World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பால்கன்Mystery deepens over Milosevic's death Sordid end to "international justice" charade மிலோசெவிக் மரணம் பற்றிய புதிர் ஆழ்ந்த தன்மையை அடைகிறது "சர்வதேச நீதி" என்ற கேலிக்கூத்தின் பரிதாப முடிவு By Bill Van Auken முன்னாள் யூகோஸ்லாவிய ஜனாதிபதி சுலோபோடன் மிலோசெவிக், ஹேக் நகரத்தில் அவருடைய சிறை அறையில் திடீரென இறந்ததைச் சூழ்ந்த மாறுபட்ட கருத்துக்கள், நெதர்லாந்தில் பிரேத பரிசோதனைக்கு பின்னர் ஐ.நா. போர்க்குற்ற நடுவர்மன்ற அதிகாரிகள் தங்களுக்கு சாதகமாக கொடுக்கும் தெளிவற்ற அறிக்கைகளினால் அதிகமாயுள்ளன. டச்சு நச்சுப் பொருள் வல்லுனர் தொழுநோய், எலும்புருக்கி நோய்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்தான rifampicin 64 வயது மிலோசெவிக்கின் இரத்தத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், ஐ.நா. அதிகாரிகள், மிலோசெவிக் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் அல்லது அவருடைய மனைவியும் குழந்தைகளும் இப்பொழுது வசிக்கும் ரஷியாவில் மருத்துவம் பெறும் கோரிக்கையை வலுவடையச் செய்வதற்காக வேண்டுமென்றே தன்னுடைய உடல் நலத்திற்குப் பாதிப்பு ஏற்படும் வகையில் நடந்து கொண்டிருக்கலாம் என்று கூறியுள்ளனர். உயர் இரத்த அழுத்தம், இதய வியாதிகளுக்காக மிலோசெவிக் இப்பொழுது எடுத்துக் கொள்ளும் மருந்துகளை முறிக்கும் வகையில் ரிபாம்பிசின் செயல்படும் தன்மை உடையது. பிரேத பரிசோதனை முன்னாள் யூகோஸ்லாவிய ஜனாதிபதி இதயப் பாதிப்பால் இறந்துள்ளார் என்ற முடிவைக் கூறியுள்ளது. தன்னுடைய கட்சிக்காரர் எந்த மருந்தையும் தானே போட்டுக்கொள்ளவில்லை என்று மிலோசெவிக்கின் வழக்கறிஞர் வலியுறுத்தியுள்ளார்: "தொழுநோய், எலும்புருக்கி நோய்க்காக எந்த மருந்தையும் தான் பயன்படுத்தவில்லை என்றும் திரு மிலோசெவிக் கூறினார்" என்று திங்களன்று வழக்கறிஞர் Zdenko Tomanovix கூறியுள்ளார். இறப்பதற்கு ஒரு நாள் முன்பு ரஷ்ய அரசாங்கத்திற்கு மிலோசெவிக் அனுப்பியுள்ள கடிதம் சிறையில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டதை மேற்கோளிட்டு, தன்னுடைய கட்சிக்காரருக்கு விஷம் கொடுத்திருக்கக் கூடும் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். "ஐ.நா. அமைப்பின் கீழ் இயங்கிவரும் நிறுவனத்தின் குற்றம் சார்ந்த நடவடிக்கைகளில் இருந்து என்னைக் காப்பாற்றுவதற்கு உங்களுடைய உதவியை நாடி இக்கடிதத்தை எழுதுகிறேன்" என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. டோமனோவிக் மேலும் கூறியதாவது: "தனக்கு விஷம் கொடுக்கப்பட்டு வருகிறது என்று திரு மிலோசெவிக் கூறியது நியாயமானதா இல்லையா என்பது ஒரு பிரச்சினை. ஆனால் மையப் பிரச்சினை திரு. மிலோசெவிக்கிற்கு தக்க மருத்துவ பாதுகாப்பு அளிக்கப்பட்டதா இல்லையா என்பது ஆகும்." இதே குற்றச் சாட்டு ஐ.நா. போர்க் குற்றங்கள் நடுவர்மன்றத்திற்கு எதிராக சேர்பிய ஜனாதிபதி போரிஸ் டாடிக்காலும் எழுப்பப்பட்டது. "ஐயத்திற்கு இடமின்றி, மிலோசெவிக் சற்று உயர்தர மருத்துவ பாதுகாப்பை கோரியிருந்தார். அந்த உரிமை அனைத்து போர்க் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்." 2000ம் ஆண்டில் மிலோசெவிக் கவிழ்ந்ததற்கான ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து பதவிக்கு வந்த டாடிக் ஐ.நா. நீதிமன்றத்தை மிலோசெவிக்தான் அவருடைய மரணத்திற்குக் காரணம் என்று கொடுத்த அறிக்கைக்காக குறைகூறியுள்ளார். "நான் நினைக்கிறேன், நடந்ததற்கு அவர்கள்தான் பொறுப்பு" என்று அவர் கூறியுள்ளார். ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்ஜீய் லாவரோவ், தன்னுடைய அரசாங்கம் ஐ.நா. மூலம் மிலோசெவிக் பிரேதத்தின் மீது நடத்தப்பட்ட பரிசோதனையை நம்பவில்லை என்றும் அவருடைய உடலை சோதிக்க ஹேக்கிற்கு தன் அரசாங்கத்தின் மருத்துவர் குழு ஒன்றை அனுப்புவதாகவும் கூறியுள்ளார். நீதிமன்றத்தின் முடிவான ரஷ்யாவில் மருத்துவ உதவி நாடிய மிலோசெவிக்கின் கோரிக்கை மறுக்கப்பட்டது குறித்தும் மாஸ்கோ வருந்துவதாக அவர் கூறினார். "இதைத் தொடர்ந்து வெகு விரைவில் மிலோசெவிக் இறந்தது எச்சரிக்கை மணியைத்தான் அடித்துள்ளது" என்று அவர் கூறினார். ஐ.நா. நீதிமன்றத்தின் தலைமை வழக்கறிஞரான Carla Del Ponte மரணம் இயற்கைக் காரணங்கள் அல்லது தற்கொலையின் விளைவு என்று வலியுறுத்தினாலும், இவருடைய சரிந்து கொண்டிருக்கும் உடல் நலம் அடிக்கடி நடந்த மருத்துவப் பரிசோதனைகள் மூலம் ஏன் கண்டுபிடிக்கப்படவில்லை என்று வினவினார். "திடீரென்று அவருடைய நிலைமை மோசமாகிவிட்டது என்று எந்த டாக்டரும் கண்டுபிடிக்காமல் இறந்தது என்பது நடக்கக் கூடியதுதான் என்றாலும், அது மிகவும் வினோதமானது" என்று அவர் தெரிவித்தார். தற்கொலை என்பது நிகழ்வதற்கான வாய்ப்பை அதிகம் கொண்டிருக்கவில்லை. போர்க்குற்றங்கள், இன அழிப்பு என்று அவர்மீது சாட்டப்பட்ட 66 குற்றங்களுக்கு எதிராகத் தன்னுடைய விடையை தயாரிக்கும் முயற்சியில் முழுமையாக மிலோசெவிக் ஈடுபட்டிருந்தார். 1999ல் யூகோஸ்லாவியா மீது வலுவான ஒருபுறப் போரை நடத்தியதற்காகவும், அமெரிக்க - நேட்டோ போருக்கு முந்தைய ஆண்டுகளில் நாட்டை துண்டாடிய முயற்சிகளுக்கு ஆதரவு கொடுத்ததற்காகவும் அமெரிக்கா மற்றும் மேலை வல்லரசுகள் மீது குற்றச்சாட்டுக்களை கொண்டுவருவதற்கான மேடையாக விசாரணையை பயன்படுத்தி, தன்மீது குற்றம் சாட்டியவர்கள் மீது இழுத்துவிடும் முயற்சியை அவர் மேற்கொண்டிருந்தார். தன்னுடைய பாதுகாப்பு உரை சேர்பியாவில் நேரடி ஒளி/ஒலி பரப்பு ஆகிக் கொண்டுவருகிறது என்பதை மிலோசெவிக் நன்கு அறிந்திருந்தார்; நீதிமன்றத்தின் நெறியை அவர் தாக்கிப் பேசியதற்கு கணிசமான ஆதரவு இருந்தது. அரசியலிலும் அவர் தொடர்ந்து, சேர்பிய சோசலிசக் கட்சி மூலம் வலுவாக ஈடுபாடு கொண்டிருந்தார், அதன் கொள்கைகள் பற்றி அக்கட்சி அவரிடம் வாடிக்கையாக கலந்து ஆலோசித்து வந்தது. இறப்பதற்கு முந்தைய வாரங்களில், பால்கன் பகுதிகளில் போர் ஏற்பட்டிருந்த காலம் முழுவதும் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த பில் கிளின்டனையும் ஓய்வு பெற்ற தளபதி, நேட்டோ படைகளின் தலைவர், 78 நாட்கள் தொடர்ந்து குண்டுவீச்சுக்கள் நடத்தி ஆயிரக்கணக்கான உயிர்களைக் குடித்தும் நாட்டின் உள்கட்டுமானத்தை தகர்க்கவும் செய்திருந்த வெஸ்லி கிளார்க்கையும் சாட்சியம் கூற கூண்டிற்கு அழைக்க வேண்டும் என்று அவர் நடுவர்மன்றத்தை கோரியிருந்தார். முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியும், முன்னாள் தளபதியும், --- இருவருமே முக்கிய ஜனநாயகக் கட்சியினர் -- மிலோசெவிக்கின் திடீர் மரணத்தால் பலன் அடைந்தவர்கள் ஆவர். மிலோசெவிக்கை "பால்கன் பகுதியின் கொலையாளி" என்ற செய்தி ஊடகங்கள் கொடுத்த பெருமளவு குறிப்புக்களுடன் அவருடைய மரணம் "நீதியை" ஏமாற்றிவிட்டது போன்ற அறிவிப்புக்கள் வந்தபோதிலும், கிளிண்டன் நிர்வாகம் சரியாக ஏழு ஆண்டுகளுக்கு முன்பு தொடக்கிய போரைப் பற்றி திறனாய்ந்து கூறும் ஒரு சொற்றொடர்கூட வரவில்லை. ஒரு தாராளவாதிகளின் போராக அது இருந்தது; கிளிண்டன் நிர்வாகத்தின் அதிகாரிகள் "மனிதாபிமானத்தை" நிலைநாட்டுவதை நோக்கம் கொண்ட முதல் இராணுவத் தலையீடு என்று தற்பெருமையாக பறை சாற்றியிருந்தனர்; இப்போர் மனித உரிமைகளைக்காப்பதற்கும் இனக் கொலைகளை தவிர்ப்பதற்கும் மேற்கொள்ளப்பட்டது என்றும் கூறினர். இப்போலிக் காரணங்கள் செய்தி ஊடகத்தின் ஆதரவுடன் நல்ல முறையில் விளம்பரப்படுத்தப்பட்டு அமெரிக்க தலையீட்டிற்கு ஆதரவை தோற்றுவித்தன; அடுத்த பெரிய அமெரிக்க ஆக்கிரமிப்பு போரில் "பேரழிவு ஆயுதங்கள்" பற்றிய அமெரிக்கப் பிரச்சாரம் இதேபோன்ற பங்கைத்தான் கொண்டிருந்தது. பிரிட்டிஷ் தாராளவாதத்தின் ஊதுகுழலும் மற்றும் "மனிதாபிமான ஏகாதிபத்தியம்" என்ற கருத்திற்கும் ஆதரவு தரும் கார்டியன் செய்தித்தாள் தன்னையும் அறியாமல் திங்களன்று முன்னாள் யூகோஸ்லாவிய ஜனாதிபதியின் மரணத்தைப் பற்றிய தலையங்கத்தில் வெளியிட்ட கருத்தாவது: "மிலோசெவிக் விட்டுச் செல்லும் அளிப்பு... அவர் விரும்பியதற்கு முற்றிலும் மாறானதாக இருக்கும். அவருடைய செயல்கள் 90 களில் முதல் ஈராக்கியப் போருக்குப் பின்னர் மற்றும் பால்கன் பூசல்கள் மற்றும் ருவன்டா படுகொலைகளுக்கு பதிலளிக்கும் வகையில் தாராளவாதிகள் தலையிடுவதற்கான சிந்தனையை நிறுவ உதவின. சேர்பியாவின் அண்டை நாடுகளின் விவகாரங்களில் வன்முறைத் தலையீடு கொள்ளலாம் என்று கருதிக்கொண்டு, சேர்பியாவிற்கு எதிராக பல தொடர்ந்த தூண்டுதல் தலையீடுகளை மேற்கொள்வதில் அவர் முடிவுற்றது இறைமையோ, உள்நாட்டுப்போர் பற்றிய போலி வாதங்களோ தன்னுடைய சொந்த மற்றும் அண்டை நாட்டு மக்களுக்கு எதிராகக் குற்றம் புரியும் தலைவரை அல்லது ஒரு ஆட்சியைக் காப்பாற்ற முடியாது என்ற கொள்கையை உறுதிப்படுத்தியுள்ளன." தங்களுடைய நலன்களை திணிக்க இராணுவ வலிமையை பயன்படுத்தி சிறிய தேசிய நாடுகளின் இறைமையைப் பெரிய ஏகாதிபத்திய சக்திகள் அசட்டை செய்யலாம் என்ற இந்த "கொள்கை" மிலோசெவிக் விசாரணையின் மூலம் சர்வதேச நெறிப்படுத்தப்படலாம் போலும்; ஏற்கனவே இது அவர் இறக்கும்போது ஐந்து ஆண்டு காலத்தில் நுழைந்துவிட்டது. ஒரு நாட்டின் தலைவர் விசாரணைக்கு உட்படுத்தப்படுவது இத்தகைய வகையில் இதுதான் முதல் தடவை ஆகும்; ஏகாதிபத்திய சக்திகள் தாம் போர்க்குற்றவாளிகள் என்று கருதுவோர் மீது தீர்ப்புக் கூற அமரும் உரிமையை நிலைநாட்ட நோக்கம் கொண்டதாகும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தவிர்க்கமுடியாத நிலையில் இச்சக்திகளின் முன்னாள் நண்பர்களாவர்; அதேவேளை, எஞ்சிய சக்திகள் அத்தகைய குற்றங்களிலிருந்து தங்களை முற்றிலும் விதிவிலக்காக்கிக் கொள்கின்றன. எப்படியும், விசாரணை சங்கடத்தைக் கொடுத்த ஒரு காட்சியாக மாறி, செய்தி ஊடகத்தால் பெரிதும் புறக்கணிக்கப்பட்டு பின்னர் அமெரிக்கத் தூண்டுகோலில் மற்றொரு முன்னாள் வாஷிங்டன் நண்பர் சதாம் ஹுசைன்மீது நடக்கும் விசாரணையினால் ஒதுக்கப்பட்டுவிட்டது. மிலோசெவிக் போர்க்குற்றங்களுக்கு உத்திரவிட்டார் என்று அடித்துக் கூறும் சாட்சியங்களை குற்றம் சுமத்தும் வழக்கறிஞர்களால் கொண்டுவர முடியவில்லை. விசாரணை பெரிதும் அரசியல் குற்றச்சாட்டைக் கொண்டிருந்து, முன்னாள் ஜனாதிபதி 1990 களில் யூகோஸ்லாவியா உடைந்தவுடன் நிகழ்ந்த படுகொலைகளுக்குப் பொறுப்பாக இருந்தார் என்று கூறும் வடிவமைப்பைக் கொண்டிருந்தது. இந்தத் தத்துவத்தின்படி வசதியாக ஏகாதிபத்திய சக்திகள் மீது குற்றம் எழாது; அதிலும் குறிப்பாக ஜேர்மனி, அமெரிக்கா ஆகியவற்றின் மீது எழாது; ஏனெனில் நாட்டின் பிளவை அவை இனக்குழு-தேசியவாத வகைகளில் கொண்டுவரப் பெரிதும் முயன்றிருந்தன; இந்த வழிவகையில் அவர்கள் தவிர்க்க முடியாத தூண்டிவிடப்படும் உள்நாட்டுப் போரைப் பற்றிச் சிறிதும் கவலைப்படவில்லை. இன அடிப்படையில் ஏராளமான மக்கள் கொலை செய்யப்பட்டது பற்றி, வாஷிங்டனுடைய அறநெறி வெறுப்புணர்வு ஒரு தேர்வு முறையைக் கொண்டிருந்தது. 1999ல் யூகோஸ்லாவியாவிற்கு எதிராக போரைக் கொண்டுவருவதற்கு முக்கிய காரணத்தை அளித்திருந்த கோசோவாவில் மிகைப்படுத்திக் கூறப்பட்ட "இன அழிப்பு" என்பது வாஷிங்டனால் பெரும் "வெற்றி" என்று கருதப்பட்டது. கிளின்டன் நிர்வாகத்தில் சிலர் மூத்த புஷ் எட்டு ஆண்டுகளுக்கு முன் மேற்கொண்ட போருடன் ஒப்பிட்டுப் பெருமைப்பட்டுக் கொண்டனர்; தாங்கள் ஈராக்கில் கூடுதலான வெற்றியைப் பெற்றிருந்திருப்போம் என்றும் கூறிக் கொண்டனர். உண்மையில், அரசியல் உறுதித் தன்மை, மனித உரிமைகள் அல்லது இனப் படுகொலையை நிறுத்துதல் என்ற நிலைப்பாட்டில் இருந்து பார்த்தால், அமெரிக்கத் தலையீடு பேரழிவு தொடர்வதற்குத்தான் வழிவகை செய்தது: கால் மில்லியன் சேர்பிய இனத்தினர் கோசாவாவில் இருந்த தங்களுடைய இல்லங்களில் இருந்து துரத்தியடிக்கப்பட்டனர். இன்னும் பெயரளவில் சேர்பியாவின் பகுதியாக இருக்கும் அம்மாநிலத்தில் உள்ள அல்பானிய இனம் சாரா சிறுபான்மையினர், அமெரிக்கத் தலையீடு அமெரிக்க ஆதரவு உடைய கோசோவா விடுதலை இராணுவம் கொள்ளைக் கும்பல்களுடன் சேர்ந்து கொண்ட அடிப்படையில் ஒரு அரசாங்கத்தைத் தொடங்கியதில் இருந்து "இடைவிடா வன்முறையை" எதிர்கொள்ளுகின்றனர். கிளிண்டன் நிர்வாகத்தால் 1999ல் "மனித உரிமைகளுக்கான" போர் தொடக்கப்பட்டதும், "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" என்று நான்கு வருடங்களுக்கு பின்னர் புஷ் நிர்வாகத்தால் தொடக்கப்பட்டதும் இரு வேறுபட்ட தன்மையுடைய போர்கள் அல்ல; உலகின் புவிசார் அரசியல் ரீதியான மூலோபாயப் பகுதிகளில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மேலாதிக்கத்தை நிலை நிறுத்துவதற்கு அமெரிக்க இராணுவ சக்தி பயன்படுத்தப்படலாம் என்ற கொள்கை வளர்ச்சியின் தொடர்ச்சியான கட்டங்களேயாகும். இரு நிகழ்வுகளுக்கும் இடையே முக்கியமான அரசியல் வேறுபாடு உண்டு என்றால், அது கிளிண்டன் நிர்வாகம் குட்டி முதலாளித்துவ தாராளவாதிகள் மற்றும் இடதுகளின் நம்பகத்தன்மையை பயன்படுத்திக் கொண்டு இராணுவ சக்தி ஒரு சிறிய, வரலாற்றளவில் அடக்கப்பட்ட நாட்டிற்கு எதிராகப் பயன்படுத்தப்படுவதற்கு "அறநெறி" தன்மையைக் கட்டமைத்ததாகும். உண்மையில், பால்கன்களில் தலையீடு என்பது, இதைத் தொடர்ந்து வர இருந்த ஈராக்கிற்கு எதிரான போரில் இருந்ததைப் போலவே, உலகச் சந்தைகளை ஆதிக்கத்திற்கு உட்படுத்தவேண்டும், முக்கிய மூலப்பொருட்கள் கிடைக்கும் உத்தி நிறைந்த இடங்களைக் கட்டுப்படுத்த வேண்டும், குறைவூதிய தொழிலாளர் தொகுப்பு புதிதாகக் கிடைத்தால் சுரண்டவேண்டும் என்ற அமெரிக்க ஆளும் உயரடுக்கினரின் உந்துதலினால் மேற்கொள்ளப்பட்டது ஆகும். யூகோஸ்லாவியாவில் இது பல நாடுகளின் கூட்டமைப்பை இனக்குழு-தேசியவாத அரசுகளாகப் பிரிக்கும் முறைக்கு ஆதரவு என்று நடைமுறைப்படுத்தப்பட்டது; இதையொட்டி சேர்பியாவிற்கு எதிராக ஒரு போர் மூண்டது; சேர்பியாவோ சக்திவாய்ந்த வரலாற்றுக் காரணங்களை ஒட்டி சேர்பிய மக்கள் யூகோஸ்லாவியாவின் வெவ்வேறு குடியரசுகளில் சிதறுண்ட சிறுபான்மையினராக போய்விடும் நிலையை எதிர்த்து நின்றது. 1990 களில் பால்கன்களில் வெடித்து எழுந்த குருதி சிந்தலில், மிலோசெவிக்கிற்கும் பங்கு இருந்தது என்பதில் ஐயமில்லை என்றாலும், இறுதியில் அவருடைய குற்றத்தில் அரசியல் ஆதாரம், மற்ற யூகோஸ்லாவிய முன்னாள் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தினர் போல், தேசியவாதிகளாக மாறி, ஏகாதிபத்தியத்தின் முதலாளித்துவ சந்தைக் கொள்கைகளுக்கு இணங்க நடந்து கொண்டது மற்றும் இத்தகைய மக்களுக்கு பேரழிவு கொடுக்கக் கூடிய அரசியல் கொள்கைகளுக்கு எதிரான உழைக்கும் மக்களின் எதிர்ப்பைத் திசைதிருப்ப தேசிய வாதத்தை அவர் பயன்படுத்தியதுதான். இவர் விசாரணைக்குட்பட வேண்டிய நிர்ப்பந்தம் இவருடைய அரசாங்கத்தின் கொள்கைகள் அமெரிக்க நலன்களுக்குப் புறம்பாயின. இத்தகைய கொள்கைகளை பின்பற்றிய மற்றவர்கள் அமெரிக்க நலன்களுக்கு ஆதரவாக நடந்து கொண்ட முறையில் வாஷிங்டனால் போற்றப்பட்டனர். இம்மாதம் கோசோவாவின் பிரதமராக அறிவிக்கப்பட்டிருக்கும் Agim Ceku இதற்கு நல்ல உதாரணம் ஆவார். குற்றம்சாட்டப்பட்டுள்ள போர்க் குற்றவாளியான Ceku குரோஷிய படைகளின் தளபதியாக இருந்து, 1995ல் இருந்து Krajina பகுதியில் பல நூறாயிரக்கணக்கான சேர்பியர்களை இனப்படுகொலை செய்தவர் ஆவார். நேட்டோ குண்டுவீச்சுக்களால் ஆதரித்து புதிய கொடூரங்களை வழிநடத்திய கோசோவாவின் விடுதலை இராணுவத்தின் தளபதியை, நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் வாஷிங்டன் தேர்ந்தெடுத்தது. |