WSWS :Tamil
:
செய்திகள்
ஆய்வுகள்
:
ஆசியா
:
நேபாளம்
Nepalese king bows to mass protests and offers to
recall parliament
வெகுஜன கண்டனங்களுக்கு பணிந்த நேபாள மன்னர் நாடாளுமன்றத்தை திரும்ப அழைக்க
முன்வந்தார்
By W.A. Sunil and Deepal Jayasekera
25 April 2006
Use this version
to print | Send this link by email
| Email the author
இன்றைய தினம் மேலும் பெரிய கண்டனங்கள் உருவாகும் என்ற நிலையில், லட்சக்கணக்கான
மக்கள் திரளுவார்கள் என்ற நிலையை எதிர்கொண்டு நேபாள மன்னர் ஞானேந்திரா, நேற்று தொலைக்காட்சியில்
தோன்றி ஒரு சிறிய அறிக்கையை வெளியிட்டார், அதில் 7 கட்சிகளை கொண்ட எதிர்க்கட்சி கூட்டணியின் முக்கிய
கோரிக்கைகளில் ஒன்றை ஏற்றுக்கொண்டார்--- 2002 மே மாதம் கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை உடனடியாக
திரும்ப கூட்டுவது. வெள்ளிக்கிழமையன்று நாடாளுமன்ற கூட்டம் நடைபெறவிருக்கிறது.
மற்றொரு முக்கிய எதிர்க்கட்சிகளின் கோரிக்கையான அரசியல் நிர்ணய சபையை
கூட்டி நாட்டின் அரசியல் சட்டத்தை திரும்ப எழுத வேண்டும் என்ற கோரிக்கை பற்றி ஞானேந்திரா நேரடியாக,
குறிப்பிடவில்லை. என்றாலும் அவர் வெளியிட்ட பிரகடனத்தில் "கிளர்ச்சி செய்துகொண்டுள்ள அரசியல் கட்சிகளின்
சாலை வரைபடத்தின்படி," இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருப்பதாக குறிப்பிட்டார். "மக்களுடைய இயக்கம்"
பற்றி அவர் முதலாவதாக குறிப்பிட்டுள்ளார். கண்டனக்காரர்கள் மீது தான் கட்டவிழ்த்துவிட்ட பாதுகாப்புப் படைகளின்
நடவடிக்கைகளால், கொல்லப்பட்டவர்களுக்கு இரட்டைவேடத்தோடு மன்னர் தனது வருத்தத்தை தெரிவித்துக்
கொண்டார்.
சென்ற ஆண்டு பெப்ரவரியில் ஞானேந்திரா தன்னிச்சையாக, நிர்வாக அதிகாரத்தை
கைப்பற்றிக்கொண்டார் மற்றும் மன்னர் நியமித்த தனது சொந்த மந்திரி சபை மூலம் நிர்வாகத்தை நடத்தி
வந்தார். அவர் அரசியல் எதிரிகள் மீதும், பத்திரிகைகள் மீதும் அனைத்து எதிர்ப்புக்கள் மீதும் எடுத்த ஒடுக்குமுறைகள்
பரவலான மக்கள் எதிர்ப்பைத் தூண்டிவிட்டது. மன்னர் மக்களிடமிருந்து எந்த அளவிற்கு விலகிச் சென்றிருக்கிறார்
என்பதை பெப்ரவரி மாதம் அவர் நடத்திய உள்ளாட்சி அரசு தேர்தல்கள் தெளிவாக எடுத்துக்காட்டின, அந்த
தேர்தல்கள் "ஜனநாயகத்திற்கான ஒரு சாலை வரைபடத்தின்'' ஓர் அங்கமாக நடத்தப்பட்டது ஆனால் அவற்றை
வெறுப்புடன் புறக்கணித்தனர். எதிர்க்கட்சிகள் புறக்கணிக்க அழைப்பு விடுத்த பின்னர் 20 சதவீதம் வாக்கே பதிவானது.
நேபாள காங்கிரஸ் கட்சி
(NCP) மற்றும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி-ஐக்கிய மார்க்சிஸ்ட்
லெனினிஸ்ட்டுக்கள் (CPN-UML)
உட்பட 7 எதிர்க்கட்சிகளும் மன்னரின் அறிவிப்பிற்கு முறைப்படி பதிலளிக்கவில்லை.
என்றாலும், அக்கட்சிகள் நேற்றைய, அறிவிப்பை பகிரங்கமாக வரவேற்கும் என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை.
கண்டனங்கள் பெருக்கெடுத்து எண்ணிக்கை பெருகி அரசாங்க அமைப்பையே சவாலுக்குட்படுத்தும் நிலை ஏற்பட்டவுடன்,
இந்தக் கட்சிகள் அந்த இயக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு ஒரு வழி காண்பதற்கான முயற்சியில் தீவிரமாக இறங்கின
மற்றும் பரந்த சமூக மற்றும் அரசியல் கோரிக்கைகள் எழுப்பப்படுவதை தடுத்தன.
மூத்த NCP
தலைவரான அர்ஜுன் நர்சிங் உடனடியாக வெளியிட்ட அறிவிப்பில்:
"மக்களுடைய இயக்கத்திற்கு இது ஒரு வெற்றி" என்று குறிப்பிட்டார்.
CPN-UML
தலைவர் ராஜன் பட்டராய் நாடாளுமன்றத்தின் முதல் பணி ஒரு அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தலை
நடத்துவதற்கு அழைப்புவிடுப்பதுதான் என்று குறிப்பிட்டார். முடியாட்சியின் எதிர்காலம் பற்றிய கேள்விக்கு பதிலளித்த
பட்டராய் "அரசியல் நிர்ணய சபையின் முடிவு எதுவாக இருந்தாலும் அதை மன்னர் ஏற்று செயல்படுத்தியாக
வேண்டும்" என்று மட்டுமே பதிலளித்தார்.
மாவோயிச நேபாள கம்யூனிஸ்ட் கட்சி
(NCP-M) ஏறத்தாழ
ஒரு தசாப்தமாக ஒரு கொரில்லா போரை நடத்திவருகிறது மற்றும் அந்த நாட்டின் கிராமப்புறப் பகுதிகளில் குறிப்பிடத்தக்க
கட்டுப்பாட்டை நிலைநாட்டியுள்ளது. அது இதற்கு இன்னும் பதில் அளிக்கவில்லை. சென்ற நவம்பரில் இந்தியாவின்
மறைமுக ஆதரவோடு மாவோயிஸ்ட்டுக்கள் ஏழு எதிர்க்கட்சிகளுடன் ஒரு கூட்டணியை உருவாக்கிக்கொண்டனர். அதன்படி,
இறுதியாக ஆயுதங்களை கலைத்துவிட்டு அரசியல் நீரோட்டத்தில் சேர்ந்துவிட வேண்டும். அரசியல் நிர்ணய சபை கூட்டப்பட
வேண்டும் என்ற அவர்களது மட்டுப்படுத்தப்பட்ட கோரிக்கைகள் ஏற்கப்படக்கூடும் என்ற சாத்தியக்கூறுகள் காரணமாக
இறுதியாக மன்னரை சந்தித்துவிட்டு NCP-M
தலைவர்கள் மோதலை முடித்துக்கொள்ள முடிவு செய்யலாம்.
கண்டனங்களின் வளர்ச்சி மன்னரை மட்டுமல்ல எதிர்க்கட்சிகளையும் ஆட்டம் காணச் செய்துவிட்டது
தெளிவாகத் தெரிகிறது. வாரக் கடைசியில், ஞானேந்திரா ஒரு எதிர்க்கட்சி தலைவரை பிரதமராக நியமிக்கும்
முன்மொழிவை அந்தக் கூட்டணி பலவந்தமாய் புறக்கணித்தது, ஆனால் நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டப்போவதாக
அறிவிக்கவில்லை. அப்போது மன்னர் வெளியிட்ட அறிவிப்பு அதிகாரத்தை மன்னர் கையில் வைத்துக் கொள்வதாக
அமைந்தது. அந்த நிலையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்ட கூட்டத்தினர் அவற்றை எள்ளி நகையாடி புறக்கணித்தனர், அவர்கள்
மன்னர் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க அழைப்பு விடுத்தனர்.
சனிக்கிழமையன்று வெளியிடப்பட்ட முன்மொழிவை தள்ளுபடி செய்வதை தவிர எதிர்க்கட்சிகளுக்கு
வேறு வழியில்லை. அது, "பொருளற்றது மற்றும் பொருத்தமற்றது" என்று கூறினர். நேபாள காங்கிரஸ் ஜனநாயக
(NC-D)
தலைவர் ஹோம்நாத் டஹால், அளித்த விளக்கத்தில், "தெருக்கண்டனங்கள்
நீடித்துக் கொண்டிருப்பது, நாட்டில் பேரழிவு உருவாதை உறுதிப்படுத்திவிடும். ஆனால் இப்போது அந்த இயக்கத்தை
தடுப்பது ஏழு-கட்சி கூட்டணிக்கு எதிராகவே தெரு கண்டனங்கள் திரும்புகின்ற நிலை ஏற்படும்" என்று குறிப்பிட்டார்.
இந்த முடிவு பெரிய வல்லரசுகளுக்கு இடையே, ஒரு போராட்டத்தை ஏற்படுத்திவிடும்.
கண்டனங்களை நிறுத்துவதற்கு ஒரு வழி காண்பதற்காக ஏழு கட்சி கூட்டணிக்கு சில சலுகைகளை கொடுக்கவேண்டும்
என்று அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியா ஆகியன ஞானேந்திராவிற்கு அழுத்தங்களைக் கொடுத்தன.
அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம்
மற்றும் இந்திய தூதர்கள் எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து, ஒரு உடன்பாட்டு
பேச்சுவார்த்தைக்கான ''பலகணியை'' பயன்படுத்துமாறு அவர்களைக் கேட்டுக்கொண்டனர். ஐ. நா. பொதுச்
செயலாளர் கோபி அன்னனும் ஒரு அறிக்கையை வெளியிட்டு எதிர்க்கட்சிகள் ஒரு இடைக்காலத்திற்குரியதை
உருவாக்கிக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.
என்றாலும் எதிர்க்கட்சிகள் ஏப்ரல் 6-ல் கண்டனங்களையும் பொது
வேலைநிறுத்தத்தையும் ஏற்பாடு செய்துவிட்டு அந்த இயக்கம் தங்களது பிடியிலிருந்து நழுவிவிடும் என்று அஞ்சினர்.
காத்மாண்டுவிலும் இதர பெரிய மற்றும் சிறிய நகரங்களிலும் ஊரடங்கு, உத்தரவு மற்றும் பலத்த ஆயுதந்தாங்கிய
போலீஸ் மற்றும் போர் வீரர்கள் அணிதிரட்டப்பட்டிருந்தும் பெரும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.
சனிக்கிழமையன்று தலைநகரில் மட்டுமே 100,000 மக்கள் கண்டனங்களில் பங்கெடுத்துக்
கொண்டனர், ஆற்றல் வாய்ந்த பீரங்கிகள், ரப்பர் துப்பாக்கிகள், கண்ணீர் புகைக் குண்டுகளுடன் இருந்த போலீசாருடனும்
இராணுவ வீரர்களுடனும் மோதிக்கொண்டும் நகரத்தைச்சுற்றியிருந்த தடுப்பு வேலிகளை உடைத்துக்கொண்டும் சென்றனர்.
காத்மாண்டு மாதிரி மருத்துவமனை ஊழியர்கள் நியூயோர்க் டைம்சிற்கு தகவல் தந்தபோது, பலியானவர்கள், ஏறத்தாழ
150 பேர் இருக்கும், அவர்களில் 43 பேர் துப்பாக்கி குண்டு காயங்களுடன் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர் என்று
அந்த ஊழியர்கள் தெரிவித்தனர். இது ஒரு போரைப் போன்று இருந்தது. ஒவ்வொரு நிமிடமும் பலியானவர்களுடன்
மருத்துவ உதவி வாகனங்கள் வந்து கொண்டிருக்கின்றன" என்று டாக்டர் பாண்டே தெரிவித்தார்.
தற்காலிக மருத்துவ உதவி வாகன சேவையை சேர்ந்த பாரத் சர்மா என்ற
தொண்டர், பிரிட்டனை தளமாகக்கொண்ட இண்டிபென்டன்டிற்கு கூறும்போது "அவர்கள் குழந்தைகளை
சுட்டிருக்கிறார்கள். மன்னர் துப்பாக்கி ரவைகளை கொண்டு எங்களை கட்டுப்படுத்திவிட முடியும் என்று
நினைப்பாரானால் அதை அவர் மறந்துவிடட்டும் அது நல்லது. இது 21-வது நூற்றாண்டு, ஒரு மன்னர் ஒரு
அருங்காட்சியகத்தில், ஒரு மிருகக்காட்சி சாலையில் இடம் பெற வேண்டியவர்'' என்று குறிப்பிட்டார்.
முன்னாள் பிரதமரும் நேபாள காங்கிரஸ் தலைவருமான கிரிஜா பிரசாத்
கொய்ராலா வீட்டில், எதிர்க்கட்சி தலைவர்கள் அவசர ஆலோசனைக்கூட்டம் நடத்திக்கொண்டிருந்த நேரத்தில்
அந்தப்பகுதி தெருக்கள் முழுவதையும் கண்டனக்காரர்கள் அடைத்துக்கொண்டு ஆர்பாட்டங்களை நடத்தினர். "அடிபணிய
வேண்டாம்!
மக்களை கவிழ்த்துவிட வேண்டாம்'' என்று ஒரு குழு கூச்சலிட்டது. எந்தவொரு அழிவையும் எங்களுக்கு
கொடுக்கவேண்டாம். மன்னர் ஆட்சியை நாங்கள் விரும்பவில்லை'' என்று மற்றொரு குழு கூச்சலிட்டது. மற்றவர்கள்
பொதுவான முழக்கங்களை எழுப்பினர். ''ஞானேந்திரா திருடர்'' என்றும் ஞானேந்திராவை தூக்கிலிட வேண்டும்
என்றும் ''ஞானேந்திரா நாட்டை விட்டு வெளியேறிவிட வேண்டும்'' என்று முழக்கமிட்டனர்.
ஞாயிறன்றும், திங்களன்றும் நகரத்தின் சுற்றுப்பாதை பகுதிகளில்
பல்லாயிரக்கணக்கானவர்கள் தொடர்ந்து கண்டனங்களை நடத்தினர் சாலைத் தடைகளை ஏற்படுத்தி மரங்களையும்
டயர்களையும் கொளுத்தினர். அவர்களில் பலர் இளைஞர்கள் அடிப்படை ஜனநாயக உரிமைகள் இல்லாததால்
விரக்தியடைந்தவர்கள் மட்டுமல்ல, வேலை, கல்வி வாய்ப்புக்களும் கிடைக்காததாலும் விரக்தியடைந்தவர்கள்.
கடந்த 19 நாட்களின் பொழுது போர்வீரர்களும் போலீசாரும் குறைந்தபட்சம் 14 பேரை கொன்றனர் மற்றும்
நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். 5,000 கட்சி நடவடிக்கையாளர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் இதர
கண்டனக்காரர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
என்றாலும், கண்டனக்காரர்கள் மன்னர் ஆட்சி மீது ஆழ்ந்த வெறுப்பு
கொண்டிருந்தாலும், எதிர்க்கட்சிகள் மீது சந்தேகங்கள் கொண்டிருந்தாலும், அவர்களுக்கு தெளிவான அரசியல்
மாற்றீடு எதுவுமில்லை. டைம் சஞ்சிகையின் கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டிருந்ததைப்போல், "[மன்னருக்கு]
பதிலாக யார் இடம் பெறுவார்கள் என்பது எவருக்கும் தெரியாது. மன்னருக்கு எதிர்ப்பு இயக்கம் பரவலான
ஆதரவைப் பெற்றிருக்கிறது. அதில் இடம் பெற்றுள்ள பல கண்டனக்காரர்கள் இளைஞர்கள் அல்லது 20 வயதை
கடந்த நேபாள உடை உடுத்திய இளைஞர்கள் அவர்களுக்கு தலைவர், எவரும் இல்லை கல் எறிவதைத் தவிர
குறிக்கோள் எதுவுமில்லை. கடந்த வாரங்களில் கார்கள், கடைகள், ஹயாத் ரீஜென்சி உணவு விடுதிகள் ஆகியவை
தாக்கப்பட்டிருக்கின்றன."
முதலாளித்துவ ஆட்சிக்கு அச்சுறுத்தலாக தோன்றியுள்ள இந்த இயக்கத்திற்கு
முற்றுப்புள்ளி வைப்பதில் ஒரு பேரத்தை உருவாக்க பெரிய வல்லரசுகள் பின்னணியில் பணியாற்றி வருகின்றன. அரசியல்
ஸ்திரமற்ற தன்மை நேபாள எல்லையைக் கடந்து வந்துவிடும் என்பதில் ஆழ்ந்த கவலை கொண்டிருக்கின்ற இந்தியா
இதில் ஒரு முன்னணி பங்கை வகிக்கிறது. சென்ற வாரம், இந்திய பிரதமர் மன்மோகன் சிங் ஒரு சிறப்பு
மந்திரிசபை கூட்டத்தை நடத்தி காட்மாண்டுவிற்கு தூதர் கரன் சிங்கை அனுப்பினார். ஒரு சமரசத்திற்கு வருமாறு
''ஒரு கடுமையான செய்தியை'' மன்னருக்கு அனுப்பினார்.
சென்ற வெள்ளிக்கிழமையன்று மன்னரின் அறிவிப்பை, சிங் வரவேற்றார். ஒரு ''சரியான
வழியில் எடுக்கப்பட்ட ஒரு நடவடிக்கை'' என்று குறிப்பிட்டார். ஜேர்மனிக்கு செல்கின்ற வழியில், விமானத்தில்
நிருபர்களிடம் பேசிய சிங், ''நேபாளம் ஒரு தோல்விகண்ட அரசாக இருப்பதை நாங்கள் சகித்துக் கொள்ள
முடியாது" என்று குறிப்பிட்டார். ஆனால் மன்னரின் யோசனை புறக்கணிக்கப்பட்டதும் புதுதில்லி தனது போக்கை
தீடீரென்று மாற்றிக் கொண்டது. நேபாள மக்கள் ''தங்களது, ஜனநாயக அபிலாஷைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு
ஏற்ற வழியை தேர்ந்தெடுக்க வேண்டியது அவர்களது முடிவாகும்'' என்று அறிவித்தது.
இந்தியாவின் வெளியுறவு செயலாளர், ஷியாம் சரண் திட்டமிட்டு மன்னரை மட்டம்
தட்டும் வகையில் கருத்துத் தெரிவித்தார், முதல் தடவையாக புதுதில்லி நேபாளத்தில் ஒரு அரசியல் சட்ட அடிப்படையிலான
ஜனநாயகத்தை அதில் மன்னர் இடம் பெற்றிருப்பதை ஆதரிக்க வேண்டிய அவசியமில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
"இன்றைய தினமோ அல்லது நாளைக்கோ நேபாள மக்கள் வேறுபட்ட ஒரு அரசியல் ஏற்பாட்டை
விரும்புவார்களானால் அதை முடிவு செய்ய வேண்டியது, நேபாள மக்களே தவிர இந்தியா அல்ல." நேபாளி
டைம்ஸ் ஆசிரியர் குண்டா தீக்சித் வெளியிட்டுள்ள கருத்தில், "திரை மறைவில் தீவிரமாய் பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது.
இந்தியாவின் இடைத்தரகு வேலை உச்ச கதியில் சென்றிருக்கிறது மற்றும் ஒரு திட்டம் முன்னும் பின்னுமாய் நடந்து
கொண்டிருக்கிறது".
இந்தியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய வல்லரசுகள் அனைத்துமே நேற்றிரவு
மன்னரை மேலும் ஒரு அறிவிப்பை வெளியிடச் செய்ததில் அழுத்தம் கொடுத்திருக்கின்றன என்பதில் ஐயமில்லை. இரண்டு
மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்ற, இன்றைக்கு நடைபெறும்
வெகுஜன பேரணியை ''ஒரு வெற்றிப்பேரணி'' என்று அறிவிக்க இருப்பது---கண்டனங்கள் முடிந்துவிடும் என்று
அறிவிப்பார்கள் என்பதற்கு தெளிவான சமிக்கை ஆகும். அப்படி நடக்குமா என்பது வேறு விவகாரம். ஆனால் தங்களது
வாழ்வையும் பலிகொடுக்க தயாராகி பாதுகாப்புப் படைகளை எதிர்கொண்ட பலர், மன்னரை மட்டுமல்ல
ஒட்டுமொத்த அரசியல் நிர்வாகத்தையே அவநம்பிக்கையுடன் எதிர்கொண்டுள்ளனர். அந்த நிர்வாக அமைப்பு நேபாள
வெகுஜனங்களது சமூகத் தேவைகளையும் ஜனநாயக அபிலாஷைகளையும் நிறைவேற்றத் தவறிவிட்டது.
Top of page |