:
இலங்கை
Socialist Equality Party rejects Sri Lankan government
appeal to shut down May Day rallies
சோசலிச சமத்துவக் கட்சி, மே தின கூட்டங்களை இரத்து செய்யுமாறு இலங்கை அரசாங்கம்
விடுத்த வேண்டுகோளை நிராகரிக்கின்றது
Statement by the Socialist Equality Party (Sri Lanka)
1 May 2006
Use this
version to print | Send this link by
email | Email the author
சோசலிச சமத்துவ கட்சி (சோ.ச.க), இன்றைய மே தின கூட்டங்களை இரத்து
செய்யுமாறு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அரசாங்கம் விடுத்துள்ள வேண்டுகோளை கண்டனம் செய்கின்றது.
அனைத்துலக தொழிலாளர் வர்க்கத்தின் வரலாற்று போராட்டத்துடன் நீண்டகாலமாக இணைந்துள்ள மே தினத்தன்று
மேற்கொள்ளப்படும் அரசியல் நடவடிக்கைகளை நசுக்குவதற்கான இந்த முயற்சியானது, ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ
தீவை இரக்கமின்றி யுத்தத்தை நோக்கி இழுத்துச் செல்கின்ற நிலையில், தொழிலாளர்களின் எந்தவொரு சுயாதீனமான
இயக்கத்தையும் நசுக்குவதை இலக்காகக் கொண்டதாகும்.
"பாதுகாப்பு" என்ற அடிப்படையில் மே தின கூட்டங்களை இரத்து செய்வதற்கான
அரசாங்கத்தின் "வேண்டுகோளானது" தொழிலாள வர்க்கத்தின் அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீது மேலும்
தாக்குதல் தொடுப்பதற்கான தயாரிப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பதற்கான தெளிவான எச்சரிக்கையாகும்.
ஏற்கனவே 65,000 உயிர்களைப் பலிகொண்டுள்ள ஒரு பிற்போக்கு இனவாத யுத்தத்திற்காக அர்ப்பணிக்குமாறு
உழைக்கும் மக்களுக்கு மீண்டும் ஒரு முறை அழைப்பு விடுக்கப்படவுள்ளது.
ஆளும் கட்சி மற்றும் எதிர்க் கட்சியுமாக எல்லா பிரதான கட்சிகளும் இதற்கு எதிராக
ஒரு முணுமுணுப்புக் கூட இல்லாமல் உடனடியாக இந்த வழியில் விழுந்துள்ளன. கொழும்பில் உள்ள முழு அரசியல் ஸ்தாபனமும்,
ஒரு புதிய இரத்தக் களரிக்கு தயார் செய்வதிலும், "நாட்டை பாதுகாத்தல்" என்னும் பெயரில் ஜனநாயக உரிமைகள்
மற்றும் வாழ்க்கைத் தரம் மீது மேலும் தாக்குதல்களை தொடுக்கவும் கைகோர்த்துக்கொண்டுள்ளன.
அரசாங்கம் முன்வைக்கின்ற "பாதுகாப்பு" என்ற சாக்குப் போக்கு முற்றிலும் சிடுமூஞ்சித்தனமானதாகும்.
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தற்போது தீவிரமடைந்துவரும் பதட்ட நிலைமைகள், வடக்கு மற்றும் கிழக்கில் சுழற்சிமுறையிலான
வன்முறைகள் அதிகரித்துவருவதையும் மற்றும் வெளிப்படையான யுத்த நடவடிக்கைகளின் ஆபத்தையும் தோற்றுவித்துள்ளன.
இந்த நிலைமையை உருவாக்கியமைக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும்.
இராஜபக்ஷ கடந்த நவம்பரில் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் சிங்களத்
தீவிரவாதிகளான மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) மற்றும் ஜாதிக ஹெல உறுமயவின் ஆதரவுடனேயே ஒரு
குறுகிய வெற்றியைப் பெற்றார். 2002ல் கைச்சாத்திடப்பட்ட யுத்த நிறுத்த உடன்படிக்கையை முழுமையாக திருத்தி
எழுதுதல் மற்றும் "சமாதான முன்னெடுப்புகளின்" உத்தியோகபூர்வ அணுசரணையாளரான நோர்வேயை
வெளியேற்றுதல் ஆகிய அவர்களின் கோரிக்கைகள் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தைகளை புத்துயிர்பெற செய்வதற்கான
வாய்ப்புகளை விளைபயனுள்ள வகையில் சீரழித்தது.
பெப்பிரவரியில் முதல் சுற்றுப் பேச்சுவார்த்தைகள் ஜெனீவாவில் நடைபெற்றது முதல்,
அரசாங்கமும் பாதுகாப்புப் படைகளும் மற்றும் அவர்களின் சிங்களப் பேரினவாத பங்காளிகளும் இரண்டாவது சுற்றுப்
பேச்சுக்கள் நடத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக ஒன்றன் பின் ஒன்றாக ஆத்திரமூட்டல்களை
திட்டமிட்டனர். இராணுவம் கடந்த மாதம் புலிகளின் தலைவர்கள் கிழக்கில் இருந்து வன்னியில் உள்ள அவர்களின்
தலைமையகத்திற்கு செல்ல கடந்த மூன்று வருடங்களாக போக்குவரத்து வழங்கியது போல் இம்முறை வழங்கப்
போவதில்லை என அறிவித்தது.
இரண்டாவது ஜெனீவா சுற்றுக்கு இரண்டு வாரங்களுக்கும் குறைவான நாட்களே
இருந்தபோது, ஏப்பிரல் 7 அன்று புலிகளுக்கு சார்பான ஒரு முன்னணி அரசியல்வாதியான வி. விக்னேஸ்வரன்
திருகோணமலையில் பட்டப்பகலில் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது படுகொலை சம்பந்தமான எதிர்ப்புகளுக்கு
மத்தியில், அதே நகரத்தில் ஒரு சந்தையில் குண்டு ஒன்று வெடித்ததுடன் அதனை தொடர்ந்து தமிழர்களுக்கு எதிரான
வன்முறைகள் நடைபெற்றன. கடந்த மாதம் நூற்றுக்கும் மேற்பட்ட உயிர்களை பலிகொண்டதோடு இரண்டாவது
ஜெனீவா சுற்று இரத்து செய்யப்படுவதற்கு வழிவகுத்த தொடர்ச்சியான வன்முறைகளை தூண்டியமைக்கு ஆயுதப்
படைகளின் பிரிவுகளுடன் இரகசிய கூட்டு வைத்திருப்பவர்களும், அதோடு சேர்ந்து செயற்படும் தமிழ்
துணைப்படைகளும் மற்றும் சிங்கள தீவிரவாதிகளுமே பொறுப்பாளிகள் என்பதில் சந்தேகம் கிடையாது.
பல மாதங்களாக புலிகளுக்கு ஆத்திரமூட்டி அவர்களை தூண்டிவிட்டதன் பின்னர்,
கடும்போக்காளரான இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை இலக்கு வைத்து ஏப்பிரல் 25 அன்று கொழும்பில்
உள்ள இராணுவத் தலைமையகத்தில் ஒரு தற்கொலைத் குண்டுத் தாக்குதல் நடத்தியதையிட்டு ஆச்சரியப்படுவதற்கு
ஒன்றுமில்லை. முற்றிலும் நிச்சயமாக புலிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த தாக்குதல், அவர்களின் அரசியல்
வங்குரோத்திற்கு மேலும் ஒரு ஆதாரமாகும். கொழும்பில் உள்ள தமது முதலாளித்துவ சமதரப்பினர் போலவே,
புலிகளுக்கும் உழைக்கும் மக்களின் சமூகத் தேவைகளை வழங்க வழிகிடையாத நிலையில் தொழிலாளர்களை இனவாத
வழியில் பிரிப்பதற்காக சிங்கள விரோத பேரினவாதத்தை தூண்டுவதைத் தவிர வேறு வழியில்லை.
வாழ்க்கை நிலைமைகள் தொடர்ந்தும் சீரழிந்து வருகின்றமையால் சிங்கள, தமிழ்
மற்றும் முஸ்லிம் தொழிலாளர்களின் எதிர்ப்புகள் ஆழமடைந்து வருகின்ற நிலைமைகளின் மத்தியில், இரு பக்கத்திலும்
யுத்த ஆரவாரங்கள் கேட்பது தற்செயலானதல்ல. "சமாதானத்திற்கான மனிதன்" என்று இராஜபக்ஷ போலியாகக்
கூறிக்கொள்வதை போலவே, உழைக்கும் மக்களுக்கு துணைபுரிவதற்காக அவர் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளும்
போலியானவை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் வாழ்க்கை செலவை சமாளிப்பதற்காக தரமான
சம்பள உயர்வைக் கோரி இலட்சக்கணக்கான அரசாங்க ஊழியர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அரசாங்கம்
மானியங்கள் மற்றும் கிராமங்களுக்கான ஏனைய உதவிகளையும் வெட்டித் தள்ளியுள்ள நிலையில் ஏழை விவசாயிகள் தமது
உற்பத்திகளுக்கு நியாயமான விலை கோரி அவநம்பிக்கையான பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
1948ல் இருந்து இதே போன்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், தொழிலாள
வர்க்கத்தின் எந்தவொரு இயக்கத்திற்கும் ஆளும் கும்பலிடம் இருப்பது ஒரே பதிலாகும்: அது முதலாளித்துவதற்கு
எதிரான ஒன்றிணைக்கப்பட்ட போராட்டத்தை தவிர்ப்பதற்காக இனவாத அரசியல் நஞ்சை கிளறிவிடுவதாகும். கடைசியாக
இராஜபக்ஷ காணவிரும்பாத விடயம் என்னவெனில், தொழிலாளர்கள் மற்றும் நகர்ப்புற, கிராமப்புற ஏழைகளின்
பரந்த தட்டினர் மத்தியில் கொந்தளித்துக்கொண்டிருக்கும் பகைமை, அதிருப்தி மற்றும் ஆத்திரத்தினதும் குவிமையமாக
2006 மே தினம் உருவெடுப்பதையே ஆகும். இந்த வர்க்கப் பிளவுகளுக்கு மத்தியில், தொழிலாளர்களுக்காக பேசுவதாகக்
கூறிக்கொள்ளும் ஜே.வி.பி, லங்கா சமசமாஜக் கட்சி (ல.ச.ச.க) மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி அதேபோல் தொழிற்சங்க
தலைமைத்துவங்களும் அரசாங்கத்தின் பக்கமே நிற்கின்றன.
தொழிலாள வர்க்கம் ஒரு சதுக்கத்தில் நின்றுகொண்டிருக்கின்றது. ஆளும் வர்க்கத்தின்
அரசியல் பிரதிநிதிகள் தீவை மீண்டும் யுத்தத்திற்குள் தள்ளத் தயாராகின்ற அதேவேளை, தொழிலாள வர்க்கத்தின்
சமூக நிலைமையோடும் அவர்கள் ஒரு வர்க்க மோதலுக்காக திட்டமிட்டு கொண்டிருக்கின்றார்கள். இது,
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கோருகின்ற நீண்டகால பொருளாதார மறுசீரமைப்பு திட்டத்திற்கு வழி திறப்பதன்
பேரில், ஒரு பேச்சுவார்த்தை மூலமான தீர்வு காண்பதற்காக ஏகாதிபத்திய சக்திகளாலும் மற்றும் கொழும்பில்
உள்ள கூட்டுத்தாபன தட்டுக்களாலும் ஊக்குவிக்கப்பட்ட பெயரளவிலான சமாதான முன்னெடுப்புகளின் வெறும் துளிபகுதி
மட்டுமே.
சோ.ச.க தொழிலாள வர்க்கத்திற்கு சாத்தியமான சோசலிச மாற்றீட்டிற்காக
போராடுவதற்காக இன்று கொழும்பில் மேதினக் கூட்டத்தை நடத்தவுள்ளது. வாழ்க்கைத் தரம் மற்றும் ஜனநாயக
உரிமைகளை காப்பதற்கான எந்தவொரு போராட்டத்தினதும் முதற்படி, ஆளும் கும்பலின் அனைத்து கட்சிகள் மற்றும்
பிரிவுகளில் இருந்தும் முழுமையாக அரசியல் ரீதியில் பிரிந்து செல்வதும், எல்லாவிதத்திலான தேசியவாதம்,
இனவாதம் மற்றும் பேரினவாதத்தையும் நிராகரிப்பதுமாகும். தொழிலாள வர்க்கத்தின் முந்தைய பரம்பரைகளால்
போராடி வெற்றிகொள்ளப்பட்ட மே தின கூட்டம் நடத்தும் உரிமையை கைவிட மறுப்பவர்களை "தேசத்
துரோகிகள்" என கண்டனம் செய்பவர்களை தொழிலாளர்கள் அவமதித்து நிராகரிக்க வேண்டும்.
சோ.ச.க யுத்தம், சமூக சமத்துவமின்மை மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான
தாக்குதல்களுக்கு எதிராக ஒரு வர்க்கத் தீர்வை அபிவிருத்தி செய்கின்றது. நாம் கொழும்பில் உள்ள முதலாளித்துவ
அரசாங்கத்திற்கும் மற்றும் முதலாளித்துவ தேசியவாத விடுதலைப் புலிகளுக்கும் எதிராக தமிழ், சிங்கள மற்றும்
முஸ்லிம் தொழிலாளர்களை ஒன்றிணைப்பதற்கான வழிவகையாக, யுத்த பிராந்தியமான வடக்கு மற்றும் கிழக்கில்
இருந்து அனைத்து பாதுகாப்பு படைகளையும் உடனடியாகவும் நிபந்தனையின்றியும் திருப்பியழைக்குமாறு
கோருகின்றோம்.
தீர்க்கப்படாத ஜனநாயக உரிமை பற்றிய பிரச்சினைகளை தீர்க்கவும் மற்றும்
எல்லாவிதமான பாரபட்சங்களுக்கும் முடிவுகட்டவும் ஒரு புதிய அரசியலமைப்பு சபை தேவை என சோ.ச.க.
வலியுறுத்துகிறது. ஆனால் அரசியலமைப்பை வரையும் நடவடிக்கை ஜனநாயக ரீதியில் மேற்கொள்ளப்பட வேண்டும்.
1972 மற்றும் 1978ல் நடைமுறையில் இருந்து பாராளுமன்றத்தை தாங்களாகவே அரசியலமைப்பு சபைகளாக
மோசடியான முறையில் மாற்றிக்கொண்டதை போல் அன்றி, குறிப்பிட்ட இதே தேவைக்காக உழைக்கும் மக்களால்
ஜனநாயக முறையில் தேர்வு செய்யப்பட்ட ஒரு உண்மையான அரசியலமைப்பு சபையால் புதிய அரசியலமைப்பு
வரையப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.
உண்மையான ஜனநாயகம் என்றால், எப்பொழுதும் பணக்காரர்களுக்கும் செல்வந்தர்களுக்கும்
பக்கச் சார்பாக இருக்கும், முதலாளித்துவ சட்ட அமைப்பு மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களில் காணப்படும்
உத்தியோகபூர்வ சமத்துவத்திற்கும் மேலானதாகும். சமுதாயத்தின் பொருளாதார கட்டமைப்பு உழைக்கும் மக்களின்
பரந்த வெகுஜனங்களின் நலன்களை காக்கும் வகையில் மாற்றியமைக்கப்பட வேண்டும். இதன் காரணமாகவே,
அனைத்து பெரும் நிதி, கைத்தொழில் மற்றும் வர்த்தக நிறுவனங்களை ஜனநாயக, பொதுச் சொத்தாக்கவும் மற்றும்
அவற்றை ஒரு சில செல்வந்தர்களுக்காக அன்றி சமுதாயத்தின் பரந்த பெரும்பான்மையினரின் தேவைகளை இட்டு
நிரப்பும் வகையில் கட்டுப்படுத்தப்படுத்தவும் சோசலிச வேலைத் திட்டமொன்றை சோ.ச.க பரிந்துரைக்கின்றது.
சோசலிசமானது தெற்காசியாவில் உள்ள ஒரு ஒற்றை, சிறிய தீவில் அல்லது உண்மையில்
எந்தவொரு பெரிய அல்லது சிறிய தனிமைப்பட்டுள்ள நாட்டிலும் அடையமுடியாததாகும். சோசலிசத்திற்கான
போராட்டம் தவிர்க்க முடியாத வகையில் சர்வதேசமயமானதாகும். பூகோள முதலாளித்துவத்தின்
கொள்ளையடிக்கும் நடவடிக்கைகளுக்கு எதிரான ஒரே பதிலீடு, சமுதாயத்தை சோசலிச முறையில் மாற்றியமைப்பதற்காக
தொழிலாள வர்க்கம் அனைத்துலக ரீதியில் ஒன்றிணைந்து ஒரு எதிர்த்தாக்குதலை நடத்துவதேயாகும். ஸ்ரீலங்கா--ஈழம்
சோசலிச குடியரசிற்கான போராட்டமானது, தெற்காசியாவிலும் மற்றும் அனைத்துலகிலும் ஐக்கிய சோசலிச அரசுகளை
ஸ்தாபிப்பதற்கான அகன்ற போராட்டத்தின் ஒரு ஆக்கக்கூறு மட்டுமே. சோசலிச சமத்துவ கட்சியும் மற்றும்
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அனைத்து பகுதிகளும், உலக சோசலிச வலைத் தளத்தின்
ஊடாக இந்த வேலைத் திட்டத்திற்காகவே போராடுகின்றன.
மே தினத்தில் அனைத்து அரசியல் நடவடிக்கைகளையும் இரத்து செய்யுமாறு அரசாங்கம்
விடுத்துள்ள வேண்டுகோளை நிராகரிப்பதோடு, இந்த தீர்க்கமான அரசியல் விடயங்களை கலந்துரையாடுவதற்காக,
இன்று மாலை 3 மணிக்கு கொழும்பு கிரீன் பாத்தில் உள்ள புதிய நகர மண்டபத்தில் நடைபெறவுள்ள எமது மே தினத்தில்
பங்குகொள்ளுமாறு தொழிலாளர்கள், இளைஞர்கள், குடும்பத் தலைவிகள் மற்றும் புத்திஜவீகளுக்கும் நாம் அழைப்பு
விடுக்கின்றோம்.
Top of page
|