World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : இத்தாலி

Italy: Prodi government submits austerity budget

இத்தாலி: புரோடி அரசாங்கம் சிக்கன வரவுசெலவுத் திட்டத்தை அளிக்கிறது

By Marianne Arens
7 October 2006

Back to screen version

செப்டம்பர் 30 அன்று ரோமானோ புரோடியின் தலைமையிலான மத்திய-இடது இத்தாலிய அரசாங்கம் 2007ம் ஆண்டிற்கான அதன் வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்தது; இதில், வரவிருக்கும் ஆண்டில் மொத்த சேமிப்பு 33.34 பில்லியன் யூரோக்களாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. வரவு செலவுத் திட்டத்தின் நோக்கம் இத்தாலியின் அதிகரித்துக்கொண்டிருக்கும் பற்றாக்குறையை குறைத்து, ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள முறைகளுக்கு ஏற்ப உறுதித் தன்மை ஏற்படுத்துவதாகும்; அவ்விதிமுறைகளின்படி வரவுசெலவுத் திட்ட பற்றாக்குறைகள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவிகிதத்திற்கும் அதிகமாகாமல் இருக்க வேண்டும்.

இந்த வரவு செலவுத்திட்டம் நாட்டின் பிரதிநிதிகள் மன்றம் மற்றும் செனட் மன்றத்தால் இவ்வாண்டு இறுதிக்குள் ஏற்கப்பட வேண்டும். அரசாங்கம் பெரும் உறுதி அற்ற நிலையில் இருப்பதை காணும்போது, இது ஒரு எளிதான செயல் அல்ல. ஆளும் கூட்டணியில் ஒன்பது வெவ்வேறு கட்சிகள், பழைமைவாத முன்னாள் கிறிஸ்துவ ஜனநாயகவாதிகளில் இருந்து கம்யூனிஸ்ட் கட்சி (Rifondazione Comunista -மறுபடியும் நிறுவப்பட்டுள்ள கம்யூனிஸ்ட்) வரை உள்ளன; செனட் மன்றத்தில் இதற்கு ஒரு உறுப்பினர் எதிர்க்கட்சிக்கு சென்றுவிட்டதால், ஒரு வாக்குப் பெரும்பான்மைதான் உள்ளது.

வரவுசெலவுத் திட்டத்தை பற்றிய முரண்பாடுகள், கூட்டணியையே முறித்து விடும் அபாயத்தை கொண்டுள்ளது. 30 பில்லியன் யூரோக்களுக்கும் மேலாக சேமிப்பு இருத்தல் வேண்டும் என்பது நாட்டின் பொதுநலச் செலவினங்களில் பெரும் வெட்டுக்களை செய்வதை பொறுத்துத்தான் இருக்கும். Rifondazione மற்றும் பசுமைக் கட்சிகள் அத்தகைய நடவடிக்கைகளுக்கு இணங்கினால், அவை பொது மக்களுடைய பார்வையில் பெரும் குறைமதிப்பிற்கு உட்படுத்தப்பட்டுவிடுவர்.

முக்கியமான மத்தியதர வர்க்கத்தின் சலுகை பெற்றுள்ள பிரிவுகளின் மீது தாக்கம் கொடுக்கக் கூடிய சில வரிவிதிப்பு அதிகரிப்பு திட்டங்களை கொண்டுள்ள வரவுசெலவுத் திட்டம் வலதுசாரியினரையும் சீற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

இத்தகைய வரவு செலவுத் திட்டத்தில் உடன்பாடு என்பது "கவர்ச்சிகரமானதாக இராது" என்று புரோடி ஒப்புக் கொண்டுள்ளார்; மேலும் தன்னுடைய கூட்டணிக் கூட்டாளிகள் அனைவரும் "பிரச்சனைகள் ஊடாக நடப்பதற்கு" தயாராக இருக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் சில்வியோ பெர்லுஸ்கோனிக்குப் பதிலாக புரோடி ஆட்சிக்கு வந்ததும், இத்தாலிய, ஐரோப்பிய முதலாளிகளுக்கு இத்தாலிய பொருளாதாரத்தில் நீடித்துவரும் பிரச்சினைகளை தான் தீர்த்துவிடுவதாக, அதாவது வளர்ச்சியற்றநிலை, பெருகும் பற்றாக்குறை, கடன்சுமைகள் ஆகியவற்றை அகற்றிவிடுவதாகவும், தேசிய, ஐரோப்பிய அளவில் நம்பகத்தன்மையுடைய பங்களி என நிரூபிக்கும் அரசாங்கத்தை கொடுப்பதாகவும் கூறினார். பற்றாக்குறையை குறைப்பதைத்தவிர, பொருளாதார வளர்ச்சிக்காக முதலீட்டை பெருக்குவதாகவும், ஊதியச் செலவினங்களை குறைந்தது 5 சதவிகிதம் குறைப்பதாகவும் அதையொட்டி இத்தாலிய பொருளாதாரத்தின் போட்டித்தன்மையை அதிகரிக்கப் போவதாகவும் அவர் உறுதியளித்தார்.

இத்தாலிய வங்கிகளும், பெருநிறுவனங்களும் அரசாங்கத்தின் மீது அழுத்தம் கொடுத்தன; தன்னுடைய உறுதிமொழிகளை புரோடி விரைவாகச் செயல்படுத்தவில்லை என்றும் குறைகூறின. உலகப் பொருளாதாரத்தில் இத்தாலியின் நிலைமை சரியக் கூடும் என்று பைனான்சியல் டைம்ஸ் எச்சரித்தது; மேலும் வரவுசெலவுத் திட்டம் போதுமான அளவு முற்போக்குத் தனத்தை கொண்டிராவிடில், இத்தாலியின் உயர்ந்த கடன் நிலைமை அதன் பொருளாதரத் தகுதியை பாதித்துவிடும் என்றும் கூறியது.

Confindustria எனப்படும் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர், Luca Cordero di Montezemolo போட்டித்தன்மையை பொறுத்தவரையில் இத்தாலி பல ஆண்டுகளாக மிகப் பின் தங்கிய நிலையில் இருப்பதாகக் கூறினார். "புது அரசாங்கம் கூடுதலான கவனத்தை வளர்ச்சிக்கு கொடுத்து, நாட்டிற்கு ஒரு பெரும் அதிர்வை கொடுக்கும் என்று நாங்கள் நினைத்தோம்" என்று அவர் கூறினார். ஆனால் "வீணடித்தலுக்கு எதிராக எந்த முயற்சியும்" இருப்பதாக தான் அறிந்த வரை நம்பவில்லை என்றும், சொல்லப்போனால் "இன்னும் புதிய வரிகள் விதிக்கக்கூடிய ஆபத்தும் உள்ளது" என்று அவர் கூறினார். ஒரு கடுமையான வேலைவாங்குபவர் என்ற முறையில் அரசாங்கத்திற்கு உபதேசம் செய்கையில் "தைரியமான வெட்டுக்களை எதிர்பார்த்தோம், இன்னும் தைரியமான முறையில்" என்று முடிவுரையாக கூறினார்.

இச்சூழலில் அரசாங்கத்தின் "சமூகப் பங்காளிகள்" எனப்படும் தொழிற்சங்கங்களுக்கோ அல்லது புரோடியின் கூட்டணிப் பங்காளிக் கட்சியான Rifondazione Communista விற்கோ பின்வாங்குதல் அல்லது சலுகை காட்டுதல் என்பது பழைமைவாத மந்திரிகளிடம் இருந்து சீற்றம் மிகுந்த ஓலங்களால் வரவேற்கப்பட்டது.

Rifondazione Comunista அல்லது பசுமைக் கட்சியினர் பாடசாலைகளுக்கும் உள்ளூராட்சிகளுக்கும் திட்டமிட்டுள்ள வெட்டுக்கள் ஒத்திவைக்கப்படலாம், சமூக அமைச்சர் பாலோ பெரெரோ செல்வக்கொழிப்புடைய மத்தியதர வர்க்கத்திற்கு வருமான வரியை இன்னும் இரண்டு பங்கு கூடுதலாக்கலாம் என்று கூறிய கருத்தோ இவற்றில் அடங்கும். Christian-Democratic Udeur இன் தலைவரும் நீதித்துறை மந்திரி கிளெமென்டே மாஸ்டேல்லா, தன்னுடைய கட்சி அத்தகைய நடவடிக்கைகளுக்கு ஆதரவு தராது, அரசாங்கத்திற்கு, பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு என்ற நிலைக்கு வந்தாலும் ஆதரவு கிடையாது என்று அறிவித்துவிட்டார். ஏற்கனவே இத்தகைய முறையில் நம்பிக்கை ஆதரவு பெறுவதற்குக் கடந்த சில மாதங்களில் தன்னுடைய பெரும்பான்மையை நிலைப்படுத்தும் வகையில் புரோடி பல முறை செயல்பட்டுள்ளார்.

மாஸ்டெல்லா கூறினார்: " 'பணக்கரர்களும் அழுகிறார்கள்' என்ற தலைப்பை கொண்டுள்ள மக்களை ஈர்த்துள்ள தொலைக்காட்சி நிகழ்வுபோல் நிதிச்சீர்திருத்தங்களை அமைத்துவிட முடியாது.... மத்தியதர வர்க்கம் பணக்கார வர்க்கத்தை போன்றதுதான் என்று நாங்கள் நம்பவில்லை. தொழிலாள வர்க்கச் சொத்துடமையாக்கல் பற்றி நினைப்பவர்கள் எவரும் பணக்காரர்கள் எனக் கூறப்படுபவரைப் பற்றிப் பேசும்போது எங்களுடைய மிகுந்த எதிர்ப்பையும் கருத்திற் கொள்ளவேண்டும்."

இறுதியில், Rifondazione Comunista பெரும் சமூகச் செலவினக் குறைப்புக்கள் இருந்தபோதிலும், வரவுசெலவுத் திட்டத்திற்கு தான் ஆதரவு கொடுப்பதாகக் கூறிவிட்டது.

வரவிருக்கும் ஆண்டில், பெர்லுஸ்கோனியால் தொடக்கப்பட்ட ஓய்வூதியச் சீர்திருத்தத்தை புரோடி புதுப்பிக்க விரும்புகிறார்; இதன்படி சராசரி ஓய்வுபெறும் வயது அதிகமாக்கப்படும். அரசாங்கத்தின் உடைமைகளாக இருக்கும் நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்படும் கொள்கைகள் தொடரும். இத்தாலியின் விமான நிறுவனமான Alitalia மற்றும் இரயில் அமைப்பு என்ற பொதுப் பணித் துறை ஊழியர்கள் கூடுதலான பணிநீக்கங்கள் மற்றும் ஊதியக் குறைப்புக்களை ஏற்றாக வேண்டும்.

வரவுசெலவுத் திட்டம் தொழிற்சங்கங்களின் உடன்பாட்டையும் பெறவேண்டும் என்றும் Rifondazione Comunista கோரியுள்ளது. இன்னும் கூடுதலான செலவினக் குறைப்புக்கள் பொதுக் கல்வி முறையில் ஏற்பட்டால் வேலை நிறுத்தங்கள் நடக்கும் என்று தொழிற்சங்கங்கள் அச்சுறுத்தியிருந்தன. ஒரு பொது வேலைநிறுத்தம் பற்றிக் கூட திட்டமிடப்பட்டது. ஆனால் தொழிற்சங்கங்கள் புரோடி அக்டோபர் 10 அன்று வட்டமேசை மாநாடு நடத்தப்படும் என்று கூறியவுடன் Alitalia தொழிலாளர்கள் அடுத்த வாரம் திட்டமிட்டிருந்த தேசிய வேலைநிறுத்தத்தை கைவிடத் தயார் என்று அறிவித்துள்ன.

கலைஞர்களுக்கும் பண்பாட்டுத் துறையில் வேலைபார்ப்பவர்களுக்கும் பாதுகாப்பு இருக்கும் என்று முக்கிய அரசாங்கப் பிரதிநிதிகள் தேர்தலுக்கு முன்பு கொடுத்த உறுதி மொழிகள், சூடான காற்றுப் போல் கரைந்துவிட்டன. புது அரசாங்கத்தின் முதல் நூறு நாள் செயற்பாட்டில், பெர்லுஸ்கோனி கொண்டுவந்திருந்த கணிசமான வெட்டுக்களில் உண்மையான பின்வாங்கல் நிகழவில்லை; பண்பாட்டுத் துறைக்கான செலவினங்கள் அதிகமாக்கப்படவில்லை. பண்பாட்டுத் துறை மந்திரியும், புராடியின் உதவியாளரும் பூர்ஷ்வா மார்கெரிடா குழுவின் தலைவரும் ஆன பிரான்ஸெஸ்கோ ருடெல்லி, புதிய வரவு செலவுத் திட்டத்தை களிப்புடன் வரவேற்பதில் ஒருவராக இருந்து "மத்தியதர வர்க்கத்தை பயமுறுத்தக் கூடாது" என்றும் அறிவித்துள்ளார்.

இத்தகைய சிக்கன வரவு செலவுத் திட்டம் நிதியமைச்சர் டோமாசோ படுவா ஷியோப்பாவினால் தயாரிக்கப்பட்டது; இவர் இத்தாலியின் பெரு வங்கிகள் மற்றும் ஐரோப்பிய நிதிய மூலதன அமைப்புக்களின் நம்பிக்கைக்கு உரியவர் ஆவார். ஜேர்மனியின் நிதிச் செய்தித்தாளான Handelsblatt இன் கருத்துப்படி இடது ஜனநாயகவாதிகளின் மிகப்பெரிய அரசாங்கக் குழுவின் தலைவராக இருக்கும் பீயேரோ பாசினோ, "எமது வளர்ச்சி விகிதங்களை அடையவேண்டும் என்றால், இந்த வரவுசெலவுத் திட்டத்திற்கு மாற்றீடு ஏதும் கிடையாது." என்று கூறியுள்ளார்.

அரசாங்கம் ஒரு சிக்கனமான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்துள்ளது, பெருவணிகம் கோரியுள்ள வகையில் இது உள்ளது என்ற உண்மை, பாராளுமன்றத்தில் வலதுசாரியினரின் எதிர்ப்பைக் குறைக்க இயலவில்லை. மாறாக, இந்தக் கூறுபாடுகள் தங்களுடைய செயற்பட்டியலை இன்னும் ஆக்கிரோஷமான முறையில் தொடர்வதற்கான ஊக்கத்தைத்தான் இது கொடுத்துள்ளது.

பாதுகாப்புக் குழுவின் தலைவரும் "Italy of Values" என்ற Antanio Di Pietro கட்சியின் உறுப்பினருமான செனட்டர் செர்ஜியோ டி கிரெகோரியோ கட்சியில் இருந்தும் மத்திய-இடது முகாமில் இருந்தும் இராஜிநாமா செய்துள்ளார்; மேலும் பெர்லுஸ்கோனியை சுற்றியுள்ள வலதுசாரி எதிர்க்கட்சியுடன் இணைந்து வாக்களிக்க இருப்பதாகவும் அச்சுறுத்தியுள்ளார்.

புதிய அரசாங்கத்திற்கு பெருகிய முறையில் எதிர்க்கட்சிகள் விரோத நிலைப்பாட்டைக் காட்டி வருகின்றன. Forza Italia என்னும் பெர்லுஸ்கோனியுடைய அமைப்பின் துணைத்தலைவரான பாவோலா ரொமானி "கம்யூனிஸ்ட் கட்சிகள் புரோடியை இறுக்கிப் பிடித்துள்ளன; பழிவாங்குவதில் Rifondazione குறியாக உள்ளது. மத்தியதர வகுப்பின் மீது சுமை அதிகரிக்கவேண்டும் என்று கூறப்படுகிறது; ஏனெனில் இவர்கள் செல்வம் உடைய குடிமக்களாக இருப்பதால் பழைய கம்யூனிஸ்ட்டுக்கள் சீற்றம் கொண்டுள்ளனர்." என கூறினார்.

செப்டம்பர் 28 அன்று புது பாசிச Alleanza Nationale தேசியக் கூட்டணி, Northern League மற்றும் Forzza Italia ஆகியவற்றின் உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் புரோடி பேசும்பொழுது உரக்கக் கூவி அவர் அறிவிப்பு ஒன்றைச் செய்யவிடாமல் தடுத்து விட்டனர். முந்தைய வாரம் எடுக்கப்பட்ட செனட் முடிவின்படி அவர் அன்று Telecom Italia வின் வருங்காலம் பற்றி அரசாங்கத்தின் நிலைப்பாடு பற்றி அறிவிப்பதாக இருந்தது.

வலதுசாரி மற்றும் தீவிர வலதுசாரி உறுப்பினர்களை கட்டுப்படுத்தும் பணி, உறுப்பினர்கள் மன்றத்தின் தலைவரான Fausto Bertinotti இடம் வந்தது; அவர்தான் முன்னாள் Rifondazione Comunistaவின் தலைவராக இருந்தவர். அவருடைய எட்டாவது முயற்சியில்தான் ஒழுங்கை அவரால் நிலைநாட்ட முடிந்தது புரோடி தான் எழுதிவைத்திருந்த அறிக்கையை படிக்க அனுமதிக்க முடிந்தது. இக்காட்சி இணையத்தில் வெளியிடப்பட்டது.

இதற்கு இருவாரங்கள் முன்பு, முன்பு பொது நிறுவனமாக இருந்த Telecom Italias, அரசாங்கம் அதன் பங்குகளின் பெரும்பான்மையைக் கொண்டு அதைக் கட்டுப்படுத்தியும் வந்திருந்தது, இப்பொழுது அதன் மொபைல் தொலைபேசிப் பிரிவை ஒரு வெளிநாட்டு நிறுவனத்திற்கு விற்கக்கூடும் என்று அறிவித்தது; புரோடி இதை இரகசியமான முறையில் தடுக்க முற்பட்டிருந்தார். அவருடைய குறுக்கீடு, இத்தாலிய முதலாளிகள் மற்றும் தீவிர வலதுசாரிக் கட்சிகளின் கடுமையான குறைகூறலை எதிர்கொண்டது.

செனட்டு மன்றத்தில் அண்மையில் விடுத்த அறிக்கையில் தொலைபேசி ஒற்றுக் கேட்டல் ஊழல் பற்றி எவ்வித விவரத்தையும் கொடுப்பதை புரோடி தவிர்த்துவிட்டார்; அதிலோ கடந்த வாரங்களில் பெருகிய பரந்த முறையில் பலர் தொடர்பு கொண்டிருந்தனர். இந்த ஊழல் வலதுசாரிக் குழுக்களின் நடவடிக்கைகளை பற்றிய பெரும் அழிவைத்தரக்கூடிய குற்றச்சாட்டுக்களை கொண்டிருந்தது; அவர்கள் இத்தாலிய அரசாங்க கருவில் பெரும் அதிகாரத்தைச் செலுத்துகின்றனர்.

மிலானில் இருக்கும் அரசாங்க வக்கீலின் அலுவலகம் தொலைபேசி பாதுகாப்புப் பிரிவின் தலைவரும் ஒரு முன்னாள் போலீஸ் அதிகாரியுமான குலியனோ டவரோலியன் ஒற்றர் வட்டம் பற்றி விசாரணை நடத்தி வருகிறது. பத்து ஆண்டுகளாக, டவரோலி தொலைபேசி உரையாடல்களை, சட்டம் மற்றும் போலீஸ் அதிகாரிகள் அலுவலகப் பதிவேடுகளில் இருக்கும் கணினித் தகவல் தொகுப்பில் இருந்து இணைத்து அவற்றை அதிக விலை கொடுப்போருக்கு விற்று வருகிறார். இவருடைய நடவடிக்கைகளுக்கு தேசிய இரகசிய உளவுத்துறை SISMI இன் துணைத் தலைவர் மார்கோ மன்சினி ஆதரவு கொடுத்துள்ளார். வணிகர்கள், அரசியல்வாதிகள், அறிவுஜீவிகள், மேலாளர்கள், விளையாட்டு வீரர்கள் என்று மொத்தத்தில் 100,000க்கும் மேற்பட்டவர்களை இவர்கள் ஒற்றுக் கேட்டுப் பதிவு செய்துள்ளனர்.

இதுவரை 25 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்; இதில் பொலிசார், வரி ஆய்வாளர்கள், மிலான் அரசாங்க வக்கீலின் செயலாளர் ஒருவர் ஆகியோரும் உள்ளனர். பல வீடுகள் சோதனைக்கு உள்ளாயின. மொபைல் இணையம் ஒன்றின் பாதுகாப்புப் பிரிவுத் தலைவரான Adamo Bove டூரின் அரசாங்க வக்கீலின் அலுவலகத்தின் இந்த ஒற்று ஊழலைப் பற்றித் தகவல் கொடுத்துள்ளார். அதைத் தொடர்ந்து அவர் நேபிள்ஸில் ஒரு பாலத்தில் இருந்து ஆற்றில் "குதித்து" மடிந்து போய்விட்டதாக அறிவிக்கப்பட்டது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved