World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

SEP candidate for US Senate addresses Buffalo meeting

"Our campaign offers the only alternative to the profit system"

அமெரிக்க செனட் மன்றத்திற்கான சோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளர் பஃபலோ கூட்டத்தில் உரையாற்றுகிறார்

"எங்களுடைய பிரச்சாரம்தான் இலாபமைப்பிற்கு ஒரே மாற்றீட்டை தருகிறது"

By Bill Van Auken
30 October 2006

Back to screen version

அக்டோபர் 19ம் தேதி நியூ யோர்க், பஃபலோவில் நியூ யோர்க்கில் இருந்து அமெரிக்க செனட் மன்றத்திற்கான சோசலிச சமத்துவக் கட்சியின் வேட்பாளர் பில் வான் ஒகென் ஒரு பொதுக் கூட்டத்தில் ஆற்றிய உரை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது செனட்டராக இருக்கும் ஜனநாயகக் கட்சி உறுப்பினர் ஹில்லாரி கிளின்டனை எதிர்த்து நியூ யோர்க்கில் இருந்து அமெரிக்கச் செனட்டர் பதவிக்கு நான் சோசலிச சமத்துவக் கட்சியின் வேட்பாளராக நிற்கிறேன்.

அமெரிக்க ஆளும் உயரடுக்கு மற்றும் அதன் அரசாங்கத்திற்கு உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் அசாதாரண நெருக்கடி ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் இந்த இடைத் தேர்தல்கள் நடைபெறுகின்றன.

வரவிருக்கும் தேர்தல்களில் நிச்சயமாக இரண்டு பிரச்சினைகள் மற்றவற்றைக் காட்டிலும் கூடுதலான வகையில் முன்னிழல் இட்டுள்ளன. முதலாவது ஈராக்கில் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு ஏற்பட்டுள்ள நடைபெற்றுவரும் இராணுவ, அரசியல் சங்கடம் ஆகும்; இரண்டாவது அமெரிக்காவிற்குள்ளேயே ஜனநாயக உரிமைகள் மீதான ஒட்டுமொத்த மற்றும் வரலாற்றுத் தன்மையிலான தாக்குதல் ஆகும்.

இந்த வாரம் ஜோன்ஸ் ஹொப்கின்ஸ் பொது சுகாதாரப் பயிலகம் நடத்திய விஞ்ஞானபூர்வமான கணக்கெடுப்பு ஒன்று வெளிவந்ததை கண்டோம்; அதில் 655,000 ஈராக்கியர்கள் அமெரிக்கப் படையெடுப்பு, ஆக்கிரமிப்பு ஆகியவற்றின் விளைவுகளால் உயிரிழந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. கடுமையான விஞ்ஞான வழிவகையைக் கொண்டு மக்களை பற்றிய கணக்கெடுப்பு, பொது சுகாதாரத் தன்மை ஆகியவற்றை பற்றிக் கூறும் இந்த மதிப்பீடு உண்மையில் இறப்புக்கள் 393,000ல் இருந்து 943,000 வரை இருக்கலாம் என்றும் கூறுகிறது.

இத்தகைய புள்ளியியல் வழிமுறைகள், தொகுப்பு மாதிரிகள், பொதுமக்கள் தொகைக்கு இவை கொண்டுள்ள பயன்பாடு ஆகியவற்றைப் பற்றி தன்னுடைய மூளையின் திறனுக்கு வேலை கொடுக்க ஆர்வம் காட்டாத நிலையில், ஜோர்ஜ் புஷ் இந்த அறிக்கையை நம்பகத்தன்மை உடையது அல்ல என்று உதறித்தள்ளி விட்டார். பெரும் ஆபத்தையும் எதிர்நோக்கி, தங்கள் நாட்டில் நடக்கும் பேரழிவு பற்றிய தொகுப்புப் பணிகளை செய்த ஈராக்கிய மருத்துவர்களின் செயலை வெறும் "ஊகம்" என்றும் இவர் விவரித்துளார்.

இது ஒன்றும் "ஊகம்" அல்ல; புஷ் நிர்வாகத்தின் "தடுப்புப் போர்" என்ற கொள்கையின் விளைவாக ஒவ்வொரு நாளும் ஈராக்கிய மக்கள் அனுபவிக்கும் பேரழிவின் பரிமாணங்களை பற்றிய ஒரு விஞ்ஞான மதிப்பீடு ஆகும். பேரழிவு ஆயுதங்கள், பயங்கரவாத தொடர்புகள் பற்றிய பொய்களின் அடிப்படையிலான இந்தப் போரில் ஜனநாயகக் கட்சியின் ஒத்துழைப்புடன், இந்த நிர்வாகம் அமெரிக்க மக்களை இழுத்து விட்டுள்ளது.

இப்போரின் உண்மையான நோக்கம், மத்திய ஆசிய மற்றும் பாரசீக வளைகுடாப்பகுதிகளின் மூலோபாய எண்ணெய் இருப்புக்களின் மீதான கட்டுப்பாட்டை கைக்குள் கொண்டுவரும் நோக்கத்திற்காக அமெரிக்க இராணுவத்தை பயன்படுத்தும் நீண்ட காலமாகத் தயாரிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்துவதற்கு 9/11 பயங்கரவாத தாக்குதல்களினால் தோற்றுவிக்கப்பட்ட அரசியல் சூழ்நிலையை பயன்படுத்திக்கொள்வதாகும். ஆப்கானிஸ்தானையும் ஈராக்கையும் ஒப்புமையில் பாதுகாப்பற்ற நாடுகள் என்று நிர்வாகம் கருதி அவற்றை எளிதில் வெற்றி கொள்ளலாம் என்றும் அதையொட்டி ஐரோப்பிய, ஆசியப் போட்டியாளர்களைவிட கூடுதலான மூலாபாய நலன்களை உறுதியாகப் பெறலாம் என்றும் திட்டமிட்டது.

இக்குற்றம் சார்ந்த திட்டம் புஷ்ஷின் வெள்ளை மாளிகையில் உள்ள வலதுசாரிக் குழுவின் மனத்தில் உதித்த மகவு என்று மட்டும் அல்லாமல், பென்டகனில் இருக்கும் சிவிலியத் தலைமையும் ஈடுபட்டுள்ளது ஆகும். உலகளாவிய இராணுவவாதம் என்ற கொள்கை ஆளும் உயரடுக்கின் முடிவெடுக்கும் பிரிவுகளின் ஆதரவைக் கொண்டிருந்தது.

எவ்வித மறுப்பிற்கும் இடமின்றி இந்த அமெரிக்க தன்னலச் சிறுகுழுவின் பெரிய திட்டம் வரலாற்றளவு பெரும் சங்கடத்தை தோற்றுவித்து தோல்வியும் அடைந்துள்ளது எனக் கூறலாம்.

Lancet என்னும் பிரிட்டிஷ் மருத்துவ இதழில் காண்பிக்கப்பட்டுள்ள கொலையின் அளவு இந்த நிர்வாகம் மற்றும் அதன் முக்கிய நபர்கள் போர்க்குற்றங்களுக்கு பொறுப்பு என்றும் குற்றவியல் நடவடிக்கைக்காக நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று மிகத் தெளிவாகக் காட்டுகிறது. வெற்றி கொள்ளப்பட்ட ஈராக்கில் இருந்து ஈராக்கிய எண்ணெய் விற்பதன் மூலம் பெரும் இலாபங்களை ஈட்டலாம் என்றிருந்த அமெரிக்க மூலோபாய முயற்சியும் படுதோல்வி அடைந்துவிட்டதை இது காட்டுகிறது. அந்நாட்டின் எண்ணெய் வளங்களில் இருந்து பெரும் இலாபம் பெறலாம் என்ற வாஷிங்டனுடைய கனவுகளும் புகையில் கலைந்து போயின.

இதற்கிடையில், செய்தி ஊடகம் இதைப்பற்றி ஏதும் கூறாமல் மறுபுறம் பார்த்துக் கொண்டிருக்கையில், ஈராக்கில் அமெரிக்க படையினரின் இறப்பின் எண்ணிக்கை 3,000த்தை எட்டிக் கொண்டிருக்கிறது; நாள் ஒன்றுக்கு சராசரியாக நான்கு இராணுவத்தினர் இம்மாதத்தில் இறக்கும் விகிதத்தில் படையெடுப்புக் காலத்தில் இருந்து மிக அதிக எண்ணிக்கை வந்துவிட்டது. இதைப் போல 10 மடங்கு இராணுவத்தினர் காயமுறுகின்றனர்; பல நேரங்களிலும் வாழ்க்கையையே மாற்றும் தன்மை உடைய தலைக் காயங்கள், உறுப்புக்கள் இழத்தல் ஆகியவை நேருகின்றன.

இதற்கிடையில், அமெரிக்க அரசாங்கம் ஒரு வாரத்திற்கு 2 பில்லியன் டாலர்களை இந்தப் பெரும் தோல்விக்காக செலவழித்துக் கொண்டிருக்கிறது; இந்தப் பணம் வேலைவாய்ப்புக்கள், கல்வி, சுகாதாரம் ஆகியவற்றை உள்நாட்டில் அளிப்பதற்கு பெரிதும் தேவைப்படுகிறது.

நியூ யோர்க்கில் சோசலிச சமத்துவ கட்சி வாக்குச் சீட்டில் பதிவு செய்ய முடிந்தது; இதற்கு காரணம் 25,000 நியூ யோர்க் குடிமக்கள் என்னை அமெரிக்க செனட்டிற்கு வேட்பாளராகலாம் என்ற மனுவில் கையெழுத்திட்டதுதான். அவர்களில் பலர் நீண்ட காலம் இராணுவப் பணி ஆற்றியவர்கள், தற்பொழுது இராணுவத்தில் இருப்பவர்கள் மற்றும் ஈராக்கிற்கு அண்மையில் சென்றுள்ள இளம் ஆடவர் பெண்டிருடைய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், சமீபத்தில் இங்கு திரும்பியவர்கள், மறுபடியும் கடமைக்காகச் செல்ல இருப்பவர்கள் என்று உள்ளனர். க்வீன்ஸில் இருந்து ஒரு தாயார் கையெழுத்திட்டதற்கு காரணம் அவருடைய மகன் பல்லுஜாவில் மடிந்து விட்டார்; "வேறு எவருடைய மகவும்" பொய்களின் அடிப்படையில் நிகழும் இப்போரில் இறக்கக் கூடாது என்று அவர் கூறினார்.

ஆளும் அமைப்பு முறையின் எந்த குறிப்பிடத்தக்க பிரிவும், அரசியல்வாதிகளும் பெருநிறுவன செய்தி ஊடகமும் இப்படிப்பட்ட கொள்கைக்குப் பிரச்சாரம் செய்யவில்லை என்றபோதிலும், அவர்களும் மற்ற பல மில்லியன் அமெரிக்கர்களும், உண்மையில் மக்கட்தொகையில் பெரும்பாலானவர்களும் ஈராக்கில் நடைபெறும் போர் பற்றித் தங்களுடைய சொந்த முடிவிற்கு வந்துள்ளனர்.

இத்தேர்தலில் பெரும் அக்கறை உடைய மற்றொரு பிரச்சினை, ஜனநாயக உரிமைகள் மீது கடுமையான தாக்குதல் என்று 2006 இராணுவ விசாரணைக் குழுக்களில் பதிக்கப்பட்டுள்ள கருத்துக்கள் ஆகும்; இது தேர்தலுக்கு முன்பு காங்கிரஸ் விடுப்பு பெறுவதற்கு முன்பு தேசிய சட்டமன்றத்தின் ஒப்புதலைப் பெற்றது.

2002 இடைத் தேர்தலுக்கு சற்று முந்தைய இதேபோன்ற காலத்தில்தான் காங்கிரஸ் ஈராக்கிற்கு எதிராக தடையின்றி போர் நடத்துவதற்கு அனுமதி கொடுத்தது என்பது நினைவிற் கொள்ளப்பட வேண்டும். நியூ யோர்க்கின் இளைய செனட்டர் ஹில்லாரி கிளின்டன் உட்பட முக்கிய ஜனநாயகக் கட்சியினர் அத்தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்கு அளித்தனர். அந்த நேரத்தில் கட்சியின் கொள்கை இயற்றுபவர்கள் ஈராக்கை பற்றி வாக்கு கூடாது என்றும் உள்நாட்டுச் செயற்பட்டியல் பற்றித்தான் கட்சி தேர்தலை அணுக வேண்டும் என்றும் கூறிவிட்டனர்.

ஜனநாயகக் கட்சியினருக்கு பொருளாதாரம், பொது சுகாதாரம், கல்வி, வேலைகள் பற்றி குறிப்பிடத்தக்க வகையில் திட்டங்கள் ஏதும் இல்லை என்ற நிலையில், இத்தகைய உத்தி தோல்வியில் முடிந்து மிக மோசமான தேர்தல் முடிவுகளில் ஒன்றை அது எதிர்கொண்டது.

அதேபோல், இம்முறையும் ஜனநாயகத் தலைமை இராணுவ விசாரணைக் குழு சட்டம் நிறைவேற்றப்படுவதை தடைசெய்யக் கூடாது என்ற முடிவை எடுத்தது; அப்படிச் செய்வது குடியரசுக் கட்சியினர் தங்கள் மீது "பயங்கரவாதத்தின் மீது மிருதுத்தன்மை கொண்டவர்கள்" என முத்திரை இட்டுவிடுவர் என்பது அவர்கள் கருத்து. சட்டம் நிறைவேற்றாமல் வெகு எளிதில் தாமதப்படுத்தியிருக்க முடியும்; இதைவிட பல சிறிய பிரச்சினைகளுக்கு, நீதித்துறை நியமனங்கள் போன்றவற்றிற்கு, அவர்கள் அம்முறையைக் கையாண்டுள்ளனர்.

இதன் விளைவாக, காங்கிரஸ் சித்திரவதையை நெறிப்படுத்துதல், அமெரிக்க குடியரசு தோற்றுவிக்கப்பட்ட காலத்தில் இருந்து உள்ள அடிப்படை உரிமைகளை தள்ளி வைத்தல் என்பதை ஏற்றல் ஆகியவற்றிற்கான சட்டத்தை இயற்றியது. புஷ் நிர்வாகத்தின் கையில் மரபார்ந்த வகையில் போலீஸ், இராணுவ நிர்வாகங்களுடன் அடையாளம் காணப்படும் அசாதாரண அதிகாரங்களை இது கொடுத்துள்ளது. இந்த அதிகாரங்கள் ஒப்புமையில் குவாண்டனாமோ பே, கியூபாவில் சிறிய எண்ணிக்கையில் இருக்கும் எதிரிப் போராளிகளுக்கு எதிராக மட்டும் பயன்படுத்தப்படாமல், அமெரிக்காவிற்குள்ளேயே இருக்கும் அரசாங்கத்திற்கு எதிர்ப்பாளர்களுக்கு எதிராகவும் பயன்படுத்தப்படமுடியும்.

"அது இங்கு நடவாது" என்று சின்கிளேர் லீவிஸின் புகழ் பெற்ற அரசியல் நாவலின் வார்த்தைகளில் கூறுவோருக்கு, "அது நடக்கும், நடந்துள்ளது" என்பதுதான் விடையாகும்.

2006 தேர்தலில் பிரச்சாரத்தின் இறுதிக் கட்டத்திற்கு நாங்கள் தயாராகிக் கொண்டிருக்கையில், மிக வெற்றிகரமான அமெரிக்க சோசலிச வேட்பாளர் Eugene V. Debbs, ஒரு சிறைக் கூடத்திற்குள் இருந்தபடி தேர்தலில் போட்டியிடுவதில் முக்கியமான தடைகள் இருந்தும், கிட்டத்தட்ட 1 மில்லியன் வாக்குகளை 1920 தேர்தல்களில் பெற்று வெற்றியையும் கண்டார் என்பது நினைவு கூரப்பட வேண்டும்.

மற்றும் குறைந்தது 2,000 பேருடன் டெப்சும் மத்திய அரசாங்கத்தால் வெளிநாட்டவர் மற்றும் ராஜத்துரோக சட்டங்களின் கீழ் -- குற்றம் சாட்டப்பட்டிருந்தார்; முதலாம் உலகப் போரில் அமெரிக்காவின் தலையீட்டிற்கு எதிராகப் பேசினார் என்பதுதான் இவருடைய ஒரே குற்றம். சிலருக்கு 20 ஆண்டுகள் வரையிலான சிறை தண்டனை கிடைத்தது.

இதனைத்தொடர்ந்து போருக்கு பிந்தைய ரஷ்ய புரட்சி பற்றிய சிவப்பு பீதி மற்றும் 1919-1920 பால்மர் சோதனைகள் ஆகியவை வந்தன; இவற்றில் 10,000 வெளிநாட்டு தொழிலாளர்கள் பிடிக்கப்பட்டு பலருக்கும் கடுமையான சிறைத் தண்டனை, உதைகள், சித்திரவதை போன்றவை கொடுக்கப்பட்டன; இவர்கள் எந்தக் குற்றமும் செய்யவில்லை; இவர்கள் சோசலிஸ்ட், கம்யூனிஸ்ட், அல்லது அராஜகவாத அமைப்புக்களை சார்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின்மீது இது நடைபெற்றது. அந்த நேரத்தில் அதிகாரிகள் இழிவான, சட்ட ஆதாரமற்ற கருத்தாய்வைக் கொண்டிருந்தனர்; இதைத்தான் புஷ் நிர்வாகம் தூசி தட்டி எடுத்து "எதிரிப் போராளிகள்" என்ற தன்னுடைய கொள்கையாக கொண்டுவந்துள்ளது; இதன்படி குடியுரிமை இல்லாதவர்கள் அமெரிக்க அரசியமைப்பின்படி பாதுகாப்பு ஏதும் பெறவில்லை என்றும் முறையான சட்ட நெறி அவர்களுக்கு பொருந்தாது என்றும் வகுக்கப்பட்டுள்ளது.

இதன்பின்னர் இரண்டாம் முறை சிகப்பு பீதி இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் ஏற்பட்டு, அமெரிக்க குடிமக்களையே நூற்றுக்கணக்கான கூட்டாட்சி, மாநில, தல சுய ஆட்சி சட்டங்கள் இயற்றப்பட்டதின் மூலம் கம்யூனிஸ்ட் நாசகாரர்கள் என்று அழைக்கப்பட்ட விதத்தில் குற்றம் சாட்டிய நிலை ஏற்பட்டது. தொடர்பு இருக்கலாம் என்ற கருத்து, கறுப்புப்பட்டியலில் சேர்த்தல், விசுவாச வாக்குமூலங்கள் ஆகியவை அமெரிக்க அரசியல் வாழ்வின் சாதாரண கூறுபாடுகள் ஆயின. பல ஆயிரக்கணக்கானவர்கள் தங்கள் வேலைகளை இழந்தனர்; அடிப்படை உரிமைகள் அவர்களிடம் இருந்து அகற்றப்பட்டன; ஸ்மித் சட்டப்படி நீதிமன்ற இழிவு மற்றும் பல குற்றங்களுக்காக நூற்றுக்கணக்கானவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஆயினும்கூட அந்த முந்தைய அமெரிக்க வரலாற்றின் இருண்ட காலங்களில் செயல்படுத்தப்பட்ட அடக்குமுறை நடவடிக்கைகளையும்விட, புதிய சட்டம் இன்னும் கடுமையாக உள்ளது. கைதிகள் ஆட் கொணர்தல் மனுவை தாக்கல் செய்யும் உரிமை உட்பட பல உரிமைகளையும் இது மறுக்கிறது; அதாவது நீதிமன்றத்தில் அவர்களுக்கு எதிரான குற்றச் சாட்டுக்களை ஏற்கவேண்டும். எந்த முறையான குற்றச் சாட்டுக்களோ, சான்றுகளோ இல்லாமல் கூட ஒரு ஜனாதிபதி அவருடைய கருத்தில் சிலர் "எதிரிப் போராளிகள்" என்று நினைத்தால் விருப்பப்பட்ட மக்களை சிறைவைக்கலாம்.

ஆட்கொணர்வுச் சட்டம் ஒன்றும் சமீபத்திய புதுக் கருத்து அல்ல. அது 800 ஆண்டுகளுக்கு முன்பு இயற்றப்பட்ட ஆங்கில மாக்ன கார்ட்டா (English Magna Carta) காலத்தியது; அது அமெரிக்க அரசியல் அமைப்பின் முதல் விதியாக இயற்றப்பட்டது ஆகும்.

புஷ் நிர்வாகத்தின் இழிந்த செயற்பாடுகள், அபு கிரைப், குவாண்டனாமோ குடா ஆகியவற்றில் நடந்த கொடூரங்கள் வெளிப்பட்டதை அடுத்தும், CIA இன் இரகசியச்சிறைகள், சித்திரவதை அறைகள் பற்றிய உண்மைகள் கசிந்ததை அடுத்தும் அவற்றையெல்லாம் நாட்டின் சட்டமாக மாற்றும் வகையில், இச்சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

மேலும் இது "எதிரிப் போராளிகள்" என்ற கருத்தை விரிவாக்கம் செய்து அதில் அமெரிக்க குடிமக்களையும், மற்ற "அமெரிக்கா மற்றும் அத்துடன் இணைந்து செயல்படும் நாடுகளுக்கு எதிராக வேண்டுமென்றே திட்டமிட்டு விரோதப்போக்குகளை ஆதரிப்பவர்கள் என்று கருதப்படும்" மற்ற சட்டபூர்வமாக வசிப்பவர்களையும் சேர்க்கும் வகையில் விதிவகைகளை கொண்டுள்ளது.

அரசாங்கத்திற்கு எதிராக, உண்மையில் பிரிட்டன், இஸ்ரேல் அரசாங்கங்களை எதிர்த்து பேசுபவர்களும் கூட (அவை அமெரிக்காவின் நட்பு நாடுகள் என்பதால்) ஓர் இராணுவ விசாரணைக் குழு முன் நிறுத்தப்பட்டு, சாதாரண நீதிமன்றங்களின் குறுக்கீட்டிற்கு இடமில்லாமல் சிறைச் சாலைகளில் தள்ளப்பட்டுவிடலாம் என்ற அளவிற்கு இந்த வரையறை பரந்துள்ளது.

"ஒரு மூத்த நிர்வாக அதிகாரி" சட்டத்தின் இப்புதிய விதிகள் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை என்று உறுதி கூறியுள்ளதாக சமீபத்தில் நியூ யோர்க் டைம்ஸ் மேற்கோளிட்டுக் கூறியுள்ளது; ஏனெனில், "ஒரு குற்றம் செய்தவர்கள் மட்டும்தான் விசாரணைக்கு உட்படுத்தப்படுவர்" என்று அவர் கூறினாராம். வேறுவிதமாகக் கூறினால் குற்றம் சாட்டப்பட்டவர் ஏற்கனவே குற்றவாளி, எனவே அவர்கள் நிறுத்தப்படும் இராணுவக் கட்டப் பஞ்சாயத்து நீதிமன்றங்கள் அந்த உண்மையை உறுதிசெய்துவிடும். இதுதான் ஒரு போலீஸ் அரசாங்கத்தின் சரியான வரையறை ஆகும்.

சமூக சமத்துவமின்மையும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலும்

அமெரிக்க ஆளும் அமைப்புமுறை இராணுவ, போலீஸ் அரச வழிவகைகளுக்கு பாய்ந்து செல்லும் தன்மை இன்றைய அமெரிக்காவின் சமூக வாழ்வில் மிகவும் முக்கியமான கூறுபாடாக இருக்கும் தன்மையின் பின்னணியில்தான் புரிந்து கொள்ள முடியும்: முன்னோடியில்லாத வகையில் செல்வக் குவிப்பு, அத்துடன் இணைந்த சமத்துவமற்ற முறையின் வளர்ச்சி என்பதே அது.

உயரடுக்கில் ஒரு நிதியத் தன்னலக்குழு, கீழ்மட்டத்தில் உழைக்கும் மக்கள் தொகுப்பு என்று எப்பொழுதும் இடையறாமல் பெருகிக் கொண்டிருக்கும் இந்தப் பிளவு, அமெரிக்க அரசியல் அமைப்புமுறைக்கும் அதன் மக்களுடைய உணர்வுகளுக்கும் இடையே உள்ள தொடர்பின்மையை நன்கு விளக்குகிறது. அமெரிக்க மக்கள் மூன்றில் இருவர் அமெரிக்கப் படைகள் ஈராக்கில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என்று கருத்துக் கணிப்புக்கள் காட்டும்போது, ஒரு முக்கிய அரசியல்வாதி கூட, எக்கட்சியாயினும் சரி, உடனடியாக படைகள் திரும்பப்பெறப்பட வேண்டும் என்று கூறாததை இது விளக்குகின்றது. இருகட்சி முறை அரசியல் ஏகபோகம், மக்களை பிரதிபலிக்காமல் உயர்மட்ட 1 சதவிகிதத்தினரைத்தான் பிரதிபலிக்கிறது.

இந்த தன்னலச் சிறுகுழுவை சாதாரண மக்களிடம் இருந்து பிரிக்கும் பிளவு இப்பொழுது இருப்பதைப்போல் இதுகாறும் பரந்து இருந்ததில்லை. ஒரு சில சமீபத்திய புள்ளி விவரங்கள் இதைத் தெளிவாக்கும்.

மக்கட்தொகை கணக்கீட்டின்படி 1980ல் இருந்து 2004 வரை உற்பத்திப் பிரிவில் உண்மை ஊதியங்கள் 1 சதவிகிதம் குறைந்தன; அதே நேரத்தில் உயர்மட்ட செல்வக் கொழிப்புடைய உயர் 1 சதவிகிதத்தின் உண்மை வருமானம், அதாவது 277,000 டாலருக்கு மேல் சம்பாதிப்பவர்களுடைய எண்ணிக்கை, 135 சதவீதமாக உயர்ந்தது

அமெரிக்க வணிகத் துறையின் சமீபத்திய அறிக்கை ஒன்று 2006ன் முதல் கால்பகுதியில் ஊதியங்கள், சம்பளங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 45 சதவிகிதத்தைத்தான் கொண்டிருந்தன என்றும், இது 1970 களின் தொடக்கத்தில் இருந்த 53.6 சதவிகிதத்தில் இருந்து சரிவு என்றும் தெரிவிக்கிறது. ஒவ்வொரு சதவிகித புள்ளியும் 132 பில்லியன் டாலரை பிரதிபலிக்கிறது என்ற நிலையில், இதன் பொருள் ஆண்டு ஒன்றுக்கு 1 மில்லியன் டாலர் பெருநிறுவன இலாபங்களுக்கும் அந்நிறுவனங்களின் செல்வந்த தட்டு முதலீட்டாளர்களுக்கும் சராசரி தொழிலாளர்களிடம் இருந்து செல்கிறது என்பதாகும்.

கடந்த மூன்று தசாப்தங்களாக ஜனநாயகக் கட்சியாயினும், குடியரசுக் கட்சியாயினும், தொடர்ச்சியான நிர்வாகங்கள் தொடரும் கொள்கையின் உந்துதல், இத்தகைய முறையில், மேல்நோக்கிய வகையில் துல்லியமாக சமூகச்செல்வம் மறுபங்கீடு செய்யப்பட வேண்டும் என்பதுதான்.

நாம் தேர்தல்களை நெருங்குகையில், நவம்பர் 7 தேர்தல்களின் முடிவு தேசிய சட்டமன்றத்தின் ஒரு அவை அல்லது இரு அவைகளும் கூட ஜனநாயகக் கட்சியின் தலைமையின் கீழ் வரக்கூடிய வாய்ப்புவளமானது குடியரசுக் கட்சிக்கு அதிர்ச்சி கொடுக்கும் தொல்வியாக இருக்கும் என்பதற்கான அதிகரிக்கும் அடையாளங்கள் இருக்கின்றன; குடியரசுக் கட்சியின் தேசியக் குழு தோற்கக் கூடும் என்று நினைக்கும் பல தொகுதிகளில் இருந்து தேர்தல் செலவிற்கு ஒதுக்கப்பட்ட நிதியைத் திரும்பப் பெற்றுக் கொண்டிருப்பதாகவும், அப்பணம் சற்றே வெற்றிபெற வாய்ப்பு இருக்கக் கூடிய தொகுதிகளுக்கு அனுப்பப்படுவதாகவும் நேற்று வாஷிங்டன் போஸ்ட் தகவல் கொடுத்துள்ளது. இதையொட்டி எப்படியேனும் மிகச் சிறிய பெரும்பான்மையை காங்கிரசில் பெறலாம் என்ற கருத்து உள்ளது.

எம்மிடத்தில் ஒன்றும் வருங்காலத்தை காணக்கூடிய கண்ணாடிப்படி பந்து இல்லை. இன்றைக்கும் தேர்தல் தினத்திற்கும் இடையே எதுவும் நடக்கும். சில செய்தி ஊடகத் தகவல்களின்படி, புஷ் நிர்வாகம் "ஒரு அக்டோபர் ஆச்சரியம்" ஒன்றை நடத்த இருப்பதாகத் தெரிகிறது; இது ஜனநாயகக் கட்சியின் முக்கிய அமைப்புக்களுக்கு தீவிர கவலையை கொடுக்கிறது. ஒரு பயங்கரவாதத் தாக்குதலை அமெரிக்க மண்ணில் நடத்த நிர்வாகம் அனுமதித்துவிடுமோ என்ற அச்சுறுத்தலே அது; அல்லது மற்றொரு இராணுவத் தாக்குதல் அமெரிக்க மக்களை திகைக்கவைத்து அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுக்கக் கூடிய வகையில் தொடக்கப்பெறலாம். ஆனால் 2004 ம் ஆண்டு ஸ்பெயின் அரசாங்கம் பயங்கரவாத குண்டுவீச்சை தன்னுடைய அரசியல் நோக்கத்திற்கு பயன்படுத்த முற்பட்டமை தோல்வி அடைந்ததுபோல், இத்தகைய தந்திரங்கள் அவற்றைச் செய்பவர்களைத்தான் பாதிக்கும்.

ஜனநாயகக் கட்சியினர் பெரும் வெற்றியைப் பெற்றால், அரசியல் உட்தாக்கங்கள் தொலைதூர விளைவு கொண்டனவாக இருக்கும். குடியரசு நிர்வாகத்திற்கு எதிரான தேர்தல் முடிவுகள் என்பது அடிப்படை மாற்றம் வேண்டும் என்பதை மக்களின் பரந்த அடுக்குகள் உறுதியுடன் விரும்புகின்றன என்பதை பிரதிபலிக்கும்.

ஆனால் நாங்கள் உறுதியாகக் கூறுவது ஒரு ஜனநாயகக் கட்சியின் வெற்றி மூலம் அது நடைபெறாது. ஜனநாயகக் கட்சி காங்கிரஸ் கட்டுப்பாட்டை அடுத்த மாதம் பெற்று 2008ல் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றாலும், அவை அடிப்படையில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் குற்றம் சார்ந்த இராணுவ ஆக்கிரமிப்புக் கொள்கையை மாற்றப் போவதில்லை. ஜனநாயகக் கட்சி வெற்றி என்பது ஈராக்கில் அமெரிக்க ஆக்கிரமிப்பு மற்றும் ஏராளமானோர் கொலைசெய்யப்படுவதற்கு முற்றுப் புள்ளி வைக்காது; இன்னும் புதிய கூடுதலான கொடூரமான போர்கள், வரவிருக்கும் மாதங்களிலும் ஆண்டுகளிலும் வருவதையும் அது தவிர்க்க முடியாது.

ஜனநாயகக் கட்சியனரின் வலதுசாரி பிரச்சாரம்

அமெரிக்க அரசியலின் இந்த உண்மையை ஜனநாயகக் கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தில் இருக்கும் வலதுசாரித் தன்மையைவிடத் தெளிவாக வேறு ஏதும் காட்டப்போவதில்லை. பயங்கரவாதத்தை பற்றிய விவாதம் கூடாது என்று அவர்கள் இராணுவ விசாரணைக் குழு சட்டத்தை காங்கிரசில் இயற்றுகையிலும் ஒதுங்கிக் கொண்டது பற்றி நான் ஏற்கனவே கூறியுள்ளேன்.

செப்டம்பர் இறுதியில் இரண்டு நிகழ்வுகள் வெளிப்பட்டு அவை புஷ்ஷின் வெள்ளை மாளிகை மற்றும் குடியரசுக் கட்சிக்கு அரசியல் தொல்லை கொடுக்கும் என்று WSWS ல் நாங்கள் சுட்டிக் காட்டியிருந்தோம். முதலில் வந்தது Staste of Denial என்ற தலைப்பில் Bob Woodward எழுதிய புத்தகமாகும்; இதில் CIA இன் தலைவர் ஜோர்ஜ் டெனட் செப்டம்பர் 11 தாக்குதல்களுக்கு இரண்டு மாதங்கள் முன்னரே, நிர்வாகத்திற்கு அமெரிக்காவை இலக்கு கொண்ட அல்கொய்தா தவிர்க்க முடியாத வகையில் தாக்குதல் நடத்தும் என்று எச்சரித்தார் என்றும், இந்த எச்சரிக்கை "கண்டனப் புறக்கணிப்பு" என்று விவரிக்கப்படுவதை பெற்றது என்பதும் ஆகும்.

இந்த வெளிப்பாட்டின் உட்குறிப்பு --அதுவும் இதுகாறும் புஷ்ஷின் வெள்ளை மாளிகையின் உத்தியோகபூர்வ வரலாறு எழுதுபவராக இருந்தவரிடம் இருந்து வருவது என்பது-- பெரும் அதிர்ச்சியைத் தருவது ஆகும். இந்த அரசாங்கம்தான் 9/11 பூதத்தைக் காட்டியே தன்னுடைய கொள்கைகள் அனைத்தையும் நியாயப்படுத்தி வந்துள்ளது.

அன்றைய தினத்தின் சோக நிகழ்வுகள் இன்னும் ஒரு தீவிர, சுதந்திர விசாரணைக்கு உட்படுத்தப்பட வில்லை; ஒரு அதிகாரிகூட பதவி இறக்கம் என்ற தண்டனைகூட கொடுக்கப்படவும் இல்லை; இதுவோ நாட்டின் வரலாற்றிலேயே மிக வெளிப்படையான முறையில் பாதுகாப்பு, உளவுத்துறை தோல்வியாகும். நிகழ்வுகளை ஆராய்ந்தால் அமெரிக்க அரசாங்கத்தின் மிக உயர்மட்ட அளவுகளில் ஒத்துழைப்பு, வசதிசெய்து கொடுத்தல் ஆகியவை இருந்தது என்பது தடையின்றி புலப்படுகிறது. இந்நிகழ்வு நடக்க வேண்டும், அதையொட்டி புஷ் வெள்ளை மாளிகைக்கு நுழையும் முன்னரே தயாரிக்கப்பட்டிருந்த போர்த்திட்டங்கள் செயல்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

வூட்வார்ட் தகவல்கள் வெளிவந்த அன்றே, புளோரிடாவின் குடியரசு காங்கிரஸ் உறுப்பினர், Mark Foley, காங்கிரஸ் சிறுவயது பணியாளர்களுக்கு கெளரவமற்ற உடனடித் தகவல்கள் அனுப்பிவைத்தார் என்ற செய்தியும் வந்தது.

இந்த இரண்டு நிகழ்வுகளில் எதனை பெரிய பிரச்சினையாக ஜனநாயக வாதிகள் பிரச்சாரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நீங்கள் கருதுவீர்கள்? அவர்கள் Foley யின் பாலியல் இழிசெயல் நிகழ்வைத்தான் எடுத்துக் கொண்டனர்; தொலைக்காட்சி நிறுவனங்கள் நாடு முழுவதும் இதைப் பற்றிப் பேசின; அதே நேரத்தில் புஷ் நிர்வாகத்தின் பொறுப்பு, உள்நாட்டுப் போருக்கு பின்னர் அமெரிக்க மண்ணில் மிக மோசமான உயிரிழப்பின் பொறுப்பு பற்றிய சான்றுகளை அது புறக்கணித்தது.

ஜனநாயகக் கட்சியினர், ஈராக் போருக்கான மக்களுடைய எதிர்ப்பை தங்களுடைய அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்திக் கொள்ளவும் முயன்றனர். என்னுடைய எதிர்ப்பாளர் ஹில்லாரி கிளின்டன் இந்த அணுகுமுறைக்கு தக்க உதாரணம் ஆவார். புஷ் நிர்வாகத்தின் ஈராக் கொள்கைக்கு எதிரி என்று காட்டிக் கொண்டாலும், எண்ணெய்க்கு எதிரான போரை இவ்வம்மையார் எதிர்க்கவில்லை; வேலையை திறமையாகச் செய்யாத நிர்வாகம் என்ற உண்மை பற்றி அவர் சினந்துள்ளார்.

ஈராக் கொள்கையை குறைகூறி, பாதுகாப்பு மந்திரி டொனால்ட் ரம்ஸ்பெல்டின் இராஜிநாமாவை கோரும் அளவிற்கு சென்றுள்ள கிளின்டன் அண்மையில் நிர்வாகம் பல தவறான முடிவுகளுக்கு வந்துள்ளது என்றும் கூறியுள்ளார். அவற்றுள் ஒன்று, அவர் கூறுவதை நான் மேற்கோளிடுகிறேன், "சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்த போதுமான படைகளுடன் நாம் செல்லவில்லை; எமது அதிகாரத்தை செவ்வனே தெளிவாக்கும் வகையில் படைகளை கொண்டு செல்லவில்லை." இவர் என்ன கூறுகிறார்? ஈராக்கிய மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட மகத்தான வன்முறை, 2003ல் நிகழ்ந்த "அதிர்ச்சி, பெரும் வியப்பு" தாக்குதல், பின்னர் பல்லுஜா போன்ற நகரங்களில் சாதாரண மக்கள் படுகொலை செய்யப்பட்டது இவை அனைத்தும் போதவில்லையா? இன்னும் கூடுதலான படைகளையும் கருவிகளையும் அனுப்பி கூடுதலான இரத்தக் கறையை இவர் விரும்புகிறார் - மக்களை அச்சுறுத்தவதற்கும் எதிர்ப்பை அடக்குவதற்கும்தான்.

கிளின்டனும் மற்ற முன்னணி ஜனநாயகக் கட்சியினரும் ஈராக்கில் "அமெரிக்கப் படைகளை கட்டம் கட்டமாய் வேறிடத்திற்கு அனுப்புதல்" என்பதிலிருந்து "இன்னும் குறைந்த செயற்பாடுகளை மட்டும் கொள்ளுதல்" என்பது வரையிலானதை கொண்டிருக்கும் கொள்கையை பரவவிடுகின்றனர். நடைமுறையில் இச்சொற்கள் தரும் பொருள், ஈராக்கில் பல்லாயிரக்கணக்கான அமெரிக்க படைகள் தொடர்ந்து நிறுத்தப்படும், வான்வழித் தாக்குதல் ஈராக்கிய தடுப்பு மையங்கள் மீது தீவிரப்படுத்தப்படும், நாட்டின் எண்ணெய் வளத்தை அமெரிக்கா கட்டுப்படுத்தும் முயற்சிகள் தொடரும் என்பதுதான்.

உள்நாட்டுப் பிரச்சினைகளில் ஜனநாயகக் கட்சியினர் இதே போல் உண்மையான மாற்றீடு எதையும் கொடுக்கவில்லை. நிதிய, பெருநிறுவன நலன்கள் இக்கட்சி மீதும் --- அதேபோல் குடியரசுக் கட்சி மீதும் -கட்டுப்பாட்டை இயக்குவது- உறுதிசெய்யப்பட்டுள்ளதால்தான் இத்தகைய நிலை உள்ளது.

2008 ஜனாதிபதி வேட்பாளர் தகுதிக்கு கட்சியின் முன்னணியில் இருக்கும் ஹில்லாரி கிளின்டன் மீண்டும் ஒரு நல்ல உதாரணமாக உள்ளார். 40 மில்லியன் டாலர்களுக்கும் மேலாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ள மறு தேர்தல் பிரச்சார நிதியை இவர் சேர்த்துள்ளார்; பெருநிறுவன அமெரிக்காவுடன் இவர் கொண்டுள்ள ஆதரவின் வெளிப்பாடு இது. வோல் ஸ்ட்ரீட் நிதிய அமைப்புக்கள், முக்கிய மருந்து நிறுவனங்கள், சுகாதாரப்பராமரிப்பு பெருநிறுவனங்கள் மற்றும் பெருவணிகத்தின் பல பகுதிகளில் இருந்து இவர்தான் ஒன்றில் மிக அதிகமாக நிதியை பெற்றவர் அல்லது அதிகமாகப் பெற்றவருக்கு அடுத்த நிலையியில் உள்ளவராக இருக்கிறார். அவரும் ஜனநாயகக் கட்சியினரும் புஷ்ஷினாலும், அதற்கு முன்பு இவருடைய கணவராலும் ஆரம்பிக்கப்பட்ட தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்களை தாக்குவதை தொடர்வர்.

இத்தேர்தலில் சோசலிச சமத்துவக் கட்சியால் பிரச்சாரம் அந்த அளவுக்கு தீர்மானகரமானதாக மேற்கொள்ளப்படுவதற்கு இதுதான் காரணமாகிறது. இந்தப் பிரச்சாரத்தை பற்றி நாங்கள் முற்றிலும் செயல்திற மனப்பான்மை கொண்டிருக்கிறோம். எங்களுடைய வேலைத்திட்டத்திற்கு ஆதரவு வேண்டும் என்பதற்காக பிரச்சாரம் செய்கிறோம்; தொழிலாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள் எங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கோருகிறோம்; ஆனால் எங்களுடைய முக்கிய நோக்கம் வாக்குகள் பெறுவது மட்டும் அல்ல. மாறாக நாங்கள் போர், சமூக சமத்துவமின்மை ஆகியவற்றிற்கு ஆதாரமான முதலாளித்துவ அமைப்பை பற்றி தொழிலாள வர்க்கத்தை அரசியல் ரீதியாக பயிற்றுவிக்க, சோசலிசத்திற்கான போராட்டத்தை சர்வதேசரீதியாக ஒருங்கிணைத்து நடத்தும் அடிப்படையில் ஒரு புதிய கட்சியை கட்டியமைப்பதற்கான தேவையை உணர்த்த, இப்பிரச்சாரத்தை பயன்படுத்த நோக்கங்கொண்டுள்ளோம்.

இத்தேர்தலின் முடிவுகள் எப்படி இருந்தாலும், அவை இன்னும் அதிகரித்த வகையில் மக்கள் ஜனநாயகக் கட்சியிடம் ஏமாற்றத்தையும், எதிர்ப்பு கொள்ளப் போவதையும் ஆழ்ந்த முறையில் செய்துவிடும். எங்கள் பிரச்சாரமும், நாங்கள் முன்னெடுக்கும் வேலைத்திட்டமும் தொழிலாளர்களுக்கு இலாப அமைப்பிற்கு எதிரான போராட்டத்தை நடத்துவதற்கு ஒரே உண்மையான மாற்றீடு ஆகும்.

உலகம் முழுவதும் நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவில் உள்ள எமது தோழர்களுடன் பொதுப் போராட்டத்தில் இணைந்து செயல்பட்டு சோசலிச சமத்துவக் கட்சியை கட்டியமைத்தல், என்பதுதான் ஒரே மாற்றீடாகும். இப்பிரச்சாரத்தில் நீங்கள் அனைவரும் பங்கு கொள்ள வேண்டும், எங்கள் வேலைத்திட்டங்களை கவனமாகப் படிக்க வேண்டும், இக்கட்சியில் சேர முடிவெடுக்க வேண்டும் என்று உங்களுக்கு பரிந்துரை செய்கிறேன்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved