World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

France: Mass movement against "First Job Contract" in danger

Trade unions meet with prime minister

பிரான்ஸ்: "முதல் வேலை ஒப்பந்தத்திற்கு" எதிரான மக்கள் இயக்கம் ஆபத்திற்குட்பட்டுள்ளது.

தொழிற்சங்கங்கள் பிரதம மந்திரியை சந்திக்கின்றன

By Rick Kelly
25 March 2006

Back to screen version

முதல் இரண்டு ஆண்டுகள் வேலையில் எக்காரணமும் இன்றி இளந்தொழிலாளர்களை பணிநீக்கம் செய்யும் உரிமையை முதலாளிகளுக்கு கொடுத்துள்ள கோலிச அரசாங்கத்தின் "முதல் வேலை ஒப்பந்தச் சட்டம்" (CPE) பற்றி பிரதம மந்திரி டொமினிக் டு வில்ப்பனுடன் பிரான்சின் முக்கிய தொழிற்சங்கங்கள் நேற்று விவாதம் நடத்தின. இளம் தொழிலாளர்கள் மீதான தாக்குதலை எதிர்த்து பெருகிய முறையில் மாணவர்கள் எதிர்ப்புக்கள் நடந்துகொண்டிருக்கையில், CPE சட்டத்தின் அடிப்படை கூறுபாடுகள் மாற்றப்படாமல் அரசாங்கத்துடன் ஒரு சமரச ஒப்பந்தத்தை தயாரிப்பதன் மூலம் தொழிற்சங்கங்கள் பரந்த இயக்கத்தை தனிமைப்படுத்தும் தங்களுடைய முயற்சிகளை முன்னெடுக்கின்றன.

CGT (தொழிலாளர் பொதுக் கூட்டமைப்பு), CFDT (பிரெஞ்சு ஜனநாயக தொழிலாளர் கூட்டமைப்பு), FO (தொழிலாளர் சக்தி) மற்றும் இரண்டு நிர்வாகத்தினரின் தொழிற்சங்கங்கள் CFTC, CFE-CGC என்று ஐந்து தொழிற்சங்கங்களின் தலைவர்கள் பிரதம மந்திரி வில்ப்பனை, அவருடைய அதிகாரபூர்வ இல்லமான Matignon இல் சந்தித்தனர். அரசாங்கம் CPE ஐ திரும்பப்பெறாவிட்டால் வில்ப்பனை சந்திப்பதாக இல்லை என்று முன்னர் தொழிற்சங்கங்கள் கூறியது பின்வாங்கப்பட்டதை தொடர்ந்து இந்தக் கூட்டம் நடைபெற்றது.

வில்ப்பனுடனான தங்கள் கூட்டத்தை, அரசாங்கம் CPE ஐ திரும்பப் பெறுவதற்கு அழுத்தம் கொடுக்கும் கருவியாகக் காட்டும் முயற்சியில் தொழிற்சங்கங்கள் ஈடுபட்டுள்ளன. ஆனால் அரசாங்கம் பலமுறையும் சட்டத்தை திரும்பப் பெறுவதாக இல்லை என்று கூறிவிட்டது. பேச்சுவார்த்தைகளுக்கு அது அழைத்ததானது, தொழிலாளர்களை பணிநீக்கம் செய்தல் எளிதாக உள்ள "பரீட்சார்த்த காலம்" என்பதின் அளவு போன்றவை CPE யில் திருத்தப்படலாமா என்பதையே அடிப்படையாக கொண்டுள்ளது. இந்தச் சூழ்நிலையில் தொழிற்சங்கங்கள் பிரதம மந்திரியை சந்திக்க ஒப்புக் கொண்டதே அவர்களுடைய இறுதி நோக்கமான மாணவர் தலைமையிலான வெகுஜன இயக்கத்தை தனிமைப்படுத்தி ஒடுக்கிவிட வேண்டும் என்பதை செயல்படுத்தத்தான்.

தொழிற்சங்கங்கள், சோசலிஸ்ட் கட்சி, ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி என்று பிரெஞ்சு "இடதின்" முழு அமைப்புக்களும் CPE க்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் இயக்கத்தின் வெடிப்பை பெரும் எச்சரிக்கையுடன் எதிர்கொண்டுள்ளன. இந்த அமைப்புக்கள், தங்கள் சக்தியனைத்தையும் திரட்டி இந்த மக்கள் இயக்கம் வில்ப்பன் அரசாங்கம் மற்றும் அதன் வலதுசாரி திட்டத்துடன் பகிரங்கமான மோதலாக வளர்ந்துவிடாமல் தடுக்க பெரும் முயற்சியை மேற்கொண்டுள்ளன. மக்கள் இயக்கம் ஒரு சுயாதீன தன்மையை கொண்டு வளர்ந்துவிடாமல் இருப்பதற்கான ஒவ்வொரு முயற்சியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒழுங்கமைப்பாளர்கள் பரந்த ஆர்ப்பாட்டங்களில் CPE ஐத்தான் ஒரே பிரச்சினையாக முன்வைத்து, ஆர்ப்பாட்டங்களின் பங்கை சட்டத்தை திரும்பப் பெறுதலுக்கு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பது என்ற வரம்பிற்கு உட்படுத்த முயன்றுள்ளன.

மாணவர் சங்க தலைவர்களின் அரசியல் முன்னோக்கும் தொழிற்சங்க தலைவர்களிடமிருந்து மாறுபட்டிருக்கவில்லை. UNEF எனப்படும் மிகப்பெரும் பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் தலைவர் Bruno Julliard சோசலிஸ்ட் கட்சி உறுப்பினராவார். தொழிற்சங்க தலைவர்களைவிட மாணவர் அமைப்புத் தலைவர்கள் தங்கள் அரசியல் தொடர்பு பற்றி அதிகம் கூறுவதில்லை என்றாலும், பல மூத்த மாணவர் தலைவர்கள் சமூக ஜனநாயகவாதிகள்கள் மற்றும் ஸ்ராலினிஸ்டுகளுடன் நெருக்கமான தொடர்பு கொண்டுள்ளனர். மாணவர் தலைவர்கள் நேற்று காலை 12 தொழிற்சங்கங்களின் தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடாத்தினர். இது வில்ப்பனுடனான தொழிற்சங்கத் தலைவர்கள் பேச்சுவார்த்தைகளுக்கு முன் நடந்தது. Nouvel Observateur இன் கருத்தின்படி, மாணவர்கள் மற்றும் தொழிற்சங்கத் தலைவர்கள் பிரதம மந்திரி திட்டமிட்டுள்ள ஐந்து தொழிற்சங்கங்களுடன் பேச்சு என்பதற்கு பதிலாக அனைத்து அமைப்புக்களுடனும் பேச்சு வார்த்தைகளை நடத்தியிருக்க வேண்டும் என்று கூறியதாக தெரிகிறது.

தொழிற்சங்கங்களுடன் வில்ப்பனுடைய பேச்சுவார்த்தை உடன்பாடு ஏதுமின்றி முடிவடைந்தது; தொழிற்சங்கங்கள் தங்கள் ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளன. "நாடு கொந்தளிப்பான நிலையில் உள்ளது; எமது பொறுப்பை காட்டுவதற்குத்தான் நாங்கள் இங்கே வந்தோம்" என்று CFDT இன் தலைவரான Francois Chereque தெரிவித்தார். "பிரதம மந்திரி தன்னுடைய பங்கிற்கு CPE ஐ திரும்பப் பெற்றுக் கொள்ளும் அடையாள செயலைச் செய்திருக்க வேண்டும். நிலைமையை விளக்குவதற்கு நாங்கள் முற்பட்டோம்; ஆனால் அவர் அதைப் புரிந்து கொள்ளவில்லை என்றுதான் நான் உணர்கிறேன்" என்று அவர் முடித்தார்.

பேச்சுவார்த்தைகள் "முக்கியமானவை" என்று வில்ப்பன் விவரித்தார். "இது ஒரு முதற்கட்ட நடவடிக்கை. ஒன்றாக இணைந்து நாம் ஆக்கபூர்வமான தீர்வுகளைக் காண்போம்." என்று அவர் அறிவித்தார். அடுத்த வாரம் தொழிற்சங்கங்களுடன் மற்றொரு கூட்டம் நடத்தலாம் என்று அவர் கூறியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் உச்சி மாநாடு ஒன்றில் கலந்து கொள்ளுவதற்கு புருஸல்ஸ் சென்றுள்ள ஜனாதிபதி ஜாக் சிராக், "தொழிற்சங்கம், உயர்பணியில் ஈடுபட்டுள்ளோர் மற்றும் இளைஞர் அமைப்புக்கள் ஆகியன பொறுப்பான, நியாயமான சமூக உரையாடலை நடத்துவார்கள் என்று எனக்கு முழு நம்பிக்கை உள்ளது" என்று அங்கு அறிவித்துள்ளார்.

தொழிற்சங்கங்கள் ஓர் உடன்பாட்டை ஏற்கும் என்ற சிராக்கின் நம்பிக்கை CPE திரும்பப் பெறப்படமாட்டாது என்ற அவருடைய உறுதிக்கு இணையாக நின்றது. "பாராளுமன்றத்தில் ஒரு சட்டம் இயற்றப்பட்டுள்ளது என்றால், எமது அமைப்புக்களின் விதிகள் அவற்றின் உணர்வுகளின்படி, அது செயல்படுத்தப்பட வேண்டும். எச்சரிக்கைகளுக்கு அடிபணிந்து ஜனநாயகம் நடக்க வேண்டும் என்பதை நான் ஏற்கவில்லை" என்று அவர் அறிவித்தார்.

ஜனாதிபதி, பாரிசிலும் ஏனைய நகரங்களிலும் மாணவர்கள் ஆர்ப்பாட்டங்கள் வியாழனன்று நடைபெற்றபோது தோன்றிய வன்முறை பற்றியும் குறிப்பிட்டார்; இவற்றில் 630 பேர் கைது செய்யப்பட்டதுடன், டஜன் கணக்கானவர்கள் காயமும் அடைந்தனர். CPE-எதிர்ப்பு இயக்கம் தொடர்பாக இதுவரை 1,420 பேர் கைதுசெய்யப்பட்டுள்னர். அரசாங்கம் "குண்டர்கள்" (Casseurs) மீது வழக்குத் தொடுத்து தக்க கடுமையான தண்டனைக்கு ஏற்பாடு செய்யவேண்டும் என, தான் உத்திரவிட்டுள்ளதாக சிராக் அறிவித்தார்.

CPE எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் நடந்த வன்முறைச் சம்பவங்கள் அரசாங்கத்தாலும் வலதுசாரி செய்தி ஊடகத்தாலும் இயக்கத்தை இழிவுபடுத்துவதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளன; இன்னும் கூடுதலான வகையில் போலீஸ் அடக்குமுறை வேண்டும் என நியாயப்படுத்தவும் இவை எடுத்தக்காட்டாக கூறப்பட்டுள்ன. உள்துறை மந்திரி நிக்கோலா சார்க்கோசி "CPE எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் தன்மை மாறிக் கொண்டிருக்கிறது" என்று நேற்று அறிவித்தார்; ஆர்ப்பாட்டக்காரர்களின் மத்தியில் இருந்து "குண்டர்களை" கைது செய்ய சிறப்புப் பிரிவுகளை அமைக்குமாறு போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளதாக அவர் கூறினார்.

சிராக் மற்றும் சார்க்கோசியின் கருத்துக்கள் போலீஸ் அடக்குமுறை அதிகப்படுத்தப்படும் என்ற ஆபத்து மிகுந்த அச்சுறுத்தலை பிரதிபலிக்கின்றன. போலீசாரின் கலவரத்தடுப்பு பிரிவுப் படையினர் ஏற்கனவே ஆர்ப்பாட்டக்காரர்கள்மீது கண்ணீர்ப்புகை, நீர் பீச்சியடித்தல் மற்றும் தடியடிப் பிரயோகம் ஆகியவற்றை மேற்கொண்டுள்னர். பாரிசில் வியாழனன்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் இளைஞர்கள் போலீசாரால் பெயின்ட் துப்பாக்கிகளுக்கு இலக்காயினர். 39 வயது தொலைத்தொடர்பு தொழிலாளியும் ஆறு வயதுச் சிறுவனுக்கு தந்தையுமான Cyrin Ferez போலீசார் அவரை தலையில் பலமுறை தடியால் தாக்கி, மிதித்த அளவில் மருத்துவ மனையில் கோமா கட்டத்தில் உள்ளார்.

சிராக், புருஸல்ஸில் நிருபர்களுடன் பேசியபோது, அமைதியற்ற நிலைமை பற்றி அவருடைய ஐரோப்பிய ஒன்றிய நண்பர்கள் எப்படி எதிர்கொண்டுள்ளனர் என்று கேட்கப்பட்டார். ஜனாதிபதி அவர்கள் "தங்களுடைய ஆதரவைக் கொடுத்துள்ளனர்" என்று விடையிறுத்தார்.

முழு ஐரோப்பிய ஆளும் உயரடுக்கும் சிராக்கிற்கும் வில்ப்பன்னுக்கும் CPE எதிர்ப்பு இயக்கத்தில் ஆதரவை கொடுத்துள்ளது. பழமைவாத மற்றும் சமூக ஜனநாயகவாத அனைத்து ஐரோப்பிய அரசாங்கங்களும் பிரான்சில் நடந்துவருவதன் சர்வதேச முக்கியத்துவத்தை நன்கு அறிந்துள்ளன; தங்களுடைய வலதுசாரி சீர்திருத்தங்களுக்கு எதிராக தங்கள் நாடுகளிலும் இத்தகைய பெரும் மக்கள் இயக்கங்கள் வெளிப்படலாம் என்ற அச்சத்தில் உள்ளன.

"தற்கால ஐரோப்பிய சமூகத்தின் நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளரின் கானரியாக பிரான்ஸ் உள்ளது" என்று William Pfaff மார்ச் 22 அன்று International Herald Tribune ல் கருத்துத் தெரிவித்துளார். "பிரான்சில் இப்பொழுதுள்ள அமைதியின்மை, ஐரோப்பாவில் பரந்த அளவில் மக்கள் எதிர்ப்பு புதியவகை சந்தைப் பொருளாதாரத்தின் முக்கிய கூறுபாட்டிற்கு வெளிவந்து, வேலை கொடுப்பவர்கள், பெருவணிக அமைப்பு ஆகியோரை குறைமதிப்பிற்கு உட்படுத்தி, முதலாளிகளின் வாழ்க்கையை வேண்டுமென்றே பெரும் ஆபத்திற்கும் உட்படுத்தும்" என்று அவர் கூறியுள்ளார்.

சிராக்கின் ஐரோப்பிய நண்பர்கள் CPE எதிர்ப்பு இயக்கத்தை எதிர்கொள்ளும்போது காட்டும் பதட்டமானது, மாணவர், தொழிலாளர் எதிர்ப்பில் உள்ள சர்வதேச தன்மையை வெளிப்படுத்துகிறது. சர்வதேச அளவில் அதன் சமநிலை அமைப்புக்கள் போலவே, பிரான்சின் ஆளும் உயரடுக்கு உலகந்தழுவிய முதலாளித்துவ வழிவகையினால் உந்தப்பெற்று, இரக்கமற்ற வகையில் தடையற்ற சந்தைச்சீர்திருத்தங்கள் மேற்கொண்டுள்ளது; இதில் தனியார் மயமாக்கல், சமூகப் பணிகள், பொது நலச் செலவினங்கள் குறைக்கப்படல், தொழிலாளர் ஊதிய வெட்டுக்கள், வாழ்க்கைத் தர சரிவுகள் ஆகியவை அடங்கியுள்ளன.

தொழிலாள வர்க்கத்தினுள்ளேயே இருக்கும் போர்க்குணமிக்க உறுதியான எதிர்ப்பை எதிர்கொள்கையில் இந்த நடவடிக்கைகள் அடுத்தடுத்துவந்த சமூக ஜனநாயக மற்றும் கோலிச அரசாங்கங்களினால் முன்னெடுக்கப்பட்டுள்ளன. "முதல் வேலை ஒப்பந்தச் சட்டம்" பற்றிய போராட்டம் என்பது, கடந்த தசாப்தத்தில் பிரான்சில் அரசியல் ஸ்தாபனத்தால் மேற்கொள்ளப்பட்ட, போருக்குப் பின் அடையப்பட்ட சமூக வெற்றிகளை தகர்க்கும் முயற்சியில் நிகழ்ந்து வரும் நடவடிக்கைகளுக்கு எதிரான முயற்சிகளின் தொடர்ச்சியையே குறிக்கிறது.

1995 ம் ஆண்டு ஒரு பெரும் வேலைநிறுத்த இயக்கம் கோலிச பிரதம மந்திரி அலன் யூப்பே சமூக நலத்திட்டங்களுக்கு எதிராக நிகழ்த்திய தாக்குதல்கள், மற்றும் பொதுத் துறை ஊழியர்களின் ஓய்வூதியங்கள், சுகாதார நலத்திட்டங்கள், நிலைமைகளுக்கு எதிரான தாக்குதல்களை எதிர்கொள்ளும் வகையில் வெடித்து வந்தது. மூன்று வாரப் போராட்டத்தின் உச்சக்கட்டத்தில் 2.3 மில்லியன் தொழிலாளர்கள் நாடெங்கிலும் 250 ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்டதாக மதிப்பிடப்பட்டது.

அப்பொழுது தொழிலாளர் வர்க்கத்தின் பெரும் பிரிவுகள் யூப்பேக்கு பின் பதவிக்கு வந்த சோசலிஸ்ட் கட்சியின் லியோனல் ஜோஸ்பன்னுடைய தடையற்ற சந்தைச் சீர்திருத்தங்களை எதிர்த்தனர்; அவர் ஏராளமான தனியார்மய திட்டங்களை தொடக்கி வைத்து, சமூக நலச் செலவினங்களிலும் குறைப்பை ஏற்படுத்தினார். 1997ல் இருந்து 2002 வரை பிரதம மந்திரியாக இருந்த காலம் ஜோஸ்பன் தொழிலாளர் பிரிவுகளின் பெரும் விரோதத்துடன் முடித்த நிலை, 2002 ஜனாதிபதித் தேர்தலில் அவரை 15.9 சதவிகித வாக்கைத்தான் பெறும்படி தள்ளியது; சிராக்கிற்கும், தேசிய முன்னணித் தலைவர் ஜோன் மரி லு பென்னுக்கும் அடுத்தாற்போல் இவருக்கு வாக்குகள் கிடைத்தன.

2003 ல் பிரெஞ்சுத் தொழிலாளர்கள் மீண்டும் மில்லியன் கணக்கில், ஜோன் பியர் ரஃபாரன் இன் வலதுசாரி அரசாங்கத்தின் ஓய்வூதியத்தின் மீதான தாக்குதல், பொதுக் கல்விமுறையின் மீதான தாக்குதல் ஆகியவற்றை எதிர்த்து ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.

இந்நிகழ்வுகள் அனைத்திலுமே, போர்க்குணம், போராடுவதற்கான உறுதி என்பவை சாதாரண தொழிலளார்களிடம் இருந்த போதிலும், மக்கள் இயக்கம் காட்டிக் கொடுக்கப்பட்டு இறுதியில் நசுக்கப்பட்டன; இதற்குக் காரணம் தொழிற்சங்கங்கள் அரசாங்கங்களுடன் உடன்படிக்கைகளை கொண்டுவிட்டன. ஒவ்வொரு போராட்டத்திலும் முன்வைக்கப்பட்ட அடிப்படைக் கோரிக்கைகளுக்கு திருப்திகர விளைவு கிடைக்கவில்லை; ஆரம்ப முயற்சி வலதுசாரியிடம் கொடுக்கப்பட்ட வகையில் இன்னும் கூடுதலான வகையில் தொழிலாள வர்க்கத்தின் சமூக நிலைமீதான தாக்குதல்கள்தான் பின்னர் தயாரிக்கப்பட்டன.

பிரெஞ்சுத் தொழிலாள வர்க்கம் தன்னுடைய நலன்களை முன்வைப்பதில் முக்கிய கூறுபாட்டை கொண்டிருக்கவில்லை; அதுதான் சுயாதீனமான சோசலிச தலைமை என்பதாகும். தொழிலாளர்களும், இளைஞர்களும் முந்தைய போராட்டங்களின் தோல்வியில் இருந்து எடுத்துக் கொள்ள வேண்டிய முக்கிய படிப்பினை, பழைய தேசியவாத, சீர்திருத்த அதிகாரத்துவங்களின் முழுத் திவால் தன்மையும்; ஒரு புதிய முன்னோக்கிற்காக அவர்கள் போராட வேண்டும் என்பதாகும்.

வில்ப்பனுடைய அரசாங்கம் வீழ்த்தப்பட வேண்டும்; ஆனால் அதை பிரெஞ்சு அரசியல் ஸ்தாபனத்தின் "இடது" முகம் ஒன்றின் மூலம், சோசலிஸ்ட் அல்லது கம்யூனிஸ்ட் கட்சிகள் மூலம் மாற்றுவது என்பது, எந்தப் பிரச்சினையையும் தீர்க்காது. வில்ப்பனுடைய அரசாங்கம் தொழிலாள வர்க்கம், இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்துவதின் மூலாதாரம் முதலாளித்துவ முறையின் வரலாற்று ரீதியான தோல்வியிலேயே உள்ளது; ஒரு சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் மக்கள் இயக்கம் ஒன்றின் அடிப்படையில்தான் இத்தாக்குதல்கள் தோற்கடிக்கப்பட முடியும்.

அத்தகைய இயக்கம் அனைவருக்கும் பாதுகாப்பான வேலையையும் கெளரவமான வாழ்க்கை தரங்களையும் வழங்குவதற்கு, பொருளாதாரத்தின் "உயர் நிலையை" ஜனாநாயக, பொதுச்சொத்துடைமையின் கீழ், சர்வதேச அடிப்படையில் மற்றும் அறிவார்ந்த ரீதியில், சமூக மற்றும் பொருளாதார வாழ்வை முற்றிலும் மறுஒழுங்கமைக்க முயற்சிக்கும். ஐரோப்பிய தொழிலாள வர்க்கம் ஐரோப்பிய ஒன்றியத்தின் முதலாளித்துவ கொள்கைகளுக்கு எதிராக அதன் சொந்த வேலைத்திட்டத்தின் அடிப்படையில், ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகளின் அடிப்படையில் கட்டாயம் ஒன்றுபட வேண்டும்.

இந்த முன்னோக்குதான் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு, மற்றும் அதன் நாளாந்த இணையதள வெளியீடான உலக சோசலிச வலைத் தளம் ஆகியவற்றால் போராடப்பட்டு வருகின்றது. பிரான்சில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பகுதியை கட்டியமைப்பதே தற்போதைய அவசரப் பணியாகும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved