World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா

Asian growth rates rise but employment problems deepen

ஆசிய வளர்ச்சி விகிதங்கள் அதிகரிப்பு ஆனால் வேலைவாய்ப்பு பிரச்சினைகள் ஆழமாகின்றன

By Nick Beams
9 May 2006

Back to screen version

ஒப்புநோக்கும்போது உயர்ந்தளவு பொருளாதார வளர்ச்சி விகிதங்கள் நிலவினாலும், மிகத்தீவிரமான சமூக மற்றும் அரசியல் விளைபயன்களை கொண்ட ஒரு வேலைவாய்ப்பு நெருக்கடியை நோக்கி ஆசியா சென்று கொண்டிருக்கிறது. பிராந்தியத்தின் தொழிலாளர் சந்தை தொடர்பாக சென்ற மாதம் ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) வெளியிட்டுள்ள புதியதொரு நூலின் முடிவு இதுதான்.

"ஒரு ஆசிய வேலைவாய்ப்பு நெருக்கடியின் முக்கிய அம்சங்கங்கள் ஏற்கனவே வடிவம் பெற்றுவிட்டன வலுவான பொருளாதார வளர்ச்சி மட்டுமே இந்த பிரச்சினையை தீர்த்து வைக்காது. ஒப்புநோக்கும்போது உற்பத்தியின் உயர்ந்த வளர்ச்சி விகிதங்களை சாதித்துள்ள நாடுகளில் கூட, வேலைவாய்ப்பு வளர்ச்சி ஏமாற்றம் தரும் வகையில் அமைந்திருக்கிறது" என்று ADB இன் தலைமை பொருளாதாரவாதி இப்ஷால் அலி அந்த புத்தகத்தை வெளியிட்டு குறிப்பிட்டார்.

கடந்த இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக வறுமையை குறைப்பதில் சில முன்னேற்றங்கள் இந்த பிராந்தியத்தில் ஏற்பட்டிருந்தாலும், 1.9 பில்லியன் மக்கள் ஒரு நாளைக்கு 2 டாலருக்கும் குறைவான வருவாயில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் வேலை தேடினாலும் கிடைக்கவில்லை அல்லது கிடைக்கும் வேலையில் மிகக்குறைவாக சம்பாதிக்கின்றனர் என்று ADB ஆய்வு குறிப்பிட்டிருக்கிறது.

உலக பொருளாதாரத்தில் சீனா, இந்தியா மற்றும் ரஷ்யா ஆகியவை இணைக்கப்பட்டதன் விளைவாக, ஒரு "தேவைக்கு அதிகமான பாரியளவு பூகோள தொழிலாளர்" நிலவுவதாக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

"உயிர் வாழவேண்டும் என்பதற்காக தரம்-குறைந்த ஊதிய வேலை தேடி கண்டுபிடிப்பதற்கான நிரந்தர முயற்சிகளில் தகுதிக்கேற்ற வேலை கிடைக்காத தொழிலாளர்கள் மற்றும் வேலையில்லாத பாரியளவு ''ஒதுக்கிவைக்கப்பட்ட பெருந்திரள் தொழிலாளர்படையின்'' அழுத்தங்களினால் மிக விரைவில் அல்லது கடைசியாக ஆசியாவில் வெற்றி மறைந்துவிடும்" என்று அலி குறிப்பிட்டார்.

"ஆசிய பொருளாதாரங்கள் வளர்வதற்கான சாத்தியக்கூறுகள் பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. ஆனால் ஆசிய அரசாங்கங்கள் வேலைவாய்ப்பை உருவாக்குவதை ஒரு மத்திய தேசிய குறிக்கோளாக கொண்டு, காலக்கெடு நிர்ணயிக்கப்பட்ட, சாத்தியமான, நம்பகத்தன்மையுள்ள அளவிடும் கொள்கைகளை மேற்கொண்டால் தவிர இந்த பிராந்தியம் பெருமளவில் வேலையில்லா நிலை தகுதிக்கேற்ற வேலையின்மை மற்றும் வறுமையில் சிக்கித்தவிக்கும் நிலை ஏற்படும்---- மற்றும் அதனால் ஏற்படும் பிரச்சனைகள் அனைத்தையும் சமாளிக்க வேண்டியிருக்கும்."

ADB ஆய்வின் மிகவும் முக்கியமான முடிவுகளில் ஒன்று 1990களில் ஏற்பட்ட ஒவ்வொரு புள்ளி வேலைவாய்ப்பு உயர்வும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) கிடைத்த அதிகரிப்புக்கு ஏற்ப முந்திய தசாப்தத்தின் அதிகரிப்பைவிட குறைவாகவே இருந்தது. இதில் உலகில் வேகமாக வளர்ந்து வருகின்ற பொருளாதாரமான சீனா மிகப்பெரும் அளவிற்கு வீழ்ச்சி கண்டது. அங்கு 1980களில் 3 சதவீத பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ப வேலைவாய்ப்பில் 1 சதவீதம் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் 1990களில் வேலைவாய்ப்பில் அதே அதிகரிப்பை அடைய 8 சதவீத பொருளாதார வளர்ச்சி தேவையாக இருந்தது.

இந்த பிரச்சினை மோசமடைந்து வருவதாக தோன்றுகிறது. 2006ல் அரச நிறுவனங்களால் வெளியேற்றப்படுகின்ற கிராமப்புற குடியேறுவோருக்கும் மற்றும் தொழிலாளருமான தொழிலாளர் சந்தைக்கு புதிதாக நுழைபவர்களுக்கு இடமளிப்பதற்கு சீனாவில் சுமார் 25 மில்லியன் புதிய நகர வேலை தேவையை உருவாக்கும் என்று அது மதிப்பீடு செய்திருக்கிறது. ஆனால் கடைசியாக செய்துள்ள மதிப்பீடுகளின்படி 11 மில்லியன் புதிய வேலைகள் மட்டுமே உருவாக்கப்படும்.

வருமான சமத்துவமின்மை பொறுத்தவரை ADB "ஏமாற்றமளிக்கும்" முடிவுகள் என்று குறிப்பிட்டிருக்கிறது. சீனாவில் Gini குறியீட்டின்படி, அது சமத்துவமின்மையை ஒரு புள்ளிவிவர அடிப்படையில் மதிப்பிடுகிறது அது 1981 இற்கும் 2000 இற்கும் இடைப்பட்ட காலத்தில் 13 சதவீத புள்ளிகள் உயர்ந்துள்ளது. நகர்புற மற்றும் கிராமப்புற பகுதிகளுக்கு இடையிலும் நகர்புற பகுதிகளுக்குள்ளேயும் சமத்துவமின்மைகள் அதிகரித்துள்ளது.

''சம்பிரதாயமற்ற'' துறை என்றழைக்கப்படுவதில் உள்ள வேலையில் உற்பத்தித்திறன் மிகக்குறைவு மற்றும் சொற்ப மூலதனம் செய்யப்படுகின்றன. அவற்றில் வேலைவாய்ப்புக்கள் உயர்ந்துள்ளன அல்லது அப்படியே நீடித்துக் கொண்டுள்ளன. இந்தியாவில் 1993 இற்கும் 1999 இற்கும் இடைப்பட்ட காலத்தில் தனிநபருக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் 5 சதவீதத்தை நெருங்கி வந்தது. இந்த பிரிவிலிருந்து விவசாயம் சாராத வேலைவாய்ப்பு 80.5 சதவீதத்திலிருந்து, 83.2 சதவீதமாக அதிகரித்தது.

அரசிற்கு சொந்தமான தொழிற்சாலைகளில் தற்காலிகமாக வேலையிலிருந்து நீக்கி வைக்கப்பட்டதாலும் கிராமப்புறங்களில் இருந்து நகரங்களுக்கு குடியேறுவோர் அதிகரித்துவிட்டதாலும் சீனாவிலும் வியட்நாமிலும் சம்பிரதாயமற்ற வேலைகள் அதிகரித்துள்ளன. 1997-98 ஆசிய நிதி நெருக்கடியை தொடர்ந்து இந்தோனேஷியாவில் இதுபோன்ற சம்பிரதாயமற்ற வேலைகள் ''திடீரென்று'' அதிகரித்திருப்பதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது, பிலிப்பைன்ஸ் மற்றும் தாய்லாந்திலும் இவ்வகை உயர்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும் வேலையின் தன்மையும் மாறிக்கொண்டு வருகிறது. "இதற்கு முன்னர் சம்பிரதாய துறைகளில் 'முறையான' ஒப்பந்தங்கள் அடிப்படையில் வேலைவாய்ப்புக்கள் வழங்கப்பட்டன, அவற்றின் மூலம், கணிசமான அளவிற்கு பணிப்பாதுகாப்பு இருந்தது. இப்போது அப்படி இல்லாத நிலை அதிகரித்து வருகிறது. பிலிப்பைன்சில் சம்பிரதாய துறை நிறுவனங்களின் ஆய்வு குறிப்பிட்டுள்ளபடி மொத்த வேலைகளில் நிரந்தரமற்ற தொழிலாளர்களின் விகிதம் 1991ல் 20 சதவீதமாக இருந்து, 1997ல் 28 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இந்த இயல்நிகழ்வின் காரணத்தை ஆய்வு செய்த அறிக்கை பூகோள தொழிலாளர் சக்திக்கு இணையான அளவிற்கு முதலீடுகளுக்கான மூலதனம் பெருகவில்லை என்று குறிப்பிட்டிருக்கிறது.

சம்பிரதாய தொழில்துறைகளிலும் சேவைத்துறைகளிலும் மிகவும் தீவிர-உற்பத்தி முறைகளின் பயன்படுத்தல் வளரும் நாடுகளின் ஓரளவு வேலை அதிகரிப்புக்கு காரணம் என கூறப்படுகின்றது. ஆனால் ஒப்புநோக்கும்போது இவ்வாறாக இல்லை. ''மூலதன பெருக்கத்தின் அர்த்தத்தில் தொழிற்துறை நாடுகளிலிருந்து வளரும் நாடுகளின் சம்பிரதாய துறைகள் மிகவும் வேறுபட்டதல்ல''.

எடுத்துக்காட்டாக, ஒரு இந்திய மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் தொழிற்சாலையில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அதில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் 810 தொழிலாளர்கள் 244,000 அலகுகளை (units) தயாரித்தனர், தானியங்கி இயந்திரங்கள் அதிகமாக அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், மற்றும் தொழிற்பட்டறை மாற்றங்கள் மூலம் மேலும் 90 தொழிலாளர்களை மட்டுமே சேர்த்துக்கொண்டு அதே தொழிற்சாலை அதைவிட ஏறத்தாழ மூன்று மடங்கு அதிகமான மோட்டார் சைக்கிள்களை தயாரிக்கிறது. "முன்னணி உற்பத்தி தொழிற்கூட நிர்வாகிகள் விளக்கம் தந்திருப்பதைப்போல், தொழிலாளர்களை சிக்கனப்படுத்தும் தொழில்நுட்பங்கள் ''சர்வதேச போட்டி திறனை'' எட்டுவதற்கு அவசியம் என்று கருதப்படுகிறது."

சம்பிரதாய துறையில் தொழிலாளர்களில் ''கணிசமான அதிகரிப்பை'' கோர ADB ஆய்வு அழைப்புவிடுகிறது. ஒட்டுமொத்த உற்பத்தி உயர்வதுடன் இந்த விரிவாக்கம் உழைப்பின் தீவிரமாக்கலையும் செய்வதாக அமைந்திருக்க வேண்டும். ஆனால் இது நடப்பதற்கான கொள்கை விதிமுறை நிறைவேறுமா என்பது மற்றொரு பிரச்சினையாகும். ''புதிய பகுதிகளில் உற்பத்தி நடவடிக்கையின் பன்முகப்படுத்தலை ஊக்குவிக்கவும், நடப்பு நடவடிக்கையின் மறுசீரமைப்பு வசதிசெய்யவும் மற்றும் பொது மற்றும் தனியார் துறைகளுக்கிடையில் ஒத்துழைப்பை ஊக்குவிக்கும்'' கொள்கைக்கான அழைப்புவிட்ட பின்னர், அது தெரிவிப்பது என்னவென்றால் ''இந்த நடவடிக்கைகள் தொழில் நிவனங்களுக்கிடையில் தீவிர போட்டியாலும் புதிய தொழில்நுட்பங்கள் மேற்கொள்ளப்படுவதாலும் வேலை பிரச்சனை சம்பந்தமாக ஓரளவிற்கு மட்டுப்படுத்துமே தவிர அவற்றை ஒழித்துக்கட்டுவதாக அமையாது. ''இதை வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், புதிய தொழில்நுட்பங்களை மேற்கொள்வதாலும் நிறுவனங்களிடையே தொழில்போட்டிகள் உக்கிரமடைவதாலும் வேலையில்லாதோர் அதிகரிப்பின் காரணமாக கடுமையான பிரச்சினைகள் நீடித்துக் கொண்டேயிருக்கும்''.

இது எவ்வளவு கடுமையான பிரச்சினை என்பதை, இந்தியாவின் முன்னணி தொழில்துறை மற்றும் பொறியியல் நிறுவனங்களின் தலைவர் சமூபத்தில் ஆற்றிய உரை வலியுறுத்தி எடுத்துக்காட்டுவதாக உள்ளது. சென்ற மாதம் கார்னல் பல்கலைக்கழக ஹாட்பீல்டு உரையாற்றிய டாடா குழுமத்தை சார்ந்த தலைவர் ரட்டன் டாடா இந்தியாவின் ஒரு பில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் தொகையில் 20 சதவீதம் பேர் 20 வயதுக்கும் குறைந்தவர்கள் என்று சுட்டிக்காட்டினார். 2040 வாக்கில் இந்த நாடு சீனாவையும் மிஞ்சுகின்ற வகையில் உலகின் அதிகளவு உழைக்கும் வயதை கொண்ட மக்களை உருவாக்கிவிடும்.

"இந்த இந்திய இளைஞர்கள் உலகில் ஒரு இடத்தையும், கல்வியையும், ஒரு பணியையும் தொலைக்காட்சியில் காண்கின்ற மாதிரியான ஒரு வாழ்க்கையையும் விரும்புகின்றனர், அவர்களுக்குரிய வேலை கிடைக்குமா? அப்படி கிடைக்காவிட்டால் இந்த நாட்டில் ஒரு புரட்சி உருவாகிவிடலாம்" என்று அவர் எச்சரித்தார்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved