World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Major naval battle: Sri Lanka plunges toward open civil war

கடற்படையுடன் பெரும் மோதல்: இலங்கை வெளிப்படையான உள்நாட்டு யுத்தத்தை நோக்கி இழுபடுகிறது

By K. Ratnayake
13 May 2006

Back to screen version

இலங்கையில் மோதல்கள் அதிகரித்து வருகின்ற நிலையில், இராணுவமும் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளும் கடந்த வியாழக் கிழமை வடக்கில் உள்ள மீனவக் கிராமமான வெற்றிலைக்கேணிக்கு அருகில் உள்ள கடலில் மோதிக்கொண்டனர். இரு சாராரிலும் சுமார் 50 பேர் உயிரிழந்திருக்கக் கூடும் என உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலடியாக, இராணுவம் புலிகளின் தலைமையகம் உள்ள கிளிநொச்சிக்கு அருகில் உள்ள பிரதேசங்கள் உட்பட புலிகளின் நிலைகள் மீது விமான மற்றும் ஆட்டிலரித் தாக்குதல்களையும் முன்னெடுத்தது.

கொழும்பு அரசாங்கமும் மற்றும் ஊடகங்களும் இந்தத் தாக்குதலை முன்னெடுத்ததற்காக புலிகளை உடனடியாக கண்டித்த அதேவேளை, இந்த அண்மைய சம்பவமானது இலங்கை இராணுவத்தின் சில தட்டுக்களுடன் இணைந்து செயற்படும் புலிகளுக்கு எதிரான தமிழ் துணைப்படைகளின் ஒரு தொடர்ச்சியான ஆத்திரமூட்டல் நடவடிக்கைகளின் பின்னரே இடம்பெற்றுள்ளது. 2002ம் ஆண்டில் இலங்கை அரசாங்கத்திற்கும் புலிகளுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தம் இன்னமும் உத்தியோகபூர்வமாக அமுலில் உள்ள அதேவேளை, வடக்குக் மற்றும் கிழக்கில் தீவின் பிரகடனப்படுத்தப்படாத யுத்தம் வளர்ச்சிகண்டுவருகிறது.

இலங்கை இராணுவத்தின்படி, வியாழன் நண்பகல் பேர்ல் குருயிஸ் என்ற கப்பல் 700 சிப்பாய்களை ஏற்றிக்கொண்டு நான்கு ரோந்துப் படகுகளுடன் பயணித்துக்கொண்டிருந்தபோது சுமார் 15 புலிகளின் படகுகள் தாக்குதல் தொடுத்தன. இந்த இரண்டு மணித்தியால மோதலில், வெடிபொருட்களை கொண்ட புலிகளின் படகு ஒன்று கடற்படையினரின் துப்பாக்கிப்படகு ஒன்றை தகர்த்து மூழ்கடித்தது. இதில் இரு அலுவலர்களும் ஒரு இராணுவ சமிக்ஞையாளர் உட்பட17 கடற்படையினர் கொல்லப்பட்டனர். விமான உதவியுடன் தமது ரோந்துப் படகுகள் புலிகளின் படகுகளில் ஐந்தை அழித்ததாகவும் மற்றும் ஏனைய பலவற்றையும் சேதப்படுத்தியதாகவும் குறைந்த பட்சம் 30 புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர் என்றும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

தமது கடற்பயிற்சிக்கு இடையூறு ஏற்படுத்தியதோடு மோதல்களை தூண்டியதாகவும் புலிகள் குற்றஞ் சாட்டியுள்ளனர். தாம் இன்னுமொரு கடற்படை படகை சேதமாக்கியதாகவும் அது பருத்தித்துறைக்கு அருகில் மூழ்கியதோடு தமது போராளிகளில் நால்வரே உயிரிழந்ததாக புலிகள் தெரிவித்துள்ளனர். எவ்வாறெனினும் தமது கண்காணிப்பாளர்களை பேர்ல் குருயிஸில் இருத்தியிருந்த நோர்வே தலைமையிலான இலங்கைக் கண்காணிப்புக் குழு, புலிகள் யுத்த நிறுத்த உடன்படிக்கையை "படு மோசமாக மீறிவிட்டதாகவும்" "வலிந்து தாக்குதல்களை" மேற்கொண்டதாகவும் புலிகள் மீது குற்றஞ்சாட்டயுள்ளது.

"பக்கச்சார்பாக" இருப்பதாக கண்காணிப்புக் குழுவை விமர்சித்த புலிகள், கடற்பயிற்சி செய்வதற்கான தமது உரிமையை வலியுறுத்தினர். புலிகளின் அறிக்கை ஒன்று எதிர்காலத்தில் கடப்படைப் படகுகளில் பயணிப்பதற்கு எதிராக கண்காணிப்புக் குழுவை எச்சரித்தது. "நீங்கள் எமது எச்சரிக்கையையும் வேண்டுகோளையும் நிராகரிப்பீர்களானால் விளைவுகளுக்கு நாங்கள் பொறுப்பேற்க மாட்டோம்," என அந்த அறிக்கை பிரகடனம் செய்துள்ளது.

இரு சாராரும் கடந்த நவம்பரில் ஜனாதிபதி இராஜபக்ஷ தெரிவானதை அடுத்து, வளர்ச்சி கண்டுவந்த வன்முறைகளுக்கு மத்தியில் விளைபயனுள்ள விதத்தில் யுத்தப் பாதையில் அடியெடுத்து வைத்துள்ளனர். புலிகளின் நிலைகள் மற்றும் உறுப்பினர்கள் மீதான தாக்குதல்களுக்கும் தமக்கும் தொடர்பில்லை என அரசாங்கம் சாதாரணமாக மறுத்துவந்த போதிலும், இனவாத பதட்ட நிலைமைகளை எரியச் செய்வதற்காக படுகொலைகளை மேற்கொள்வதில் பலவித தமிழ் துணைப்படைகளுடன் இராணுவத்திற்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த பெப்பிரவரியில் பேச்சுக்கள் நடந்தபோது, இராணுவக் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் இயங்கும் துணைப்படைகளை நிராயுதபாணியாக்க கோரும் யுத்த நிறுத்த உடன்படிக்கையின் பிரிவுகளை நடைமுறைப்படுத்துவதாக உடன்பட்ட போதிலும் அந்த உடன்பாடு நடைமுறைக்கு வரவில்லை.

கடந்த வியாழக்கிழமை, கண்காணிப்புக் குழுவின் கண்காணிப்பாளர் ஜொனி சுனினென் ராய்ட்டருக்கு தெரிவித்ததாவது: "இந்தப் படுகொலைகளில் அரசாங்கத் துருப்புக்களில் குறைந்தபட்சம் ஒருபகுதியேனும் தலையீடு செய்துள்ளதற்கான பலமான ஆதாரங்கள் எம்மிடம் உள்ளன". ஒரு இராணுவ சோதனைச் சாவடியில் இருந்து சுமார் 60 மீட்டர் தூரத்தில் புலி சந்தேக நபர் ஒருவரின் சகோதரி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட இடமொன்றிற்கு அந்த செய்தியாளரை அவர் அழைத்துச் சென்றார். கண்காணிப்புக் குழுவின் விசாரணையாளர் ஜுக்கா ஹெயிஸ்கனென், தமக்கு ஒரு சத்தமும் கேட்கவில்லை எனத் தெரிவித்த, அப்போது கடமையில் இருந்து மூன்று சிப்பாய்களிடமிருந்தும் வாக்குமூலம் எடுத்தார். பொருத்தமற்ற கூற்றுக்களை நிராகரித்த அவர், "இது கேலிக் கூத்தாகும். அவர்கள் மூடி மறைக்கக் கூட முயற்சிக்கவில்லை," என செய்திச் சேவைக்கு தெரிவித்தார்.

அரசாங்க பேச்சாளர் நிமல் சிறிபால டீ சில்வா, இந்த வாரம் பாராளுமன்றத்தில் உரையாற்றிய போது, "அரசாங்கமானது யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் அவிஸ்ஸாவெல்லையில் அண்மையில் நடந்த படுகொலைகளை அரசாங்கம் தீவிரமாகக் கண்டனம் செய்வதோடு இதைத் திட்டமிட்டவர்களை தண்டிப்பதற்காக தேவையான நடவடிக்கைகளையும் எடுக்கும்" என்றார். இந்தக் கருத்துக்களும் கூட நகைப்புக்கிடமானதாகும். யுத்தப் பிராந்தியமான வடக்கிலும் கிழக்கிலும் தமது கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களில் இராணுவமும் பொலிசும் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை அமுல்படுத்தியுள்ளதோடு தமிழர்களுக்கு தொந்தரவு செய்தும் அவர்களை அச்சுறுத்தியும் அதேபோல் "புலி சந்தேக நபர்களை தடுத்து வைப்பதற்காக" விரிவான தேடுதல் நடவடிக்கைகளையும் மேற்கொள்கின்றனர். குற்றஞ் சாட்டுவது மற்றும் தண்டிப்பதற்கும் முன்னதாக அதிகரித்துவரும் கடத்தல்கள் மற்றும் படுகொலைகளுடன் தொடர்புபட்டவர்கள் கைதுசெய்யப்படக் கூட இல்லை.

கடந்த மாதம் ஜெனீவாவில் இன்னுமொரு சுற்றுப் பேச்சுவார்த்தையை நடத்த எடுத்த முயற்சிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இந்த வாரம் இலங்கையில் நான்கு நாட்களை செலவழித்த ஜப்பானிய சிறப்புத் தூதுவர் யசூசி அக்காசி இன்னுமொரு சுற்றுப் பேச்சுவார்த்தைக்கு அரசாங்கத்தையும் புலிகளையும் ஒழுங்கு செய்வதில் தோல்விகண்டார். அவர் கிளிநொச்சியில் உள்ள புலிகளின் தலைமையகத்திற்கு அவர் விஜயம் செய்தபோது புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் அவரை நிராகரித்துவிட்டார். அரசியல் பொறுப்பாளர் சு.ப. தமிழ்செல்வன், "இலங்கை ஆயுதப் படைகளின் போர் ஆர்வம் கொண்ட தாக்குதல்கள்" முடிவுக்கு வரும்வரை புலிகள் பேச்சுக்களில் கலந்துகொள்ள மாட்டார்கள் என அக்காசியிடம் தெரிவித்திருந்தார்.

இலங்கையில் பெயரளவிலான சமாதான முன்னெடுப்புகள் சம்பந்தமாக அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நோர்வே இணைத்தலைமை நாடுகளின் சார்பிலேயே அக்காசி பேசினார். கட்டுப்பாட்டுடன் இருப்பதற்காக இராஜபக்ஷ அரசாங்கத்தை பாராட்டும் அதேவேளை, இந்த இணைத்தலைமைகள் புலிகள் சம்பந்தமாக மிகவும் அச்சுறுத்தும் நிலைப்பாட்டையே அதிகரித்தளவில் எடுத்துவருகின்றன. கொழும்பு ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அக்காசி, கொழும்பில் உள்ள இராணுவத் தலைமையகத்தின் மீது ஏப்பிரல் 25 அன்று புலிகள் நடத்திய தாக்குதலை கண்டனம் செய்த அதேவேளை, "ஆயுதப் படைகள் தமது பொறுப்பிற்கும் அப்பால் செல்லாமல் இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு" மட்டும் அரசாங்கத்திற்கு வேண்டுகோள் விடுத்தார்.

இவ்வாறு செய்வதன் மூலம், இந்தப் பெரும் வல்லரசுகள் புலிகள் சம்பந்தமாக மிகவும் ஆத்திரமூட்டல் நிலைப்பாட்டை எடுக்க இலங்கை அரசாங்கத்திற்கும் மற்றும் இராணுவத்திற்கும் மெளனமாக அனுமதியளிக்கின்றன. யுத்தம் முடிவுக்கு வந்தால் மட்டுமே 4.5 பில்லியன் டொலர்கள் "சமாதானப் பங்கை" நிதி வழங்கும் நாடுகள் வழங்கும் என ஊடகங்களுக்கு நினைவூட்டினார். ஆனால் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கமும் அதன் சிங்களத் தீவிரவாத ஆதரவாளர்களான மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) மற்றும் ஜாதிக ஹெல உறுமய போன்ற அமைப்புக்களும் அதிகரித்தளவில் யுத்தத்திற்கு முனைப்பாக உள்ளன. இராஜபக்ஷ தன்னை சமாதான மனிதனாக காட்டிக்கொள்வதானது புலிகளை வேண்டுமென்றே வலியத் தாக்குபவர்களாக காட்டுவதையும் மற்றும் புலிகளை இராணுவ ரீதியில் நசுக்குவதற்கு சர்வதேச ஆதரைவைத் திரட்டுவதையும் இலக்காகக் கொண்டதாகும்.

கடந்த வாரம் புது டில்லிக்கு விஜயம் செய்த இலங்கை வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர, பிரதமர் மன்மோகன் சிங் உட்பட சிரேஷ்ட அமைச்சர்கள் பலருடன் பேச்சுக்கள் நடத்தினார். புலிகளை பேச்சுக்கு அழைக்குமாறு இந்தியாவிற்கு பகிரங்கமாக அழைப்பு விடுக்கும் அதேவேளை, இரு நாடுகளுக்கும் இடையில் ஒரு பாதுகாப்பு உடன்படிக்கையை கைச்சாத்திடுவதற்காக இந்தியாவை தூண்டுவதே சமரவீரவின் பயணத்தின் பிரதான இலக்குகளில் ஒன்றாகும். 2003 டிசம்பரில், இராணுவத் தளபதி ஜெனரல் லயனல் பலகல்ல இந்த பிரேரிக்கப்பட்டுள்ள உடன்படிக்கையின் விபரங்களை கசியவிட்டார். அது புலிகளை தோற்கடிக்க இலங்கை இராணுவத்தின் இயல் அளவை குறிப்பிடத்தக்க வகையில் விரிவுபடுத்தும் வகையில், புலனாய்வுத் துறையில் விரிவான இராணுவ ஒத்துழைப்பு, விமானப்படை ஆதரவு மற்றும் கூட்டு கடற்படை நடவடிக்கை திட்டங்களையும் வெளிப்படுத்தியது.

இந்த கொடுக்கல் வாங்கலானது, தமிழ் நாட்டில் உள்ள புலிகளுக்கு ஆதரவான தென்னிந்திய கட்சிகளிடமிருந்து எதிர்ப்பை கிளறிவிட்டதை அடுத்து கிடப்பில் போடப்பட்டிருந்தது. தமிழ் நாட்டு அரசியல் ஒரு காரணியாக இருந்து கொண்டுள்ள அதேவேளை, இந்திய அரசாங்கம் புலிகளுக்கு எதிரானதாக இருப்பதோடு புலிகள் பெற்றுக்கொள்ளும் எந்தவொரு வெற்றியும் துணைக்கண்டத்தின் ஸ்திரமற்ற நிலைமைக்கு ஏதுவாக அமையும் எனவும் அது பீதிகொண்டுள்ளது. இந்திய பாதுகாப்பு அமைச்சர் பிரணாப் முகர்ஜியுடன் இந்த உடன்படிக்கை பற்றி சமரவீர பேசியதாக செய்திகள் வெளிவந்த போதும் உடன்பாடுகள் எதுவும் கிடைக்கவில்லை. எந்தவொரு உத்தியோகபூர்வ உடன்படிக்கைகள் இல்லாவிட்டாலும், இந்திய இராணுவமானது சந்தேகத்திற்கிடமின்றி இலங்கையில் உள்ள தமது சமதரப்பினருடன் ஒத்துழைக்கின்றது. இந்திய பத்திரிகைகளும் கூட, வியாழக் கிழமை மோதலின் போது புலிகளின் படகுகளை கிலிகொள்ளச் செய்வதற்காக இந்திய யுத்தக் கப்பல்கள் முன்வந்திருக்கலாம் என சுட்டிக்காட்டின.

சமாதானம் பற்றி போலியாகப் பேசிக்கொள்ளும் இராஜபக்ஷவின் மோசடியான பண்பானது புலிகளுடன் யுத்தம் நடத்துமாறு பிரச்சாரம் செய்யும் ஜே.வி.பி யில் அவர் தொடர்ந்தும் தங்கியிருப்பதில் இருந்து மிகத் தெளிவாக அம்பலத்திற்கு வருகிறது. நாட்டின் அவசரகால சட்டத்தை விரிவுபடுத்துவது பற்றிய அண்மைய விவாதத்தின் போது, ஜே.வி.பி யின் பாராளுமன்ற குழுத் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்ததாவது: "நாங்கள் பயங்கரவாதிகளின் சவாலை நோக்கவேண்டும். அவர்கள் ஏற்கனவே 4வது ஈழப் போரை தொடங்கிவிட்டனர். நாங்கள் அவர்களின் மொழியிலேயே அவர்களுக்கு பதிலளிக்க வேண்டும். இதற்கு முடிவுகாண எல்லோரும் (கட்சிகள்) ஒன்றுசேர வேண்டும். இதற்கு வேறு பதிலீடுகள் கிடையாது."

அதற்குப் பின்னர் ஜே.வி.பி கூட்டுச் சேர்ந்துகொண்டுள்ள தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் கூட்டத்தில் அவர் பேசும் போது: "புலிகள் அமைப்பு இலங்கை தாயகத்தை பிளவின் விளிம்புக்கு கொண்டுவந்துள்ள நிலையிலும் மற்றும் நாடு நான்காவது ஈழப் போருக்குள் இழுபட்டுச் செல்கின்ற நிலையிலும் அவர்களை இராணுவ ரீதியில் தோற்கடிப்பதை தவிர வேறு பதிலீடுகள் கிடையாது," என பிரகடனம் செய்தார். பேச்சுவார்த்தை மூலமான தீர்வு காண்பது பற்றி தொடர்ந்தும் பேசுவதன் மூலம் "சர்வதேச சமூகத்தை" திருப்திப்படுத்த அரசாங்கம் முயற்சிப்பதாக அவர் விமர்சித்தார்.

இலங்கை அரசியல் ஸ்தாபனமும் மற்றும் இராணுவமும் நாட்டை மீண்டும் அழிவுகரமான உள்நாட்டு யுத்தத்திற்குள் தள்ள தயார் செய்துகொண்டிருக்கும் அதேவேளை, ஜனத்தொகையில் பெரும்பான்மையானவர்கள் ஏற்கனவே 65,000 உயிர்களை பலிகொண்ட மோதல்கள் மீண்டும் வெடிப்பதை விரும்பவில்லை. இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க) யுத்தத்திற்கு மீண்டும் திரும்புவதை சமரசமின்றி எதிர்ப்பதோடு, தமது வர்க்க நலன்களின் பேரில் சோசலிச கொள்கைகளின் அடிப்படையில் ஒரு சுயாதீனமான இயக்கத்தில் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் உழைக்கும் மக்களை ஐக்கியப்படுத்துவதற்காக அரசியல் ரீதியில் போராடி வருகின்றது. நாம் மார்ச் 11 அன்று "இலங்கையில் யுத்த ஆபத்திற்கு ஒரு சோசலிச மாற்றீடு" என்ற தலைப்பில் சோ.ச.க பொதுச் செயலாளர் விஜே டயஸ் விடுத்த அறிக்கையில் எழுப்பப்பட்டுள்ள பிரச்சினைகளை பற்றி கவனமாக அக்கறை செலுத்துமாறு எமது வாசகர்களுக்கு வேண்டுகோள் விடுக்கின்றோம்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved