World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Protest against killing and abductions in Sri Lanka

இலங்கையில் படுகொலைகள் கடத்தல்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டம்

By S. Jayanth
7 November 2006

Use this version to print | Send this link by email | Email the author

இலங்கையின் தலைநகரான கொழும்பில், நாட்டில் அதிகரித்துரும் கடத்தல்கள் மற்றும் படுகொலைகளுக்கு எதிராக கடந்த புதன் கிழமை நடந்த ஆர்ப்பாட்டத்தில் பல நூற்றுக்கணக்கானவர்கள் பங்கேற்றனர். கடத்தப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழ் இளைஞர்களாக இருப்பதோடு, இராணுவம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை உக்கிரப்படுத்தி வருகின்ற நிலையில், இந்த இளைஞர்கள் இராணுவத்தாலும் அதோடு சேர்ந்து இயங்கும் துணைப் படைகளாலும் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக அல்லது கொல்லப்பட்டுள்ளதாகவே நம்பப்படுகிறது.

ஆர்ப்பாட்டக்காரர்களில் பெரும்பாலானவர்கள் கடத்திச் செல்லப்பட்டவர்களின் உறவினர்களாவர். அவர்கள் கடத்தப்பட்டவர்களின் படங்களை சுமந்தவன்னம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் "கடத்தல்களுக்கு அரசாங்கமே பொறுப்பு," "காணாமல் போனவர்களை திருப்பிக் கொடு" போன்ற வாசகங்கள் உட்பட பல சுலோகங்களையும் கோஷித்தனர். மத்திய கொழும்பின் கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் நடந்த கூட்டத்தில், அரசாங்கம் கடத்தல்களை நிறுத்த வேண்டுமெனவும் காணாமல் போயுள்ள மற்றும் கொல்லப்பட்டுள்ள நூற்றுக்கணக்கானவர்களின் வழக்குகள் விசாரணை செய்யப்பட வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. காணாமல் போனவர்களை தேடியறியும் குழுவால் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது --இந்தக் குழு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் யுத்த எதிர்ப்பு குழுக்களினது கூட்டமைப்பாகும்.

அரசாங்கமும் இராணுவமும் இந்தப் படுகொலைகள் மற்றும் காணாமல் போன சம்பவங்களுக்கு பொறுப்பேற்க மறுத்த போதிலும், கண்கண்டவர்கள் மற்றும் கடத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் தரும் ஆதாரங்கள் பாதுகாப்புப் படையினரின் தலையீட்டை சுட்டிக்காட்டுகிறது. கடத்தல்காரர்கள் வண்ணந்தீட்டப்படாத ஆடைகளை அணிந்திருந்து எளிமையான ஆயுதங்களால் ஆயுதபாணிகளாகி இருந்ததோடு வெள்ளை வான்களில் வந்துள்ளனர். வெள்ளை வான்களைப் பயன்படுத்துவதானது 1980களின் கடைப் பகுதியில் பயங்கர ஆட்சியைக் கட்டவிழ்த்து ஆயிரக்கணக்கான கிராமப்புற சிங்கள இளைஞர்களை கொலை செய்த இராணுவத்தின் படுகொலைப் படைப் பிரிவுகளின் தரக்குறியீடாகும்.

இந்த ஆண்டில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கடத்தப்பட்டு அல்லது கொலை செய்யப்பட்டுள்ளனர். சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கடந்த 10 மாதங்களில் நாடு பூராவும் இருந்து கடத்தல்கள் சம்பந்தமான 350 க்கும் மேற்பட்ட முறைப்பாடுகளைப் பெற்றுக்கொண்டுள்ளது. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கடந்த செப்டெம்பர் மாதம் வரை 419 முறைப்பாடுகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

இந்த வருடம் கொழும்பு மற்றும் அதைச் சூழ்ந்த பிரதேசங்களில் 38 கடத்தல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த வழக்குகளில், 12 படுகொலைகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. நகரமும் மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளும் பாதுகாப்புப் படையினரின் கடுமையான கண்காணிப்பின் கீழ் உள்ளதோடு எல்லா பிரதான வீதிகளிலும் சோதனைச் சாவடிகள் உள்ளன. இதுவரையும் எந்தவொரு கடத்தல் நடவடிக்கையும் நிறுத்தப்படாததோடு பொறுப்பாளிகள் எவரும் கைதுசெய்யப்படவும் இல்லை. ஒருவர் எடுக்கக் கூடிய முடிவு என்னவெனில், சூத்திரதாரிகள் இராணுவத்திற்குத் தெரிந்தவர்கள், அவர்கள் வீதித் தடைகள் ஊடாக அனுமதிக்கப்படுகிறார்கள்.

கொழும்பில் இருந்து 20 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கொட்டாவையில், அக்டோபர் 25 அன்று டேவிட் விக்னேஸ்வரன், 35, மற்றும் அவரது மனைவி திருக்கேஸ்வரி விக்னேஸ்வரன், 30, ஆகியோர் கடத்தப்பட்டுள்ளனர். அதே தினம் துப்பாக்கிச் சன்னங்கள் துளைத்த அவர்களது சடலங்கள் கொட்டாவைக்கு அருகில் கண்டெடுக்கப்பட்டன. இருவரும் ஒரு தனியார் பாலர் பாடசாலையின் ஆசிரியர்களாவர். அதே தினம் இரவு கொழும்பு நகரின் அலுத் மாவத்தையில், ரெஜி பாலநாதன், 30, கடத்தப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது சடலம் ராகம பிரதேசத்தில் வீதியோரத்தில் வீசப்பட்டிருந்தது.

அக்டோபர் 28 அன்று மத்திய கொழும்பின் கிரன்ட் பாஸில் இருந்து வாடகை வாகன சாரதியான சக்திவேல் தியாகராஜா, 25, காணாமல் போனமையும் கொழும்பில் மிக அண்மையில் நடந்த சம்பவங்களில் ஒன்றாகும். அவரது வாகனம் பின்னர் கொழும்புக்கு அருகில் பேலியகொடையில் கைவிடப்பட்டிருந்தது. அதே தினம், கொழும்பு வடக்கில் காக்கைத்தீவில் இருந்து ஒரு இளம் தமிழ் யுவதி காணாமல் போயுள்ளார். மாரிமுத்து சுப்பிரமனியம், 55, அக்டோபர் 30 அன்று கொட்டாஞ்சேனையில் இருந்து கடத்தப்பட்டார்.

செப்டெம்பர் கடைப் பகுதியில் பூபாலபிள்ளை காந்தராஜா கைது செய்யப்பட்டமையானது கடத்தல்களில் அரசாங்கத்திற்கு சார்பான துணைப்படை சம்பந்தப்பட்டிருப்பது அம்பலத்திற்கு வந்துள்ளது. சதாசிவம் குமாரசாமி என்ற ஒரு வர்த்தகரைக் கடத்தி அவரது மகனிடம் கப்பப் பணம் பெற முயற்சித்த போதே கொழும்பு கொட்டாஞ்சேனை பொலிஸாரால் காந்தராஜா கைது செய்யப்பட்டார். அவர் புலிகளில் இருந்து பிரிந்து சென்று இப்போது இராணுவத்துடன் சேர்ந்து புலிகளுக்கு எதிராக செயற்படும் "கருணா குழு" உறுப்பினர் என்பதை அவர் ஒப்புக்கொண்டார். கருணா குழுவின் பேச்சாளரும் கூட காந்தராஜா தமது உறுப்பினர் என்பதை ஏற்றுக்கொண்டுள்ளார்.

இந்த அறிக்கைகளுக்கு மத்தியிலும், அரசாங்கம் எந்தவொரு ஆதாரமும் காட்டாமல் காந்தராஜா ஒரு புலி உறுப்பினர் என இன்னமும் கூறிக்கொள்கிறது. கடத்தல்கள் தொடர்பாக அதிகரித்துவரும் ஆதாரங்களை நிராகரித்த பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய இராஜபக்ஷ, "இந்தக் கடத்தல்கள் அரசாங்கத்தினதும் மற்றும் சட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரிகளதும் நன்மதிப்பை கலங்கப்படுத்தும் எண்ணத்துடன் முன்னெடுக்கப்படுகிறது," எனப் பிரகடனம் செய்தார்.

பொலிஸ் பின்னர் கொழும்புக்கு வெளியில் தலங்கம பிரதேசத்தில் ஒரு குடியிருப்புப் பகுதியில் ஒரு இரகசிய வீட்டைக் கண்டுபிடித்து சோதனை செய்தது. காந்தராஜா தான் கடத்தியவரை இந்த வீட்டிலேயே வைத்திருந்தார். சண்டே லீடர் பத்திரிகையின்படி, அந்த வீட்டில் நடக்கும் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் பற்றி உள்ளூர் பொலிஸ் நிலையத்தில் பல குடியிருப்பாளர்கள் முறைப்பாடு செய்திருந்த போதிலும், பொலிஸ் அதிகாரிகள் அந்த வீட்டில் இருப்பவர்கள் கருணா குழு உறுப்பினர்கள் என்பதால் எவரும் கவலைப்படத் தேவையில்லை எனக் கூறியுள்ளனர்.

கடத்தல்களும் படுகொலைகளும், ஆத்திரத்தையும் வேதனையையும் கிளறிவிடுவதற்கான அறிகுறியே கடந்த வார ஆர்ப்பாட்டமாகும். சர்வதேச மன்னிப்புச் சபை மற்றும் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு உட்பட சர்வதேச மற்றும் இலங்கை மனித உரிமைகள் குழு, இந்தப் படுகொலைகளையும் கடத்தல்களையும் கண்டனம் செய்துள்ளதோடு, இதுபற்றி விசாரணை செய்யுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளன.

ஆகஸ்ட் முற்பகுதியில், பிரான்ஸை தளமாகக் கொண்ட அக்ஷன் பாம் தொண்டு நிறுவனத்தின் 17 ஊழியர்கள் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டமை சர்வதேச ரீதியில் மக்களின் சீற்றத்தை தூண்டியது. புலிகள் தற்காலிகமாக கைப்பற்றிய கிழக்கு நகரான மூதூரை இராணுவம் மீண்டும் கைப்பற்றிய போது இந்தப் படுகொலைகள் நடந்துள்ளன. அப்போது இலங்கைக் கண்காணிப்புக் குழுவின் தலைவராக இருந்த உல்ஃப் ஹென்றிக்ஸன், இந்தப் படுகொலைகளுக்கு இராணுவமே பொறுப்பு என தீர்ப்புக் கூறியிருந்தார்.

சோசலிச சமத்துவக் கட்சியும் மற்றும் உலக சோசலிச வலைத் தளமும், சோ.ச.க. ஆதரவாளரான சிவிப்பிரகாஸம் மரியதாஸைப் படுகொலை செய்தவர்களைக் கைது செய்து வழக்குத் தொடருமாறு கோரி ஒரு சர்வதேசப் பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளது. அவர் ஆகஸ்ட் 7 அன்று, திருகோணமலைக்கு அருகில் முல்லிப்பொத்தானையில் உள்ள அவரது வீட்டில் வைத்து கொல்லப்பட்டார். இதில் பலமான சூழ்நிலை ஆதாரங்கள் பாதுகாப்புப் படைகளின் தலையீட்டை சுட்டிக்காட்டுகின்றன.

அரசாங்கமும் இராணுவமும் உள்நாட்டு யுத்தத்தை உக்கிரப்படுத்துகின்ற நிலையில், இந்த அனைத்துப் படுகொலைகள் மற்றும் கடத்தல்களின் குறிக்கோள் வெகுஜனங்களை குறிப்பாக தமிழர்களை அச்சுறுத்துவதை இலக்காகக் கொண்டதாகும். எல்லாவற்றுக்கும் மேலாக, யுத்தத்திற்கு எதிரான மரியதாஸ் போன்ற அரசியல் எதிரிகளுக்கு எதிராகவே இந்தப் பயங்கரவாதப் பிரச்சாரம் திருப்பிவிடப்பட்டுள்ளது.