World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள்: ஐரோப்பா : ரஷ்யா மற்றும் முந்தைய USSRPutin's speech to the nation: Tensions increase between the US and Russia நாட்டு மக்களுக்கு புட்டினுடைய உரை: அமெரிக்காவுக்கும் ரஷ்யவிற்கும் இடையே பதட்டங்கள் அதிகரிக்கின்றன By Patrick Richter ரஷ்யவிற்கும் அமெரிக்காவிற்கும் பெருகிய முறையில் உள்ள பதட்டங்களை பற்றி ஆராய்ந்து தக்க விடைகாண்பதற்கு இதைவிட பொருத்தமான நேரம் இல்லை. இரண்டாம் உலகப் போர் முடிந்து 61 ஆண்டுகள் நிறைவடைந்ததை குறிக்கும் நிகழ்ச்சிகள் முடிந்த மறுநாளே நாட்டுக்கு ஆற்றும் தன்னுடைய ஆண்டு உரையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் அறிவித்தார்: "எமது இராணுவம் மிக வலுவாக இருந்தால்தான், நம் மீது அழுத்தம் கொடுப்பதற்கான உந்துதல் குறைந்து போகும்." அவர் மேலும் தொடர்ந்து கூறியதாவது: "தோழர் ஓனாய்க்கு யாரைச் சாப்பிடவேண்டும் என்று தெரியும் என பழமொழி கூறுகிறது. பிறர் சொல்லை பொருட்படுத்தமால் அவர் உண்பார்; எவர் கூறுவதையும் அவர் கேட்க மாட்டார் என்பதும் தெளிவு." அமெரிக்காவின் பெருகிய அச்சுறுத்தும் அணுகுமுறை பற்றி கவலை கொள்ளும் மாஸ்கோவின் ஆளும் வட்டங்களின் கவலைகளைத்தான் புட்டின் பகிரங்கமாக முறைப்படுத்திக் கூறினார். வாஷிங்டனை கூடுதலாக கடிந்து கொள்ளும் வகையில் புட்டின் கூறியதாவது: "தங்களுடைய சொந்த நலன்களை தொடர வேண்டும் என வரும்போது, மனித உரிமைகள், ஜனநாயகம் இவற்றை பாதுகாக்க வேண்டும் என்ற ஆழ்ந்த இரக்க உணர்வு, எங்கே போயின?" உலகமெங்கும் ஆயுதப்பெருக்க போட்டி இன்னும் முடியவில்லை என்றும் புட்டின் கூறினார். நிலைமை இதற்கு முற்றிலும் மாறாக உள்ளது; "ஒரு புதிய தொழில்நுட்ப அளவு" சர்வதேச வகையில் அடையப்பட்டுவிட்டது. ஆயுதப் போட்டி மிக விரைவாக நடந்து கொண்டிருக்கிறது. ரஷ்யவின் பாதுகாப்புச் செலவினங்களைவிட அமெரிக்காவின் பாதுகாப்புச் செலவு 25 மடங்கு அதிகம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். ஈரானின் அணுக்கரு சார்ந்த திட்டம் பற்றிய கருத்துவேறுபாடு தொடர்பாக, வலிமையை பயன்படுத்துவதற்கு எதிராக புட்டின் மறைமுகமாக எச்சரித்தார். அத்தகைய வழிவகைகள் எப்பொழுதாவதுதான் வெற்றி அடையும் என்றும் அவர் கூறினார். அண்மை மாதங்களில் வாஷிங்டனில் இருந்து விரோதப் போக்குடைய கருத்துக்கள் வருவதற்கு தன்னுடைய உரையில் புட்டின் பதில்கொடுத்தார். சில நாட்களுக்கு முன்பு ஜோர்ஜ் டபுள்யூ புஷ் "பொருளாதார தேசியத்தை" கொண்டிருப்பதாக ரஷ்ய மீது குற்றம் சாட்டியிருந்தார். "எமது அக்கறைகளுள் ஒன்று ஒரளவிற்கு பொருளாதார தேசியவாதமாகும்; அங்கு அவர் (புட்டின்) தன்னுடைய எண்ணெய் நிறுவனங்களை அரசியல் நோக்கங்களை அடைவதற்கு பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்." புஷ் மேலும் கூறியது: "எங்களுடைய கவலைகளை நன்கு வெளிப்படுத்துகிறோம் -- உதாரணத்திற்கு யாராவது எரிவாயுவை உபயோகித்து அரசாங்கங்களுக்கு ஆபத்து சமிக்கைகளை விடுக்கும்பொழுது." ரஷ்யவிற்கும் உக்ரைனுக்கும் இடையே இந்த ஆண்டுத் ஆரம்பத்தில் நிகழ்ந்த எரிவாயு பற்றிய பூசலை புஷ் குறிப்பிட்டிருந்தார். உக்ரைனுக்கு எரிவாயு அளிப்பதை ரஷ்ய Gazprom நிறுவனம் தற்காலிகமாக நிறுத்தியபின், அதுவரை உக்ரைன் கொடுத்துவந்த குறைந்த விலையை இருமடங்காக்கிவிட்டது. இம்மாத தொடக்கத்தில் அமெரிக்க துணை ஜனாதிபதியான டிக் செனி, முன்னாள் சோவியத் குடியரசுகளை சுற்றிவந்தபோது, முன்னோடியில்லாத வகையில் ரஷ்யவை தாக்கிப் பேசினார். "ஜனநாயக செயல்முறையில் பின்தங்கிய நடவடிக்கைகளை" ரஷ்ய எடுத்து வருவதாக அவர் குற்றம் சாட்டினார்; தன்னுடைய அண்டை நாடுகளின் நிலப்பரப்பு ஒழுங்கை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் வகையில், அவற்றின் உரிமைகளை குறைக்கும் வகையில், ரஷ்ய வேண்டுமென்றே எரிவாயு அளிப்புக்களை குறைக்கும் முயற்சிகளில் ஈடுபடுவதாகவும் அவர் கூறினார். இந்நாடுகளின் ஜனநாயக இயக்கங்கள் என்று அவர் அழைப்பனவற்றை செல்வாக்கிற்கு உட்படுத்த மாஸ்கோ முற்படுவதாகவும் செனி தொடர்ந்து கூறியிருந்தார். இவ்விதத்திலான வாதம் ரஷ்ய அமெரிக்க நாடுகளிடையே உள்ள அழுத்தங்களில் புதிய உயர் நிலையை காட்டுகிறது. சோவியத் ஒன்றியத்தின் பொறிவிற்கு பின் ஓர் அமெரிக்க ஜனாதிபதியோ, துணை ஜனாதிபதியோ வெளிப்படையாக ரஷ்யவை அச்சுறுத்தலுக்கு உட்படுத்தியதில்லை. இதுகாறும் வெள்ளை மாளிகை பொதுவாக "நட்பு உறவுகள்" இருப்பதைத்தான் பொதுவாக வலியுறுத்தி வந்துள்ளது, அதே நேரத்தில் அச்சுறுத்தல்கள், குற்றச் சாட்டுக்கள் போன்றவை பென்டகன், பல சிந்தனைக் குழுக்கள், இரண்டாம் மட்ட அதிகாரிகள் ஆகியோர்களிடம் விடப்பட்டுவிட்டன. அமெரிக்க அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டிருக்கும் ஆக்கிரோஷமான அணுகுமுறை அமெரிக்க ஆளும் உயரடுக்கு அனைத்து முக்கிய ஆதார வளங்கள் மற்றும் சந்தைகளில் சர்வதேச ஆதிக்கத்தை பெறும் அமெரிக்க கொள்கைகளின் ஒரு பகுதியே ஆகும். அமெரிக்காவின் ஆதிக்கத்திற்கு சவால் விடக்கூடிய வட்டார சக்திகளை வலுப்படுவதை அது பொறுத்துக் கொள்ள தயாராக இல்லை; இன்னும் வெளிப்படையாக இராணுவமுறையை பயன்படுத்திக்கூட சக்தி வாய்ந்த பிராந்திய போட்டியாளர்கள் வெளிவருவதை அது தடுக்கத்தான் முற்பட்டு வருகிறது. ரஷ்ய அத்தகைய ஓர் அச்சுறுத்தல் என்று அமெரிக்கா பெருகிய முறையில் காண்கிறது. சோவியத் யூனியனின் மூன்னாள் செல்வாக்கு மண்டலத்தின் மீது அமெரிக்கா தன்னுடைய மேலாதிக்கத்தை சுமத்தும் நடவடிக்கைகளை பல ஆண்டுகளாக தன்னுடைய பிற்போக்குத்தனமான முறையிலேயே ரஷ்ய ஆளும் உயரடுக்கு எதிர்க்கிறது. ரஷ்யவின் மரபார்ந்த நட்பு நாடான சேர்பியாவிற்கு எதிராக அமெரிக்கத் தலைமையிலான போர் மற்றும் அதை தொடர்ந்து சூழ்ச்சிக்கையாளல் மூலம் பெல்கிரேடின் ஆட்சி மாற்றத்தை செய்ததற்கும் விடையிறுக்கும் வகையில், ரஷ்யவின் ஆளும் உயரடுக்குகளின் செல்வாக்கு மிகுந்த பிரிவுகள் தங்கள் கொள்கைகளை மறுநோக்குநிலைப்படுத்தும் பணியைத் தொடங்கின. சோவியத்தின் ஒன்றியத்தின் பொறிவுடன் அமெரிக்கா திருப்தி அடைந்துவிடாது என்பதை அவை நன்கு உணர்ந்து, சோவியத் ஒன்றியத்தின் பொறிவில் மிகப் பெரிய நாடாக எழுச்சி பெறும் நாட்டின் --அதாவது ரஷ்யவின்-- செல்வாக்கை இன்னும் குறைக்க வேண்டும் என்றுதான் முயற்சிக்கும் என்றும் அவை அறிந்துள்ளன. சோவியத் ஆட்சிக்கு பிந்தைய அமைப்புக்களை காப்பதற்கும், அமெரிக்காவில் இருந்து வரும் பெருகிய அழுத்தங்களுக்கு எதிராக ரஷ்யவின் நலன்கள் மண்டலத்தை காப்பதும்தான் ஒரே வழி என்று ரஷ்ய ஆளும் உயரடுக்கிலுள்ள சக்திகள் உணர்ந்து எழுச்சிறத் தொடங்குகின்றன. முன்னாள் அரசாங்கச் செல்வம் மற்றும் சொத்துக்களின் உரிமையாளர்களாக இருந்த சிறுதன்னலக் குழுக்களின் பார்வையில், உளவுத்துறை, இராணுவம் ஆகியவற்றின் பழைய பாதுகாப்பு அமைப்புக்கள் மறு நோக்குநிலைகொண்டு சீன வழியில் ஒரு அரசாங்தத்தை தோற்றுவிக்கும் இலக்கை கொண்டன. சீனாவில் ஒரு புதிய முதலாளித்துவ அடுக்கு கம்யூனிஸ்ட் கட்சியின் கடுமையான கட்டுப்பாட்டின்கீழ், கட்சியிலே இருந்தே தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆளும் உயரடுக்கு தன்னுடைய சுரண்டல் முறையிலான மிருகத்தனமான வழிவகைகளை சுமத்தி உலகச் சந்தையில் சுயாதீனமான சக்தியாக நாடு வெளிப்படவும், மற்றும் இருக்கும் பெரிய சக்திகளுக்கு போட்டியாக வருவதற்கும் முயல்கின்றது. அத்தகைய ரஷ்ய அரசை ஏற்படுத்துவதற்கு, விளாடிமீர் புட்டின் அவருடைய சகாக்கள் போன்றோரின் திறமைகள் இருக்கும் பின்னணியைக் கொண்ட நபர்கள் வேண்டும் என்று அவை முடிவிற்கு வந்துள்ளன. பழைய சோவியத் உளவுத்துறை கருவிக்கும் புதிய தன்னல குழுக்களுக்கும் இடையே உள்ள தொடர்புகளின் உருவாக புட்டின் திகழ்கிறார். சோவியத் ஒன்றியத்தின் பொறிவிற்கு முன்பு, புட்டின் 15 ஆண்டுகள் சோவியத் வெளிநாட்டு உளவுத்துறையில் பணியாற்றியுள்ளார். 1990ல் இருந்து 1996 வரை, அவர் ரஷ்யவின் இரண்டாம் மிகப்பெரிய நகரத்தின் உள்ளூர் தன்னலக்குழு தன்னை செல்வம் கொழிக்கும் முயற்சியில் ஈடுபடுத்திக் கொண்டதற்கு பாதுகாப்பாக நின்ற சென்ட் பீட்டர்ஸ்பேர்க்கின் மேயரான Anatoli Sobchack இன் வலதுகரமாகவும் மிக முக்கியமான ஆலோசகராகவும் இருந்தார். இக்காலத்தில் மிகவும் ஊழல்நிறைந்த அரசியல் வாதிகளில் உயரிடத்தில் அவர் இருப்பதாகப் பரந்த அளவில் கருதப்படுகிறது. 1996ம் ஆண்டு சோப்சாக் மறுபடியும் வெற்றியடைவதில் பின்னடைவு கண்டபின், புட்டின் உளவுத்துறைக்கு திரும்பி, 1998ம் ஆண்டு கூட்டாட்சி பாதுகாப்பு அமைப்பின் (FSB) தலைவராக பொறுப்பேற்றார்; இந்த அமைப்பு சோவியத் சகாப்தத்தில் இருந்த KGB யின் பின்தோன்றலாகும். பதவியில் இருந்து வெளியேறிய ஜனாதிபதி போரிஸ் யெல்ட்சினால், புட்டின் பிரதம மந்திரியாக தெரிந்தெடுக்கப்பட்டவர் ஆவார். 2000த்தில் புட்டின் யெல்ட்சினிடம் இருந்து ஜனாதிபதி பொறுப்பை ஏற்றார். முக்கியமான பதவிகளில் உளவுத்துறை, இராணுவ அதிகாரிகளை கொண்டு நிரப்பும் வகையில் புட்டின் செயல்பட்டார்; நாளடைவில் செய்தி ஊடகத்தின் சுதந்திரச் செயற்பாட்டையும் நெரிக்க முற்பட்டு, தன்னலக் குழுவினரின் பணிகளை புதிய வகையில் தொழிற்பிரிவினை செய்தார்: சிறு தன்னலக் குழுவினர் பொருளாதாரத்தின் மீது தங்கள் கட்டுப்பாட்டை தக்கவைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டனர்; அதேநேரத்தில் இராணுவமும் உளவுத் துறையும் அரசியல் தலைமைக்கு பொறுப்பு உடையவர்கள் ஆயினர். இந்த நிலையை எதிர்த்த தன்னல சிறு குழுவினர் அகற்றப்பட்டனர், அல்லது அவர்களுடைய செல்வாக்குகள் பெரிதும் குறைப்பிற்கு உள்ளாயிற்று. இவ்விதத்தில் முதல் இலக்குகளில் ஒருவர் செய்தி ஊடக அதிபரான போரிஸ் பேரெசாவஸ்கியும் விளாடிமிர் குசின்ஸ்கியும் ஆவர்; அவர்கள் நாடுகடத்தப்பட்டனர்; அவர்களுடைய ஊடகப் பேரரசு சிதைக்கப்பட்டது. எண்ணெய் பில்லியனரான Michael Khodorkovsky இப்பொழுது ஒரு சைபீரிய சிறைச் சாலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக அடைக்கப்பட்டுள்ளார். புதிய கொள்கையின் உட்கரு ரஷ்யவின் மிக முக்கியமான இருப்புக்களின் மீது அரசாங்கக் கட்டுப்பாடு ஆகும்; அதிலும் குறிப்பாக எண்ணெய் மற்றும் எரிபொருள்மீது ஆகும். உலகெங்கிலும் விரைவாக பெருகிவரும் தேவையை ஒட்டி, இந்த இருப்புக்கள் ரஷ்ய பொருளாதாரத்தின் மிக முக்கியமான அடிப்படையை பிரதிபலிக்கின்றன; இவ்வாறு கிரெம்ளினின் கரங்களில் அதிகாரத்தின் முக்கிய நெம்புகோலாக உள்ளன. Gazprom நிறுவனத்தின் தலைமையானது, அதிகரித்த அளவில் அரசிற்கு கீழ்ப்பட்டிருக்கும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டது. எண்ணெய் தொழிலில், தேசியமயமாக்கப்பட்ட Rosneft நிறுவனம் கோடோர்கோவ்ஸ்கியுடைய எண்ணெய் நிறுவனமான Juganskneftegas உடன் இணைக்கப்பட்டதால் வலுவடைந்தது. தன்னலக்குழுக்காரர் Roman Abramovixh க்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனமான Sibneft, Gazprom உடன் இணைக்கப்பட்டது.சக்தி பொருட்களின் விலையேற்றத்தாலும், அரசாங்க கட்டுப்பாட்டின் வலிமையினாலும், ரஷ்ய ஒரு கடனாளி நாடு என்ற நிலையில் இருந்து கடன் கொடுக்கும் நாடு என்று மாறியுள்ளதுடன், உலகில் மிக அதிக நாணய இருப்புக்களுடைய நாடுகளின் பட்டியலில் உயரிடங்களிலும் உள்ளது. சீனாவுடன் நெருக்கமான உறவுகளை வளர்ப்பதன் மூலம், குறிப்பாக, அந்நாட்டின் மாபெரும் ஆற்றல் தேவைகளில் இருந்து இலாபம் அடையும் பொருட்டும் மற்றும் ஒரு சக்தி வாய்ந்த நட்பு நாட்டை பெறவேண்டியும் இந்த புதுப்பிக்கப்பட்ட பொருளாதார பிடியை பயன்படுத்திக்கொள்ள ரஷ்ய முயன்றுவருகிறது. சில ஆண்டுகளாக எண்ணெய், எரிபொருள் குழாய்த்திட்டங்கள் ரஷ்யவில் இருந்து சீனாவிற்கும் ஜப்பானுக்கும் கூட போடுவதற்கு பலவிதமான காட்சிகள் வந்துபோயுள்ளன. இது ரஷ்யவை மீண்டும் தன்னுடைய முன்னாள் சோவியத் தெற்குக் குடியரசுகளிடையே செல்வாக்கை மீட்டுக் கொள்ள உதவக்கூடும். ஏற்கனவே உஸ்பெகிஸ்தானில் உள்ள தன்னுடைய இராணுவ தளங்களை அமெரிக்கா அகற்றிக் கொண்டு விட்டதுடன், Kyrgyzstan ல் உள்ள தளத்தையும் மூடவேண்டி நிர்பந்திக்கப்படலாம். இது அமெரிக்காவில் மட்டும் அல்லாமல் ஐரோப்பாவிலும் பெருகிய கவலைக்கு வழிவகுத்துள்ளது. முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் தெற்கு நாடுகளில் தன்னுடைய அக்கறைகள் ஆபத்திற்கு உட்பட்டுள்ளதாக அமெரிக்கா கருதுகிறது. ஓராண்டிற்கு முன்புதான் இப்பகுதி மத்திய ஆசிய எண்ணெயை அஜெர்பைஜானில் இருந்து ஜோர்ஜியா வழியாக உலகச் சந்தைக்கு ரஷ்ய, ஈரானை ஓரம் கட்டிவைத்து அனுப்பத் தொடங்கிய இடம் ஆகும். அதே நேரத்தில் அமெரிக்கா சீனா என்னும் பொருளாதார பேருரு இன்னும் வலிமை அடைவதினாலும் அச்சுறுத்தப்படுவதாக உணர்கிறது. மிகப் பெரிய அளவிற்கு ரஷ்யவிடம் ஆற்றல் அளிப்புகளுக்கு நம்பியிருக்கும் ஐரோப்பா, இன்னும் கூடுதலான வகையில் விலை ஏறக்கூடும் மற்றும் ரஷ்ய அளிப்பை குறைக்க கூடும் என அஞ்சுகிறது; ஏனெனில் இன்னும் கூடுதலான இலாபத்திற்கு ஆசியாவிற்கு விற்கலாம் என மாஸ்கோ விழைவு கொண்டுள்ளது. இந்தப் பின்னணிதான் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிற்கும்கூட பெருகிய முறையில் ஆக்கிரோஷம் வந்துள்ளதற்கு காரணம் ஆகும். 2003ல் அமெரிக்கா ஜோர்ஜிய அரசாங்கத்தை கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபட்டது; ஓராண்டிற்கு பின் உக்ரைன் அரசாங்க கவிழ்ப்பும் நடத்தப்பட்டது; இவ்விரு இடங்களிலும் அமெரிக்க சார்புடைய ஆட்சியாளர்கள் இருத்தப்பட்டனர். எதிர்க்கட்சி ஐரோப்பிய பக்கத்தால் நெருக்கமான ஆதரவிற்கு உட்பட்டபோதிலும், இந்த வசந்த காலத்தில் பெலாரசில் நிகழ்த்தப்பட்ட இதேபோன்ற முயற்சி தோற்றுப் போயிற்று. ஜேர்மனிய வெளியுறவுக் கொள்கை சங்கத்தில் ரஷ்ய விவகார வல்லுனராக இருக்கும் Alexander Rahr சீனா, இந்தியாவுடன் ரஷ்ய கூட்டுச்சேர்வதால் வந்துள்ள பயங்கள் பற்றி சுருக்கமாக கூறுகையில் இது எஞ்சிய உலகம் முழுவதற்கும் எண்ணெய், எரிவாயு ஆகியவற்றை முற்றுகையிடக்கூடிய திறனை உடையது என்றார். அத்தகைய கூட்டு "இருபதாம் நூற்றாண்டின் உலக ஒழுங்கின் இரண்டாம் துருவமுனையாக" மாறிவிடும் என்றும் அவர் விளக்கினார். இந்த விளைவைத்தான் அமெரிக்கா தடுக்க முற்பட்டுக் கொண்டிருக்கிறது. அண்மையில்தான் இத்தயாரிப்புக்கள் எவ்வளவு பரபரப்பை கொண்டுள்ளன என்பது தெளிவாயிற்று. அமெரிக்க ஏடான Foreign Affairs அண்மையில் கொடுத்துள்ள அறிக்கையின்படி, புதிய தொழில்நுட்ப வளர்ச்சிகள் அமெரிக்கா மிகப் பெரும் அணுவாயுத மேன்மை நிலை கொண்டிருப்பதை காட்டுகின்றன. சீனா, ரஷ்ய உட்பட, அணுவாயுதங்கள் இருக்கும் அனைத்து நாடுகள்மீதும் முதல் தாக்குதலை நடத்துவதற்கு அமெரிக்காவால் முடியும்; அவை அனைத்தின் பதிலடி கொடுக்கும் திறனையும் ஒரே தாக்குதலில் கிட்டத்தட்ட அழித்துவிட முடியும். இரண்டாம் உலகப் போர் முடிவுற்று 61 ஆண்டுகளுக்கு பின்னர் மனித குலம் மீண்டும் வன்முறைகொண்ட சர்வதேச உறவுகள் காலத்தை பழையபடி எதிர்நோக்குகிறது. வாஷிங்டன், மாஸ்கோ இரண்டிலும் இருக்கும் "ஓனாய்களை" எதிர்க்க தொழிலாளர் வர்க்கம் சர்வதேச அளவில் அதன் சோசலிசக் கொள்கையை கட்டாயம் வளர்த்தெடுக்க வேண்டும். "சோசலிசமா அல்லது காட்டுமிராண்டித்தனமா" மாற்றீடு என்பதுதான் இப்பொழுது பெருகிய முறையில் மனித குலம் அனைத்திற்கும் வாழ்வா சாவா என்ற பிரச்சினையாக அதிகரித்தவகையில் முன்வைக்கப்படுகிறது. |