளது.
1956 புரட்சியின் மரபியத்தை
MSZP
மற்றும் பிடெஸ் என்ற இரு அமைப்புக்களின் போலிக் கூற்றுக்களில் இருந்தும் காத்திடுதல் ஹங்கேரிய தொழிலாள
வர்க்கத்தின் பணியாகும். ஸ்ராலினிச அடக்குமுறைக்கு எதிரான தொழிலாளர்களின் எழுச்சியாக 1956 புரட்சி
இருந்ததே அன்றி முதலாளித்துவத்தை மீட்பதற்கான ஒரு தேசிய இயக்கமாக அது இருக்கவில்லை. எனவே அது உலகம்
முழுவதும் இருந்த தொழிலாள வர்க்கத்திற்கு ஓர் உத்வேகம் கொடுப்பதற்கான ஆதாரமாக இருந்தது. சோசலிச
சிந்தனைகள் நிரம்பி இருந்த பல கம்யூனிஸ்ட் கட்சிகளின் உறுப்பினர்கள் ஸ்ராலினிசத்துடன் முறித்துக் கொண்டு
அவ்எழுச்சி காட்டுமிராண்டித்தனமான வகையில் அடக்கப்பட்டதை குறித்து, அதன் படிப்பினைகளை கொண்டிருந்த
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவான ட்ரொட்ஸ்கிச இயக்கத்தை அடைந்தனர்.
பல தசாப்தங்களாக, ஸ்ராலினிசமும் முதலாளித்துவமும் தன்னுடைய வரலாற்றில்
இருந்து தொழிலாள வர்க்கத்தை அகற்றும் வகையில்தான் செயல்பட்டுள்ளன -- ஹங்கேரியப் புரட்சி மற்றும் முந்தைய
சோசலிச, கம்யூனிச இயக்கங்களின் மரபுகளும் இதற்கு விதிவிலக்கு அல்ல. 1930 களில் ஸ்ராலினிசத்தின் களையெடுப்பால்
ஒரு தலைமுறை சோசலிச புரட்சியாளர்கள் கொல்லப்பட்டிருந்தனர்; ரஷ்ய புரட்சியின் மாபெரும் தலைவர்கள் பலரும்
ஏராளமான ஹங்கேரிய கம்யூனிஸ்ட்டுக்களும் இதில் அடங்குவர். ஸ்ராலிசத்திற்கு எதிரான இடது எதிர்ப்பின் முக்கிய
தலைவரும் நான்காம் அகிலத்தின் நிறுவனருமான லியோன் ட்ரொட்ஸ்கி நாடற்ற நபர் என அறிவிக்கப்பட்டு பின்னர்
1940ல் ஒரு ஸ்ராலினிச கொலையாளியால் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த வரலாற்றுப் படிப்பினையை உய்த்து உணர்வதுதான் இன்றைய அவசரத் தேவையாகும்.
லியோன் ட்ரொட்ஸ்கி மற்றும் நான்காம் அகிலம் பாதுகாத்திருந்த முன்னோக்கான ஒரு சோசலிச சமுதாயத்திற்கான
போராட்டம் சர்வதேச தொழிலாளர்களின் ஐக்கியம் மூலம்தான் ஏற்படும் என்பது, ஹங்கேரியிலும், எஞ்சிய கிழக்கு
ஐரோப்பிய பகுதிகளிலும் முதலாளித்துவமுறை மீட்பின் விளைவாக ஏற்பட்டுள்ள சமூக வறுமை மற்றும் அரசியல் பிற்போக்குத்தனத்தை
எதிர்ப்பதற்கு ஒரு மாற்றீடு ஆகும்.
See Also :
ஹங்கேரியின் நிகழ்வுகளில்
அரசியல் படிப்பினைகள் |