ஐரோப்பா
:
பிரான்ஸ்
France: Fight vs. "First Job Contract"
raises need for new working class leadership
பிரான்ஸ்: "முதல் வேலை ஒப்பந்தத்திற்கு" எதிரான போராட்டம் புதிய
தொழிலாள வர்க்க தலைமைக்கான அவசியத்தை எழுப்புகிறது
Statement of the World Socialist Web Site editorial
board
28 March 2006
Back to screen
version
பின்வரும் அறிக்கையானது உலக சோசலிச வலைத் தளம் மற்றும் நான்காம் அகிலத்தின்
அனைத்துலகக் குழுவின் ஆதரவாளர்களால் மார்ச் 28 அன்று பிரான்ஸ் முழுவதும் கோலிச அரசாங்கத்தின் "முதல் வேலை
ஒப்பந்தத்திற்கு" (CPE) எதிராக நடைபெறும் நடவடிக்கை
நாள் வெகுஜன ஆர்ப்பாட்டங்களில் விநியோகிக்கப்படுகின்றது. நாம் வாசகர்களையும் ஆதரவாளர்களையும் இந்த அறிக்கையை
இறக்கம் செய்யமாறு கேட்டுக்கொள்வதுடன், pdf கோப்பாகவும்
கூட வெளியிடப்பட்டிருக்கும் இந்த அறிக்கையை எவ்வளவு பரந்த அளவில் விநியோகிக்க முடியுமோ அவ்வளவு
விநியோகிக்ககுமாறு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.
கோலிச அரசாங்கத்தின் "முதல் வேலை ஒப்பந்தத்திற்கு"
(CPE) எதிரான செவ்வாய் நடவடிக்கையானது, இளைஞர்கள்
மற்றும் தொழிலாளர்களது தேவைகளுக்கும் பிரெஞ்சு ஆளும் உயரடுக்கின் நலன்களுக்கும் இடையிலான மோதலின் ஆழமான
அழுத்தத்தை வெளிப்படுத்துகின்றது. வேலை நிறுத்தங்களும் ஆர்ப்பாட்டங்களும் மிகவும் அடிப்படையான பிரச்சினைகளான
வேலையை உத்திரவாதம் செய்யும் உரிமை பற்றியதாக இருக்கின்றன.
இந்த சமூக உரிமைகள் பிரான்சில் மட்டுமல்லாமல், ஐரோப்பா முழுவதும் தாக்குதலுக்கு
ஆளாகி இருக்கிறது. அனைத்து அரசாங்கங்களும், அவை பிரிட்டனில் தொழிற்கட்சி அரசாங்கமாயினும், ஸ்பெயினில்
சோசலிஸ்ட் கட்சி அரசாங்கமாயினும், பிரான்ஸ், இத்தாலியில் பழமைவாத அரசாங்கமாயினும், அல்லது ஜேர்மனியில்
வலது மற்றும் "இடது" கூட்டரசாங்கமாயினும், அனைத்தும் இரண்டாம் உலகப் போருக்கு பிந்தைய காலகட்டத்தில்
ஏற்படுத்தப்பட்ட சமூக வெற்றிகளின் அமைப்பினை தகர்க்கவும் தொழிலாள வர்க்கத்தால் வென்றெடுக்கப்பட்ட
சட்டரீதியான பாதுகாப்புக்களை அழிக்கவும் முயல்கின்றன.
இந்த தாக்குதலின் இயல்பானது, இது தனி ஒரு அரசியல்வாதியினது (பிரெஞ்சு பிரதமர் டு
வில்ப்பன்), தனி ஒரு கட்சியினது (கோலிசவாதிகள்), அல்லது தனி ஒரு அரசாங்கத்தினது விளைபொருள் அல்ல என்பதை
தெளிவாக விளக்குகிறது. அது ஆளும் தட்டுக்களின் மற்றும் இடது அதேபோல வலது என அனைத்து முதலாளித்துவ
கட்சிகளின், அவை அனைத்தும் பாதுகாக்கும் பொருளாதார முறையின், முதலாளித்துவ அமைப்பின் உலக நெருக்கடிக்கு
அவற்றின் பதிலாகும்.
CPE இன் இலக்கு ஜேர்மனியில் முந்தைய
சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் பசுமைக் கட்சி கூட்டணி அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட ஹார்ட்ஸ்
IV சட்டங்களிலிருந்து
அடிப்படையில் வேறுபடவில்லை. அது ஐரோப்பிய ஒன்றிய கமிஷன், ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் சர்வதேச ரீதியாக
பெரு வர்த்தகத்தினர் வலியுறுத்திய சமூக "சீர்திருத்தங்களுடன்" பொருந்தியதாகும்.
எளிமையாக கூறினால், மனிதகுலத்தின் தேவைகளை தனியார் இலாபத்திற்கும் தனிநபர்
செல்வக்குவிப்பிற்கும் தொடர்ந்து கீழ்ப்படுத்துவது --அது பிரான்ஸ் ஆயினும், பிரிட்டன் ஆயினும், ஜப்பான் ஆயினும் அல்லது
அமெரிக்கா ஆயினும்-- தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்களையும் அடிப்படை உரிமைகளையும் அழிப்பதை
அர்த்தப்படுத்திகிறது.
இதனால்தான் பிரான்சில் மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்களின்
போராட்டமானது ஒரு புதிய புரட்சிகர தலைமையை கட்டியெழுப்பும் அவசியத்தை எழுப்புகிறது, அத்தலைமையானது
சோசலிச கொள்கைகளின் அடிப்படையிலும் தொழிலாள வர்க்கம் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான
போராட்டத்தின் அடிப்படையிலும் ஐரோப்பா மற்றும் சர்வதேசரீதியாக உள்ள தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்திற்காக
போராடும்.
தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களின் நலன்களை வெற்றிகரமாக பாதுகாத்தலுக்கான
முன்நிபந்தனையானது, தொழிற்சங்கங்கள், சோசலிஸ்ட் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய பழைய அமைப்புக்கள்,
முதலாளித்துவ அமைப்பிற்கு எதிரான அவசியமான போராட்டத்தை நடத்த முடியாது, நடத்த மாட்டா என்பதை
புரிந்துகொள்வதாகும். இந்த அமைப்புக்களில் எதுவும் பிரதமர் டொமினிக் டு வில்ப்பன் மற்றும் ஜனாதிபதி ஜாக்
சிராக்கின் அரசாங்கத்தை கீழிறக்குவதற்கான கோரிக்கையை கூட எழுப்பியிருக்கவில்லை. பதிலாக, அவை
CPE க்கு எதிரான
பரந்த எதிர்ப்பிற்கு ஒருவகை மேற்பூச்சான சலுகையை செய்யுமாறு அரசாங்கத்தை நயந்து கேட்கின்றனர், அதேவேளை
அவை அரசாங்க எதிர்ப்பு அணிதிரளலை சக்தியிழக்கக செய்யவும் துணிவு இழக்கச் செய்யவும் செயற்படுகின்றன.
Aix-en-Provence ல் தேசிய
மாணவர் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் ஞாயிறு அன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் தெளிவாக்கியவாறு
CPE - ஐ
தோற்கடிப்பதற்கான மாணவர்களின் உறுதிப்பாடு, இன்னும் குன்றாதிருக்கின்றது. அவ்வறிக்கை அரசாங்கத்தின்
இராஜினாமாவை கோருவதுடன், வில்ப்பன் இணங்கவில்லை என்றால் வியாழன் அன்று சாலைகளையும் இரயில் பாதைகளையும்
தடை ஏற்படுத்தி அடைக்குமாறு உறுதி பூண்டுள்ளது.
அத்தகைய போராட்டத்தை எதிர்ப்பதிலும் ஆர்ப்பாட்டங்களை முடிவுக்கு கொண்டு வருவதில்
வேலை செய்வதிலும் சோசலிஸ்ட் கட்சியின் பங்கு, பிரதான மாணவர் அமைப்பான
UNEF தலைவர்
Bruno Julliard
இன் பதிலில் வெளிக்காட்டப்பட்டது. சோசலிஸ்ட் கட்சியுடன் தொடர்பை
கொண்டிருக்கும் ஜூலியார்ட், ஐரோப்பா 1 வானொலிக்கு அளித்த பேட்டியில், "இந்த அணிதிரளலுக்கு முடிவு காண்பதை
நாம் விரும்புகிறோம், நாம் கலந்துரையாட விரும்புகிறோம். பிரதமரை சந்திக்க நான் கேட்பேன்." எனக் கூறினார்.
ஜூலியார்ட்டின் குறிப்பானது, முன்னணி தொழிற்சங்கம், சோசலிஸ்ட் கட்சி மற்றும்
கம்யூனிஸ்ட் கட்சி அலுவலர்களின் அறிக்கைகளில் எதிரொலித்தது. சோசலிஸ்ட் கட்சியின் முக்கிய "இடது" பாராளுமன்ற
வாதியான Arnaud Montebourg,
"இதுவெல்லாம் எங்கு இட்டுச்செல்லும் என்று நாம் கவலைப்படுகிறோம்" "நிலைமை இப்பொழுது முடங்கிப் போய்விட்டது.
அரசியல் ஸ்தாபனங்கள் செல்வாக்கிழந்துவிட்ட வெடிக்கும் நிலை இது." என்றார்.
"நாடு வன்முறை தலைவிரித்தாடும் நிலையில் இருக்கிறது, நாம் நமது பொறுப்பை
காட்டவே இங்கு வந்தோம்" என CFDT (பிரெஞ்சு
ஜனநாயகத் தொழிலாளர் கூட்டமைப்பு) தலைவர் François
Chérèque, வில்ப்பனுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையே நடந்த
வெள்ளிக்கிழமை கூட்டத்தற்கு பின்னர் கூறினார். பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர்
Marie-George Buffet
"சில பொறுப்புள்ள கடமைகளை காட்ட" மற்றும் "பிரான்சிற்கான சேவையில்
அவரை அமர்த்திக் கொள்ள" வில்ப்பனை அழைத்தார்.
இந்த சக்திகள் அனைத்தும் 1995 வேலை நிறுத்த அலையிலும் 2003ல் கோலிச ஆட்சியின்
ஓய்வூதியம் மற்றும் கல்விச் சீர்திருத்தங்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்திலும் காட்டிக் கொடுத்தது போலவே, பரந்த
இயக்கத்தை காட்டிக் கொடுக்கவும் அதனை தோல்விக்கு இட்டுச்செல்லவும் வேலை செய்கின்றன.
அவர்கள் "அதி இடது" அமைப்புக்கள் என்று அழைக்கப்படுபவர்களால்
உதவிசெய்யப்படுகிறார்கள். புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம்
(LCR), லூத் ஊவ்றியேர்
(LO) தொழிலாளர்
கட்சி (PT)
ஆகியன, CPE
க்கு எதிரான இயக்கத்தை, தொழிற்சங்க அதிகாரத்துவம், சோசலிஸ்ட் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கீழ்ப்படுத்த
வேலை செய்யும் அதேவேளை, தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் போர்க்குண மனோநிலைக்கு ஏற்றவாறு தங்களின்
பாஷைகளை மாற்றிக் கொள்கிறார்கள். அவர்களுக்குள் என்னதான் வேறுபாடுகள் இருந்தாலும், அவற்றின் பொதுவான
தரநிலை தொழிலாளர் அதிகாரத்துவங்களுக்கு முன் காலில் விழுந்து வணங்குவதுதான். அவர்களது அனைத்து வெளியீடுகளிலும்
தொழிற்சங்கங்கள் அல்லது உத்தியோகபூர்வ இடது கட்சிகளின் துரோக பங்கு பற்றி எந்தவித அக்கறையான
விமர்சங்களையும் ஒருவர் காண முடியாது.
இப்பிரச்சினை தட்டிக்கழிக்கப்பட முடியாதது. மிகவும் போர்க்குணமுள்ள மற்றும் பரந்த
வெகுஜன இயக்கத்தாலும் கூட தானாக இதனை தீர்த்துவிட முடியாது. பிரான்சில் மட்டுமல்லாது சர்வதேச ரீதியாகவும்
உள்ள தொழிலாள வர்க்க இயக்கத்தின் மாபெரும் வரலாற்று அனுபவத்தின் படிப்பினைகளில் தன்னை தளப்படுத்திக்
கொள்ளும் ஒரு புதிய தலைமையை கட்டி எழுப்புவதன் ஊடாக அது நனவுபூர்வமாக கட்டாயம் கையாளப்பட வேண்டும்.
அத்தகைய தலைமையால் மட்டுமே தொழிலாள வர்க்கத்தின் பரந்த சோசலிச கட்சிக்கான அடித்தளங்களை அமைக்க
முடியும்.
சிராக்- வில்ப்பன் அரசாங்கத்தை பதவியில் இருந்து கீழிறக்குவது கூட புரட்சிகர தலைமை
மற்றும் முன்னோக்கு பற்றிய பிரச்சினைகளை மிகவும் கூர்மையாக முன்வைக்கும். ஜோஸ்பனின் பன்மை இடது அரசாங்கத்தின்
பதிவுச் சான்றில் ஏற்கனவே கண்டவாறு, உத்தியோகபூர்வ இடது கட்சிகளின் அரசாங்கம் தற்போதைய ஆட்சியின்
கொள்கைகளில் இருந்து அடிப்படையில் வேறுபட்ட கொள்கைகளை பின்பற்றவில்லை.
பிரான்சின் சோசலிஸ்ட் கட்சியின் பாராளுமன்ற பிரிவின் (கன்னையின்) தலைவர்
Jean-Marc Ayrault,
பைனான்சியல் டைம்ஸ் பத்திரிகையிடம், பிரிட்டனின் பிரதமர் டோனி பிளேயர் போன்ற தலைவர் பிரான்சுக்கு
தேவை என்று கூறிய பொழுது, உத்தியோகபூர்வ இடது கட்சிகளின் மேலும் கூடிய வலதுபுறத்தை நோக்கிய திருப்பத்தை
குறிகாட்டினார். Ayrault
-ன் முன்மாதிரியானது, ஈராக் மீதான அமெரிக்க படையெடுப்பிலும் ஆக்கிரமிப்பிலும் சேர்ந்துகொண்டது மட்டுமல்ல,
பிரிட்டனுக்குள்ளேயும் சமூக நிலைமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான முன் கண்டிராத தாக்குதல்களை
மேற்கொண்டுள்ளது.
சுயாதீனமான அரசியல் முன்னோக்கின் மையத்தில் தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியம்
கட்டாயம் இருக்க வேண்டும். பூகோள முதலாளித்துவ சகாப்தத்தில்
CPE- ஆல் எழுப்பப்பட்டுள் பிரச்சினகளுள் ஒன்று கூட வெறுமனே
பிரெஞ்சு தேசிய அரசின் எல்லைகளுக்குள்ளே தீர்க்கப்பட முடியாதது. 1960 கள் மற்றும் 70 களின் சமூக சீர்திருத்தவாத
கொள்கைகளுக்கு திரும்பச் செல்ல முடியாது, அப்பொழுது தேசிய அரசு அமைப்பின் கட்டமைப்பிற்குள்ளே சலுகைகளை
வென்றெடுப்பது தொழிலாள வர்க்கத்திற்கு சாத்தியமாக இருந்தது. இன்று, பிரான்சிலும் மற்றும் எங்கிலும் உள்ள
தொழிலாள வர்க்கமானது, முன்னேறிய தொழில்துறை நாடுகளில் இருந்து மிக மலிவு கூலியுழைப்பு கிடைக்கும் ஏழ்மை
நிறைந்த பகுதிகளுக்கு, ஓய்வொழிவில்லாது வேலைகளை மாற்றியும் வேலைகளை குறைத்தும் வரும் நாடுகடந்த நிறுவனங்களோடு
மோதல் கொள்வதை எதிர்கொண்டு வருகின்றனர்.
தொழிலாளர்களது உரிமைகள் மற்றும் வாழ்க்கைத் தரங்கள் மீதான பூகோளத்
தாக்குதலுக்கு எதிரான போராட்டத்திற்கு சோசலிச முன்னோக்கின் அடிப்படையிலான தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச
வெகுஜன இயக்கத்தை வளர்த்தெடுப்பது அவசியமாகிறது. அத்தகைய இயக்கமானது, அனைத்து தேசிய இனங்களையும்
மற்றும் மதங்களையும் சார்ந்த அனைத்து தொழிலாளர்களையும் கட்டாயம் ஒன்றிணைக்கும் மற்றும் தொழிலாளர்கள்
தாங்கள் தேர்ந்தெடுக்கும் எந்த நாட்டிலும், முழு மற்றும் சமமான உரிமைகளுடன், வேலை செய்வதற்கும்
வாழ்வதற்குமான உரிமைகளையும் ஆதரிக்கும்.
ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளை அது கட்டாயம் சளைக்காமல் பாதுகாக்கும் மற்றும்
ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் இருந்து அனைத்து அந்நிய துருப்புக்களையும் உடனடியாக விலக்கிக் கொள்வதற்கான
கோரிக்கையில் தொடங்கி, ஏகாதிபத்திய போரை கட்டாயம் எதிர்க்கும்.
பொருளாதார வாழ்க்கை இனியும் பெருநிறுவன இலாபத்திற்கும் தனிநபர் செல்வக்
குவிப்பிற்கும் கீழ்ப்பட்டதாக இல்லாது, இன்னும் சொல்லப்போனால் வறுமையை அகற்றவும் அனைவருக்கும் பாதுகாப்பான
வேலைவாய்ப்பையும் தரமான வாழ்க்கைத் தரங்களையும் வழங்குவதற்கும் அறிவார்ந்த மற்றும் சர்வதேச அடிப்படையில்
ஒழுங்கமைக்கப்படும் வண்ணம், பெரும் நிதி, தொழில்துறை மற்றும் வணிக நிறுவனங்களை ஜனநாயக ரீதியான மற்றும்
பொது உடைமையின் கீழ் வைப்பதில் கட்டாயம் பரிந்து போராடும்.
ஐரோப்பிய தொழிலாள வர்க்கம், ஐரோப்பிய ஒன்றியத்தின் முதலாளித்துவ கொள்கைகளுக்கு
எதிராக அதன் சொந்த வேலைத் திட்டத்தின் அடிப்படையில், ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகள் அடிப்படையில்
கட்டாயம் ஐக்கியப்படும்.
உலக சோசலிச வலைத் தளம் தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச சோசலிச இயக்கத்தைக்
கட்டி எழுப்புவதற்கு ஒரு முக்கியமான கருவியாகும். அது நாளாந்தம் உலக நிகழ்வுகள் பற்றிய சோசலிச ஆய்வையும்
நோக்குநிலையையும் வழங்கும்.
பல பத்தாண்டுகளாக மார்க்சிச வேலைத் திட்டத்தையும் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் மரபியத்தையும்
பாதுகாத்து வளர்த்தெடுத்துவரும், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இணைய வெளியீடுதான் உலக சோசலிச
வலைத் தளமாகும் (WSWS).
WSWS -ஐ
வாசிக்குமாறும் பிரான்சில் அனைத்துலகக் குழுவின் பகுதியை கட்டி எழுப்புவதை ஆதரிக்குமாறும் நாம் இளைஞர்களையும்
தொழிலாளர்களையும் அன்புடன் அழைக்கிறோம். |