WSWS :Tamil
:
செய்திகள்
ஆய்வுகள்
:
வட அமெரிக்கா
US Senate declares English the "national
language": a boost to chauvinism and racism
அமெரிக்க செனட் சபை ஆங்கிலத்தை "தேசிய மொழியாக" அறிவிக்கிறது: சோவினிசம்
மற்றும் இனவாதத்திற்கு பெரும் ஊக்கம்
Statement of the Socialist Equality Party
20 May 2006
Use this version
to print | Send this link by email
| Email the author
வியாழனன்று ஆங்கிலத்தை அமெரிக்காவில் "தேசிய மொழி" ஆக்குவதற்கு செனட்
சபை வாக்களித்துள்ளதை சோசலிச சமத்துவக் கட்சி எவ்விதத் தயக்கமும் இன்றி கண்டிக்கின்றது. செனட் சபையின்
குடியேற்ற "சீர்திருத்த" சட்டத்தோடு வந்துள்ள இந்த நடவடிக்கை புஷ் நிர்வாகம் மற்றும் குடியரசுக் கட்சியின்
வலதுசாரி தளத்தை பெருக்கும் நோக்கத்துடன் வந்துள்ள தொடர்ச்சியான பிற்போக்குத் தன்மை வாய்ந்த, அறியாமை
மிகுந்த, குறுகிய நோக்கு கொண்ட நடவடிக்கைகளில் சமீபத்தியதாகும். இதன் விளைவு தொலைத் தன்மை மற்றும்
ஜனநாயக விரோதப் போக்கு ஆகியவற்றின் உட்குறிப்புக்களை கொண்டுள்ளது.
பொதுவாக குடியேறுபவர்களுக்கு எதிராக, குறிப்பாக ஹிஸ்பானிக் அமெரிக்கர்களுக்கு
எதிராக பொறுத்துக் கொள்ள முடியாத தன்மை, வெறுப்பு இவற்றை தூண்டிவிடும் வலதுசாரி, பாசிச கூறுபாடுகளுக்கு
இம்முன்மொழிவு ஓர் ஊக்கத்தை தருவதாகும். "எல்லையை பாதுகாத்தல்" என்ற பெயரில் நடத்தப்படும் அனைத்து
நடவடிக்கைகளிலும் உள்ள ஆழ்ந்த ஜனநாயக விரோத மற்றும் அரசியலமைப்புக்கு முரணான சாரத்தைத்தான் இது
அடிக்கோடிட்டு காட்டுகிறது.
கூட்டாட்சி அரசாங்கமானது ஆங்கில மொழிக்கு இத்தகைய உத்தியோகபூர்வ உயரிடம்
கொடுக்காமலேயே அமெரிக்கா 200 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்துள்ளது. அமெரிக்க அரசியலமைப்பை நிறுவியவர்களால்
அத்தகைய நடவடிக்கை ஒன்றும் அதில் எழுப்பப்படவில்லை. 1780ம் ஆண்டு உத்தியோகரீதியிலான கல்விக்கூடம் ஒன்று
ஆங்கிலத்திற்காக நிறுவப்படவேண்டும் என்று ஜோன் ஆடம்ஸ் கொண்டுவந்த திட்டம் அந்த நேரத்தில் ஜனநாயகத்திற்கு
புறம்பானது என்று நிராகரிக்கப்பட்டு விட்டது.
இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கிழக்கு, தெற்கு ஐரோப்பிய பகுதிகளில் இருந்து
பாரிய குடியேற்றம் உச்சக்கட்டத்தில் இருந்தபோது, மில்லியன் கணக்கான மக்கள் டஜன் கணக்கான மொழிகளை
பேசியவண்ணம் அமெரிக்காவில் வெள்ளமெனப் புகுந்த காலத்தில்கூட, அமெரிக்க ஆளும் உயரடுக்கு இத்தகைய
பிரிவினை மற்றும் உரிமை மறுக்கும் நடவடிக்கையை எடுத்ததில்லை. ஏன் இப்பொழுது?
இதற்கான விடையானது அமெரிக்க முதலாளித்துவ சமுதாயத்தின் ஆழ்ந்த நெருக்கடி
மற்றும் சீரழிவில் உள்ளது, அமெரிக்க சமூகத்தை பரந்த மக்கள் மற்றும் நிதியாதிக்க தன்னலக்குழு எனப்
பிளவுபடுத்தியுள்ள சமூக சமத்துவமின்மையின் பெரும் வளர்ச்சி, பெருகிய முறையில் செழ்வாக்கிழந்துள்ள ஆளும்
உயரடுக்கு பிற்போக்குத்தனத்திற்கு அழைப்பு விடுதல் மற்றும் போலீஸ் அரசு முறைக்கு செல்லுவதன் மூலம் தன்னுடைய
ஆட்சியை வலுப்படுத்துவதற்கு முயற்சித்தல் ஆகியவற்றில் உள்ளது. அமெரிக்க பொருளாதார மற்றும் அரசியல்
அமைப்புமுறை தன்னுடைய பலதரப்பட்ட மக்கட்தொகையினரை இணைப்பதற்கும் அதன் அடிப்படை தேவைகளை நிறைவு
செய்வதற்கும் இயலாத நிலையில் உள்ளது.
இச்சட்டம் 63 க்கு 24 என்ற கணக்கில் ஏற்கப்பட்டது; ஒரு குடியரசுக்கட்சி
உறுப்பினரைத் தவிர மற்றவர்கள் இதற்கு ஆதரவு கொடுத்தனர். ஒன்பது ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் திட்டத்திற்கு
ஆதரவாக வாக்களித்தனர். "அமெரிக்காவில் தேசிய மொழியாக ஆங்கிலம் கொண்டுள்ள பங்கை காத்து விரிவடைதலுக்கு
ஆவன செய்யுமாறு" இது கூட்டரசிற்கு வலியுறுத்தல் கொடுக்கிறது. அது மேலும் "அமெரிக்க அரசாங்கம் அல்லது
அதன் ஏதாவதொரு அதிகாரி அல்லது பிரதிநிதிகள் ஆங்கிலத்தை தவிர ஏதாவதொரு மொழிக்கு செயல்படல்,
தொடர்புகொள்ளல், பணிகளை செய்துமுடித்தல் அல்லது வழங்குதல் இவற்றைக் கொண்டிருக்க வேண்டும் என்று
ஒருவரும் உரிமை கொள்ளவோ, தகுதியுள்ளதாக்கிக்கொள்ளவோ அல்லது கோரவோ" இயலாது என்று அறிவிக்கிறது.
இது கிட்டத்தட்ட 16 சதவிகிதம் அதாவது மொத்தம் 47 மில்லியன் மக்கள் தங்கள்
வீடுகளில் ஆங்கிலத்தை தவிர ஏனைய மொழியைப் பேசும் நாடாகும். செனட்டின் நடவடிக்கை முதலிலும் முக்கியமானதுமாக
35 மில்லியன் ஹிஸ்பானிய அமெரிக்கர்களுக்கு எதிராக இயக்கப்படுவது ஆகும்; அவர்கள் மொத்த மக்கட் தொகையில்
13.4 சதவிகிதமாக உள்ளனர்; இவர்கள் இனவழியில், நாட்டின் மிக அதிக வளர்ச்சி கொண்டுள்ள பிரிவினர் ஆவர்.
உலகிலேயே அமெரிக்கா ஸ்பானியமொழி பேசும் மக்கள் அதிகமாக இருக்கும் ஐந்தாவது நாடு ஆகும். ஆனால்
இந்த நடவடிக்கை இன்னும் பேரழிவு தரக்கூடிய வகையில் ஹைட்டிய அமெரிக்கர்கள்பால் தாக்கத்தை கொடுக்கும்;
ஏனைய தேசிய மற்றும் இனக் குழுக்குகளுக்கும் இத்தகைய தாக்குதல்தான் இருக்கும்.
இதன் விதிகளில் ஒன்று அமெரிக்காவில் வசிக்க விரும்பும் வெளிநாட்டினருக்கு ஆங்கில
தேர்ச்சி இருக்க வேண்டும் எனக் கூறுவதாகும். இப்பொழுது அத்தகைய தேர்வு, குடியுரிமை கோருவோருக்கு
மட்டும்தான் உள்ளது. குடியுரிமை கோருவோருக்கான ஆங்கிலத் தேர்ச்சி இன்னும் கடுமையாக ஆக்கப்படும்; விண்ணப்பிப்பவர்கள்
அமெரிக்க வரலாறு, அரசு முறை இவற்றை பற்றிய அறிவையும் புலப்படுத்த வேண்டும் என்று வரவுள்ளது.
இப்பொழுது வெள்ளை மாளிகையில் இருப்பவர் உட்பட பல முக்கிய அமெரிக்க
பெருநிறுவனத் தலைவர்கள் கூட அத்தகைய தரத்தை கடினமாகத்தான் எதிர் கொள்ள வேண்டியிருக்கும்.
இந்நடவடிக்கை அமெரிக்காவில் அதிகாரபூர்வ மொழி ஆங்கிலம் என அறிவிக்கப்படும்
நிலையில் இருந்து சற்றே குறைந்த நிலையில்தான் உள்ளது; அப்படி அறிவிக்கப்பட்டு இருந்தால் பன்மொழிப் பணிகள்
மற்றும் அரசாங்கத் தகவல்களில் பல மொழிப் பயன்பாடு தடைக்குள்ளாகியிருக்கும்; ஆனால் இது அத்தகைய
திசையை நோக்கிய பெரும் நடவடிக்கையாகும். வாக்குச் சீட்டுக்கள், நெருக்கடிக்கால ஆலோசனைகள் ஆகியவை
உள்பட சில பொருட்களும் பணிகளும் அரசாங்கத்தினால் மற்ற மொழிகளின் மூலமும் அளிக்கப்பட வேண்டும் என்றுள்ள
தற்போதைய சட்டங்களை அது மாற்றாது; ஆனால் இதைப் பயன்படுத்தி நிர்வாக ஆணைகள், விதிகள், ஆட்சித்துறை
வழிகாட்டி நெறிகள் மற்ற பல மொழி ஆணைகள் சட்ட மன்றத்தால் உத்தரவு இடப்படாதவை ஆகியவற்றை இல்லாது
செய்வதற்கு இது பயன்படுத்தப்படக் கூடும்.
குடியேற்றத்திற்கு ஆதரவு தரும் குழுக்கள் இந்நடவடிக்கை கிளின்டன் நிர்வாகத்தின் கீழ்
இயற்றப்பட்ட நிறைவேற்று ஆணைகள் பலவற்றை அகற்றிவிடும் என சுட்டிக் காட்டுகின்றன; அச்சட்டங்கள் பன்மொழிப்
பணிகளும் தொடர்புகளும் பல கூட்டரசு அமைப்புக்களில் கட்டாயமாக இருக்க வேண்டும் எனக் கூறியிருந்தன; மேலும்
இது நீதிமன்ற ஆணைகள், நகராட்சி ஆணைகள் ஆகியவற்றின் பன்மொழி பணிகளுக்கும் பாதிப்பை கொடுக்கும்.
மேலும் இந்த செனட்டின் நடவடிக்கை அரசாங்க, உள்ளூர் நிர்வாகங்களுக்கு
இத்தகைய பிரிவினையை காட்டும் கொள்கைகளை கடைப்பிடிக்க ஊக்கம் தருவதாக அமையும். ஏற்கனவே
அமெரிக்காவில் 27 மாநிலங்கள் ஆங்கிலம் தாம் அதிகாரபூர்வ மொழி என்று பறைசாற்றும் சட்டங்களை
இயற்றியுள்ளன.
இந்நடவடிக்கையின் உட்குறிப்புக்கள் பரந்த தன்மை உடையவை ஆகும். ஆங்கிலம் தவிர
ஏனைய மொழி பேசும் அமெரிக்கர்கள் மருத்துவமனை அதிகாரிகளுடன் தொடர்பு கொள்ள முடியாத நிலை
ஏற்படலாம்: அதிகமான வகையில் முக்கிய ஆவணங்களை படிக்கமுடியாமல் போகலாம்; அன்றாட வாழ்வின்
அடிப்படை செயல்களை செய்யக்கூட தங்கள் முயற்சிகளில் வெற்றிகாணமுடியாத தடைகளை எதிர்கொள்ள
நேரிடலாம். அடிப்படை ஜனநாயக உரிமைகளில் ஒன்றான வாக்குப் போடும் உரிமையை பதிவு
செய்துகொளுவதற்கான முயற்சிகள் கூட கடினமாக தோல்வியில் முடியலாம்.
இந்நடவடிக்கை இன்னும் கூடுதலான வகையில் இருமொழி கல்வியின் மீது தாக்குதல்களை
வளர்க்கும்; இதையொட்டி மில்லியன் கணக்கான ஹிஸ்பானிய மற்றும் குடியேறும் இளைஞர்கள், பண்பாடு, கலை
இவற்றை பெருக்குதல் ஒருபுறம் இருக்க, கெளரவமான வேலை கிடைப்பதற்காக தேவைப்படும் அடிப்படை நுட்பம்
மற்றும் பயிற்சியை அடையும் வாய்ப்பை இழக்க நேரிடலாம்.
இத்திட்டம் ஒரு பரந்த சமூக, பண்பாட்டுச்சரிவின் வெளிப்பாடு என்பது ஆங்கிலம்
பேசும் அமெரிக்கரிடையே மொழித் திறனில் வியத்தகு வீழ்ச்சி இருப்பதன் மூலம் அடிக்கோடிட்டுக் காட்டப்படுகிறது.
ஆங்கில மொழியை போற்ற வேண்டும் எனக் கூறும் ஆளும் உயரடுக்கின் இதே பிரதிநிதிகள்தாம் பொது மக்களிடையே
பேரழிவை தரக்கூடிய வகையில் எழுத்தறிவின்மை வளர்ந்துள்ளதற்கும் பொறுப்பை கொண்டவர்கள் ஆவர். 1998ல்
வெளிவந்த அரசாங்க அறிக்கை ஒன்றின்படி, அமெரிக்க வயதுவந்தவர்களில் 90 மில்லியனுக்கும் மேலானவர்கள்,
இரண்டில் ஒருவர், நடைமுறையில் எழுத்தறிவற்றவர்களாகவோ, கிட்டத்தட்ட எழுத்தறிவு அற்றவர்களாகவோ,
தற்கால சமுதாயத்திற்கு தேவைப்படும் குறைந்தபட்ச நுட்பங்கள் கூட இல்லாமல் உள்ளனர் என்று தெரிவிக்கிறது.
இந்த ஆய்வு 191 மில்லியன் பேரில் 44 மில்லியன் அமெரிக்க வயது வந்தவர்கள் ஒரு
செய்தித்தாளை படிக்கக் கூட முடியாதவர்கள் என்றும் வேலை விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்யமுடியாதவர்கள்
என்றும் கூறுகிறது. மற்றொரு 50 மில்லியன் மக்கள் எட்டாம் வகுப்பு தரத்தைவிட அதிகமான தரத்தில்
படிக்கவோ, புரிந்துகொளுள்ளும் திறனோ அற்றவர்கள் என்று கூறுகிறது. இடைப்பட்ட ஆண்டுகளில் நிலைமையில்
பெரும் முன்னேற்றம் வந்துவிட்டது என நம்புவதற்குக் காரணம் ஏதும் இல்லை.
பள்ளிகளுக்கு பணப்பட்டினி கொடுத்து கலை, இசை ஏனைய பண்பாட்டு
பயிற்றுவித்தலுக்கும் தக்க ஆதாரங்களை கொடுக்க மறுக்கும் ஆளும் உயரடுக்கு, கிட்டத்தட்ட தொத்துவியாதி போல்
கல்வியறிவற்ற தன்மையை பரப்பும் உயரடுக்கு, ஆங்கிலம் பேசாத அமெரிக்கர்கள் "தேசிய மொழியில்" தேர்ச்சி
பெறுவதற்கு தேவையான வகையில் மிகப் பரந்த இருப்புக்களை அளிக்கும் என்று எதிர்பார்க்க முடியுமா? விடை
வெளிப்படையாகவே உள்ளது.
எப்படிப் பார்த்தாலும், ஆங்கிலத்தை அதிகாரபூர்வமாக ஒரு சலுகையுள்ள தகுதிக்கு
உயர்த்துவது என்பது உள்ளார்ந்த வகையிலேயே ஜனநாயகவிரோதப் போக்குடைய நடவடிக்கை ஆகும். இது
பிரிக்கும் மனப்பான்மை, ஒதுக்கும் தன்மை இரண்டையும் கொண்டது ஆகும். இதன் பிற்போக்கு தன்மையின் சாரம்,
குடியேற்ற சட்டத்திற்கான திருத்தத்திற்கு ஆதரவு கொடுத்திருந்த செனட் உறுப்பினர்களின் கருத்துக்களில்
பிரதிபலிப்பாயிற்று.
டென்னசேயின் குடிசரசுக் கட்சி செனட் உறுப்பினரான லாமர் அலெக்சாண்டர்
"அமெரிக்கா என்பது மிகக் குறைவான பொதுக் கோட்பாடுகள், எமது பொது தேசிய மொழி என்ற மிருதுவான
எண்ணத்தைத்தான் தளமாக கொண்டுள்ளது" என்று அறிவித்தார். "எமது பொது தேசிய மொழி" என்று அவர்
கூறியது முற்றிலும் புதுக் கற்பனையாகும்; அமெரிக்க அரசியலமைப்பின் சொற்களுக்கும், உணர்வுகளுக்கும் இது
எதிரிடையானது ஆகும்.
தெற்கு கரோலினாவின் குடியரசுக் கட்சி செனட் உறுப்பினரான
Lindsey Graham
இன்னும் கூடுதலான வகையில் இனவெறி மற்றும் ஹிஸ்பானிய எதிர்ப்பு உந்துதல்களைத்தான் இத்திட்டத்தின் பின்னணியில்
இருப்பதை வெளிப்படையாக குரல் கொடுத்துக் காட்டினார். அண்மையில் மில்லியன் கணக்கான ஹிஸ்பானிய
குடிபெயர்ந்தோர், நியாயமான, மனிதத்தன்மை உடைய கொள்கையை ஆவணமற்ற தொழிலாளர்கள் பால்
கொள்ளவேண்டும் என்பதற்காக நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களை சுட்டிக்காட்டி, அவர் "பொது மொழியை பெருக்க
வேண்டிய" தேவை பற்றிக் கூறினார். மேலும், "அவ்வாறு பேசுவது நல்லதுதான்; ஏனெனில் ஆர்ப்பாட்டக்காரர்கள்
தெருக்களில் நின்று கொண்டு மெக்சிகன் கொடியை அசைக்கின்றனர்; நம்மில் சிலர் அதற்கு விடையிறுக்க வேண்டும்."
அமெரிக்க-மெக்சிக எல்லையை இராணுவமயமாக்கும் ஜனாதிபதி புஷ்ஷின் திட்டத்தைப்
போல், அரசியல் தேவையின் குறுகிய காலக் கணக்கினால் உந்துதல் கொண்டு, ஆங்கிலம் தேசிய மொழி என
அழைக்கப்படுவது மகத்தான, இறுதியில் பெரும் சோகம் தரக்கூடிய உட்குறிப்புக்களை கொண்டுள்ளது; அவை அதற்கு
ஆதரவு கொடுக்கும் வலதுசாரியினரால் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. அமெரிக்க பேரினவாதம்,
உள்ளூர்வாதம் ஆகியவற்றுக்கு அழைப்புவிடுதல் என்பது தேசிய, இனவழியிலான அழுத்தங்களை உயர்த்தித்தான்
காட்டும்; இதனால் இறுதியில் பல இனவழிக் குழுக்களும் வெளிப்படையான பூசல்கள், வன்முறை கையாளல் இவற்றுக்கு
இட்டுச்செல்லும் செயற்பாட்டை தொடக்கிவைக்கும்.
இன்று ஐரோப்பா முழுவதும் பிற்போக்கான அரசாங்கங்கள் மொழி, மத,
பண்பாட்டு வேறுபாடுகளை தூண்டிவிடுகின்றன; இதற்குக் காரணம் செல்வந்தர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே உள்ள
பரந்த பிளவின் விளைவுகளில் இருந்து மக்கள் கவனத்தை திருப்புவதும், இன்னும் கூடுதலான முறையில் அடக்குமுறை
நடவடிக்கைகள் எடுப்பதை நியாயப்படுத்துவதும் ஆகும். இப்பொழுது அமெரிக்க ஆளும் செல்வந்தத்தட்டு,
ஐரோப்பாவை விட அதிகம் வெடிப்புத்தன்மை கொண்ட உட்குறிப்புக்களை கொண்ட ஒருநாட்டில், அதே நடவடிக்கை
போக்கை மேற்கொண்டிருக்கிறது.
தன்னுடைய தேசியத் தொலைக்காட்சி உரையில் திங்களன்று புஷ் அறிவித்த குடியேற்ற
எதிர்ப்புக் கொள்கையில் இருந்த தீமை போலவே, ஜனநாயகக் கட்சியினரின் ஆங்கில மொழி நடவடிக்கைக்கான
விடையிறுப்பு செனட் மற்றத்தில் சமரசப் போக்கு மற்றும் சரணடைதலாக இருந்தது. ஒரு கொள்கையளவில்
குடியரசுக் கட்சியின் நடவடிக்கையை எதிர்க்க விருப்பமில்லாமல், ஜனநாயகக் கட்சியினர் குடியேற்றச் சட்டத்திற்குத்
தங்களின் திருத்தத்தைக் கொண்டுவந்தனர்; அதில் ஆங்கிலம் நாட்டின் "பொது, ஒன்றுபடுத்தும்" மொழி எனக்
கூறப்பட்டுள்ளது. ஜனநாயக ஆதரவு பெற்ற நடவடிக்கை, இருமொழி அரசுப் பணிகளில் "இருக்கும் உரிமைகள்"
குறைக்கப்பட மாட்டாது என்று குறிப்பிட்டுள்ளது; இதன் பொருள், குறைந்த அளவு, இன்னும் கூடுதலான வகையில்
இருமொழி உரிமைகள் மேலும் விரிவுபடுத்தலை எதிர்ப்பது பற்றிய ஒரு உடன்பாடு ஆகும்.
இப்படி நீர்த்த தன்மையுடைய குடியரசுக்கட்சி நடவடிக்கையும் 58 க்கு 39 என்ற
கணக்கில் வாக்களிக்கப்பட்டது. போட்டியில் உள்ள இரு ஆங்கில மொழி பற்றிய திருத்தங்களில் ஒன்று இறுதிக் குடியேற்றச்
சட்டம், பிரதிநிதிகள் செனட் உறுப்பினர்களுடன் பேச்சு வார்த்தைகள் நடத்திய பின்னர் ஏற்கப்படும் என்று செனட்டின்
முக்கிய தலைவர்களில் ஒருவர் கூறினார்.
அந்த சபை கடந்த டிசம்பர் மாதம் ஒரு சட்டத்தை இயற்றியது; அதன்படி ஆவணங்களற்ற
தொழிலாளர்கள் குற்றவாளிகள் போலக் கருதப்படுவர் என்று கூறுவதோடு இக்குற்றவாளிளுக்கு புகலிடம், உதவி
கொடுப்போர், மருத்துவர்கள், ஆசிரியர்கள், திருச்சபை அதிகாரிகள் ஆகியோரும் குற்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவர்
என்று உள்ளது. ஆங்கில மொழி பற்றிய எந்தக் குறிப்பு குடியரசு கட்டுப்பாட்டில் இருக்கும் மன்றத்தின் பிற்போக்காளர்களுடைய
ஆதரவை பெறும் என்பதில் சந்தேகம் இல்லை.
மொழியின் அடிப்படையில் எத்தகைய பாகுபாடு காட்டுவதற்கும் எதிர்ப்புக்கூறல்
என்பது ஒரு அடிப்படை ஜனநாயகக் கோட்பாடாகும். அதை ஏற்கவேண்டும். ஆனால் மற்ற அடிப்படை உரிமைகள்
போலவே --பேச்சு உரிமை, அரசியல் வெளிப்பாட்டு உரிமை, முறையான சட்ட வகை உரிமை, அந்தரங்கத்திற்கான
உரிமை, வாக்களிக்கும் உரிமை, அரசுப் பணிக்கு வேட்பாளராக இருக்கும் உரிமை ஆகியவை போலவே-- அமெரிக்க
ஆளும் உயரடுக்கு ஜனநாயகக் கட்சியின் மூலம் சர்வாதிகார ஆட்சியின் பக்கம் செல்லும் நிலைமைக்கு எதிராக இது
தடுக்க முடியாதது ஆகும். இரு பெருவணிக அமெரிக்க கட்சிகளுமே ஜனநாயக உரிமைகள்மீதான தாக்குதலை சதியுடன்
இணைந்து செய்கின்றன; ஏனெனில் இத்தாக்குதல்தான் அவை இரண்டும் காக்க விரும்பும் முதலாளித்துவ முறைமீதான
தாக்குலுக்கு அவை கொடுக்கும் விடையிறுப்பு ஆகும்.
அமெரிக்க தொழிலாள வர்க்கம் மட்டும்தான் ஆவணமுடைய, ஆவணமற்ற தொழிலார்கள்
ஆகியோரின் உரிமைகளைக் காக்க முடியும்; அதுபோலவே, மற்ற அடிப்படை உரிமைகளையும் காக்க முடியும்;
இதற்கு அது இருகட்சி முறையை உடைத்து, சர்வதேச அளவில் உலகந்தழுவிய முதலாளித்துவ முறைக்கு எதிராகப்
போரிடவும், சோசலிச சமூதாயத்தை நிறுவுவதற்கும், தொழிலாள வர்க்க ஐக்கியத்தின் அடிப்படையில் சுயாதீனமான
அரசியல் இயக்கத்தை கட்டமைக்க வேண்டும். சோசலிச சமத்துவ கட்சியும் உலக சோசலிச வலைத் தளமும்
போராடும் வேலைத்திட்டம் இதுவேயாகும்.
Top of page |