:
இலங்கை
Sri Lanka: Two killed in attack on Tamil newspaper
office
இலங்கை: தமிழ் செய்திப்பத்திரிகை மீதான தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டனர்
By our correspondent
8 May 2006
Use this
version to print | Send this link by
email | Email the author
வட இலங்கையில் இருந்து தமிழ் மொழியில் வெளிவரும் செய்தித்தாளான உதயன் அலுவலகத்தின்மீது
மே 2 அன்று ஆயுதபாணிகள் மேற்கொண்ட தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளதோடு ஏனைய இருவர் கடுமையாக
காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதல், இராணுவத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான புதுப்பிக்கப்பட்ட
உள்நாட்டு யுத்தத்தை நோக்கி நாடு இழுபட்டுச் செல்கின்ற நிலையில், இனவாத பதட்டநிலைமைகளை மேலும் உக்கிரமடைய
செய்வதை இலக்காகக் கொண்டு திட்டமிட்டு செய்யும் ஒரு தொடர்ச்சியான ஆத்திரமூட்டல்களில் புதிய
சம்பவமாகும்.
யாழ்ப்பாண நகரில் இருந்து வெளிவரும் புலிகளுக்கு சார்பான இந்த செய்தித்தாள்
மீதான தாக்குதலானது யுனெஸ்கோவின் உலக ஊடக சுதந்திர தினத்தை குறிக்கும் முகமாக கொழும்பு அரசாங்கத்தால்
ஏற்பாடு செய்யப்பட்ட மூன்று நாள் நிகழ்வுகளின் மத்தியிலேயே இடம்பெற்றுள்ளது. இந்தப் படுகொலைகள், ஜனாதிபதி
மஹிந்த இராஜபக்ஷவின் கீழ் ஊடகங்களின் உரிமைகள் உட்பட அடிப்படை ஜனநாயக உரிமைகள் திட்டமிடப்பட்ட வகையில்
கீழறுக்கப்படும் அளவை கோடிட்டுக் காட்டுகிறது. கடந்த வாரங்களாக, பொலிசும் இராணுவமும் "பயங்கரவாத
சந்தேக நபர்கள்" என்ற குற்றச்சாட்டின் கீழ் கொழும்பிலும் ஏனைய பிரதேசங்களிலும் நூற்றுக்கணக்கான தமிழர்களை
தடுத்து வைத்துள்ளன.
மே 2, T-56
ரக தானியங்கித் துப்பாக்கிகளுடன் வந்த ஐந்து பேர் சுமார் இரவு 7.25 மணிக்கு உதயன் அலுவலகத்திற்குள்
நுழைந்ததோடு துப்பாக்கிப் பிரயோகம் செய்யத் தொடங்கினர். சந்தைப்படுத்தல் முகாமையாளரான சுரேஷ் என
அழைக்கப்படும் பஸ்தியான் ஜோர்ஜ் சகாயதாஸ், 36, முதலாவதாக கொல்லப்பட்டார். பின்னர் விநியோகப்
பகுதிக்குள் நுழைந்த குண்டர்கள், துப்பாக்கிப் பிரயோகம் செய்த வண்ணம் அங்கிருந்த ஊழியர்களை கீழே படுக்குமாறும்
எவரும் தலையைத் தூக்கக் கூடாது என்றும் கட்டளையிட்டனர். துப்பாக்கிப் பிரயோகத்தின் போது எஸ். உதயகுமார்
காயமடைந்தார். உதயகுமாருக்கு என்ன நேர்ந்தது என பார்க்க தலையை தூக்கியபோது விநியோக மேற்பார்வையாளர்
எஸ். ரஞ்சித், 25, கொல்லப்பட்டார். அவர் கீழே கிடத்தப்பட்டவாறே சுட்டுக் கொல்லப்பட்டார்.
இன்னுமொரு அலுவலரை துப்பாக்கியால் அச்சுறுத்திய குண்டர்கள் இணை ஆசிரியரை
தேடி ஆசிரியர் பீடம் உள்ள பகுதிக்கு அழைத்துச் சென்ற போதிலும் ஏனைய அலுவலர்கள் அங்கிருக்கவில்லை.
அங்கிருந்த கணனிகளை துப்பாக்கியால் துளைத்த தாக்குதல்காரர்கள் பின்னர் மோட்டார் சைக்கிள்களில்
சென்றுவிட்டனர். காயமடைந்த உதயகுமாரும் இன்னுமொரு ஊழியரான என். தயாகரனும், 24 தீவிர சிகிச்சை
பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த தாக்குதலுக்கு எவரும் பொறுப்பேற்காவிட்டாலும் தாக்குதல்காரர்கள் எவரும்
கண்டுபிடிக்கப்படாவிட்டாலும், எல்லா ஆதாரங்களும் அரசாங்கத்துடனும் இராணுவத்துடனும் சேர்ந்து இயங்கும் தமிழ்
துணை ஆயுதப்படைகளில் ஒன்றை குறிக்கின்றன. யாழ்ப்பாண நகரமானது இறுக்கமான இராணுவ மற்றும் பொலிஸ்
பாதுகாப்பின் கீழ் உள்ளது. செய்தித்தாளின் அலுவலகம் அமைந்துள்ள கஸ்தூரியார் வீதியின் இரு திசைகளிலும் இராணுவ
பரிசோதனை நிலையங்கள் உள்ளன. குறிப்பாக பெரிய ஆயுதங்களை சுமந்துகொண்டு இராணுவத்திற்கு தெரியாமல்
பிரதேசத்திற்குள் நுழைவதோ அல்லது வெளியேறுவதோ சாத்தியமற்றது. உயிர் தப்பியவர்களின்படி, இந்தக்
கும்பலில் இருந்தவர்கள் தமிழில் பேசியுள்ளனர்.
உதயன் ஆசிரியர் என். வித்தியாதரன் ஊடகங்களுக்குத் தெரிவித்ததாவது: "இது
அரசாங்க பாதுகாப்பு படையினருடன் செயற்படும் ஆயுதக் குழுக்களின் நடவடிக்கை என்பதில் எனக்கு சந்தேகம்
கிடையாது. இந்தத் தாக்குதலுக்கான காரணம், திங்கழன்று (மே 1) வெளிவந்த பத்திரிகையில் வெளியான
கேலிச்சித்திரமாக இருக்கலாம். இந்தக் கார்டுன் எதிர் குழுவின் தலைவர் ஜனாதிபதியின் முன்னால் விழுந்து
கிடப்பதாக சித்தரித்திருந்தது." இந்தக் கேலிச்சித்திரம், இராஜபக்ஷவின் அரசாங்கத்தில் சமூக சேவைகள் மற்றும்
சமூக நலன்புரி அமைச்சராக இருக்கும் ஈழ மக்கள் ஜனநயாகக் கட்சியின் (ஈ.பி.டி.பி) தலைவர் டக்லஸ்
தேவானந்தாவையே சித்தரித்துள்ளது.
இனவாத பதட்ட நிலைமையும் பகைமையும் கொண்ட ஒரு கால சூழ்நிலையை
கிளறிவிட்டமைக்கு பொறுப்பான அரசாங்கமும் மற்றும் கொழும்பு ஊடகமும், செய்தித்தாள் மீதான தாக்குதலை
பாசாங்குத்தனமாக கண்டனம் செய்தன. இந்தத் தாக்குதலை கண்டனம் செய்த ஜனாதிபதி இராஜபக்ஷ,
விசாரணைகளுக்கு உத்தரவிட்டதோடு உதயன் பத்திரிகையை வெளியிடும் சுடரொளி நியூஸ் பேப்பர்ஸ் குரூப்
உரிமையாளரான வி. சரவனபவணையும் தொலைபேசியில் தொடர்புகொண்டதாக செய்திகள் தெரிவித்தன.
உதயன் ஆசிரியர் வித்யாதரன் குறிப்பிட்டுள்ளவாறு, இராஜபக்ஷ சரவணபவனுடனான
தனது தொலைபேசி உரையாடலில் இந்த தாக்குதலில் அரசாங்கம் சம்பந்தப்படவில்லை என மறுத்துள்ளார். "அவர்
(இராஜபக்ஷ) உரை நிகழ்த்தவிருக்கும் தறுவாயில் (உலக ஊடக சுதந்திர தினத்தில்) அவரை
நெருக்கடிக்குள்ளாக்குவதற்காக புலிகள் இதை செய்துள்ளதாக நினைத்துக்கொண்டிருக்கின்றார். ஆனால் அரசாங்கமே
இதற்குப் பொறுப்பேற்க வேண்டும் என நாம் அவருக்குத் தெளிவாக கூறினோம்," என வித்தியாதரன்
குறிப்பிட்டுள்ளார்.
இந்த தாக்குதலுக்கு பகிரங்கமாக புலிகள் மீது குற்றஞ்சாட்டிய தகவல்தொடர்பு
அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா, "இலங்கையின் தராதரத்தை களங்கப்படுத்தவும் மற்றும் அரசாங்கம் ஊடக
சுதந்திரத்தை விரும்பவில்லை என வெளி உலகுக்குக் காட்டவும் புலிகள் விரும்புகின்றனர்," என பத்திரிகைகளுக்கு
தெரிவித்தார்.
பொலிஸ் ஆறு சந்தேக நபர்களை சுற்றிவளைத்த போதிலும் "விசாரணைகள்"
கேலிக்கூத்தானவையாகும். கைதுசெய்யப்பட்டவர்கள் நான்கு மாணவர்கள் உட்பட கிழக்கு மாகாணத்தில் இருந்து
வந்து தற்காலிகமாக யாழ்ப்பாணத்தில் குடியிருப்பவர்களாவர். நேரில் கண்டவர்களால் அடையாள அணிவகுப்பில்
யாரையும் அடையாளம் காட்ட முடியாத நிலையில் ஆறுபேரும் விடுவிக்கப்பட்டார்கள்.
ஈ.பி.டி.பி தலைவர் பற்றிய கேலிச்சித்திரம் தாக்குதலுக்கு ஏதுவாகியிருக்கலாம்
என்றாலும், ஏனைய சாத்தியக்கூறுகளும் உள்ளன. இந்த செய்தித்தாள், வடக்கு மற்றும் கிழக்கில் தமிழர்களுக்கு
எதிரான பாதுகாப்புப் படைகளின் அடக்குமுறை நடவடிக்கைகள் பற்றிய செய்திகளை தொடர்ச்சியாக
வெளியிடுகிறது. இராணுவத்தின் சில பிரிவுகளும் மற்றும் அதோடு சேர்ந்து செயற்படும் தமிழ் துணைப்படைகளும்
உதயன் அலுவலகங்கள் மீது தாக்குதல் தொடுப்பதற்கான உள்நோக்கத்தை கொண்டுள்ளன.
இந்த தாக்குதல் இனவாத பதட்ட நிலைமைகளை மேலும் எரியச் செய்யவும்
சமாதான பேச்சுக்களை மீண்டும் ஆரம்பிப்பதை கீழறுக்கவும் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டதாகும். கடந்த மாதம்
பூராவும், புலி காரியாளர்கள், பொது மக்கள் மற்றும் இராணுவ சிப்பாய்கள் உட்பட 150க்கும் மேற்பட்டவர்கள்
இரு சாராராலும் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். இது வடக்கு கிழக்கில் ஒரு பிரகடனப்படுத்தப்படாத
யுத்தம் நடைபெறுவதற்கு சமனாகும். இந்த வன்முறைகள், புலிகளுக்கு சார்பான ஒரு முன்னணி அரசியல்வாதியான
வி. விக்னேஸ்வரனை ஏப்பிரல் 7 பட்டப் பகலில் ஆத்திரமூட்டும் விதத்தில் கொலை செய்ததை அடுத்தே கூர்மையாக
அதிகரிக்க தொடங்கின. அவரை கொலைசெய்த கொலையாளியை பொலிஸ் பிடிக்கவில்லை.
கடந்த ஆகஸ்டில் கொழும்பில் இருந்து வெளிவரும் உதயனின் சகோதரப்
பத்திரிகையான சுடர் ஒளி இனவாத பிரச்சாரத்திற்குள்ளாகியது. கொழும்பில் உள்ள அதன் பிரதான அலுவலகம்
மற்றும் கிளை அலுவலங்கள் மீதான கைக்குண்டுத் தாக்குதல்களும் இதில் அடங்கும். இந்தத் தாக்குதலில் ஒருவர்
கொல்லப்பட்டதோடு நால்வர் காயமடைந்தனர். அதன் நிருபர்களில் ஒருவர் மத்திய கொழும்பில் உள்ள கோட்டை
இரயில் நிலையத்திற்கு முன்னால் மக்கள் விடுதலை முன்னணியினரால் (ஜே.வி.பி) உடல் ரீதியில் தாக்கப்பட்டார்.
கடந்த வாரம் உதயனில் வெளிவந்த ஒரு ஆசிரியர் தலையங்கம், இதற்கு முன்னரும் கடந்த 20 ஆண்டுகால
வரலாற்றில் ஆயுதக் குழுக்களின் அச்சுறுத்தல்களையும் மற்றும் நேரடியான உடல்ரீதியான தாக்குதல்களையும்
எதிர்கொண்டுள்ளது.
உதயன் அலுவலகத்தின் மீதான அண்மைய தாக்குதலுக்கு புலிகள் மீது குற்றம் சுமத்தும்
அரசாங்கத்தின் முயற்சியில் நம்பகத் தன்மை கிடையாது. பொலிசாரோ அல்லது அமைச்சர்களோ புலிகளை
சுட்டிக்காட்டும் ஒரு ஆதாரத்தின் நிழலைக் கூட காட்டவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, சாதாரணமாக
தோன்றுவதன் படி, சர்வதேச ஊடக சுதந்திரத் தினத்தன்று இராஜபக்ஷவை நெருக்கடிக்குள்ளாக்குவதற்காக தனது
சொந்த ஆதரவாளர்கள் மீது தாக்குதல் தொடுக்க வேண்டிய காரணம் புலிகளுக்கு இல்லை. மேலும் காரணங்களை
செயற்கை முறையில் உற்பத்தி செய்யும் அவசியமின்றி, கொழும்பில் ஆட்சியில் இருந்த அரசாங்கத்தாலும் மற்றும்
பாதுகாப்பு படையினராலும் ஜனநாயக உரிமைகள் நசுக்கப்பட்ட நீண்ட வரலாறு போதுமானளவு "நெருக்கடிகளை"
கொடுத்துக்கொண்டிருக்கின்றது.
1983ல் உள்நாட்டு யுத்தம் வெடித்ததில் இருந்தே, அரசியல்வாதிகளுடன் அல்லது
பாதுகாப்பு படைகளுடன் தொடர்புபட்ட குண்டர்களால் ஊடகங்களும் மற்றும் பத்திரிகையாளர்களும் தாக்கப்பட்டுவருவதற்கு
ஏராளமான எடுத்துக்காட்டுகள் உள்ளன. கடந்தாண்டு ஏப்பிரலில், ஒரு முன்னணி ஊடக பத்தி எழுத்தாளரும் மற்றும்
புலிகளுக்கு சார்பான தமிழ்நெட் இணையத்தின் இணை ஆசிரியருமான தர்மரட்னம் சிவராம் அடையாளம் தெரியாத
துப்பாக்கிதாரிகளால் கடத்திச் செல்லப்பட்டதுடன் அவரது சடலம் பாராளுமன்றத்திற்கு அருகில் உள்ள ஒரு உயர்
பாதுகாப்பு வலயத்தினுள் போடப்பட்டிருந்தது. பெரும்பாலான காலங்களில், நாடு அவசரகால சட்டத்தின் கீழ்
இருந்து வருவதோடு ஊடகங்கள் தணிக்கைக்கு உட்பட்டுள்ளன.
சர்வதேச ஊடக அமைப்புக்கள் உதயன் மீதான தாக்குதலை கண்டனம் செய்துள்ளன.
ஊடகவியலாளர்களை காப்பதற்கான அமைப்பின் நிர்வாக ஆணையாளரான ஆன் கூபர், "இந்த மோதலின் எல்லா
பக்கங்களில் இருந்தும் பத்திரிகையாளர்களின் பாதுகாப்பில் அக்கறை செலுத்துமாறு" ஜனாதிபதி இராஜபக்ஷவையும்
மற்றும் 2002ல் இருந்து யுத்த நிறுத்தத்தை மேற்பார்வை செய்யும் இலங்கை கண்காணிப்பு குழுவையும்
கேட்டுக்கொண்டார். ஊடகவியலாளர்களின் சர்வதேச சமாசத்தின் தலைவரான கிறிஸ்தோபர் வாரன் குறிப்பிட்டதாவது:
"உலக பத்திரிகை சுதந்திர தினத் தறுவாயிலும் மற்றும் இலங்கை அரசாங்கம் சமுதாயத்தில் பத்திரிகையாளரின் இன்றியமையாத
பாத்திரத்திற்கு சேவைபாராட்டும் அதே வேளையிலும், அத்தகைய மெய்சிலிர்க்கும், திட்டமிடப்பட்ட தாக்குதலை மேற்கொள்ளக்
கூடியதாக இருந்தமை கொடூரமான மோசடியாகும்."
உதயன் மீதான தாக்குதல், இராஜபக்ஷ அரசாங்கமும் மற்றும் இராணுவமும் தீவை
மீண்டும் உள்நாட்டு யுத்தத்திற்குள் தள்ளிச் சென்றுகொண்டிருக்கின்ற நிலையில், அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீது
ஏற்கனவே ஒரு புதுப்பிக்கப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதல் நடைபெற்றுகொண்டிருக்கின்றது என்ற எச்சரிக்கையை
ஊடகங்களுக்கு மட்டுமன்றி பரந்த உழைக்கும் மக்களுக்கும் விடுக்கின்றது.
Top of page |