World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு

Israel used chemical weapons in Lebanon and Gaza

இஸ்ரேல் லெபனானிலும் காசாவிலும் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியது

By Jean Shaoul
24 October 2006

Back to screen version

கடந்த ஜூலை ஆகஸ்டில் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக காசாவில் அபாயகரமான அடர் உலோக ஏவுகணைகளை பயன்படுத்தியதாக இத்தாலிய தொலைக்காட்சி ஆவணச்சான்று நிகழ்ச்சி ஒன்றால் குற்றம் சாட்டப்பட்ட சிலநாட்களின் பின்னர், கடந்த கோடையில் நடத்த லெபனான் போரின் போது பொஸ்பரஸ் குண்டுகளை பயன்படுத்தியதாக இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது.

இலக்குகளை குறிவைக்க மட்டுமே பொஸ்பரஸ் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாக முன்பு கூறி வந்த இஸ்ரேல் அமைச்சர் ஜேக்கப் எட்ரி தற்போது, "ஹெஸ்பொல்லாவிற்கு எதிரான போரின் போது வெட்டவெளியில் இருந்த இராணுவ முகாம்களை தாக்க பொஸ்பரஸ் குண்டுகளை இஸ்ரேல் பயன்படுத்தியது" என்று கூறியிருக்கிறார்.

பொஸ்பரஸ் குண்டுகள் இரசாயன எரிகாயங்களை ஏற்படுத்துகின்றன. எனவே அவை இரசாயன ஆயுதங்களாக கருதப்பட வேண்டும் என்று செஞ்சிலுவைச் சங்கமும், மனித உரிமை அமைப்புகளும் கூறி வருகின்றன. பொதுமக்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் உள்ள இராணுவ முகாம்களை இராசயன ஆயுதங்களால் தாக்குவது ஜெனிவா ஒப்பந்தத்திற்கு ஏதிரானதாகும். பொதுமக்களுக்கு எதிராக இராசயன ஆயுதங்களைப் பயன்படுத்தியதற்காக சதாம் ஹுசைனை விசாரிக்க வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியிருக்கிறது.

சமீபத்திய சண்டையின் போது, பொஸ்பரஸ் குண்டுகள் உட்பட பல தடை செய்யப்பட்ட ஆயுதங்களை இஸ்ரேல் பயன்படுத்தியதாக லெபனான் அரசாங்கம் குற்றம் சாட்டியிருக்கிறது. தெற்கு லெபனானில் உள்ள மருத்துவமனை மருத்துவர்கள், தாங்கள் கண்ட காயங்களில் சில பொஸ்பரஸ் குண்டுகளால் ஏற்பட்டவை என சந்தேகிப்பதாக கூறியிருக்கின்றனர்.

சண்டை நிறுத்தத்திற்கு முன்பான கடைசி சில நாட்களில் தெற்கு லெபனான் மீது சுமார் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட தொகுப்பு குண்டுகளை (Cluster bombs) இஸ்ரேல் வீசியது, அதன் விளைவாக நாளொன்றுக்கு மூன்று பேர் உயிரிழந்தனர். இறந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளும் ஆவர், மற்றும் அது அப்பிரதேசத்தை கிட்டத்தட்ட குடியிருப்புக்கு தகுதியற்றதாக மாற்றியமைத்தது.

லெபனானுக்கு எதிராக சர்வதேச விதிமுறைகளுக்கு எதிரான ஆயுதங்கள் எவையும் பயன்படுத்தப்படவில்லை என்ற நிலைப்பாட்டிலிருந்து இஸ்ரேல் தற்போது மாறியிருப்பது, காசா மக்களுக்கு எதிராக இஸ்ரேல் பரிசோதனையை அடிப்படையில் கனரக உலோக குண்டுகளை வீசியது என்ற பாலஸ்தீன மருத்துவர்களின் கருத்தை வலுப்படுத்தவே செய்கிறது.

கடந்த ஆண்டு அமெரிக்க இராணுவம் பல்லூஜாவை தாக்கியபோது பொதுமக்களை வெள்ளை பொஸ்பரஸ் கொண்டு தாக்கியதை அம்பலப்படுத்திய இத்தாலிய தொலைக்காட்சி சேனல் ஆர்.ஏ.ஐ. நியூஸ்24, இப்போது காசா பிரதேசத்து விளக்கவியலாத படுகாயங்களையும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.

பெரும்பாலும் எக்ஸ் ரே கதிர்களுக்கு புலப்படாத இந்த வித்தியாசமான சிறிய காயங்கள் மற்றும் அதிக அனலால் காலில் ஏற்பட்ட வெட்டுக்கள் ஆகியவற்றுக்கான காரணங்களை கண்டறிய மருத்துவர்கள் உதவிகோரி வேண்டுகோள் விடுத்துள்ளனர். எப்போதுமில்லாத அளவிற்கு காயமடைந்தவர்களில் பெரும்பாலானோருக்கு தீப்புண்களின் காரணமாக பிறப்புறுப்புகளுக்கு சற்றுக் கீழே காலை வெட்டி எடுக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டது. சுகாதா அல்-அக்சா மருத்துவமனை அவசர சிகிச்சை மையத்தின் தலைவர் டாக்டர் ஹபாஸ் அல்-வஹீத், பத்திரிகையாளர்களிடம் பேசுகையில் "வாள் கொண்டு எலும்பு அறுக்கப்பட்டது போல" காயமடைந்தவர்களின் கால்கள் அவர்கள் உடலிலிருந்து துண்டிக்கப்பட்டிருப்பதாக கூறியிருக்கிறார்.

தாக்குதலுக்குள்ளானவர்களில் பலரது உடல்கள் முழுவதுமாக கருகிப்போய்விட்டன. மற்றும் குண்டுத்துகள் வகை காயங்கள் எக்ஸ் ரே கருவிகளால் கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும் காயங்களிலிருந்து கார்போனியம், டங்ஸ்டன் ஆகிய ஆபத்தான நுண் பொருள்களை தாங்கள் நீக்கியதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். காசா நகர் சிபா மருத்துவமனை மருத்துவர் ஜுமா சகா, காயமடைந்தவர்கள் மற்றும் இறந்தவர்களின் உடல்களில் சிறிய நுழைவு காயங்கள் இருந்ததாகவும் பாதிக்கப்பட்டவர்களின் உடல்களிலும் உள்ளுறுப்புகளிலும் தூள்கள் காணப்பட்டதாகவும் கூறியிருக்கிறார். "காயங்கள் ஏற்பட தூள் வடிவிலான அந்த நுண் துகள்களே பெரும்பாலும் காரணம்" என அவர் மேலும் தெரிவித்தார்.

தொடக்கத்தில் குணமடைவது போல் தோன்றினாலும் காயமடைந்தவர்கள் ஓரிரு நாட்களிலேயே திடீரென இறப்பதை மருத்துவர்கள் கண்டார்கள். "இது புது ரக ஆயுதங்களாலா அல்லது பழைய ஆயுதங்களுடன் ஏதேனும் சேர்க்கப்பட்டதாலா, எதனால் என்று புரியவில்லை" என்று பெயிட் லஹியாவில் உள்ள கமல் ஒட்வான் மருத்துவமனை துணை இயக்குனர் சையத் செளடா கூறியிருக்கிறார்.

பாலஸ்தீனப் போராளிகளால் பிடிக்கப்பட்ட கார்ப்போரல் கிலாத் சாலீத்தைப் பிடிக்க வேண்டும் மற்றும் இஸ்ரேல் மீதான காசிம் ராக்கெட்டுகளின் தாக்குதலை நிறுத்த வேண்டும் என்ற காரணங்களை காட்டி, இஸ்ரேல் ஜூன் மாத இறுதியில் காசாவுக்கு எதிராக தீவிரத் தாக்குதலை தொடங்கியதை அடுத்து வந்த ஜூலைத் திங்களில் அந்தக் காயங்கள் முதலில் அடையாளம் காணப்பட்டன. பெரும்பாலும் எதிர்க்க வழியற்ற காசா மக்களுக்கு எதிராக ஆறு வாரங்களாக தொடர்ந்து நடைபெற்ற போரில் 286 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்தனர். 4200 பேர் காயமடைந்தனர். இது காசா அவசர சேவை தருகின்ற புள்ளிவிவரம். மேலும் சாலைகள், பாலங்கள், வீடுகள், நீர் மற்றும் மின் நிலையங்கள் ஆகியவை அழிவைச் சந்தித்தன. லெபனானுக்கு எதிரான இஸ்ரேலின் நாகரிகமற்ற போர்ப் பின்னணியில் காசாவின் இழப்பு பத்திரிகை உலகின் குறைந்த கவனத்தையே பெற்றது.

தொலைதூரக் கட்டுப்பாட்டுக் கருவிகளின் உதவியோடு முன்னரே தீர்மானித்த இலக்குகளின் மீது இஸ்ரேலின் ஆகாய விமானங்கள் வீசிய ஆயுதங்களாலேயே பெரும் இழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன.

காசா மருத்துவர்கள் காயங்கள் பற்றிய ஏராளமான ஆதாரங்களை சேகரித்து வைத்திருப்பதாக தொலைகாட்சி நிகழ்ச்சி அறிவித்திருக்கிறது. காசா அவசர சேவைகளின் தலைமை இயக்குநர் டாக்டர் மெளவியா,"சிபா மருத்துவமனை உள்ளிட்ட காசாவின் முக்கிய மருத்துவமனை மருத்துவர்கள், காயங்களில் குறிப்பாக கால்களில் துளைகள் காணப்பட்டதையும், வேறு சில சிகிச்சைபெறுபவர்களின் உடலில் காயங்களைவிடப் பெரிய உலோகத் துண்டுகள் பல்வேறு பருமன்களில் காணப்பட்டதையும் கண்டறிந்துள்ளனர்."

"நான் தனியாக 86 பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை ஒரு குறுந்தகட்டில் பதிவு செய்து வைத்துள்ளேன். உலகின் கவனம் லெபனான் போர் மீது இருந்த போது காசாவில் என்ன நடந்தது என்பதை விளக்க அந்த விவரங்களை இத்தாலியிலும் மற்றும் உலகின் எந்தப் பகுதியிலும் காட்டத் தயார்" என்றும் மெளவியா கூறியிருக்கிறார்.

மேலும் அவர்,"வெளிக் காயங்கள் ஏதுமற்ற நிலையிலும் பலருக்கு உள் உறுப்புகளில் காயங்கள் ஏற்பட்டிருப்பதைப் பார்க்கும் போது இஸ்ரேல் இராசயன ஆயுதங்களைப் பயன்படுத்தியிருக்கலாம் என்று நாங்கள் கருதுகிறோம்" என்றார்.

"காசா மருத்துவமனைகளில் மருத்துவர்கள் சிரமமான சூழலை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இது ஒரு திறந்தவெளி சிறையைப் போல இருக்கிறது. இஸ்ரேலிய விமானத்தால் இக்கணம்வரை பயன்படுத்தப்படும் பாரம்பரிய வகைகளில் இருந்து "வேறுபட்ட" இவ்வாயுதங்களால் தூண்டப்பட்ட காயங்களின் தீவிர பாதிப்பால் பலர் உயிரிழந்துள்ளனர்" என்று கருத்து தெரிவித்திருக்கும் மெளவியா, ஆகஸ்டிலிருந்து புதிய பாதிப்புகள் இல்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.

பாதிக்கப்பட்டவர்களின் உடலில் காணப்பட்ட உலோகத் துண்டுகளின் மாதிரிளைத் தீவிரமாக ஆராய்ந்ததில் காயங்கள், கிட்டத்தட்ட அமெரிக்கத் தயாரிப்பான டைம் (DIME) எனப்படும் அடர் உலோக வெடிகுண்டுகளை போன்ற ஏவுகணைகளால் ஏற்பட்டிருக்கலாம் என்று இத்தாலிய செய்தியாளர்கள் கருதுகின்றனர்.

டைம் என்பது கார்பன் அடங்கிய ஒரு ஏவுகணை என்றும், இது பல நுண் துண்டுகளாக வெடித்துச் சிதறும் அதே நேரம் கார்பன் இழை மூடிய சக்தி வாய்ந்த கனரக டங்ஸ்டன் உலோகக் கலவைத் துகள்கள் (கோபால்ட், நிக்கல் மற்றும் இரும்பு போன்றவை) (HMTA) வெடிக்கக் கூடியவை என்றும் டிபென்ஸ் டெக் (Defence Tech) என்ற இராணுவ பத்திரிகை தெரிவிக்கிறது. காற்றின் தடையின் காரணமாக அது மிகவிரைவில் அசைவற்ற தன்மையை இழக்கையில், உலோக உறை சிதறுவதன் விளைவாகவரும் துகளுக்கு மாறாக, அது தூளாக மாறி, அவை 4 மீட்டர்கள் சுற்றளவிற்கு, மிகத் துல்லியமான முக்கோணவடிவிலான ஒவ்வொன்றின் மூலமும் எரிக்கிறது மற்றும் அழிவை ஏற்படுத்துகிறது.

உலோகம் வெடிக்கும் நிகழ்ச்சியில் பங்கு பெறாமையால் பெயரளவில் "செயலற்ற" என்று குறிப்பிடப்படுகிறது.

இந்த புது வகை தொழில்நுட்பம் குறைந்த பகுதியில் அதிக அழிவை ஏற்படுத்தக் கூடியவை. இது எல்.சி.டி எனப்படுகிறது. மக்கள் நெருக்கம் அதிகம் உள்ளப் பகுதிகளுக்கு இது மிக ஏற்றது.

இவ்வகை ஆயுதங்கள் இஸ்ரேலால் தயாரிக்கப்பட்டதா அல்லது பாலஸ்தீனியர்களை பயன்படுத்தி அமெரிக்கா தன் தயாரிப்பை பரிசோதித்ததா என்பது பற்றிக் குறிப்பிட்டத் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஏதும் குறிப்பிடப்படவில்லை.

இஸ்ரேல் இராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் பத்திரிகையாளர்கள் கேள்விகளுக்கு பதிலளிக்கையில், "சர்வதேச சட்டத்திற்கு எதிரான எந்த ஆயுதங்களையும் இஸ்ரேல் பயன்படுத்தவில்லை" என்று கூறினார். புது வகை வெடிகுண்டுகளான டைம் வகை ஆயுதங்கள் குறித்து இன்னும் சர்வதேச சட்டம் எதுவும் கொண்டுவரப்படவில்லை.

இஸ்ரேல் இராணுவம் இத்தாலிய செய்தியாளர்களிடம் பேசவில்லை எனத் தெரிகிறது. ஏனெனில், அது இஸ்ரேல் விமானப்படையின் மேஜர் ஜெனரல் மற்றும் ஆயுதங்கள் தயாரிப்பு செயல்திட்டத்தின் முன்னாள் தலைவருமான இட்சாக் பென் கூறிய கருத்தை மட்டுமே குறிப்பிட்டிருக்கிறது. அவர் டைம் வகை ஆயுதத் தாக்குதலை மறுக்கவில்லை. "இது சிறிய இலக்குகளைத் தாக்க உகந்த தொழில்நுட்பம்" என்று கருத்து தெரிவித்திருக்கிறார்.

பாலஸ்தீனியர்கள் ஒடுக்கப்படுவதை எதிர்த்துக் குரல் கொடுப்பவர்களை குறிப்பிட்டுத் தாக்கி அழிக்க டைம் உதவும் எனத் தெரிகிறது.

காசா பகுதியின் இறந்தவர்களுக்கும் காயமடைந்தவர்களுக்குமான அதிக விகிதாச்சாரம் குறைந்த பகுதியில் அதிக அழிவு என்ற டைம் தன்மை மாறுபாடாகி இருப்பதையே காட்டுகிறது.

இலக்கு மண்டலத்திற்கு வெளியில் உள்ள பிரதான பொருளான டங்ஸ்டன், கான்சரை உண்டாக்கக்கூடிய சுற்றுப்புறச் சூழலுக்கு கேடு விளைவிக்கக்கூடிய ஆபத்தானப் பொருளாகும். மேரிலேண்டில் உள்ள ஆயுதப் படைகளின் கதிரியக்க உயிரியல் ஆராய்ச்சி நிலையத்தில், ஜோன் காலினிச் குழு குண்டுத்துகளின் காயத்தை போலியாய் வடிவமைத்து, ஆயுதத்தர tungsten alloy கலவையை 92 எலிகள் மீது செலுத்தி டங்ஸ்டனின் பாதிப்பை ஆராய்ந்ததில் அவை அனைத்தும் 5 மாதங்களில் rhabdomyosarcoma எனும் அபூர்வ புற்றுநோயால் இறந்துவிட்டன என்று New Scientist பத்திரிகை கூறுகிறது.

(செறிவு தளர்த்தப்பட்ட யுரேனியம் உள்பட) கனரக உலோக டங்ஸ்டன் கலவையின் HMTA பாதிப்புகள் குறித்து 2000 முதலே அமெரிக்க இராணுவம் ஆராய்ந்து வருகிறது. இவ்வுலோகக்கலவைகள் மனதனின் எலும்புருவாக்க கலங்கள் (osteoblast cells) இழையமாற்றங்களை அடையக் காரணமாகக் காணப்படுகின்றன.

டங்ஸ்டனுக்கும் லுகேமியாவிற்கும் உள்ள தொடர்பு குறித்து தான் கவலைப்படுவதாக, அரிசோனா பல்கலைக் கழகத்தை சார்ந்த புற்றுநோய் ஆராய்ச்சியாளர் டாக்டர் மார்க் விட்டின் கூறுகிறார். மேலும் அவர், "இராணுவம் டங்ஸ்டனின் பயன்பாட்டை அதிகரிக்கும் முன்பு அதுபற்றி நன்கு ஆராயப்படவேண்டும்" என்றார்.

காசா பகுதியிலிருந்து இத்தாலிய செய்தியாளர்கள் சேகரித்துக் கொடுத்த மாதிரிகளை ஆராய்ந்த பார்மா பல்கலைக்கழக மருத்துவர் கமீலா அந்த மாதிரிகளில் வழக்கத்திற்கு மாறாக கார்பன், தாமிரம், அலுமினியம் மற்றும் டங்ஸ்டன் ஆகியவை இருப்பதாகக் கூறியிருக்கிறார். "இக்கண்டறிதல்கள் DIME ஆயுதத்தைக் கேளவிக்குள்ளாக்கும் வாதத்தை ஆதாரமாகக் கொண்டிருக்கும் கருத்தை ஒத்திருப்பதாக" அவர் கூறினார்.

இவ்வகை புதிய ஆயுதத் தாக்குதலில் உயிர் தப்பிய பாலஸ்தீனியர்களை புற்றுநோய் தாக்கும் அபாயம் உள்ளது.

குறிப்பிட்ட இத்தாலியத் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு பின்னர் இஸ்ரேல் இராணுவம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் டைம் (DIME) ஆயுதப் பயன்பாட்டை திட்டவட்டமாக மறுத்திருக்கிறது. "பாதுகாப்புக் காரணங்களால் தன்வசம் உள்ள ஆயுதங்களின் தன்மை மற்றும் வகை குறித்து இஸ்ரேல் கூற இயலாது" என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved