World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan peace talks collapse amid intensifying civil war

உக்கிரமடைந்து கொண்டிருக்கும் உள்நாட்டு யுத்தத்தின் மத்தியில் இலங்கை சமாதானப் பேச்சு முறிந்துபோனது

By K. Ratnayake
31 October 2006

Use this version to print | Send this link by email | Email the author

இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடந்த வாரக் கடைசியில் ஜெனீவாவில் நடந்த பேச்சுவார்த்தைகள், அடுத்த சுற்றை தீர்மானிப்பது உட்பட எந்தவொரு விடயம் தொடர்பாகவும் உடன்பாடுகளின்றி முறிந்து போனது. பேச்சுவார்த்தைகள் முறிந்துபோனமையானது தவிர்க்க முடியாமல் ஏற்கனவே இந்த ஆண்டு ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலிகொண்ட யுத்தம் மேலும் விரிவடைவதற்கு வழிவகுக்கும்.

பேச்சுக்கள் முடிவடைந்து சில மணி நேரங்களுக்குள்ளேயே வடக்கில் யாழ்ப்பாணக் குடநாட்டில் நாகர் கோவில் மற்றும் முகமாலையில் இராணுவத்திற்கும் புலிகளுக்கும் இடையில் கடுமையான ஆட்டிலரி தாக்குதல்கள் வெடித்தன. ஜெனீவாவில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளையிலும் கூட யாழ்ப்பாணத்திற்கு சென்ற இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, அங்கு உள்ளூர் தளபதிகளை சந்தித்ததோடு "பாதுகாப்பு நிலைமைகள்" தொடர்பாகவும் கலந்துரையாடினார்.

ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, தனது அரசாங்கம் பேச்சுவார்த்தை மூலமான சமாதானத்தை விரும்புகிறது என்ற மேலும் மேலும் தேய்ந்து போய்க்கொண்டிருக்கும் கருத்தை பேணுவதற்காக மட்டுமே "நிபந்தனைகளின்றி" ஜெனீவாவிற்கு பிரதிநிதிகள் குழுவொன்றை அனுப்ப உடன்பட்டார். அவர் கடந்த ஜூலையில், 2002ல் கைச்சாத்திடப்பட்ட யுத்த நிறுத்தத்தை மீறி கிழக்கில் புலிகளின் கட்டுப்பாட்டிலான மாவிலாறு மற்றும் சம்பூர் பிரதேசங்களையும் மற்றும் யாழ்ப்பாணக் குடாநாட்டில் முகமாலை பிரதேசத்தின் பகுதிகளையும் கைப்பற்ற தாக்குதல் நடத்துமாறு இராணுவத்திற்குக் கட்டளையிட்டார்.

புலிகளால் கைப்பற்றப்பட்ட பிரதேசங்களை அவர்களிடமே விட்டுவிடுவதற்கு வழிவகுக்கக் கூடிய 2002 யுத்த நிறுத்தத்திற்கு மீண்டும் திரும்பும் எண்ணம் அரசாங்கத்திடம் கிடையாது. இதன் விளைவாக, ஜெனீவாவில் எதாவதொரு மட்டுப்படுத்தப்பட்ட உடன்பாட்டை கூட அடைவதறான வாய்ப்புகள் தொடக்கத்தில் இருந்தே பலவீனமாக காணப்பட்டன.

கடந்த வாரக் கடைசியில் சண்டே டைம்ஸ் பத்திரிகையின் பாதுகாப்பு நிருபர் இக்பால் அத்தாஸ் குறிப்பிட்டிருந்ததாவது: "கெரில்லாக்களின் இராணுவ இயலுமை பலவீனமடையும் வரை பாதுகாப்புப் படைகள் தொடர்ந்தும் தாக்குதல்கள் நடத்துவதை விரும்பும் சக்திவாய்ந்த குழுக்கள் கொழும்பில் உள்ளன." அத்தாஸுக்கு இலங்கை இராணுவம் மற்றும் புலணாய்வுத் துறை ஸ்தாபனத்துடன் நெருங்கிய உறவு உண்டு.

இரண்டு நாள் பேச்சுவார்த்தைக்கு ஒரு நிகழ்ச்சி நிரலைத் தயாரிப்பதில் கூட உடன்பாடு இருக்கவிலலை. இரு தரப்பையும் நெருக்க முயற்சித்த நோர்வே சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெயிம், பேச்சுவார்த்தை தோல்விகண்டால் அரசாங்கம் உதவி நிதியை இழக்கும் எனவும் புலிகள் சர்வதேச ரீதியில் மேலும் தனிமைப்படுத்தப்படும் எனவும் எச்சரித்தார். ஆனால் இந்த அச்சுறுத்தல்களில் நன்மை இருக்கவில்லை.

மூடிய கதவுக்குள் நடந்த நிகழ்வுகளில் கடுமையான குரோதம் நிறைந்த வார்த்தைகள் பரிமாறிக்கொள்ளப்பட்டதை ஊடக அறிக்கைகள் சுட்டிக் காட்டின. டெயிலி மிரர் பத்திரிகையின் படி, புலிகளின் பிரதான பேச்சுவார்த்தையாளரான சு.ப. தமிழ்செல்வன், புலிகள் "கடந்த காலத்தை மறக்க" விரும்புவதாகத் தெரிவித்ததோடு சம்பூர் மற்றும் ஏனைய பிரதேசங்களுக்கு மீண்டும் திரும்புவதைப் பற்றிய பிரச்சினையை எழுப்பவில்லை. வடக்கில் துண்டிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் உள்ள மக்களுக்கு உணவு மற்றும் ஏனைய விநியோகங்கள் சென்றடைய வழிவகுப்பதன் பேரில், புலிகளின் பிரதேசத்தின் ஊடாக யாழ்ப்பாணத்திற்கு செல்லும் ஏ-9 வீதியை மீண்டும் திறப்பதே புலிகளின் பிரதான கோரிக்கையாக இருந்தது.

எவ்வாறெனினும், இந்தக் கோரிக்கையை நிராகரித்த அரசாங்கப் பிரதிநிதிகள் கடல் மார்க்கமாக உணவுப் பொருட்களை எடுத்துச் செல்வதை மட்டுமே விரும்பியது. பிரதான பேச்சுவார்த்தையாளரான நிமல் சிறிபால டீ சில்வா, புலிகளின் கட்டுப்பாட்டிலான பிரதேசத்தில் அரசாங்க நீதிமன்றங்கள், பொலிஸ் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளையும் இயங்க அனுமதிப்பதன் மூலம் வடக்கு கிழக்கில் "வழமை நிலைமையை" ஏற்படுத்துமாறு ஆத்திரமூட்டும் விதத்தில் புலிகளுக்கு அழைப்புவிடுத்தார். இத்தகைய நகர்வு, புலிகளின் இராணுவ நிலைமையை மேலும் கீழறுப்பதோடு புலிகளின் பிராந்தியத்தில் அரசாங்கத்தினதும் இராணுவத்தினதும் ஆத்திரமூட்டல்களுக்கும் கதவுகளைத் திறந்துவிடும்.

பேச்சுவார்த்தை முடிவில் ஏ-9 பாதை சம்பந்தமான விவகாரத்தால் முறிந்து போனது. இந்த நெடுஞ்சாலை "பாதுகாப்புக் காரணங்களால்" மூடப்பட்டிருப்பதாக வலியுறுத்திய டீ சில்வா, தமது பிராந்தியத்தின் ஊடாகச் செல்லும் வாகனங்களுக்கு முன்னர் புலிகள் அசாதாரணமான வரி அறவிட்டதாக குற்றஞ்சாட்டினார். மனிதாபிமான விநியோகங்கள் யாழ்ப்பாணத்தை சென்றடைய அனுமதிப்பதன் பேரில் வீதியை கண்காணிக்க நோர்வே தலைமையிலான இலங்கை கண்காணிப்புக் குழு விருப்பம் தெரிவித்ததையும் அவர் நிராகரித்தார்.

புலிகள் ஊடகங்களுக்கு விடுத்த அறிக்கையில், எந்தவொரு புதிய சுற்றுப் பேச்சுக்களுக்கும் முன்னதாக ஏ-9 பாதை திறக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினர். "ஏ-9 நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளமையால் இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள யாழ்ப்பாணக் குடாநாடு 600,000ற்கும் மேற்பட்டவர்களின் திறந்தவெளி சிறைச்சாலையாகியுள்ளது" எனப் பிரகடனம் செய்த புலிகள், இந்த தடையை ஒரு புதிய "பேர்லின் சுவர்" என வகைப்படுத்தினர்.

பேச்சுவார்த்தையின் முடிவில்: "இரு தரப்பினரும் யுத்த நிறுத்தத்திற்கு தாம் கட்டுப்படுவதாக வழியுறுத்திக் கூறியதோடு எந்தவொரு இராணுவத் தாக்குதலையும் முன்னெடுக்கப் போவதில்லை என வாக்குறுதி அளித்தனர்" என சொல்ஹெயிம் பிரகடனம் செய்தார். ஆனால், அரசாங்கமும் இராணுவமும் யுத்த நிறுத்தத்தை புறக்கணித்து "மனிதாபிமானம்" மற்றும் "தற்காப்பு" என்ற பலவித சாக்குப் போக்குகளின் கீழ் புலிகளின் பிராந்தியத்தைக் கைப்பற்றும் தமது உள்நோக்கத்தை மீண்டும் மீண்டும் வெளிப்படுத்தியுள்ளன.

ஏ-9 நெடுஞ்சாலையை மீண்டும் திறக்க அரசாங்கம் மறுத்து வருவதற்கான பிரதான காரணம், அது மூடப்பட்டிருப்பது புலிகள் மீதான அழுத்தத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க இராணுவத்தை அனுமதிப்பதாலேயே ஆகும். இந்த வீதியருகில் உள்ள பிரதான மூலோபாய பிரதேசங்களை மீண்டும் கைப்பற்றுவதற்காக ஒரு தாக்குதலை முன்னெடுப்பது இராணுவத்தின் தேவையாக உள்ளது. இவற்றில் யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கான பிரதான நுழைவாயிலான ஆனையிறவும் அடங்கும். 2000 ஆண்டில் முதற் தடவையாக இராணுவம் அதை இழந்தது.

அக்டோபர் 11 அன்று ஆனையிறவுக்கு வடக்கே முகமாலையில் உள்ள புலிகளின் நிலைகளுக்கு எதிராக இராணுவம் ஒரு மிகப் பெரும் தாக்குதல் நடவடிக்கையை முன்னெடுத்த போதிலும், அதில் தோல்விகண்டது. புலிகளின் பிராந்தியத்தில் உயிரிழந்த 75 சிப்பாய்களின் சடலங்களை அவர்கள் கையளித்ததை அடுத்து "தற்காப்புக்காக" என்ற இராணுவத்தின் சாக்குப் போக்கு பொய்யானது என விரைவில் அம்பலத்திற்கு வந்தது. அன்று இடம்பெற்ற கடுமையான மோதலில் கிட்டத்தட்ட 130 சிப்பாய்கள் கொல்லப்பட்டதோடு 500 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

புலிகள் அக்டோபர் 16 அன்று ஹபரண நகருக்கு அருகில் குறைந்த பட்சம் 116 கடற்படையினரைக் கொன்ற தற்கொலைத் தாக்குதல் மூலமும் மற்றும் அக்டோபர் 25 அன்று தெற்குத் துறைமுகமான காலியில் உள்ள கடற்படைத் தளத்தின் மீது நடத்திய தாக்குதலின் மூலமும் பதிலளித்தனர். பேச்சுக்கள் கவிழ்ந்து போனதை அடுத்து, இராணுவம் யாழ்ப்பாணக் குடாநாட்டில் இன்னொரு தாக்குதலுக்குத் தயாராகிக்கொண்டிருப்பதாக புலிகள் எச்சரித்தனர்.

கொழும்பு அரசியல்

இராஜபக்ஷ இரண்டு காரணங்களுக்காக தனது அரசாங்கத்தின் வலிந்து தாக்கும் இராணுவக் கொள்கைகளை உரு மறைத்துக் காட்டுவதில் கவனமாக உள்ளார். முதலாவதாக, 1983ல் இருந்து பத்தாயிரக்கணக்கான உயிர்களைப் பலிகொண்டுள்ள உள்நாட்டு யுத்தத்திற்கு மீண்டும் திரும்புவதை ஜனத்தொகையில் மிகப் பெரும்பான்மையானவர்கள் விரும்பவில்லை. இரண்டாவதாக, தன்னுடைய நிபந்தனைகளின் அடிப்படையில் புலிகளை பேச்சுவார்த்தை மேசைக்குத் தள்ளுவதில் பெரும் சர்வதேச சக்திகளின் ஆதரவை தக்கவைத்துக் கொள்வதை நிச்சயப்படுத்திக் கொண்டிருக்கின்றார்.

இராஜபக்ஷ கடந்த நவம்பரில் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் இரு சிங்களத் தீவிரவாதக் கட்சிகளான மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) மற்றும் ஜாதிக ஹெல உறுமயவின் ஆதரவுடன் ஒரு குறுகிய வெற்றியைப் பெற்றார். அவரது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (ஸ்ரீ.ல.சு.க) ஒரு உத்தியோகபூர்வ கூட்டணியை ஸ்தாபிப்பதற்காக ஜே.வி.பி. தலைவர்களுடன் நீண்ட பேச்சுக்களை நடத்திய போதிலும், அரசாங்கம் 2002 யுத்த நிறுத்தத்தை ஒதுக்கித் தள்ள வேண்டும் எனவும் சர்வதேச "சமாதான முன்னெடுப்பின்" உத்தியோகபூர்வ அனுசரணையாளரான நோர்வேயின் சேவையை நிறுத்த வேண்டும் எனவும் ஜே.வி.பி. வலியுறுத்தியதை அடுத்து பேச்சுவார்த்தைகள் முறிந்து போயின.

கடந்த வாரம், ஸ்ரீ.ல.சு.க. எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியுடன் (ஐ.தே.க) உடன்படிக்கை ஒன்றை கைச்சாத்திட்டு நீண்ட கால எதிரிகளின் கூட்டணி ஒன்றை முதற் தடவையாக ஸ்தாபித்துக்கொண்டது. 2002ல் ஆட்சிக்கு வந்த ஐ.தே.க., புலிகளுடன் யுத்த நிறுத்த உடன்படிக்கையை கைச்சாத்திட்டு யுத்தத்திற்கு முடிவுகட்டுவதற்காக ஒரு அதிகாரப் பரவலாக்கல் கொடுக்கல் வாங்கலைப் பேச்சுவார்த்தை நடத்த முயற்சித்த போதிலும், பேச்சுவார்த்தைகள் அடுத்தடுத்து ஸ்ரீ.ல.சு.க, ஜே.வி.பி, மற்றும் இராணுவத்தாலும் கீழறுக்கப்பட்டன. ஸ்ரீ.ல.சு.க--ஐ.தே.க கூட்டணி, யுத்தத்திற்கு முடிவுகட்டுவதற்கான "பொது ஒருமைப்பாட்டை" உள்ளடக்கிக் கொண்டிருந்த போதிலும், இந்த உடன்படிக்கை இராணுவம் தனது நடவடிக்கைகளை தொடர்வதற்கான முழு சாதனத்தையும் கொடுத்துள்ளது.

அவர்கள் நாட்டைக் காட்டிக்கொடுக்கின்றனர் என்ற ஜே.வி.பி. யின் குற்றச்சாட்டுக்களையிட்டு இரு கட்சிகளும் கூர்மையாக நுண்ணுணர்வடைந்துள்ளன. ஜெனீவா பேச்சுக்களின் போது, எந்தவொரு பேச்சுவார்த்தையையும் ஆட்சேபிப்பதற்காக ஒரு விரிவான "மக்கள் சந்திப்பு" நிகழ்ச்சியை ஜே.வி.பி. ஏற்பாடு செய்திருந்தது. ஸ்ரீ.ல.சு.க.--ஐ.தே.க. கூட்டணி, "புலிப் பயங்கரவாதிகளுக்கு அனுகூலமான பேச்சுவார்த்தை மேசைக்கு வழிவகுப்பதோடு புலிப் பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்கான மட்டுப்படுத்தப்பட்ட யுத்த நகர்வுகளின் வீரியத்தை குறைக்கின்றது" என ஜே.வி.பி. கண்டனம் செய்தது. ஜே.வி.பி. புலிகளை முற்றாக அழிக்கும் ஒரு ஒட்டுமொத்த தாக்குதலுக்கு குறைந்த எதையும் கோரவில்லை.

ஜெனீவா பேச்சுவார்த்தைகளின் முறிவானது கொழும்புடன் ஒரு அதிகாரப் பரவலாக்கல் ஒழுங்கை ஏற்படுத்திக்கொள்வதற்காக பெரும் வல்லரசுகளின் ஆதரவை பெற்றுக்கொள்வதை இலக்காகக் கொண்ட புலிகளின் அரசியல் முன்னோக்கை மீண்டும் அம்பலப்படுத்தியுள்ளது. 2002 யுத்த நிறுத்தத்திற்கு கட்டுப்படுமாறு இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என இணைத் தலைமைகளையும் மற்றும் "சர்வதேச சமூகத்தையும்" கோருவதே ஜெனீவா பேச்சுக்களின் அதன் பிரதான வேண்டுகோளாக இருந்தது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் மற்றும் நோர்வே அடங்கிய இணைத் தலைமை நாடுகள், இலங்கைக்கான சர்வதேச நிதி வழங்குபவர்கள் குழுவையும் மற்றும் சமாதான முன்னெடுப்புகள் என சொல்லப்படுவதையும் மேலாண்மை செய்கின்றன.

எவ்வாறெனினும், இந்த பூகோள வல்லரசுகள், தெற்காசியாவில் தமது சொந்த நலன்களை விரிவுபடுத்துவதற்கான வழிமுறையாக மட்டுமே இலங்கையின் சமாதானத்தில் நாட்டம் கொண்டுள்ளன. அமெரிக்கா குறிப்பாக புலிகளை நிராயுதபாணியாக்கி ஒரு அற்ப அரசியல் பாத்திரத்தை இட்டு நிரப்பச் செய்ய நெருக்குவதைக் குறிக்கோளாகக் கொண்டுள்ளது. வாஷிங்டன் கொழும்புக்கு இராணுவ உதவிகளை விநியோகிக்கக் கூடும் என்ற சமிக்ஞையை அமெரிக்க அதிகாரிகள் விடுத்துள்ளனர். பேச்சுவார்த்தைகளுக்கு சற்று முன்னதாக, இலங்கை மற்றும் அமெரிக்க இராணுவங்கள் முதற் தடவையாக ஒரு கூட்டு கடல் மற்றும் தரைப் பயிற்சியை மேற்கொள்ளத் தீர்மானித்திருந்தன. இந்தப் பயிற்சி கடைசி நிமிடத்திலேயே ஒத்தி வைக்கப்பட்டது.

இணைத் தலைமை நாடுகள் பாரபட்சமின்றி நடுநிலை வகிப்பவர்களாக காட்டிக்கொண்ட போதிலும், இலங்கை இராணுவத்தின் ஆத்திரமூட்டல் நடவடிக்கைகள் பற்றியோ அல்லது புலிகளின் பிராந்தியத்தின் மீது அது வெளிப்படையாக மேற்கொள்ளும் ஆக்கிரமிப்பைப் பற்றியோ விமர்சிக்கவில்லை. அக்டோபர் 19-20 ஆகிய திகதிகளில் கொழும்பிற்கு விஜயம் செய்திருந்த அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் துணை செயலாளர் ரிச்சர்ட் பெளச்சர், அமெரிக்கா சமாதானப் பேச்சுக்களுக்கு ஆதரவளிக்கின்ற அதே சமயம் "பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவதில் அரசாங்கத்துடனும் இலங்கை மக்களுடனும் நிற்கின்றது" என வெளிப்படையாக பிரகடனம் செய்தார்.

இலங்கையில் துரிதமடைந்து வரும் உள்நாட்டு யுத்தத்திற்கான அரசியல் பொறுப்பாளிகள், இராஜபக்ஷ அரசாங்கத்துடன் சேர்ந்துகொண்டுள்ள அமெரிக்காவும் ஏனைய வல்லரசுகளுமேயாகும்.