World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil: செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்காRumsfeld's firing: First casualty of post-election crisis in US ரம்ஸ்பெல்ட் பதவிநீக்கம்: அமெரிக்க தேர்தலுக்கு பின் முதல் பாதிப்பு Statement of the editorial board நவம்பர் 7ம் தேதி இடைத்தேர்தல்களுக்கு பின்னர் பாதுகாப்பு மந்திரி டோனால்ட் ரம்ஸ்பெல்ட் இராஜிநாமா செய்துள்ளமை புஷ் நிர்வாகத்திற்குள்ளே மட்டுமல்லாமல் முழு அமெரிக்க நடைமுறைக்குள்ளேயும் வெடித்துள்ள தீவிர நெருக்கடியின் தன்மையின் அளவைக் காட்டுகிறது. பிரதிநிதிகள் சபையில் தற்போது பதவி வகிக்கும் குடியரசுக் கட்சி உறுப்பினர்களில் குறைந்தது 29 பேராவது தோல்வியை தழுவிய நிலையில், அவையின் கட்டுப்பாடு ஜனநாயகக் கட்சிக்கு உறுதியாக மாற்றப்பட்டுவிட்டது. செனட் மன்றத்தின் ஜனநாயகக் கட்சியினர் 50 இடங்களை பெற்றுள்ளனர்; வர்ஜீனியாவின் இக்கட்சி உறுப்பினர் ஜிம் வெப் சிறிதளவு கூடுதலான எண்ணிக்கையில் முன்னணியில் இருக்கிறார்; ஒருவேளை அவர் தன்னுடைய குடியரசு எதிர்ப்பாளரை பதவி இழக்க வைக்கலாம்; அப்பொழுது ஜனநாயகக் கட்சிக்கு சட்டமன்றத்தின் மேலவையிலும் கட்டுப்பாட்டை கொடுக்கலாம். ஈராக் போருக்கு மக்கள் பரந்த முறையில் நிராகரிப்புத் தெரிவித்த வகையில் வந்துள்ள தேர்தல் முடிவுகள் அரசியல் மற்றும் செய்தி ஊடகத்திற்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளன. உத்தியோகபூர்வ அரசியலில் இருந்து மக்கள் பகைமை கொண்டிருக்கும் நிலையில், தகுதிபெற்ற வாக்காளர்களில் 40 சதவிகிதத்தினர்தான் வாக்கு அளித்தனர்; அப்படியும் கூட குடியரசுக் கட்சியினரின் பெரும் தோல்வி அமெரிக்கா முழுவதும் நிலவும் சீற்றமான அதிருப்தியின் ஒரு மங்கிய பிரதிபலிப்புத்தான். இப்படி போருக்கு எதிராக மக்கள் திரும்பியதில் ஜனநாயகக் கட்சியினர் உடனடியான ஆதாயங்களை பெற்றிருந்தாலும், தேர்தலுக்கு முன்பு அத்தகைய உணர்வுகளை அவர்கள் ஊக்குவிக்கவும் இல்லை, அதற்குப் பின்பு வரவேற்கவும் இல்லை. பென்டகன் தலைமை அதிகாரியின் இராஜிநாமாவை அறிவிப்பதற்காக புதனன்று கூட்டப்பட்டிருந்த வெள்ளை மாளிகை செய்தியாளர் கூட்டத்தில் புஷ் அறிவித்ததாவது: "அங்கு (ஈராக்கில்) சரியான முன்னேற்றம் இல்லாதது பற்றி பல அமெரிக்கர்களும் தங்கள் அதிருப்தியை தெரிவித்து வாக்களித்தனர் என்பதை நேற்று இரவு நான் உணர்ந்தேன்." ஆனால், உடனே அவர் சேர்த்துக் கூறியதாவது: "ஆயினும்கூட பல அமெரிக்கர்களும் வாஷிங்டனில் உள்ள இரு கட்சிகளின் தலைவர்களும் நாம் தோல்வியை ஏற்கமாட்டோம் என்பதை அறிந்துள்ளார்கள்." செவ்வாய் அன்று வந்துள்ள வாக்குப்பதிவு மற்றும் புஷ் மந்திரிசபையிலேயே ஏற்பட்டுள்ள அதிர்வும், ஈராக்கில் போரை நிறுத்த வழிவகுப்பதற்கு பதிலாக இன்னும் கூடுதலான வகையில் படுகொலையை அதிகரிக்கும் என்று நம்புவதற்குத்தான் இடமளிக்கின்றன. ஈராக்கிய படையெடுப்புக்கு அயராமல் உருக்கொடுத்திருந்த ரம்ஸ்பெல்டை அகற்றியமை, போரைத் தொடர்வதற்கும், "பயங்கரவாதத்தின் மீதான போர்" என்ற போர்வையின் கீழ் மேற்கொள்ளப்பட்டுவரும் அமெரிக்க இராணுவவாதத்தின் பூகோள ரீதியான பிரச்சாரத்திற்குமான இருகட்சிகளும் சார்ந்த புதிய திட்டத்தினை சூழ்ச்சியாய் கையாளும் ஒரு முயற்சியின் பகுதியே ஆகும். ரம்ஸ்பெல்ட்டின் இராஜிநாமாவை ஏற்ற, மற்றும் அவருக்குப் பதிலாக முன்னாள் CIA இயக்குனர் ரொபேர்ட் கேட்ஸை நியமித்தமை பற்றிய வெள்ளை மாளிகை நிகழ்ச்சியில், நிர்வாகத்தின் அடிப்படைக் கொள்கையில் எவ்வித மாற்றமும் இல்லை என்பதை ஐயந்திரிபற தெளிவாக்கிவிட்டார். "அமெரிக்கா ஓரு போரில் ஈடுபட்டுள்ள நாடு. தாக்குதலில் தொடர்ந்து நாம் இருந்து, நம்மை விரோதிகள் மீண்டும் தாக்குமுன்னர் அவர்களை நீதி முன் நிறுத்த வேண்டும்." என்று அவர் அறிவித்தார். காரணமற்ற ஆக்கிரமிப்பு பற்றி இத்தகைய திரிபும் பொய்யும் நிறைந்த போலிவாதத்தைத்தான் கேட்ஸும் எதிரொலித்துக் கூறினார்: "ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானத்திலும் அமெரிக்கா போரில் ஈடுபட்டுள்ளது. உலகெங்கிலும் பயங்கரவாதத்தை எதிர்த்து நாம் போராடிவருகிறோம்." கேட்சை நியமித்துப் பேசுகையில் புஷ் அவருடைய CIA அதிகாரப்பதவி போக்கை பாராட்டி, "ஆப்கானிஸ்தானத்தில் நாம் எதிர்கொண்டுள்ள சவால்களை நன்கு உணர்ந்துள்ளவர்" என்றார்; ஏனெனில் "அவர் CIA இன் உதவி இயக்குனராக றேகன் காலத்தில் பணியாற்றி, ஆப்கானிஸ்தானத்தில் இருந்து சோவியத் படைகளை விரட்டும் முயற்சிகளுக்கு அமெரிக்காவிற்கு உதவி புரிந்துள்ளார்" என்றும் அவர் கூறினார். வேறுவிதமாகக் கூறினால், ஆப்கான் சமூகத்தை சிதைத்த CIA ஆதரவுப் போரின் போது ஓசாமா பின் லேடனுடன் நெருக்கமான தொடர்புகளை நிறுவிய அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகளில் இவரும் ஒருவராவார். அவ்விதத்தில் இவர் 9/11 ல் இறுதியாக செயலாற்றிய இஸ்லாமிய பயங்கரவாதிகளை வளர்ப்பதில் இவரும் முக்கிய பங்கை கொண்டிருந்தார். "பயங்கரவாதத்தின் மீதான போரை" வழிநடத்த இந்நிலைச்சான்றே சிறந்தது என வாதிடும் புஷ்ஷின் கருத்தை விட அமெரிக்க ஆளும் உயரடுக்கின் இழிதன்மையை அப்பட்டமாக வேறு எதுவும் வெளிப்படுத்த முடியாது. பயங்கரவாதத்துடனான கேட்சின் பிணைப்புக்கள் பின் லேடனுடன் மட்டும் முடிந்துவிடவில்லை. 1980 களின் நடுப்பகுதியில் வெள்ளை மாளிகை ஒற்றர்களின் இணையம் மற்றும் "ஈரான்-கான்ட்ரா" நடவடிக்கையை நடத்திய CIA அதிகாரிகளுடனும் இவர் பிணைந்திருந்தார்; பிந்தைய நடவடிக்கை ஈரானுக்கு விற்பனை செய்யப்பட்டிருந்த ஆயுதங்கள் விற்பனை மூலம் கிடைத்த பணம் சட்டவிரோதமாக நிக்கரகுவாவிற்கு எதிரான அமெரிக்க ஆதரவு "கான்ட்ரா" பயங்கரத்தில் பயன்படுத்தப்பட்டது. இதேபோல் 1980களில் ஈரானுக்கு எதிரான போரில் சதாம் ஹுசைனின் ஈராக்கிய ஆட்சிக்கு ஆயுதங்கள் வழங்கிய இரகசிய செயல்களிலும் இவர் தொடர்பு கொண்டிருந்தார். இத்தகைய மனிதர்தான் ஈராக்கில் "ஒரு புதிய முன்னோக்கை" சிறந்த முறையில் செயல்படுத்தக்கூடியவர் என்று அறிமுகப்படுத்தியுள்ளதானது, இன்னும் கொடூரமான குற்றங்கள் இழைப்பதற்கான தயாரிப்புக்கள் உள்ளன என்பதின் தெளிவான எச்சரிக்கையாகும். ரம்ஸ்பெல்டிற்கு பதிலாக வந்துள்ள நியமனத்திற்கு விடையிறுப்பு இதைத்தான் சுட்டிக் காட்டுகிறது. இம்மாற்றத்தை வரவேற்று ஒரு செய்தியாளர் கூட்டத்தை முதலில் கூட்டியவர்களில் ஒருவர் அரிசோனா செனட்டரான ஜோன் மக்கையின் ஆவார்; 2008 ஜனாதிபதி தேர்தல்களில் இவர்தான் குடியரசுக் கட்சியின் சார்பில் போட்டியிடுபவர்களில் முக்கியமானவர் ஆவார். "கடந்த காலத்தின் தவறுகளை திருத்திக் கொள்ளுவதற்கு" கேட்சின் நியமனம் ஒரு வாய்ப்பாக உள்ளது என்று மக்கையின் அறிவித்தார். "கிளர்ச்சிஎழுச்சியை அடக்குவதற்கு தவிர்க்க முடியாத பாதுகாப்பு தரத்தை கொள்வதற்கு ஈராக்கில் நாம் போதுமான படைகளை கொண்டிருக்கிறோமா, இல்லையா" என்பதை வாஷிங்டன் மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று அவர் கூறினார். மேலும் "தரைப்படை மற்றும் கடற்படை சிறப்புப் பிரிவினரின் எண்ணிக்கை உடனடியாக அதிகரிக்கப்பட வேண்டிய தேவை" பற்றியும் தான் கேட்சுடன் விவாதிக்க உள்ளதாக அவர் கூறினார். புதிய பாதுகாப்பு மந்திரி நியமனம் "இன்னும் கூடுதலான வகையில் ஈராக்கிய கொள்கை பற்றி இருகட்சியினரின் ஒத்துழைப்பிற்கு வாய்ப்பைக் கொடுக்கும்; ஏனெனில் குடியரசு மற்றும் ஜனநாயகக் கட்சிகள் இரண்டும் இணக்கத்துடன் இணைந்து வெற்றியை அடைவதில் ஒத்துழைக்க வேண்டும்." தீவிரக் கருத்துடைய ஷியா மதகுருவான மொக்தாதா அல் சதரை "அகற்றுவதற்கு" அமெரிக்கா முயல வேண்டும் என்றும் மக்கையின் கூறினார்; இதன் பொருள் அவர் தலைமையில் இருக்கும் குடிப்படைகள் மீது இரத்தக்களரியான தாக்குதல் நடத்த வேண்டும் என்பது மட்டுமன்றி பாக்தாத்தில் அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு பெருகிய முறையில் விரோதப் போக்கை வளர்த்துவரும் ஷியா வறியவர்கள்மீதும் தாக்குதல் வேண்டும் என்பதாகும். "இரு கட்சிகளின் ஒத்துழைப்பிற்கு" வாய்ப்பினை கேட்சின் நியமனம் பெருக்கும் என்னும் மக்கையினின் கணிப்பு உடனடி உறுதியைக் கண்டது. செனட்டின் ஜனநாயகக் கட்சி தலைவர், நெவடாவின் ஹாரி ரீட், "பாதுகாப்பு மந்திரியின் இராஜிநாமாவை ஏற்றவகையில், ஜனாதிபதி புஷ் ஒரு சரியான திசையில் நடவடிக்கை எடுத்துள்ளார்" என்று கூறினார். ஜனநாயகக் கட்சியின் செனட் பிரச்சாரத்திற்கு தலைமை தாங்கிய நியூ யோர்க் செனட்டரான சார்ல்ஸ் ஷ்யூமெர், இதே உணர்வுகளை பிரதிபலித்த வகையில் கூறியதாவது: "ஒரு புதிய பாதுகாப்பு மந்திரியை நியமித்தமை ஒரு நல்ல முதல் கட்டச் செயல்; ஈராக்கில் நடவடிக்கையின் ஒரு புதிய பாதையை கொள்ள ஜனாதிபதி விரும்புவதின் அடையாளம் இது என்று கொள்ளுகிறோம்." புஷ்ஷின் வெள்ளை மாளிகையுடன் ஒத்துழைப்பு உறுதி என்று ஜனநாயகக் கட்சி தலைவர்கள் வரிசையாய் அறிக்கைகள் வெளியிட்டதை தொடர்ந்து புஷ்ஷின் இச்செயலும் பாராட்டப்பட்டுள்ளது. "ஜனாதிபதியுடனும் குடியரசுக் கட்சியுடனும், ஜனநாயகக் கட்சியினர், சட்ட மன்றத்தில் இணைந்து செயல்படுவார்கள்; விரோதப் போக்கு உடையவர்களாக அல்ல." என்று மன்றத்தின் அவைத்தலைவராக வரவிருக்கும் ஜனநாயகக் கட்சியை சேர்ந்த நான்சி பெலோசி உறுதிமொழி கூறியுள்ளார். முன்னாள் வெளியுறவுத்துறை செயலர் ஜேம்ஸ் பேகர் மற்றும் முன்னாள் ஜனநாயகக் கட்சி சட்டமன்றத் தலைவர் லீ ஹாமில்டன் போன்றோரால் தலைமை வகிக்கப்பட்ட இருகட்சிகள் உறுப்பினர் கொண்ட ஈராக்கிய ஆய்வுக் குழுவில் கேட்ஸ் ஒரு உறுப்பினராக உள்ளார். இந்தக் குழு ஈராக்கில் அமெரிக்க இராணுவம் மற்றும் அரசியல் சங்கடத்தை எப்படி மாற்றுவது என்பது பற்றிய பரிந்துரைகளை விரைவில் அளிப்பதாக இருக்கிறது. வாஷிங்டனின் பாசாங்குத்தனமான ஜனநாயகத்தை வளர்ப்பது என்பதற்கு பதிலாக ஈராக்கிய மக்கள்மீது ஒரேயரடியாய் சர்வாதிகார ஆட்சியை கொண்டுவரும் வகையில் இன்னும் கூடுதலான "நடைமுறைக்கேற்ற" அணுகுமுறையை கையாள குழு வலியுறுத்தும் என்று பரந்த முறையில் எதிர்பார்க்கப்படுகிறது. போருக்கான இருகட்சிகளின் ஆதரவானது, இருகட்சி முறையின் ஆழமடைந்துவரும் நெருக்கடியின் நிலைமைகளின் கீழ் தொடர்கிறது. செவ்வாயன்று நடந்த தேர்தல்களின் முடிவுவானது, ஜனநாயகக் கட்சியினருக்கான மக்களுடைய கட்டளையை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை, மாறாக ஜனநாயகக் கட்சியினரின் ஒத்துழைப்புடனேயே புஷ் நிர்வாகம் மேற்கொண்டுவரும் கொள்கைகளின் ஒரு மறுதலிப்பாகும். அரசியல் நிறுவனம் ஒட்டுமொத்தத்திற்கும் வளர்ந்துவரும் மக்களின் எதிர்ப்பையே இத்தேர்தல் வெளிப்படுத்தியுள்ளது. போர் தேர்தல்களில் நிராகரிக்கப்பட்டுள்ளது, பெரும் செய்தி ஊடகங்கள் மற்றும் ஜனநாயகக் கட்சி இரண்டுமே அத்தகைய அரசியல் உணர்வுகளை அடக்க முற்பட்டுள்ள நிலையில் வெளிப்பட்டுள்ளது மிகவும் குறிப்பிடத்தக்கது ஆகும். அவருடைய ஆக்கிரமிப்புப் போரை நடத்துவதற்குத் தேவைப்பட்ட சட்டமன்ற அதிகாரத்தை 2002ல் புஷ்ஷிற்கு ஜனநாயகக் கட்சியினர் அளித்தனர்; வாரத்திற்கு 2 மில்லியன் டாலர்கள் செலவு என்று ஆக்கிரமிப்பிற்கு ஆவதை தொடர்ந்து நிதியளித்தும் வருகின்றனர். இதேபோல் தேசபக்த சட்டம், இராணுவ விசாரணைக் குழுச் சட்டம் ஆகியவை இயற்றப்பட்டு மக்களின் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல் நடைபெறுவதும் ஜனநாயகக் கட்சியினரின் ஆதரவு பெற்றுத்தான் நிகழ்ந்துள்ளது. இந்தச் சூழ்நிலையில், ரம்ஸ்பெல்ட் பதவியில் இருந்து அகற்றப்பட்டமை வெறும் ஜன்னல் பூச்சு வேலை என்பதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை; பதவிகளில் இருப்பவர்களை மாற்றுதல் அல்லது தேசிய சட்டமன்றத்தின் தலைமை ஜனநாயகக் கட்சியிடம் வருவது போருக்கு ஒரு முடிவைத் தரும் என்ற எதிர்பார்ப்பு கருத்துக்கள் முற்றிலும் தவறானதாகும். போருக்கு எதிரான பெரும் எதிர்ப்பு தேர்தல்களில் வெளிப்படுத்தப்பட்டதானது புஷ் நிர்வாகத்தின் செயற்பாட்டு தவறுகளுக்கு எதிராக இயக்கப்பட்டது அல்ல. போர் நெறியையே நிராகரித்துதான் அது. பெரும்பாலான மக்கள் போருக்கு முற்றுப்புள்ளி வைத்து, இப்போரை தவறானது என்றும் தேவையற்றது என்றும்தான் பார்க்கின்றனர். ஆனால் ஆளும் உயரடுக்கிற்குள்ளே ஈராக்கிய போர் பற்றிய கவலை முற்றிலும் எதிரான பொருளுரையைத்தான் கொண்டுள்ளது. இரு கட்சிகளையும் கட்டுப்படுத்தும் ஆளும் உயரடுக்கு ஈராக்கில் "வெற்றி" என்பதை இன்றியமையாத தேவை எனக் காண்கின்றனர். அந்நாட்டின் எண்ணெய் இருப்புக்கள் மீதான கட்டுப்பாட்டை எடுத்துக் கொண்டு இலாபத்தை அடைவது என்ற நோக்கம் மட்டும் அல்லாது, உலகம் முழுவதும் அமெரிக்க மேலாதிக்க நிலைமையை காக்க வேண்டும் என்ற கருத்தும் இதில் அடங்கியுள்ளது. ஈராக்கிய கொள்கை பற்றி புஷ் நிர்வாகத்துடன் ஜனநாயகக் கட்சியினர் எவ்வித தந்திரோபாய வேறுபாடுகளை கொண்டிருந்தாலும், ஈராக்கிய மக்களுக்கு எதிராக இன்னும் குருதிப்பாதை பெருகுவதற்கு கட்சி ஏதும் எதிர்ப்புத் தெரிவிக்காது என்று உறுதியாகக் கணிக்க முடியும். 2004 தேர்தலை அடுத்து உடனடியாக ஈராக்கிய பல்லூஜா நகரத்தின் மீது நிகழ்த்தப்பட்ட காட்டுமிராண்டித்தனமான முற்றுகை பற்றி எந்த முக்கியமான ஜனநாயகக் கட்சியின் தலைவரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. பாக்தாத்தின் ஷியா மக்கள் வாழும் வறிய சேரியான சதர் நகரத்தின் மீது நீண்டகாலமாக எதிர்க்கப்படும் தாக்குதலை பென்டகன் தொடக்கினாலும், ஜனநாயக் கட்சியனர் அதற்கு ஆதரவு கொடுப்பார்கள் என்றுதான் நம்பப்படுகிறது. அமெரிக்க ஆளும் வட்டாரங்களுக்குள்ளேயே இரண்டு அக்கறைகள் பெருகிய முறையில் நெருக்கடியாக வந்துள்ளன. முதலாவது ஈராக்கில் இருக்கும் நம்பிக்கையற்ற நிலைமை. இரண்டாவது இன்னும் அருகில், உள்நாட்டில், அமெரிக்காவிற்குள்ளேயே பெருகி வரும் மக்களுடைய அதிருப்தியாகும். நிறுவனமானது மக்களது கருத்தை சூழ்ச்சியுடன் கையாள பயன்படுத்தப்பட்ட வலதுசாரி அரசியல் மற்றும் செய்தி ஊடகக் கருவிகள் நிலைமுறிவுற்றன என்ற குறிப்பைத்தான் தேர்தல்கள் காட்டுகின்றன. செய்தி ஊடகம் தடை செய்வது ஒருபுறம் இருக்க, தேர்தல் முடிவுகள் மகத்தான வகையில் அரசாங்கக் கொள்கைகளை நிராகரிக்கும் என்பதை எதிர்பார்க்க பெரும்பாலும் தவறிவிட்டன. புஷ் நிர்வாகத்திற்கு ஒரு தேர்தல் தாக்குதல் கொடுக்கப்பட்டிருந்தநிலையில், வெகுஜனங்களிடையே உண்மையான அரசியல் மாற்றீடு இல்லாதிருந்தது மிகப் பெரிய ஆபத்து ஆகும். இந்நிலைமையானது, நிர்வாகத்திற்கு வெளியில் இராணுவவாதம், உள்நாட்டின் ஜனநாயக உரிமைகள், சமூக நிலைமைகள் ஆகியவற்றை தாக்குதல் என்ற கொள்கைகளை செயல்படுத்துவதற்கு புதிய வழிவகைகளை கண்டறிந்து செயல்படுத்துவதற்கு இன்னும் அவகாசத்தை கொடுத்துள்ளது. புஷ்ஷின் வெள்ளை மாளிகை பகிரங்கமாக இரு கட்சி முறையின் நலன்களை பெருமைப்படுத்தி பேசினாலும்கூட, தன்னுடைய இலக்குகளை மற்ற வழியில் தொடர அது தயாராக உள்ளது என்பதற்கான குறிப்புக்கள்தான் வந்துள்ளன. தேர்தலுக்கு முன்பு துணை ஜனாதிபதி டிக் செனி, "மக்களிடம் ஆதரவை ஈராக்கின்மீதான போர் கொண்டிராமல் இருக்கலாம்; அது பற்றிக் கவலை இல்லை." என்று அறிவித்தார். "இன்னும் கூடுதலான உத்வேகத்துடன் வெற்றியை அடையும் வகையில் நிர்வாகத்தின் கொள்கை" இயக்கப்படும் என்றும் பொதுமக்கள் என்ன நினைக்கின்றார்கள் என்பது பற்றிக் கவலை இல்லை என்றும் அவர் கூறினார். இதேபோன்ற கருத்தை வெளியிட்ட லொஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் வரிகள்-எதிர்ப்பிற்கு போராடும் கிரொவெர் நார்க்விஸ்ட், வெள்ளை மாளிகைக்கு நெருக்கமான ஆலோசகராக இருப்பவரை மேற்கோளிட்டு, "புஷ் இப்பொழுது பெரும்பாலும் சட்டமியற்றுதல் மீதாக காங்கிரசுடன், வேலைசெய்வதை காட்டிலும், நிர்வாக ஆணைகள் மூலம் ஆட்சி நடத்துவார்" என்று தெரிவித்துள்ளது. தன்னுடைய கொள்கைகளை தொடர்வதில் மக்களுடைய எதிர்ப்பு குறுக்கீடு செய்கின்ற அளவிற்கு, இந்நிர்வாகமானது எதிர்ப்பவர்களை போலீஸ் அரசு ஒடுக்குமுறைகளைப் பயன்படுத்துதல் உள்பட, சர்வாதிகார வழிமுறைகளை ஏற்கத் தயாராக இருக்கிறது. இந்த அரசாங்கத்தை அமெரிக்க உழைக்கும் மக்களின் பரந்த பிரிவுடன் ஒரு மோதல் போக்கை கொள்ளத்தான் தேர்தல்கள் நிறுத்தியுள்ளன. ஜனநாயக் கட்சியின் தேர்தல்கள் தேட்டங்கள் இந்த வழிவகைக்கு தடையாக இராது; மாறாக அதை விரைவுபடுத்தும். ஈராக்கில் இருந்து அமெரிக்கப் படைகள் நிபந்தனையற்ற முறையிலும் உடனடியாகவும் திரும்பப் பெற வேண்டும், அது ஒன்றுதான் அந்நாட்டில் நிகழும் படுகொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்ற வேலைத்திட்டத்தின் அடிப்படையில் இந்த இடைத்தேர்தல்களில் சோசலிச சமத்துவக் கட்சி பிரச்சாரத்தில் இறங்கியது. மேலும் புஷ், செனி, ரம்ஸ்பெல்ட் உட்பட இச்சட்டவிரோத போரை தொடக்க சதி செய்த அனைவரும் அரசியல் ரீதியாகவும் குற்றவியல் ரீதியாகவும் பொறுப்பு ஏற்க வேண்டும் என்ற கோரிக்கையையும் சோசலிச சமத்துவக் கட்சி முன்வைத்தது. இத்தகைய குற்றச் சாட்டுக்களை தொடரும் விருப்பம் ஜனநாயகக் கட்சிக்குக் கிடையாது. புதனன்று விடுத்த அறிக்கையில், வரவிருக்கும் மன்ற அவைத்தலைவர் பெலோசி, "பெரிய குற்ற விசாரணை என்ற பேச்சிற்கே இடமில்லை" என்ற தன்னுடைய உறுதிமொழியை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். அமெரிக்க அரசியலமைப்பு மற்றும் அமெரிக்க மக்கள் மீது வரலாற்றில் இல்லாத அளவிற்குக் கூடுதலான பெரிய குற்றங்களை நடத்தியுள்ள ஒரு நிர்வாகத்தின் தன்மையை பற்றி எந்தவித விசாரணையும் தொடக்கப்படாமல் இருக்கையிலேயே, இத்தகைய விசுவாசப் பிரமாணங்கள் வெளிவருகின்றன. தேர்தலில் எதிர்பாராத பரிசுமழை வந்துள்ள நிலையில், ஜனநாயக் கட்சியினர் தொடரும் கொள்கைகள், சோசலிச சமத்துவக் கட்சி முன்வைத்த அரசியல் முன்னோக்கின் மத்திய கருத்தைத்தான் உறுதிபடுத்தியுள்ளன; இப்பிரச்சாரத்தின் போக்கில் அது கூறியதாவது: "ஏகாதிபத்தியத்திற்கு எதிராக வெளிநாட்டிலும், சமத்துவமற்ற நிலை, ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல் உள்நாட்டில் நடப்பதற்கு எதிராகவும் நிலைத்த போராட்டத்தை நடத்துவது என்பதற்கு முதலாளித்துவ இருகட்சி முறைக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் பரந்த வெகுஜன சுயாதீன சோசலிச இயக்கத்தை கட்டியமைத்து வளர்ப்பது ஒன்றுதான் ஒரே சக்திமிக்க போராட்ட வழிமுறையாகும். |