World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ரஷ்யா மற்றும் முந்தைய USSR

Russia moves toward military conflict with Georgia

ஜோர்ஜியாவுடன் இராணுவ மோதலை நோக்கி ரஷ்ய நகர்வு

By Vladimir Volkov
30 October 2006

Back to screen version

அக்டோபர் 25 அன்று நாடுமுழுவதும் ஒளிபரப்பப்பெற்ற "ரஷ்ய மக்களுடன் பேச்சு" என்பதில் ஜனாதிபதி புட்டின், அப்காஜியா மற்றும் தெற்கு ஒசிடியா என்னும் ஜோர்ஜியாவில் உள்ள தன்னாட்சி மாநில நிர்வாகங்களை, ஜோர்ஜியா இராணுவத்தாக்குதல் நடத்தினால் அவற்றைப் பாதுகாக்கும் என்ற அவருடைய ஆட்சியின் விருப்பத்தை உறுதிப்படுத்தினார்.

"ஜோர்ஜியா இராணுவமயமாக்கப்படுவது பற்றி நாங்கள் கவலை கொண்டுள்ளோம்" என்று புட்டின் அறிவித்து, இருநாடுகளுக்கும் இடையே சமீபத்தில் அழுத்தங்கள் தீவிரமாகி இருப்பதற்கு மிகையீல் சாகேஷ்விலியின் டிபிலிசி (Tbilisi) ஆட்சிதான் காரணம் என்று குற்றம் சாட்டினார். "ரஷ்ய-ஜோர்ஜிய உறவுகள் சீர்குலைவதற்கு தெற்கு ஒசிடியா மற்றும் அப்காஜியா பிரச்சினைகளை வலிமையினால் தீர்க்கப்படுவதற்கான தயாரிப்புக்கள்தான் நேரடிக் காரணம்" என்றும் புட்டின் தொடர்ந்து கூறினார்.

உண்மையில் அமெரிக்க ஆதரவுடன் மாஸ்கோவுடன் அழுத்தங்களை டிபிலிசி அதிகரித்துக் கொண்டுதான் வருகிறது. ஆனால் மாஸ்கோ ஒரு நிரபராதியான பாதிப்பளார் என்று புட்டின் சித்தரிக்க முற்பட்டுள்ளது மிகவும் வெகுளித்தனமானது. ஜோர்ஜியாவில் இருக்கும் இரு சிறிய தன்னாட்சிப் பகுதிகளிலும் உள்ள பிரிவினைவாத ஆளும் உயரடுக்குகளுக்கு கிரெம்லின் ஊக்கத்துடன் ஆதரவு கொடுத்து, காகசஸ் பகுதியில் அதன் சொந்த செல்வாக்கைக் காப்பதற்கும் மற்றும் விரிவுபடுத்துவதற்கும் அவற்றைப் பயன்படுத்தி வருகிறது; காகசஸ் பகுதி புவி-அரசியல் வகையில் மிக முக்கியமான பகுதியில், காஸ்பியன் மற்றும் மத்திய ஆசிய எண்ணெய், எரிவாயு இருப்புக்களுக்கு முக்கிய சக்தி (Energy) மற்றும் வணிகம் ஆகியவை ஏற்றுமதி நடக்கும் வழிகளில் அமைந்துள்ளது.

அமெரிக்காவினால் நிதியுதவி, மற்றும் ஆயுத உதவி பெற்று வரும் டிபிலிசி தன்னுடைய கட்டுப்பாட்டை அப்காஜியா மற்றும் தெற்கு ஒசிடியா மீது மீண்டும் வலியுறுத்தத் தயாராகவரும் நிலையில், ரஷ்ய இந்த முயற்சிகளைத் தடுத்து தோல்வி அடையச் செய்வதில் ஈடுபடத் தயாராகிவிட்டது. ரஷ்யவிற்குள்ளேயே, இப்பகுதிகளில் சுதந்திரம் அங்கீகரிக்கப்பட வேண்டியது பற்றி அரசியல் விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன; ரஷ்ய ஆளும் உயரடுக்கிற்குள் தீவிர வலதுசாரி தேசியவாதத்தை வளர்க்க கருதும் வட்டங்கள் லெபனானை இஸ்ரேல் நடத்தியது போல் ஜோர்ஜியாவை ரஷ்யா நடத்த உரிமை உள்ளது என்று அறிவித்துள்ளன.

ஜோர்ஜியா மீது குண்டுவீச்சு நடவடிக்கையும், ரஷ்யப் படைகள் தற்காலிகமாக ஆக்கிரமிப்பை அங்கு கொள்ள வேண்டும் என்றும் அவை ஆலோசனை கூறியுள்ளன. அவர்கள் கருத்தின்படி, இத்தகைய நடவடிக்கை ஜோர்ஜியாவின் தற்போதைய ஆட்சியை குறைமதிப்பிற்கு உட்படுத்தி, உலக அரங்கில் ரஷ்யவின் அதிகாரத்தை "இறைமையான அரசு" என்ற வகையில் தேவையான எந்த நடவடிக்கைகளையும் எடுத்து தன்னுடைய தேசிய நலன்களை காப்பாற்றிக்கொள்ள இயலக்கூடியதாக இருப்பதை உயர்த்தி இருக்கிறது என்பதாகும்.

இத்திட்டத்திற்கு கிரெம்ளின் இதுகாறும் உத்தியோகபூர்வமாக ஆதரவு கொடுக்கவில்லை. தொலைக்காட்சியில் தோன்றியபோது, "எமது நிலப்பகுதியை விரிவாக்கும் நோக்கம் நமக்கு கிடையாது; சோவியத் ஒன்றியம் உடைந்த பின்னரும், ரஷ்ய உலகின் மிகப்பெரிய நாடாக உள்ளது. நம்மிடம் இருக்கும் நிலப்பரப்பு போதுமானது..." என்று புட்டின் குறிப்பிட்டார்.

ஆனால் இத்தகைய சொற்கள் வெளிவந்தாலும், நிகழ்வுகளின் தர்க்கமோ காகசஸ் பகுதியில் பெருகிவரும் உறுதியற்ற தன்மை, மற்றும் குருதி கொட்டும் மோதல்கள் வரக்கூடிய நிலை உள்ளது என்பதைத்தான் காட்டுகிறது.

ஜோர்ஜியாவிற்கு எதிரான பிரச்சாரம்

செப்டம்பர் கடைசியில் நான்கு ரஷ்ய இராணுவ அதிகாரிகள் கைது செய்யப்பட்டமை, மற்றும் அவர்கள் ஒற்றர்கள் என்று ஜோர்ஜியா குற்றம் சாட்டியது தற்போதைய அழுத்தங்களை உயர்த்திக் காட்டியுள்ளன. ரஷ்யா இதை கடுமையாக, உடனே கொண்ட எதிர்கொண்டவிதம், மாஸ்கோ ஆட்சி ரஷ்யாவிற்குள் ஜோர்ஜிய எதிர்ப்பு உணர்வை ஆக்கிரோஷமாக ஆக்குவதற்கான தன்மையை தொடக்குவதற்கு தக்க காரணத்திற்கு காத்திருக்கிறது, மற்றும் அப்காஜியா மற்றும் தெற்கு ஒசிடியாவில் உள்ள பிரிவினைவாதத்திற்கு ஆதரவு கொடுப்பதற்குத் தான் தயாராக உள்ளது, இத் துண்டுப் பகுதிகளின் "சுதந்திரத்தை" அங்கீகரிக்கத் தயாராக இருக்கிறது என்பதை உலகிற்கு காட்டத்தயார் என்பதைத்தான் வெளிப்படுத்தியது.

ரஷ்ய பாதுகாப்பு மந்திரி சேர்ஜி இவனோவ் கடந்த செப்டம்பர் கடைசியில் 26 நேட்டோ நாடுகளின் பாதுகாப்பு மந்திரியுடன் ஸ்லோவேனியாவில் பேச்சுவார்த்தைகள் நடத்துகையில், டிபிலிசி அரசாங்கத்தை ஒரு "கொள்ளைக்கார" ஆட்சி என்று முத்திரையிட்டு ஜோர்ஜியாவிற்கு ஆயுதங்களை நேட்டோ வழங்குவதாகவும் குற்றம் சாட்டினார். அக்டோபர் முற்பகுதியில் புட்டின் ஜோர்ஜிய அரசாங்கத்தை "ஒரு பயங்கரவாத நிர்வாகம்" என்று அழைத்து சாகேஷ்விலியின் நடவடிக்கைகளை லாவரென்டி பெரியாவுடன் (Lavrenty Beria) ஒப்பிட்டுப் பேசினார்.

இந்த ஒப்புமை மேலோட்டமானது மற்றும் முரண்பாடானது. சோவியத் சர்வாதிகாரி ஸ்ராலினின் வலதுகையாக பெரியா இருந்தார்; இன்று ஸ்ராலின் கிரெம்ளினால் பெரிய அரசியல் மூதறிஞர் என்றும் இரண்டாம் உலகப்போரில் வெற்றிவாகை சூடியவர் என்றும் புகழப்படுகிறார். ஜோர்ஜிய ஜனாதிபதியை பெரியாவிற்கு ஒப்புமை கூறுதல் என்பது கிரெம்ளின் சீற்றத்தின் அளவையும், விரோதிகள் எனக் கருதப்படுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க அது தயாராக இருப்பதையும்தான் நிரூபிக்கிறது.

தன்னுடைய அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டதற்கு ரஷ்யவின் எதிர்விளைவு முன்னோடியில்லாத வகையில் பல நடவடிக்கைகளை எடுத்து ஜோர்ஜியாவில் இருந்து ரஷ்யாவில் வந்து வசிக்கும் குடிமக்களைத் தாக்குதல் மற்றும் தொல்லைக்காளாக்குதல் மற்றும் ரஷ்ய பேரினவாதத்தை எரியூட்டுவதுமான வடிவத்தை எடுத்தது. போக்குவரத்து மற்றும் அஞ்சல் தொடர்புகள் அனைத்தையும் ரஷ்யா ஜோர்ஜியாவோடு நிறுத்திவிட்டு, குடியேற்றச் சட்டங்களை மீறுகின்றனர் என்பது போன்ற குற்றச்சாட்டுக்களை சுமத்தி நூற்றுக்கணக்கான ஜோர்ஜிய குடிமக்களை வெளியேற்றியது.

ரஷ்யாவில் ஜோர்ஜியாவின் தூதராக இருக்கும் ஜூரப் பாடரட்ஜே, இன்டர்பாக்ஸ் என்னும் செய்தி நிறுவனத்தால் பேட்டி காணப்பட்டபோது, மாஸ்கோ, செயின்ட் பீட்டர்ஸ்பர்க் இன்னும் மற்ற நகரங்களில் வசிக்கும் ஜோர்ஜியாவில் இருந்து வந்த 800 குடிமக்கள் ஜோர்ஜியாவிற்கு அனுப்பப்பட்டதாகத் தெரிவித்தார். பாடரட்ஜே கருத்தின்படி கிரெம்ளின் அதிகாரிகள் இன்னும் 2,100 பேரை வெளியேற்றத் தயாராக உள்ளனர்.

ரஷ்ய அதிகாரிகளை ஜோர்ஜியா கைது செய்த சில நாட்களுக்குள்ளேயே, டிபிலிசியில் இருந்த ரஷ்ய தூதரக அதிகாரிகள் பெரும்பாலானவர்கள் மாஸ்கோவிற்குத் திருப்பி அழைக்கப்பட்டுவிட்டனர். அதே நேரத்தில் டிபிலிசியில் இருந்த ரஷ்ய தூதரகங்கள் ஜோர்ஜிய குடிமக்களுக்கு ரஷ்யவிற்கு வருவதற்கான விசாங்கள் வழங்குவதையும் நிறுத்திவிட்டது; ரஷ்யவின் வெளியுறவு அமைச்சரகம் ரஷ்யர்களை ஜோர்ஜியாவிற்கு பயணிக்க வேண்டாம் என்று உத்தரவிட்டுள்ளது. ரஷ்ய நாட்டின் டுமா (பாராளுமன்றம்) ரஷ்ய வங்கிகள் மூலம் ஜோர்ஜியாவிற்கு பணமாற்று செய்தல் அனைத்தையும் தடுத்து விரைந்து ஒரு சட்டத்தையும் இயற்றியது.

மாஸ்கோவில் "ஜோர்ஜியநாட்டுக் குற்றவாளிகளின்" கட்டுப்பாட்டிற்கு உட்பட்டவை என்று ரஷ்ய அதிகாரிகளால் கருதப்படும் Kristall, Golden Palance, Golen Palace Weekend சூதாட்ட காசினோக்கள் மூடப்பட்டுவிட்டன.

மாஸ்கோவில் உள்ள பொதுப்பள்ளிகள் ஜோர்ஜிய கடைசிப் பெயர் உடையவர்கள் பட்டியலை தொகுத்துக் கொடுக்குமாறு உத்தரவு இடப்பட்டுள்ளதாகவும், சில மாஸ்கோ புத்தக விற்பனையாளர்கள் "அரசியலளவில் தவறான" குடும்பப் பெயர்களை குறித்திருக்கும் ஆசிரியர்களின் நூல்களை விற்பனை செய்யாமல் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளதாகவும் செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த கறுப்புப் பட்டியலில் புகழ்பெற்ற கவிஞரும் பாடகருமான Bulat Okudzhava மற்றும் துப்பறியும் நாவல்கள்-புகழ் போரிஸ் அகுனின் (Chkhasrtishvili) ஆகியோர் உள்ளனர்.

இந்த வெறித்தனமான ஜோர்ஜிய-எதிர்ப்பு பிரச்சாரம் ரஷ்யவிற்குள்ளேயே எதிர்ப்பை தூண்டியுள்ளது. புகழ்பெற்ற திரைப்பட நடிகர் ஸ்டானிஸ்லவ் சடால்ஸ்கி ஜோர்ஜியா அவருக்கு ஜோர்ஜிய குடியுரிமை வழங்குமாறு கோரியுள்ளார். கலைஞர்கள், எழுத்தாளர்கள் குழு ஒன்று "ரஷ்யாவின் இனவழித் தூய்மை கூடாது. மற்றொரு போர் காகசசில் நடக்கக் கூடாது" என்ற தலைப்பில் முறையீடு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இந்த முறையீட்டை எழுதியவர்கள், அவர்கள் குடியுரிமை, வயது, சமூக அந்தஸ்து" ஆகியவற்றை பாராமல் ஜோர்ஜியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை, ஒரு தேசியப் பெரும் சோகம் என்று கண்டித்துள்ளனர். இதில் கையெழுத்திட்டவர்களுள் நடிகை Lia Akhedzhakova, வரலாற்றாளர் Leonid Batkin, செய்தியாளர் Artemy Troitsky, நடிகை Inna Chuikova, நடிகர் Sergey Yursky ஆகியோர் அடங்குவர்.

ரஷ்ய பொருளாதார அழுத்தம்

2003 இலையுதிர்காலத்திற்கு பின்னர் டிபிலிசியில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தில் இருந்தே அழுத்தங்கள் தொடர்ந்து பெருகிக் கொண்டிருக்கின்றன; அந்த மாற்றமும் அமெரிக்காவால் நிதி உதவி செய்யப்பட்டு, அரசியல் ஆதரவையும் பெற்றது. அந்த நேரத்தில் சாகேஷ்விலியை சுற்றியிருந்த இளம் அரசியல் வாதிகள் ஜனாதிபதி எடுவார்ட் ஷவர்நாட்ஷேயிடம் இருந்து அதிகாரத்தை அகற்றி அட்லாண்டிக் கடந்துவந்த ஆதரவை முற்றிலும் நம்பி ஓர் ஆட்சியை நிறுவினர். இவர்கள் வெளிப்படையாக காகசஸிலும் காஸ்பியன் பகுதியிலும் அமெரிக்க செல்வாக்கு விரிவாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தை வெளிப்படையாக தொடர்ந்தனர்.

இந்தப் பூசல் கடந்த ஆண்டு குறிப்பிடத்தக்க வகையில் வளர்ந்துள்ளது. டிசம்பர் 2005ல் ரஷ்ய ஜோர்ஜியாவில் இருந்து வரும் உயிரியல் தாவரங்கள் இறக்குமதி மீது வரம்புகளை விதித்தது; சுகாதார விதிகளை அவை மீறுவதாக உள்ளன என்ற காரணம் கூறப்பட்டது; மார்ச் 2006ல் விதைகள் கொண்டுவரப்படுவது, இறக்குமதி செய்யப்படுவது ஆகியவற்றையும் நிறுத்தியது.

மார்ச் கடைசியில், ரஷ்ய ஜோர்ஜிய மதுவகைகளான வைன், கொனெயாக் மற்றும் சாம்பெயின் ஆகியவை வாங்கப்படுதலை தடை செய்தது. இதன் விளைவாக ஜோர்ஜியா $700 மில்லியன் இழப்பிற்கு பொருளாதார சேதத்தைக் கண்டது என்று வல்லுனர்கள் மதிப்பிட்டுள்ளனர். மே மாதம் ஜோர்ஜியாவில் இருந்து வரும் புட்டியிலடைக்கப்பட்ட குடிநீரும் தடை விரிவிற்கு உள்ளாகியது; இது இன்னும் கூடுதலான ஜோர்ஜிய பொருளாதாரத்திற்கு ஆண்டு ஒன்றுக்கு 150 மில்லியன் டாலர்கள் இழப்பை ஏற்படுத்தியது.

ஜோர்ஜியா மீது ஆற்றல் (Energy) முடக்கத்தையும் கொண்டுவரலாமா என்பது பற்றி ரஷ்ய அரசாங்கத்திற்குள் விவாதங்கள் நடக்கின்றன. கடந்த குளிர்காலத்தில் நிகழ்ந்த ஒரு பெரும் வெடிப்பால் ரஷ்யாவில் இருந்து ஜோர்ஜியாவுக்கு செல்லும் எரிவாயுக் குழாய்களுள் ஒன்று தற்காலிகமாக மூடப்பட்டுவிட்டது. சில நாட்களுக்கு இயற்கை எரிபொருள் அளிப்புக்கள் தடைக்கு உட்பட்டன; ஜோர்ஜிய மக்கள் பலர் போதிய வெப்பம் இன்றித் தவித்தனர். அந்நேரத்தில் டிபிலிசி இந்த வெடிப்பிற்கு ரஷ்யாதான் உடந்தையாக இருந்தது என்று குற்றம் சாட்டியது.

ஜோர்ஜியாவை பொறுத்தவரையில் அதன் ஆற்றல் தேவைகளில் 40 சதவிகிதத்தைத்தான் உற்பத்தி செய்ய முடிகிறது. எஞ்சியவை முன்னாள் சோவியத் குடியரசுகளில், முக்கியமாக ரஷ்யாவில் இருந்து வரவேண்டும். ஜோர்ஜியாவிற்கு எதிராக ஆற்றல் தடை கொண்டுவருவதற்கு எதிரான ஒரு கருத்து அது நட்பு பகுதியான ஆர்மினியாவையும் பாதிக்கும் என்பதுதான்; ஜோர்ஜிய பகுதியை கடந்துதான் அது ஆற்றலைப் பெற முடியும்.

இராணுவத் தயாரிப்புக்கள்

சாகேஷ்விலி பதவிக்கு வந்ததில் இருந்தே ஜோர்ஜியா தன்னுடைய இராணுவ வலிமையைப் பெருக்கிக் கொண்டு வந்துள்ளது. ஜோர்ஜிய இராணுவ பட்ஜெட்டில் இராணுவத்திற்கான செலவினங்கள் உலகிலேயே 2005ம் ஆண்டில் அதிக சதவிகிதமாக இருந்தது. அமெரிக்கா 2007ம் ஆண்டிற்கு மில்லியன் கணக்கான டாலர்களை ஒதுக்கி, ஜோர்ஜியாவின் இராணுவத்திற்கு கருவிகளை கொடுத்துள்ளது.

கடந்த கோடைகாலத்தில், ஜோர்ஜியா தன்னுடைய இராணுவக் கட்டுப்பாட்டை அப்காஜியப் பகுதியான கோடோர் கோர்ஜ்ஜின் மீது பரப்பியது. இன்னும் கூடுதலாக முன்னேற சாகேஷ்விலி விரும்புகிறார் என்ற சந்தேகத்தை இது வலுப்படுத்தியது. கோடோர் கோர்ஜில் உள்ள ஜோர்ஜிய இராணுவப் படைகள் அப்காஜியாவிற்கு எதிராக இராணுவ நடவடிக்கைகளுக்கு தயார் நிலையில் உள்ளதாக ரஷ்ய செய்தி ஊடகத் தகவல்கள் கூறின.

கடந்த செவ்வாயன்று, ஜனாதிபதி சாகேஷ்விலி ஒரு புதிய இராணுவத் தளத்தை மத்திய ஜோர்ஜியாவில் தொடக்கி வைத்தார். அடுத்த மே மாதம் மற்றொரு தளத்தை கோரி நகரத்தில் திறந்துவைக்க இருப்பதாகவும் அவர் அறிவித்தார்; அது ஜோர்ஜியா நேட்டோ உறுப்பினராவதற்கான அனைத்துத் தேவைகளையும் நிறைவு செய்யும் என்றும் அவர் கூறினார். புதிய தளம் பிரெஞ்சு உதவியுடன் கட்டப்பட்டது ஆகும். திறப்பு விழாவிற்கு ரஷ்ய எதிர்ப்பு நடவடிக்கைள் மூலம் நன்கு அறியப்பட்டுள்ள ரிச்சர்ட் லுகரின் தலைமையில் ஓர் அமெரிக்க சட்டமன்ற பிரதிநிதிகள் குழு வந்திருந்தது.

ஜோர்ஜியாவின் வெளி விரோதிகள் பற்றி சாகேஷ்விலி அடிக்கடி பேசி வருகிறார்; "நாடு முற்றிலும் பாதுகாப்பான அமைப்பை நிறுவ வேண்டும்" என்று அவர் கூறினார்.

Izvestiia வில் வெளிவந்துள்ள தகவல்களின்படி கடந்த ஆண்டு ஆரம்பத்தில் இருந்து ஜோர்ஜியா கிழக்கு ஐரோப்பிய நாடுகளிடம் இருந்து டாங்குகள், போர்விமானங்கள் மற்றும் வெடிமருத்துகள் ஆகியவற்றை பெற்று வருகிறது. இத்தளவாடங்களை கொடுக்கும் நாடுகளுள் உக்ரைனும் பால்டிக் நாடுகளும் உள்ளன.

தன்னுடைய இராணுவ வலிமையை இப்பகுதியில் ரஷ்யாவும் விரிவாக்கிக் கொண்டுள்ளது. தொலைக்காட்சித் தோன்றலில் ஜனாதிபதி புட்டின் இந்த ஆண்டு இறுதிக்குள் ரஷ்ய கிட்டத்தட்ட $500 மில்லியனை காஸ்பிய, கருங்கடல் பகுதிகளுக்கு இடையே உள்ள எல்லைகளை வலிமைப்படுத்தும் வகையில் செலவிடத் திட்டம் கொண்டுள்ளதாகக் கூறினார்.

இதைத்தவிர கருங்கடல் பகுதியில் உள்ள தன்னுடைய கடற்படைகளையும் ரஷ்யா வலுப்படுத்திக் கொண்டுள்ளது. இம்மாத தொடக்கத்தில் அங்கு ரஷ்ய கடற்படை பயிற்சிகளை நடத்தியது; ஜோர்ஜிய நோக்கர்களின் கருத்தின்படி, இது ஜோர்ஜியாவின் பொருளாதராப் பகுதியில் ஊடுருவல் ஆகும்.

அதே நேரத்தில், ரஷ்யா கிறிமேயா பகுதியில் உள்ள தன்னுடைய கடற்படைகளை பெருக்க தயாராக இருப்பதையும் அறிவித்துள்ளது. அண்மையில் ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இப்பகுதியில் கலங்கரை விளக்குகள் நிறுவுதல், செயல்படுத்துதல், பற்றி பூசல்கள் எழுந்துள்ளன; செபஸ்டாபூலில் உள்ள உக்ரைனின் கடற்படை தளத்தை பயன்படுத்துவதற்கு கொடுக்க வேண்டிய வாடகை பற்றியும் பிரச்சினை எழுந்துள்ளது. ஆனால் அதிகார மையம் கீவில் யுஷ்செங்கோவிடம் இருந்து அவருடைய மாஸ்கோ சார்புடைய போட்டியாளர் யானுகோவிச்சிற்கு நகர்ந்தபின், கருத்து வேறுபாடுகளும் மறைந்து போயின. இரு நாடுகளும் ரஷ்யா உக்ரைனுக்கு ஏற்றுமதி செய்யும் எரிவாயுவின் விலையை ஆயிரம் கியூபிக் மீட்டருக்கு 135 டாலர்கள் என்று ஒப்புக் கொண்டன; மேலும் செபஸ்டாபூல் வாடகை 1997 உடன்பாட்டின் அடிப்படையில், அதாவது ஆண்டு ஒன்றிற்கு 93 மில்லியன் டாலர்கள் என இருத்தப்பட்டது.

காகசஸ் பகுதியில் செல்வாக்கிற்கான போராட்டம்

மோல்டாவோவில் Dnestr பகுதி, மற்றும் ஜோர்ஜிய மாநிலங்களான அப்காஜியா மற்றும் தெற்கு ஒசிடியா என்று மூன்று அங்கீகரிக்கப்படாத தன்னாட்சிப் பகுதிகள் தொடர்ந்து ரஷ்யாவின் ஆதரவிற்கு முறையிடுகின்றன. செப்டம்பர் மாதம் ஒரு வாக்கெடுப்பு Dnestr பகுதியில் நடத்தப்பட்டது; அதில் பெரும்பாலானவர்கள் ரஷ்யாவுடன் நெருக்கமான உறவுகள் வேண்டும் என்று வாக்களித்தனர்.

அக்டோபர் மாத நடுப்பகுதியில் அப்காஜியாவில் தேசிய சட்டமன்றம் ரஷ்ய தலைவர்களிடம் தங்கள் குடியரசை அங்கீகரித்து ரஷ்ய கூட்டமைப்பிற்கும் அப்காஜிய குடியரசிற்கும் இடையே நெருக்க தொடர்புகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் முறையிட்டனர்.

இதையொட்டி தெற்கு ஒடிசியாவில் நவம்பர் 12ம் தேதி ஒரு வாக்கெடுப்பு நடைபெற உள்ளது; இதன் முடிவுகள் இப்பகுதியில் ரஷ்யாவிற்கு ஆதரவு பெருகியுள்ளது என்பதற்கு மற்றொரு அடையாளத்தை காட்டும்.

இந்த குடியரசுகளின் சுதந்திரத்தை அங்கீகரிப்பது பற்றிய திடீர் நடவடிக்கைகள் எடுப்பதில் கிரெம்ளின் சற்று எச்சரிக்கையுடன் உள்ளது; ஏனெனில் மேலை நாடுகளின் எதிர்மறை விளைவுகளை இது தூண்ட விரும்பவில்லை. இதுகாறும் உத்தியோகபூர்வ ரஷ்ய கொள்கை சேர்பியாவில் இருந்து கொசோவோவின் சுதந்திரம் ஐரோப்பாவால் அங்கீகரிக்கப்படும் வரை பொறுத்திருக்க வேண்டும்; பின்னர் அதைப் ஒரு சட்டரீதியான போலிக் காரணமாக பயன்படுத்தி, இந்த மூன்று தன்னாட்சிப் பகுதிகளிலும் தன்னுடைய உறவுகளை மாற்றிக் கொள்ளலாம் என்று அது கருதுகிறது.

ஆனால் இப்பொழுது கிரெம்ளின் விரைவாக செயல்படும் வகையில் கட்டாயப்படுத்தப்படலாம். கடந்த இரு மாதங்களில் ரஷ்ய தலைமை அமெரிக்க ஆற்றல் தேவைகளுக்கு பாதகமாக பல நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. குறிப்பாக ரஷ்யாவின் மிகப் பெரிய "Sakhalin-2" எண்ணெய், எரிவாயுத் திட்டம் கட்டப்படும்போது சுற்றுச்சூழல் நெறிகள் மீறப்பட்டதாக பிரச்சினை எழுந்தது. சாகாலின் சென்று வந்த பின் இயற்கை ஆதாரங்களின் மந்திரியான யூரி ட்ருட்நேவ் அத்தகைய மீறல்கள் குற்றவியல் தடைகளுக்கு வழிவகுத்துவிடும் என்று அறிவித்தார். முதலீடுகளைவிட அபராதங்கள் அதிகமாகப் போய்விடலாம்; வெளிநாட்டு நிறுவனங்கள் இதையொட்டி திட்டத்தில் மேலும் பங்கு பெறுவதில் இருந்து விலகிப் போகும் கட்டாயம் நேரிடலாம் என்றும் கூறினார்.

இந்த மாதம் ஜேர்மனிக்குச் சென்றிருந்தபோது, ஜனாதிபதி புட்டின், பாரென்ஸ் கடலில் இருக்கும் Shtokman வயல்களில் இருந்து கிடைக்கும் இயற்கை எரிவாயு அமெரிக்காவிற்கு செல்லாது என்றும் ஜேர்மனிக்கு செல்லும் என்றும் அறிவித்தார். இதையொட்டி ஐரோப்பாவில் முக்கிய எரிவாயு அளிக்கும் மையமாக ஜேர்மனி இருக்கும் என்றும் கூறினார்.

ஜோர்ஜியாவில் இருக்கும் நிலைமை Baku-Dzheikhan எண்ணெய் மற்றும் எரிவாயுக் குழாய்வழி திட்டத்தின் வருங்காலத்தையும் கடுமையாகத் தாக்கக் கூடும். திட்டம் செயல்பட்டாலும், இதன் பயன்பாடு மிகக் குறைவு; ஏனெனில் மாபெரும் கட்டமைப்புச் செலவுகளை மீறி அது இலாபம் காணமுடியுமா என்பது ஐயத்திற்கு உரியது. இலாபம் பெறவேண்டுமானால், காஜக்ஸ்தானும், துர்கமேனிஸ்தானும் தங்கள் ஆற்றல் இருப்புக்களை பாகு மூலம், ரஷ்யாவில் இருந்து புறத்தே, அனுப்ப வேண்டும். அத்தகைய நடவடிக்கை ரஷ்யாவின் "ஆற்றல் வல்லரசு" என்ற பெருமைக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துவிடும்.

அமெரிக்காவை பொறுத்தவரையில், டிபிலிசியில் இருக்கும் சாகேஷ்விலியின் ஆட்சி பிரிவினைவாதிகளை தோற்கடித்து, ஜோர்ஜியாவை ஒருங்கிணைப்பதில் வெற்றி அடைந்தால், Baku-Dzheikhan குழாய்த்திட்டத்தை வளர்க்கும் அமெரிக்க முயற்சிகளை அது அனுமதிக்கும்; மேலும் இதன் செல்வாக்கு முழுவதும் காகசஸ் மற்றும் காஸ்பியன் பகுதிகள் முழுவதிலும் பெருகும். ரஷ்யாவை பொறுத்தவரையில், ஜோர்ஜிய நாட்டை உறுதித் தன்மை அற்றதாக ஆக்கிவிட்டால், இப்பகுதியில் அமெரிக்க முயற்சிகளை தடுப்பது போல் ஆகிவிடும். இந்த நிலையில், ஏதேனும் ஒரு வகையில் இராணுவ மோதல் தவிர்க்கமுடியாமல் வரக்கூடும்.

இப்பகுதிகளை ஒருங்கிணைக்கும் தர்க்கம், முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் முழுப் பகுதியாக இருந்தவற்றை, உலக முதலாளித்துவச் சந்தையின் அமைப்புகளுக்குள் கொண்டுவருவது என்பது வெடித்து சீறிக் குருதி கொட்டும் விளைவுகளை ஏற்படுத்தும்; இயற்கை இருப்புக்கள் மற்றும் அரசியல் செல்வாக்கு இப்பகுதியில் விரிவாக்கப்பட வேண்டும் என்பதற்காக பெரும் வல்லரசுகள் போட்டியிடுவதில் இருந்து இது தோன்றும். இந்த சூழ்ந்து கொண்டிருக்கும் பேரழிவில் இருந்து காத்துக்கொள்ள ஒரு வழிதான் உள்ளது; இப்பகுதியில் இருக்கும் அனைத்து நாடுகளின் தொழிலாள வர்க்கமும் ஒரு சோசலிச சர்வதேசிய வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஒரு புரட்சிகர மற்றும் சுயாதீன இயக்கத்தைக் கட்டியமைக்க வேண்டும்.

1917 அக்டோபர் புரட்சி காகசஸில் தேசிய மற்றும் எல்லைப்புற தகராறுகள் தீர்க்கப்படுவதற்கான முன்னேற்ற வழியைக் காட்டியது. 1922ம் ஆண்டு ஜோர்ஜியா ரஷ்யக் கூட்டமைப்பில் ஒரு முழு, சம அந்தஸ்து பெற்ற உறுப்பினராக சேர்ந்தது. ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் கீழ் சோவியத் ஆட்சியின் அடுத்தடுத்த அதிகாரத்துவ சீரழிவு இந்த வரலாற்று அனுபவத்தை மறுதலிக்கவில்லை. அக்டோபர் புரட்சியின் ஊக்கமும் உந்துதலும் ரஷ்யாவிற்கும் ஜோர்ஜியாவிற்கும், மற்றும் இப்பகுதியில் இருந்த பல தேசிய இனவழிக் குழுக்களுக்கும் இடையேயான பதட்டங்கள் முற்போக்கான மற்றும் ஜனநாயக வழியில் கடக்கப்படக் கூடிய பாதையை சுட்டிக் காட்டியது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved