:
இலங்கை
Hospital workers in northern Sri Lanka
strike for better conditions
வட இலங்கையில் வைத்தியசாலை தொழிலாளர்கள் சிறந்த நிலைமைகளுக்காக வேலைநிறுத்தம்
செய்கின்றனர்
By S. Somasundaram
10 March 2006
Back to screen version
இலங்கையின் யுத்தப் பிராந்தியமான வடக்கில் உள்ள யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில்
ஐம்பதுக்கும் மேற்பட்ட ஒப்பந்த அடிப்படையிலான துப்புரவுத் தொழிலாளர்கள் சம்பளத்திலும் வேலை நிலைமையிலும்
முன்னேற்றம் கோரி பெப்பிரவரி 11 முதல் மூன்று நாள் வேலை நிறுத்தத்தை முன்னெடுத்தார்கள். தொழிலாளர்களை
வாடகைக்கு அமர்த்தும் தரன்ஸ் கம்பனியால் வேலைக்கமர்த்தப்பட்டுள்ள இந்த தொழிலாளர்கள், தமது உரிமைகளை
காக்கவும் நாள் சம்பளமாக 400 ரூபாயும் (4 அமெ. டாலர்கள்) சீருடைகளும் மற்றும் நிலையான வேலை நேரத்தையும்
கோருவதற்காக கிளீன் வெல் என்ற ஒரு அமைப்பையும் ஸ்தாபித்துக்கொண்டுள்ளனர்.
இலங்கையின் தொழில் திணைக்களம், ஒப்பந்த தொழிலாளர்கள் தொழிற்சங்கம் அமைக்கும்
உரிமையை தேசிய தொழில் சட்டம் மறுக்கின்றது என மேற்கோள் காட்டி கிளீன் வெல் அமைப்பை அங்கீகரிக்க
மறுத்துவிட்டது. பெப்பிரவரி 11, வேலைநிறுத்தம் செய்த தொழிலாளர்கள் மனுவொன்றை ஆஸ்பத்திரி அதிகாரத்திடம் கையளிக்க
முயற்சித்த போது அவர்களைத் தடுத்த பாதுகாப்பு உத்தியோகத்தர்களுடன் மோதிக்கொள்ள நேர்ந்தது. "எங்களது பிரச்சினைக்கு
அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது என்று கூறி ஆஸ்பத்திரி நிர்வாகம் நிராகரித்துவிட்டது" என இந்த துப்புரவுத்
தொழிலாளர்கள் உலக சோசலச வலைத் தளத்திற்குத் தெரிவித்தார்கள்.
வேலைநிறுத்தம் செய்யும் தலைவர்களை விலக்குவதாக அச்சுறுத்துவதன் மூலம் பதிலளித்த தரன்ஸ்
கம்பனி, தொழிலாளர்கள் எதிர்ப்புக்கு முடிவுகட்டாவிட்டால் அனைவரையும் வேலையிலிருந்து நீக்குவதாக தெரிவித்தது.
தொழிலாளர்கள் அச்சுறுத்தலுக்கு அஞ்சாத நிலையில், அடுத்த ஆண்டுக்கான துப்புரவு ஒப்பந்தத்தை கம்பனி பெற்றுக்கொண்டால்
தாம் தொழிலாளர்களது கோரிக்கைகளை பற்றி அக்கறை செலுத்த முடியும் என அவர்களுக்கு சொல்லப்பட்டது.
2001ல், சுகாதார சேவையில் அரசாங்கம் மேற்கொண்ட வெட்டுக்களின் ஒரு பாகமாக,
வைத்தியசாலைகளை துப்புரவு செய்யும் நடவடிக்கைகள் தனியார் கம்பனிகளுக்கு வழங்கப்பட்டன. இந்தக் கம்பனிகள்
குறைந்த சம்பளத்தை வழங்குவதோடு தொழிலாளர்கள் மீது தாங்கமுடியாத சுமைகளை திணிக்கின்றன. இலங்கை பூராவும்
உள்ள ஆஸ்பத்திரி ஊழியர்கள் மோசமான நிலைமைகளை எதிர்கொண்டுள்ள அதேவேளை, யாழ்ப்பாண போதனா
வைத்தியசாலையில் உள்ள துப்புரவு தொழிலாளர்கள் நாட்டின் மிகவும் ஒடுக்கப்பட்ட பிரிவினராக உள்ளனர்.
யாழ்ப்பாண துப்புரவுத் தொழிலாளர்கள் ஒவ்வொரு நாளும் ஆஸ்பத்திரிக்கு காலை 6
மணிக்கு சமூகமளிக்க வேண்டியுள்ள போதிலும், வருகை தராதவர்களை இட்டுநிரப்புவதற்காக கம்பனி ஒரு உழைப்புப்
படையை பேணிவரும் நிலையில் 40 தொழிலாளர்களுக்கு மட்டுமே தொழில் கிடைக்கும். சராசரி நாளாந்த சம்பளம்
250 ரூபாய்கள் மட்டுமே. இதில் செலவுகளை ஓரளவே தாங்க முடியும். அத்துடன் அவர்கள் ஆஸ்பத்திரி
தொலைக்காட்சியை பார்ப்பது உட்பட எந்தவொரு சிறிய மீறலுக்கும் கூட நடைமுறையில் தண்டிக்கப்படுவார்கள்.
அவர்களின் தொழில் விதிகளுக்கு அமைய, தொழிலாளர்கள் மாதத்தில் குறைந்த பட்சம்
நான்கு நாட்களை சம்பளம் இல்லாத நாட்களாக ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆயினும் இவர்களுக்கு விடுமுறை உரிமைகளோ
அல்லது சுகவீன சம்பளமோ இல்லாததோடு ஊழியர் நம்பிக்கை நிதியோ அல்லது ஊழியர் சேமலாப நிதியோ கிடைப்பதும்
இல்லை. இவர்களுக்கு வசதியான உடைமாற்றும் அறைகள், புதிய சீருடைகள், சுகாதாரமான உபகரணங்களோ அல்லது
தேவையான துப்புரவு உபகரணங்களோ வழங்கப்படாததோடு அடிக்கடி உடைந்து போன உபகரணங்களை பயன்படுத்த
தள்ளப்பட்டுள்ளனர்.
தாமதமாக வேலைக்கு வந்தால் ஒரு நாள் சம்பளத்தை இழக்க நேரிடுவதோடு தமது 30
நிமிட நன்பகல் உணவு வேளைக்கு பின்னர் தாமதமானாலும் சம்பள வெட்டை எதிர்நோக்க வேண்டிவரும்.
தொழிலாளர்களை அடிமைகள் போல் நடத்தும் ஒரு மேற்பார்வையாளரை தரன்ஸ் கம்பனி வேலைக்கு அமர்த்தியுள்ளது.
இவர் நோயாளிகளை கவனிப்பதோடு சம்பந்தப்பட்ட கடமைகள் உட்பட மேலதிக வேலைகளை செய்யுமாறும்
கட்டளையிடுகிறார்.
பல தொழிலாளர்கள் வறுமை நிலையில் வாடும் இளம் பெண்களும் விதவைகளுமாவர்.
இவர்கள் காரைநகர், மதகல், சாவகச்சேரி மற்றும் சுழிபுரம் போன்ற பிரதேசங்களில் இருந்து ஒவ்வொரு நாளும்
நெடுந்தூரம் பயணிக்க வேண்டும். தாம் முகங்கொடுக்கும் கடுமையான நிலைமைகள் பற்றி உலக சோசலிச வலைத்
தளத்திற்கு பல தொழிலாளர்கள் கருத்துத் தெரிவித்தார்கள். தாம் அடிக்கடி மாதம் 19 நாட்கள் மட்டுமே
வேலை செய்வதாகவும் மற்றும் இதன் காரணமாக தமது பிள்ளைகளின் பாடசாலை செலவுகளை தாங்கமுடியாதுள்ளதாகவும்
பலர் முறைப்பாடு செய்தார்கள்.
24 வயது தொழலாளி குறிப்பிட்டதாவது: "எனக்கு இரு பிள்ளைகள் உள்ளனர், என்னால்
இந்த சம்பளத்தில் ஜீவிக்க முடியாது. வீட்டு வாடகை 750 ரூபா மற்றும் நான் அதற்காக 5,000 ரூபா முற்பணம்
கொடுக்க வேண்டும். மாதாந்த மின்சாரக் கட்டணம் 400 ரூபா. பால் மாவுக்கு மட்டும் மாதம் 2,000 ரூபா
செலவாகிறது. எம்மாால் எப்படி வாழ முடியும்?"
இன்னுமொரு தொழிலாளி குறிப்பிட்டதாவது: "நான் ஒரு விதவை, மாணிப்பாயில்
வசிக்கிறேன். மேற்பார்வையாளர் 6 மணிக்கு வருவதற்கு முன்னர் நான் அதிகாலை 5.30 மணிக்கே ஆஸ்பத்திரியில்
இருப்பதற்காக காலை 2.30 மணிக்கே எழும்பிவிடுவேன். எனது பிள்ளைகள் கல்விக்காக ஒரு சிறுவர் பாராமரிப்பு
அமைப்பில் தங்கவைக்கப்பட்டுள்ளதோடு அவர்களுக்காக மாதம் 600 ரூபா செலுத்த வேண்டும்."
"எனது சம்பளம் சாப்பாட்டுக்கே போதாது. மீனுடன் ஒரு சாப்பாட்டுப் பார்சல் 50
ரூபாய். ஆகவே எங்களிடம் காசு இல்லாதபோது பட்டினி கிடக்க வேண்டியதுதான். எனக்கான பஸ் செலவு 900 ரூபா
அத்துடன் மாதாந்த போக்குவரத்து சீட்டும் கூட 600 ரூபா. நான் ஒரு குடிசையில் வசிப்பதால் மழைக் காலத்தில்
எனது முழு வீடு ஒழுகும்."
20 வயது யுவதி விளக்குகையில்: "எனது கணவர் என்னை கைவிட்டுவிட்டார், எனது
பெற்றோர்களும் உயிருடன் இல்லை. எனது அப்பா ஒரு இராணுவ ட்ரக் மோதியதில் உயிரிழந்தார். சுனாமி
தாக்கியபோது நாங்கள் மூன்று நாட்கள் வீட்டுக்குப் போகாமல் வேலை செய்த போதிலும், நிர்வாகம் எங்களுக்கு
எதையும் செய்யவில்லை. அரசாங்கம் எங்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் என்ற நம்பிக்கையில் நாம் கடுமையாக
உழைத்தோம்."
அன்றாடம் நீண்ட தூரம் பஸ்ஸில் பயணிக்கும் ஒரு தொழிலாளி, இராணுவ சோதனைச் சாவடிகளில்
சிப்பாய்கள் அடையாள அட்டையை பரிசோதிப்பதால் அன்றாடம் தாமதமாகிறது. ஆயினும், ஆஸ்பத்திரியில் எல்லா ஊழியர்களுக்கும்
அடையாள அட்டைகள் கொடுக்கப்படவில்லை, எனத் தெரிவித்தார். ஆஸ்பத்திரி நுழைவாயிலில் கூட தன்னிடம் ஒரு அனுமதியட்டை
கேட்கப்பட்டதாக அவர் தெளிவுபடுத்தினார்.
யாழ்ப்பாண ஆஸ்பத்திரியிலான நிலைமையானது நாட்டின் 20 ஆண்டுகால உள்நாட்டு யுத்தம்
அதேபோல் நாடுபூராவும் சுகாதார சேவையில் அரசாங்கம் மேற்கொள்ளும் வெட்டுக்களின் தாக்கத்தை வெளிப்படுத்துகிறது.
30 வாட்டுக்களையும் சுமார் 1,200 கட்டில்களையும் கொண்ட இந்த வைத்தியசாலையால் நாளாந்தம் அனுமதிக்கப்படும்
100--150 உள்நோயாளர்களை சமாளிக்க முடியாத நிலையில் பலர் தரையில் பாய் விரித்து படுக்கின்றனர். அடிப்படை
மருந்துகள் இல்லாததால் தங்கியிருக்கும் நோயாளர்களும் மற்றும் வெளி நோயாளர்களும் பெரும்பாலான மருந்துகளை வெளியில்
உள்ள மருந்தகங்களில் பணம் செலுத்தியே பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.
ஆஸ்பத்திரி உபகரணங்கள் ஒரு பழாய்ப்போன நிலையில் இருப்பதோடு கழிவுப் பகுதி அமைப்பு
மற்றும் மலசல கூடங்கள் வருடக் கணக்காக சரியாகப் பேணப்படவில்லை. இதனால் நோயாளர்களுக்கும் ஊழியர்களுக்கும்
தொற்றுநோய்கள் ஏற்பட வாய்ப்புண்டு. வைத்தியசாலை ஆய்வுக்கூடத்தில் உள்ள இயந்திரங்களும் பிண அறையில் உள்ள குளிராக்கும்
கருவியும் அடிக்கடி உடைந்து போகின்ற நிலைமையிலும் நிதி பற்றாக்குறை எனக் கூறி சுகாதார அமைச்சு அவற்றை திருத்துவதற்கு
அங்கீகரமளிப்பதில்லை. தொழிலாளர்களின்படி, பல வேண்டுகோள்களின் மத்தியிலும் ஆஸ்பத்திரி நிர்வாகம் பிண அறைக்கு
ஒரு மின் குமிழைக் கூட பெற்றுத் தருவதில்லை.
மருத்துவ உத்தியோகத்தர்கள், தாதிமார் மற்றும் ஆய்வுக்கூட தொழில்நுட்பவியலாளர்கள்
உட்பட ஆஸ்பத்திரியில் பல உத்தியோகத் தரத்திலும் கடுமையான பற்றாக்குறை நிலவுகிறது. உத்தியோகத்தர்கள் பற்றாக்குறையை
சீர்செய்ய வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் அதிக நேரம் வேலைசெய்த போதிலும், மேலதிக நேரக் கொடுப்பனவுகள்
நேரத்துக்கு வழங்கப்படாததோடு மாதகாலமாக இழுபடுவதுமுண்டு.
அவ்வாறிருந்தும் கூட, யாழ்பாண வைத்தியசாலையானது யாழ்ப்பாண குடாநாடு பூராவும்,
வன்னி மற்றும் கிளிநொச்சி பிராந்தியங்கள் மற்றும் அதோடு இணைந்த பிரதேசங்களில் உள்ள நோயாளர்களுக்கும் சிகிச்சை
அளிக்க வேண்டும். ஆஸ்பத்திரி உத்தியோகத்தர்களின்படி இலங்கையில் உள்ள ஏனைய வைத்தியசாலைகளிலும் பார்க்க
யாழ்ப்பாண ஆஸ்பத்திரி பத்து வருடங்கள் பின்நிற்கின்றது. இங்கு அவசர சேவை அல்லது தொற்று நோய்களுக்கான தனிப்பட்ட
வாட்டுக்கள் இல்லாததோடு ஆய்வுக்கூடங்களுக்கு அடிப்படையில் கணனிகள் கூட வழங்கப்படவில்லை.
நாட்டின் 20 வருடகால உள்நாட்டு யுத்தத்தின் விளைவாக ஆஸ்பத்திரி சேவைகள் பிரதேசத்தை
ஆக்கிரமித்துக்கொண்டுள்ள இலங்கை இராணுவத்தால் தொந்தரவுக்குள்ளாக்கப்படுகின்றன. ஆஸ்பத்திரியை இலங்கை இராணுவத்தின்
படையணி ஒன்று சுற்றிவைளைத்துக் கொண்டுள்ளதோடு ஆஸ்பத்திரி பிண அறையில் இருந்து ஒரு சடலத்தை வெளியே எடுக்கவும்
இராணுவ அனுமதி தேவை. சடலங்களை பெற்றுக்கொள்வதற்காக மக்கள் மணித்தியாலக் கணக்காக காத்திருக்க தள்ளப்படுகிறார்கள்.
|