World Socialist Web Site www.wsws.org


European governments cover up illegal CIA abductions

ஐரோப்பிய அரசாங்கங்கள் சட்ட விரோத CIA கடத்தல்களை மூடிமறைக்கின்றன

By Martin Kreickenbaum
23 May 2006

Back to screen version

ஐரோப்பிய ஒன்றியத்தில் பயங்கரவாதிகள் என சந்தேகத்திற்குரியவர்கள் CIA அமைப்பினால் கடத்தப்பட்டு வேறு நாடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு சிந்திரவதைக்கு உட்படுத்தப்பட்டனர். ஐரோப்பிய அரசாங்கங்கள் இத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகளை பற்றி அறிந்திருந்ததோடு, அவற்றில் தொடர்பும் கொண்டிருந்தனர்.

இது, ஐரோப்பாவிற்குள் CIA சட்டவிரோத நடவடிக்கைகளை ஆய்வு செய்த ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தின் துணைக்கமிட்டி தன்னுடைய முதல் இடைக்கால அறிக்கையில் கொடுத்துள்ள முடிவாகும். ஐரோப்பிய குழுவின் சிறப்பு ஆய்வாளரான டிக் மார்ட்டியும் பெப்ரவரி மாதம் இதேபோன்ற முடிவிற்குத்தான் வந்திருந்தார். நாற்பத்தி ஆறு ஐரோப்பிய நாடுகள் ஐரோப்பிய குழுவினுள் அடங்குவர்; இது ஐரோப்பிய பாராளுமன்றம், ஐரோப்பிய ஒன்றியத்தின் 25 உறுப்பினர் நாடுகளின் பிரதிநிதிகளையும் கொண்டுள்ளது.

எந்த அளவிற்கு CIA கடத்தல்களின் சாத்தியங்கள் என்பது பற்றியும், வேறுநாடுகளில் உள்ள இரகசிய சிறைகளுக்கு எடுத்துச்சென்றுள்ளது பற்றியும் நான்கு மாதங்களாக ஐரோப்பிய பாராளுமன்றம் ஆய்வு செய்து வருகிறது; அதனிடம் இப்பொழுது 2001ல் இருந்து ஐரோப்பாவில் CIA ஆயிரத்திற்கும் மேலான பதிவு செய்யப்படாத விமான பயணங்களை மேற்கொண்டதற்கு சாட்சியங்கள் உள்ளன.

இடைக்கால அறிக்கை கூறும் முடிவுரையாவது: "CIA தான் பல விவகாரங்களிலும் உறுப்பினர் நாடுகளில் இருந்தும், பயங்கரவாதிகள் எனக் கருதப்பட்டோரை சட்டவிரோத கடத்தல் மற்றும் சிறையில் தள்ளலுக்கும், அசாதாரண முறையில் அவர்கள் இடம்மாற்றப்பட்ட விதத்திலும், CIA தெளிவான முறையில் பொறுப்புக் கொண்டுள்ளது; இன்னும் சில விவகாரங்களில் இதில் ஐரோப்பிய குடிமக்களும் தொடர்பு கொண்டிருந்தனர்.

இத்தகைய அசாதாரண கைதி மாற்றல் அல்லது "திரும்பக்கொடுத்தல்" என அழைக்கப்படுபவை சர்வதேச சட்டத்தை தெளிவாக மீறியவை எனக் கூறப்படுகின்றன, "சந்தேகத்திற்குரியவர்கள் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தாத வகையில்" செயல்படுவதை இச்செயல்கள் இலக்காக கொண்டிருந்தன என்று அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. "CIA இரகசியமாக கடத்தியுள்ளது, சிறையில் அடைத்தது, மற்றும் சந்தேகத்திற்குரியவர்களை வேறு இடத்திற்கு மாற்றியது" என்று அறிக்கை கூறியுள்ளது. அவர்கள் எகிப்து, ஜோர்டான், சிரியா மற்றும் ஆப்கானிஸ்தான் உட்பட பல நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்; "அமெரிக்க அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளபடி அந்நாடுகள் சித்திரவதை செய்யும் வழக்கம் உடையவை."

இந்த அறிக்கையை எழுதிய இத்தாலியரான Giovanni Fava (ஐரோப்பியப் பாராளுமன்றத்தில், PSE சமூக ஜனநாயக பாராளுமன்ற குழுவை சேர்ந்தவர்), "அது ஏதோ ஒரு சில தனிப்பட்ட நபர்களை பற்றியது என்றில்லாமல் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் தொடர்பு கொண்டிருந்த செயற்பாடு ஆகும்" என்று வர்ணித்துள்ளார். அவர் குறிப்பிட்ட மற்றய முக்கிய கருத்துக்களில் ஒன்று CIA விமானங்களில் பயணித்திருந்தவர்கள் அதே முகவர்கள்தாம்; சுற்றுவழியில் விமானங்கள் பறந்து சென்றது மட்டுமே சந்தேகங்களை அதிகரித்திருக்க வேண்டும்.

சுற்றி வளைத்து கூறும் வகையில், ஐரோப்பிய அரசாங்கங்களின் பங்கு, ஒத்துழைப்பு ஆகியவை இருந்தது பற்றி அறிக்கை ஒப்புக் கொள்ளுகிறது. "அசாதாரண முறையில் மாற்றங்கள் நடத்தப்பட்ட தன்மையின் வடிவமைப்பில், சில ஐரோப்பிய அரசாங்கங்கள் தங்கள் பகுதி, வான்வெளியில் அல்லது வானூர்தி நிலையங்களில் நடந்த நிகழ்வுகள் பற்றி ஏதும் அறிந்திருக்கவில்லை என்பது முடியாததாகும்" என்று Fava கூறியிருக்கிறார்.

அதிலும் குறிப்பாக ஸ்வீடன் அரசாங்கம், எகிப்தில் இருவருக்கும் "சித்திரவதை, கொடுமையான மனிதாபிமானமற்ற இழிவான நிலைதான் இருக்கும் என்று தெரிந்த போதிலும் கூட", எகிப்திய குடிமக்களாகிய Mohammad Al Zary மற்றும் Ahmed Agiza இருவரையும் CIA இடம் ஒப்படைத்தது பற்றி விமர்சனத்திற்காளாகியுள்ளது.

பெப்ரவரி 2003ல் மிலானில் எகிப்திய குடிமகன் அபு ஓமர் CIA அதிகாரிகளால் கடத்தப்பட்டமை "இத்தாலிய அதிகாரிகள் அல்லது உளவுத்துறை அமைப்புக்களுக்கு முன்னரே தெரியாமல்" திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டிருக்க முடியாது" என்று அறிக்கை தெரிவித்துள்ளது.

2003 ல் இருந்தே ஜேர்மனிய அரசாங்கம் அறியும்

அல்ஜீரியாவை சேர்ந்த ஆறு பொஸ்னியர்கள் 2002 ஜனவரி மாதம் பொஸ்னிய அதிகாரிகளால் CIA இடம் ஒப்படைக்கப்பட்டது பற்றியும் அவர்கள் சிறைபிடிக்கப்பட்டது பற்றியும் அறிக்கை குறிப்பிடுகிறது; இவர்கள் அதன்பின்னர் குவாண்டநாமோவில் உள்ளனர். NATO கட்டளையின் கீழ் உள்ள ஐ.நா. ஆக்கிரமிப்பு படையான SFOR இவ்வழக்கில் கொண்டுள்ள பங்கை இது துலக்கமாக காட்டுகிறது மற்றும் ஜேர்மனிய அரசாங்கம் ஆரம்பத்தில் காட்டிய ஒத்துழைப்பையும் வெளிப்படுத்துகிறது.

ஆறு அல்ஜீரியர்களுக்காக வாதிடும் அமெரிக்க வக்கீல் ஸ்டீபன் ஓலேஸ்கியின் கருத்தின்படி, இவர்கள் அக்டோபர் 2001ல் பயங்கரவாத சந்தேகத்திற்கு ஆளாகி பொஸ்னிய பாதுகாப்பு படைகளால் கைதுசெய்யப்பட்டிருந்தனர். ஜனவரி 2002ல் பொஸ்னியா ஹெர்சகோவினாவின் தலைமை நீதிமன்றம் அவர்களை ஆதாரம் போதுமானதாக இல்லை என்று விடுவித்தது; நீதிபதிகள் அவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டனர். ஆனால் ஜனவரி 17 இரவில் ஆறுபேரும் SFORல் இருந்த அமெரிக்க படைகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்; நீதிபதிகள் வெளிப்படையாக ஆறில் நான்கு பேரை அமெரிக்க அதிகாரிகளிடம் ஒப்படைப்பதை தடை செய்திருந்தனர்.

சட்டவிரோதமாகவும், ஒருதலைப்பட்சமாகவும் நடந்தவிதத்தில் பொஸ்னிய அதிகாரிகள், அமெரிக்க பாதுகாப்பு படைகளிடம் ஒப்படைப்பதற்காக, இவர்களுடைய தேசிய அடையாளத்தை இரத்து செய்தனர். நாடு அற்ற நிலை என்றிருந்த அறுவரும் சந்தேகத்திற்குரியவர்கள் எனச் சித்தரிக்கப்பட்டு பொஸ்னியா ஹெர்சகோவினாவில் அமெரிக்க நிலையங்களை தாக்க திட்டமிட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டனர்.

இப்படி அமெரிக்க பாதுகாப்பு படைகளிடம் சட்டவிரோதமாக மாற்றியது என்பது புஷ் நிர்வாகத்தின் மகத்தான அழுத்தத்தினினால்தான் என்பது வெளிப்படையாகும். குழு விசாரணையின்போது ஓலெஸ்கி கூறினார்: "இந்த ஆறுபேரும் கைது செய்யப்படவில்லை என்றால் பொஸ்னியாவிற்கு அமெரிக்கா கொடுக்கும் உதவித் தொகை திரும்பப்பெறப்படும் என்று அமெரிக்கா அதிகாரிகள் பொஸ்னிய அரசாங்கத்திடம் கூறினர்." பொஸ்னிய, சர்வதேச சட்டங்களுக்கு விரோதமான இம்மாற்றம் பொஸ்னிய அரசாங்கத்தின் மிக உயர்மட்டங்களால் உத்தரவிடப்பட்டது என்றும் ஓலெஸ்கி உறுதியாக கருதுகிறார்.

இந்த மாற்றத்தில் SFOR படைகள் கொண்டிருந்த பங்கு தெளிவுடன் இல்லை. 2002ல் இருந்து பொஸ்னியா ஹெர்சகோவினாவின் ஐ.ஓ.வின் உயர்மட்ட பிரதிநிதியாக இருந்த Paddy Ashdown இந்த சட்ட விரோத மாற்றத்தை தடுக்க எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்பது கவனிக்கத்தக்கது; இவ்வழக்கை பதிவு செய்ய வேண்டும் என்று ஆறு பேருடைய வக்கீல்கள் விடுத்த கோரிக்கையையும் அவர் கவனத்திற் கொள்ளவில்லை.

ஆறுமாதங்களுக்கு பின்னர் 2003 கோடையில், பொஸ்னியாவில் நிறுத்தப்பட்டிருந்த ஜேர்மனிய இராணுவ பிரிவினர் இந்த வழக்கில் தொடர்பு கொண்டனர். விதிகளுக்கு முரணாக ஜேர்மனிய துருப்புக்கள் தங்களை செய்தியாளர்கள் என்று மூடிமறைத்து உளவு சேகரிக்க முற்பட்டனர். அவர்கள் ஆறு பேருடைய குடும்பத்தினரையும் பார்த்து நீதிமன்ற ஆவணங்களை பரிசீலிக்கவும் அனுமதிக்கப்பட்டனர்.

ஜேர்மனிய செய்தி ஊடகம் இத்தகைய சதித்திட்டம் ஜேர்மனிய இராணுவ பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டது பற்றி தகவல் கொடுத்திருந்த போதிலும், அவர்களுடைய வெடிப்புத் தரும் விசாரணையின் விளைவுகள் அதிக கவனத்தை ஈர்க்கவில்லை. இதையும்விட பெரிய ஊழல் கூட ஜேர்மனிய அரசாங்கத்திடம் இருந்து எந்த விடையிறுப்பையும் காணவில்லை.

ஜேர்மனிய இராணுவக் கேப்டன் ஒருவர் ஆறு நபர்களை கைது செய்தது பற்றி எழுதிய தகவல் அறிக்கை ஒன்று ARD தொலைக்காட்சி நிறுவனத்தால் பெறப்பட்டது. இந்த அறிக்கையின்படி, "இந்த ஆறு பேரில் சிலபேராவது அநியாயத்திற்குத்தான் உட்பட்டுள்ளனர்" என்ற சந்தேகம் விசாரணையின்போது உறுதியாயிற்று". இப்படி "சாத்தியமானவகையில் நியாயமற்ற கைது" மற்றும் "மிகவும் வினாவிற்குரிய நாடுகடத்தல்" என்பதும் "இவர்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்கள் ஜேர்மன் தூதரகத்தில் தக்க அதிகாரிகளுக்கு அளிக்கப்பட வேண்டும்" என்ற பொருளைத் தரும்.

இறுதியில் இந்த அறிக்கை பேர்லினில் உள்ள இராணுவ பாதுகாப்புத்துறை அமைச்சரகத்திற்கு அனுப்பப்பட்டது; இதன் பொருள் 2003 ஜூலையிலேயே ஜேர்மனிய லெபனிய குடியுரிமை கொண்டுள்ள Khaled Al Masri கடத்தப்படுவதற்கு 6 மாதங்களுக்கு முன்பே, ஐரோப்பாவில் அமெரிக்காவின் சட்டவிரோத நடவடிக்கைகள் பற்றி அரசாங்கம் அறிந்திருந்தது என்பது ஆகும்.

2003 இறுதியில் மசிடோனியாவில் CIA இனால் அல் மஸ்ரி கடத்தப்பட்டு ஆப்கானிஸ்தானத்திற்கு மாற்றப்பட்டு, அங்கு சித்திரவதை செய்யப்பட்டார். அப்பொழுது அதிகாரத்தில் இருந்த சமூக ஜனநாயகக் கட்சி - பசுமைக் கட்சி கூட்டரசாங்கம் இதைப்பற்றி பின்னர்தான் தெரிந்து கொண்டதாக கூறுகிறது. இப்பொழுது பாதுகாப்பு அமைச்சகம் ஆறு அல்ஜீரியர்கள் SFOR ஜேர்மனிய படையினரால் நடத்தப்பட்ட விதம் பற்றி எதுவும் தெரியாது என்று மறுத்துள்ளது. செய்தி ஊடகத்திடன் அமைச்சரகம் தன் ஆவணக்காப்பகத்தில் இது பற்றி ஏதும் இல்லை என்று கூறியுள்ளது.

இதற்கிடையில், அறிக்கையில் இருந்த சில நிழற்படங்கள் வெளிப்பட்டுள்ளன; ஆனால் இதோடு தொடர்புடைய முக்கியமான ஆவணம் இன்னும் மறைந்துவிட்டதாகத்தான் கூறப்படுகிறது. பாராளுமன்ற பாதுகாப்புப்பிரிவு துணைக்குழு விசாரணையில், இந்த விவகாரம் விவாதிக்கப்பட்டபோது, அரசிற்கு பொறுப்பு பெற்ற துணைச் செயலாளரான Friedbert Pfluger (Christian Democratic Union) முக்கிய ஆவணங்களை ஒரு மாதம் அளிக்காமல் தாமதம் செய்தார்; அது வற்புறுத்திக் கோரப்பட்டபோதுதான் கொடுக்கப்பட்டது.

இப்படி அரசாங்கம் நடுக்கத்துடன் நடந்து கொள்ளுவதற்கு காரணம் குவாண்டநாமோ குடாவிற்கு விமானத்தில் அழைத்துச் செல்லப்பட்ட ஆறு நபர்களும் ஜேர்மனியில் உள்ள அமெரிக்க இராணுவத் தளமான Ramstein வழியாக சென்றிருந்தனர். சமீபத்தில் அம்பலமான நிகழ்வுகள் இன்னும் கூடுதலான வகையில் ஜேர்மனிய அரசாங்கம் முன்னரே CIA இன் சட்ட விரோத நடவடிக்கைகள் பற்றி தெரிந்துகொண்டிருந்தது என்பதையும், இப்பொழுது மனித உரிமைகளை மீறும் இச்சதியில் தன்னுடைய தொடர்பு இருந்ததை மூடிமுறைக்கும் செயல்களில் ஈடுபடுகிறது என்பதையும் காட்டுகிறது.

பிரிட்டிஷ் அரசாங்கத்தின் மறுப்புக்கள்

பிரிட்டிஷ் அரசாங்கமும் பொதுமக்களை ஏமாற்றத்தான் முயன்று வருகிறது. ஐரோப்பிய பாராளுமன்ற இடைக்கால அறிக்கையை எதிர்கொண்ட நிலையில், அண்மையில் பதவி இறக்கம் செய்யப்பட்ட பிரிட்டிஷ் வெளியுறவு மந்திரி ஜாக் ஸ்ட்ரோ Guardian ஏட்டிடம் அமெரிக்கா, பிரிட்டிஷ் ஆகாயப் பகுதியை அல்லது விமான நிலையங்களை கைதிகளை கடத்த பயன்படுத்தியதாக தன்னிடம் நிரூபணம் ஏதும் இல்லை என்று கூறிவிட்டார். அத்தகைய திட்டம் பற்றி வாஷிங்டன் தன்னிடம் முன்கூட்டியே கூறியிருக்கும் என்று தான் உறுதியாகக் கூறமுடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஆனால், உஸ்பெகிஸ்தானில் இருந்த முன்னாள் பிரிட்டிஷ் தூதரான Craig Murray பல ஆண்டுகளும் CIA உடன் நெருக்கமாக பிரிட்டிஷ் உளவுத்துறை M16 ஒத்துழைத்ததற்கான நிரூபணத்தை குழுவிடம் அளித்துள்ளார்; மேலும் தொடர்ச்சியாக தகவல்கள் பரிமாற்றம் நடந்துள்ளதாகவும் அவர் குழுவிடம் தெரிவித்துள்ளார். ஸ்ட்ரோவின் முன்னாள் சட்ட ஆலோசகரான மைக்கேல் வூட், பிரிட்டன் சித்திரவதை செய்யாமல் அதைப்பற்றிய தகவலை மூன்றாம் நபர்கள் மூலம் அறிந்தால், அத்தகைய சித்திரவதை மூலம் பெறப்படும் தகவல்கள் சட்டபூர்வமாக பயன்படுத்தப்படலாம் என்ற கருத்தை வாதிட்ட ஆவணத்தையும் குழுவிடம் அவர் கொடுத்துள்ளார். இந்நிலைப்பாடு சித்திரவதை மூலம் உஸ்பெகிஸ்தானில் பெறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலங்களை பிரிட்டிஷ் அரசாங்கத்தால் பயன்படுத்துவதற்காக ஏற்கப்பட்டது.

இதுகாறும் குழுவினால் அளிக்கப்பட்டுள்ள பரந்த அளவு ஆவணங்கள் ஒரு முடிவிற்குத்தான் இட்டுச் செல்லுகின்றன: அமெரிக்கா முறையாக சர்வதேச மனித உரிமைகள் மரபுகளை மீறியது மட்டும் இல்லாமல், ஐரோப்பிய அரசாங்கங்களும், ஐ.நா.வின் சித்திரவதை எதிர்ப்பு மரபுகள், ஐரோப்பிய மனித உரிமைகள் மரபு ஆகியவற்றை மீறி அத்தகைய முக்கிய குற்றங்களை புரிந்துள்ளன; அதாவது தெரிந்தும் அவற்றை பற்றி கூறவில்லை; அல்லது தங்களுடைய CIA உடனான சதிச் செயல் வெளிப்படையாக செய்யப்பட்டதையும் மறைத்துள்ளன.

அடுத்த சில மாதங்களில், CIA இன் இரகசிய சிறைச் சாலைகள் ஐரோப்பாவில் உள்ளனவா என்பது பற்றி விசாரணை நடத்த விரும்புகிறது. செய்தி ஊடகத்திற்கு Giovanni Fava தெரிவித்ததாவது: "CIA விமான பயணங்களின் எண்ணிக்கையை கணக்கில் எடுத்துக் கொண்டால், ஐரோப்பாவிற்குள்ளேயே சிறைகளுக்கு மக்கள் மாற்றப்பட்டனர் என்ற முடிவு எடுக்கப்படலாம்."

ஏப்ரல் மாத ஆரம்பத்தில் Stern செய்தி இதழில் வந்த அறிக்கை ஒன்றும் இக்கருத்திற்கு ஆதரவு கொடுத்துள்ளது; இதன்படி போலந்து நகரான Kiejkuty க்கு அருகில் பயங்கரவாத சந்தேகத்திற்குட்பட்டவர்களை CIA விசாரணை செய்தது எனத் தெரிகிறது. இந்த முகாம் போலந்து உளவுத்துறையின் பயிற்சி மையம் எனக் கருதப்படுகிறது: இதில் அமெரிக்காவும் பங்கு பெறுகிறது. இந்த முகாமில் சிறப்புப் பகுதி ஒன்றிற்கு போலந்தின் உளவுத் துறையினர் செல்லமுடியாது. Stern ல் எழுதப்பட்டுள்ளது, "இருண்ட ஜன்னல்களுடன் கூடிய சிறு வாகனங்கள் அடித்தளத்தில் நிறுத்தப்பட்டிருந்தன; CIA விமானங்கள் தரையிறங்கும்போது எல்லாம் இதேபோன்ற வாகன மாதிரிகளைத்தான் காண்பதாக Szymany விமான நிலையம் தகவல் கொடுத்துள்ளது."

பிரஸ்ஸல்ஸின் செயலற்ற நிலை

ஐரோப்பிய பாராளுமன்றத்தின் சிறப்புக்குழு பிரஸ்ஸல்ஸின் அதிகாரத்துவத்திற்குள்ளே பற்களற்ற காகிதப் புலி ஆகும். ஐரோப்பிய அரசாங்கங்கள் இந்த அறிக்கையின் விளைவினால் எவ்வித நடவடிக்கையையும் தேரடியாக எதிர்கொள்ள வேண்டியதில்ல. தன்னுடைய ஆய்விற்காக ஆவணங்களை கொடுக்குமாறு குழு அரசாங்கங்களை கட்டாயப்படுத்தமுடியாது; அரசாங்க அல்லது உளவுத்துறை அதிகாரிகளை கேள்விகளுக்கு விடையிறுக்க வேண்டும் என்றும் வற்புறுத்த முடியாது. ஐரோப்பிய பாராளுமன்றம் தனி உறுப்பு நாடுகள்மீது பொருளாதார தடைகள் வேண்டும் என்று பரிந்துரை செய்லாம்; ஐரோப்பிய ஒன்றிய குழு அல்லது உறுப்பு நாடுகளில் மூன்றில் ஒரு பங்கினர்தான் தனிப்பட்ட அரசாங்கங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஆரம்ப முயற்சிகளை மேற்கொள்ள முடியும்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளர் Gijs de Vries மற்றும் பொது வெளியுறவு, உளவுத்துறைக் கொள்கையில் உயர் பிரதிநிதியுமான Javier Solana வும் இடைக்கால அறிக்கை வெளிவந்தவுடன் சமாதானம் காட்டும் வகையில் குரலெழுப்பினர்.

ஐரோப்பாவில் சட்டவிரோதமாக கைதிகள் எடுத்துச் செல்லப்பட்டது பற்றி "எந்த நிரூபணமும் இல்லை" என்று De Vries கூறினார். ஐரோப்பிய அரசாங்கங்கள் இணைந்து செயல்பட்டிருக்குமா எனக் கேட்கப்பட்டதற்கு அவர் விடையிறுத்தாவது: "அது ஒன்றும் இன்னும் நிரூபிக்கப்படவில்லை என்றுதான் நான் நம்புகிறேன்." ஐரோப்பிய உளவுத்துறைகளும் CIA உம் "பரஸ்பர ஆதாயம் தரக்கூடிய ஒத்துழைப்பை கொண்டுள்ளனர் என்பதை அவர் ஒப்புக் கொண்டார்; ஆனால் அது ஐரோப்பிய ஒன்றியத்தின் வரம்பிற்குள் வராது என்றும் கூறினார்.

மே 2ம் தேதி குழுவின் முன் விசாரிக்கப்பட்ட Javier Solana உம் இதேபோன்ற நிலைப்பாட்டைத்தான் கொண்டார். அவர் கூறியது: "எனக்கு வந்துள்ள தகவல்களின்படி, கடந்த காலத்தில் வந்துள்ள குற்றச் சாட்டுக்கள், கருத்துக்கள், வதந்திகள் அனைத்தும் நம்பகத்தன்மை படைத்தவை அல்ல என்பதைத்தான் நான் உறுதியாகக் கூறமுடியும். மேலும், இப்பிரச்சினைகள் பற்றி நாடுகள் எப்படி நடந்து கொள்ள இருக்கின்றன என்பது பற்றியும் எனக்குக் கேட்கும் அதிகாரமும் கிடையாது; அவை பதில் கூறவேண்டிய அவசியமும் இல்லை."

பிரஸ்ஸல்சில் உள்ள அதிகாரிகள் சர்வதேச நிதிய முதலீட்டாளர்கள், பெருநிறுவனங்கள், வங்கிகள் ஆகியவற்றின் நலன்களை காக்க "உள்நாட்டு விவகாரங்களில்" தலையிடத் தயாராக இருக்கும்போது, மனித உரிமைகள் பற்றி வரும்போது அவை அதிகாரம் இல்லை என்று கூறுகின்றனர். மிகப் பெரிய முறையில் நீதித்துறை, உள்விவகாரங்கள் என்ற இரண்டு துறைகளிலும் ஐரோப்பிய உறுப்பு நாடுகள் தொடர்ச்சியான முறையில் தங்கள் ஒத்துழைப்பை நல்கும்போது, இப்படி அக்கறை இல்லாமல் காட்டிக் கொள்ளுவது போன்ற தோற்றம் பெரும் முரண்பாட்டைத்தான் வெளிப்படுத்துகிறது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved