World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

Mass student protests in France: trade unions come to Villepin's rescue

பிரான்சில் மாபெரும் மாணவர் ஆர்ப்பாட்டங்கள்: தொழிற்சங்கங்கள் வில்ப்பனை காப்பற்ற வருகின்றன

By Antoine Lerougetel
24 March 2006

Back to screen version

ஐந்து பிரெஞ்சு தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர்கள் நேற்று பிற்பகல் கூடி அவர்கள் பிரதம மந்திரி டொமினிக் டு வில்ப்பனுடைய அழைப்பை ஏற்று CPE பற்றி அரசாங்கக் கருத்துகளின்படி பேச்சு வார்த்தைகள் நடத்துவதாகவும், தங்களுடைய கோரிக்கையான புதிய சட்டப்படி இளந்தொழிலாளர்களுக்கு "முதல் வேலை ஒப்பந்தம்" என்ற வகையில் CPE படி பாதகமான பணிவிதிகள் கொடுக்கப்பட்டிருப்பது திரும்ப பெற்றால்தான் பேச்சுவார்த்தை என்ற தங்களின் கோரிக்கையை கைவிடுவதாகவும் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

தொழிலாளர் பொதுக் கூட்டமைப்பு (CGT), பிரெஞ்சு ஜனநாயகத் தொழிலாளர் கூட்டமைப்பு (CFDT), தொழிலாளர் சக்தி (FO) மற்றும் இரண்டு நிர்வாக சார்பு தொழிற்சங்கங்கள் CFTC மற்றும் CFE-CGC) என்று ஐந்து தொழிற்சங்கக் குழுக்கள் எடுத்துள்ள முடிவு, 200,000 முதல் 300,000 வரையிலான மாணவர்கள் பாரிஸ் மற்றும் ஒவ்வொரு முக்கிய நகரத்தின் தெருக்களில் CPE திரும்பப்பெற வேண்டும் என்று ஆர்ப்பரித்து அணிவகுத்துக் கொண்டிருக்கும்போதே வந்தது.

தொழில்துறையின் பரந்த பிரிவுகள் அடுத்த செவ்வாய்க்கிழமை அன்று சட்டத்திற்கு எதிரான நடவடிக்கை தினத்தில் வேலைநிறுத்த அழைப்பிற்கு விடையிறுக்கும்முகமாக கலந்து கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது; இளைஞர்களின் போராட்டத்திற்கு பொதுமக்களுடைய கருத்து பெரும் ஆதரவைக் கொடுத்துள்ளது. நேற்று வெளியிடப்பட்ட ஒரு கருத்துக் கணிப்பு CPE திரும்பப் பெற வேண்டும் என்பதற்கு 66 சதவிகிதம் ஆதரவு கொடுத்துள்ளதாக தெரிவிக்கிறது.

நேற்று காலை தொழிற்சங்கங்கள் மற்றும் மாணவர் அமைப்பிற்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் வில்ப்பன் தான் CPE ஐ திரும்பப் பெறுவதாக எவ்வித அறிக்கையும் கொடுக்கவில்லை. "எந்த முன்னிபந்தனையும் இல்லாமல் கடந்த சில வாரங்களாக CPE பற்றிய கவலைகள், கேள்விகளை தான் விவாதிக்க தயாராக இருப்பதாக மட்டும்" அவர் கூறியுள்ளார். இத்தகைய நிலைப்பாடு வெளிப்படையாகவே உபயோகமற்றதாகும்: CPE இன் முக்கிய விதிகளை தான் மாற்றுவதாக இல்லை என்பதில் பிரதமர் விடாப்பிடியாக உள்ளார். இந்த ஒப்பந்ததின்கீழ் முதலாளிகள் எக்காரணமும் இன்றி முதல் இரண்டு ஆண்டுகளில் 26 வயதிற்குட்பட்ட தொழிலாளர்களை பணி நீக்கம் செய்யலாம் என்று உள்ளது. இரண்டு நாட்கள் முன்புதான் அவர், இந்த சிறப்பு அம்சங்கள் திரும்பப் பெறமுடியாதது, நிறுத்திவைக்கப்பட முடியாதது மற்றும் அடிப்படையில் மாற்றப்பட முடியாதது என்று கூறியுள்ளார்.

CNE (புதிய வேலைக்கமர்த்தும் ஒப்பந்தம்) என்ற இதேபோன்ற ஒப்பந்தத்தை பின்பற்றித்தான் CPE இயற்றப்பட்டுள்ளது; அதன்படி எந்த வயதான தொழிலாளராயினும், 20 தொழிலாளர்களுக்கும் குறைவான நிறுவனத்தில், நிர்வாகம் பணிநீக்கம் செய்யலாம் என்று கூறப்பட்டது; அதற்கு தொழிற்சங்கங்கள் எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. இந்த இரண்டு ஒப்பந்தங்களுமே அனைத்து தொழிலாளர்களுக்கும் வேலைப்பாதுகாப்பை அழிப்பதில் முன்னிற்பவை ஆகும் என்பதோடு, இரண்டாம் உலகப் போருக்குப் பின் பிரெஞ்சு தொழிலாளர்களை பணி நீக்கம் செய்வதை பாதுகாக்கும் குறிப்பிட்ட குறைந்தபட்ச நிலைமைகளை பராமரிக்கும் தொழிலாளர் சட்டங்களை செயலற்றது என ஆக்கிவிடும் தன்மையை கொண்டுள்ளன.

தொழிற்சங்க தலைவர்கள், மாணவர்களை தனிமைப்படுத்தும் உறுதிப்பாடு, திங்களன்று அவர்கள் மார்ச் 18 வலுவான ஆர்ப்பாட்டங்களுக்கு பின்னர், மாணவர்கள் முன்வைத்த வேண்டுகோளான நாடுமுழுவதுமான நேற்றைய போராட்டத்தில் தொழிற்சங்கங்களும் கலந்து கொள்ள வேண்டும் என்பதை நிராகரித்ததில் இருந்து தெளிவாயிற்று. தொழிற்சங்கத் தலைவர்கள் நேரடி நடவடிக்கை தினத்தை மார்ச் 28ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்; இதற்கு காரணம் அதற்குள் இயக்கத்தை நசித்துவிடலாம், மேலும் ஒன்பது தினங்களுக்கு பின்னர் பாரிஸ் பகுதியில் தொடங்க இருக்கும் விடுமுறைக் காலத்தில் அது புதைக்கப்பட்டுவிடலாம் என்ற நம்பிக்கையாகும்.

முக்கிய பல்கலைக் கழக மாணவர் அமைப்பின் தலைவரான Bruno Jullard அறிவித்தார்: "நாம் பேசக் கூடுவதற்கு முன், ஒரு முன்னிபந்தனையாக CPE திரும்பப் பெற வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்துகிறோம்." ஆனால் மிகப் பெரிய தொழிற்சங்க கூட்டமைப்பான ஸ்ராலினிச ஆதிக்கத்திற்குட்பட்ட CGT இன் தலைவர் Bernard Thibault செய்தி ஊடகத்திடம் கூறியதாவது: "முக்கியமான விஷயம் அரசாங்கம் இயக்கத்தில் தொடர்புடைய அனைத்து அமைப்புக்களுடனும் பேச்சு வார்த்தை நடத்துகிறது: அனைவரும் கேட்கப்படவேண்டும் எனக் கூறும் நடைமுறைகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தியுள்ளோம்."

சோசலிஸ்ட் கட்சியுடன் பிணைந்துள்ள CFDT இன் செயலாளர் Francois Chereque கூறினார்: "பிரதம மந்திரியை நேருக்கு நேர் பார்த்து சட்டத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளுங்கள் எனக் கூறப்போகிறோம்."

தெருக்களில் 1.5 மில்லியன் மக்கள் மற்றும் 66 சதவிகித பொதுமக்களின் கருத்தைவிட ஒரு தொழிற்சங்க அதிகாரத்துவ குழுவின் கருத்து ஏன் வலிமை வாய்ந்ததாக இருக்கும் என்பதை அவர் விளக்கவில்லை. தொழிற்சங்கங்கள் சோசலிஸ்ட் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சியின் கருத்துக்களை பின்பற்றுகின்றன; அவை வில்ப்பன் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்று வாதிட்டுள்ளன. சோசலிஸ்ட் கட்சியின் முன்ளாள் பிரதமரும் ஐரோப்பிய அரசியலமைப்பு பற்றிய வாக்கெடுப்பில் இடது பிரச்சாரத்தின் தலைவராகவும் இருந்த Laurence Fabius, நேற்று ஜனாதிபதி ஜாக் சிராக் மற்றும் UMP வலதுசாரி கட்சித் தலைவரும் உள்ளதுறை மந்திரியுமான நிக்கோலா சார்க்கோசியிடம் வில்ப்பனுக்கு தக்கபடி எடுத்துக்கூறுமாறு முறையிட்டுள்ளார்.

இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்களுடைய CPE க்கு எதிரான இயக்கத்தை வலுப்படுத்தும் முயற்சியை கொண்டு, முழு அரசாங்கமும் இராஜிநாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தும் பிரச்சாரமாக அதை மாற்றாமல், தொழிற்சங்கத் தலைவர்கள் வில்ப்பனுக்கு தங்கள் ஆதரவை கொடுத்து இப்பிற்போக்கான கோலிச அரசாங்கம் விழாமல் முட்டுக் கொடுத்துள்ளனர். அவர்கள் முந்தைய நெருக்கடிக் காலங்களிலும், தொழிலாள தொகுப்பும் இளைஞர்களும் தங்கள் அடிப்படை உரிமைகள், தேவைகள் மீதான தாக்குதல்களில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள தெருக்களுக்கு வந்தபோதும் இப்படித்தான் நடந்து கொண்டனர்.

CPE க்கு எதிரான நேற்றைய ஆர்ப்பாட்டங்கள், பிரான்ஸ் முழுவதும் பல்லாயிரக்கணக்கான பல்கலைக்கழக, உயர்நிலைப் பள்ளி மாணவர்களை அணிதிரட்டியது.

பாரிசில் ஒரு மையப்படுத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் கூடவேண்டும் என்று மாணவர் சங்கங்கள் மாணவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தன. அனைத்து மாநிலங்களில் இருந்து ரயில் நிறைய மாணவர்கள் பாரிசில் நுழைந்து மையக்கூட்ட இடமான Place d'Italie யில் கூடினர்; இந்த இடம் காலையில் இருந்தே கூட்டம் நிறைந்து காணப்பட்டது; பின் அணிவகுப்பு les Invalides ஐ நோக்கி பிற்பகல் 2.30க்குப் புறப்பட்டது; 23,000 பேருக்கு மேல் நிறைந்திருந்தனர். ஒரு பெரும் பிரதிநிதித் தொகுப்பு Lyon இல் இருந்த வந்திருந்தது; அங்கு SNCF (தேசிய ரயில் நிறுவனம்) சலுகை விலையான 50 யூரோக்களில் பாரிஸ் சென்று வருவதற்கான பயணச்சீட்டுக்களை கொடுத்தது; அதே நேரத்தில் மாணவர்கள் இரயிலில் இலவசமாக பயணிப்பதற்கு எதிரான எச்சரிக்கையையும் கொடுத்தது.

பாரிசில் மூன்றாயிரம் போலிசார் குவிக்கப்பட்டிருந்தனர்; இவர்கள் அணிவகுப்பின் முடிவில் Inalides Esplanade ல் 200 முதல் 300 மாணவர்கள் வரையிலான குழுக்களுடன் பூசல்களைக் கொண்டனர். பல கார்கள் எரிக்கப்பட்டன; ஒரு கடையும் தீக்கிரையாக்கப்பட்டது. செய்தி ஊடகத் தகவல்களின்படி, வன்முறை போன்ற நிகழ்ச்சிகளில் ஈடுபடுவோரை கைதுசெய்வதற்கு போலீசாருக்கு "உறுதியான தெளிவான உத்தரவுகள்" கொடுக்கப்பட்டிருந்தன.

பாரிசில் WSWS நிருபர் குழு ஒன்று மூத்த தொழிலாளர்கள் கிட்டத்தட்ட பங்கு பெற்றிராத நிலையைக் கண்டனர்; FSU என்று கல்விப்பணியாளர்களின் முக்கிய தொழிலாளர் கூட்டமைப்பின் பிரதிநிதிகள்தான் சிறு அளவில் அட்டைகளையும் மற்ற தொழிற்சங்க முழக்க அட்டைகளையும் ஏந்தி வந்திருந்தனர். ஆனால் Amiens ல 3000 இளைஞர்கள் அணிவகுத்துச் சென்றதோடு, அவர்கள் தொழிற்சங்கங்களினால் முற்றிலும் கைவிடப்பட்டிருந்தனர். Amiens ஊர்வலத்தின் தலைமையில் ஒரு மாணவர் ஒற்றை CGT கொடியை ஏந்தியும், மற்றொருவர் FO கொடியையும் ஏந்தியும் வந்தனர். ஊர்வலத்திற்கு தலைமை தாங்கியவர் ஒரு நீண்ட பதாகையை ஏந்தி வந்தார்: அதில் "CPE ஐ திரும்பிப் பெறுக -- பாதுகாப்பற்ற வேலைத்தன்மைக்கு எதிராக - உண்மையான நீதிக்காக" என்று எழுதப்பட்டிருந்தது.

பெரும்பாலான இளைஞர்கள் எந்த தொழிற்சங்க அல்லது அரசியல் தொடர்பையும் காட்டவில்லை; தாங்களே தன்னார்வத்துடன் தங்களுடை உயர்நிலை அல்லது பல்கலைக்கழக குழுவினருடன் அல்லது நண்பர்களுடன் வந்திருந்தனர். அரசியல் முழக்கங்கள் எதுவும் எழுப்பப்படவில்லை; இடையறாக் கோரிக்கையான CPE திருப்பப் பெற வேண்டும் என்று மட்டும்தான் கூறப்பட்டது.

தீவிர இடது என்று கூறிக் கொள்ளும் LCR (League Communiste Revolutionnarie), LO (Lutte Ouviere-Workers Fight), அல்லது PT (Parti des Travailleurs -தொழிலாளர் கட்சி) ஆகியவை அரசாங்கம் ராஜிநாமா செய்யவேண்டும் எனக் கோரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. CPE திரும்பப் பெற வேண்டும் என்பதோடு தம் கோரிக்கையை அவை நிறுத்திக் கொண்டுள்ன; இதையொட்டி அரசாங்கத்திற்கும் தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கும் CPE எதிர்ப்பு இயக்கத்தை திரித்து முறியடிக்க போதிய ஊக்கம் கொடுக்கப்பட்டுள்து.

இளைஞர்களும் தொழிலாளர்களும் இத்தகைய அமைப்புக்கள் மீது எந்த நம்பிக்கையையும் வைக்க இயலாது; அவை பிரெஞ்சு முதலாளித்துவ அமைப்பின் நலன்களை காப்பதில்தான் செயல்பட்டு, முதலாளித்துவம் உலகந்தழுவிய உலகப் பொருளாதார முறையில் அதன் போட்டியாளர்களுடன் போட்டித் தன்மையில் உயர்ந்து நிற்பதைத்தான் தக்கவைக்க முயலுகின்றன. இலாப அமைப்புக்கு எதிராக உலகத் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்தும் ஒரு முன்னோக்கை அபிவிருந்தி செய்வது அவர்களுக்கு தேவைப்படுகிறது.

பிரான்சிலும், சர்வதேச அளவிலும், அனைத்து முதலாளித்துவக் கட்சிகள் மற்றும் போலித்தனமான இடது அமைப்புக்களில் இருந்தும் சுயாதீனமான முறையில் சர்வதேச, சோசலிச முன்னோக்கை அடிப்படையாக கொண்ட புதிய கட்சியை கட்டியமைக்க WSWS போராடிவருகிறது; அப்பொழுதுதான் உலகின் செல்வமும், மிச்சிறு சிறுபான்மையினரின் பைகளை நிரப்புவதற்கு அல்லாமல், ஜனநாயகப் பொது உடைமையின் கீழ், மனிதகுல தேவைகளை நிறைவு செய்வதற்கு பயன்படுத்தப்படும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved