World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

Indian Stalinists reaffirm support for UPA government

UPA அரசாங்கத்திற்கு ஆதரவை மீண்டும் உறுதிபடுத்தியுள்ள இந்திய ஸ்ராலினிஸ்ட்டுக்கள்

By Keith Jones
25 April 2006

Back to screen version

இடது முன்னணியில் முன்னணி பங்காளரான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி (UPA) அரசாங்கத்தை முழு ஐந்து ஆண்டு காலம் வரை நீடிக்க உதவப் போவதாக மறுஉறுதி அளித்துள்ளது----அதே நேரத்தில் UPA நவீன தாராளவாத -சமூகப்பொருளாதார சீர்திருத்தங்களை அமுல்படுத்தி வருவதாகவும், அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன், இந்தியாவை இணைத்திருப்பதாகவும் ஒப்புக் கொள்கின்ற நேரத்திலேயே இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளது.

சென்ற வாரம் CPM பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் மேற்கு வங்காளத்திலும், கேரளத்திலும் வாக்காளர்கள், CPM-ற்கும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும் மாநில தேர்தல்களில், வாக்களிக்க வேண்டும் என்று வற்புறுத்தி கேட்டுக்கொண்டார். மேற்கு வங்காளத்தில் இடது முன்னணி மீண்டும் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படுவது மற்றும் கேரளத்தில் இடது ஜனநாயக முன்னணி பதவிக்கு வருவது, UPA அரசாங்கம், "மக்கள்-சார்பு கொள்கைகளை" பின்தொடர்வதற்கு அழுத்தங்களை தருவதற்கு, இடதுசாரி அணியின் முயற்சிகளுக்கு வலுவூட்டுவதாக அமையும் என்று வாதிட்டார்.

கொல்கத்தாவில் உரையாற்றிய கரத் குறிப்பிட்டார், "கடந்த இரண்டு ஆண்டுகளாக, மன்மோகன் சிங்கின் [UPA] அரசாங்கத்தை, ஆதரித்து வருகின்ற நமது முயற்சி, அந்த அரசாங்கத்தை, குறைந்தபட்ச பொது வேலைதிட்டத்தில் [CMP] உறுதிமொழியளிக்கப்பட்டுள்ள, மக்கள்-சார்பு கொள்கைகளை அமுல்படுத்த செய்வதுதான், மற்றும் இந்தத் தேர்தல்களில் வெற்றி பெறுவதன் மூலம், அவ்வாறு செய்வதற்கு மேலும் அழுத்தங்களை தருவதற்கு அது வலிமையைத்தரும்.

கரத்தின் உரை இரண்டு குறிக்கோள்களை கொண்டது: முதலாவதாக, இந்தியாவில் உழைக்கும் மக்களிடையே பெருமளவில் சீரழிவிற்குட்பட்டு நிற்கும் UPA அரசாங்கத்திலிருந்து தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு, இடதுசாரி தேர்தல் நிலையையும் இந்திய ஸ்தாபன அரசியலில் அதன் செல்வாக்கையும் அதிகரித்துக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை; இரண்டாவதாக, காங்கிரஸ் தலைமையிலான UPA-வை ஆட்சியில் தொடர்ந்து தக்கவைத்திருக்கும் ஸ்ராலினிச கொள்கைக்கான ஒரு புதிய நியாயப்படுத்துதலை வழங்குவது.

தங்களின் புகார்களை தொடர்ந்து புறக்கணித்து வருமானால் அரசாங்கத்திற்கு அதனால், ஆபத்தான விளைபயன்கள் உருவாகும் என்று எச்சரிக்கை செய்துகொண்டிருப்பதன் மூலம், ஸ்ராலினிஸ்ட்டுக்கள், தனியார்மயமாக்கல், நெறிமுறை தளர்த்தல் மற்றும் பொது மற்றும் சமூக சேவைகள் அழித்தல் என்ற ஆளும் வர்க்கத்தின் செயற்திட்டங்களுக்கு ஆழமாகிவரும் பொது மக்கள் எதிர்ப்பை கட்டுப்படுத்துவதற்கும், அதேவகையில் UPA- செல்வாக்கை நாடாளுமன்றத்திற்கு-புறம்பான எதிர்ப்புக்கள் மூலமும் நாடாளுமன்ற சூழ்ச்சிக் கையாளல்கள் மூலமும் கட்டுப்படுத்திவிட முடியும் என்று உறுதிகொண்டிருக்கின்றனர்.

"ஜோர்ஜ் புஷ்ஷின் CMP" என்ற சொல்லின் வாய்வீச்சை காட்டிய கரத், UPA இந்திய மற்றும் சர்வதேச மூலதனத்தின் வேலைத்திட்டத்தை அமுல்படுத்துமா அல்லது "மக்கள்-சார்பு CMP-யை அமுல்படுத்துமா?" என்பது குறித்து இன்னும் முறை காண் ஆயம் (jury) நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று அவர் வாதிட்டார்.

இதில் உண்மை என்னவென்றால் இந்திய முதலாளித்துவத்தின் பாரம்பரிய ஆளும் கட்சியான காங்கிரஸ் தலைமை வகித்து UPA அரசாங்கத்தை நடத்திக்கொண்டிருக்கிறது. முந்திய பாரதிய ஜனதா கட்சி (BJP) தலைமையிலான, கூட்டணிக்கு சற்றும் குறைவில்லாத வகையில், இந்தியாவில் இராணுவ வலிமையை கட்டியெழுப்புவதன் மூலமும், அதனை பூகோள மலிவூதிய உற்பத்தி மையமாக உருவாக்குவதன் மூலமும், அமெரிக்காவுடன் நெருக்கமான உறவுகளைப் பின்தொடர்வதன் மூலமும் பெரிய-வல்லரசு புவிசார்அரசியலில் ஈடுபடுவதன் மூலமும் UPA, இந்தியாவை ஒரு உலக வல்லரசாக மாற்ற வேண்டும் என்ற இந்திய முதலாளித்துவத்தின் மூலோபாயத்திற்கு முழு உறுதிப்பாட்டுடன் செயல்பட்டு வருகிறது.

அண்மை மாதங்களில் UPA பெருவணிகங்கள் மகிழ்ச்சியடைகின்ற வகையில் மேலும் வலதுசாரி பக்கம் சாய்ந்து கொண்டு வருகிறது. திரும்பத்திரும்ப கரத் மற்றும் CPM தலைமையிலான இடது முன்னணியில் கண்டனங்களுக்கும் கோரிக்கைகளுக்கும் அப்பால் குறிப்பிடத்தக்க, கொள்கைத் திருப்பங்களை முன்னெடுத்து வருகிறது. இப்படிப்பட்ட கொள்கை மாற்றங்களில், ஈரானுக்கு எதிராக, சர்வதேச அணுசக்தி குழுக்களில் அமெரிக்கா தலைமையில் அணி திரண்டது FDI-யை அதிகரிப்பதற்கு சில்லரை வியாபாரத்துறையை திறந்துவிட்டதன் மூலம் மில்லியன் கணக்கான வேலைகளை ஆபத்திற்காளாக்கும் மற்றும் இந்தியாவின் "மூலோபாய பங்காண்மையை'' ஒரு புதிய அளவிற்கு முன்னெடுத்ததன் மூலம் இந்தியாவை ஒரு உலக வல்லரசாக ஆவதற்கு, அமெரிக்காவின் உதவியைத் தருவதற்கு புஷ் நிர்வாகம், தந்துள்ள திட்டத்தை ஏற்றுக்கொள்வது [இந்திய - அமெரிக்க அணுக்கரு உடன்பாடு] ஆகிய நடவடிக்கைகளும் அடங்கும்.

அப்படியிருந்தும் ஸ்ராலினிச CPM-ம் அதன் இடது முன்னணி கூட்டணிகளும் UPA-விற்கு நாடாளுமன்றத்தில் 60-க்கும் மேற்பட்ட இடது முன்னணி உறுப்பினர்களைக் கொண்ட தங்களது ஆதரவை UPA-விற்கு வழங்கிவருவதை வாபஸ்பெறுவதற்கான பிரச்சினைக்கே இடமில்லை என்று வலியுறுத்தி வருகின்றன. மேற்கு வங்காளத்தில், அவர்கள் அமைத்துள்ள அரசாங்கம், மூலதனங்களைக் கவர்வதில், முதலீட்டாளர்-ஆதரவான கொள்கைகளை அமுல்படுத்துவதைத் தவிர வேறு தேர்வில்லை என்று வலியுறுத்திக் கூறுவதைப் போன்று மத்திய அரசாங்க அளவிலும் அதேநிலை எடுத்திருக்கின்றனர்.

கொல்கத்தாவில் காரத் உரையாற்றுவதற்கு முதல் நாள் CPM அரசியல் குழு உறுப்பினரும், மூத்த அரசியல்வாதியுமான ஜோதிபாசு பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியாவிற்கு அளித்த பத்திரிகை பேட்டியில், "UPA-விலிருந்து நாங்கள் வெளியேறினால், இங்கு தேர்தல்கள் நடக்கும். அப்போது, BJP ஆட்சிக்கு வந்துவிடும். BJP திரும்ப ஆட்சிக்கு வருவதை நாங்கள் விரும்பவில்லை" என்று குறிப்பிட்டார்.

வரும் மாதங்களில் குறைந்தபட்ச பொது செயல்திட்டத்தில் UPA-வின் "மீறல்களை'' மிக ஆவேசமாக கண்டிக்கப்போவதாக கரத்தைப் போன்று பாசுவும் உறுதிமொழியளித்தார்.

2004 மே பொதுத் தேர்தல்களுக்கு பின்னர் சில நாட்களில் UPA-வின் சட்ட திட்டமான CMP உருவாக்கப்பட்டதில், இடதுசாரி முன்னணியின் தலைமையின் அரசியல் மற்றும் அந்த அறிக்கை தயாரிப்பதிலும் கூட உதவியதாக தெளிவாகத் தெரிகிறது. அதில் வெகுஜன வேலையின்மையை கிராமப்புற துன்பங்களை நீக்கவும் பொது சுகாதாரத்துறை மற்றும் கல்வியை மேம்படுத்தவும் தெளிவற்ற உறுதிமொழிகள் இணைக்கப்பட்டிருப்பதையும் அதோடு அடிப்படை பொது சேவைகளின் வீழ்ச்சி, பொருளாதார பாதுகாப்பின்மை, வறுமை ஆகியவை கூர்மையாக வளர்ந்திருப்பதற்கு காரணமான பொருளாதார, ''சீர்திருத்த'' வேலைதிட்டத்தை தீவிரப்படுத்தப்படுவதற்கும் உறுதி தரப்பட்டிருக்கிறது.

முன் கணித்த படி மன்மோகன் சிங்கும் இதர UPA தலைவர்களும், CMP மதிக்கப்படவில்லை என்ற ஸ்ராலினிஸ்ட்டுக்களின் புகார்களுக்கு பதில் அளிக்கின்ற வகையில் CMPயை விசுவாசத்தோடு தாங்கள் அமுல்படுத்தி வருவதாக கூறுகின்றனர்.

UPA மேற்கொண்டுள்ள வலதுசாரி கொள்கைகளுக்கு ஒரு முற்போக்கான மாற்றீடாக CMP எந்த வகையிலும் அமைந்திருக்கவில்லை. இந்த அடிப்படையில் வலியுறுத்துவது ஒரு அரசியல் மோசடியாகும். அது வெகு ஜனங்களின் தேவைகளுடன் முதலாளித்துவத்தின் நவீன-தாராளவாத செயல்திட்டத்தை சமரச இணக்கம் காண முடியும் என்பதாகும். அதே மோசடி மேற்கு வங்காளத்தில் இடது முன்னணி அரசாங்கத்தின் வாய்வீச்சு மற்றும் பொய்களை அடிப்படையாகக் கொண்ட வேலைத்திட்டத்தில் செயல்பட்டு வருகிறது என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும். காங்கிரஸ் கட்சி 2004 தேர்தல்களின் போது சீர்த்திருத்தத்திற்கு பொதுமக்களது எதிர்ப்பைக் கண்டு "மனிதநேயத்தோடு சீர்திருத்தம்'' என்று வரையறுத்து கோரிக்கையை உருவாக்கியதைப்போன்று, மேற்கு வங்காளத்திலுள்ள இடது முன்னணி அரசாங்கம் "வர்க்கப்போராட்டத்திற்காக தொழில்துறைமயமாதல்," நடவடிக்கைகளை மேற்கொள்ள வெளிநாட்டு முதலீடுகளுக்கான ஒரு காந்த சக்தியாக வங்காளம் செயல்படும்'' என்று பேசி வருகிறது.

CPM தலைமைக்குள் வேலைகளை பிரித்துக்கொண்டதை பிரதிபலிக்கும் வகையில், கட்சியின் தேசிய அளவிலான முன்னணி தலைவர் கரத் பெருவணிக-சார்பு கொள்கைகளை, UPA கடைபிடித்து வருவதாக விமர்சிக்கிறார் அதே நேரத்தில், மேற்கு வங்காள, இடதுசாரி முன்னணி அரசாங்க முதலமைச்சரும் அரசியல் குழு உறுப்பினருமான, புத்ததேப் பட்டாசார்ஜி, தமது அரசாங்கத்தின், முதலீட்டாளர்-சார்பு நிலைநோக்கை வலியுறுத்தி வருகிறார். மற்றும் மாநிலத்தின் போர்க்குணமிக்க தொழிலாளர் வர்க்கத்தை கட்டுப்படுத்துவதில் உறுதியை தெரிவித்து வருகிறார்.

இந்த மாத தொடக்கத்தில், ஒரு பத்திரிகை மாநாட்டில் பட்டாசார்ஜி குறிப்பிட்டார்: "நாங்கள் முதலாளிகளுடன் நட்பாக நடந்து கொள்ள முயன்றுகொண்டிருக்கிறோம். நாங்கள் சோசலிசத்தை நடைமுறைபடுத்தவில்லை" என்று குறிப்பிட்டார். தானும், CPM-மும் மாக்சிஸ்ட்டுகளாக, விளங்குவதாக குறிப்பிட்ட அவர், மேலும் கூறினார்: "நாங்கள் இன்னும் நடைமுறைவாதிகள், இப்போது உலகம் முழுவதும், முதலாளித்துவத்தை கெஞ்சி ஈர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்துக்கொண்டிருக்கும் போது, முதலாளித்துவவாதியாக இருப்பது புத்திசாலித்தனமானது என்பதை நாங்கள் அறிவோம்."

நவீன-தாராளவாத சீர்திருத்தங்களின் வேகம் குறைந்திருப்பது குறித்து எழுப்பப்படும் விமர்சனங்கள் தொடர்பாக மற்றும் இடது முன்னணி விமர்சனங்களுக்கு செவிசாய்க்கவில்லை என்பதால் அரசாங்கம் மீது அதனுடைய உரத்த கண்டனங்களின் அச்சுறுத்தல் பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது, இந்திய பிரதமர் மன்மோகன் சிங் அதைப்பற்றி தாம் கவலைப்படவில்லை என்று கூறினார். "இடதுசாரிக் கட்சிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக மத்தியில் எங்களது மதிப்பிற்குரிய கூட்டணியினராக இருக்கிறார்கள்.... நாங்கள் நாட்டின் பெரிய நலன்களை கருத்தில் கொண்டு இந்தப் பிரச்சினைகளை நட்பு முறையில் தீர்த்துவிடுவோம் என்று நான் முழு நம்பிக்கை வைத்திருக்கிறேன்" என்று சிங் குறிப்பிட்டார்.

என்ன பேசுகிறோம் என்பதை சிங் நன்றாக அறிவார். CPM தலைமையிலான இடது முன்னணி இந்திய முதலாளித்துவம் புஷ் நிர்வாகத்துடன் மேற்கொண்டுள்ள மூலோபாய கூட்டணி மற்றும் நவீன தாராளவாத சீர்திருத்தங்களுக்கு எழும் வெகுஜன எதிர்ப்பை அரசியல் அடிப்படையில், தவறான வழியில் திசை திருப்புவதிலும் ஒடுக்குவதிலும் ஒரு முக்கிய பங்கை வகித்து வருகிறது. அதே நேரத்தில் மேற்கு வங்காளத்தில் தொழிலாளர் வர்க்கத்திற்கு எதிரான, முதலீட்டாளர்களுக்கு ஆதரவான கொள்கைகளை அமுல்படுத்துவதில் முன்னணியில் நின்று செயல்பட்டு வருகிறது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved