World Socialist Web Site www.wsws.org |
:
செய்திகள்
ஆய்வுகள்
:
ஆசியா
:
இந்தியா
India: Maharashtra cotton farmers face destitutionஇந்தியா: மிக்கவறுமையை எதிர்கொள்ளும் மகாராஷ்டிர பருத்தி விவசாயிகள் By Parwini Zora இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த விதர்பா பிராந்தியத்திலுள்ள யவாத்மலில் பருத்தி விவசாயிகள் சுமார் 1000 பேர் தங்களது அவலநிலை குறித்து மாநில மற்றும் தேசிய அரசாங்கங்கள் அலட்சிய போக்குடன் நடந்து கொள்வதை எடுத்துக்காட்டுவதற்காக மே தினத்தன்று கண்டனப் பேரணியை நடத்தினர். முந்திய கடன்களை பொருட்படுத்தாமல் மாநில அரசு ஒவ்வொரு பருத்தி விவசாயிக்கும் புதிய விவசாய கடன்களை வழங்க வேண்டும் என்பது அவர்களது பிரதான கோரிக்கையாகும். கடந்த ஏப்ரலில் பக்கத்து மாநிலமான கர்நாடகத்தில் இதேபோன்று தரம் மிக்க பருத்தி விதைகளை கோரி எதிர்ப்புக்கள் நடைபெற்றதை தொடர்ந்து இந்த ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுள்ளன. மே தின கண்டனங்களை ஏற்பாடு செய்த விதர்பா பொதுமக்கள் இயக்க குழுவின் ஒரு பேச்சாளரான கிஷோர் திவாரி, விவசாயிகள் பருத்தி கொள்முதல் விலை தற்பொழுது குவிண்டாலுக்கு (100 கிலோ கிராம்) Ï. 1,800 ($US40) என்றிருப்பதை ரூ3,000மாக உயர்த்த வேண்டும் என்று கோரி வருவதாக கூறினார். பருத்தி விதையையும் கச்சா பருத்தியையும் இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தடை விதிக்கவேண்டும் என்றும் அவர்கள் கோரினர். மகாராஷ்டிராவின் பருத்தி உற்பத்தியில் 75 சதவீதம் இந்த பிராந்தியத்தில் விளைகிறது. அண்மை ஆண்டுகளில் உற்பத்தி கணிசமான அளவிற்கு பெருகியுள்ளது ஆனால் பல்வேறு வகையான பருத்திவிலை திடீரென்று வீழ்ச்சியடைந்துவிட்டது. பருத்தி உற்பத்தி பெருகியதும் கர்நாடகம், குஜராத், ஆந்திர பிரதேசம் மத்தியபிரதேசம் மற்றும் தமிழ்நாடு உட்பட பருத்தி உற்பத்தி செய்யும் அனைத்து மாநிலங்களிலும், தனிப்பட்ட வர்த்தகர்கள் உள்ளூர் சந்தைகளில் ஆதிக்கம் செலுத்த தொடங்கி குறைந்த விலைகளில் பருத்தியை கொள் முதல் செய்தனர். அதிகரித்தளவில் பருத்தி உற்பத்தி இலாபம் ஈட்ட முடியாத நிலை உருவாகியது. மகாராஷ்டிர மாநில அரசாங்கம் விவசாயிகளின் அவலநிலையை எள்ளி நகையாடுகின்ற வகையில் பருத்திக்கு பதிலாக கரும்பை வளர்ப்பதற்கு அவர்களை ஊக்குவிக்க தொடங்கியது. கரும்பு தண்ணீரை அதிகம் பயன்படுத்திக் கொள்கின்ற பயிர் அதே நேரத்தில் விதர்பா பாசன வசதியில்லா ஒரு வறண்ட பகுதி ஆகும். இந்த பிராந்தியத்திலுள்ள கடுமையான பொருளாதார நிலையை எடுத்துக் காட்டுகின்ற வகையில் தற்கொலை விகிதங்கள் அதிகரித்துள்ளன. 2005 ஜீன் முதல் மகாராஷ்டிரா மாநிலத்தில் குறைந்தபட்சம் 500 பருத்தி விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். அவர்களில் பெரும்பாலோர் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் இறந்தவர்கள். விதர்பா பிராந்தியத்தில் 3.2 மில்லியன் பருத்தி விவசாயிகளுக்கிடையே இந்த நிலை குறிப்பாக உக்கிரமடைந்துள்ளது. அங்கு ஒவ்வொரு நாளும் மூன்று விவசாயிகளில் ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார். ஊடகங்கள் பெரிதும் கவனம் செலுத்த தொடங்கியதும் இந்திய அரசாங்கம் மும்பையிலுள்ள இந்திரா காந்தி மேம்பாட்டு ஆய்வுக்கழகத்தை கிராமப்புற நெருக்கடியை புலனாய்வு செய்ய நியமித்தது. அதன் அறிக்கை ``மகாராஷ்டிரத்தில் விவசாயிகள் தற்கொலை`` என்ற தலைப்பில் ஜனவரியில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஆண் விவசாயிகளுக்கான தற்கொலை இறப்பு விகிதம் (SMR) 1995-ல் 100,000 பேருக்கு 17 என்பதிலிருந்து மகாராஷ்டிரத்தில் 2004-ல் 53 ஆக உயர்ந்து மூன்று மடங்காகியதை கண்டுப்பிடித்துள்ளது----இது தேசிய சராசரியை விட நான்கு மடங்கு அதிகமாகும். நெருக்கடி நிறைந்த அமராவதி மாவட்டத்தில் 2004-ல் 140 பேர் தற்கொலை செய்து கொண்டனர்----இது தேசிய சராசரியை விட 10 மடங்கும் மாநில சராசரியை விட ஏழு மடங்குமாகும். இந்த ஆய்வில் சோதிக்கப்பட்டவர்களில் மூன்றிற்கு இரண்டு பங்கிற்கு மேற்பட்டவர்கள் 50 வயதிற்கும் குறைந்த விவசாயிகள். ஆய்விற்குட்படுத்தப்பட்ட 60 சதவீதம் பேர் பத்து ஆண்டுகளுக்கு மேலாக விவசாயம் செய்து வருபவர்கள். தற்கொலை செய்து கொள்பவர்களில் 5 பேரில் 4 பேர் பருத்தி பயிருக்கு பயன்படுத்தும் பூச்சி கொல்லி மருந்துகள் அல்லது விஷங்களை அருந்தியவர்கள் ஆவர். முறையான மருத்துவ வசதி இல்லாததால் சாவு விகிதம் அதிகளவில் உருவாகிறது. சராசரியாக பார்த்தால் விஷம் அருந்தியவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை 20 கிலோ மீட்டர் அப்பால் உள்ளது. தற்கொலை செய்து கொண்டவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு 10,000 ரூபாய்தான் (2,200 டாலர்) இழப்பீடு ஒதுக்கப்படுகிறது மற்றும் இதற்கு கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன. அவற்றை பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நிறைவேற்ற முடியவில்லை. தற்கொலை செய்து கொண்டவர்கள் தனிப்பட்ட கடன் கொடுப்பவர்களை நம்பியிருந்தனர் என்று அந்த அறிக்கை சுட்டிக் காட்டியது. அவர்கள் அதிகமானளவிற்கு வட்டி விகிதங்களை வசூலித்தனர். ``தற்கொலை செய்து கொண்டவர்களின் மொத்த கடன் சுமை தற்கொலை செய்து கொள்ளாத பிற விவசாயிகளின் கடன் சுமைகளை விட 3.7 மடங்கு அதிகமாக இருந்தது`` என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது. தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளில் பெரும்பாலானவர்கள் சராசரியாக 1,60,000 ரூபாய் (3,570 டாலர்கள்) மட்டுமே கடன் பெற்றிருந்தனர் ஆனால் அதை திருப்பிச் செலுத்துவதற்கு அவர்களுக்கு எந்த வழியும் இல்லை. அண்மையில் ஒரு BBC அறிக்கை இந்த ஜூனில் திருமணம் செய்யவிரும்பிய 26 வயது கைலாஷ் ஜதே என்ற பருத்தி விவசாயியின் நிலையை படம் பிடித்துக் காட்டியது. சென்ற மாதம் அந்த இளைஞரது உடல் ஒரு சமுதாய கிணற்றில் கிடந்ததை அவர்களது குடும்பத்தினர் கண்டுபிடித்தனர். ``அவர் ஒரு வங்கியிலிருந்து கடன் பெற்றிருந்தார் மற்றும் அதை எப்படி திருப்பிக் கட்டுவது என்று கவலைப்பட்டிருந்தார். இந்த நிலையில் தனது திருமணத்திற்கு எப்படி செலவிடுவது என்று கவலைப்பட்டார்`` என்று அவரது மைத்துனர் ஒருவர் குறிப்பிட்டார். ஆரம்பத்தில் கைலாஷ் 200 டாலர்களை கடன் வாங்கியிருந்தார். ஆனால் வட்டியும் சேர்த்து 300 டாலர் ஆகிவிட்டது. அது அவரது ஆண்டு வருவாய்க்கு 5 மடங்கிற்கு மேலாகும். வங்கி அவரது நிலத்தை பறி முதல் செய்வதாக அச்சுறுத்தி ஒரு நோட்டீஸ் அனுப்பியதால் அவர் இந்த துயரமான இறுதி முடிவு எடுத்தார். பருத்தி நெருக்கடி 1991 முதல் தொடர்ந்து வந்த இந்திய அரசாங்கங்கள் அமுல்படுத்திய சந்தை சீர்திருத்தங்கள் பல கிராமப் பகுதிகளில் பேரழிவிற்குட்படுத்தும் தாக்கத்தை தோற்றுவித்தன. விவசாய இடு பொருள்களுக்கான மானியங்களும் தானியங்களுக்கான அரசாங்க உத்தரவாத விலைகளும் படிப்படியாக குறைக்கப்பட்டன அல்லது முற்றிலும் இரத்து செய்யப்பட்டன. சென்ற ஆண்டு வரை பருத்தியின் கொள்முதல் குறித்து ஒரு அரசாங்க ஏகபோகத்தை நிலைநாட்டிய ஒரே மாநிலம் மகாராஷ்டிரம். மகாராஷ்டிர மாநில பருத்தி உற்பத்தியாளர் சந்தைக் கூட்டமைப்பு விவாசயிகளிடமிருந்து ஒரு உறுதியளிக்கப்பட்ட விலையில் பருத்தியை கொள்முதல் செய்தது. அதற்குப் பின்னர் அது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தகர்களுக்கு திறந்த சந்தையில் விற்றது. அல்லது ஒரு காலத்தில் மாநில அரசின் பரந்த அளவினதாக இருந்த ஜவுளி ஆலைகளுக்கு அனுப்பியது. என்றாலும், 1997-ல் பருத்திக்கான இறக்குமதி கட்டணங்கள் கணிசமாக குறைக்கப்பட்டன அதன் மூலம் உள்நாட்டு பருத்தி விலை சரிந்தது அந்த ஆண்டு தான் விதர்பாவில் விவசாயிகள் தற்கொலை தொடங்கிய முதல் ஆண்டாகும். தொடர்ந்து வந்த ஆண்டுகளில் உள்ளூர் விவசாயிகள் அமெரிக்காவின் பருத்தி உற்பத்தியிலிருந்து வளர்ந்து வரும் போட்டியை எதிர்கொண்டனர், அங்கு உற்பத்தி செலவினங்கள் 50 சதவீதத்தில் சராசரியாக மானிய விலைகள் நிர்ணயிக்கப்பட்டன. அதே நேரத்தில் இந்திய அரசாங்கங்கள் பருத்தி இறக்குமதிக்கான அளவுரீதியான கட்டுப்பாடுகளை குறைத்தன. இறக்குமதி வரியை 35 சதவீதம் குறைத்தது. 2001-02ல் 35 சதவீதமாக இருந்தது 2002-03ல் 5 சதவீதமாக குறைக்கப்பட்டது. கொந்தளிப்பான திறந்த சந்தையில் பருத்தியை வாங்கவும் விற்கவும் செய்கின்ற தனிப்பட்ட வர்த்தகர்களை பருத்தி விவசாயிகள் அதிகம் சார்ந்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதேநேரத்தில் 2003-04ம் ஆண்டில் விதர்பா வர்த்தகர்கள் விவசாயிகளிடமிருந்து பருத்தியை குவிண்டாலுக்கு 2800 முதல் 3200 வரை விலை கொடுத்து வாங்கினர். 2004-05ல் அந்த பிராந்தியத்தில் உற்பத்தி பெருகியது ஆனால் அமெரிக்காவிலும் உற்பத்தி அதிகரித்தது விலை குவிண்டாலுக்கு 1500 முதல் 1700 வரை விலை கடுமையாக வீழ்ச்சியடைந்தது. அரசாங்க கொள்முதல் நிலையங்களின் எண்ணிக்கை சென்ற ஆண்டு 411லிருந்து இந்த ஆண்டு 141 ஆக வீழ்ச்சியடைந்தது. இந்த ஆண்டு மகாராஷ்டிரா தனது ஏகபோக கொள்முதலை நிறுத்திக் கொள்கிறது. அதே நேரத்தில் தனியார் கொள்முதல் மையங்கள் 210 ஆக உயர்ந்துள்ளது. பிப்ரவரி 11 வாக்கில் அரசு சந்தை அமைப்பு 4830 குவிண்டால்கள் பருத்தியை வாங்கியது-----இது சென்ற ஆண்டு இதே காலகட்டத்தில் நடைபெற்ற கொள்முதலான 178,000 குவிண்டல்களிலிருந்து மிகப் பெரிய சரிவாகும். ``ஆனால் இது திறந்த சந்தை விலைகள் நன்றாக அமைந்துள்ளதன் காரணமாக ஆகும்`` என்று சந்தை கூட்டமைப்பு தலைவர் N.P. ஹிரானி வலியுறுத்திக் கூறினார். என்றாலும் பயனடைந்தவர்கள் நிச்சயமாக பணக்கார விவசாயிகளும் தனியார் வர்த்தகர்களும் தான். மிகப் பெரும்பாலான சிறிய விவசாயிகள் நிதி மற்றும் போக்குவரத்து வசதி இல்லாததால் கிடைக்கின்ற விலைக்கு விற்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. அதே நேரத்தில் பல சிறிய விவசாயிகள் இடுபொருள்கள் விலை உயர்வினாலும் பாசனம் இல்லாததாலும் அரசாங்கம் வழங்கும் கிராமப்புற கடன்கள் குறைந்துவிட்டதாலும் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். கடந்த ஓராண்டிற்கு மேலாக உர வகைகள் மற்றும் வித்துக்களுக்கான விலை இரட்டிப்பாகிவிட்டது. அடுத்த பருவத்திற்கான விவசாயத்திற்கு பல விவசாயிகள் வட்டிக்கு கடன் கொடுப்பவர்களை நம்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அண்மை மதிப்பீடு ஒன்றின்படி 15 குவிண்டல் பருத்தி மகசூலுக்காக வித்துக்கள் உரம், பூச்சிக் கொல்லி மருந்து மற்றும் தொழிலாளர்களுக்காக செலவு என்ற வகையில் 17,500 ரூபாய் செலவிட வேண்டியிருக்கிறது. ஒரு குவிண்டலுக்கு 1500 ரூபாய் தற்பொழுது விலை, இதன்படி சராசரி ஆண்டு நிகர வருமானம் 5000 ரூபாய் தான். ஐந்து பேரைக் கொண்ட ஒரு சராசரி குடும்பத்தில் இந்த வருமானத்தொகை ஆண்டிற்கு ஒரு நபருக்கு 1000 ரூபாய் (22 அமெரிக்க டாலர்) ஆகிறது. ஏற்கனவே பெரும் கடன்பட்டிருப்பவர்களுக்கு பண நெருக்கடி தாங்க முடியாத அளவிற்கு ஆகிவிடுகிறது. பருத்தி விளைவிக்கின்ற பிராந்தியங்களில் மட்டுமல்லாமல் பல விவசாயிகள் தங்கள் நிலத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. மகாராஷ்டிரத்தில் விவசாயம் நிகர மாநில உள்நாட்டு உற்பத்தியில் 40 சதவீதம் அளவிற்கு 1960-61ல் பங்களிப்பு செய்தது, அது 2002-03 ஆண்டில் 14 சதவீதமாக வீழ்ச்சியடைந்துவிட்டது. கிராமப் பகுதிகளில் பரவலாக வேலையில்லாத நிலையும் தகுந்த வேலை கிடைக்காத நிலையும் உள்ளது. மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களின் சந்தை-சார்பு கொள்கைகளால் கிராமப் புறங்களில் ஏற்பட்டுள்ள பொருளாதார பேரழிவால் பெருகிவரும் ஆத்திரத்தை திசை திருப்புவதற்கு மாநில மற்றும் தேசிய அரசாங்கங்கள் பல்வேறு காயப்பட்டதற்கு கட்டு கட்டும் திட்டங்களை அறிவித்துள்ளன. நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் விதர்பாவிற்கு மாநில அரசாங்கம் அறிவித்துள்ள அண்மைய போலிப் பகட்டுத் திட்டம் மோட்டார் சைக்கிள் திட்டமாகும். கடுமையான தகுதிக்கான தேவைகளை நிறைவு செய்யும் விவசாயிகளுக்கு, அவர்களது நிலத்தை அடமானம் வைப்பதன் பேரில் மோட்டார் சைக்கிள் வாங்குவதற்கு ''இலகுவான கடன்'' வழங்கப்படும். இருந்தும் இந்த "இலகுவான கடன் விதிமுறைகளில் 9 சதவீதம் ஆண்டு வட்டி விகிதத்தில் 4 ஆண்டு தவணை முறைகளில் பணம் செலுத்த வேண்டும் என்பதும் உள்ளடங்கும். இந்தத் திட்டம் மோட்டார் சைக்கிள் உற்பத்தியாளர்களுக்கு அதிகம் உதவுவதே தவிர விவசாயிகளுக்கு அல்ல என்று விதர்பா பொது மக்கள் இயக்க குழுவைச் சேர்ந்த பேச்சாளர் திவாரி சொன்னார். ``உண்மையிலேயே இந்த கடன் ஒரு விவசாயி வாழ்க்கையை மாற்றியமைத்து விடும். ஆனால் அவரது வாழ்க்கை படுமோசமாகி விடும். எனவே (இந்திய நிதியமைச்சர்) ப. சிதம்பரம் வரவுசெலவு திட்டத்தில் விவசாயக் கடன்கள் உயரும் என்று அறிவிக்கும் போது அது மோட்டார் வாகன தொழில்துறையாளர்களுக்கு நல்ல செய்தியாகும். |