:
இலங்கை
Escalating killing of civilians and army
harassment in northern Sri Lanka
வட இலங்கையில் பொதுமக்கள் படுகொலையும் இராணுவ ஒடுக்குமுறையும் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன
By our correspondent
17 May 2006
Back to screen version
இலங்கை அரசாங்கமும் இராணுவமும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஒரு புதுப்பிக்கப்பட்ட
யுத்தத்திற்கு தயார்செய்துகொண்டிருக்கும் நிலையில், நாட்டின் யுத்தப் பிராந்தியங்களான வடக்கிலும் கிழக்கிலும் தமிழ்
பொது மக்கள் "காணாமல் போவதும்" படுகொலை செய்யப்படுவதும் முடிவின்றி அதிகரித்துக்கொண்டிருக்கின்றன. புலிகளின்
ஆதரவாளர்களென சந்தேகிக்கப்படுபவர்களை படுகொலை செய்வதில் அரசாங்கத்திற்கு சார்பான துணைப்படைகளுடன்
கூட்டுச்சேரவில்லை என கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை இந்தப் பிரதேசத்தில் அமுல்படுத்தியுள்ள இராணுவமும்
பொலிஸும் மறுப்புத் தெரிவித்த போதிலும், அவை நம்பகத்தன்மை உடையவையல்ல.
புதிய மனிதப்படுகொலைகள் கடந்த சனிக்கிழமை இரவு மேற்கொள்ளப்பட்டன. யாழ்ப்பாண
குடாநாட்டின் வட பகுதிக்கு அருகில் உள்ள ஒரு சிறிய தீவில் நடந்த வெவ்வேறு சம்பவங்களில் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகளால்
13 பேர் படுகொலை செய்யப்பட்டனர். அல்லைப்பிட்டி தீவில் எஸ். அமலதாஸின் வீட்டுக்குள் நுழைந்த குண்டர்கள் ஒரு
கைக்குண்டை வீசிவிட்டு அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளனர். ஒரு கைக்குழந்தை
மற்றும் நான்கு வயது பிள்ளை உட்பட எட்டுபேர் அவ்விடத்திலேயே உயிரிழந்தனர். கடற்படை சிப்பாய்கள் உள்ளூர் நீதவான்
உத்தரவிட்ட பின்னரே காயமடைந்தவர்களில் மூவரை மட்டும் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்ல அனுமதித்தனர். ஒருவர்
பின்னர் ஆஸ்பத்திரியில் உயிரிழந்தார்.
உத்தியோகபூர்வ எண்ணிக்கைகள் முரண்பாடுகளால் புதிராகவே இருந்தது. ஆரம்பத்தில்,
கடற்படை வெளியிட்ட அறிக்கை ஒன்று, தமது சிப்பாய்கள் கிரனேட் தாக்குதல் நடந்த பின்னரே துப்பாக்கிப் பிரயோகம்
செய்ததாக பிரகடனம் செய்தது. பின்னர் எந்தவொரு தொடர்புமில்லை என நிராகரித்த கடற்படை பேச்சாளர் டி.கே.பி.
திசாநாயக்க, "இரவு நாங்கள் தீவில் உள்ள முகாமுக்குள்ளேயே இருந்தோம்," என குறிப்பிட்டார். பாதுகாப்புத்துறை
பேச்சாளர் கேஹேலியே ரம்புக்வெல்ல, மே 11 கடலில் நடந்த மோதலில் தமது பங்கு சம்பந்தமாக வரும் சர்வதேச
கண்டனங்களை திசை திருப்புவதற்காகவே புலிகள் தமிழ் மக்களை கொலை செய்கின்றனர் என எந்தவொரு ஆதாரமும்
இன்றி குறிப்பாய் தெரிவித்தார்.
ஆதாரங்கள் இந்தப் படுகொலைகளில் கடற்படை சம்பந்தப்பட்டிருப்பதை
சுட்டிக்காட்டுகிறது. உலக சோசலிச வலைத் தளத்திற்கு கருத்துத் தெரிவித்த ஊள்ளூர்வாசிகள், கடற்படையின்
கவனத்தை ஈர்க்காமல் அல்லைப்பிட்டி உட்பட எந்தவொரு தீவுப்பகுதிக்கும் நுழைவது அல்லது நடமாடுவது சாத்தியமற்றது
எனத் தெரிவித்தனர். பிரதேசம் பூராவும் தமது கட்டுப்பாட்டை இறுக்கிவருகின்ற கடற்படை, "பாதுகாப்பு" என்ற
போலி சாக்குப் போக்கை காட்டி எல்லை மதில்களை உடைக்குமாறும் பனையோலை வேலிகளை அகற்றுமாறும் மற்றும்
மரக்கறி பயிர்ச்செய்கையை தவிர்க்குமாறும் மக்களுக்கு அடிக்கடி கட்டளையிட்டு வருகின்றது.
அதேதினம் மேலும் நான்குபேர் கொல்லப்பட்டனர். வேலணைத் தீவில் உள்ள ஒரு வீட்டுக்குள்
நுழைந்த துப்பாக்கிதாரிகள், முறையே 72 மற்றும் 65 வயதான ஒரு ஆண் மற்றும் பெண் உட்பட மூவரைக் கொன்றது.
வேலணையில் இன்னொருவரும் அவரது வீட்டுக்குள் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார். மறைவான இடமொன்றுக்குள்
ஓடியதனால் அவரது பெற்றோர்களும் சகோதரரும் இந்தத் தலைவிதியில் இருந்து சற்றே உயிர்தப்பினர்.
மே 13, இன்னுமொரு ஆத்திரமூட்டல் சம்பவத்தில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு
பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரனின் யாழ்ப்பாண அலுவலகத்திற்கு துப்பாக்கிதாரிகள் தீமூட்டினர்.
வரவேற்பறைக்குள் நுழைந்த படையினர் சர்வதேச தமிழீழ மாணவர் பேரவைக்கு சொந்தமான புத்தகங்கள் உட்பட
மில்லியன் ரூபாய்கள் பெருமதியான சொத்துக்களை நாசம் செய்ததாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். தமிழ் தேசியக்
கூட்டமைப்பானது புலிகளுக்கு சார்பான தமிழ் கட்சிகளின் ஒரு கூட்டமைப்பாகும்.
சனிக்கிழமை படுகொலைகள் சம்பந்தமாக விசாரணைகள் நடத்துமாறு ஜனாதிபதி மஹிந்த
இராஜபக்ஷ கட்டளையிட்டுள்ளார். இந்த விசாரணையானது அரசாங்கம் மற்றும் இராணுவத்திலிருந்து கவனத்தை திசை
திருப்பவும் குற்றவாளிகளை மூடி மறைக்கவும் அமைக்கப்பட்டுள்ள விசாரணைப் பட்டியலில் மேலும் ஒன்றாகும். எந்தவொரு
உத்தியோகபூர்வ விசாரணைகளும் ஆயுதப் படைகளுடன் அல்லது அதோடு சேர்ந்து இயங்கும் துணைப்படைகளுடன்
தொடர்புபட்ட எவரையும் கைது செய்து குற்றம் சாட்டுமளவுக்கு முடிவுகளைக் காணவில்லை.
சனிக்கிழமை நடந்த படுகொலையானது முடிவின்றி தொடர்ந்து கொண்டிருக்கும்
விவகாரங்களில் புதியதாகும்.
* ஏப்பிரல் 18, யாழ்ப்பாணத்திலிருந்து
13 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள வாதரவத்தையில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர். உலக சோசலிச வலைத் தள
நிருபர்களுக்கு ஒருவர் குறிப்பிட்டவாறு, அவரது சகோதரரும் மற்றும் நண்பர்கள் குழுவொன்றும் சில நண்பர்களை
வீட்டில் விட்டுவர சென்றார்கள். அவர்கள் திரும்பிவரும் வழியில் தடுக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இதுபற்றி தமக்கு எதுவும் தெரியாது எனவும் இதற்கும் தமக்கும் சம்பந்தமில்லை எனவும் இராணுவம் மறுப்புத் தெரிவிக்கின்ற
போதிலும், இந்த பாதை நெருக்கமாக பாதுகாப்பிடப்பட்ட அருகில் உள்ள இராணுவ முகாமுக்கான விநியோகப் பாதையாக
இருக்கும் நிலையில் கொலையாளிகள் பல சோதனைச் சாவடிகளை கடக்கவேண்டியிருந்திருக்கும் என உள்ளூர்வாசிகள்
சுட்டிக்காட்டுகின்றனர்.
* ஏப்பிரல் 27, கொழும்புக்கு அருகில் அவிஸ்ஸவெல்லையில் தலைவெட்டப்பட்ட நிலையில்
ஐந்து உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இரு சடலங்களை உறவினர்கள் அடையாளங் காட்டியுள்ளதோடு ஐந்தும்
தமிழர்களுடையதாகவே தோன்றுகிறது. இவர்களில் ஒருவர் முச்சக்கர வண்டி சாரதியான எஸ். சுகுமார். மற்றையவர்
தொழிலுக்காக வெளிநாடு செல்ல இருந்தவர். இந்த ஐவரும் கொல்லப்பட்டு, தலை துண்டிக்கப்பட்டு வீசப்படுவதற்கு
முன்னதாக சித்திரவதை செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்தப் படுகொலைகள், ஏப்பிரல் 25 அன்று மத்திய
கொழும்பில் உள்ள இராணுவத் தலைமையகத்தின் மீது நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலை அடுத்து தமிழர்
பிரதேசங்களில் படையினரும் பொலிசாரும் முன்னெடுத்த சுற்றிவளைப்பு தேடுதல்களுக்கு மத்தியிலேயே இடம்பெற்றுள்ளன.
இராஜபக்ஷ கட்டளையிட்ட பொலிஸ் விசாரணையில் எவரும் கைதுசெய்யப்படவில்லை.
* மே 4, யாழ்ப்பாணத்திற்கு அருகில் நெல்லியடியில் இரு முச்சக்கர வண்டிகள் மீது
கிரனேட்டுக்களை ஏவியதன் மூலம் படையினர் ஏழு இளைஞர்களை படுகொலை செய்தனர். அவர்கள் சற்று முன்னதாக தமது
முகாமைத் தாக்கிய புலி உறுப்பினர்கள் என இராணுவம் குற்றஞ்சாட்டியது. ஆயினும், கொழும்பில் உள்ள வெளிநாட்டு
தூதரகங்களுக்கு கடிதங்களை அனுப்பிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய விபரங்களை
வழங்கியதோடு, அந்த முகாம் தாக்கப்படும் போது அவர்கள் ஒரு விருந்துக்காக அவர்களது நண்பர்களின் வீட்டுக்கு
பயணித்துக்கொண்டிருந்தனர் எனவும் தெளிவுபடுத்தியது. இராணுவம் பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாக பழிவாங்குகிறது என
கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.
* மே 6, யாழ்ப்பாண குடாநாட்டின் கிழக்குப் பகுதியில் மந்துவிலில் உள்ள ஒரு இந்துக்
கோயிலில் வேலை செய்துகொண்டிருந்த எட்டு இளைஞர்கள் காணாமல் போயினர். கோயிலில் இருந்து மூன்று கிலோமீட்டர்
தூரத்தில் அமைந்துள்ள வரணியில் படையணித் தலைமையகத்தில் நிலைகொண்டுள்ள படையினர் மீது உள்ளூர்வாசிகள்
குற்றஞ்சாட்டினர். மே 6 இப்பிரதேசத்திற்கு சென்ற இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அலுவலர்கள்
இரத்தக்கறைகள், சில உடைகள் மற்றும் நான்கு வெற்றுத் தோட்டாக்களையும் கண்டெடுத்தனர். இராணுவம் எந்தவொரு
தலையீட்டையும் மறுத்துள்ளது. உடல்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்த காணாமல் போன சம்பவம் சம்பந்தமான கோபாவேசமான பிரதிபலிப்பையிட்டு
கவனமாக இருந்த பாதுகாப்பு அமைச்சு, மே 8 வரை ஒரு விரிவான ஊடரங்குச் சட்டத்தை அமுல்படுத்தியதோடு
அரசாங்க மற்றும் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை ஊடறுத்துச் செல்லும் வவுனியாவுக்கும் யாழ்ப்பாணத்திற்கும்
இடையிலான பிரதான வடக்கு--தெற்கை இணைக்கும் பிரதான வீதியான ஏ9 வீதியையும் மூடியது. இந்த நடவடிக்கைகளுக்கு
மத்தியிலும், மே 9 அன்று யாழ்ப்பாணக் குடாநாட்டில் எதிர்ப்பு நடவடிக்கைகள் நடைபெற்றன. கடைகளும் அரசாங்க
அலுவலகங்களும் மூடப்பட்டதோடு போக்குவரத்தும் இடைநிறுத்தப்பட்டது. நூற்றுக்கணக்கான மக்கள் வரணி முகாமுக்கருகில்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டங்கள் முதற்தடவை நடப்பவையல்ல. மே 1, புலிகளுக்கு சார்பான
உதயன் பத்திரிகை அலுவலகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இரு ஊழியர்கள் கொல்லப்பட்டதற்கு எதிராக,
மே 4 அன்று மாணவர்கள், கடை உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்களும் ஒரு பொது கடையடைப்பில்
சேர்ந்துகொண்டனர். இந்த துப்பாக்கிதாரிகள் அரசாங்கத்திற்கு சார்பான ஒரு துணைப்படைக்குரியவர்கள் என பரவலாக
நம்பப்படுகிறது.
பாதுகாப்பு படையினரின் அடக்குமுறை நடவடிக்கைகள் சம்பந்தமாக தமிழ் சிறுபான்மையினர்
மத்தியில் பரந்த ஆத்திரமும் எதிர்ப்பும் இருந்துகொண்டுள்ளது. இந்த உயிரிழப்புக்களும் காணாமல் போன சம்பவங்களும்
ஒரு பெரும் ஐஸ்கட்டியின் சிறு துண்டு மட்டுமே. பொலிசாரும் படையினரும் எதேச்சதிகாரமான முறையில் தமிழ் மக்களை
தொல்லைக்குக்கும் அச்சுறுத்தலுக்கும் மற்றும் துஷ்பிரயோகத்திற்கும் உள்ளாக்குகின்றனர். அண்மைய வாரங்களில் இராணுவ சுற்றிவளைப்பு
தேடுதல் நடவடிக்கைகளில் நூற்றுக்கணக்கானவர்கள் சுற்றிவளைக்கப்பட்டதோடு "புலி சந்தேக நபர்கள்" என்ற பெயரில்
விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டனர்.
யாழ்ப்பாணத்திற்கு அருகில் காரைநகர் தீவில் உள்ள மக்கள் தாம் ஏறத்தாழ முற்றுகையின்
கீழ் இருப்பதாக எமது வலைத் தளத்திற்கு தெரிவித்தனர். தீவுப் பகுதிகளில் பெரும் தளங்களை கொண்டுள்ள கடற்படை
கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மே 4, உள்ளூர் மீனவர்களை கடலுக்குள் செல்லவேண்டாம் என கட்டளையிட்ட
கடற்படை அவர்களது வள்ளங்களையும் வலைகளையும் கைப்பற்றியது. அதை எதிர்த்த பத்துப்பேர் தடிகளால்
தாக்கப்பட்டனர். நாங்கள் சாப்பிடுவது எப்படி என ஒரு பெண் கேட்டபோது, "பிரபாகரனுக்கு (புலிகளின் தலைவர்)
எழுதுங்கள்" என அவருக்கு பதிலளித்தனர். எந்தவொரு வருமானமும் இன்றி சுமார் 150 குடும்பங்கள்
பாதிக்கப்பட்டுள்ளன.
அரசாங்கத்திற்கு சார்பான முன்நாள் யாழ்ப்பாண பாராளுமன்ற உறுப்பினரான
ஆனந்தசங்கரி, தமது வாகன சாரதியை விடுவிக்குமாறு வேண்டுகோள் விடுத்து கடந்த வாரம் பொலிசுக்கு கடிதம் எழுதத்
தள்ளப்பட்டுள்ள நிலையில் பாதுகாப்பு படைகளின் நடவடிக்கைகள் ஆணவம் நிறைந்ததாக உள்ளது. பெப்பிரவரி 12,
துப்பாக்கி சந்தங்களை கேட்ட பின்னர் தமது பிள்ளைகளை தேடிச் சென்ற தமது வாகன சாரதி தடுத்துவைக்கப்பட்டதாக
சங்கரி வலைத் தளத்திற்கு தெரிவித்தார். அவர் இன்னமும் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.
புதிய சுற்றுப் படுகொலைகள் சம்பந்தமாக அரசாங்கத்தின் போக்கு, கடந்த வாரக்
கடைசியில் வெளியான சண்டே டைம்ஸ் பத்திரிகையில் பாதுகாப்பு படைகளின் நடவடிக்கைகளுக்கு மன்னிப்பு
வழங்கி ஜனாதிபதி இராஜபக்ஷ வெளியிட்டுள்ள கருத்துக்கள் கோடிட்டுக் காட்டுகின்றன. "ஆயுதப் படைகள் மற்றும்
பொலிசார் மீது வன்முறைக் குற்றச்சாட்டுக்கள் இருப்பதை நான் அறிவேன். ஆனால் அவை ஒப்பீட்டளவில்
குறைந்தவை.... இவற்றில் ஏதாவதொன்றை இலங்கை இராணுவத் தளபதியின் உயிருக்கு ஆபத்து விளைவிக்க எடுத்த
முயற்சியுடன் ஒப்பிட முடியுமா," என அவர் குறிப்பிட்டார். ஏப்பிரல் 25 இராணுவத் தலைமையகத்தின் மீது நடத்தப்பட்ட
தற்கொலை குண்டுத் தாக்குதலில் லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா தற்செயலாக உயிர் தப்பினார்.
குற்றத்தை பொறுத்துக்கொள்ளும் இராஜபக்ஷவின் நடவடிக்கைகள் யுத்தத்திற்கான
தயாரிப்பாகும். இராணுவம் மற்றும் அத்துடன் சேர்ந்த துணைப்படைகளும் மேற்கொள்ளும் வன்முறைகள், புலிகளுக்கு
ஆத்திரமூட்டி, எல்லாவற்றுக்கும் மேலாக 2002ல் கைச்சாத்திடப்பட்டு தற்போது செயலற்றுப் போயுள்ள யுத்த நிறுத்த
உடன்படிக்கையை கீழறுத்து சமாதானப் பேச்சுக்களுக்கான எந்தவொரு முயற்சியையும் கவிழ்ப்பதை உள்நோக்காகக்
கொண்டதாகும். |