World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஐரோப்பா : பிரான்ஸ்France: Political issues in the fight against the government's "First Job Contract" பிரான்ஸ்: அரசாங்கத்தின் "முதல் வேலை ஒப்பந்தத்திற்கு" எதிரான போராட்டத்தில் அரசியல் பிரச்சினைகள் Statement of the World Socialist Web Site editorial board பிரான்ஸ் முழுவதும் பாரிசிலும் ஏனைய நகரங்களிலும் சனிக்கிழமை நடைபெற இருக்கும் பெரும் மக்கள் ஆர்ப்பாட்டங்களில் கீழ்க்கண்ட அறிக்கை வழங்கப்பட உள்ளது. ஒரு PDF கோப்பாகவும் இது பிரசுரிக்கப்பட்டுள்ளது. WSWS உடைய வாசகர்கள், ஆதரவாளர்கள் அனைவரையும் துண்டுப்பிரசுரத்தை பதிப்பு செய்து ஆர்ப்பாட்டங்களிலும், பள்ளிகள், பல்கலைக் கழகங்கள் மற்றும் வேலைபார்க்கும் இடங்களிலும் வினியோகிக்குமாறு கேட்டுக் கொள்ளுகிறோம். கோலிச அரசாங்கத்தின் CPE க்கு (முதல் வேலை ஒப்பந்தத்திற்கு) எதிராக இளைஞர்களும், தொழிலாளர்களும் நடத்தும் போராட்டம் ஐரோப்பா முழுவதும் வேலைகள், ஊதியங்கள், பணி நிலைமைகளுக்கு எதிரான தாக்குதல்கள் நடத்தப்படுவதற்கு பெருகிய முறையில் இளைஞர்கள், தொழிலாளர்களிடையே பெருகி வரும் எதிர்ப்பை நிரூபணம் செய்துள்ளது. ஐரோப்பா, மற்றும் உலகம் முழுவதும் உழைக்கும் மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளின் மையத்தானத்திற்குத்தான் இப்பிரச்சினை வழிநடத்திச் செல்கிறது. வணிகம் போட்டித்திறன் உடையதாக இருக்க வேண்டும் என்ற கூற்றின் அடிப்படையில், அரசாங்கங்கள் இளைய தொழிலாளர்களை வயதான தொழிலாளர்களுக்கு எதிராக, புலம்பெயர்ந்தோரை நாட்டிலேயே இருப்போருக்கு எதிராக, கிழக்கில் உள்ள குறைவூதிய தொழிலாளர்களை மேற்கில் இருக்கும் தொழிலாளர்களுக்கு எதிராக என்று மோத விட்டுக் கொண்டிருக்கின்றன. பிரதம மந்திரி வில்ப்பனுடைய தவறான தர்க்கத்தின்படி, இளம் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை தோற்றுவிப்பதற்காக, முதலாளிகளுக்கு அவர்களை பணிநீக்கம் செய்வதில் முழு உரிமை அளிக்கப்பட்டுள்ளது. இதை வேறொரு முறையில் சொல்வதாயின், உங்களுக்கு கொடுக்கப்படும் பணி நிலைமைகளை, Zola காலத்திய நிலைமைகளை ஏற்றுக் கொள்ளுங்கள் அல்லது நிரந்தர வேலையின்மை என்ற நிலைக்கு சமரசம் செய்து கொண்டுவிடுங்கள்! எனக் கூறுவதைப் போல்தான் இது உள்ளது. CPE, 26 மற்றும் அதற்கு குறைந்த வயதுடைய தொழிலாளர்களுக்கு எந்தவித சட்டப் பாதுகாப்பும் இல்லாமல் செய்துள்ளது. ஆனால் Medef போன்ற பெருவணித்தை பொறுத்தவரையில் இதுவும் போதவில்லை. Medef இன் தலைவர் CPE மாதிரியான ஒப்பந்தம் அனைத்து தொழிலாளர்களுக்கும் வேண்டும் என்று விரும்புகிறார். CPE ஆனது தொழிலாள வர்க்கம் முழுவதற்குமே இதேபோன்ற தாக்குதல்களுக்கு ஒரு முன்னோடியை அமைக்கும் என்பதைத்தான் உறுதிப்படுத்துகிறது.மாணவ வேலைநிறுத்தங்கள், பணிமனைகள் ஆக்கிரமிப்பு ஆகிய அலைபோன்ற செயல்கள், தொழிலாளர்களின் பரந்த பிரிவுகளுடைய தீவிர ஆதரவிற்கு உட்பட்டுள்ளன. போருக்கு எதிரான மற்றும் ஜனநாயக உரிமைகள் மற்றும் சமூகநிலைமைகளை பாதுகாப்பதற்கான ஒரு பொதுப்போராட்டத்தில் ஐரோப்பா மற்றும் சர்வதேச ரீதியாக உள்ள உழைக்கும் மக்களை ஐக்கியப்படுத்துவதன் மூலம் ஆளும் உயரடுக்கினரின் புலம்பெயர்ந்தோர் விரோத உணர்வை தூண்டும் முயற்சிகளை தோற்கடிப்பதற்கான திறன் இதற்கு உள்ளது என்பதை இது காட்டுகிறது. ஜனாதிபதி சிராக் மற்றும் பிரதம மந்திரி வில்ப்பனுடைய அரசாங்கத்தின் தாக்குதலுக்கு எதிரான இப்போராட்டத்தில், பிரான்சில் உள்ள தொழிலாளர்களும், இளைஞர்களும் உலகெங்கிலும் உள்ள தங்கள் சகோதர, சகோதரிகளுக்கு ஒரு வழிகாட்டும் நிலையில் உள்ளனர். ஆனால், 1968, 1995 ன் பெரும் வேலைநிறுத்தங்கள் தொடங்கி கடந்த இரண்டாண்டு கால ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வெளிநடப்புக்கள் வரையான கசப்பான அனுபவங்கள் நிரூபித்துள்ளது போல், எதிர்ப்பு மட்டுமே தொழிலாள வர்க்கத்தின் மீது பெருவணிக/அரசாங்க தாக்குதல்கள் தொடுப்பதை தோற்கடித்துவிட முடியாது. வாழ்க்கைத் தரத்தை காப்பதற்கும், ஜனநாயக உரிமைகளை காப்பதற்கும், இத்தாக்குதலுக்கு ஆதாரமான இலாப முறைக்கு எதிராக சர்வதேச அளவில் தொழிலாளர்களை ஒரு பொதுப் போராட்டத்தில் இணைக்கக்கூடிய அரசியல் முன்னோக்கு தேவையாகும். தற்பொழுது திரண்டெழுந்துள்ள இவ்வியக்கத்தின் நனவான மற்றும் பிரகடனப்படுத்தப்பட்ட இலக்கு அரசாங்கத்தின்மீது அழுத்தம் கொடுப்பது அல்லது அதன் போக்கை மாற்றுவது என்பதோடு மட்டும் அல்லாமல், அதை இராஜிநாமா செய்யக் கட்டாயப்படுத்துவதாகவும் இருக்க வேண்டும். ஆனால் இது ஒரு வினாவை எழுப்புகிறது. கோலிச அரசாங்கம் எத்தகைய அரசாங்கத்தால் பதிலீடு செய்யப்பட வேண்டும்? மித்திரோனில் இருந்து ஜோஸ்பனுடைய பன்முக இடது அரசாங்கம் வரை ஏற்படுத்திய கசப்பான அனுபவங்களானது, கோலிசவாதிகளை, சோசலிச அல்லது கம்யூனிஸ்ட் கட்சிகளின் அரசாங்கங்களால் பதிலீடு செய்வதென்பது சரியான விடையாகாது என்பதை நிரூபிக்கிறது. இக்கட்சிகள் வருங்காலத்தில், கடந்த காலத்தில் செய்ததைப் போலவே, காட்டிக் கொடுக்கும்; ஏனெனில் இறுதியில் அவை இலாப அமைப்புக்கு எதிரான ஒரு புரட்சிகர போராட்டத்தை எதிர்க்கின்றன. தன்னுடைய அரசாங்கம் பின்வாங்கும் நோக்கத்தைக் கொண்டிருக்கவில்லை என்பதை வில்ப்பன் தெளிவுபடுத்திவிட்டார். அவர் சோர்போன் மற்றும் Collège de France ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு CRS கலவரத்தடுப்பு போலீசாரை அனுப்பி வைத்தார்; TF 1 க்கு ஞாயிறன்று கொடுத்த பேட்டியில், CPE ஐ திணிப்பதற்கான அவரது உறுதிப்பாட்டை வலியுறுத்தினார். அரசியல் ஸ்தாபனத்தின் முழு ஆதரவும், சர்வதேச பெரு வணிகத்தின் முழு ஆதரவும் அவருக்கு உள்ளது. பிரெஞ்சு மற்றும் ஐரோப்பிய முதலாளித்துவ வர்க்கத்தை பொறுத்தவரையில், அமெரிக்க ஜப்பானிய, நீண்டகால பொருளாதார போட்டியாளர்கள் மற்றும் அண்மையில் வெளிவந்துள்ள சீன, இந்திய போட்டியாளர்களுக்கு எதிராக வெற்றி அடைவதற்கு ஒரே வழி ஐரோப்பிய தொழிலாள வர்க்கம் சுரண்டப்படுவதை தீவிரப்படுத்துவது, அதன் வாழ்க்கை நிலைமைகளை தகர்ப்பதை தீவிரப்படுத்துவது என்பதுதான். ஐரோப்பா முழுவதும் அரசாங்கங்கள் இதேவகையான "உழைப்பு சந்தை சீர்திருத்தங்களை" திணித்து வருகின்றன. தொழிலாளர் வாழ்க்கைத் தரங்கள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான இந்த உலகுபூராவுமான தாக்குதல் அமெரிக்க, ஐரோப்பிய ஆளும் உயரடுக்குகள் ஏகாதிபத்திய போர் மற்றும் நவீன காலனியாதிக்க ஆக்கிரமிப்புக்கு திரும்புதலுடன் பிரிக்கவியலாத பிணைப்பை கொண்டுள்ளது. அமெரிக்க-பிரிட்டிஷ் படைகள் கூட்டாக ஈராக்கில் படையெடுப்பு நிகழ்த்தி மூன்று ஆண்டுகள் கடந்த பின்னரும் கூட, ஜேர்மன் சமூக ஜனநாயகக் கட்சியினரும் பசுமைக் கட்சியினரும் இப்போர்க்குற்றத்தில் இரகசிய ஒத்துழைப்பாளர்கள் என்று அம்பலப்படுத்தப்பட்டுள்ளனர்; பகிரங்கமாக போரைக் கண்டித்துப் பேசினாலும், சிராக் ஏகாதிபத்தியத்தியப் போருக்கு எதிர்ப்பு காட்டிய அனைத்து நடிப்புக்களையும் கைவிட்டுவிட்டு, ஈரானுக்கு எதிரான வாஷிங்டனுடைய ஆத்திரமூட்டுதல்கள் மற்றும் அச்சுறுத்தல்களுடன் சேர்ந்துகொண்டு, பிரான்சின் அணுவாயுதங்களும் கட்டவிழ்த்துவிடப்படும் என்று எச்சரித்துள்ளார். நாட்டிற்குள் இத்தாக்குதல்களை எதிர்ப்பது என்பது, வெளியுலகில் நடத்தப்படும் சட்டவிரோத, குற்றம் சார்ந்த நடவடிக்கைகளை எதிர்க்காமல் இயலாததாகும். அமெரிக்க, பிரிட்டிஷ் மற்றும் ஏனைய வெளிநாட்டுப் படைகளும் ஈராக், ஆப்கானிஸ்தானில் இருந்து நிபந்தனை அற்ற முறையில் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்ப வேண்டியதும், ஈரானுக்கு எதிரான இராணுவ ஆக்கிரமிப்பு முயற்சிகளுக்கான தயாரிப்புக்களை கண்டிக்கவேண்டியதும் இன்றியமையாததாகும். CPE க்கு எதிரான போராட்டத்தில், தொழிற்சங்கங்கள் மீதோ தம்மை இடது என அழைத்துக் கொள்ளும் கட்சிகள் மீதோ எவ்வித நம்பிக்கையும் கொள்ளக்கூடாது. CPE நடைமுறைப்படுத்தப்படும் என்று வில்ப்பன் உறுதிமொழி கொடுத்துள்ள போதும், தொழிற்சங்க கூட்டமைப்புக்கள் அனைத்தும் இளைஞர் வேலைபற்றி முதலாளிகள், அரசாங்க மந்திரிகளுடன் விவாதிக்க விடுத்துள்ள அழைப்பை ஏற்றுள்ளன. மீண்டும் ஓய்வூதியம், கல்வி "சீர்திருத்தங்கள்" இவற்றிற்கு எதிரான போராட்டத்தில் நடந்ததைப் போலவே தொழிற்சங்கங்கள், தங்களுடைய சேவைகளை ஆளும் உயரடுக்கினருக்கு கொடுத்து, தொழிலாளர்களை தனிமைப்படுத்தி மூச்சுத்திணற வைத்து ஒடுக்குவதற்கான வழிகளை வழங்குகின்றன.சோசலிஸ்ட் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் இருபத்தி ஐந்து ஆண்டுகளாக பெரும் வணிகம் கோரும் சிக்கன நடவடிக்கைகளை சுமத்தும் முக்கிய பங்கைத்தான் செய்து வருகின்றன; இது முதலில் மித்திரோன் கீழும் பின்னர் ஜோஸ்பன் ஆட்சிக்கும் கொடுத்த ஆதரவுகளாக இருந்தன. CPE க்கு வழிவகுத்த, பல குறைவூதிய தொழிலாளர் திட்டங்களை அவர்கள்தான் ஆரம்பித்து வைத்தனர். உத்தியோகபூர்வ இடதின் மற்றொரு அரசாங்கமும் இதே காட்டிக்கொடுக்கும் துரோகப் பங்கிற்கு குறையாத ஒன்றைத்தான் புரியும். "நவீன- தாராளவாதம்" பற்றிய அவற்றின் விமர்சனங்கள் ஒரு புறம் இருக்க, இக்கட்சிகள் ஒரு தேசிய, சீர்திருத்தவாத முன்னோக்குடன் பிணைந்தவையாகும்; அது தவிர்க்கமுடியாமல் ஆளும் உயரடுக்கின் கோரிக்கைகளுக்கு முன் நிபந்தனையற்ற வகையில் சரணடைவதற்குத்தான் வழிவகுக்கும். இவை 1960கள், 1970 களில் இருந்த தேசிய ரீதியான அடிப்படையை கொண்ட சீர்திருத்தக் கொள்கைகளுக்கு மீண்டும் செல்லவேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்து அரசாங்கத்தின் கொள்கைகளை குறை கூறுகின்றன. இந்த பூகோளமயமாக்கல் சகாப்தத்தில், இது ஒரு போலித் தோற்றமாகும்; ஏனெனில் அவையே அரசாங்க பொறுப்பேற்றவுடன் இத்தகைய கருத்துக்களை கட்டாயம் கைவிட்டுவிடுகின்றன. தொழிலாள வர்க்கம் மற்றும் இளைஞர்கள் மீதான தாக்குதலுக்கு எதிரான திறமையான போராட்டத்தின் ஆரம்பக் கட்டம், இத்தாக்குதல்களுக்கான ஆதாரம் முதலாளித்துவ அமைப்பு தன்னின் வரலாற்றுத் தோல்விதான் என்பதை அறிந்து கொள்ளுதே ஆகும். முதலாளித்துவம் பிரான்ஸ் அல்லது ஐரோப்பா அல்லது அமெரிக்காவில் மட்டும் நெருக்கடிக்கு ஆகவில்லை, உலகளாவிய முறையில் நெருக்கடியைக் கொண்டுள்ளது. ஏகாதிபத்திய இராணுவவாத முறையின் வளர்ச்சிக்கும் சர்வாதிகார வடிவமைப்புக்களுக்கு திரும்புவதற்கும் இதுதான் மூலகாரணமாக உள்ளது. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இணைய தள வெளியீடான உலக சோசலிச வலைத் தளம், அனைத்துவித தேசியவாத வகுப்புவாத வடிவங்களையும், இனவெறி அரசியலையும் எதிர்க்கிறது; அவை ஆளும் வர்க்கத்திற்கு அதன் பிரித்தாளும் மூலோபாயத்திற்குத்தான் உதவுகின்றன. உலகில் எப்பகுதியிலும் உழைக்கும் மக்களின் தேவைகளை தெளிவாகப் பேசக்கூடிய ஒரே வேலைத்திட்டம் சர்வதேச சோசலிசப் புரட்சி வேலைத்திட்டம்தான் என்று நாம் வலியுறுத்துகிறோம். தொழிலாளர்கள் உரிமைகள், வாழ்க்கைத் தரங்கள் மீதான உலகந்தழுவிய தாக்குதலுக்கு எதிரான போராட்டத்திற்கு சோசலிச முன்னோக்கை அடிப்படையாகக் கொண்ட தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச பரந்துபட்ட மக்கள் இயக்கத்தின் வளர்ச்சி தேவையாகும். அத்தகைய இயக்கம் அனைத்து நாடுகள், இனங்கள், மதங்களில் உள்ள தொழிலாளர்களை ஒருங்கிணைத்து, முழு ஊதியம் மற்றும் சம உரிமைகளுடன், தொழிலாளர்கள் விரும்பும் நாட்டில் வாழலாம், வேலை பார்க்கலாம் என்ற உரிமையை ஆதரிக்கும். அத்தகைய இயக்கம் கட்டாயம் ஜனநாயக, சமூக உரிமைகளை காத்திடுவதற்கு அயராமல் உழைக்கும், ஏகாதிபத்தியப் போரை எதிர்க்கவும் செய்யும். பெரிய நிதிய, தொழில்துறை, வணிக அமைப்புக்கள் ஜனநாயக மற்றும் பொது உடைமையின் கீழ் வரவேண்டும் என்று கோரும்; அப்பொழுதுதான் பொருளாதார வாழ்வானது, பெருவணிக இலாபம் மற்றும் தனியார் செல்வக் குவிப்பிற்கு கீழ்ப்படுத்தப்படாமல், வறுமையை அகற்றுவதற்கு சர்வதேச ரீதியாக மற்றும் அறிவார்ந்த முறையில் ஒழுங்கு செய்யப்படும் மற்றும் எல்லோருக்கும் கெளரவமான வாழ்க்கைத் தரங்களையும் வேலைப் பாதுகாப்பையும் அளிக்கும். ஐரோப்பாவிலுள்ள தொழிலாள வர்க்கம் அதன் சொந்த வேலைத்திட்டத்தின் கீழ், ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகள் என்ற வேலைத்திட்டத்தின் கீழ், ஐரோப்பிய ஒன்றியத்தின் முதலாளித்துவ கொள்கைகளுக்கு எதிராக கட்டாயம் ஐக்கியப்பட வேண்டும். உலக சோசலிச வலைத் தளத்தை படிக்குமாறும் அதற்கு ஆதரவு தருமாறும் இளைஞர்களையும் தொழிலாளர்களையும் நாம் அழைக்கிறோம். அன்றாடம் உலக நிகழ்வுகளுக்கு சோலிச முறையில் பகுப்பாய்வையும் நோக்குநிலையையும் வழங்கும் உலக சோசலிச வலைத் தளம், தொழிலாள வர்க்கத்தின் ஒரு சர்வதேச சோசலிய இயக்கத்தை கட்டியமைப்பதற்கான மிக முக்கியமான கருவியாகும். |